Tuesday, December 2, 2025

அன்றாட யோகி

கன்னட எழுத்தாளர் ஹெ. எஸ். சிவபிரகாஷ் எழுதிய 'Everyday Yogi' (கன்னடத்தில் 'பத்தீஸ் ராகா')-ன் தமிழ் மொழிபெயர்ப்பு விஷ்ணுபுரம் பதிப்பக வெளியீடாக வெளியாகி இருக்கிறது. அச்சில் எனது முதல் நூல் - ஆசிரியர்கள் பாதங்களில் சமர்ப்பணம்.



2021-ல் கன்னட எழுத்தாளர் ஹெ. எஸ். சிவபிரகாஷ் எழுதிய "GURU: Ten Doors to Ancient Wisdom"-ன் தமிழாக்கத்தை (தமிழில் குரு - பழம்பெரும் ஞானத்திற்கான பத்து வாயில்கள் - ஆனந்த் ஸ்ரீனிவாசன்) வாசித்துவிட்டு ஒரு கடிதம் எழுதியிருந்தேன். https://www.jeyamohan.in/148348/. அதை யோகா குருஜி சௌந்தர் ஹெ.எஸ்.எஸ் அவர்களிடம் பகிர்ந்திருந்தார். 


2021 குரு பௌர்ணமி அன்று காலையில், கோவை அருகே நிகழ்ந்த கவிதை முகாமுக்கு லோகமாதேவியுடன் சென்று கொண்டிருக்கும் போது ஹெ.எஸ்.எஸ்-ன் அழைப்பு வந்தது. "குரு"வைப் பற்றிய சிறிய தொலைபேசி உரையாடல். அது குருபௌர்ணமி அன்று நிகழ்ந்ததை ஆசியாக உணர்ந்தேன். 


பின்னர் குருஜி சௌந்தர் பெங்களூர் வந்தபோது அவரை நேரில் சந்திக்க அழைத்துச் சென்று அறிமுகம் செய்து வைத்தார். அதற்கு முன்னர் 2020 ஜனவரியில் சென்னையில் நடந்த பத்து நூல்கள் வெளியீட்டு விழாவில் ஹெ.எஸ். சிவப்பிரகாஷ் கன்னட இலக்கியம் குறித்தான மிகச் செறிவான உரை ஒன்றை ஆற்றக் கேட்டிருந்தேன். ஆனால் தனிப்பட்ட இந்த சந்திப்பில் அவரது ஆன்மீக அனுபவங்கள் குறித்த உரையாடல் அவரது மற்றொரு பக்கத்தை காட்டியது. Everyday Yogi அவரது ஆன்மீக வாழ்வின் சுயசரிதை. அந்தப் புத்தகத்தில் எழுதியதற்குப் பிறகான காலகட்டத்தின் சில அனுபவங்கள் குறித்து அன்று அவர் பகிர்ந்து கொண்டார். மனதுக்கு மிக அணுக்கமான நாள். அன்று குருஜி நான் செய்து கொண்டிருந்த மற்றொரு மொழிபெயர்ப்பு பற்றிக் குறிப்பிட்டதும் இதைத் தமிழில் மொழியாக்கம் செய்யுமாறு ஹெ.எஸ்.எஸ் சொன்னார். 


அடுத்த குரு பூர்ணிமை அன்று இதன் மொழியாக்கத்தைத் தொடங்கினேன். இப்புத்தகத்தில் ஸ்வாமி சத்யானந்தரிடம் அவர் தீட்சை பெற்ற பகுதியை மொழியாக்கம் செய்யும் போது நான் தீட்சைக்காக சத்யானந்த ஆசிரமம் செல்ல நேர்ந்தது. இதைத் தமிழில் எழுதிய மொத்த நாட்களும் எனக்கு தனிப்பட்ட அளவில் மிக முக்கியமான காலகட்டம். ஒவ்வொரு நாளும் குருவின் கரம் வழிநடத்திச் சென்றது. 


ஹெ.எஸ். சிவப்பிரகாஷ் அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்து, பல யோகம் சார்ந்த, சாதனா சார்ந்த வார்த்தைகளை சரிபார்த்து ஆலோசனைகள் கூறி, உறுதுணையாக நின்று, இன்று இது நூலாக வெளிவருவதற்கு முதன்மையான காரணமாக இருந்த குருஜி சௌந்தருக்கு அன்பும் நன்றியும். 


விஷ்ணுபுரம் பதிப்பகத்துக்கு நன்றி!

நூலை வாங்க

Friday, March 7, 2025

ஆசிரியருடன்..

ஆசிரியருடனான பயணம் என்பது ஒரு ஆசி.  சொற்களாக பாடங்களாக ஆசிரியர்கள் அள்ளிக் கொடுப்பது ஒரு வகை கொடை எனில், உடனிருந்து அவரது அருகாமையில் உணர்வதும் கற்றுக் கொள்வதும் கணக்கிலடங்காதவை, வாழ்வுக்கானவை. பல நேரங்களில் அத்தகைய கல்வி நேரடியாக, புறவயமாக அறியமுடியாத நுண்மையில் மிக ஆழத்தில் நடைபெறுகிறது. பின்னர் ஒரு தருணத்தில் மேலெழுந்து வருகிறது.

