-5-
மிக இளம் வயது முதலே என்னுள் இனம்புரியாத அச்சத்தை ஏற்படுத்துவன மலைகள். பேருந்துப் பயணங்களில் உடன் வருவது போலத் தோன்றும் மலைத்தொடர்களைப் பார்த்து குழந்தைப் பருவத்தில் பயந்து அழுதிருக்கிறேன். இன்னும் அந்த அச்சத்தின் சுவடை என் ஆழ்மனதில் உணர முடிகிறது. மலைகளின் பேருரு, அசைவின்மை, அணுகமுடியாமை, இருளோடு கரைந்து காண முடியாமல் போகும் ஆழ்நீலம், நுண்கோடுகளாக ஒளிவிடும் தன்மை எனப் பல விளக்கவியலாத காரணங்கள். தனிமை, துயர் ஆகியவற்றால் ஆகிய முடிவேயில்லாத இரவு, நீண்ட மலைத்தொடரை நினைவுறுத்தும். 'மலையெனத் துயர்வரினும்' என்ற சொற்றொடரை முதலில் சொன்வர் இதுபோல உணர்ந்திருக்கலாம்.
எனில் மலைகளின் கவர்ச்சியும் அதீதமானது. மலைகள் அதன் நிமிர்வால், நொடிதோறும் உருமாறினும் நிலையாயிருப்பதன் காட்சிப்பிழையால், ஒளித்துவைத்திருக்கும் ரகசியங்களால் வசீகரிப்பதும் அதிகமாகிக் கொண்டேதான் வந்தது. தன்னுள் பொதிந்திருக்கும் கரவுகளால் மலைகள்
மயக்கின. மேற்குத் தொடர்ச்சி மலையும், மலைகளுக்கெல்லாம் சிகரமாகிய இமயமலையும் அதில் உலவுவதும் தொடர்கனவுகளாயின.
வடதுருவத்து பனிக்காற்றைத் தன் விரிசடையில் தாங்கி பாரதத்தைக் காக்கும் பேரளியை, அதன் உச்சியில் தோன்றும் நிலவை, முகடுகளிலிருந்து பொழிந்திறங்கும் கங்கையெனும் அருளை, அனைத்தையும் இணைத்து சிவமென உருவகித்த முதல் மூதாதைகளின் உள்ளங்களில் எழுந்த பெருவியப்பும் மெய்சிலிர்ப்பும் இமயத்தை எண்ணும்போதெல்லாம் என்னுள் எழும். அதை ஓவியத்தில் வடிக்கும் பெருவிருப்பும் உண்டு. அப்பனிமலை முகடுகளை இன்னும் சில நிமிடங்களில் பார்த்துவிடலாம் என்னும் சாத்தியமே உடல் தளரும்போதெல்லாம் ஊன்றுகோலாகியது.
உச்சியை அடையும் தருணத்தை மனம் விதவிதமாகத் தீட்டி வைத்திருந்தது. அது நிகழ்ந்துவிட்டதாலேயே அந்த நிமிடம் ஏதும் உளக்கிளர்ச்சி
ஏற்படவில்லை. கீர்கங்கா என்ற அறிவிப்பைப் பார்த்துதும் திரும்பிப் பார்த்தால் ஒரு சரிந்தேறும் விரிந்த புல்வெளியெங்கும் பல வண்ணங்களில் கூடாரங்கள். முன்னரே வந்துவிட்ட குழுவினர் கீர்கங்காவின் வெந்நீரூற்றுக்களுக்குத்தான் சென்றிருப்பார்கள் எனத் தோன்றியது. அது எங்கே என விசாரித்தால் அப்பெருவிரிவின் உச்சியைக் காட்டினார்கள். அரை கிலோமீட்டரே இருக்கக்கூடும். அத்தொலைவை கம்பூன்றி, 'ஊருண்டு பேருண்டு உறவுண்டு சுகமுண்டு' எனப் பாடி ஏறும் கே.பி.சுந்தராம்பாள் போல முக்கால்மணி நேரம் ஏறினேன்.
