இருளை அருந்தியபடி
திசையழித்து வழிந்தோடும் பால்
மிதக்கும் சில வெள்ளெறும்புகள்
தலைகீழ் வான்வெளியில்
ஓயாமல் தலைமோதும் அலைகள்
கடல் நோக்கி சென்று
மீளாத சுவடுகளை
உற்று நோக்குகிறது இரவு
இருளை அருந்தியபடி
திசையழித்து வழிந்தோடும் பால்
மிதக்கும் சில வெள்ளெறும்புகள்
தலைகீழ் வான்வெளியில்
ஓயாமல் தலைமோதும் அலைகள்
கடல் நோக்கி சென்று
மீளாத சுவடுகளை
உற்று நோக்குகிறது இரவு
சிங்கையை ஒரு பறவைப் பார்வையில் பார்க்க நேர்ந்தால் கணநேரமேனும் கவர்ந்து பார்வையை நிறுத்திவிடும் அழகு இந்தக் கடலோர அஞ்சிறைத் தும்பிக்கு உண்டு. சிங்கை கடல்முகப்பை பசுமையால் அலங்கரிப்பவை வளைகுடா பூந்தோட்டங்கள். கிழக்கு, தெற்கு, மையத் தோட்டங்களோடு(Bay East, Bay South, Bay Central) சேர்ந்த 101 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட சீர்மைப்படுத்திய பகுதியில் இந்த கார்டன்ஸ் பை தி பே (Gardens By the Bay) எனப்படும் கடலோரத்தோட்டங்கள் அமைந்திருக்கிறது.
சிங்கப்பூர் தாவரவியல் தோட்டத்தில் (Botanical garden) சுற்றுலாப் பயணியரின் வருகை அதிகரித்துத் திணறிய போது நிரந்தரமாக தாவரவியல் கண்காட்சி போல ஓரிடத்தை அதற்கென அமைக்கும் திட்டம் உருவாகியது. இதுவும் கடலில் இருந்து கைப்பற்றிய நிலத்தில் அமைக்கப்பட்ட வளாகமே. இந்தத் தோட்டத்தின் ஒட்டுமொத்த வடிவமைப்பைப் பார்ப்பதற்கு மிகச் சிறந்த கோணம் மரீனா பே சாண்ட்ஸ் (Marina Bay Sands) எனும் ஆடம்பர விடுதியின் மேல்தளத்தில் இருந்து பார்ப்பதுதான். 57ஆவது மாடியில் இருந்து இதைப் பார்க்கும் பொழுது ஒரு மாபெரும் தும்பி பூந்தோட்டத்தில் ஒளியூடுருவும் இறக்கைகளை விரித்து அமர்ந்திருப்பது போல தோன்றுகிறது. அல்லது இரு அலைபிழைத்த கிளிஞ்சல்கள் அருகருகே கிடப்பது போல. மணலில் சிறு பொருள் ஒளித்து கிச்சு கிச்சு தாம்பாளம் விளையாடக் குவிந்த கரங்கள் போல. எந்நொடியும் எழுந்து பறந்துவிடும் சாத்தியங்களோடு கடலருகே காத்திருக்கும் இருசிறகுகள் போல.
இரண்டு மாபெரும் தாவரவியல் வளர்ச்சித் தோட்டங்கள், உலோக மரங்கள், நீர்ப்பரப்புகள், பல விதமான பாரம்பரிய தோட்டங்கள், கலைநிகழ்ச்சிகள் நிகழ்த்தும் மேடைகள், நீர்வழிகளைக் கடக்கும் பாலங்கள், சிற்பங்கள் என விரிந்து பரந்த இடம் இது.
ஒவ்வொரு துளி நிலமும் இங்கு பொன்னை விட விலை உயர்ந்தது. நகரின் அதி முக்கியமான முகப்புப் பகுதியில் பல கோடிகள் பொருட் செலவில் பசுமைக்கென இடம் உருவாக்கி இத்தகைய பரந்த பசுமை பாதுகாப்பு மையங்களை உருவாக்கியவர்களை எண்ணி வாழ்த்தாமல் இருக்க முடியவில்லை. 2005-ல் பசுந்தோட்டத்துள் ஒரு நகரமாக சிங்கப்பூரை உருமாற்றுவதன் பகுதியாக கடற்கரையோரம் நிலம் கையகப்படுத்தபட்டு மாபெரும் பூங்காக்கள் அமைப்பதற்கான அறிவிப்பை சிங்கை பிரதமர் வெளியிட்டார். இதன் வடிவமைப்பிற்காக சர்வதேச அளவிலான போட்டி நடைபெற்று இங்கிலாந்தைச் சேர்ந்த வில்கின்ஸன் அயர் (Wilkinson Eyre) மற்றும் கிரேண்ட் அசோசியேட்ஸ் அதை வென்றது.
