Monday, April 25, 2016

சற்குரு - தாத்தா - 33

மாமதுரை:

தென்னன் புகழ் பாடும் அழகான தென்மதுரை.
கரும்பும் இளநீரும்  கண்திறந்து மடைபாயும்
கட்டுக் கலங்காணும் கதிர் உழக்கு நெல்காணும்
அறுதாள் அறுத்துவர  மறுதாளும் பயிராகும்
அரிதாளின் அடியினிலே ஐங்கலந்தேன் கூடுகட்டும்  
மாடுகட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று
யானைகட்டிப் போரடிக்கும்  அழகான தென்மதுரை -

தாத்தாவுக்கு மிகவும் பிடித்த பாடல், பள்ளியில் பாடத்தில் வந்த இந்த நாட்டுப்புறப் பாடலை மீண்டும் மீண்டும் பாடச் சொல்லிக் கேட்பார்கள் தாத்தா. 


பத்துப் பதினைந்து நாட்கள் வேறு ஊரில் வந்து தங்கிவிட்டால், செல்வ நிலையம் வீடு நினைவில் வந்து விடும். சில சமயம் கனவாகவும் வீடு தாத்தாவுக்கு செய்தி சொல்வதுண்டு; ஒருமுறை கிணற்று உறைக்குள் கூடுகட்டியிருக்கும் சிட்டுக்குருவி கிணற்றில் விழுந்திருப்பதாய் கனவு கண்டு, உடனே போக வேண்டும் என மறுநாளே கிளம்பிப் போனார்கள். அந்த முறை நிஜமாகவே குருவி விழுந்திருந்தது. அப்படி ஒரு மனதோடு உரையாடும் பந்தம் செல்வ நிலையத்தோடு. வேட்டியை மடித்துக் கொண்டு மாடிப் படியிலிருந்து நிழல் தரும் பரண் மேல் தாவி ஏறி வேப்பிலை சருகுகளைப் பெருக்கி அள்ளுவதும், வாசலில் ஒரு கல் இல்லாமல் தென்னந்துடைப்பத்தைக் கொண்டு விரவி எடுப்பதும், கிணற்றடி முழுதும் நீர் இறைத்து ஊற்றி சுத்தம் செய்வதுமாய் வீட்டின் ஒவ்வொரு அங்குலத்திலும் நிரம்பியிருக்கும் தாத்தா, வீட்டைப் பழநிமலை சந்நிதியாய் மாற்றி வைத்து, குத்துவிளக்கை பொன்னென ஒளிரச் செய்து, தினந்தோறும் வாசல் மிளிரக் கோலமிட்டு பொலியச் செய்த அப்பத்தா - இருவருடனும் தாராபுரத்தில் இருந்து பயணித்தோம். நினைவிழந்த நிலையிலிருந்த தாத்தாவுடன் அண்ணனும் மாமாவும் உடன்வர மதுரை நோக்கிப் புறப்பட்டோம். 

ஒரு சிலதினங்கள் முன்னர் மாமா தாராபுரம் வந்தபோது தாத்தாவுடன் மிகவும் மனம்திறந்து பேசியிருந்ததை நினைவு கூறியபடி, மிக விரைவாக முடிவை நோக்கி நகரும் நிதர்சனத்தைத் தாளமுடியாமல் மாமாவும், தனது சிறுவயது முதலே தாத்தாவின் குருகுலவாசத்தில், அருகாமையில் இருந்த அண்ணனும் அன்று தாத்தாவை மடியில் சுமந்து வந்து மதுரை சேர்த்தார்கள்.  (சில பந்தங்கள் புறக்கண்களுக்கு விளங்காதது - தாத்தாவின் இறுதி மணித்துளிகளில் உடன்பயணித்த அண்ணனை 20 வருடங்களுக்குப் பிறகு அப்பாவின் இறுதி வினாடிகளிலும் கொண்டு சேர்த்தது விதியா இறையா..)

