எழுத்தாளர் செல்வேந்திரன் எழுதிய "பாலை நிலப் பயணம்" வாசித்து முடித்தேன். செல்வேந்திரன், எழுத்தாளர் ஜெயமோகன் மற்றும் நண்பர்களுடன் குஜராத்/ராஜஸ்தான் பயணம் சென்று வந்தது குறித்த பயண நூல். சிறப்பான நடை, செறிவான விவரங்கள், அழகான மொழி. இவர் எழுதிய மற்ற புத்தகங்களும் எனது வாசிப்புப் பட்டியலில் இருந்தாலும், இது பயணம் சார்ந்தது என்பதால் முதலில் வாசித்துவிட்டேன். மேலும் நண்பர்களும் ஜெ.வும் உடன் வர அந்தப் பயணத்தில் கூடவே வருவது போல கற்பனை செய்து கொள்ளவும் நன்றாக இருந்தது.
இன்றைய காலகட்டத்தில் பயணம் என்பதே அதற்கான ஆடை அணிகளை தேர்வு செய்வதும், அவற்றை வாங்குவதும், புகைப்படங்கள் எடுப்பதும், சமூக வலைதளங்களில் பகிர்வதும் என்றாகிவிட்ட நிலையில் இத்தகைய பயண ஆயத்தம் பலரும் அறிந்திராத ஓன்று.
பயண ஆயத்தங்கள் எனப் பெரும்பான்மையினர் செய்யும் களேபரங்களை விட அப்பகுதியைப் பற்றி பல்வேறு தளங்களில் பயணத்துக்கு முன்னர் அறிந்துகொள்வது மிக முக்கியமான ஆயத்தம். அதற்கு காணுயிர்கள், ஓவியம், இசை, நிலப்பரப்பு, தொல்லியல், வரலாறு என நண்பர்கள் பிரித்துப் பொறுப்பெடுத்துக் கொண்டது அருமை. இம்சைக்கும் இடிதாங்கிக்கும் கூட பொறுப்பேற்றுக்கும் நண்பர்கள் பெரிய கொடுப்பினை 😊
நீல்கே, கூர்ஜர-பிரதிகார கட்டடக்கலை, மங்கோலிய நாரைகள், தேசியப் பறவையாகி இருக்க வேண்டிய கானமயில், பாதிரி கிறிஸ்டோப் சாமுவேல் ஜானுடைய பங்களிப்புகள், ரூடாபாய் சரிதம் என அத்தனை ஆர்வமூட்டும் அறிந்திராத செய்திகள்.
சாம் மணற்குன்றுகளில் திடீரென ஆடிய அச்சிறுமியும் அவளது வெறித்த பார்வையும், அந்த நிலக்காட்சி கிளர்த்தும் கடந்த கால ஏக்கங்களுக்கு நிகராகவே மனதை ஏதோ செய்தது. அகண்ட பாலையில் மின்னலும் ஒரு சித்திரமாக மனதில் தங்கிவிட்டது.
பயணம் முழுவதும் உடன் வரும் கவிதை வரிகளும் அழகு.
ரன் உத்சவமும், ராஜஸ்தான்/குஜராத் பயணமும் எனது பயணத்திட்டங்களில் ஒன்று. இப்புத்தகம் தரும் பல தகவல்கள் அதற்கு மிகவும் உதவுவதோடு அப்பயண அனுபவத்தை செறிவாக மாற்றும் என்பது உறுதி. ரான் ஆப் கட்ச் பகுதியும்,
ராணி கி வாவ் விவரிப்பும் புகைப்படங்களும் கனவுகளைக் கிளர்த்துபவை.
இருபுறமும் விரிந்த வெற்றுப் பாலை விரிவெளியில் கானலில் நடுங்கும் நாகம் போல தொடுவான் வரை நீண்டோடும் சாலையில் பயணிப்பது கனவு அனுபவம். சில ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நோக்கி சென்ற பாலை நிலப் பயணம் நினைவில் எழுந்தது. பயணங்களில் நம் மனதில் ஆழமாகத் தங்குபவை இதுபோன்ற நிலக்காட்சிகளும் அவை கிளர்த்திய அகக்காட்சிகளுமே.
இத்தொகுப்பின் சிற்பப் புகைப்படங்களுக்கு இணையாகவே கோல்டன் ராக் மற்றும் காரி நதி பாறைப் படுகைகளின் புகைப்படங்களும் மிக அழகு. //ஒட்டு மொத்தமாக பாறைச் சுருள்களைப் பார்ப்பது காலாதீத மலைப்பாம்பு மெளனமாக நெளிந்து கொடுப்பது போல இருந்தது//- அருமை
நண்பர்களோடு உணவு வேட்டை, திரைப்பாடல்களுக்குத் துறை வகுப்பது, வேறு வரிகள் அமைத்துப் பாடுவது, சிரி-யோடு நண்பர்களின் சிரிப்பாணி எல்லாம் நினைக்கும் போது முகத்தில் புன்னகை உடனே வந்துவிடுகிறது.
தொல்லியலாளர் கே.கே.முகமது பற்றிய உரையாடல், காரில் நிகழ்ந்த
பெரிய கோவில் விவாதம், நண்பர்கள் ஒவ்வொருவரும் ராஜஸ்தான் குறித்து சேகரித்த தகவல்களே இன்னும் ஏழெட்டு கட்டுரைகளாகும் சாத்தியமுள்ளது என நினைக்கிறேன்.
இந்தியாவிலேயே அதிக பக்கங்கள் எழுதிய காந்தியின் மேஜையைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது அதை விஞ்சப் போகும் எழுத்தாளன் எட்டிப் பார்க்கும் காட்சி உச்சம்.
மொத்தத்தில் இது போன்ற பயணங்களில் கலந்து கொள்ள முடியவில்லையே என்ற வயிற்றெரிச்சலையும்(😁), எழுத்தின் வாயிலாக எவ்வளவு சாத்தியமோ அவ்வளவு அணுகி அறியும் வாய்ப்பைத் தந்ததே என்ற நிறைவும் ஒரு சேர மனதில் நிறைந்திருக்கிறது.
கையில் எடுத்ததும் முழுவதும் வாசிக்கத் தூண்டும் சுவையான பயண நூல்.
பாலை நிலப் பயணம் வாங்க/வாசிக்க: https://amzn.in/c3KZoIv
இவரது ஏனைய பயண எழுத்துக்களுக்காகக் காத்திருக்கிறேன்.