இங்கு உள்ள பல பகுதிகளில் முக்கியமானவை மலர் குவிமாடம்(Flower Dome) மற்றும் மேகக் காடுகள்(Cloud Forest) எனப்படும் இரண்டு பசுங்குடில்கள். வெளியிலிருந்து காண்பதற்கு மாபெரும் கண்ணாடிச் சிறகுகள் போலத் தெரியும் இந்த கட்டிடங்கள் உள்நுழைந்ததும் நமை ஒரு மாபெரும் கண்ணாடிப் பேழைக்குள் மூடி வைத்துவிட்டது போலத் தோற்றமளிக்கிறது.
மிதமான குளிர், கண்விரியும் பெரும் பரப்பளவில் நாம் அதிகம் கண்டிராத ஆயிரக்கணக்கான மரம், செடி வகைகள் நமை வந்து சூழ்கிறது. நான்கைந்து தளங்கள் உயரம் கொண்ட அந்த விதானம் ஒளி புகும் வண்ணம் முழுக்கவே கண்ணாடிகளால் ஆனது. வளைந்த எடைகுறைந்த எஃகினால் ஆன பசுங்குடில் அந்த மாபெரும் கூரையைத் தாங்கும் தூண்கள் ஏதுமன்றி இருப்பதாலேயே பாலை நிலம் அல்லது கடல் போன்ற விரிவெளியில் வளைந்த கூரையாய் விண் சூழ்ந்திருப்பதைப் போல இருக்கிறது.
வெப்பமான கோடையும் குளிர்ந்த ஈரமான குளிர் காலமும் கொண்ட புவியின் மத்தியதரைப் பகுதி காலநிலைக்கு நிகராக உருவாக்கப்பட்ட பசுங்குடில் இது. உலகின் பல தேசங்களில் இது போன்ற பருவநிலையில் வளரும் தாவரங்கள் இங்கு வளர்க்கப்படுகின்றன. துவக்கத்தில் பாலையின் நூற்றுக்கணக்கான கள்ளி வகைகள் வரவேற்கின்றன. பாலையின் தாகமே ஒரு கொடிய அழகானது போல உடலெங்கும் முள் செறிந்த அழகழகான கள்ளிச் செடிகள். வட்ட வடிவில், பட்டை வடிவில், மலர் வடிவில், திருகு முள் போல, குடுவைகளைக் கழுவப் பயன்படுத்தும் பிரஷ் போல என விதவிதமான உருவங்களில் கள்ளிகள், ஆளுயரத்துக்கு மேற்பட்ட சில முட்செடிகள். எங்கெங்கோ முன்னோர்களைக் கொண்ட மரங்கள் அவற்றுக்கான சூழல் இங்கு உருவாக்கப்பட்டு இம்மண்ணில் குடியேற்றம் பெற்று நின்று கொண்டிருக்கின்றன. அவ்வகையில் இது சிங்கப்பூரையே குறிக்கிறது எனலாம். உலகெங்கும் இருந்து அரியவை தேர்ந்தெடுக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்ட கண்ணாடி பேழை.
தென்னிந்தியாவின் ஒரு ஊரைச் சேர்ந்த நானும் எங்கோ பல்லாயிரம் மைல்கள் தொலைவில் மெக்சிகோ தேசத்தின் பாலையில் நிற்கும் தாவர வகைகளும் இங்கு சிங்கையில் சந்தித்துக் கொள்ளும் இந்த கணத்தை அறிவியல் சாத்தியமாக்கி இருக்கிறது. ஏந்தப்பனை (Cycads) வகையைச் சேர்ந்த பெரிய டியூன் (Giant Dioon) எனப்படும் தாவரம் இவ்விதம் மெக்சிகோவின் பாலை மலைகளில் காணப்படும் ஒன்று. 170 மில்லியன் ஆண்டுகளாக இப்புவியில் இருக்கும் தாவரமாம். ஆண் பெண் என இரு வகைச் செடிகள் கொண்ட இத்தாவரம் பல நூறு ஆண்டுகள் உயிர்வாழ்வது.
அடிபெருத்த பெருங்குடுவைகளுக்கு சிறு கொம்புகள் முளைத்தது போல நிற்கும் ஆப்ரிக்காவின் மாபெரும் பவோபாப் மரங்கள் (Baobab) அருகே மனிதர்கள் நிற்பதைப் பார்க்கும் போதும் இது போல இயற்கையின் மாபெரும் சாதனைகளின் முன் நேற்று முளைத்த மனிதர்கள் விசித்திரக் குள்ளர்கள் போல நின்று கொண்டிருப்பதை உணர முடிந்தது.
இங்கு காணக்கிடைக்கும் அனைத்துத் தாவரங்கள், மரங்கள் குறித்தும் அறிந்து கொள்வதற்கு தாவரவியலைக் கற்றிருந்தால் மட்டுமே ஓரளவு சாத்தியம். எனவே நினைவில் நின்ற வித்தியாசமான சில வகைகள் குறித்து மட்டும் குறிப்பிட்டிருக்கிறேன்.
