Wednesday, July 29, 2015

சற்குரு - தாத்தா - 14

ஒவ்வொரு மறைவும் உணர்த்திக் கொண்டே இருந்தும், மறந்து விடும் மனித மனம் - நிலையிலா வாழ்வில் நம் நிலை யாதென்று. ஒரு போர்க்களம் பார்த்துவிட்டால், மரணத்தோடு கணம்தோறும் வாழ்ந்தாக வேண்டிய நாட்களில் ஒருமுறை வாழ்ந்து விட்டால், ஒருவேளை உயிரின் மதிப்பு புரிந்துவிடக்கூடும்.

மாபெரும் மனிதர்களை இழந்திருக்கும் இத்தருணம், வாழ்வு குறித்த - பயனுள்ள வாழ்வு குறித்த  பல கேள்விகள் அனைவருக்கும் மனதுக்குள்  எழும்பி இருக்கிறது. அதை சற்றே உற்றுநோக்கி மனதுக்குள் விடை தெளிதல் நலம். இல்லையெனில் இயற்கையின் கொடையாக ஞாபக மறதி இருக்கிறதே - அன்றாடக் கவலைகளுக்கு சீக்கிரம் திரும்பி விடுவோம்.

சிற்றலை கரை கடத்தி மீண்டும் அமைதி கொள்ளும் குளம்.

அடிமேல் அடியென அப்பாவின் மறைவுக்குப் பின், மாமாவின் மறைவு... பொதுவாக சமீபத்திய மாதங்களில் பல துறை ஆளுமைகள் அமரர் ஆகி இருக்கிறார்கள். (ஜெயகாந்தன், பாலச்சந்தர், MSV, அப்துல் கலாம் வரை) இறப்பும் இழப்பும் நம் மனதை பண்படுத்தவில்லையெனில், வாழ்வு நமக்கும் பிறர்க்கும் கனியாத காயாய் கசந்துபோக நேரும்.

--------------------

எழுத விழைந்த கதைக் களமும் மரணத்தை சுவாசித்த ஒரு பெரும் போர்ச்சூழல்தான்

1942 - மலேயாவில் கோலாலம்பூர் அருகே ஒரு சிறிய ரயில்வே நிலையம்.  நாடாள்பவர் யாராயினும் உயிர்வாழ உத்தரவாதமின்றி மக்கள் அலைக்கழியத் தொடங்கிஇருந்த காலம்.

நூற்றுக்கணக்கான மக்கள் பயணம் செய்ய, அனைவரது பெருமூச்சுக்களையும் சேர்த்து வெளிவிட்டு வந்து நின்றது ஒரு புகைவண்டி. திடுமென போர் விமானங்களின் வருகையைக் குறிக்கும் எச்சரிக்கை சங்கு ஒலித்ததும், அனைவரும் அருகிருந்த பதுங்குகுழிகளுக்குள் பாய, ரயில் பிரயாணிகளுக்கு அலறுவதற்கும் அவகாசம் இன்றிப் போனது - அடுத்த வினாடி பலருக்கும் சுவாசம் நின்றுபோனது - குண்டுகள் ரயில் மீது விழ பெருநாசம். அன்று உயிர் இழந்த நூற்றுக்கணக்கானோரில் ஒருவர் என் ஆசிரியையின் தந்தை . சில நூறடிகளுக்குள் குழியில் பதுங்கித் தப்பியவர்களில் ஒருவர் தாத்தா . ஆசிரியையிடம் பேசும் போதே இருவர் உணர்வுகளும் பின்னோக்கிப் பாய்கிறது. தாத்தாவைப் பார்த்து, தான் பார்க்க இயலாது போன தன் தந்தையை பார்த்தாய் கண்கலங்கிய தமிழ் ஆசிரியை.

அன்று இரவு, எத்தனையோ முறை தாத்தா கூறக் கேட்டிருந்தாலும் மீண்டும் கேட்டேன் தாத்தா கடல் கடந்த கதை, உற்றாரைப் பிரிந்து, உலகப் போர் நாட்களில் நிலையாமையை மட்டுமே நித்தமும் பார்த்த கதை. ஆங்கே தன்னிகர் இல்லாத் தலைவர் 'நேதாஜி' யின் INA படையில் இணைந்த கதை.

