Monday, May 25, 2015

சற்குரு - தாத்தா - 6

"கல்லாய் மரமாய் காடு மேடாக

மாறாதிருக்க யான் வனவிலங்கல்லன்

மாற்றம் எனது மானுட தத்துவம்

மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்

எவ்வவை நன்மை எவ்வவை தீமை

என்பது அறிந்தே ஏகும் என் சாலை"


மாற்றம் ஒன்றே மாறாததென்னும் மகத்தான உண்மை மனதில் பதிய சில பாடங்கள் தேவை. மாற்றங்கள் இன்றி வளர்ச்சியும் இல்லை. பழம் விட்டேகும் விதை, மண் புதைய, இருள் பழக, ஒளி தேடி உயிர் நாடி நிலம் கிழிக்க, ஒளி பருக, இலைக்க, துளிர்க்க, எருமை சிறுவீடு மேய்த்தது போக மீண்டும் துளிர்க்க எத்தனை எத்தனை மாற்றங்களை எதிர்கொள்கிறது.


இருள் பழகிய கண்கள் வெளிச்சம் காணக் கூசுவதுபோல், பழகியவற்றினிலிருந்து விடுபட, அது பாழிருள் விட்டு விடுதலையே ஆயினும், மனம் கூசுவதுண்டு. 'தத்தியது போதும் பற' என நம் சுகவெளி(comfort zone இப்படி சொல்லலாமா?) தாண்ட, தாய்ப்பறவையின் கரிசனத்தோடு, தந்தையின் வழிகாட்டுதலோடு, தெய்வத்தின் அருளோடு கூடிய ஒரு குருவின் உந்துதல் தேவைப்படுகிறது.


வளர்ந்த சூழலின் மாற்றங்கள், வருடந்தோறும் பள்ளிகளின், நண்பர்களின், ஆசிரியர்களின் மாற்றங்கள், அவ்வவ்வயதுக்குரிய அகமாற்றங்கள், என அனைத்திலும் துணை நின்றது தாத்தாவின் கரங்கள். தாராபுர வாழ்க்கை, சுகமான தாளகதியில் சென்று கொண்டிருந்த ரயில் ஆற்றுப்பாலம் தாண்டுவது போல் கல்கத்தாவிற்கு இடமாற்றம் என கடகடத்தது. முதலில் அப்பா செல்வதென்றும், காலாண்டுத் தேர்வு முடிந்தபின் நாங்கள் செல்வதென்றும் திட்டம். எங்கள் காலை மாலை நடைகளில், நேதாஜியும், விவேகானந்தரும், ராமகிருஷ்ண பரமஹம்சரும், தாகூரும் உடன்வந்தார்கள். ஆன்மிகமாயினும், கலைகளாயினும், விடுதலை வேட்கையாயினும், வீரியமான விதைகளுக்கான நிலம், கங்கையின் ஆரவாரத் தழுவலில் கசடுகள் அணைத்தும் களைந்த நகரம் என,  தாத்தா கல்கத்தாவின் நீள அகலம் முதற்கொண்டு விவரித்தார்கள்.  தாத்தாவும் நானும் ரிஷிகேஷ், ஹரித்வார், பத்ரிநாத், கேதார்நாத் கோடை விடுமுறையில் சென்று வரலாமென்று திட்டம் வேறு. அதற்குள் அரசாங்கம் வாக்களித்திருந்த ரயில்வே பயண உரிமமும் வந்துவிடுமென்று எதிர்பார்த்தார்கள் தாத்தா. அதன் பின்னரும் இறுதி வரை அந்த உரிமம் வரவேயில்லை.


ரகுதாத்தா ஹிந்தியும் அறியாத என்னிடம் "மொழி ஒரு தடையில்லை, ஆறு மாதங்களில் உன்னை ஹிந்தியில் பாண்டித்யம் பெறச் செய்வது என் பொறுப்பு" என உத்வேகத்தோடு என்னைத் தயார்படுத்தத் தொடங்கினார்கள். "உம் தமிழோடு விளையாடவே யாம் வந்தோம்" என்ற சிவ(வாஜி) நகைப்போடு, பாங்க் அப்பாவை அஸ்ஸாம்-க்கு மாற்றியது. குவஹாட்டிக்கு இடமாற்றம் என்ற தகவலோடு இன்னும் பரபரப்பாகியது வீடு. கேந்த்ரிய வித்யாலயா அனைத்து பெரிய ஊர்களிலும் இருக்கும், எனவே பள்ளி குறித்து கவலையில்லை; உணவு குறித்த கவலையோ என்றுமே எனக்கில்லை, அத்தை குறிப்பிட்டது போல நாவுக்கு அடிமையாகாதிருப்பது குறித்தும், கிடைப்பதை ரசித்து வாழ்வது குறித்தும் தாத்தாவிடம் பாடம் நடந்தது.


திருவிளையாடல் மேலும் தொடர்ந்தது. குவஹாட்டி கொடுத்த காலடி மண் பிடிமானமும் நகர்ந்து, சாருப்பேட்டா என்ற ஒரு குக்கிராமத்திற்கு மாற்றலாகியது. அதற்குள் இங்கு எனக்கு காலாண்டுத் தேர்வு முடிந்து விடுமுறை தொடங்கியது. விடுமுறையின் எழுதப்படாத விதியான அனைத்து வினாத்தாள்களையும் choice விடாமல் எழுதிக் கொண்டு வரச்சொல்லியிருந்தார்கள். விடுமுறை முடிந்ததும் இந்தப் பள்ளிக்கூடம் போகப்போவதில்லை என்று அதிஉற்சாகமாய் கழிந்தது விடுமுறை. ஊருக்கு எங்கும் செல்லவில்லை, புதிய மாநிலம் காணப் போகும் பரபரப்பில் கழிந்தது நாட்கள் தாத்தாவுடன். பள்ளி திறக்க இரு நாட்களே எஞ்சியிருக்கையில் ஒருநாள் அதிகாலையில் வந்து சேர்ந்தார்கள் அப்பா அஸ்ஸாமிலிருந்து.