ஆஸ்திரேலிய நிலத்தைச் சேர்ந்த தாவரங்கள் முற்றிலும் கண்ணுக்குப் புதியவையாக இருக்கின்றன. தலை முடியை வெட்டிக் கொள்ள அடம்பிடிக்கும் சிறுவனைப் போல கொத்துக் கொத்தாக முடி வளர்ந்தவை, கம்பி மத்தாப்பில் தீமலர்களுக்கு பதிலாக பச்சைப் புல்லாய் விரிந்து அப்படியே உறைந்தது போல நிற்கும் புல் மரங்கள்(Xanthorrhea glauca - Grass Tree). இவையும் 600 வருடங்கள் வாழக்கூடியவை. மிகவும் மெதுவாக வளரும் இம்மரங்கள் கிழக்கு ஆஸ்திரேலியாவின் மணற்பாங்கான பகுதிகளில் வளர்பவை. இதன் அடிமரங்கள் ஆஸ்திரேலியாவில் நிகழும் காட்டுத்தீயில் எரிந்து விடாது உயிர்த்தெழும் தன்மை கொண்டவை. இவை அங்கு வாழும் பழங்குடியினருக்கு உணவும், உடையும், ஆயுதங்கள் செய்வதற்கும் உதவியிருக்கின்றன.
சிலேவின்(Chile) தேசிய மரமாகிய குரங்குப் புதிர் மரம் (Araucaria araucaria - Monkey Puzzle Tree) பெயரின் காரணமாக ஈர்த்தது. ஊசியிலை மரமாகிய இதன் கிளைகள் முழுவதும் நெருக்கமாக இலைகள் அடுக்கி வைக்கப்பட்டது போல இருக்கிறது. இம்மரங்கள் பிரிட்டனில் அறிமுகமான போது இம்மரங்களில் எவ்விதம் ஏறுவதென குரங்குகளுக்குப் புதிராக இருக்கும் என ஒருவர் சொன்னதால் இதற்கு இப்பெயராம். ஆசான் ஜெயமோகன் அவர்களின் 'சாவி' சிறுகதையில் ஒரு புதிய அறிதலின் இன்பத்தில் சிக்கிக்கொள்ளும் குரங்கின் நிலை நினைவு வருகிறது. ஒரு குரங்குக்கு அறிய முடியாத புதிர் ஒன்றைக் கொடுத்தால் அதில் சிக்கிக் கொண்டு தவித்துத்தான் போய்விடுமெனத் தோன்றுகிறது. இதன் இலைகள் ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கப்பட்டிருப்பதன் விந்தையே ஒரு புதிரின் ஈர்ப்பை உருவாக்குகிறது. பைன் மர விதைகளைப் போல இதன் விதைகளும் உணவில் பயன்படுகின்றன.
பூக்களின் முனை(Cape Floristic Region) என்றழைக்கப்படும் தென்னாபிரிக்காவின் தென்முனை யுனெஸ்கோ அமைப்பால் பாதுக்கப்படவேண்டிய பாரம்பரிய நிலமாக அறிவிக்கப்பட்டது. இங்கு வளரும் 69% சதவிகித தாவரங்கள் உலகில் வேறெங்கும் வளராதவை. அதில் சில வகைகளை இங்கு வளர்த்திருக்கிறார்கள். இவை கடும் வறட்சியையும் தாங்கி வளரக்கூடியவை. இவற்றில் பல தாவரங்களின் விதைகள் உறுதியான வெளிப்புறத்தோலால் பாதுகாப்பாக இருக்கும். அதீத வெப்பநிலையில் உருவாகும் காட்டுத்தீ இவற்றை எரித்த பிறகு இவ்விதைகள் வெளிப்பட்டு புதிதாக அனைத்தும் மலரத் தொடங்கும். வெந்து தணிந்த காட்டில் மலரும் மலர்கள். கடுகு இலைகளைப் போன்ற தன்மை கொண்ட இலைகளில் பல வண்ண மலர்கள், முற்றிலும் மாறான இரு வேறு நிறங்கள் கொண்ட மலர்கள்.
இதில் ஒரு மணி நேரம் சுற்றி விட்டு இரண்டாவது பசுங்குடிலான மேகக்காடு சென்ற போது அது முற்றிலும் வேறு விதமான உலகமாயிருந்தது. அதே போன்ற நான்கைந்து தள உயரம் கொண்ட கண்ணாடிக் கூரைக்குக் கீழே மழைமாறாக் காடொன்றை உருவாக்கியிருக்கிறார்கள்.
மத்தியில் உயர்ந்து நிற்கும் மலை போன்ற அமைப்பை மழைக்காட்டுத் தாவரங்களும் கொடிகளும் முற்றிலும் மூடியிருக்கின்றன.
கடல்மட்டத்திலிருந்து 1000மீ முதல் 3500மீ வரை உயரம் கொண்ட மழைக்காட்டின் பசுமைச் சூழலை உருவாக்கியிருக்கிறார்கள். நாம் உள்ளே நுழையும் இடத்தில் அந்த மையக்கட்டுமானத்தின் மேல்தளத்தில் இருந்து செங்குத்தாக கீழே குதிக்கும் அருவி, அதிலிருந்து சிதறிப் பரவும் நீர்த்திவலைகளால் அக்கூடம் நனைந்திருக்கிறது.
