வேலை நாட்களில் பின்மதிய தேநீர் இடைவேளை அலுவலக நண்பர்கள் அனைவரும் எதிர்பார்க்கும் ஒன்று. ஒரு தேநீரோடு அன்றைய அழுத்தங்கள் அனைத்தையும் நகைச்சுவையில் தோய்த்து சோப்புக்குமிழ்கள் ஆக ஊதி பறக்க விட்டு மீண்டும் அடுத்த கூடுகைகளுக்கு விரையும் நேரம். அரிதாக தேநீர் பருகியபடி சிறு நடையும் பூங்காவைச் சுற்றி நடந்துவிட்டு மீள்வதுண்டு. ஓரிரு நாட்கள் போகாவிட்டால் அந்தக் கடையில் உள்ள பிலிப்பினோ பெண்ணும் எங்கே ஆளைக் காணோமே எனக் கேட்டுத் தெரிந்து கொள்வாள். இப்போது ஒரு வருடத்துக்கு மேலாகிறது. இதுபோன்ற பல சிறு உணவங்காடிக் கடைகள் மூடப்பட்டுவிட்டன. தேநீர் இடைவேளையின் நட்பு உரையாடல்கள் இல்லாமற் போனது இந்த ஒரு வருடத்து வீடுறை நாட்களின் இழப்புகளில் ஒன்று.
தேநீர் நேரம் ஸ்டார்பக்ஸ் போன்ற பளபளப்பான காபிக் கடைகளை விட உணவு அங்காடி வளாகங்களில் உள்ள சிறு தேநீர்க் கடைகளில்தான் கூட்டம் குழுமும். அதுதவிர நாம் முன்னர் பார்த்த கில்லினே கோப்பிட்டியம்(Killiney Kopitiam), யா குன் காயா டோஸ்ட்(Ya Kun Kaya Toast) மற்றும் டோஸ்ட்பாக்ஸ்(Toastbox) போன்ற உள்ளூர் கடைகளிலும் தேநீர் வேளையில் கூட்டம் அதிகமிருக்கும். இது போன்ற கடைகளில் கிடைக்கும் உள்ளூர் கோப்பியின் சுவை சற்று வித்தியாசமானது, தேநீரின் நிறமும் மணமும் அலாதியானது. இவற்றில் கில்லினே கோப்பிட்டியமும் யாகுன் காயாவும் ஹைனானியர்களால் துவங்கப்பட்டவை. கோப்பிட்டியம் என்பது கிழக்காசிய நாடுகளில் காபிக் கடையைக் குறிக்கும் சொல்.
சிங்கை வந்த புதிதில் மில்லேனியா வாக் உணவங்காடி தேநீர்க்கடை சென்று ஒரு கப் காபி என்றேன். நெஸ்கபே கலக்கிக் கொடுத்தார்.அதுவும் நன்றாக இருந்தாலும் மற்ற சிலருக்கு நல்ல காபி டிகாஷன் கலந்து கொடுக்கப்பட்டதை கவனித்தேன். அடுத்தநாள் அது போன்ற காபி வேண்டும் எனக் கேட்கலாம் என எண்ணிக் கொண்டு திரும்பிவிட்டேன். மறுநாள் மாலை காபிக் கடை வரிசையில் எனக்கு முன்னால் நிற்பவர்கள் என்ன கேட்கிறார்கள் எனப் பார்த்து அதன்படி கேட்கலாம் என எண்ணி நின்றுகொண்டிருந்தேன். எனக்கு முன்னால் நான்கு ஆண்கள் நின்று கொண்டிருந்தனர். முதலாமவர் இரண்டு தேசி என்றார். அவருக்கு நல்ல மணம் நிறைந்த தேநீர் கொடுக்கப்பட்டது. இரண்டாமவர் கோபிஓ என்றார். அவருக்கு கடுங்காபி தரப்பட்டது. எனக்கு முன்னால் நிற்பவர் நான் அருந்தும் படியான காபி வாங்க வேண்டுமே என வேண்டிக் கொண்டிருந்தேன். அவர் வெகு வேகமாக கோபிசி கொசாங் என்றார். வேறு ஏதோ வார்த்தை சொல்லி விட்டாரோ என மெனுவை எட்டிப் பார்த்தால் kopi-c-kosong என ஒரு பெயர் இருந்தது. அவருக்கு நாம் சாதாரணமாக அருந்துவது போன்ற காபி தரப் படவே நானும் வெகு வேகமாக கோபிசி கொசாங் என்றேன். காபி கைக்கு வந்தது. நல்லதாகப் போயிற்று, இன்று ஒன்று கற்றுக் கொண்டோம் என ஒரு வாகான இருக்கையில் ஐன்னல் ஓரம் வெயில் படும்படி அமர்ந்து கொண்டு காபியை சுவைத்தால் அதில் இனிப்பே இல்லை. சர்க்கரை போட மறந்துவிட்டார் போலும் என அவரிடமே சென்று 'அங்கிள், சர்க்கரை சேர்க்க மறந்துவிட்டீர்கள்' என்றேன். நீ கொசாங் தானே கேட்டாய் என்றபிறகுதான் அது சர்க்கரையில்லாத காபி எனப் புரிந்தது.