"முப்பத்தைந்து வயதுக்கு மேற்பட்ட மலையேறும் இந்தியப் பெண்கள் ஒரு சதவீதத்துக்கும் குறைவே, எனவே கவலைப்படாதீர்கள், நீங்கள் ஏற்கனவே ஆயிரத்தில் ஒருவர்" என்றெல்லாம் கூறி ஊக்குவித்தனர் குழுவினர். நம்பத்தான் வேண்டியிருந்தது. ஏறும் வழியெங்கும் பயணிகள் மிகக்
குறைவே. கசோலில் குழுமியிருந்த நெரிசலில் இருந்து ஒரு சதவீதமே
மலையேற வந்திருந்தது. சராசரி வயது முப்பதுக்கும் கீழே. மலையேறுபவர்களில் வெளிநாட்டினர் மட்டுமே இருபாலரும் அனைத்து
வயதினரும் இருந்தனர்.
உச்சியில் செங்கொடி பறந்த ஒரு சிறு கோவில் இருந்தது. அதற்கு சில அடிகள் முன்னதாக ஒரு பெரிய வெந்நீரூற்றுக் குளத்தை இரண்டாகப் பிரித்து பெண்களுக்குத் தனி அறை போலக் கட்டியிருந்தனர். 33 சதவீதம் இடஒதுக்கீடு இருந்தது.
முன்னரே நீராடிக் கொண்டிருந்தவர்களோடு இணைந்து கொண்டேன். நீண்ட காலம் பிரிந்த நட்புகளைக் கண்டது போல சிறிது நேரம் ஒரே உற்சாகம். சிலர் ஏற்கனவே குளித்து வெளியேறி அமர்ந்திருந்தனர். கந்தகம் கலந்த நீராதலால் அதிக நேரம் இருந்தால் தலை லேசாக சுற்றுகிறதென முன்னதாகக் குளித்து வெளியேறிய பெண் கூறினார். வெந்நீர்க்குளம் ஐந்தடி ஆழம் கொண்டது.
அது நீச்சல்குளம் அல்ல, அதில் இறங்குவதற்கு முன்னர், அதிலிருந்து வெளியேறும் சிறு குழாய்களில் குளித்து உடலைத் தூய்மைப்படுத்திக் கொண்டே நீரூற்றுக்குள் இறங்க வேண்டும். என்பதை வலியுறுத்தும் அறிவிப்புகளும் இருந்தன.
உடலின் ஒவ்வொரு தசையும் தன்னிருப்பை அறிவித்துக் கொண்டிருந்தது. நீர் உடலில் பட்டதும் எரியும் அளவுக்கு வெப்பம். எனில் உள்ளே இறங்கி பாசி படிந்த தரையில் கால்களை ஊன்றிக் கரையைப் பற்றிக் கொண்டு நின்றதும், நீர் அணுஅணுவாக உள்வாங்கி எண்ணத்தையும் நிறைத்துக் கொண்டது. கொதிக்கும் நீரும் குளிரும் உடல்வலியும் ஒரு போதையை ஏற்ற, நீரிலிருந்து வெளியேற மனமே இல்லை. மீண்டும் தோழிகள் எச்சரிக்கவே வெளியேறி கரையில் அமர்ந்ததும் அவர்கள் சொன்னது புரிந்தது. பொதுவாகவே குளியலுக்குப் பிறகு பசியும் இனிய சோர்வும் ஏற்படும். நடையின் களைப்பும் கந்தக நீராவியும் சேர்ந்து செயலோயச் செய்தது. எழவும் உடல் ஒப்புதலின்றி தலை மிகவும் லேசாக உணர, அப்படியே அமர்ந்திருக்கவே முடிந்தது.
