மீண்டும் தாராபுரம்
ராமநாதபுரத்தில் இருந்து அடுத்த வருடமே மாற்றலாகியது. மீண்டும் தாத்தாவுக்குப் பிடித்த தாராபுரம். விதியொன்று நிகழும் களமாக இம்முறை. மானிடர்க்கு முன்னோக்கும் விழி அருளாத இறை கருணை மிக்கது. தெரிந்தால் மாற்றி விட முடியாத போது முன்கூட்டிப் பார்த்து என்ன பயன்?
ஒன்பதாம் வகுப்பு. புதிய பள்ளியில் சேர்ந்த ஒரே வாரத்தில் புதிதாய் மற்றுமொரு பெண்ணும் பள்ளியில் சேர்ந்தாள். பயந்த சுபாவமும் மெல்லியல்பும் நிறைந்தவள். கருணையை போதிக்கும் ஏசு அடியார்கள் - இயல்பிலேயே வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடிடும் குடும்பம். திருட்டுப் போன சைக்கிளைக் குறித்து, 'யாரோ இல்லாதவர்தானே எடுத்திருப்பார்' என இரங்கும் அவளுடைய தந்தை, கருணையே வடிவாய், அதற்கு மிக உகந்ததாய் செவிலியராய் சேவை செய்யும் தாய். அழகான அருமையான குடும்பம்.
அவள் அந்த வருடம் தமிழ்வழிக் கல்வியிலிருந்து ஆங்கிலவழிக் கல்விக்கு மாறியிருந்தாள். பள்ளியில் வழி தவறிய ஆட்டுக்குட்டியாய் மருண்டு நின்றவள் - பார்த்த முதல் பார்வையிலேயே மனதில் இடம் பிடித்தாள். அன்று முதல் அந்த வருடம் முழுவதும் மாலையில் அவள் என்னுடன் வீட்டுக்கு வருவதும், சேர்ந்து படிப்பதும் வழக்கமாயிற்று.
இந்த முறையும் தாத்தாவோடும் சேர்ந்தே உருவாகி உறுதியானது அவளுடனான நட்பு. இந்த முறை ஒரு சிறு மாற்றம். நாங்கள் படிப்பதையும், ஆங்கிலத்தில் இருக்கும் அறிவியல் கணக்கு பாடங்களை, அவளுக்கு நான் தமிழில் விளக்குவதையும் அமைதியாய் பார்த்துக் கொண்டு அமர்ந்திருப்பார்கள் தாத்தா. இது அன்றாட வழக்கமாயிற்று.
அவர்கள் வீட்டிற்கு நடையின் போது நானும் தாத்தாவும் செல்வதும், அவளது தாய் தந்தையருக்கும் தாத்தாவை மிகவும் பிடித்துப் போனதும் அனிச்சையாய் நிகழ்ந்தது. நாங்கள் குடியிருந்த வீட்டின் முன்புறம் பெரிய மண்தரை. அம்மா கைங்கர்யத்தில் ஓரிரு மாதங்களில் வெறுமையாய் இருந்த மண்தரை பசுமை போர்த்தி மலர்ந்தது. யாருக்கும் காத்திராத காலநதி விரைவாய் சுழித்தோடிக் கொண்டிருந்தது.
வீட்டு வாசலில் செவ்வகமாய் பெரிய திண்ணை. அதில்தான் தாத்தா அமர்ந்திருப்பார்கள் நாள் முழுவதும்.
எத்தனையோ நிகழ்வுகள், நெகிழ்வுகள் கண்ட திண்ணை அது. நாட்கள் துளிகளாய் வழிந்து மாதங்கள் ஓட
ஒன்பதாம் வகுப்பு முடிய ஓரிரு மாதங்களே இருந்தன. தாத்தா விரும்பியதுபோல மதுரைக்கிளைக்கு மாற்றல் வாங்க அப்பா முயற்சித்துப் பலனின்றி நாட்கள் ஓடிக்கொண்டிருந்தன. மிகுந்த சிரமத்தோடு, ஒரு கிராமப்புற வங்கிக் கிளைக்கு அப்பா அலைந்து கொண்டிருந்த நாட்கள்.