வரும்வழியில் அம்மை நகரில் செய்தி சொல்ல நுழைந்தால், தொலைவில் நடக்கும் துயர சம்பவத்தின் எதிரொலி போல், சிறு குழந்தையான தங்கைக்கும் ஒருநாளும் நிகழாத வண்ணம் குரங்கால் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது.
செல்வநிலையம் - உற்றார் உறவினர் குழுமியிருந்தனர்.

மறுநாள் காலையில் மகளென பாசம் கொண்ட மருத்துவர் வந்து நாடி பார்த்து இன்னும் சில நிமிடங்கள்தான் என்று சொல்ல, உறவினர் அனைவரும் குழுமியிருக்க பிரியமான பேத்திகளும் இளைய மகன் மருமகளும் நாகமலையில் கால்பதித்ததும் பறந்தது உயிர்ப்பறவை - ஓம் எனக் குவித்த உதடுகள் வழியாகவா? மேலேறிய விழிகள் வாயிலாகவா? அனைவர் கண் முன்னால் எத்திசையில் கொண்டு சென்றான் விதிக்கிறைவன்.

[தங்கை ஜெயஸ்ரீயின் வாய்மொழியில்:வாழ்வில் நம்மை பாதிக்கும் சிறு வயது நிகழ்வுகள் சில இருக்கும். அது போன்று எனை பாதித்த நிகழ்வு தாத்தாவின் மறைவு. அன்று சனிக்கிழமை தாத்தாவுக்கு உடல் நலமில்லை என செய்தி கிடைத்த போது அப்பா வேலை நிமித்தம் சென்னை சென்றிருக்க, அம்மா தன் பெருமதிப்புற்குரிய மாமாவை எண்ணி கண்கள் கலங்க, என்னையும் தங்கை ரம்யாவையும் அழைத்துக் கொண்டு தூத்துக்குடியில் இருந்து மதுரை புறப்பட்டார்கள். அப்பாவும் விஷயமறிந்து ஊர் திரும்ப, ஞாயிறு காலை மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில், கைபேசி இல்லாத அந்த காலத்தில், ஒரு பேருந்தில் ஏற, அதே பேருந்தில் அப்பாவும் அமர்ந்திருந்தார்கள். வீட்டை நெருங்க நெருங்க உறவினர்கள் நிறைந்த வீடு பதற்றத்தை விளைவித்தது. வீட்டினுள் நுழைந்ததும் தான் அப்பாவுக்கும் எங்களுக்கும் தாத்தா இறைவனடி சேர்ந்த விஷயமே தெரிந்தது. பேரதிர்ச்சியில் உறைந்தழுதோம். எப்போதும் பேத்திகளைக் கண்டதும் மலரும் தாத்தாவின் முகம் அன்று அசைவற்று இருந்தது. தாத்தா இல்லாத செல்வ நிலையம் தன் பொலிவை இழந்தது போல் அனைவரும் உணர்ந்தோம். தாத்தா மறைந்தாலும் இன்றும் நம் மனங்களில், நம் எண்ணங்களின் எழுச்சியில், உயர்ந்த சிந்தனைகளில் உலாவுகிறார்கள். என்ன காரியம் செய்தாலும் "இப்போது மட்டும் தாத்தா இருந்திருந்தால்.." என்ற எண்ணம் மேலோங்கத்தான் செய்கிறது. இறைவன் எமக்களித்த எங்கள் புதல்வனை எங்களது தாத்தாவே வந்து பிறந்ததாக கருதி மனநிறைவடைகிறோம். வாழும் வரை "அய்யாதுரை பிள்ளையின் பேத்தி" என்ற பெருமை ஒன்றே போதும். வாழ்க்கை பல்வேறு திசைகளில் பயணிக்கும் போதும் தாத்தா கற்றுத்தந்த values எப்போதும் வழிகாட்டும். Saluting him. ஜெய்ஹிந்த்..! ]

கூட்டம் கூடி அழுதது. ஒவ்வொருவரும் தத்தமது வாழ்வில் தாத்தா செய்த மாயங்களை மாற்றங்களை சொல்லிச் சொல்லி அழுதனர். கடைசியாய் முகம் பார்க்கவும் வர இயலாது போன செல்ல மகளுக்காகவும் அழுதனர். 