மாற்றத்தின் புதிய இடி என் தலையில் இறங்கியது. ஒரு பாடத்திலும் ஒரு வினாத்தாளுமே எழுதாத நிலையில் அப்பா திடீரென்று வந்து 'எனக்கு வேலையே போனாலும் பரவாயில்லை, அஸ்ஸாமில் காலம் தள்ள முடியாது' என்று சொன்னால் எப்படி இருக்கும். அப்பா வேலையை விடுவது அவ்வயதின் பெரிய அதிர்ச்சியாய் இல்லை எனக்கு, நான் ஏழு வினாத்தாள் எழுதவேண்டுமே என அழத் தொடங்கினேன்.


'பைத்தியக்கார பயபிள்ளை' என அப்பாவுக்கும் நற்பெயர் பெற்றுத் தந்தேன் தாத்தாவிடம். "தேர்வில் ஒவ்வொரு தாளும் இரண்டு மணிநேரத்தில்தானே எழுதுகிறாய். 7 paper எழுத 2 நாட்கள் போதாதா"எனக் கேட்டு எழுத வைத்தார்கள். கூடவே அமர்ந்து புத்தகத்தில் இல்லாத விடையெல்லாமும் எழுத வைத்தார்கள் தாத்தா!!


பின்னர் சில மாதங்கள், அப்பாவுக்குத் தூத்துக்குடி என்று முடிவாகும் வரை சிறிது குழப்பம் நீடிக்க, நான் தாத்தா அப்பத்தாவுடன் மதுரையில் இருந்து கல்வியைத் தொடர்வதென்று தீர்மானமாயிற்று. 

அரையிறுதித் தேர்வும் எழுதாமலேயே மதுரை பயணமானோம். அதற்கு என் புத்தகங்களையும் உடைகளையும் அடுக்கி, தாத்தா தயார் செய்த நேர்த்தியைக் கண்டே ஆய கலைகள் 64இல் packingஉம் ஒன்றென்று உணர்ந்தேன்.


நுழைவுத் தேர்வின்றி அனுமதி இல்லை, அரையிறுதித் தேர்வு தாண்டி இடம் கேட்பதால் மீண்டும் ஐந்தாம் வகுப்பே மீண்டும் படிக்க வேண்டும் என்றெல்லாம் பள்ளிகள் மிரட்ட, தாத்தா என் கல்வியைத் தன் கையில் எடுத்தார்கள். பள்ளியில் இடமே கிடைக்காவிட்டாலும் நட்டம் ஏதுமில்லை, தனியாக வகுப்புகள் எடுத்துக் கொண்டே கூட பத்தாம் வகுப்புத் தேர்வே கூட எழுதலாம்  என்றெல்லாம் தாத்தா சொல்ல, ஒரே திகில் எனக்குள். பள்ளி செல்லாமல் வாழ்வதெப்படி என திகைத்தே போனேன். ஆனால் எந்தப் பள்ளியும் கற்றுத் தரமுடியாத தரத்தில் என் கணிதமும், ஆங்கிலமும் தாத்தாவின் நேரடிப் பார்வையில் மெருகேறியது. Wren and Martin முழுவதும் உள்ளே சென்றது. ICSE கணிதப் புத்தகம் ஒன்று பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவரிடமிருந்து வாங்கி வந்து பாடம் எடுத்தார்கள் தாத்தா. மேற்படிப்புக்குத் தான் அருகில் இருக்கப் போவதில்லை என்று முன்னரே உணர்ந்தது போல ஐந்தாண்டுகளுக்கு முன்கூட்டிய பாடத்திட்டம் வரை நடத்திய தீர்க்கதரிசி - என் மார்க்கதரிசி.


சிலை மெருகேற செய்ய வேண்டியதெல்லாம் சிற்பியின் கையில் முழுமையாய் சரண்புகுவதொன்றே. உளியெடுக்கும் சிற்பிக்குத் தெரியும் எதை நீக்கி, எதை உடைத்து உள்ளுறங்கும் கருப்பொருளை வெளிக்கொணர்வதென. 

உளிதாங்கும் கற்கள் தானே மண்மீது சிலையாகும்..

முந்தைய பதிவு (5)

அடுத்த பதிவு (7)

Wednesday, May 20, 2015

சற்குரு - தாத்தா - 5

சற்குரு - தாத்தா - 5

பள்ளிப் பருவத்தில் விடுமுறைகள் மிகவும் விருப்பமானவை. பள்ளிநாட்களினும் அதிகமான கற்றலுக்குரியவை. ஒவ்வொரு தேர்வுக்கு முன்னரும் கச்சிதமாக திட்டமிடப்படும் - பரீட்சைக்கு மட்டுமல்ல.. ஊருக்கு என்று புறப்பாடு என. சகோதரியரைப் பார்க்கப் போகும் ஆவல் ஒருபுறம்; தாத்தாவுடன் கழிக்கப்போகும் நாட்களைக் குறித்த திட்டங்கள் ஒருபுறம்; அதனினும் மேலாக - தாத்தாவுடனான பயணத்தின் பரவசம். நினைவுகளில் சுகம்காணும் flashback தரும் பரவசமல்ல. அன்றே அவ்வண்ணம்தான்.

பயணங்களில் எப்போதும் மனம் ஒரு விரைவையும் சீரான ஒழுங்கையும் அடைந்து விடுகிறது. படிப்பு, வேலைவாய்ப்புகள், தேச முன்னேற்றத் திட்டங்கள் தொடங்கி, வழியில் இருக்கும் ஊர்களின் வளங்கள் அல்லது இன்மை குறித்தும், அங்கு என்னென்ன செய்ய இயலும் என்பது குறித்தும் பேசிய திருநெல்வேலி-மதுரை நெடுஞ்சாலை, காற்றின் வெப்பத்தோடு நினைவுக்கு வருகிறது.

வீட்டில் பயணம் தொடங்கிய நொடியிலிருந்து, பரவசம் ஆரம்பம். பேருந்தில் முதல் இருக்கை, ஓட்டுநருக்கு இணையாக இடப்புறம் இருக்கும் இரட்டை இருக்கைதான் தாத்தாவுக்குப் பிரியமானது. அதற்காக ஒரு பேருந்தை விட்டுவிட்டு அடுத்ததில் ஏறியதும் உண்டு. பேருந்து என்றால் செயற்கைக் குளிரிலும், முழுவதும் திறக்கவியலாத மூச்சுமுட்டும் கருப்பு ஜன்னலும் கொண்ட இன்றைய சொகுசுப் பேருந்தல்ல. காற்றோட்டமும் வெளிச்சமும் கொண்ட அரசுப் பேருந்துகள்.  கடகட சத்தமும் சந்தமாய்த் தானிருந்தது.