ஓயாத மழையால் நீர் நீர் என ஒவ்வொன்றும் ஒலிக்கும் காடொன்றுக்குள் புகுந்து விட்டதான மயக்கு. அந்த மையக் கட்டிடத்தைச் சுற்றிச் சுழன்று ஏறிச் சென்று மூன்று தளங்கள் படியிலும் மின்தூக்கியிலுமாக ஏறிச் சென்றால் அருவி பொழியும் இடத்துக்கு அருகில் நின்று அந்த மழைக் காட்டை ரசிக்கலாம்.
அங்கிருந்து விரிந்து செல்லும் உலோகக் கரங்களில் உயரத்தில் நடந்தவண்ணம் இதன் பேருருவை உள்வாங்கலாம். சர்க்கஸ் கூடாரத்தில் அந்தரத்தில் கயிறு கட்டி நடப்பது போல முதல் முறை இந்த உலோக நாகங்களில் நடப்பது ஒரு சிறு பதற்றத்தைத் தருகிறது. அந்தக் கட்டுமானத்தின் உயரமும் விஸ்தீரணமும் அங்கு நடக்கும் போதுதான் முழுமையாய் புலனாகிறது.
இவற்றைப் பார்த்த பிறகு அங்குள்ள சிறப்பு உலோக மரங்களைக் காணலாம், மலாய் தோட்டம், சீனத் தோட்டம், ஜப்பானியத் தோட்டம், இந்தியத் தோட்டம், பனைகளின் உலகம், தாவரங்களின் உலகம் போன்ற ஏதொவொரு பூங்காவில் அந்தந்த தோட்டங்களில் வளரும் மரங்களைக் குறித்து அறியலாம். தாவரவியல் ஆர்வலர்களுக்கு ஒரு நாள் முழுவதும் செலவிடக் கூடிய அளவு தோட்டங்களும் தாவரங்களுமாக பசுமை நிறைந்த பகுதி.
வான் நோக்கி மலர்ந்த சூப்பர் ட்ரீஸ் (Super trees) எனப்படும் உலோக மரங்கள், சூரியனை நோக்கி சிரிக்கும் சூரியகாந்தி போல இவை வானகாந்திகள். விண் அருள்வதை ஏந்திக் கொள்ளக் காத்திருக்கும் பதினெட்டுக் குவளை மலர்கள் .
அவற்றை இணைத்துக் கொடி போல சுருளவிழும் இணைப்புப் பாலம். அதில் நடந்தபடி இந்த பரந்து விரிந்த பூங்காவையும் அருகில் நிற்கும் சிங்கையின் விண் தொடும் கட்டிட வரிசைக்குப் பின் மறையும் அந்தி வெயிலையும் பார்க்கும்போதுதான் நாம் ஒரு பரபரப்பான நகருள்தான் இன்னும் இருக்கிறோம் என்பது நினைவுக்கு வருகிறது.
சிறிதும் பெரிதுமாக நிற்கும் இந்த செயற்கை மரங்களில் இருநூறுக்கும் மேற்பட்ட வகையான தாவரங்கள், கொடிகள் வளர்க்கப்படுகின்றன. இவற்றில் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட பசுஞ்செடிகள் படர்ந்திருப்பதாக கணக்கு.
இரவில் இந்த மரங்கள் வண்ண ஒளி நிறைந்து மாயாலோகம் போலாகிவிடுகிறது.
இதன் சூழலியல் மேம்பாட்டு முயற்சிகளும் எரிபொருள் சிக்கனத்திற்காக கையாளும் உத்திகளும் குறிப்பிடத்தக்கவை. இத்தோட்டத்தில் உதிரும் இலைகளையும், சிங்கப்பூரின் மற்ற பூங்காக்களில் உதிரும் சருகுகள் மற்றும் உலர் கழிவுகளையும் கொண்டு இயங்கும் சிறிய அனல் மின் நிலையம் ஒன்றும் இங்கிருக்கிறது. இதில் உற்பத்தி ஆகும் மின்சக்தி ஓரளவு பசுங்குடிலின் குளிரூட்டும் மின்தேவைகளுக்குப் பயன்படுகிறது. இதில் வெளியேறும் சாம்பல் இத்தோட்டங்களுக்கு உரமாகப் பயனாகிறது. நிலத்துக்கு அடியில் ஓடும் குளிர்ந்த நீரோடும் குழாய்கள் மூலம் இரு பசுமைக் குடில்களும் மேலும் எரிபொருள் சிக்கனத்தோடு குளுமையாக வைக்கப்படுகின்றன. இந்த சூப்பர் மரங்கள் கட்டுமானத்தில் சூரியத் தகடுகளும் மழை நீர் சேகரிப்புக் கலன்களும் பொருத்தப்பட்டிருக்கின்றன. இதில் இருப்பதிலேயே உயர்ந்த மரத்தின் மேலே ஒரு உணவகம் இருக்கிறது.
