Saturday, September 26, 2015

சற்குரு - தாத்தா - 16

சற்குரு - தாத்தா - 16

பிஞ்சு விரல் பதித்த கடிதம்கண்டு, அடக்கி வைத்திருந்த நேசம் வெடித்துக் கிளம்ப, 'இன்னைக்கு கப்பல் ஒன்று கிளம்புது சென்னைக்கு, இன்னைக்கே கிளம்புறேன்' என்று தாத்தா செட்டியாரிடம் அனுமதி கேட்க, 'நிலவரம் சரியில்லை.. யுத்தம் ஆரம்பிச்சுடுச்சு. இந்த சூழ்நிலைல கப்பல் போக்குவரத்து பாதுகாப்பானதல்ல' என்று அவர் மறுத்துவிட்டார். துக்கம், கோபம், ஆதங்கம், ஏக்கம் மாற்றி மாற்றி பந்தாட, உணர்ச்சிக் கொந்தளிப்பில் கண்ணுறக்கம் தொலைந்த இரவு. 'செட்டியார் ஒத்துக்கொண்டிருந்தால் இந்நேரம் கப்பல் ஏறியிருக்கலாம், இந்நேரம் தாய்மண் நோக்கி பயணம் தொடங்கியிருக்கலாம். பத்துநாட்களில் பெற்ற இளம் மகவு முகம் பார்த்திருக்கலாம். " - அனைத்தையும் கெடுத்து விட்ட முதலாளி மேல் அளவு கடந்த கோபம். உடன் பணிபுரிந்த தோழர்கள் சமாதானப் படுத்தினார்கள்- 'அடுத்த கப்பல்ல போயிடலாம் அண்ணே, கலங்காதீங்க'  என்று. 'ஆமாம்..இது என்ன வாழ்வு, அடுத்த கப்பலில் ஏறிவிட வேண்டும், யார் தடுத்தாலும் சரி..' புயலில் கடையுண்ட கடலாய் மனது. அழுதழுது கண்களில் சிவப்பேற விடிந்தது காலை.

மதிய வேளையில் வந்ததோர் சேதி. தாத்தா பயணம் செய்வதாயிருந்த கப்பல் மீது நடுக்கடலில் குண்டுவீச்சு. கப்பல் மூழ்கி பயணம் செய்த அனைவரும் மரணம். செய்தி கேட்டு வெகுநேரம் உடலும் உள்ளமும் நடுங்கிக் கொண்டிருந்தது. வெற்று செய்தியாய் காதில் விழுந்துகொண்டிருந்த யுத்தம், அண்டை வீட்டான் போல் அருகில் வந்துவிட்டது என்பதை உணர்ந்தனர் அனைவரும். தெரிந்தவர்கள் சிலரும் பயணப்பட்டிருந்தனர் அந்தக் கப்பலில். அந்த துக்கமும், தான் உயிர் பிழைத்து இன்னும் இருப்பதன் சத்தியமும் நெஞ்சம் உணர, பயணத்தைத் தடுத்தவன் தகப்பனாய்த் தெரிந்தான்.

இடையூறென்பது எப்போதும் கெடுதல் அல்ல - நமக்கு விளங்காத பெரிய ஆடுகளத்தில் நமை பேரிடரிலிருந்து காப்பதற்கும் தடங்கல்கள் நேரிடலாம், என்பதற்கு தாத்தா இதை அடிக்கடி உதாரணமாக சொல்வார்கள்.

அத்தோடு கப்பல் தொடர்பும் நின்று போனது.

முந்தைய பதிவு (15)

அடுத்த பதிவு (17)


Thursday, September 3, 2015

திக் விஜயம்

எமிரேட்ஸ் உபயத்தில் சும்மா கிடைத்தது என்பதால் சுமார் 10000km அதிகமாய் பயணித்து உலகை முக்காற் பிரதட்சணம் செய்திருக்கிறேன் SFO எனும் San Franciscoவுக்கு.

சந்திரபாபு ஒரு பாட்டில் "இலங்கை நகரத்திலே இன்பவல்லி நீயிருந்தால்
இந்துமகா சமுத்திரத்தை
இங்கிருந்தே தாண்டிடுவேன்" என்று நாற்காலியிலிருந்து ஒரே தாண்டு தாண்டுவார். அதுபோல சிங்கப்பூரிலிருந்து நேரே ஜப்பான் தொட்டுத் தாண்டவேண்டிய பசிபிக் மகாசமுத்திரம் - அக்கரையில் அக்கறையான தம்பிவீடு. உலகை பிரதட்சணம் பண்ணி 36மணி நேரம் தாண்டி SFO வீடு தொட தலை கிறுகிறுத்தது நேரம்காலம் புரியாமல். முக்கால் சுற்றுக்கே சுற்றுதே தலை- உலகையே முழுதாய் சுற்றிவிட்டு வீட்டுக்கு வந்தால், பழத்தை அண்ணனுக்கு கொடுத்த குடும்பத்தார் மீது மயிலோனுக்கு வந்த கோபம் நன்கு புரிகிறது. 