பயணங்களில் தாத்தாவும் மிக உற்சாகமாகி விடுவதைக் கண்டிருக்கிறேன். ஒரு பயணத்தை என்றுமே ஆவலோடுதான் எதிர்நோக்குவார்கள். அரசாங்கம், சுதந்திரப் போராட்ட தியாகிகள் அதிகநாள் இருக்கப்போவதில்லை என்ற தைரியத்தில் அளித்த  bus passஐத் தான் அதிகம் பயன்படுத்திவிட்டதாக சொல்வார்கள். தாத்தாவின் ஸ்பரிசத்தில் வழவழப்பேறிய அந்த பயண உரிமச் சீட்டு:


பேருந்தில் ஏறி சில நிமிடங்களில் நடத்துநர் அணைத்து பயணச்சீட்டு/சில்லறை பரிவர்த்தனைகளை முடித்துக் கொண்டு, முன்னால் வந்து அமர்ந்ததும் தாத்தா மெதுவாக நடத்துநருடன் பேச்சைத் தொடங்குவார்கள்.

சிறிது பேச வாய்ப்புக் கிடைத்ததுமே, தன்னையும் தனது கருத்துக்களையுமே முன்வைத்து சக மனிதர்களுக்கு சங்கடமான மனநிலையைத் தோற்றுவிக்கும் பலரையும் இன்று நாம் காண்கிறோம். மென்மையான நல்லியல்புகள் கொண்ட மனிதர்கள் அரிதாகி, சுயசரிதமும் சுயவிளம்பரமுமே இன்றைய உரையாடல்களின், so-called கருத்துப் பரிமாற்றாங்களின் நிலை. அதனால் அடுத்த மனிதரிடம் பேசும் ஆர்வமும் குறைந்து வருகிறது.

இன்முகத்தோடு இயல்பான உரையாடல்களைத் தொடக்கி, அவர்கள் மெதுவாக தாத்தாவால் வசீகரிக்கப்பட்டு தன்மையாகப் பேச்சைத் தொடரத் தாமாக விழையும் வேதியியல் மாற்றத்தைப் பலமுறை அருகிருந்து கண்டிருக்கிறேன். சிறிது நேரத்தில் ஓட்டுநரும் நடத்துநரும் தாத்தாவுடன் மிக நெருக்கமாகிவிடுவார்கள். வழியில் தேநீருக்காக நிறுத்துமிடத்தில் இன்னும் மனம் திறப்பார்கள்.

இதற்கு மிக முக்கியமான காரணியாக இன்று உணர்வது, அந்த உரையாடல்களின் உள்ளடக்கம். எதிரில் இருக்கும் மனிதர்மேல் உண்மையான அக்கறையோடு, அவர்களது பணியின் சிரமங்களையும், சிறப்பான தருணங்களையும், தொடும் தாத்தாவின் பேச்சு. அவர்களது அன்றாடங்களின் வலிகளை பயங்களை அறிந்து சில வழிகளையும் திறப்பார்கள். பேருந்து ஓட்டுவதில் என்ன சிறப்பான தருணங்கள் இருக்க முடியும் என யாரேனும் எண்ணினால், உங்களுக்கும் ஒரு சிறப்பான சற்குருவும், குருவுடனான பயணங்களும் அமைய ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்.

எந்த வேலையும் உயர்வுதாழ்வில்லை என்பதும், ஊதியம் ஐந்திலக்க மந்திரமல்ல - ஈதலும் இசைபட வாழ்தலும் என வாழ்ந்து காட்டிய மகான் அனைவருக்கும் குழந்தைப் பருவத்தில் அமையட்டும். பதநீர் விற்பவரும் பூ விற்பவரும் நெருக்கமாகி விடும் ஆன்மாவின் 'கட்டிப்பிடி' வைத்தியம் அது.
"கூடும் விறகோடு வெறும் கூடு என வீழ்ந்த
 பின்னர் கோவணமும் கூட வருமோ?"

பேருந்தை எங்கே நிறுத்தினேன். ஹாங்.. தேநீர் விடுதியில்...P.S.S  Bus Companyஇன் அனுபவங்களோடு சேர்த்து மிக ஆத்மார்த்தமாக அணுகும் அந்த முறை - அந்த உரையாடல்களின் சத்தியம் அந்த நெருக்கத்தை சாத்தியமாக்கிற்று.
இன்று 'எதிராளியின்( note the point சகமனிதர் அல்ல) மனதை தன்வயப்படுத்த அவனுக்குப் அணுக்கமானவற்றை அடையாளம் கண்டுகொள்' என இன்றைய corporate உலகில் 'Influencing Skills'  என்ற புட்டியில் அடைக்கப்பட்டு விற்கப்படுகிறது.  Expiry date தாண்டிய இது போன்ற மருந்துகளே நோயின் ஆரம்பம்.

ஒருவழியாய் இறங்கும் இடம் வரும் போது மிக மரியாதையோடு, இருவரும் வழியனுப்பி வைப்பார்கள். சில ஊர்களில், பேருந்துகள் நிற்காத இடங்களில், பேருந்து நிறுத்தம் அருகில்லாத இடங்களில், நாங்கள் செல்ல வேண்டியிருப்பின், முடிந்த அளவு நெருங்கிய இடத்தில் இறக்கிச் செல்லும் தோழர்கள் கிடைத்திருப்பார்கள் தாத்தாவுக்கு.