இதையெல்லாம் விட தனிப்பட்ட முறையில் இது எனக்கு மனதில் பசுமை நிறைத்த தலம். சிங்கையில் வாழ்ந்த நாட்களின் நினைவுகளில் மிக முக்கியமான வரம் போன்ற தருணம் ஆசிரியர் ஜெயமோகன் அவர்களை நேரில் சந்தித்தது. 2016ல் சிங்கையில் நிகழ்ந்த காவிய முகாமுக்குப் பிறகு மாலையில் இரு தினங்களும் இந்தியாவில் இருந்து வந்த நண்பர்கள் சிங்கை சுற்றிப் பார்க்கக் கிளம்பவே நானும் இணைந்து கொண்டேன். பார்த்த முதல் நாளே அணுக்கமாகி விட்ட பல நண்பர்கள். அருமையான மாலைப் பொழுது. அந்த மாலையில் அனைவரோடும் இந்தக் கடலோரத் தோட்டங்களுக்கு சென்றோம். அதற்கு முன்னும் பின்னும் பலமுறை போயிருந்தாலும் அந்த மாலை மிக அழகானதும் மனதுக்கு மிக அணுக்கமானதும் ஆகும்.
தாவரக்கூட்டங்களிடையே நடந்தபடி, நாளை ஒரு வேளை மானுடன் தனது புவி வீட்டின் தாவரங்களை எடுத்துக் கொண்டு சென்று விண்வெளியில் விதைத்துப் பாதுகாக்க வேண்டுமென்றால், இது போல ஒரு உயிர் வளியை சமநிலையில் பேணிக்கொள்ளும் தற்சார்பு கொண்ட பசுங்குடில் அமைக்க வேண்டியிருக்கும் என்றால், அதற்கான முன்மாதிரி இந்த மாபெரும் கனவுலகம் என்பதெல்லாம் பேசியபடி நடந்த ஆசானைப் பின்தொடர்ந்து கொண்டே புதிய கண்களோடு இவற்றைப் பார்க்க நேர்ந்தது. அதுவரையிலான கண்ணோட்டத்தில் சிங்கையில் கடற்கரை முதல் காடு வரை அனைத்துமே செயற்கையாய் உருவாக்கப்பட்டிருப்பதை ஒரு குறையெனக் கண்டுகொண்டிருந்த எனக்கு அது ஒரு பெரிய திறப்பாக அமைந்தது.
அன்று வியப்பில் சிறகு விரித்த அஞ்சிறைத் தும்பி இன்றும் கொங்குதேர் வாழ்வில் கண்ணால் கண்டதை மொழிந்து கொண்டிருக்கிறது.
முந்தைய பதிவு:
சிங்கை குறிப்புகள் - 22 - தேயும் கோப்பியும் தேயாத நினைவுகளும்
வேலை நாட்களில் பின்மதிய தேநீர் இடைவேளை அலுவலக நண்பர்கள் அனைவரும் எதிர்பார்க்கும் ஒன்று. ஒரு தேநீரோடு அன்றைய அழுத்தங்கள் அனைத்தையும் நகைச்சுவையில் தோய்த்து சோப்புக்குமிழ்கள் ஆக ஊதி பறக்க விட்டு மீண்டும் அடுத்த கூடுகைகளுக்கு விரையும் நேரம். அரிதாக தேநீர் பருகியபடி சிறு நடையும் பூங்காவைச் சுற்றி நடந்துவிட்டு மீள்வதுண்டு. ஓரிரு நாட்கள் போகாவிட்டால் அந்தக் கடையில் உள்ள பிலிப்பினோ பெண்ணும் எங்கே ஆளைக் காணோமே எனக் கேட்டுத் தெரிந்து கொள்வாள். இப்போது ஒரு வருடத்துக்கு மேலாகிறது. இதுபோன்ற பல சிறு உணவங்காடிக் கடைகள் மூடப்பட்டுவிட்டன. தேநீர் இடைவேளையின் நட்பு உரையாடல்கள் இல்லாமற் போனது இந்த ஒரு வருடத்து வீடுறை நாட்களின் இழப்புகளில் ஒன்று.
தேநீர் நேரம் ஸ்டார்பக்ஸ் போன்ற பளபளப்பான காபிக் கடைகளை விட உணவு அங்காடி வளாகங்களில் உள்ள சிறு தேநீர்க் கடைகளில்தான் கூட்டம் குழுமும். அதுதவிர நாம் முன்னர் பார்த்த கில்லினே கோப்பிட்டியம்(Killiney Kopitiam), யா குன் காயா டோஸ்ட்(Ya Kun Kaya Toast) மற்றும் டோஸ்ட்பாக்ஸ்(Toastbox) போன்ற உள்ளூர் கடைகளிலும் தேநீர் வேளையில் கூட்டம் அதிகமிருக்கும். இது போன்ற கடைகளில் கிடைக்கும் உள்ளூர் கோப்பியின் சுவை சற்று வித்தியாசமானது, தேநீரின் நிறமும் மணமும் அலாதியானது. இவற்றில் கில்லினே கோப்பிட்டியமும் யாகுன் காயாவும் ஹைனானியர்களால் துவங்கப்பட்டவை. கோப்பிட்டியம் என்பது கிழக்காசிய நாடுகளில் காபிக் கடையைக் குறிக்கும் சொல்.
