ஒரு இனிய மாலை நேரத்தில் வாசித்து முடித்துவிடக்கூடிய சிறிய மொழியாக்க சிறுகதைத் தொகுப்பு 'யேசு கதைகள்'. மிக அழகான கதைகளை அதன் 'ஸ்நேகம்' சிறிதும் குன்றாமல் தமிழில் கொணர்ந்த கே.வி.ஜெயஸ்ரீ அவர்களுக்கு அன்பும் நன்றியும்.
இத்தொகுப்பின் முதல் கதையான 'யாருக்குத் தெரியும்' சிறுகதை.
ஏரோது மன்னனின் ஆணைப்படி இரண்டுவயதுக்குட்பட்ட குழந்தைகளை வாள்முனையில் கொன்று குவித்து அந்த ரத்தக்கறையின் எடையுடன் விபசார விடுதியில் அடைக்கலமாகும் படைவீரனின் கதை. அவனுக்கும் அவ்விடுதியின் தலைவிக்குமான கூர்மையான உரையாடல் வழி விரிகிறது யேசுவின் பிறப்பின் செம்புலம். படைவீரர்களுக்கு யாரோடும் யுத்தமில்லை என்பதையும் கொலையின் அபத்தங்களையும் உணர்ந்துவிட்டவன். அவனுக்காக இறைமைந்தனிடம் மன்னிப்பின் அடைக்கலம் கோருகிறது அந்த விடுதியின் தலைவியான ஓர் அன்னையின் மனம்.
"இத்தனை ஆயிரம் குழந்தைகளின் குருதியினூடேதான் ஒரு ரட்சகன் வருகிறானா?" என்னும் அவ்வீரனின் குமுறல் - வெண்முரசு நாவல் வரிசையின் நீலம் நாவலில், கண்ணனின் பிறப்பையொட்டி கம்சனின் வெறியாட்டத்தை கண்டு "இத்தனை குருதியில் பிறந்த அவனே இந்த யுகத்தின் அதிபன்...பொன்முடிகொண்டு பிறக்கவில்லை. பெரும்புகழ்கொண்டு பிறக்கவில்லை. பொல்லாப்பழிகொண்டு பிறந்திருக்கிறான்! பாலாடி பழியாடி பலநூலில் பகடையாடி பசுங்குருதியாடி எழுக என் தெய்வம்!" என வெடிப்புறும் வசுதேவரின் சன்னத வரிகளை நினைவுறுத்தியது.
'அன்னம்மா டீச்சர் சில நினைவுக் குறிப்புகள்' மனதுக்கு மிக அணுக்கமான சிறுகதை. தன் முப்பத்து மூன்றாவது பிறந்தநாளில் இனி தனக்கு மட்டுமே வயதாகும் என்று, யேசுவைத் தம்பி என விளிக்கும் பாசமிக்க பெண். வீட்டில் அனைவருக்கும் மூத்த அக்காவாக சுமைதாங்கி பழகிய அவளுக்கு யேசுவுக்கும் ஒரு நொடியில் அக்காவாகி விட முடிகிறது.
இரக்கமற்ற ரட்சகன் மீது இரக்கப்பட அன்னையராலும் சகோதரிகளாலும் காதலிகளாலும்தான் இயல்பாக முடிகிறது. இச்சிறுகதைத் தொகுப்பின் மற்றொரு கதையில் வரும் வரிகள்: "தாயும், மனைவியும், காதலியும், சகோதரியும் தருவதை விடவும் ஒரு ஆத்ம பலத்தை வேறு யாரால் தந்துவிட முடியும்? அவர் பிதாவைத் தேடிப் போவதற்கிடையில் மாதாவையும் புரிந்துகொள்ள முயன்றிருக்கலாமே. அதற்கு பதில் அவன் தந்தைமையின் ஊடுவழிகளிலூடே முட்டி மோதி நடந்தபடி இருந்தார். தந்தை யாராக இருந்தால் என்ன? கருவறைதானே உண்மையில் அவன் தந்தை?" இவ்வரிகளே இச்சிறுகதைகளின் மையம் எனலாம், இக்கதைகள் அனைத்தின் வழியாக வெளிப்படும் பிரியத்துக்குரிய யேசுவைக் குறித்த ஒரு பெண்ணின் அங்கலாய்ப்பு.
அன்னம்மா டீச்சரின் மரணத்தருவாயில் அவளைத் தாங்கிக்கொள்வதற்காக வரும் தம்பி யேசு இக்கதைகளிலேயே மிக அழகானவன்.
போந்தியஸ் பிலாத்துவின் கடிதத்தின் வழியாக வெளிப்படும் யேசுவும் பெண்களால், அவன் மரணத்துக்கும் உயிர்த்தெழலுக்கும் முன்பே அடையாளம் காணப்பட்டு நேசிக்கப்படுபவன் ஆராதிக்கப்படுபவன். இக்கதைத் தொகுப்பின் வழி நாம் காணும் யேசு, யாதவகுல அழகனைப் போல பெண்களின் விழி வழி காணப்படுபவன். யேசுவே இக்குறுநாவலில் ஓரிடத்தில் சொல்வது போல தான் நேசிக்காத போதும் தன்னை நேசிக்கும் சிநேகிதிகளைக் கொண்டவன். அவனது மறைவுக்குப் பின்னர், மூன்றாம் நாளில் அவன் உயிர்த்தெழுவதற்கு முன்னரே அவன் வரக்கூடுமென அவனைக் காண அவனை ஆராதித்த பெண்கள் பாலை மலைச்சரிவில் ரகசியமாக நடந்து செல்கின்றனர். அப்போது,
"யேசு நிச்சயம் இந்த வழியில் வருவாரென உனக்கு எப்படித் தெரியும்?" என்ற ஒரு பெண்ணின் கேள்விக்கு மரியம் "எனக்கொன்றும் நிச்சயமாகத் தெரியாது. அவர் வருவார் என்று நான் நம்புகிறேன். அவ்வளவுதான். இன்று பார்க்கவில்லையென்றால் வேறு ஒரு நாளில், வேறு பாதையில் பார்ப்போம். அவர் எங்கேயிருக்கிறார் என்பது நமக்குத் தெரியாவிட்டால் கூட, நாம் எங்கேயிருக்கிறோம் என்பதை அவர் அறிந்திருக்க வேண்டாமா? அவர் அறிந்திருப்பார் என்று நாம் நம்புவோம்." என்கிறாள்.
இறையும் குருவும் அனைத்தையும் அறிந்தே, கல்லும் கரடுமான பாதைகளில், பூமி நடுங்கும் வேளைகளில் நடக்கவைக்கிறார்கள். ஆனால் 'நாமிருக்கும் இடம் எதுவாயினும் அவர் அறிவார்' என்ற அந்த ஒற்றை நம்பிக்கையில்தான் குருதி சொரியும் பாதங்களுடனும், சறுக்கியும் விழுந்துமேனும் அவரை எதிர்நோக்கி நடக்க முடிகிறது.
ஒளியை நோககிய பாதையில் இருள் நிழல்கள் புறமுதுகே காண்கின்றன.