ஊரெல்லாம் கூடி உரக்க அழுதாலும் சூரையங்காட்டிடை கொண்டு போய் சுட்டாலும் நீரினில் மூழ்கி மறந்திடும் நினைவல்லவே. ஏனோ கண்கள் வறண்டு மனம் அலையற்றுக் கிடந்தது.

"ஆசை அறுமின் ஆசை அறுமின்
ஈசனோடாயினும் ஆசையறுமின்
ஆசைப் படப்பட ஆய்வரும் துன்பம்
ஆசை விடவிட ஆனந்தந்தானே" - தாத்தா அடிக்கடி சொல்லும் மற்றொரு பாடல்.

எந்த ஆசையை விட வேண்டும்? இப்படி ஒரு மகானை மீண்டும் காணும் ஆசையையா? மீண்டும் அந்த விரல்கள் பற்றி உலகை வலம் வரும் ஆசையையா?

ஆசை அறுத்து ஆனந்த யாத்திரை புறப்பட்டது.

முந்தைய பதிவு (32)

அடுத்த பதிவு (34)

Monday, April 18, 2016

சற்குரு - தாத்தா - 32

1945: பேரிடி - பேரிடர் காக்க வந்த பெருந்தலைவர் நேதாஜியின் அகால முடிவு அனைவரையும் நிலைகுலையச் செய்தது. சிலகாலம் யாரும் அந்தச் செய்தியை நம்பவில்லை. ஆனால் 'இன்று வரை நேதாஜி உயிரோடிருக்கிறார்' என்ற கருத்தில் தாத்தாவுக்கு என்றும் உடன்பாடில்லை. 'இக்கட்டுகளைக் கடந்து செல்ல அன்று சிலகாலம் அவர் அஞ்ஞாதவாசம் இருந்திருக்கலாம், நெடுங்காலம் மறைந்திருக்க அந்த சூரியனால் இயலாது, உயிரோடு இருந்திருந்தால் என்றோ ஒரு நாள் வந்திருப்பார்' என்பதே தாத்தாவின் நம்பிக்கை.
எல்லையில் கைப்பற்றப்பட்ட இந்திய தேசிய ராணுவம் போர்க் குற்றவாளிகள் எனக் குற்றம் சாட்டப்பட்டு தில்லி செங்கோட்டையில் நிகழ்ந்த வழக்கும், அதன் தீவிரமும், நாடெங்கும் பரவிவிட்ட ஆதரவும்,  இந்தியர்களால் ஆன ராணுவத்திலும் காவல்துறையிலும பெரும் பகுதி இந்திய தேசிய ராணுவத்தின் உணர்ச்சிகரமான போர்முழக்கங்களால் கிளர்ச்சியடைந்திருப்பதும் ஆட்சியாளர்களுக்குத் தெளிவாயிற்று. இனிமேலும் கிளர்ந்த கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதும், இந்தியர்களைக் கொண்டே இந்தியர்களை ஒடுக்குவது இயலாதென்பதும் ஆங்கிலேயருக்குப் புரிய, சுதந்திரம் வழங்கும் முடிவு தீவிரமடைந்தது.

ஜப்பானியப் படை சரணடைந்ததும் மெல்ல மெல்லத் தகவல் தொடர்புகள் நிறுவப் பட்டன. அப்போது மலேயா போன்ற கிழக்காசிய நாடுகளில் ஒரு வானொலித் தகவல் ஒளிபரப்பு சேவை தொடங்கப்பட்டிருந்தது. உலகமகாயுத்தத்தில் பிழைத்து உயிரோடு இருப்பவர்கள், தங்கள் பெயரையும் ஊரையும் தெரிவித்து, இந்த ஊரைச் சேர்ந்த இன்னாருக்கென தாங்கள் உயிரோடிருக்கும் தகவல் தெரிவிக்கலாம். அப்போதெல்லாம் எல்லா வீடுகளிலும் ரேடியோப் பெட்டிகள் இல்லாத காலம். இருப்பினும் மேகத்தையும் காற்றையும் தூது விட்ட மனித இதயம் எவ்வண்ணமேனும் நேச நெஞ்சங்களுக்கு செய்தி சொல்லத் துடிப்பது இயல்பல்லவா. 

