Thursday, February 16, 2023

ஆடிடும் குழைகள்



நூற்றுக்கணக்கான முறை கேட்ட ஒரு பாடல் சில சமயம் மிகப் புதிதாக வந்து திறந்துகொள்ளும். இன்று அது நிகழ்ந்தது.

இருள் பிரியாத அதிகாலை. புத்தம் புதிதாக ஒளி நிறைத்துக் கொள்ளவிருப்பதை அறியாமல் இன்னும் இருள் சூழ்ந்திருக்கிறது.  

'கண்ணா.. கண்ணா..' என பித்துக்குளி முருகதாஸ் குரலில் 'அலைபாயுதே கண்ணா' இசைக்கத் தொடங்குகிறது. 'உன் ஆனந்த மோகன வேணுகானம் அதில்..' என மெல்லிய வண்டின் ரீங்காரம் போல முரல்கிறது குரல்.

மீண்டும் மீண்டும் மீண்டும்.. முறையீடு, கெஞ்சல், விண்ணப்பம், கதறல்.  இது வெறும் காதல் அல்ல, கூடல் நிமித்தமான ஊடல் அல்ல. 

நிலைபெயராத ஒன்றின் முன், நிலைத்திருக்கும் வகையறியாது இன்னும் இன்னுமென அலைபாயும் ஒன்றின் மன்றாட்டு. காலம் அறியாத பிரம்மாண்டத்தின் முன், அதிலிருந்து சிதறிய ஒரு  சிறுதுகளின் கதறி மனமுருகும் விண்ணப்பம். பேரிருப்பின் பகுதியாக இருந்து தனித்து விடப்பட்ட துளிப்பிரக்ஞை, அந்த இருமையின் இரு வேறு எல்லைகளில் நிற்பது தாங்கவியலாது தன் வேதனையை சொல்கிறது. 


மீண்டும் மீண்டும் கண்ணா கண்ணா எனக் கெஞ்சுகிறது.


நீயோ நிலைபெயராதவனாயிருக்கிறாய்

நானோ அலைபாய்பவளாக இருக்கிறேன் 

அலைபாய வைப்பதும் உனக்கு ஆனந்த இசைதான் 

காலங்கள் அற்ற கடுவெளியில் நின்றென்

மனதை அலைப்புறச் செய்கிறாய்


நிலவு தெளிந்திருக்கிறது

கண்களோ மயங்குகிறது


அலைகளின் மீது கதிரொளி 

அதுவும் எனைப்போல 

அலைப்புறுவதாக மயக்குகிறது

அந்த விண்கதிரோ 

உன்னிரு கழல்களென நிலையானது.


அகமெனும் வனத்தில்

தன்னுள் தானே தனித்திருந்த போதினில்  

வந்தெனைச் சேர்ந்து

இன்றைய பிரிவின் துயரை

நானறியச் செய்தவனே 


கண்ணா கண்ணா என்ற

எனது அத்தனை கதறலும்

உனது இசைக்கு ஆடும்

காதின் அழகிய குழைகளென எண்ணிக்கொண்டாயோ!

உன்னுள் கலந்துவிட்ட பிறரோடு நீ களித்திருக்க

என்நிலையை இவ்விதம் வைத்திருப்பது நியாயமோ!!


கண்ணா.. கண்ணா..என அந்த இசை எங்கும் சுழல்கிறது,  அலைப்புறும் இக்குரல் கனிவு கொண்ட அவன் இசையில் ஒரு ஸ்வரமாகி மறைகிறது. 


https://youtu.be/TPnbrBoDvDc