எனவே சிங்கையில் தேநீர், காபி குடிக்க விரும்புவர்கள் முதலில் கற்றுக்கொள்ள வேண்டிய சொற்கள் இவை - கோப்பி(Kopi) & தே(Teh). இவற்றோடு இணையும் மந்திரச் சொற்களில்தான் நமது கைமேல் வரும் பலன் இருக்கிறது.
- கோப்பி - மலாய் மொழியில் காபி
- தே - ஹோக்கீய மொழியில் தேநீர் (தமிழிலும் அதைத்தான் சொல்கிறோம்)
- ஓ(Kopi O/Teh O) - பால் சேர்க்காத காபி/தேநீர் - ஹோக்கிய (சீன) மொழி
- சி (Kopi C/Teh C) - பால் சேர்த்தது - ஹோக்கிய மொழி
- கொசாங் (Kopi Kosong, Teh Kosong) - சர்க்கரை சேர்க்காத - மலாய் மொழி
- சூ டாய் (Kopi/Teh Siew Dai) - குறைந்த சர்க்கரை - ஹாக்சூ (சீன) மொழி
- கா டாய் (Kopi/Teh Ga dai) - அதிக சர்க்கரை - சீன மொழி
- காவ் (Kopi/Teh Kao)- அதிக டிகாஷன் சேர்த்த - ஹோக்கிய (சீன) மொழி
- போ (Kopi/Teh Poh) - நீர்த்த
- டீ லோ (Kopi/Teh Di Loh) - நீர் சேர்க்காத - சீன மொழி
- பெங் (Kopi/Teh Peng)- ஐஸ் சேர்த்த - ஹோக்கிய மொழி
- புவா சியோ(Kopi/Teh Pua Sio) - பருகும் சூடில் - சீன மொழி
இப்படி, வாய்க்கு ருசியாய் ஒரு காபி குடிக்க பன்மொழிப் புலமை அவசியம். அதிலும் பல பந்துகளை அம்மானை ஆடுவது போல எல்லா மொழியையும் கலந்து 'தே ஓ கொசாங் பெங்' ( சர்க்கரை சேர்க்காத, பால் சேர்க்காத ஐஸ் தேநீர்) என்றெல்லாம் வாங்குவார்கள். எனது தாத்தாவின் குழந்தைப் பருவத்தில் அவர்கள் சகோதரர்கள் அனைவரும் அவர்களது அம்மாவிடம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாய் பால் வேண்டுமெனக் கேட்பார்களாம். நுரையில்லாமல் சூடான பால், ஆடைபடியாமல் ஆறிய பால், நுரையோடு ஆறிய பால், நுரையில்லாமல் ஆடையோடு பால், இப்படிப் பட்டியல் நீளுமாம். இதற்கெல்லாம் மலேய/ஹோக்கிய மொழியில் என்னவெனக் கேட்க வேண்டும்.
தேநீரில் மேற்சொன்ன வகைகள் தவிர தே தாரிக்(Teh Tarik - நன்கு நீளமாக இழுத்து நுரைக்கக் கலந்தது, நம்ம ஊர் டீ மாஸ்டர்கள் செய்வதுதான்!!) மற்றும் தே ஹாலியா (இஞ்சி சேர்த்த) ஆகிய வகைகளும் உண்டு.
இந்த காபி, தேநீர் தயாரிக்கும் முறைகளைப் பார்ப்பது சுவாரசியமாக இருக்கும். தேநீர் பெரும்பாலும் தடித்த கண்ணாடியால் ஆன குவளைகளிலோ அல்லது வெண்பீங்கான் குவளைகளிலோ தரப்படும். கொதிக்கும் நீரை குவளையைச் சுற்றிலும் வழியும்படி ஊற்றி குவளைகளை சூடாக்குவார்கள். அதில் நமது தேவைக்கு ஏற்ப முன்னமே வடிகட்டி வைத்திருக்கும் கோப்பி அல்லது தே நீரை விட்டு சிறிது ஆவியாக்கப்பட்ட பால், சர்க்கரை போன்றவற்றைக் கலந்து மேலும் சிறிது கொதிநீர் மேலோடு விட்டு பரிமாறுவார்கள். எவ்வளவு சிறிய கடையாக இருந்தாலும் இங்கு தேநீர் நன்றாக இருப்பதை கவனித்திருக்கிறேன்.