ஒரு நாள் அப்பா என்னிடம், 'உன் தோழியைப் போல நீயும் சைக்கிளில் பள்ளிக்குப் போ' என சைக்கிள் வாங்கிக் கொடுத்தார்கள். அதை சாலையில் ஓட்ட பயந்து கொண்டிருந்த என்னைக் கண்டு தாத்தா, 'அச்சம் என்பது நேருக்கு நேர் நோக்காத வரைதான் பெரிதாய் இருக்கும். பயத்தை எதிர்கொள்ள அது சிறிதாய் காணாமல் போகும்' என என்னை சாலையில் ஓட்டச் சொல்லி, சாலை விதிகள், கையில் காட்ட வேண்டிய சமிஞ்ஞைகள் என அனைத்தும் கற்றுக் கொடுத்தார்கள் தாத்தா. இது நடந்தது ஒரு சனிக்கிழமை. நண்பகல். வீட்டு முன்னால் திண்ணையில் வெயில் இளைப்பாறிக் கொண்டிருந்தது. அருகே தாத்தா கண்களை மூடி மோனத்தில் அமர்ந்திருந்தார்கள். நான் சைக்கிளை எடுத்துக் கொண்டு தோழியின் வீட்டுக்கு சைக்கிள் பழகச் செல்கிறேன் எனக் கூறி விட்டு கிளம்பினேன். 'நானும் வரட்டுமா?' என்று கேட்டு தாத்தாவும் எழ, 'ஓய்வெடுங்கள். நான் மட்டும் செல்கிறேன்' என்ற என்னை விதி மேலிருந்து பார்த்துக் கொண்டிருந்தது.
முதல் நாள் தாத்தா சஷ்டி விரதமிருந்து ஏதும் சாப்பிடாத நாள். அன்று மதியம் உணவுண்ணும் வேளை வீடு திரும்பினேன். வீட்டில் தாத்தா இல்லை. என்னைப் பார்த்ததும் 'தாத்தா உன்னைப் பார்க்க வரவில்லையா?' என்ற கேள்வியோடு அம்மா காத்திருந்தார்கள். நான் சென்றதும் சிறிது நேரத்தில் வெளியேறிச் சென்ற தாத்தா, மதியம் ஒரு மணி தாண்டியும் வீடு வரவில்லை. நேரமாக ஆக பதட்டம் ஏறியது. என்னைத் தேடி வந்திருக்கக் கூடுமோ என மீண்டும் தோழி வீடு வரை சென்றேன். அம்மா மற்றொரு புறம் தேடிச் சென்றார்கள். தோழியின் தம்பியரும் ஆளுக்கொரு புறம் தேடி அலைய, மனதில் ஏதோ ஒரு கலக்கம் இதற்குப் பிறகு பேசக் கிடைக்காதோ என.
பிறகு அப்பாவுக்குத் தகவல் அனுப்பி, அப்பா வந்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துக் காத்திருந்தோம். மாலை நேரம் - காவல் நிலையத்திலிருந்து தகவல் வந்தது - 'யாரோ ஒருவர் நினைவிழந்து, சாலையில் மயங்கி விழுந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்' என்று. தகவல் அறிந்து அப்பா விரைந்த போது, இதுவே இறுதியென மருத்துவர்கள் கூறினர். வெயிலில் சாலையில் மயங்கி விழுந்த தாத்தாவை, யாரோ ஒரு வக்கீல் பார்த்து விட்டு, சுதந்திர போராட்ட வீரர் என்ற அடையாள அட்டையைப் பார்த்து அதையே அடையாளமாக்கி மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்.
உற்றாரை, நண்பர்களை, ஊராரை, சமூகத்தை என அனைவரையும் சொந்தமெனக் கருதிய தாத்தாவை சேர்த்திருந்த அரசு மருத்துவமனை ஏட்டில் எழுதியிருந்தது - 'உறவினர்கள் - யாருமில்லை'.
அடுத்த கட்டத்துக்குப் பறவை பறந்து சென்று கொண்டிருப்பதை ஒவ்வொன்றும் சொல்லிச் சென்றது. சூசகமாய் செய்தி காற்றில் கண்ணாமூச்சி ஆடும் தருணங்கள்.
பிறந்த கணம் முதல் ஆயிரமாயிரம் வார்த்தைகள் பேசிய வாய், திருநீறு மணக்கும் சுட்டு விரலை விடாமல் பற்றியிருந்த கரம், அன்று ஏனோ 'ஓய்வெடுங்கள், நான் மட்டும் செல்கிறேன்' என்று சொன்னதையே இறுதிச் சொல்லாய் மாற்றி உயிர் காற்றில் ஆடிக் கொண்டிருந்தது.
முந்தைய பதிவு (30)
அடுத்த பதிவு (32)
முந்தைய பதிவு (30)
அடுத்த பதிவு (32)
No comments:
Post a Comment