பின்னர் அந்த அறையிலிருந்து வெளியேறி புல்தரையில் காற்றில் படுத்திருந்தேன். இயல்பு நிலை திரும்பியதும் அதுவரை மறைந்திருந்த பசி எழுந்தது. பசியெழுந்த கண்களுக்கு உணவகங்கள் தெரிந்தன.அந்தச் சரிவு முழுவதும் பல விடுதிகள் தங்குமிடமும்(கூடாரம்) உணவகமும் நடத்துகிறார்கள். இருபது முப்பது கூடாரங்கள ஒவ்வொரு விடுதிக்கும் சொந்தமாக இருந்தது. மதியதுக்கும் இரவுக்கும் சேர்த்து மாலையில் உணவு. அத்தனை தொலைவில் எல்லா விதமான உணவும்
சமைத்தளிக்கும் கைகள். வெளிறிய மஞ்சள் மாலை. அமர்ந்திருந்த இடத்துக்கு அருகில் காற்றில்
படபடத்தது கூடாரம். அருகில் ஒரு சிறு பாறையில் மூன்று பெரிய சிலந்திகள்
தொற்றி ஏறிக் கொண்டிருந்தன. பாறை மாமலையில் கயிறு கட்டியேறும்
மலையேற்றக் குழுவினர்.
கண்ணுக்கு எதிரே பெருமலைத்தொடர் - பார்வதி சிகரம். வெள்ளி உருகியது போல அருவிகள் மலையில் பல இடங்களில் ஒலியின்றி சரிவிறங்கின. அனைத்துக்கும் ஆதார சுருதியாக நதியின் நடையோசை. அத்தலத்தின் புராணமாக பார்வதி தேவி ஒருமுறை நீராடும் போது காதணியைத் தொலைத்துவிட சிவன் தேடித் தந்த இடமாக ஒரு கதையை யாரோ சொன்னார்கள். நீராடும் இடத்தில் தன் தோடைத் தொலைத்துவிட்டுப் புலம்பிய ஹேமாவிடம்
அக்கதையைச் சொன்னேன். எங்கிருக்கிறாய் எனது சிவனே என்று குரலெழுப்பி
சிரித்தாள். தோடுடைய செவியனும் சிரித்திருக்கக் கூடும்.
வேகமாகச் சரிந்திறங்கிய அந்தியொளியில் மின்னிய பனிமலைகளின் அடுக்குகளிலிருந்து முகில்கள் விரைந்து நாங்கள் இருந்த சிகரத்தை நோக்கி வந்து கொண்டிருந்தன. குளிரும் அடர்ந்து கொண்டே இருந்தது. ஏழு மணி வரை வெளிச்சம் இருந்து கொண்டே இருந்தது. காடுகளின் மரங்கள் தனிக்கோட்டுருவை இழந்து முதலில் இருளத் தொடங்கின. பூச்சிகளை விரட்டப் பல இடங்களில் புகை மூட்டம் போட்டிருந்தனர். அத்துடன் மேகமும் இறங்கி சூழ்ந்து கொள்ள காட்சி மங்கியது. கேளிக்கைக்கென மூட்டப்பட்டிருந்த நெருப்பு ஆங்காங்கே தெரிந்தது. சூரியமின்விளக்குகள் மிக மென்மையாக ஒளி சிந்திக் கொண்டிருந்தன. இரவின் முற்றுகையில் அந்தி சரணடையும் தருணம் எதுவெனத் தெரியாது நழுவிச் சென்றது.
இரவுணவுக்காகவும் புகைக்காவும் நீருக்காகவும் குழு வேறுவேறு திசைகளில் பிரிந்து
சென்றிருந்தது. நானும் ஹேமாவும் இன்னொரு பெங்களூர் தோழி அனுஷாவும் புல்வெளியில் அமர்ந்திருந்தோம். மிக உற்சாகமான இரு பெண்கள். எங்களுக்கு வேறு உத்தேசங்கள் இல்லை. குளிர் மிகுந்துவிட்டது. கழிவறை வசதிகள் நன்கு இருந்தன - நீள்குழாயில் இடையறாது ஓடிக் கொண்டிருக்கும் இளவெந்நீர் நிறுத்த வேண்டிய தேவையே இல்லாமல் அவ்விடத்தை சுத்தமாக நாற்றம் இன்றி வைத்திருந்தது. மூவர் தங்கிக் கொள்ள ஒரு கூடாரம். உள்ளே மெத்தையிட்டு இருக்க குளிர் ஓரளவு தயங்கி வெளியே நின்றது. தோழியரோடு இரவுக்காக அறையைச் சற்று சீரமைத்துவிட்டு வெளியே வந்தபோது முகில் கடந்து விட்டிருந்தது. கண்களிலிருந்து எண்ணைப் பசை அகன்று விட்டது போல் ஒரு தெளிவு. இருளிலும் ஒளிர்ந்தது பனிச்சிகரம்.