சிங்கை வந்த புதிதில் மில்லேனியா வாக் உணவங்காடி தேநீர்க்கடை சென்று ஒரு கப் காபி என்றேன். நெஸ்கபே கலக்கிக் கொடுத்தார்.அதுவும் நன்றாக இருந்தாலும் மற்ற சிலருக்கு நல்ல காபி டிகாஷன் கலந்து கொடுக்கப்பட்டதை கவனித்தேன். அடுத்தநாள் அது போன்ற காபி வேண்டும் எனக் கேட்கலாம் என எண்ணிக் கொண்டு திரும்பிவிட்டேன். மறுநாள் மாலை காபிக் கடை வரிசையில் எனக்கு முன்னால் நிற்பவர்கள் என்ன கேட்கிறார்கள் எனப் பார்த்து அதன்படி கேட்கலாம் என எண்ணி நின்றுகொண்டிருந்தேன். எனக்கு முன்னால் நான்கு ஆண்கள் நின்று கொண்டிருந்தனர். முதலாமவர் இரண்டு தேசி என்றார். அவருக்கு நல்ல மணம் நிறைந்த தேநீர் கொடுக்கப்பட்டது. இரண்டாமவர் கோபிஓ என்றார். அவருக்கு கடுங்காபி தரப்பட்டது. எனக்கு முன்னால் நிற்பவர் நான் அருந்தும் படியான காபி வாங்க வேண்டுமே என வேண்டிக் கொண்டிருந்தேன். அவர் வெகு வேகமாக கோபிசி கொசாங் என்றார். வேறு ஏதோ வார்த்தை சொல்லி விட்டாரோ என மெனுவை எட்டிப் பார்த்தால் kopi-c-kosong என ஒரு பெயர் இருந்தது. அவருக்கு நாம் சாதாரணமாக அருந்துவது போன்ற காபி தரப் படவே நானும் வெகு வேகமாக கோபிசி கொசாங் என்றேன். காபி கைக்கு வந்தது. நல்லதாகப் போயிற்று, இன்று ஒன்று கற்றுக் கொண்டோம் என ஒரு வாகான இருக்கையில் ஐன்னல் ஓரம் வெயில் படும்படி அமர்ந்து கொண்டு காபியை சுவைத்தால் அதில் இனிப்பே இல்லை. சர்க்கரை போட மறந்துவிட்டார் போலும் என அவரிடமே சென்று 'அங்கிள், சர்க்கரை சேர்க்க மறந்துவிட்டீர்கள்' என்றேன். நீ கொசாங் தானே கேட்டாய் என்றபிறகுதான் அது சர்க்கரையில்லாத காபி எனப் புரிந்தது.
எனவே சிங்கையில் தேநீர், காபி குடிக்க விரும்புவர்கள் முதலில் கற்றுக்கொள்ள வேண்டிய சொற்கள் இவை - கோப்பி(Kopi) & தே(Teh). இவற்றோடு இணையும் மந்திரச் சொற்களில்தான் நமது கைமேல் வரும் பலன் இருக்கிறது.
இப்படி, வாய்க்கு ருசியாய் ஒரு காபி குடிக்க பன்மொழிப் புலமை அவசியம். அதிலும் பல பந்துகளை அம்மானை ஆடுவது போல எல்லா மொழியையும் கலந்து 'தே ஓ கொசாங் பெங்' ( சர்க்கரை சேர்க்காத, பால் சேர்க்காத ஐஸ் தேநீர்) என்றெல்லாம் வாங்குவார்கள். எனது தாத்தாவின் குழந்தைப் பருவத்தில் அவர்கள் சகோதரர்கள் அனைவரும் அவர்களது அம்மாவிடம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாய் பால் வேண்டுமெனக் கேட்பார்களாம். நுரையில்லாமல் சூடான பால், ஆடைபடியாமல் ஆறிய பால், நுரையோடு ஆறிய பால், நுரையில்லாமல் ஆடையோடு பால், இப்படிப் பட்டியல் நீளுமாம். இதற்கெல்லாம் மலேய/ஹோக்கிய மொழியில் என்னவெனக் கேட்க வேண்டும்.
தேநீரில் மேற்சொன்ன வகைகள் தவிர தே தாரிக்(Teh Tarik - நன்கு நீளமாக இழுத்து நுரைக்கக் கலந்தது, நம்ம ஊர் டீ மாஸ்டர்கள் செய்வதுதான்!!) மற்றும் தே ஹாலியா (இஞ்சி சேர்த்த) ஆகிய வகைகளும் உண்டு.