ஊருக்கென்று வாழ்ந்த நெஞ்சம் சிலைகள் ஆகலாம்
உறவுக்கென்று விரிந்த உள்ளம் மலர்கள் ஆகலாம்
யாருக்கென்று அழுதபோதும் தலைவன் ஆகலாம்
யாருக்கென்று அழுதபோதும் தலைவன் ஆகலாம்
மனம்…. மனம்…. அது கோவில் ஆகலாம்…

முந்தைய பதிவு (4)

அடுத்த பதிவு (6)

Monday, May 18, 2015

சற்குரு - தாத்தா - 4

தாத்தாவுடனான பயணங்களுக்கும், காலை மாலை நடைகளுக்கும் மேலும் சில பதிவுகள் தேவைப்படும். என் 14வயது வரைதான் தாத்தாவுடன் வாசம் எனினும், மனவாசம் உயிர் உள்ளளவும் .

மேலும் தாத்தாவுடன் இருந்த நாட்களில் பெரும்பகுதி பயணங்களே. நாங்கள்  இருந்த ஊர்களில் இருந்து புது ஊர்களுக்குக் குடிபெயர்தல் அனேகமாய் ஒவ்வொரு வருடமும் நடக்கும்( இல்லையெனில் நான் 11ஆம் வகுப்புக்குள் 10 பள்ளிகளில் படிக்க முடியுமா). அப்பா, புதிய வீட்டு விலாசத்தை வரைபடத்தோடு கடிதத்தில் அனுப்ப, ஓரிரு வாரத்திற்குள் தாத்தா வருவார்கள். இதுவும் பரம்பரை வியாதி என நினைக்கிறேன், புதிய இடங்களின் திசைகளும், திக்குகளும் கிரகித்தல், map வரைதல் -  பல நண்பர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

புதிய ஊரில் நகருலா ஆரம்பமாகும். படிக்கப் போகும் பள்ளி, கோவில்கள், மற்றும் ஊரின் முக்கியமான அலுவலகங்கள், பிறகு ஊரின் குறுக்கும் நெடுக்குமான பல வீதிகள் என நடை தினம் தினம் களைகட்டும்.

'தாராபுரம்' - தாத்தாவுக்கு மிகவும் பிடித்த ஊர். பின்னர் தாத்தாவின் சரித்திரத்தில் நிரந்தரமான இடமும் பெறப்போகும் இந்த எளிமையான ஊர். 1988ல் ஈரோட்டில் இருந்து அப்பாவின் அலுவல் மாற்றத்தால் குடியேறிய ஊர். கிராமிய மணம் முற்றிலும் அகலாத, கொங்கு தேசத்துக்கே உரிய அதிவெள்ளை சுண்ணம் பூசிய சுவர்களும், பசுஞ்சாணம் மெழுகிய தரைகளும்(mosaic  தரையும் தப்ப முடியாது சாணக்குளியலில் இருந்து) கொண்ட அழகிய அமராவதிக்கரை நகர். 

பழைய கால வீடு.  நான்கு புறமும் மாடிகள், அருகிலேயே முருகன் ஆலயம்,  என முதல் பார்வையிலேயே தாத்தாவுக்குப் பிடித்துவிட்டது. ஆதி காலத்து கருப்பு நிற toggle switch இருக்கும். 'அந்தக்காலத்தில் பெருமாள் கோவில் தெருவிலேயே இப்படி சுவிட்சுதான்' - இது அப்பத்தா..
வீட்டுக்கு எதிரே இருந்த radio telecommunication tower  ஓங்கி உலகளந்து நிற்கும். பார்க்கும்போதெல்லாம் 'Aim High, Aim the Highest' என அந்த tower சொல்வதாக தாத்தா சொல்வார்கள். தாத்தாவின் தாரக மந்திரம் இது. அன்றாட வாழ்வியலில் அகத் தூண்டுதல்களைக் (inspirations எளிதோ) கண்டு கொள்வது, வாழ்வை நேர்மறையாய் நடத்துவதற்கு மிகவும் முக்கியம் என இப்போது புரிகிறது. 

முனிசிபாலிட்டியின் சங்கு அதிகாலையில் ஓம் என ஓங்காரமிடும் - இதுவும் தாத்தாவின் பார்வையே. ஊரெங்கும் மரியாதை நிரம்பிய சொல்லாடல் -"ங்க"ஒவ்வொரு சொல்லிலும் இயைபுத் தொடராய் வரும் அனைவருக்கும். ("ஏனுங்கண்ணு உங்க வீட்டுக்கு ஒரம்பரை வந்திருக்காங்கலாட்டு இருக்குதுங்" போன்ற "ங்கத் தமிழ்" அங்கு புழங்கும் இனிய கொங்குத் தமிழ்.    புரியாதவர்கள் கொங்கு நாட்டுத் தமிழ் அகராதி பார்த்துக் கொள்ளவும்.)

ஊருக்குக் குடியேறியவுடன் ஓரிரு மாதங்கள் குடியிருந்த முதல் வீட்டுக்கு  அருகில் ஒரு பெரிய கமலைக் கிணறு (மீண்டும் refer தமிழ் அகராதி) இருந்தது. அந்த வீட்டுக்கு எதனாலோ தாத்தா வரவில்லை. வீடு மிகச் சிறியது - கிணறு வீட்டைப்போல் நான்கைந்து மடங்கு பெரியது. தான் வந்திருந்தால் அங்கு நீச்சல் அடித்திருக்கலாமே என தாத்தா சொல்ல, 'நீச்சல் தெரியுமா உங்களுக்கு?' எனக் கேட்டுவிட்டேன்!! அறியா வயதல்லவா.தெரியாமல் கேட்டுவிட்டேன்.  'தெரியுமாவா? அடப் பைத்தியக்காரப் பிள்ளையே' எனத் தாத்தா மிக வருத்தப்பட்டார்கள்.
அடுத்த முறை மதுரை சென்ற போது நாகமலையிலிருந்து திருப்பரங்குன்றம் செல்லும் வழியில் ஒரு கிணற்றில் நீச்சலடித்தும், மிதந்தும் காட்டினார்கள். "எப்படி!" என ஒரு சிரிப்போடு கரை ஏறினார்கள், பேத்தியின் அறியாமை நீக்கிய சிரிப்போடு.