எங்கிருந்து ஒளி கசிகிறது என விண்ணைப் பார்த்ததும் உடல் விதிர்த்தது. இடைவெளியேயின்றி நட்சத்திரங்கள். ஆயிரக்கணக்கில் லட்சக்கணக்கில் உற்று நோக்கும் பார்வை நிலையழிவை ஏற்படுத்தியது. எவ்வளவு சிற்றுயிர் இந்த மானுடன்; எனில் இயற்கையோடு இடையறாது மோதிக் கொண்டே இருக்கிறான்; குழந்தைகளுக்கே உரிய அறியாமையோடு. கையை இழுத்து, வயிற்றில் ஏறி முடியைக் கலைத்து, முதுகில் குத்தி, கன்னத்தைக் கடிக்கும் மகவின் சீண்டலை கருணையோடு அனுமதிக்கும் தந்தையென பிரபஞ்சம். 'மகத்தான இந்த விரிவின் முன்னால் பதைபதைப்பின்றி நிற்க முடியாதுதான் மனிதன்
வீடுகளைக் கட்டிக் கொண்டான்' என்ற ‘காடு’ நாவலின் வரி நினைவில் வந்தது.
சிங்கையிலும் மதுரையிலும் சென்னையிலும் எங்கிருந்தாலும் காணும் ஓரியன் மண்டலத்தின் மூன்று தாரகைகளைத் தேட சரிவுக் கோணத்தில் தெரிந்தது. முன்பின் அறியாத கூட்டத்தில் தெரிந்தவர்களைப் பார்த்த அமைதி ஏற்பட்டது. அவற்றை வைத்து, என் தோழியின் மகனோடு தினம் காணும் வேறு சில நட்சத்திரங்களை அடையாளம்
காண முயன்று கொண்டிருந்தேன். அறிந்தவற்றைக் கொண்டு அறியாதவற்றை
அறிய முயலும் மனித அறிவு. அவனிடம் சொல்வதற்கேனும் சில புதிய
நட்சத்திரங்கள் காண வேண்டும். பெயரறிய கூகுள் அங்கில்லை. மனதில் மட்டும் பதிந்து கொண்டேன். குளிர் மெல்ல எலும்புகளுக்குள் இறங்கத் தொடங்கியது. இரவு கலப்படமில்லாது கருமையோடு இருந்தது. கூடாரத்துக்குள் நுழைந்து கொள்ள இரவின் முழுக்கருமையோடு குளிரும் போர்வைக்குள் அடங்கியிருந்தது. இரவை துணைக்கும் எத்தனையோ சிறு பூச்சிகளின் ஒலி. மாலையில் பார்த்த சிலந்திகளின் நினைவு வந்தது. தொடர்ந்து தவளைகளின் ஒலி கேட்டதும் நாகங்களை மனம் கற்பனை செய்து கொண்டது. அரவும் அலைபுனலும் இளமதியும் நகுதலையும் விரவும் சடை - இறுதி நினைவில் இது என்ன பாடல் என யோசிக்கும் போதே கனவுகளில்
குதிரை இந்தியில் பேசத் தொடங்கிவிட்டது.
