மாஸ்டர் கிறிஸ்டியன் எழுதியதில் என்ன நிகழ்ந்தது?
மாஸ்டர் கிறிஸ்டியன் (நித்திய வழி) மொழிபெயர்ப்பு என்பது ’ஆசிரியரின் சொல்’ என்ற ஒற்றை விளக்கொளியில் நிகழ்ந்த பயணம். இது இலக்கியப் பணி என்பதை விட ஆன்மீகமான ஒரு பயிற்சி என்பதே உண்மை. எனவே இதை எழுதியதன் மூலம் கண்டடைந்த எதையும் இலக்கிய ரீதியான ஒரு அனுபவமாக என்னால் எண்ணிப் பார்க்க இயலாது.
எழுதிய விதத்தில், ஒன்றை சொல்வதென்றால், ஆசிரியர் அறிவுரையின்படி, ஒவ்வொரு பக்கமாக மொழிபெயர்க்கும் போதுதான் நானும் முதல் முறையாக அப்பக்கத்தை வாசித்தேன். அவ்வகையில் மூன்று வருடங்கள் வாசித்த நூல் இது. இவ்வளவு நிதானமாக ஒரு நூலை வாசித்த அனுபவமே எனக்கில்லை. அதனால் முதல்முறையாக ஒரு படைப்பை வாசிக்கும் போது அடையும் உணர்வெழுச்சியை அப்படியே எழுத முடிந்தது.
நமது குருகுலங்களில் மாணவனுக்கு ஏதேனும் ஒரு குறிப்பிட்ட விதமான பணி வழங்கப்படும். குறிப்பாக ஞான யோகத்தில் பயணிக்க விரும்பும் மாணவருக்கு, மாணவரின் மனம், அறிவு, வாசனா, படிநிலை எனப் பல விஷயங்களைப் பொறுத்து அப்பணி ஆசிரியரால் நிர்ணயிக்கப்படுகிறது. அது ஏதேனும் ஒரு எழுத்துப் பணியாகவோ, கீதை, உபநிடதம் போன்ற முக்கியமான நூல்களின் உரையாகவோ, மொழிபெயர்ப்பு பணியாகவோ, ஆசிரியர் கற்றுக் கொடுத்த ஒன்றை தொகுத்து எழுதுவதாகவோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். எழுதி முடித்த பின்னர் அப்படைப்பு என்னவாயிற்று என்பது இங்கு முக்கியமல்ல. அதை ஆசிரியர் அக்கணமே நிராகரிக்கலாம், அல்லது ஏற்றுக்கொண்டு அப்பால் எடுத்து வைத்துவிட்டு அடுத்த ஒரு பணியை, கல்வியை வழங்கலாம்; அது எத்தனை வருட உழைப்பைக் கோரியிருந்தாலும், முழு வாழ்வைக் கோரியிருத்தாலும் அதில் மாற்றமில்லை. அவ்வேலையின் வழியாக மாணவருக்கு நிகழும் அறிதல்களும் மாற்றங்களுமே அதன் முழுப்பயனும் ஆகிறது.
அவ்வகையில் மாஸ்டர் கிறிஸ்டியன் ஆசிரியர் ஜெயமோகன் உருவில் குரு நித்யா எழுதப் பணித்த ஒரு சாதனா - ஆசிரியர் சொன்ன பிறகு எந்நிலையிலும் பின்வாங்கக் கூடாத, பின்வாங்க எண்ணவும் இயலாத ஒரு அன்றாட நியதி. அதில் ஒவ்வொரு நாளும் ஏதோவொரு வகையில் இணைந்திருத்தல். அது அத்தனை எளிதாக அமைந்து விடவும் இல்லை. எண்ணற்ற ஊசல்கள், அலைக்கழிப்புகள், எழுதாமல் இருக்க ஏற்புடைய காரணம் என நம்பச் செய்யும் வகையில் அத்தனை அத்தனை மயக்கங்கள், மாயைகள். இவை அனைத்திலும் இருந்து முழுமையாக விடுபட்டுவிட்டதாகவோ இத்தடைகள் இல்லாமல் ஆகிவிட்டதாகவோ நிச்சயம் சொல்லமுடியாது. மூன்று வருடங்களில் எத்தனையோ மனத்தளர்வுகள், சுணக்கங்கள். இப்படி ஒவ்வொரு முறை தடையோ மனத்தளர்வோ ஏற்பட்ட பொழுதிலும், சாதனாவில் நிலைத்திருக்க வைத்தது யோகம் தான். யோகம்
என்ற சொல்லால் ஆசன, பிராணயாமப் பயிற்சிகளை மட்டும் குறிப்பிடவில்லை. யோகத்தை வாழ்வு முறையாக மாற்றிக் கொள்ளும் அனுபவத்தை சொல்கிறேன். அவ்விதம் மனம் தளரும் ஒவ்வொரு முறையும் ஆசிரியர் சௌந்தர் அனேக நூற்றுக்கணக்கான முறை வகுப்புகளில், உரையாடல்களிலும் சொன்ன சொல்லை இறுகப் பற்றிக் கொண்டேன் - ‘ச து தீர்க்க கால நைரந்தர்ய’ - நீண்ட காலம், தொய்வின்றி, பக்தியுடன் ஈடுபடும்போதுதான் சாதனா உறுதியாக நிலைநிறுத்தப்படுகிறது என்ற பதஞ்சலி யோக சூத்திரம்தான் அது. சாதனாவைப் பொறுத்தவரையில் மூன்று வருடத்தை நீண்ட காலம் என சொல்ல இயலாது. இது ஒரு ஆரம்பம் என்ற வகையில் இப்பாதையில் நீடித்து முன் செல்வதற்கான அடித்தளம் எனக் கொள்கிறேன்.
இன்று (குருபூர்ணிமா 21-ஜூலை-2024) இப்பணி நிறைவுற்ற தருணத்தில் இது முழுமையாக குருவருள் என்று உணர்கிறேன். எழுதப் பணித்த குரு நித்யா/ஆசிரியர் ஜெயமோகன், எழுத்தெனும் யோகத்தில் இருந்து விலகாதிருக்க வழிகாட்டிய குரு சத்யானந்தர்/ஆசிரியர் சௌந்தர் அருளும் ஆசியும் வேண்டி பாதம் பணிகிறேன்!
***
ஆசிரியர் பாதங்களில் இதை சமர்ப்பித்ததுடன் என்னை இதில் இருந்து விலக்கிக் கொண்டு அடுத்த பணியை இன்று (ஆடி அமாவாசை - 4-ஆகஸ்ட்-2024) கையில் எடுத்துக் கொள்கிறேன். (ஹெச். எஸ். சிவப்பிரகாஷ் அவர்களின் ‘Everyday Yogi’ மொழிபெயர்ப்பு) அதுவும் நிறைவுடன் நிகழ குருவருளையம் இறையருளையும் நாடுகிறேன்.