அம்மை நகரில் தந்தை பெயருக்கும் பசளையில் தனது மாமாவுக்கும் தாத்தா சொன்ன செய்தி வானொலியில் காற்றோடு வந்தது. இப்படி ஒரு தகவல் சேவை இருப்பதும் தெரியாது, அதைக் கேட்கவும் இல்லை இரு வீடுகளும்.உறவினர் ஒருவர் கேட்டுவிட்டு வந்து தகவல் சொன்னார். செய்திகேட்டு ஆனந்தக் கண்ணீருடன் உயிர்த்தெழுந்தனர் உற்றாரும் பெற்றோரும்.

அதன் பின்னரும் கப்பல் தொடர்பு சரிசெய்ய பலமாதங்களாயிற்று. தாத்தா தனது செட்டியார் நிறுவனப் பொறுப்பை மற்றொருவரிடம் ஒப்படைத்துக் கிளம்ப மாற்று ஆள் வருவதற்கும் தாமதமாயிற்று. எனினும் கருக்கிருட்டு கடந்து வரும் முதல் கீற்றுப்போல் கடிதத் தொடர்பு தொடங்கியது. அஞ்சல் பெட்டி சேர்ந்து அதுகாறும் அந்தரத்தில் தொங்கிய சில கடிதங்கள் இரு தரப்பிலும் காலம்தாழ்ந்து கைக்குக் கிட்டின.

நாட்டைக்காக்க நேதாஜியின் படை முகப்பில் தந்தை நின்றிருந்த செய்தி, ஐந்து வயது நிரம்பிய தனயனுக்கு சொல்லப்பட்டது. புகைப்படமாக மட்டுமே அறிமுகமாயிருந்த தந்தைக்கு 'ஜெய்ஹிந்த்' என ராணுவ வணக்கம் செய்வது மகனின் வழக்கமாயிற்று.

வண்ணங்கள் இழந்த மலேய வனவாசத்தில் வந்தது வசந்தம் - தந்தையிடமிருந்தும் தலைமகனாம் சிறுமகவிடம் இருந்தும் கடிதம் -  என்னே ஒரு பரவசம். வழி மேல் விழி வைத்துக் கடிதம் வரும் வழி காத்திருந்தோருக்கே அதன் அருமை புரியும். அதுவும் இப்படி ஒரு வரிசுமந்து - "On seeing your photo, Velan poured kisses on it"






ஐந்து வயது மகன் சிவசுந்தரவேலன் எழுதிய முதல் கடிதம்






Monday, April 11, 2016

சற்குரு - தாத்தா - 31

மீண்டும் தாராபுரம்

ராமநாதபுரத்தில் இருந்து அடுத்த வருடமே மாற்றலாகியது. மீண்டும் தாத்தாவுக்குப் பிடித்த தாராபுரம். விதியொன்று நிகழும் களமாக இம்முறை. மானிடர்க்கு முன்னோக்கும் விழி அருளாத இறை கருணை மிக்கது. தெரிந்தால் மாற்றி விட முடியாத போது முன்கூட்டிப் பார்த்து என்ன பயன்?

ஒன்பதாம் வகுப்பு. புதிய பள்ளியில் சேர்ந்த ஒரே வாரத்தில் புதிதாய் மற்றுமொரு பெண்ணும் பள்ளியில் சேர்ந்தாள்.  பயந்த சுபாவமும் மெல்லியல்பும் நிறைந்தவள். கருணையை போதிக்கும் ஏசு அடியார்கள் - இயல்பிலேயே வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடிடும் குடும்பம். திருட்டுப் போன சைக்கிளைக் குறித்து, 'யாரோ இல்லாதவர்தானே எடுத்திருப்பார்' என இரங்கும் அவளுடைய தந்தை, கருணையே வடிவாய், அதற்கு மிக உகந்ததாய் செவிலியராய் சேவை செய்யும் தாய். அழகான அருமையான குடும்பம்.
அவள் அந்த வருடம் தமிழ்வழிக் கல்வியிலிருந்து ஆங்கிலவழிக் கல்விக்கு மாறியிருந்தாள். பள்ளியில் வழி தவறிய ஆட்டுக்குட்டியாய் மருண்டு நின்றவள் - பார்த்த முதல் பார்வையிலேயே மனதில் இடம் பிடித்தாள். அன்று முதல் அந்த வருடம் முழுவதும் மாலையில் அவள் என்னுடன் வீட்டுக்கு வருவதும், சேர்ந்து படிப்பதும் வழக்கமாயிற்று.