வைக்கோல்போர் குவிந்த தெருக்களும், நெல் போரடிக்கும்(Bore அல்ல) களங்களும் பார்த்துக் கொண்டே நடக்கும் போது மலரும் நினைவுகளாய் கதை சொல்வார்கள். மதிச்சியமும், மலேயாவும், அம்மையம்பதியும், சிறுமலையும், பசளை  நகரும், பழங்காநத்தமும், மெதுவாய் என் மனதுக்குள் விரியத் தொடங்கியது தாத்தாவின் வார்த்தைகளில்.

பின்னோக்கிய நீரோட்டம் 
தாயினும் பரிந்த தாய்மாமா வீட்டில் இருந்து தாத்தா பள்ளி சென்ற நினைவுகள். தாத்தா, தாத்தாவுக்கு மிகவும் பிரியமான சின்ன மாமா (ஷண்முகம் தாத்தா), மைத்துனன் ஆகப் போகும் மாமன் மகன் (சிதம்பரம் தாத்தா) என மூவரும்  மாட்டு வண்டி ஓட்டிக் கொண்டு பசளையில் இருந்து மானாமதுரையில் OVC High Schoolக்கு செல்வார்களாம். சின்னத் தாத்தா மிக அருமையாக வண்டி ஓட்டுவார்கள் என விவரிக்கத் தொடங்கும் போதே தாத்தா கண்களில் ஜல் ஜல் என வண்டி ஓடும். பள்ளி இடைவேளைகளில் மாட்டுக்கு வைக்கோல் போடும் பணி வேறு. தாத்தா சொல்லக் கேட்கும்பொழுதே ஆசையாக இருக்கும் நாமும் அந்த வண்டியில் போகவில்லையே என. அது புரிந்தது போல உடனே சொல்வார்கள். சாலை இப்போது இருப்பது போன்ற நல்ல தார் சாலை கிடையாது, கல்லும் கரடுமாக 'ணங்'கென்று வழியெல்லாம் தலையில் அடித்துக் கொண்டே வண்டியில் பயணம், அதுவும் உற்சாகமாகத் தானிருக்கும் என.

நடையில் தொடங்கிய கதை சில நாட்கள் வீடு வரை தொடரும், வீட்டில் இருக்கும்போது பசளைக்  கதை ஆரம்பித்து விட்டால் அப்பத்தாவுக்கு உற்சாகம் கரை புரண்டு ஓடும். உலகையே ஆளும் சக்தியே ஆயினும் பிறந்தவீட்டுப் பெருமையில் மயங்காத மங்கையருண்டோ.  அதுவும்  தன் சித்தப்பூ குறித்த நினைவுகளில் திளைத்தால் மிக நல்ல "mood"இல் வந்து விடுவார்கள் அப்பத்தா. தெரிந்தேதான் பல முறை தாத்தா இந்தக் கதை சொன்னார்களோ!?

பசளையில் ஒரே அலமாரியின் மூன்று தட்டுகள் தாத்தாக்கள் மூவருக்கும் புத்தகங்கள் வைத்துக்கொள்ள இருக்குமாம். மேல் தட்டு சின்னத் தாத்தாவுக்கும், நடுத்தட்டு சிதம்பரம் தாத்தாவுக்கும், கீழ்த்தட்டு தாத்தாவுக்குமானது. மிக நேர்த்தியாக மேல் தட்டும் கீழ் தட்டும் இருக்குமாம், நடுத்தட்டு மட்டும் புத்தகங்கள் கலைந்து கிடக்க, கதவைத் திறந்தவுடன் புத்தகங்கள் கீழே கொட்டுமாம். அண்ணனைக் குறித்துக் கேட்டும் கேட்காதது போல அப்பத்தா கையில் இருக்கும் வேலையை கவனிப்பார்கள் :)
தாத்தாவுக்கும் அப்பத்தாவுக்குமான அந்த interactions எல்லாம் அப்போது புரியவில்லை :)

பின்னர் சின்னத் தாத்தா படிப்பு முடிந்து, சிதம்பரம் தாத்தாவுக்கும் சைக்கிள் வாங்கிய பின்னர், அம்மையநாயக்கனூரில் இருந்து தன்னுடைய சைக்கிளை பசளைக்குக்  கொண்டு வருவதற்கு தாத்தா, அம்மையநாயக்கனூரில் இருந்து மதுரைக்கும்,  மதுரையில் இருந்து பசளைக்கும் சைக்கிளை ஓட்டிக் கொண்டே வந்தார்களாம். இதைக் கேட்டபோதுஅந்த மலைக்க வைக்கும் சைக்கிள் பயணமும் தொலைவும்(ஏறத்தாழ 90கி.மீ ) புரியவில்லை எனக்கு. நானோ சைக்கிள் ஓட்ட பயந்து நாட்களைக் கடத்திக் கொண்டிருந்த காலம் அது. இப்போது சிந்தித்தால் அடேயப்பா என்று இருக்கிறது.

உழைப்புக்கும் வியர்வைக்கும் அஞ்சாத மேன்மக்கள்.

முந்தைய பதிவு (3)

அடுத்த பதிவு (5)

Friday, May 15, 2015

சற்குரு - தாத்தா - 3

வைகறையில் விழிப்பதெல்லாம் படு ஜோராய் நடக்கும் தாத்தாவோடு இருக்கும் வரை. ஈரோடு சென்றதும் செல்லம் கொஞ்ச ஆரம்பித்தால் அம்மா உபயோகப் படுத்தும் அஸ்திரம் தாத்தாவிடம் சொல்லவா என்பதுதான்.

சிறுமலரில் Petro  missஇடம் சேர்த்து விட்டு, "மிஸ்ஸூ எங்க வீடு சர்ச் கிட்ட இருக்கு மிஸ்ஸூ.. என்னை வீட்டுல கொண்டுபோய் விட்டுருங்க" என அழுது அமர்க்களமாய் பள்ளி செல்ல மாட்டேன் என ஆட்டம் காட்டிக் கொண்டிருந்த வயது அது. ஈரோடு சென்றும் தொடர்ந்தது பள்ளி நுழையாப் போராட்டம். அப்போது ஒருநாள் அம்மா குளித்துக்கொண்டிருக்க தபால்காரர் கொடுத்த கடிதத்தைப் பார்த்துவிட்டு "அம்மா தாத்தாவிடமிருந்து  letter" என்றதும், "எப்படித் தெரியும் உனக்கு தாத்தா கடிதம் என்று?" (பள்ளிக்கே போகவில்லையே) என அம்மா வினவ, inland letter இன் from addressஇல் ASA எனப் போட்டிருக்கே என பதில் சொன்னது நினைவிருக்கிறது.  ABCD விட  ASA நன்கு தெரியுமே.