-6-
விழிப்பு தட்டியதும் கூடாரத்தைத் திறந்து வெளியே பார்த்த போது வானம் வெளுக்கத் தொடங்கியிருந்தது. குளிராடையை கூடாரத்திலேயே விட்டுவிட்டு ஒரு காற்று தடுக்கும் ஆடையை அணிந்து கொண்டு ஊற்றை நோக்கி மெல்ல ஏறத் தொடங்கினேன். காற்று குழலோடும் உடையோடும் கலைத்து விளையாடியது. நீர்க்குளத்தருகே ஓரிடத்தில் அமர்ந்து கதிரின் முதல் ஒளி முகடுகளைத் தொடும் தரிசனத்துக்குக் காத்திருந்தேன். நடமாட்டம் இல்லாத காலை. தொலைவின் பனி உச்சிகள் மெல்ல ஒளியேற்றிக் கொண்டன. கதிர் எங்கோ மலைகளுக்குப் பின்னால் எழுந்துவிட்டதை உணர முடிந்தது. வானின் இளநீலமும் மலையின் கருநீலமும் இணையும் கோடுகளில் ஒளி கசிந்து கொண்டிருந்தது. வேகமாக வெளியேறிய இருள் அருகிலிருந்த வலதுபுறக் தேவதாருக் காட்டுக்குள் சென்று ஒளிந்து கொண்டிருந்தது.
எதிரே மலையின் உடலில்
மின்னித் தெரிந்தன அருவிகள். விழியை மூடினாலும் பார்வதியின் பெருஞ்சுழிப்பையும் வேகத்தையும் உள்ளே நிறைத்துக் கொண்டிருந்தது நீரின் இடையறாத ஒலி. இரண்டு நாட்களாக மூச்சென உடனிருக்கும் ஆதார நாதம். சில நொடிகளின் விழி அலைவில் தவறவிட்டு விட்டேன்; மலை தனது பொன்முடியைச் சூடி முழுமோனத்தில் அமர்ந்திருந்தது. திடீரென்று மீண்டும் ஒரு குளிர் அலை எழுந்து உடலை மூழ்கடித்தது.
ஆறு மணியானதும் நீரூற்று குளிக்கத் திறக்கப்படும். மீண்டும் ஒரு முறை வெந்நீராடல். இம்முறை ஏகாந்தமாக - மொத்தக் குளமும் எனக்கென விரிந்திருக்க, குளத்தில் வந்து கலந்த சிற்றோடை சலசலத்துக் கொண்டிருந்தது. நீரின் மேலெழுந்து நின்ற மெல்லிய புகையில் மிதந்து கொண்டிருப்பது போன்ற உணர்வு. கரையேறி உடைமாற்றிக் கோவிலை நோக்கி நீண்ட படிகளில் ஏறும் போது மணி ஒலிக்கத் தொடங்கியது. மணியின் கார்வையோடு வெந்நீர் குளியலுக்குப் பிறகு உள்ளிருந்து எழுந்த இதயத்துடிப்பும் இயைந்து காதில் கேட்டது. படிக்கு ஒரு மணியென ஒலிக்க அந்தச் சிற்றாலயத்தின் நந்தியருகே நின்று பார்த்தேன். மலையின் பின்னால் வெள்ளமெனப் பெருகிவிட்டது கதிரொளி.
திரை விலகி உள்ளே ஒற்றை தீபத்தின் ஒளியில் வீற்றிருந்தது சிவம். மூவாயிரம் ஆண்டுகள் அங்கு சிவன் தவமிருந்ததாகக் தலவரலாறு. மூவாயிரமா - இக்கணம் வரை நீடிக்கும் தவமல்லவா அது.
மனித வருடங்களில் அளவிட முடியாத ஏதோ ஒரு புள்ளியில் ஒளியும் புவியும் விசும்பும் காற்றும் புனலும் மட்டுமே அறிந்த முதல் ஆடலை நிகழ்த்தி விட்டு மலையென அமர்ந்து விட்ட பெருமோனத்தான். ஒலி வெள்ளருவி ஓங்குமலைநாடன். காலையும் மாலையும் அவன் மடியில் தவறவிட்டுச் சென்ற தன் பொன் அணிகளை, பகல் முழுவதும் இரவுமுழுவதும் அவன் மடியில் தவழ்ந்தோடித் தேடியலையும் மலைமகள். சிரிக்கிறாள் சீறுகிறாள் அலைக்கழிகிறாள் . பெருந்தவத்தான் முகம் புன்னகையில் கதிர்சூடி பிறைசூடி ஒளிகொள்கிறது. பொன்னொளி பார்த்து அமைதிகொள்கிறாள்.