சாரங்கள் சதமல்ல எனத் தெரியும் தருணம், சாரம் அறுத்தும் எழுந்து நிற்கும் கோபுரங்களாய், மனிதர்கள் வேரறுந்த மண்ணில் வான் நோக்கி உயர்ந்த கதை. உற்றார் யாருமில்லை, பெற்ற மகன் காண வழி இல்லை, நாளை நான் உண்டா, நாளை என ஒன்றுண்டா - எதற்கும் பதில் இல்லை - எனும் போது வாழ்வை இரு விதமாய் கழிக்கலாம். இருப்பது ஒரு வாழ்க்கை, எப்போதும் அறுந்து விழக்கூடிய கத்தி தலை மேல்.

அஞ்சிக் கொண்டும், அஞ்சாதது போல் வாழ்வைக்  கட்டற்று மனம் போல் வாழ்வது ஒரு வகை. தோன்றிடின் பயனுற வாழ்வதும், வீழின் விதையென வீழ்வதும், வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் நிகழும் நிகழ்வைக் கர்ம பூமியாய்க் கொண்டு களம் புகுவது இரண்டாம் வகை.

தர்மத்தைக் கையில் எடுத்துக் கர்ம பூமியில் களம்புக வாயில் அனைவருக்கும் திறந்தேதான் இருக்கிறது. சிறகு கொண்ட பறவை எல்லாம் வடதுருவம் வரை பறந்தா விடுகிறது!! மதிவேண்டும், மதிகிட்டும் விதி வேண்டும்.

அந்த களம் காண, காலம் தாத்தாவைக் கொண்டு சேர்த்த கதை:

தேடல் - மானுடனுக்குள் சுடர்விடும் அணையா நெருப்பு. கடல் கடந்து திரவியம் தேட இன்றொரு வாழ்வுமுறை IT. அன்றொரு வாழ்வுமுறை 'வட்டி'. நகரத்தார் எனும் பெருவணிகர் இல்லங்கள் நடத்திய கிழக்காசிய வாணிபம் - பர்மா, மலேயா, இலங்கை என பல தேசங்களில். நேர்மையும் காரியநேர்த்தியும், நிர்வாகத்திறனும் மிக்க இளைஞர்படையை கணக்குப் பிள்ளைகளாய் காரியமாற்ற இருகரம் நீட்டி இழுத்துக் கொண்டது இவ்வணிக வாழ்வு. வாழ்வை புதைகுழியில் ஆழ்த்தும் இன்றைய கந்து வட்டிக் கடைகள் அல்ல. வணிக நிறுவனங்களுக்கு கடன் வழங்கும் நவீன வங்கிகளின் முந்தைய வடிவம் இந்த வட்டிக் கடை. நாடாறு மாதம் காடாறு மாதம் என உற்றாரை பெற்றாரை விட்டு வாழ்க்கை. இதன் வாயிலாய் தாய்மண்ணில் வருமானம் பெருக்கி வளம் கண்டது பலரது வாழ்வு.

19 வயதில் (1935) தன் மாமாவோடு கப்பல் ஏறி முதல் முறை ரங்கூன் சென்றார்கள் தாத்தா . கப்பல் வழி 4 நாள் பயணம் ரங்கூன் - அன்றைய பர்மாவின் தலை நகரம். பல குடும்பங்களின் பொருளாதாரத்தை உச்சியில் ஏற்றவும் அங்கிருந்து சறுக்கவும் செய்த தலைவிதி நகரம்.

முதல் திருமணம் 1938-ல்  தாத்தாவுக்கும் அவரது அத்தை மகள் செல்லம்மாள் அப்பத்தாவுக்கும் நடந்தது.
நல்ல நிறமாயும், சின்னஞ்சிறு பெண் போல இருப்பார்களாம் - பிறர் சொல்லக் கேள்விதான். அதிகாலை காணும் அற்புதக் கனவு யாரோ அடித்து எழுப்பக் கலைவது போல விதியின் கருணையற்ற கரங்களில் கலைந்தது 5 மாதத்தில். முதற் புள்ளியிலேயே முற்றுப் புள்ளி கொண்டு நிறைவடைந்தது அந்தக் கவிதை.

மாமன் மகளை (சேது அப்பத்தாவை) மணந்தது அடுத்த வருடம் 1939. மிகச் சரியாக மூன்றே மாதங்களில் மருமகனை அழைத்துக் கொண்டு கப்பல் ஏறினார்கள் பசளைத் தாத்தா.