இந்த மூன்று நாள் கன்னியாகுமரி பயணம்(விவேகானந்த கேந்திரம் நடத்திய 8ஆவது யோக சாஸ்திர சங்கமம்) உள்ளுக்குள் மிகச் செறிவாக இருந்தது.  அதை விரித்து, கடந்த மூன்று வருட பயணத்தையும் பார்க்கும் தோறும் எத்தனை எத்தனை அறிதல்களையும் அனுபவங்களையும் அள்ளித் தந்திருக்கிறது குருவருள் எனத் தெரிகிறது.





பொதுவாக, புதிய அறிவுபூர்வமான தர்க்கபூர்வமான ஓன்றை அறியும்போது ஒரு மகிழ்ச்சி பிறக்கும். அறிவுக்கான தேடல் உள்ள அனைவருக்கும் கிடைக்கும் இன்பம் இது. ஆனால் அதனினும் பேரின்பம் சில அறிதல்கள் நம்முள் முளை விட்டிருப்பதை உணரும் போதும் உள்ளார்ந்த மாற்றங்களை கவனிக்கும் போதும் கிடைக்கிறது. குறைந்தபட்சம் அத்தகைய விஷயங்களை மனம் தொடர்ந்து கவனித்து அடையாளம் கண்டு கொள்ளவாவது கற்றிருக்கிறது. 


உதாரணமாக, குருஜி சௌந்தருடனான பயணங்களில், அனைவரும் மிக,ஆனந்தமாக கேலியும் சிரிப்பும் கொண்டாட்டமுமாக ஒரு புறம் திகழும் போதே மறுபுறம் மிக ஆழமான தாக்கம் ஒன்றை யாரும் அறியாத வண்ணம் தனிப்பட நம்முள் ஏற்படுத்தி விடுவார். அது நாள்பட்ட தவறாக இருக்கலாம், நாமே அகங்காரம் என அறியாத அகங்காரமாக இருக்கலாம், அல்லது தப்பித்துக் கொள்ளுதல், தவிர்த்தல் போன்ற அகப்பழக்கங்களாக இருக்கலாம்.

அதை முகத்துக்கு நேராக உடைப்பது கூட அவரது வழக்கம் இல்லை. ஆனால் ஆசிரியர் அவராகத் திகழ்வதன் மூலமே அதை உணர்த்திவிடுகிறார். அதனால்தான் வகுப்பிலோ, இத்தகைய கூட்டான பயணங்களில் சொல்லப்படும் சொற்களும் அதில் உணரப்படும் விஷயங்களும், நமக்கே பிரத்யேகமான பாடமாக, அவர் இதன்மூலம் நமக்கான  செய்தியைதான் சொன்னார் என ஒவ்வொருவரும் உணரும் வண்ணம் ஏதோ ஒன்று உள்ளே சென்று விடுகிறது


உதாரணமாக இந்தப் பயணத்தில் அவரது ஞானத்தை, கனிவை நோக்கிக் கொண்டே இருந்தேன். ஆசிரியரிடம் வியந்து தீராத எத்தனையோ விஷயங்கள் அனைவருக்கும் இருக்கும். என்றும் ஒவ்வொரு நொடியும் புதிதாக விளங்கும் தன்மை கொண்டவர்கள் ஞான ஆசிரியர்கள். இந்த ஞானம் என நான் உணர்வது, புத்தகங்களை வாசிப்பதாலோ சொற்பெருக்கத்தாலோ வருவதல்ல. பல்லாண்டு ஒரு பாதையில் வாழ்ந்து அந்த சாதனையின் விளைவாக கனிந்திருப்பது, அதுவாகவே திகழும் அறிவு. எத்தனை உயரத்தில் தான் நின்றாலும் சுற்றி இருக்கும் யாரையும் கீழே குனிந்து நோக்கும் அதிகாரப் பார்வை இல்லாமல் அத்தனை குழந்தைகளையும் தன் தோளிலும் முதுகிலும் இடையிலும் ஏற்றிக் கொண்டு விளையாடும் தந்தையின் கனிவு. தேவையெனில் சரிசெய்து விடமுடியும் எனத் தெரியும் தந்தையர் குழந்தைகளோடு குழந்தையாக விளையாடத் தெரிந்தவர்கள். நன்மேய்ப்பர்கள்.




இது போன்ற ஒரு கனிந்த ஆசிரியரைப் பார்க்கும் போது, குழந்தையாய் தந்தையின் உயரத்தைக்கண்டு வியந்து நானும் ஒரு நாள் என் அப்பா போல வலிமையானவளாவேன் என்னும்  உறுதியும் வைராக்கியமும் ஏற்படுகிறது.