ஆலயத்தில் மணி அதிர்ந்தெழ மண்ணில் வந்து விழுந்தேன். படியிறங்கியதும் மலைவிட்டிறங்கத் தொடங்கியதும் அதன் போக்கில் நிகழ்ந்தன. எல்லாமே அதனதன் போக்கில்தானே நிகழ்கின்றன - அறிவென்றும் மனமென்றும் மயங்கி நிற்கும் போது நாம் நடத்துவதாக ஒரு மயக்கம்.
ஏறுவது கடினமெனில் சரிவிறங்குவது அதனினும் அறைகூவலாக இருந்தது. பனியில் நனைந்திருந்த மண்ணில் பாறைப் பதிவுகளில் சறுக்காமல் கால்வைத்திறங்க உடல் பழகிக் கொண்டிருந்தது. இறங்கும்போது சில கிளைவழிகளில் வேகமாக இறங்க முடிந்தது. ஆனால் உயரமான பாறைகளில் இறங்கும் போது கால்மடித்து அமர்ந்து இறங்குவதே பாதுகாப்பாக இருந்தது. நதியை நெருங்கிக் கொண்டிருப்பது அணுகி வரும் பேரோசையில் தெரிந்தது. சிற்றாறுகள் அருவிகள் கடந்து, முந்தைய நாள் மூன்று மணி நேரத்தில் கடந்த தொலைவை ஒன்றரை மணிநேரத்தில் இறங்கி ருத்ரநாக் அருவிக் கரையை வந்தடைந்தோம்.
இளைப்பாற அருவிக்குளத்தில் மீண்டும் இறங்கினோம். முந்தைய தினத்தை விட நீர் தண்ணென்றிருந்தது.
குழுவினரில் சிலர் அருவியை மேலும் அணுகி குளிக்கத் தொடங்கினர். குளத்தின் பெரும்பாறையில் அமர்ந்து நீர் சிலம்புவதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். பொழியும் நீர்ச்சிதறல்களில் சிறு வானவில் தெரிந்தது. மாயவில் சிறகு கொண்டது போல நீர்த்திவலைகள் ஊடே பறந்தலைந்தது ஒரு வண்ணத்துப்பூச்சி.
பெருவெள்ளப் பெருக்கின் முன், பெருமலையடுக்கத்துக்கு முன், தன் சிறு சிறகு விரித்து வண்ணங்களோடு தனக்கேயான வானைத் தயக்கமின்றி விரித்தெடுக்கும் சிற்றுயிர். தயக்கம் சட்டென்று அகல எழுந்து நீருக்குள் சென்றேன்.
முதல் தொடலில் தீக்கதிர் தலையிறங்கியது. இடையைத் தாண்டுவதற்குள் தீயைப் பனியென்று சொன்னது. மேலும் நீருள் முன்னகர, நேற்றும் இன்றும் அற்ற ஒரு பொழுதில், சூழ்ந்து வழிந்திறங்கியது பெருந்தவத்தின் ஒரு துளி பல துளி சிறு வெள்ளமாக - ஓசைகள் அடங்கிய ஒரு தருணம் தலைக்கு மேலே கவிந்திருந்தது.
மூச்சுக்காக தலையை வெளியே நீட்டியதும் காது வெடித்துத் திறந்தது போல ஓசைகள். ஒளியும் நீரும் வழிந்து விழிதிறக்க முடியாத சில நொடிகளுக்குப் பிறகு கால்வழியாகக் குளிர்தெரிந்தது.