நேற்றைய என்னுடைய ஒரு மதியப்பொழுது சிங்கப்பூர்/இந்தியாவின் ஒரு முழு நாளும், அமெரிக்காவின் ஒரு முழு இரவும் ஆகும்.  பூகோளம்(Geography) மீட்டிக் கொண்டே பூலோகம் முக்காற்பங்கு கடக்க
பிரம்மனின் ஒரு பகல் ஆயிரம் யுகம்
என்பது புரிவது போல இருந்தது.
பூமியின் சுழற்சிக்கு எதிர்திக்கில் பயணிக்க நேரம் உறைந்து போய்விட்டது போலும். இந்த செப்டம்பர் 2ஆம் தேதி 36 மணி நேரங்களால் ஆனது; 20+ மணி நேரமாய் பகல், அதிலும் துபாயிலிருந்து விமானம் கடந்த பாதை நெடுகிலும் உள்ளூர் நேரம் மதியம் 11.30 - 12.30மணியளவிலேயே ஏறக்குறைய 8 மணிநேரமிருந்தது. பின்னர் சட்டைக்கு மார்பு அளவெடுப்பது போல அமெரிக்காவின் அகலமான பகுதியில் கிழக்கிலிருந்து-மேற்கு கடற்கரைக்கு பயணம். வழியெங்கும் மாலை நேரம் ஆறுமணி நேரம்!!
சில ஆயிரம் அடிகள் உயரத்திலேயே நேரக்கணக்கு இவ்விதம் இருக்க, பிரம்மலோகத்தில் கடிகாரம் சற்று தாமதாய்த்தான் சுழலும்..

பூகோள அறிவை நன்கு சோதித்தது விமானம் கடந்த பாதை. துபாயிலிருந்து  இரான்-துருக்கி-கருங்கடல்-பல்கேரியா- ருமேனியா-ஹங்கேரி-போலான்ட்-ஸ்வீடன்-நார்வே-சமுத்திரம்-போஸ்டன். இவை அனைத்துக்கும் தலைநகரம் என்ன - நாணயம் என்ன - ஆயிரம் கேள்விகள்.. விமானமே கவலையின்றி இழுத்துப் போர்த்திக் கொண்டு உறங்க, என்னுள் கேள்விகள்.. கூகுள் கிட்டாத கையறு நிலையில் பல பெயர் தெரியாத மலைகளையும் ஆறுகளையும் கேமராவில் புகைப்படமெடுத்துத் தாகம் தீர்த்துக் கொள்ள வேண்டியிருந்தது. 

துபாயிலிருந்து 3-4 மணிநேரம் பெரும்பாலை நிலம் - பார்த்தால் மட்டுமே புரிகிறது இயற்கையின் இந்த முகம். முடிவே இல்லாத துயர் போன்ற வறண்ட மலைமடிப்புகள்; நம்பிக்கைகளைத் தளரச் செய்யும் நீண்ட இரவு போன்ற மலைத்தொடர்கள். வரலாறு காட்டும் பாலைநில மனிதர்களை புரிந்து கொள்ள இந்த முகத்தின் தரிசனம் அவசியம். இங்கே வாழ்வை வாழ கள்ளியின் வெளிப்புறம் போல் ஒட்டகத்தின் உட்புறம் போல் இயற்கை customize செய்த வரங்கள் தேவை. 



'வால்காவிலிருந்து கங்கை வரை' சொல்லும் ஆதி மனிதன் உலவியதாய் கருதப்படும் டைக்ரிஸ் சற்று தெற்கே வரைபடத்தில். நம் அனைவருக்கும் ஏதோ ஒரு ஜீனில் வாழும் பாட்டன் பாட்டி வாழ்ந்திருக்கக் கூடும் இப்பகுதிகளில்..

இரான் துருக்கி எல்லையில் ஊர்மியா என்றொரு அழகிய ஏரி. இறைவன் ஓவிய ரூபன் - என்னென்ன வண்ணங்கள் குழைத்து தீட்டுகிறான். பின்னர் துருக்கியில் நுழைந்து  வான் என்றொரு மாபெரும் ஏரி - இது பாலை நெற்றியில் நீல வண்ணத் திலகம் போலிருந்தது. மேலும் வடமேற்காய் பறந்து கருங்கடலின் தென்கரையோரம் பறந்து சற்றே கருங்கடல் மீது பறந்து பல்கேரியாவுள் நுழைந்தது. பின்னர்தான்  ருமேனியா-ஹங்கேரி-போலாண்ட்-ஸ்வீடன்-நார்வே-சமுத்திரம்-போஸ்டன். 


இந்தக் கருங்கடல் நீல வண்ணக்கடல், என்னே ஒரு ஏமாற்றம்.


திரையில் ஓடிய வரைபடத்தின் ஊர்களும் என்றோ பயின்ற geographyயும் சற்றே கைகொடுத்தது. நாடுகளின் அரசியல் கோடுகள் மேலிருந்து நோக்கத் தெரிவதில்லை. அனுமானம்தானே எல்லைகள் அனைத்தும்.

SFO இறங்கி தம்பியின் முகம் பார்தத்ததும், உறங்காமல் வரவேற்கக் காத்திருக்க முயன்று உறங்கிய மருமகனையும், அத்தனை வேலைப்பளுவையும் புன்னகையோடு செய்யும் விஜியையும் பார்த்ததும் மறந்தது பயணத்தின் களைப்பு.