இந்த முறையும் தாத்தாவோடும் சேர்ந்தே உருவாகி உறுதியானது அவளுடனான நட்பு. இந்த முறை ஒரு சிறு மாற்றம். நாங்கள் படிப்பதையும், ஆங்கிலத்தில் இருக்கும் அறிவியல் கணக்கு பாடங்களை, அவளுக்கு நான் தமிழில் விளக்குவதையும் அமைதியாய் பார்த்துக் கொண்டு அமர்ந்திருப்பார்கள் தாத்தா. இது அன்றாட வழக்கமாயிற்று.

அவர்கள் வீட்டிற்கு நடையின் போது நானும் தாத்தாவும் செல்வதும், அவளது தாய் தந்தையருக்கும் தாத்தாவை மிகவும் பிடித்துப் போனதும் அனிச்சையாய் நிகழ்ந்தது. நாங்கள் குடியிருந்த வீட்டின் முன்புறம் பெரிய மண்தரை. அம்மா கைங்கர்யத்தில் ஓரிரு மாதங்களில் வெறுமையாய் இருந்த மண்தரை பசுமை போர்த்தி மலர்ந்தது. யாருக்கும் காத்திராத காலநதி விரைவாய் சுழித்தோடிக் கொண்டிருந்தது. 

வீட்டு வாசலில் செவ்வகமாய் பெரிய திண்ணை. அதில்தான் தாத்தா அமர்ந்திருப்பார்கள் நாள் முழுவதும். 
எத்தனையோ நிகழ்வுகள், நெகிழ்வுகள் கண்ட திண்ணை அது. நாட்கள் துளிகளாய் வழிந்து மாதங்கள் ஓட
ஒன்பதாம் வகுப்பு முடிய ஓரிரு மாதங்களே இருந்தன. தாத்தா விரும்பியதுபோல மதுரைக்கிளைக்கு மாற்றல் வாங்க அப்பா முயற்சித்துப் பலனின்றி நாட்கள் ஓடிக்கொண்டிருந்தன. மிகுந்த சிரமத்தோடு, ஒரு கிராமப்புற வங்கிக் கிளைக்கு அப்பா அலைந்து கொண்டிருந்த நாட்கள். 


ஒரு நாள் அப்பா என்னிடம், 'உன் தோழியைப் போல நீயும் சைக்கிளில் பள்ளிக்குப் போ' என சைக்கிள் வாங்கிக் கொடுத்தார்கள். அதை சாலையில் ஓட்ட பயந்து கொண்டிருந்த என்னைக் கண்டு தாத்தா, 'அச்சம் என்பது நேருக்கு நேர் நோக்காத வரைதான் பெரிதாய் இருக்கும். பயத்தை எதிர்கொள்ள அது சிறிதாய் காணாமல் போகும்' என என்னை சாலையில் ஓட்டச் சொல்லி, சாலை விதிகள், கையில் காட்ட வேண்டிய சமிஞ்ஞைகள் என  அனைத்தும்  கற்றுக் கொடுத்தார்கள் தாத்தா. இது நடந்தது ஒரு சனிக்கிழமை. நண்பகல். வீட்டு முன்னால் திண்ணையில் வெயில் இளைப்பாறிக் கொண்டிருந்தது. அருகே தாத்தா கண்களை மூடி மோனத்தில் அமர்ந்திருந்தார்கள்.  நான் சைக்கிளை எடுத்துக் கொண்டு தோழியின் வீட்டுக்கு சைக்கிள் பழகச் செல்கிறேன் எனக் கூறி விட்டு கிளம்பினேன். 'நானும் வரட்டுமா?' என்று கேட்டு தாத்தாவும் எழ, 'ஓய்வெடுங்கள். நான் மட்டும் செல்கிறேன்' என்ற என்னை விதி மேலிருந்து பார்த்துக் கொண்டிருந்தது. 