விடுமுறைக்கு ஈரோட்டில் இருந்து மதுரைக்கு சிலசமயம், 'ஒரு பகல்நேர பாஸஞ்சர் வண்டியில்' வருவதுண்டு. ஆளில்லாமல் காலியாய் காவிரிக்கரையோரம் வரும், திருச்சி வந்து பின் பஸ்ஸில் வந்த நினைவு. இரவில் நாகமலைத் தெரு நாய்களுக்கு பயந்து கொண்டே அப்பாவோடு ஒட்டிக் கொண்டு செல்வநிலையம் நெருங்கும் போதே பட்டாம்பூச்சி பறக்கும் மனதில்.."பஸ்ஸில் வந்தீர்களா?" என தாத்தா என்னிடம் வினவ, நான் பெருமையாய் "trainஇல் வந்தோம், படுத்துக்கொண்டே" என சொல்ல, "உனக்கென்னம்மா? உங்க அப்பா உன்னை கூபேயில் அழைத்து வருவான்" என தாத்தா சொன்னார்கள். நாங்கள் வந்த பாஸஞ்சரைக் முதல் வகுப்புக் கூபே என எண்ணிய நாட்கள்.

விடுமுறைக்கு வந்துவிட்டால் தாத்தா,  வீட்டு இளநீர் தயாராய் இறக்கி வைத்திருப்பார்கள். ஒரு வாகான கட்டையை வைத்துக் கொண்டு அரிவாளால் தாத்தா இளநீர் சீவும் இலாவகம். அதற்கென உரிய சொம்பில் இளநீர் வடித்து இளவழுக்கை சேர்த்துக் கொடுப்பார்கள். தேவன் கொடுத்த தேவாமிர்தம்..

சிலநாட்கள் ஒரு சிறு பேனாகத்தியைக் கைக்கொண்டு தென்னை ஓலையிலிருந்து நறுவிசாக ஈர்க்குகளைப் பிரித்து எடுத்து துடைப்பம் ஒரு கலைப் பொருளாய் உருவாகும். கிழித்த ஓலைகளை சிறு சிறு கட்டுகளாக '8' வடிவில் கட்டி உலர்த்துவார்கள் வெந்நீருக்கென. எரியப்போகும், எறியப்போகும் பொருட்களில் கூட ஒரு ஒழுங்கு.

உலர்த்தும் வேட்டி, துண்டுகளின் இரு நுனியும் கச்சிதமாய் சமஅளவாய், உதறி உலர்த்தும் நேர்த்தியிலேயே சுருக்கங்கள் ஏதுமின்றி..இன்று washing machine விட்டு சுருங்கிய சும்மாடாய்த் துணிகளைப் பார்க்கும் போது ஆதங்கப் படுவதுண்டு(படுவதோடு சரி). சிறு சிறு விஷயங்களே மனிதரின் பெரிய குணங்களை எடுத்துக் காட்டும் என்பதற்கிணங்க, மனதின் ஒழுங்கும், கட்டுப்பாடும், நேர்மையும் -  கலைந்த கால்மிதியைப் பிரித்து நேராக்கிவிட்டே தாண்டுவது, படித்து முடித்த பின்னர் iron செய்தது போன்ற மடிப்புடன் இருக்கும் The Hindu பேப்பர்,  காலையில் வரும் திருவோடுகளுக்காக அலமாரியில் எப்போதும் தயாராய் வைத்திருக்கும் சில்லறைக் காசுகள், அலமாரிகளில் விரிக்கும் newspaperஇன் கச்சிதமான விரிப்பு (பின்னர் அருணாச்சலம் மாமாவிடம் இதைப் பார்த்திருக்கிறேன்) எனப்பல சிறுதுளிகளில் அந்த சூரிய ஒளி மின்னும்.

முந்தைய பதிவு (2) 

அடுத்த பதிவு (4)

Thursday, May 14, 2015

சற்குரு - தாத்தா - 2

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்சோதியைப் பாடுவது போல் எங்கு தொடங்குவது என்று திகைக்கிறது மனது.

நடை பயின்ற வயது நினைவிது - செல்வ நிலையத்தின் வாசல் மிதியடிக்குக் கீழே பதிந்த வெண்சங்கை வருடிக் கொண்டே இருக்கத் தூண்டும் வழவழப்பு, தரையின் முகம் காட்டும் பளபளப்பு, தாத்தா அமர்ந்த வெதுவெதுப்போடு இருக்கும் மரசிம்மாசனம். அந்த நாற்காலி தாத்தா மறைவுக்குப் பின் உயரம் குறைந்து விட்டதென்றே தோன்றும். அதில் அமர்ந்து கொண்டு தன் இரு பாதங்களிலும் ஏற்றி நிற்க வைத்து, 'ஏல பாண்டியா' என ஏற்றி இறக்கும் சந்தோஷம். காதை இழுத்து காது கத்துகிறது என விளையாடும் விளையாட்டு.. குழந்தையின் கனவில் தெய்வம் வருமெனக் கேட்டிருக்கிறோம். குழந்தைகளிடம் தாத்தாக்கள் உருவில் நேரில் வருமென நாமே உணர்ந்திருக்கிறோம்.