ஹேமா அந்தக் குளிர் நீர் சுனையில் வில்லென பின்புறம் உடல் வளைத்து நிலம்தொட்டு ஒரு கால் தூக்கி அசையாது நின்றாள். அர்ஜுனன் கையேந்திய காண்டீவம் என உடல் வளைந்திருக்க, சீறத் துடித்த நிலையில் சிலைத்திருந்தது வான்நோக்கிய அவள் சிறுபாதம். இன்ஒரு பக்கம் ‘Teach for India’ எனும் அமைப்பில் பணிபுரியும் மற்றும் ஒரு பெண் ஆர்ப்பரித்து வீழும் அருவியின் மடியில் தாவியேறி பெருநீர்ப் பொழிவைக் குழலில் தாங்கி கொற்றவையெனக் கால்மடித்து அருவியில் அமர்ந்தாள். இயற்கை ஒவ்வொருவருக்கும் உள்ளிருந்த இன்னொருவரை இழுத்து வெளியில் விட்டது.
பாம்பு சட்டையை உரித்து விட்டது போல, அதுவரை எனக்கு உள்ளிருந்த தயக்கங்கள் அச்சங்கள் அங்கே கரைந்தன. அங்குதான் இப்பயணம் முழுமை கொண்டது. சிறிது தாமதமான தருணமாக இருக்கலாம்; அதுவரையிலும் சில காட்சிகளை தரிசனங்களை அதீத முன்னெச்சரிக்கையிலும் தயக்கங்களிலும் தவறவிட்டிருக்கலாம். இருந்தாலும் இப்போது மனம் உற்சாகம் கொண்டிருந்தது.
பறக்கத் தெரிந்துவிட்ட பறவையின் முதல் சிறகு விரித்தல்.
ஐந்து கிலோமீட்டர் இறங்கி முடித்திருந்தோம்; இன்னும் எட்டு கிலோமீட்டர் இருந்தது. உச்சிவெயில் - உருகும் வியர்வை - களைத்த உடல் - எனில் உள்ளம் மலர்ந்திருந்தது. குழுவில் பெரும்பாலோர் விரைவாக இறங்கத் தொடங்கிவிட்டனர். மூவர் மட்டும் குழு ஒருங்கிணைப்பாளர் ஒருவருடன் சில அடி தொலைவுகளில் முன்னும் பின்னுமாக வந்து கொண்டிருந்தோம். எண்ணற்ற முகமறியா பயணிகள் இறங்க முடியாமல் தவித்து நின்ற பாறைச் சரிவுகளில் கை கொடுத்தனர். ஒவ்வொரு அடியிலும் பயணம் விரிந்து கொண்டே சென்றது.
மீண்டும் இரு நதி இணைவையும் நீர்மின்னணு நிலையத்தையும் கடந்து பர்ஷிணியைச் சென்றடைந்தோம். அன்றிரவே தில்லி நோக்கிய பயணம்.
இறங்கும் பயணத்தில் பின்னால் சென்று மறைந்த மலைகளைப் போல அனைத்தும் நினைவுகளாகி விட்டன. இரண்டு நாட்களின் ஐந்து ஆறு மணிநேர நடை, மலையேற்றம், தில்லி திரும்பிய நெடும்பயணம், சிங்கை திரும்பிய வான்பயணம், அனைத்தும்.
இந்தப் பயணம் முதல் முறையாக கூடுடைத்து வண்ணத்துப்பூச்சி சிறகு விரித்த அனுபவம். குழுவில் இருந்த ஒவ்வொரு பெண்கள் வாயிலாகவும் இன்றைய தலைமுறையின் வாழ்க்கை குறித்த பார்வையும் அவர்களது தெளிவான தெரிவுகளும் இப்பயணத்தில் நான் அறிந்து கொண்ட மற்றுமொரு முக்கியமான பகுதி. அதை விரித்தெழுத இன்னொரு தொடர் தேவைப்படும்.
சிறகுகளில் கனவுகளெனும் வண்ணம் சுமந்து காத்திருக்கிறது வண்ணத்துப்பூச்சி. கண்ணாடிக்கு வெளியே சாங்கி தளத்திலிருந்து ஓசையின்றி பறந்தேறுகிறது ஒரு விமானம் வேறொரு மலர்தேடி.
- வேறு பயணங்களில் சந்திப்போம்
-