முதல் நாள் தாத்தா சஷ்டி விரதமிருந்து ஏதும் சாப்பிடாத நாள். அன்று மதியம் உணவுண்ணும் வேளை வீடு திரும்பினேன். வீட்டில் தாத்தா இல்லை. என்னைப் பார்த்ததும் 'தாத்தா உன்னைப் பார்க்க வரவில்லையா?' என்ற கேள்வியோடு அம்மா காத்திருந்தார்கள். நான் சென்றதும் சிறிது நேரத்தில் வெளியேறிச் சென்ற தாத்தா, மதியம் ஒரு மணி தாண்டியும் வீடு வரவில்லை. நேரமாக ஆக பதட்டம் ஏறியது. என்னைத் தேடி வந்திருக்கக் கூடுமோ என மீண்டும் தோழி வீடு வரை சென்றேன். அம்மா மற்றொரு புறம் தேடிச் சென்றார்கள். தோழியின் தம்பியரும் ஆளுக்கொரு புறம் தேடி அலைய, மனதில் ஏதோ ஒரு கலக்கம் இதற்குப் பிறகு பேசக் கிடைக்காதோ என.

பிறகு அப்பாவுக்குத் தகவல் அனுப்பி, அப்பா வந்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துக் காத்திருந்தோம். மாலை நேரம் - காவல் நிலையத்திலிருந்து தகவல் வந்தது - 'யாரோ ஒருவர் நினைவிழந்து, சாலையில் மயங்கி விழுந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்' என்று. தகவல் அறிந்து அப்பா விரைந்த போது, இதுவே இறுதியென மருத்துவர்கள் கூறினர். வெயிலில் சாலையில் மயங்கி விழுந்த தாத்தாவை, யாரோ ஒரு வக்கீல் பார்த்து விட்டு, சுதந்திர போராட்ட வீரர் என்ற அடையாள அட்டையைப் பார்த்து அதையே அடையாளமாக்கி மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்.
உற்றாரை, நண்பர்களை, ஊராரை, சமூகத்தை என அனைவரையும் சொந்தமெனக் கருதிய தாத்தாவை சேர்த்திருந்த அரசு மருத்துவமனை ஏட்டில் எழுதியிருந்தது - 'உறவினர்கள் - யாருமில்லை'.


அடுத்த கட்டத்துக்குப் பறவை பறந்து சென்று கொண்டிருப்பதை ஒவ்வொன்றும் சொல்லிச் சென்றது. சூசகமாய் செய்தி காற்றில் கண்ணாமூச்சி ஆடும் தருணங்கள்.

பிறந்த கணம் முதல் ஆயிரமாயிரம் வார்த்தைகள் பேசிய வாய், திருநீறு மணக்கும் சுட்டு விரலை விடாமல் பற்றியிருந்த கரம், அன்று ஏனோ 'ஓய்வெடுங்கள், நான் மட்டும் செல்கிறேன்' என்று சொன்னதையே இறுதிச் சொல்லாய் மாற்றி உயிர் காற்றில் ஆடிக் கொண்டிருந்தது.