இடையறாது பேசும் வயதின், நினைவுகள் ஏராளம். அறிந்ததனைத்தும் அவர் அறிவித்ததெனும் போது எதை எழுதுவது, எதை விடுவது.K.B.சுந்தரம்பாள் போல என்ன என்ன என இடையறாத கேள்விகள். "தாத்தா, உங்கள் நெற்றியில் ஏன் மூன்று கோடுகள், அணிலுக்கு ராமர் போட்டது போல் யார் போட்டது உங்களுக்கு?" எனக் கேட்டதற்கு, சிரித்துவிட்டு "20 வயதிற்கு ஒன்று என கோடு வரும், 60 வயதுக்கு மேலாகிவிட்டது எனக்கு. அதனால் 3 கோடுகள்" என்று தாத்தா சொன்னதும் நமக்கு எப்போது 20 வயதாகி முதல் கோடு விழும் என ஆசையாயிருந்தது. குழிந்திருக்கும் தோள்பட்டையைப் பார்த்துத் திகைத்து "ஐயோ பள்ளம் விழுந்திருக்கே! எனக்கெல்லாம் இல்லையே? ஏன் குழி விழுந்தது?" என்றதற்கு "உன்ன மாதிரி நிறைய சின்னப் பிள்ளைகள் தோளில் ஆடினதால் குழி விழுந்தது" என்றதும், "உங்க கை எல்லாம் அணில் மாதிரி ரொம்ப softஆ இருக்கே, பஞ்சுத் தாத்தா" எனக் கொஞ்சியதற்கு, முதுகில் சாய்த்துக்கொண்டு "பெத்தாரு பெத்தாரு பேரு வைக்க வந்தாரு" எனப் பாடியதன் பொருள் அப்போது புரியவில்லை..

அந்த வயது நினைவாக பாட்டியும்(தாத்தாவின் அம்மா) பாட்டியின் மென்மையான, பச்சை குத்திய கைகளும் நினைவு வருகிறது. செல்வநிலையத்தின் பின்னால் நின்ற வேம்பும், அதில் கட்டியிருந்த தேன்கூடும், அம்மரத்தில் வழிந்த பிசினைத் தொட்டுக்கொண்டே பின்னால் விறகடுப்பில் பாட்டி போட்டிருந்த வெந்நீரைப் பார்த்துக்கொண்டிருந்தது நினைவு வருகிறது.

லா.ச.ரா சொல்வது போல் "எதுவுமே மறப்பதில்லை; எல்லாமே ஒளிமறைவில் பாயச் சமயம் பாத்திருப்பவையே"

கொஞ்சல் மட்டுமல்ல,  அதட்டலும், அடிப்பதாக தாத்தா விசிறியைத் தூக்கியதுமான சம்பவங்களும் உண்டு. (நான்தான் பல காரணங்கள் கொடுப்பது வழக்கமாயிற்றே - சாப்பிடாமல் படுத்துவது, எதற்காவது 'மக்குக் கழுதை' எனப்பெயர் பெற பிடிவாதம் பிடிப்பதென) அடிக்க வந்தாலும், 'தாத்தா' என அழுது தாத்தா கால்களையே கட்டிக்கொள்வது என் வழக்கமாம். பிறகு எங்கு அடிப்பது. இதை அம்மா நினைவு கூறும் போதெல்லாம் தோன்றுவது:

தஞ்சம் அடைந்தபின் கைவிடலாமோ?
தாயும் தன் குழந்தையைத் தள்ளிடப் போமோ??

முந்தைய பதிவு (1) 

அடுத்த பதிவு(3)

Sunday, May 10, 2015

சற்குரு - தாத்தா

இது ஒரு personal பதிவு.  உன்னைப் பற்றிய கதை, உன்னை பாதித்த கதை  ஊருக்கு எதற்கு எனக் கேட்போருக்கு - இதிகாசம் முதல் புராணம் வரை ஊராரைப் பற்றிய கதைகள் தானே.. அதுதானே ஆவலைத் தூண்டுகிறது.
அதனால் சற்றே என் சுயம் பொறுத்துப் படிக்க முயலுங்கள். என் கதையல்ல இது. ஒரு வகையில் என் கதை தான் - நான் நானாக இருக்க விதை விழுந்த கதை, என் வேர்கள் நிலம் பழகிய நினைவுகள், நிலம் கீறி முகம் தூக்கிய தளிர், ஓங்கி உயர்ந்த ஆலமரம் நோக்கி அண்ணாந்து வியந்த நினைவுகள். நானும் ஒருநாள் நிழல் தருவேன் என விழுது நன்றியால் நினைவு கூறும் கதை.

என்னை கரம் பற்றி நடை பழக்கிய ஆசானின் நினைவுகள், ஒரு நாளின் ஒவ்வொரு மணித்துளியும் நிறைந்திருக்கும் உணர்வு குறித்தும். தாத்தா அய்யாதுரை பிள்ளை - அவரது 99ஆவது பிறந்த நாளில்.

"பேராயிரம் பரவி வானோர் ஏத்தும் பெம்மானைப்
பிரிவுஇலா அடியார்க்குயென்றும்
வாராத செல்வம் வருவிப்பானை
மந்திரமும் தந்திரமும் மருந்தும் ஆகித்
தீராநோய் தீர்த்து அருளவல்லான் தன்னை"

போற்றாதே ஒரு நாளும் போவதில்லையே...

இருள் பிரியாத அதிகாலை.
வாசல் புதிய நாளை வரவேற்க அணிகொள்ளும் நேரம். வாசல் என்பது நான்கு tiles  சதுரம் அல்ல அப்போது. வேப்பமர இலைகள் நிரம்பிய வாசல், தெரு தாண்டி எதிர் மனை வரை, நிலத்தடி நீர் வழங்கும் குழாயடி வரை தாத்தாவின் மனது போலவே விசாலமான வாசல். விடிகாலை 5.30 மணிக்கே எழுந்து என்ன செய்கிறீர்கள் எனக் கேட்டால் 3 மணிக்கு எழுந்தேன் என பதில் வரும். 