இம்முறை சென்றது கோலாலம்பூர் - சென்றடைந்த தினம் 1-மார்ச்-1940

அப்போது தெரியாது - யுத்தம் வருவதும், அடுத்த ஆறு வருடங்கள் கழியப் போவது யாருமற்ற வனவாசமும், உற்றார் உறவினரின் இடையறாத மனவாசமும் - இருப்பிடமும் தெரியாமல், இருப்புக்கும் இறப்புக்கும் இடையே நடந்த அஞ்ஞாதவாசமும் என்று.


சில தேதிகளும் குறிப்புகளும் - தாத்தாவின் குறிப்புகளில் இருந்து

28-ஜூன்-1935-ல் தன் மாமா ஸ்ரீமான் ராமநாத பிள்ளை அவர்களோடு கப்பல் ஏறி முதல் முறை ரங்கூன் பயணம் . கப்பல் வழி 4 நாள் பயணம், 1-ஜூலை-1935 ரங்கூன் .

1936-ல் மார்ச் மாதம் இந்தியா வருகை, டிசம்பர்  வரை (8 மாதம்) மதுரை வாசம்.

1936 டிசம்பர் ரங்கூன் சென்று 1938 மார்ச்-ல் அடுத்த வருகை. 

6-ஏப்ரல்-1938 தாத்தாவுக்கும் செல்லம்மாள் அப்பத்தாவுக்கும் திருமணம்.
(என்னைப் பல வருடங்கள் கழித்து, பெங்களூர்-ல் உமா அத்தை வீட்டில் பார்த்து சிவசாமி தாத்தா சொன்ன முதல் வார்த்தை செல்லம்மா அப்பத்தா போல இருக்கிறேன் என்பது, வேறு யாரும் அவர்கள் குறித்து விரிவாக சொல்லிக் கேட்டதில்லை).

12-செப்டம்பர்-1938 செல்லம்மாள் அப்பத்தா மறைவு.

சேது அப்பத்தாவை மணந்தது அடுத்த வருடம் 14-டிசம்பர்-1939.

கோலாலம்பூர் - சென்றடைந்த தினம் 1-மார்ச்-1940

முந்தைய பதிவு (13)

அடுத்த பதிவு (15)

Saturday, July 4, 2015

சற்குரு - தாத்தா - 13

சற்குரு - தாத்தா - 13


ஆறுமுகநேரி - ரகசியம் பேசத் தெரியாத பனைமரக் காடுகள். அதன் இடையே நடக்கும் போது திகில் பட இசையமைப்பாளராய் காற்று வேலை பார்க்கும். கால்கள் நடந்து உருவாக்கிய பாதைகள் வழியாக நடைபோட புதிய திசைகள் தினந்தோறும் உருவாகும். காக்கா முள் நிறைந்த தடத்தில், ஓணான் , நத்தை உடன் வரும் பாதைகளில் explorers ஆக நடைபயணம். இந்த V வடிவ கருவேலம் முள் alias காக்கா முள் மிகவும் கடினமானது, ஒருநாள் பனை ஓலை காத்தாடி செய்து அதைக் குத்திக் கொடுத்தார்கள் தாத்தா. பலநாள் என் நிலவறை பொக்கிஷங்களில் இருந்தது அது. ஆனால் அந்த முள் குத்தினால் மிகவும் கடுக்கும்-காலணி தாண்டி தாத்தாவின் கால் பதம் பார்த்தது ஒருநாள் - பின்னர் என் காலைப் பதம் பார்த்த அன்றே கடுக்கும் என்ற வார்த்தைக்குப் பொருள் புரிந்தது.


அப்படிப்பட்ட ஒருநாள்(நினைவுக் கோப்பில் எத்தனையோ ஒருநாள்-கள், ஒருநாள் போதுமா!!) காலை நடையில் மரங்களுக்கு ஊடே ஒரு குடிசை இருப்பதைப் பார்த்து அருகில் சென்று பார்க்க கரடுமரடாய் ஒரு மனிதர். இன்று அவ்விதம் நடக்க முடியுமா, அப்போது இன்றிருப்பது போன்ற பாதுகாப்பு குறித்த அச்சங்கள் இல்லையா எனத் தெரியவில்லை. தாத்தா உடனிருக்க நமக்குதான் அச்சமென்பதில்லையே. நாய்களுக்கு மட்டும்தான் எனக்கு பயம் - தாத்தா உடனிருந்தாலும்.. பயமென்றால் 'சுற்றி நில்லாதே போ பகையே துள்ளி வருகுது வேல்' என்று பாரதியின் பா சொல்லி தைரியமாக நடைபோடச் சொல்வார்கள் தாத்தா. பின்னர் எத்தனையோ நாய்கள் - அச்சம் தரும் வேளைகளிலெல்லாம் இந்த வேலே துணை.