முந்தைய பதிவு (30)

அடுத்த பதிவு (32)

Tuesday, April 5, 2016

சற்குரு - தாத்தா - 30

இந்திய தேசிய ராணுவ நாட்கள்:




ஒவ்வொருவருக்கும் வாழ்வின் உச்சமாக ஒரு காலகட்டம் அமைவதுண்டு. அவ்விதமான தலைசிறந்த நாட்களாய் தாத்தா கருதியது, தன்னிகரற்ற தனிப்பெருந்தலைவர் நேதாஜியுடன் நேரிடையாகப் பணியாற்றிய அந்த நாட்கள். பாரத வரலாற்றின் முகடுகளைத் தொடும் நாட்களில் தன் வாழ்வின் சிகரங்களும் அமைவது எப்பேற்பட்ட கொடுப்பினை!
நேதாஜியின் களப்பணிகளுக்கான நிதி நிர்வாகப் பொறுப்பும், கிழக்காசிய மக்களிடையே சுதந்திர வேட்கையையும் சுதந்திர பாரதத்துக்கு நேதாஜியின் கொள்கைகளையும் எடுத்து இயம்புவதுமான பணி (Finance Controller and Propagandist). என்னே ஒரு உன்னதமான வாய்ப்பு! 

அதன் அருமை பெருமை உணராது, குழந்தை மனதுக்கே உரிய சந்தேகங்களுடன்  -  'அவரை நேரில் தொட்டுப் பார்த்திருக்கிறீர்களா தாத்தா?' என்ற எனது கேள்விக்கு - பெருமிதம் பொங்க, கை நீட்டும் தொலைவு காட்டி, 'இதோ, இவ்வளவு தொலைவில் அன்றாடம் காலையிலும் மாலையிலும் என்னைக் கடந்து செல்வார். பணி குறித்துப் பேசியதும், கைகுலுக்கியதும், ஊக்கமும் பாராட்டும் பெற்றதும், பலநூறு முறை வீரவணக்கம் செய்ததும் உண்டு' என்று சொல்லும் போது தாத்தா முகத்தில் சுடர் விடும் ஒளி - இன்று போல் கண் முன் நிற்கிறது.

சொந்த வாழ்வின் துயர்களைப் புறம் தள்ளி, தேசத்துக்காக உயிரையும் தரச் சித்தமாக்கப் படைக்களப் பயிற்சி. பர்மா வழியாக தில்லி செல்லப் புறப்பட்ட இரண்டு ரெஜிமெண்டுகளுக்கு அடுத்து, தாத்தா இருந்த படை, களம் காண்பதாய் திட்டம். இந்திய தேசிய ராணுவம் இந்திய பர்மா எல்லையில் நிகழ்த்திய தாக்குதலும் ஏறக்குறைய இரண்டு மாதங்கள் அந்தப் படையை முறியடிக்க ஆங்கிலேய அரசாங்கம் திணறியதும், தக்க சமயத்தில் உதவி தருவதாய் வாக்களித்திருந்த ஜப்பானியப் படைகள் பின்வாங்கியதும், மிகவும் அதீதமான மழைக்குப் பெயர் போன அப்பகுதியில் பருவ மழை அப்போது  தீவிரமடைந்ததும் வரலாறு.
எதிர்பார்த்ததை விட அதிக தினங்கள் நீடித்த முற்றுகையால், படையினருக்கு ஒற்றை வேளை உணவு மட்டுமே எஞ்சிய நிலையிலும், காலரா, மலேரியா, ஜன்னி என நோய்த் தாக்குதல் தொடங்கிய நிலையிலும்,  INA படையின் ஒற்றை வீரனும் பின்வாங்கவோ மனம் தளரவோ இல்லை.

அந்தப் பின்னடைவு வந்த போதிலும் மனம் தளராத நேதாஜி , அடுத்த கட்ட நகர்வுக்குத் திட்டமிடத் தொடங்கினார். ஆங்கிலேயர் விழித்துக் கொண்டு, பர்மா எல்லையை மீண்டும் கைப்பற்றி, ஜப்பான் வசமிருந்த ரங்கூன் நோக்கி முன்னேறினர். ரங்கூனில் அப்போது ஜான்சி ராணி படையுடனும்(லஷ்மி சேகல் மற்றும் ஜானகி என்ற இளம்பெண்கள் தலைமையிலான INA மகளிர் படை) மற்றுமொரு அணியுடனும் தங்கியிருந்த நேதாஜியை பாதுகாப்புக் கருதி, தாய்லாந்து சென்று விடுமாறு அனைவரும் கூறினர்.('அந்தப் பெண்மணி லக்ஷ்மி செகல் போல நீ இருக்க வேண்டும், ஜான்சி ராணி, Joan of Arc என்றெல்லாம் நேதாஜியாலே பாராட்டப் பட்ட பெண் - இது குறித்துப் பேசும் போதெல்லாம் தாத்தா கூறிய மொழிகள். மேலும் அவர் குறித்த தகவல்கள் இந்தப் பதிவில் வாசிக்கலாம் https://www.facebook.com/notes/sfi-students-federation-of-india/dr-capt-lakshmi-sahgal-ina-a-revolutionary-life-of-struggle-sacrifice/429214980455600/)