கதிரவனின் முதற்கதிர் முத்தமிடும் காலை.
ஐம்புலனையும் குளிர்விக்கும் தாத்தாவின் கிணற்று நீர் குளியல். விபூதி மணமும் சந்தன மணமும் கலந்த பூஜை அறையில், அப்பத்தா கையால் மெருகேறி பொன்னென சுடர் எரியும் விளக்கொளியில் "தீப மங்கள ஜோதீ நமோ நமோ" உடன் மணி அடிக்க வரும் ஆவல். (இன்றைய "நமோ" எல்லாம் அப்போது தெரியாது) 

வேப்பமரத்துக் காகமும் அணிலும் குரல் எழுப்பும் காலை. மனம் மயக்கும் மணம் கமழும் filter coffee  - அதற்கு உரிய முதல் மரியாதையோடு பலகை போட்டு அருந்தும் நேரம். Coffee முடித்தவுடன்  வரப்போகும்  காலை நடைக்காக எதிர்பார்ப்புடன் அருகில் அமர்ந்திருக்கும் நேரம். நடை இல்லாத நாட்களில் ஒரு மணி நேரம் யோகாசனம் கட்டாயம். காலை நடை குறைந்த பட்சம் 1 மணி நேரம். உலகம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமாய் விடிவதை பார்த்துக் கொண்டும் ஆகாயத்தின் அடியில் இருக்கும் அனைத்து விஷயங்கள்  குறித்து விவாதித்துக் கொண்டும் - சிறு பிள்ளையென சிறு பிள்ளைக்கதைகளோடு நிறுத்திக் கொள்ளாமல் என்னென்னவோ  பேசுவதற்கும் விவாதிப்பதற்கும் ஒரு களம் அந்த நடை நேரம். விபூதி மணக்கும் நீண்ட சுட்டு விரல் பற்றி நடந்த பொழுதுகளும் உரையாடல்களும் இன்று வரை வாழ்வை விரல் பற்றி அழைத்துச் செல்கிறது.

வேப்ப இலைகளோ, வேப்பம்பூக்களோ, பழங்களோ மாதத்திற்கு ஏற்றார் போல் சிமெண்ட் வாசல் முழுக்க இரைந்து கிடக்கும் நண்பகல். 7 குருவிகள் கூட்டமாக வரும் "தவிட்டுக் குருவி" , கத்தும் போது "சுப்ரீ சுப்ரீ" என்று  உன்னை கூப்பிடுகிறது என தாத்தா சொன்னதால்  அந்தக் குருவிகள் மேல் ஒரு தனிப் பிரியம். வீடு முழுக்க ஒரு மௌனம். சமையல் அறையில் அப்பத்தா சமைக்கும் மணம்.  தாத்தாவிடம் மாலை எந்த பக்கம் walking போகலாம்? நாளை எங்கு போகலாம்? அல்லது INA வில் நீங்கள் இருந்த கதை சொல்லுங்கள் (100வது முறையாக இருக்கும்), என்ன புத்தகம் படிக்கிறீர்கள்? "பேராயிரம் பரவி" என்றால் அந்த 1000 பெயர்கள் என்னென்ன? என்று வண்டு போல துளைத்து எடுக்கும் நேரம்.

சிலசமயம் தாத்தா, "எங்கே வாசலில் ஒரு இலை (பூ/பழம்) கூட இல்லாமல் சுத்தம் செய் பார்க்கலாம்" என நாய் வாலை நிமிர்த்தும் வேலை கொடுப்பதுண்டு.  பல நாட்கள் Hindu paper தலைப்பு செய்திகள் அனைத்தும், அல்லது எதாவது ஒரு முக்கியமான article படிக்கச் சொல்வார்கள். மூலாதாரம், சுவாதிஷ்டானம் தொடங்கி அனைத்துச் சக்கரங்கள் குறித்தும் சில நாட்கள் பாடம் நடக்கும். இப்போதும் முதுகு வளைந்து உட்கார்ந்தால் அசரீரியாய் கேட்கும்  நிமிர்ந்து உட்காரச் சொல்லும் தாத்தாவின் குரல்.அல்லது 27 நட்சத்திரங்களும் அதன் ராசிகளும் என்னென்ன என astrology குறித்து சிறு உரையாடல். "Mao tse tung", "Zhou  en lai" எல்லாம் சரித்திர பாடம் படிக்கும் முன்னரே பரிச்சயமானது இந்த நேரத்தில்தான்.

ஊர் முழுதும் அடங்கிக்  கிடக்கும் பிற்பகல். ஒரு மணி நேர ஓய்வு. மீண்டும் மாலை வருவதற்குள் ஒரு முறை வீடு முழுக்க பெருக்க வேண்டும். ஒரு நாளைக்கு 4 முறை வீடு பெருக்கப்படும் அப்போது. முன் மாலை நேரம் வேப்பமரக் காற்றோடு சுகமாகத் தாலாட்டும். முகத்தில்  வெண்ணீறு துலங்க தாத்தா திண்ணைக்கு வந்து அமரும் நேரம்.அவ்வப்போது தெருவில் செல்வோர் தாத்தாவிடம் முகமன் கூறியோ, பிள்ளைகள்  குறித்தோ சில நிமிடங்கள் நின்று பேசி விட்டு போவார்கள். அவர் யார் எங்கிருக்கிறார் என்பது குறித்தோ அவர் பிள்ளைகள் வாங்கிய நல்ல marks அல்லது பரிசுகள் குறித்தோ சில வார்த்தைகள். தாத்தாவின் நண்பர்கள் முக்கியமாக தாடித் தாத்தா(hindi pandit ) சில நாட்கள் வந்து பேசிக் கொண்டிருப்பார்.

மனதின் பல அடுக்குகளில் ஒளிஏற்றிய காரணத்தாலோ என்னவோ தாத்தா என்றால் காலைப் பொழுது தான் மனதுள் விரிகிறது.

தாத்தாவுடனான இரவுகள் 7 மணிக்கு தொடங்கி 9 மணிக்கு முடிந்து விடும். திருவாசகம் மெல்ல முணுமுணுத்துக் கொண்டு, விசிறியால் விசிறிக்கொண்டு, வேண்டா வெறுப்பாய் நாட்டு வாழைப் பழம் சாப்பிடுவதோடு முடியும் இரவுகள். பின்னர் பழமும் பிடித்துப் போனது வேறு கதை.

எல்லா உலகமும் ஆனாய், நீயே; ஏகம்பம் மேவி
                               இருந்தாய், நீயே;
நல்லாரை நன்மை அறிவாய், நீயே; ஞானச்சுடர்
                   விளக்கு ஆய் நின்றாய், நீயே;
பொல்லா வினைகள் அறுப்பாய், நீயே; புகழ்ச்
               சேவடி என்மேல் வைத்தாய், நீயே;
செல்வாய செல்வம் தருவாய், நீயே திரு ஐயாறு
                      அகலாத செம்பொன்சோதீ!