இந்த காபி, தேநீர் தயாரிக்கும் முறைகளைப் பார்ப்பது சுவாரசியமாக இருக்கும். தேநீர் பெரும்பாலும் தடித்த கண்ணாடியால் ஆன குவளைகளிலோ அல்லது வெண்பீங்கான் குவளைகளிலோ தரப்படும். கொதிக்கும் நீரை குவளையைச் சுற்றிலும் வழியும்படி ஊற்றி குவளைகளை சூடாக்குவார்கள். அதில் நமது தேவைக்கு ஏற்ப முன்னமே வடிகட்டி வைத்திருக்கும் கோப்பி அல்லது தே நீரை விட்டு சிறிது ஆவியாக்கப்பட்ட பால், சர்க்கரை போன்றவற்றைக் கலந்து மேலும் சிறிது கொதிநீர் மேலோடு விட்டு பரிமாறுவார்கள். எவ்வளவு சிறிய கடையாக இருந்தாலும் இங்கு தேநீர் நன்றாக இருப்பதை கவனித்திருக்கிறேன்.
இதனோடு, சிறுதட்டில் தளும்பி நலுங்கும் அரைவேக்காடு வெந்த இரு முட்டைகளில் சோயா சாஸ் கலந்து, காயா என்னும தேங்காய்ப் பாலும் முட்டையின் வெள்ளைக் கருவும் சேர்த்து செய்த ஒரு ஜாம் போன்ற கலவை தடவிய ரொட்டி இரண்டும் சேர்த்து கிடைக்கும். இதுவே பெரும்பாலானவர்களின் காலை உணவு.
1800களில் பல நாடுகளின் மக்கள் வந்து குழுமும் இடமாக சிங்கப்பூர் உருவாகி வந்தது. அதனோடு சேர்ந்து கோப்பியின் கலவையான சுவையும் உருவாகி வந்திருக்கிறது. 1920களில் கோப்பிட்டியங்களில் சூதாட்டமும் நிறைய நடந்திருக்கிறது. பிறகு சூதாட்டம் முறைமைப்படுத்தப் பட்ட பிறகு கோப்பிட்டியங்களில் அது நடப்பதில்லை.
சைனாடவுன் பகுதியில் இருக்கும் நான்யாங் பாரம்பரிய காபிக் கடை இதுபோன்ற உள்ளூர் கோப்பி/தே வகைகளுக்கு பெயர் பெற்றது. இங்கு உள்ளூர் முறையில் கோப்பி தயாரிக்கப்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் காபி டிகாஷன் நம்மூர் ஃபில்டர் காபி போல இருப்பதில்லை. இது வேறு சுவை. இதற்கெனத் தேர்ந்தெடுக்கப்படும் காப்பிக் கொட்டையில் பல வகைகள் இருக்கின்றன. அதன் வகையையும் அதை வறுப்பதில் உள்ள சூட்சுமங்களையும் சேர்க்கப்படும் பொருட்களையும், பெரும்பாலான உள்ளூர்க் கடைகள் தங்கள் வணிக ரகசியமாக வைத்திருக்கிறார்கள். என்றாலும் பொதுவாக அறியப்பட்ட செய்முறை என்பது, காப்பிக் கொட்டை மிக சூடான பாத்திரத்தில் வெண்ணை, மார்கரின் எனப்படும் செயற்கைக் கொழுப்பு, மற்றும் சர்க்கரை சேர்த்து வறுக்கப்படுகிறது. இதில் விலை மலிவான கடைகளில் சோளம், எள் போன்றவையும் சேர்க்கப்படுவதுண்டு என்கிறார்கள். இது அரைக்கப்பட்டு, பின்னர் கடைகளுக்கு வருகிறது. காப்பி வடிகட்டப் பயன்படும் காலுறை போன்ற நீண்ட துணி வடிகட்டி 'சாக்'(sock) என்றே சொல்லப்படுகிறது. காபித்தூளை இதில் போட்டு ஒரு வாய் குறுகிய நீண்ட கழுத்து கொண்ட பாத்திரத்துள் வடிகட்டப் படுகிறது. மிக நீண்ட குழாய் போன்ற மூக்கு வழியாக குவளைகளில் கோப்பியின் வகைக்கேற்ப இந்த டிகாஷன் பால் அல்லது சுடுநீர் அல்லது ஐஸோடு கலக்கப்படும்.
இந்த கோப்பி/தே-யை இங்கு எடுத்து செல்வதற்கு (Takeaway) சிறு பிளாஸ்டிக் பையில் விட்டுக் கொடுப்பார்கள். அதுவும் முதலில் சற்று வியப்பாகவே இருந்தது.
ஒவ்வொரு வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளுக்கு அருகிலும் நடைதொலைவில் உள்ள உணவங்காடியில் கோப்பிட்டியம் நிச்சயம் இருக்கும். சிங்கையில் 2000 காப்பிக் கடைகள் இருப்பதாக சொல்கிறார்கள்.