இதனோடு, சிறுதட்டில் தளும்பி நலுங்கும் அரைவேக்காடு வெந்த இரு முட்டைகளில் சோயா சாஸ் கலந்து, காயா என்னும தேங்காய்ப் பாலும் முட்டையின் வெள்ளைக் கருவும் சேர்த்து செய்த ஒரு ஜாம் போன்ற கலவை தடவிய ரொட்டி இரண்டும் சேர்த்து கிடைக்கும். இதுவே பெரும்பாலானவர்களின் காலை உணவு.
1800களில் பல நாடுகளின் மக்கள் வந்து குழுமும் இடமாக சிங்கப்பூர் உருவாகி வந்தது. அதனோடு சேர்ந்து கோப்பியின் கலவையான சுவையும் உருவாகி வந்திருக்கிறது. 1920களில் கோப்பிட்டியங்களில் சூதாட்டமும் நிறைய நடந்திருக்கிறது. பிறகு சூதாட்டம் முறைமைப்படுத்தப் பட்ட பிறகு கோப்பிட்டியங்களில் அது நடப்பதில்லை.
சைனாடவுன் பகுதியில் இருக்கும் நான்யாங் பாரம்பரிய காபிக் கடை இதுபோன்ற உள்ளூர் கோப்பி/தே வகைகளுக்கு பெயர் பெற்றது. இங்கு உள்ளூர் முறையில் கோப்பி தயாரிக்கப்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் காபி டிகாஷன் நம்மூர் ஃபில்டர் காபி போல இருப்பதில்லை. இது வேறு சுவை. இதற்கெனத் தேர்ந்தெடுக்கப்படும் காப்பிக் கொட்டையில் பல வகைகள் இருக்கின்றன. அதன் வகையையும் அதை வறுப்பதில் உள்ள சூட்சுமங்களையும் சேர்க்கப்படும் பொருட்களையும், பெரும்பாலான உள்ளூர்க் கடைகள் தங்கள் வணிக ரகசியமாக வைத்திருக்கிறார்கள். என்றாலும் பொதுவாக அறியப்பட்ட செய்முறை என்பது, காப்பிக் கொட்டை மிக சூடான பாத்திரத்தில் வெண்ணை, மார்கரின் எனப்படும் செயற்கைக் கொழுப்பு, மற்றும் சர்க்கரை சேர்த்து வறுக்கப்படுகிறது. இதில் விலை மலிவான கடைகளில் சோளம், எள் போன்றவையும் சேர்க்கப்படுவதுண்டு என்கிறார்கள். இது அரைக்கப்பட்டு, பின்னர் கடைகளுக்கு வருகிறது. காப்பி வடிகட்டப் பயன்படும் காலுறை போன்ற நீண்ட துணி வடிகட்டி 'சாக்'(sock) என்றே சொல்லப்படுகிறது. காபித்தூளை இதில் போட்டு ஒரு வாய் குறுகிய நீண்ட கழுத்து கொண்ட பாத்திரத்துள் வடிகட்டப் படுகிறது. மிக நீண்ட குழாய் போன்ற மூக்கு வழியாக குவளைகளில் கோப்பியின் வகைக்கேற்ப இந்த டிகாஷன் பால் அல்லது சுடுநீர் அல்லது ஐஸோடு கலக்கப்படும்.
இந்த கோப்பி/தே-யை இங்கு எடுத்து செல்வதற்கு (Takeaway) சிறு பிளாஸ்டிக் பையில் விட்டுக் கொடுப்பார்கள். அதுவும் முதலில் சற்று வியப்பாகவே இருந்தது.
ஒவ்வொரு வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளுக்கு அருகிலும் நடைதொலைவில் உள்ள உணவங்காடியில் கோப்பிட்டியம் நிச்சயம் இருக்கும். சிங்கையில் 2000 காப்பிக் கடைகள் இருப்பதாக சொல்கிறார்கள்.
அதில் நாள் முழுவதும் கூட்டம் இருப்பதைப் பார்க்கலாம். இங்கு உள்ளூர்வாசிகள் பெரும்பாலும் உணவங்காடிக் கடைகளிலேயே(Hawker Center) உணவருந்தும் வழக்கம் கொண்டவர்கள். 1960-கள் வரை கம்போங் வீடுகளும் சிறிய தேநீர் கடைகளும் உணவு விடுதிகளுமாக இருந்த சிங்கையின் முகம் 1970-களில் புதிய வீட்டுவசதி வாரியக் குடியிருப்புகளும் அதை ஒட்டி அமைக்கப்பட்ட உணவு அங்காடிகளுமாக மாறிப் போனது. ஒவ்வொரு உணவு அங்காடியிலும் ஓரிரண்டு சீன உணவுக் கடைகள், ஓரிரண்டு மலாய் உணவுக் கடைகள், ஒரு தேநீர், கோப்பி, மைலோ விற்கும் கடை, ஒரு ப்ராட்டா கடை, இந்தியர்கள் அதிகமிருக்கும் குடியிருப்புப் பகுதிகளில் தோசை(Thosai என்றே இங்கு எழுதப்பட்டிருக்கும், அப்படித்தான் உச்சரிக்கிறார்கள்), வடை, சப்பாத்தி போன்றவை விற்கும் ஒரு தமிழ் முஸ்லிம் கடையையும் நிச்சயம் பார்க்க முடியும்.