பதநீர் கள்ளாவதற்குள் அங்கே செல்வோம். அந்த பதநீர் இறக்குபவருடன் பேசி - அவர் தன் பெயர் 'சுதந்திரம்' என்றதும், 1947-ல் பிறந்தாயா எனத் தாத்தா கேட்க, சுதந்திரம் கிடைத்த அன்று பிறந்தேன் என்று கூற, தொடர்ந்து அவர் குடும்பம் குறித்தும் பேசி, அவர் சிலநாட்களில் தாத்தாவுக்கு மிக நெருக்கமாகிப் போனார்.

அந்த ஆறுமுகநேரியிலிருந்து 10 கிமீ தொலைவில் திருச்செந்தூர். வழியில் 64 வீதிகளில் 64 பள்ளிவாசல்கள் கொண்ட காயல்பட்டணம்; மிகப் பெரிய தேவாலயம் அமைந்த வீரபாண்டியபட்டணம், படித்த பள்ளியோ ஜைனப் பள்ளி - மினி இந்தியா - வடஇந்திய மாணவர்களும், 8ஆம் வகுப்போடு பள்ளிக்கு முழுக்குப்போட வேண்டிய காயல்பட்டிணத் தோழிகளும், வேறெங்கும் கிடைக்காத கலவையாய், ஒரு பள்ளி. 

பயம் வேண்டாம் - மீண்டும் பாடங்களுக்குள் செல்லவில்லை. ஒரு மிக முக்கியமான அத்தியாயத்திற்கு நுழைவதால் சிறு முகவுரை..


அங்கே வீரபாண்டிய கட்டபொம்மன் பற்றிய பாடம் எடுத்த தமிழாசிரியை, மிக உணர்ச்சிவயமாய் உலகப் போரை விவரித்ததை தாத்தாவிடம் நான் கூற, 'அவர்களிடம் கேட்டுப்பார் யாரேனும் அவர் வீட்டில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கலாம்' என்றார்கள் தாத்தா.

மிகவும் கண்டிப்பான அந்த ஆசிரியையிடம் அதைக் கேட்க பயந்து நான் நாட்களை ஒத்திப் போட்டுக்கொண்டே போக, தாத்தா 'நான் வந்து பேசுகிறேன்' என்று சொல்ல, அதற்கு பயந்து அடுத்தநாளே பேசினேன். அந்த ஆசிரியையின் தந்தை 1940களில் மலேயாவில் (இன்றைய மலேசியா) இருந்திருக்கிறார். ஒரு மாலை வேளையில் தாத்தாவுக்கு அரை மைல் தொலைவில் இருந்திருக்கிறார் - இறந்திருக்கிறார்.


-ஆறுமுகநேரி தொடரும்/மலேயா தொடங்கும்-

முந்தைய பதிவு (12)


அடுத்த பதிவு (14)




Thursday, July 2, 2015

சற்குரு - தாத்தா - 12

சற்குரு - தாத்தா - 12


ஒரே அச்சில் எத்தனை உலகங்கள் சுழல்கின்றன. சிலருக்கு மிக மெதுவாகவும், சிலருக்கு தலை கிறுகிறுத்துப் போகும் வேகத்துடனும்! பெற்றோருக்கு வாழ்வின் சிகரப் புள்ளிதொடும் பகுதியில், கடமைகளும் கட்டாயங்களுமாய் நிர்தாட்சண்யமாய் சுழலும் உலகம்; அப்போது காலடி நிலம் போல நிச்சயத்தன்மையுடன், தாத்தா பாட்டி என முந்தைய தலைமுறை உடன் இருப்பது பிள்ளைகளுக்குப் பெரும் சுகம்.


