Monday, November 30, 2015

சற்குரு - தாத்தா - 18

உயிருக்கு உத்தரவாதமில்லை என்று ஊதிற்று அபாய சங்கு. பணத்தை சரிபார்த்துக் கொண்டிருந்த தாத்தாவும் நண்பரும், வங்கியில் இருந்த அனைவருடன் பதட்டமாய் வெளியேறினர். ஓங்கி அலறிக் கொண்டே இருந்தது சங்கு. தன் உயிரைக் காக்க உடல் பதறி ஓடும் போதும் உள்ளம் பதறுவது உயிரினும் மேலான உறவுகளைக் காணாது போய்விடுவோமோ என்றுதானே. தாத்தா அவசரமாய் இறங்கும்போது கவனம் தவறியதில் படிக்கட்டுகளில் தடுமாறி அத்தனை படிகளிலும் சறுக்கி தரைசேர்ந்து, பாய்ந்து கண்ணுக்குத் தெரிந்த முதல் குழியில் இறங்கிய போது இதயம் காதுகளில் படபடத்தது. மற்ற நேரமாயிருப்பின் படியில் விழுந்த வலி தெரியும். மரணம் கண் முன் ஒத்திகை காட்டும் போது உடல் நினைவில் இருப்பதில்லை.

தலைக்கு மேல் சீழ்கையடித்து பறந்தன சில விமானங்கள். யுகமெனக் கழிந்த சில நிமிடங்களுக்குப் பிறகு, அபாயம் நீங்கியதென மணி ஒலித்தது. போரின் தீவிரம் நிதர்சனமாய் உணர முடிந்தது. 

பாம்பின் வாய் பிழைத்து பாழ்நரகில் சிக்கியது போல, ஆங்கிலேயர் பிடியில் இருந்த மலேயாவை முற்றுகையிடத் தொடங்கியிருந்தது ஜப்பான். 'ஆசியா ஆசியர்களுக்கே' என்ற முழக்கத்துடன் தொடங்கிய இந்த முற்றுகை மேலும் கொடுமைகளையே விளைவிக்கப் போகிறது என யாருக்கும் தெரியவில்லை அப்போது..

அவசரமாய் காரில் ஏறிப் பறக்கத் தொடங்கினர் இருவரும் பினாங் நோக்கி. ஆறு மணி நேரத்துக்கும் மேலான பயணம் செல்ல வேண்டும் பினாங் சென்று சேர்வதற்கு. போர் தொடங்கிவிட்ட சூழலில் நெடுஞ்சாலையில் வேறு வாகனங்கள் ஏதுமில்லை. அடர்ந்த மழைக்காடுகள் நிறைந்த பாதையில் பறந்தது கார்.

எதிர்திசையிலிருந்து வந்தது ஒரு போர் வாகனம். ஒன்று இரண்டாக, இரண்டு நான்காக, நான்கு நாற்பதாக, சாரி சாரியாக எதிர்த்திசையில் வரத்தொடங்கின இராணுவ வாகனங்கள். கண்ணுக்கு எட்டிய வரை முன்னும் பின்னும் வாகனங்கள் இல்லை தாத்தாவின் கார் பயணித்த திசையில், பினாங்கை நோக்கி...

முந்தைய பதிவு (17)


அடுத்த பதிவு (19)