அதில் நாள் முழுவதும் கூட்டம் இருப்பதைப் பார்க்கலாம். இங்கு உள்ளூர்வாசிகள் பெரும்பாலும் உணவங்காடிக் கடைகளிலேயே(Hawker Center) உணவருந்தும் வழக்கம் கொண்டவர்கள். 1960-கள் வரை கம்போங் வீடுகளும் சிறிய தேநீர் கடைகளும் உணவு விடுதிகளுமாக இருந்த சிங்கையின் முகம் 1970-களில் புதிய வீட்டுவசதி வாரியக் குடியிருப்புகளும் அதை ஒட்டி அமைக்கப்பட்ட உணவு அங்காடிகளுமாக மாறிப் போனது. ஒவ்வொரு உணவு அங்காடியிலும் ஓரிரண்டு சீன உணவுக் கடைகள், ஓரிரண்டு மலாய் உணவுக் கடைகள், ஒரு தேநீர், கோப்பி, மைலோ விற்கும் கடை, ஒரு ப்ராட்டா கடை, இந்தியர்கள் அதிகமிருக்கும் குடியிருப்புப் பகுதிகளில் தோசை(Thosai என்றே இங்கு எழுதப்பட்டிருக்கும், அப்படித்தான் உச்சரிக்கிறார்கள்), வடை, சப்பாத்தி போன்றவை விற்கும் ஒரு தமிழ் முஸ்லிம் கடையையும் நிச்சயம் பார்க்க முடியும்.
நான் இருக்கும் குடியிருப்புப் பகுதியில் வயதானோர் எண்ணிக்கை மிக அதிகம். எழுபது எண்பது வயதைத் தாண்டியோர். அநேகமானோர் தனியாக வாழ்பவர்கள். பிள்ளைகள் வேறெங்கேனும் அவர்களது குடும்பத்தோடு இருந்து கொண்டு வார இறுதிநாட்களிலோ, மாதம் ஒரு முறையோ வந்து செல்வார்கள்.
எனவே காலை முதலே இந்தக் கடைகளில் தாத்தாக்களும் பாட்டிகளும் கூடுவார்கள். சற்று வசதி உடையவர்களை அவர்களைப் பார்த்துக் கொள்ளும் பணிப்பெண்கள் சக்கர நாற்காலிகளில் அமர்த்தி அழைத்துக் கொண்டு வருவார்கள். உரத்த குரலில் விவாதங்கள் செய்வார்கள்.மாலையில் செஸ் போன்ற விளையாட்டுகள் எல்லாம் உண்டு. அதே நேரம் இது போன்ற பல உணவங்காடிகளில் உணவு மேஜைகளைத் துடைப்பது, தட்டுகளைத் துலக்குவது போன்ற வேலைகளிலும் பல முதியவர்கள் இருப்பதைக் காண முடியும்.
மேலும் வயதானவர்களிடையே இங்கு அல்சைமர் எனும் மறதி நோய் மற்றும் பார்கின்சன்ஸ் எனும் நடுக்கு நோய் பாதித்தவர்கள் சற்று அதிகம் கண்ணில் படுகிறார்கள். மறதி நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சேவை வழங்கும் வகையில் ஒரு கோப்பிக்கடை பிஷான் பகுதியில் திறக்கப்பட்டிருக்கிறது. கிம் சாங் லெங் (Kim Sang Leng)கோப்பிட்டியம் என்ற அக்கடையில் உள்ள மேசைகளில் அங்கு விற்கப்படும் உணவுகளின் படங்களும் பெயர்களும் அச்சிடப்பட்டுள்ளன.
மறதி நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாணயங்களை எளிதில் அடையாளம் காண முடியாது என்பதால் நாணயங்களின் வடிவங்களும் உணவு மேசை களில் அச்சிடப்பட்டுள்ளன. இந்தப் படங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவது மட்டுமன்றி நமக்கு அக்குறைபாடு உள்ளவர்களை நினைவூட்டி, அவர்களுக்கு உரிய சேவையை வழங்கவும் உதவிபுரியும் என்கிறார் அந்தக் கடை உரிமையாளர்.
முன்னர் நான் வழக்கமாக தேசி அருந்தும் இடத்தில் மேஜை சுத்தம் செய்யும் தாத்தாவுக்கு நான்கு மகள்கள், இரண்டு மகன்கள். அதை பலமுறை சொல்லியிருக்கிறார், வாய் திறந்த புன்னகையோடு. அதற்கு மேல் பேசுவதற்கான பொதுவான மொழித்திறன் எங்கள் இருவருக்கும் இல்லை. ஒரு முறை எனக்கு அவர் கொண்டு வந்த தேநீர் கோப்பை கீழே விழுந்து உடைந்துவிட்டது. அதற்குரிய பணத்தை அவருக்குக் கிடைக்கும் மிகக் குறைந்த சம்பளத்திலேயே பிடிப்பார்கள். எனவே என் கைபட்டு உடைந்ததாகச் சொல்லி பணத்தைக் கட்டிவிட்டேன். அன்றுமுதல் இதைச் சொல்கிறார். எனக்குச் சீனமொழியும் அவருக்கு ஆங்கிலமும் தெரியாவிட்டால் என்ன.
காபி டேயின் பிரத்யேக வாசகமான 'A lot can happen over coffee' நினைவுக்கு வருகிறது.
அடுத்த பதிவு: சிங்கை குறிப்புகள் - 23 - அஞ்சிறைத் தும்பி
முந்தைய பதிவு: சிங்கை குறிப்புகள் - 21 - நில்லாப் பெருஞ்சகடம்