உறக்கமின்றி, ஓய்வின்றி, விடுமுறைகளின்றி, தனிமனித இயந்திரமாய் ஒரு வங்கிக் கிளையைத் தன் அதீதத் திறமையாலும், அயராத உழைப்பாலும் அப்பா ஒருபுறம் ஓட்டிக்கொண்டிருக்க, தாத்தா அப்பத்தாவுடன் எனக்கு வேறு ஒரு உலகம். மேலும் அம்மா சேகரித்திருந்த வீட்டு நூலகத்தில் மூழ்கியதும் இந்த காலகட்டத்தில்தான்.


பெரியவர்களின் மன உளைச்சலும், இறுக்கங்களும், அதன் வெளிப்பாடுகள் வீட்டுச் சூழலில் சிதறும் தருணங்களில், ஏதோ அவர்கள் கோபமாய் நம் மீது பாய்ந்து விட்டதாய், சற்றும் கருணையின்றி தண்டித்துவிட்டதாய் எத்தனையோ குற்றச்சாட்டுகள் பிள்ளைகளுக்குப் பெற்றோர் மீது. எனக்கும் இருந்திருக்கிறது. அதிலும் சில பிணக்குகள் - திருப்பாவையில் ஆண்டாள் பாடியது போல் 'ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓர் இரவில்- ஒருத்தி மகனாய்..' வளர்ந்த கண்ணனைப் போல் இருதாய்க்கும் தந்தையர்க்கும் இடையே, அவர்கள் வாரி வழங்கும் அன்புக்குப் பாத்திரமாய் இருக்கவும், அதில் ஏற்படும் சிறு சலசலப்புகளுக்கும் அஞ்சவோ மனம் சுளிக்கவோ கூடாது, அன்பு இருமடங்காய் கிடைப்பதற்கு மாதவம் செய்திருக்க வேண்டும் என்றும், இன்னும் எத்தனை எத்தனையோ விதங்களில் யார் பக்கமும் நூலிழை பிசகிவிடாது தாத்தா துலாக்கோல் ஏந்தி நடத்திச் சென்ற நாட்கள். Salute him for the patience and perseverance.


அந்த சூழ்நிலையை மிக இதமாய் விளக்கி, பல நேரத்துக் கோபங்கள் அளவுகடந்த நேசத்தின் வெளிப்பாடே, அன்பைக் குறித்தெழும் ஆற்றாமையே என்பதை விவரித்தது - பொய்யோ புனைவோ அல்ல; 11-12 வயது பேத்தியிடம் சக மனிதராய் மதித்து, இவை புரியும், மயக்கும் பிணக்கும் அகலும் என நம்பிக்கை வைத்து, பேசிட ஒரு மிகச் சிறந்த பக்குவம் வேண்டும். அன்றே சிறு மனதுக்கு அனைத்தும் விளங்கிவிடாது என்பது தாத்தாவுக்குத் தெரிந்தே இருக்கும். பின்னாளில் என்று தேவையோ அன்று இந்த விதை வேரூன்றி இருக்குமென நம்பி விதைத்த நடவு அது. தழைத்துமிருக்கிறது. ஆண்டிறுதித் தேர்வுக்குத் ஆயத்தம் செய்வதன்று குருவின் பணி; ஆயுள் காப்பீடு போல் மறைவுக்குப் பின்னும் காத்து நிற்கும் ஈடு.


இதை எழுதக் காரணம் - அன்பின் அடிப்படையிலையே சில சமயங்களில் நாம் பல வார்த்தைகளையும், பிறர் கூற்றில் நாம் ஏற்றும் தற்குறிப்பேற்ற அணியாய் - பிறர் கருத்தாய் நாம் நினைக்கும் கருத்துக்களையும் சுமத்தி, உறவென்னும் நூலிழையை சிக்கலாக்கி விடுவதுண்டு. அது போன்ற தருணங்களில் அன்பெனும் மாயக்கயிற்றால்தான் அனைத்தும் கட்டி இழுக்கப் படுகிறதென உணர்ந்து, இறுதியில் காண விழையும் நோக்கத்தின் மேல் நம்பிக்கை கொண்டு, அனைவரையும் அனைத்துச் செல்லும் பெருநோக்கு - தவறெனில் சுட்டிக் காட்டும் கடமை, எதுவரினும் ஒதுங்கிக்கொள்ளாமல், ஒத்திப்போடாமல் நேர் எதிர் நின்று ஏற்றுக்கொள்ளும் தீரம். இவற்றையும் பகிர்ந்து கொள்ளவே.


-ஆறுமுகநேரி தொடரும்-

முந்தைய பதிவு (11)


அடுத்த பதிவு (13)