  

ரங்கூன் எல்லையை சில மைல் தொலைவுகளில் நெருங்கிக் கொண்டிருந்தது ஆங்கிலேயப் படை. ஜப்பானியப் படையும் ரங்கூனில் இருந்து பின்வாங்கத் துவங்கியிருந்தது. ரங்கூனை வெள்ளையர் பிடிக்கையில் சுபாஷ் பிடிபட்டால் எல்லாம் குலைந்து விடுமென அனைவரும் அவரைக் கிளம்பும்படி நிர்பந்தித்தார்கள். சுபாஷ் பயணம் செய்ய விமானம் ஒன்று தருவதாக ஜப்பானியர் கூறினர். தனது படைக்கு நேர்வதே தனக்கும் நேரட்டும் எனக் கூறினார் அந்த உன்னதத் தலைவர். 'சராசரியாக பதினெட்டு வயதே நிரம்பிய மகளிர் படை, சுற்றத்தின் பாதுகாப்புகளை உதறி என் வாக்குறுதியை நம்பிக் களம் இறங்கிய படை, பகைவனை நேருக்கு நேர் முகம்நோக்க கொற்றவையென எழுந்த படை உடனிருக்க எது வரினும் அதை சேர்ந்தே எதிர்கொள்வோம்' என முடிவெடுத்தார்.

வேறு வழியின்றி அனைவரும் ஒப்புக் கொள்ள, தனது படைகளுடன் உலகின் மிக அதீத மழை பொழியும் அடர் காடுகளுக்கு இடையே தொடங்கினார் தாய்லாந்து  நோக்கிய தனது நடைபயணத்தை. பகலெல்லாம் வான்வழித் தாக்குதலுக்குத் தப்பியும் இரவெல்லாம் நடந்தும், அனைவருக்குமான அணிவகுப்பு முறையிலேயே தானும் ஓர் எளிய படை வீரனாய் நடந்து சென்றார் - தலைவன் என்ற சொல்லுக்கே வழிகாட்டிய நேதாஜி. எல்லோருக்கும் ஒரு வேளை அளவு உணவுதான், எனினும் உற்சாகமாய் படையோடு அமர்ந்து, அதே வாழ்வைத் தானும் மேற்கொண்டு தனது அணியை மேலும் உரங்கொள்ளச் செய்தார். மூன்று மணி நேரத்தில் பறந்து செல்ல வாய்ப்பிருந்த போது, மூன்று கடினமான வாரங்கள் படைகளுடன் நடந்து தாய்லாந்து சென்று சேர்ந்தார்.

ஹிரோஷிமா தாக்குதலுக்குப் பின் ஜப்பான் நிலைகுலந்தது; பின்வாங்கியது. தனது INA இளம் படையினரை வான் வழித் தாக்குதல் முறைகளும், விமானத் தொழில் நுட்பமும் கற்க ஜப்பான் அனுப்பியிருந்த நேதாஜி,  'டோக்கியோ பாய்ஸ்' என்றழைக்கப்பட்ட அந்தக் குழுவை பத்திரமாய் மீட்க உத்தரவிட்டுவிட்டு, பாசக் கயிறாய் வந்திறங்கிய விமானத்தில் Saigonலிருந்து முடிவிலியை நோக்கிப் புறப்பட்டார்.

முந்தைய பதிவு (29)

அடுத்த பதிவு (31)