நான் இருக்கும் குடியிருப்புப் பகுதியில் வயதானோர் எண்ணிக்கை மிக அதிகம். எழுபது எண்பது வயதைத் தாண்டியோர். அநேகமானோர் தனியாக வாழ்பவர்கள். பிள்ளைகள் வேறெங்கேனும் அவர்களது குடும்பத்தோடு இருந்து கொண்டு வார இறுதிநாட்களிலோ, மாதம் ஒரு முறையோ வந்து செல்வார்கள்.
எனவே காலை முதலே இந்தக் கடைகளில் தாத்தாக்களும் பாட்டிகளும் கூடுவார்கள். சற்று வசதி உடையவர்களை அவர்களைப் பார்த்துக் கொள்ளும் பணிப்பெண்கள் சக்கர நாற்காலிகளில் அமர்த்தி அழைத்துக் கொண்டு வருவார்கள். உரத்த குரலில் விவாதங்கள் செய்வார்கள்.மாலையில் செஸ் போன்ற விளையாட்டுகள் எல்லாம் உண்டு. அதே நேரம் இது போன்ற பல உணவங்காடிகளில் உணவு மேஜைகளைத் துடைப்பது, தட்டுகளைத் துலக்குவது போன்ற வேலைகளிலும் பல முதியவர்கள் இருப்பதைக் காண முடியும்.
மேலும் வயதானவர்களிடையே இங்கு அல்சைமர் எனும் மறதி நோய் மற்றும் பார்கின்சன்ஸ் எனும் நடுக்கு நோய் பாதித்தவர்கள் சற்று அதிகம் கண்ணில் படுகிறார்கள். மறதி நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சேவை வழங்கும் வகையில் ஒரு கோப்பிக்கடை பிஷான் பகுதியில் திறக்கப்பட்டிருக்கிறது. கிம் சாங் லெங் (Kim Sang Leng)கோப்பிட்டியம் என்ற அக்கடையில் உள்ள மேசைகளில் அங்கு விற்கப்படும் உணவுகளின் படங்களும் பெயர்களும் அச்சிடப்பட்டுள்ளன.
மறதி நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாணயங்களை எளிதில் அடையாளம் காண முடியாது என்பதால் நாணயங்களின் வடிவங்களும் உணவு மேசை களில் அச்சிடப்பட்டுள்ளன. இந்தப் படங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவது மட்டுமன்றி நமக்கு அக்குறைபாடு உள்ளவர்களை நினைவூட்டி, அவர்களுக்கு உரிய சேவையை வழங்கவும் உதவிபுரியும் என்கிறார் அந்தக் கடை உரிமையாளர்.
முன்னர் நான் வழக்கமாக தேசி அருந்தும் இடத்தில் மேஜை சுத்தம் செய்யும் தாத்தாவுக்கு நான்கு மகள்கள், இரண்டு மகன்கள். அதை பலமுறை சொல்லியிருக்கிறார், வாய் திறந்த புன்னகையோடு. அதற்கு மேல் பேசுவதற்கான பொதுவான மொழித்திறன் எங்கள் இருவருக்கும் இல்லை. ஒரு முறை எனக்கு அவர் கொண்டு வந்த தேநீர் கோப்பை கீழே விழுந்து உடைந்துவிட்டது. அதற்குரிய பணத்தை அவருக்குக் கிடைக்கும் மிகக் குறைந்த சம்பளத்திலேயே பிடிப்பார்கள். எனவே என் கைபட்டு உடைந்ததாகச் சொல்லி பணத்தைக் கட்டிவிட்டேன். அன்றுமுதல் இதைச் சொல்கிறார். எனக்குச் சீனமொழியும் அவருக்கு ஆங்கிலமும் தெரியாவிட்டால் என்ன.
காபி டேயின் பிரத்யேக வாசகமான 'A lot can happen over coffee' நினைவுக்கு வருகிறது.
அடுத்த பதிவு: சிங்கை குறிப்புகள் - 23 - அஞ்சிறைத் தும்பி
முந்தைய பதிவு: சிங்கை குறிப்புகள் - 21 - நில்லாப் பெருஞ்சகடம்