அப்படி சிரிப்பும் களிப்புமாக நடந்த இப்பயணத்தில் அவதானித்தவற்றில் சில:


கேள்விகளுக்கு அப்பாற்பட்ட, கேள்விகளே அற்ற, கேள்விகளை எழுப்பிக் கொள்ளக்கூடாத, சில இடங்கள் இருக்கின்றன. அந்த ஆதார மையங்களை அடையாளம் கண்டு கொள்வது ஓரு பேரறிவு. அத்தகைய அச்சில் நின்றே இங்குள்ள அனைத்தும் இயங்குகின்றன அவற்றில் எழுப்பப்படும் தர்க்கரீதியான ஐயங்களும் கேள்விகளும் அகங்காரத்தை பெருக்குவதையோ அமைதியின்மையை உண்டாக்குவதையோ அன்றி வேறேதும் செய்வதில்லை.


இதற்கு நேர்மாறாக பழக்கத்தினாலும் நமது வசதிகளுக்காகவும், சில பயனற்ற/பின்னிழுக்கும் விஷயங்களை எந்த விசாரமும் இன்றி நடைமுறைப்படுத்தி வைத்திருப்போம். சுற்றத்தையும் சமூகத்தையும் நமக்கு நாமே கூட மிக விரிவான சமாதானங்களுடன் அவற்றை நியாயப்படுத்தி வைத்திருப்போம். அத்தகைய சில கூறுகளை நிர்தாட்சண்யமாக கேள்வி கேட்க வேண்டிய அறிவும் மிகத்தேவையான ஒரு அறிவு.


அழைப்பு எழும் முன்னரே அல்லது அதை உணர்ந்தவுடனேயே சென்று முன் நிற்க வேண்டிய களங்கள் இருக்கின்றன, கர்மசேவைக்கான பல வாய்ப்புகள் அப்படித் தான் இருக்கின்றன.  நம்மைச் சுற்றி அப்படி ஓருயிர் தேவையோடு காத்திருக்கிறது அல்லது ஒரு வாய்ப்பு காத்திருக்கிறது என்று உணர்வதற்கான கண்களைத் திறந்து வைக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. இந்த அறிதலும் விழிப்புணர்வும் மிக முக்கியமானது. மற்றோர் உயிரை ஏதேனும் ஒரு வகையிலாவது தொடாத எந்தப் பயணமும் பொருளற்றது என ஆசிரியர் சொல்வதன் பிரத்யட்ச விளக்கம் இம்முறையம் நிகழ்த்திக் காட்டப்பட்டது, யாரோ ஒரு பெயரறியாத ஆட்டோ ஓட்டுனருக்கு அவரது வாழ்வுக்கு மிக முக்கியமான பயிற்சி ஆசிரியரால் கற்றுத்தரப்பட்டது.


அதே சமயம் நம்மைச் சுற்றிச்சூழ எத்தனை இரைச்சலாக இருந்தாலும் நாம் காதிலேயே வாங்கிக் கொள்ளக் கூடாதவை இருக்கின்றன, நம் காலடியும் படக்கூடாத அகங்கார வாயில்கள் சில இருக்கின்றன. அதை அடையாளம் கண்டு கொள்வதும் உடலால் அத்தகைய சூழலின் உள்ளே இருந்தாலும் மனதில் ஒரு துளியும் ஒட்டாமல் விலகிச் செல்வதும் பேரறிவு.


எந்த இடங்களில் வலிகளை, சிரமங்களை தாங்கிக் கொள்ளும் திதிக்ஷா தேவை என்பதும், எந்தெந்த விஷயங்களில் நாம் தேவையற்ற, நாம் உதறவேண்டிய எடைகளை சுமந்தலைகிறோம் என்பது குறித்ததுமான பகுத்து அறியும் அறிவு. 


உணர்வுகளாக மிகைப்படுத்திக் கொள்ளக்கூடாதவை, சொற்களாக விரித்து பெருக்கிக் கொள்ளக்கூடாதவை, வெளிப்படுத்தத் தேவையற்ற மிகை சொற்களும், மிகை உணர்ச்சிகளும் குறித்த பிரக்ஞை, எத்தகைய பெருமகிழ்ச்சியாக இருந்தாலும் அள்ளிச்சூடி ஆடிக்களித்து விட்டு அங்கேயே அவற்றை இறைக்கர்ப்பணித்து விட்டு அதிலிருந்து நகர்ந்து விடுதல், ஒரு கணமும் சோர்வுறாதிருத்தல், அதற்கான பிராணனை வளர்த்துக் கொள்ளுதல் என உடல், பிராணன், மனம், உள்ளுணர்வு என அனைத்துத் தளங்களுக்குமான பாடம் நடந்து கொண்டே இருந்தது, இருக்கிறது. அத்தனையும் 'ஆனந்தம்' என்ற ஒற்றை உணர்வாக உள்ளே நிறைந்திருக்கிறது.