பச்சை என்ற வர்ணத்தின் பேதங்கள் எத்தனை எனக் கேட்டால் பெண் என்பதாலும், வண்ணங்களை ஓரளவு ஓவியத்தில் கையாளுபவள் என்பதாலும் பத்து முதல் பதினைந்து வகைகளை என்னால் தோராயமாக சொல்லி இருக்க முடியும். ஆனால் நியூஸிலாந்துக்கு 2019ஆம் ஆண்டில் சென்று வந்த பின்னர், இந்த பச்சை என்னும் வர்ணத்தையே மஞ்சள், நீலம், வெண்மை, கருமை என வித விதமான சேர்க்கைகளில் கலந்து தூரிகையில் தோய்த்து வரைந்திட்ட ஒரு நிலத்தைக் கண்கூடாகக் கண்டபின்னர், பசுமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வண்ணங்கள் உண்டு என அறிந்துகொள்ள நேர்ந்தது. இது உயர்வு நவிழ்ச்சி எல்லாம் இல்லவே இல்லை. உண்மை என அந்த நிலம் சொல்கிறது. நமது ஊரிலும் கேரளம் மற்றும் வடகிழக்கில் பயணம் செய்கையிலும், பாலி மற்றும் இந்தோனேசியாவின் வேறு பகுதிகளிலும் பசுமை விரவிக் கிடக்கிறது என்றாலும் இந்நிலத்தின் பச்சையின் வகைகள் வேறெங்கும் கண்டதில்லை.
உலக வரைபடத்தை பார்த்தால், வண்ணங்களைக் குழைத்து உலகை வரைந்த ஓவியன் இறுதியாக ஓவியத்தின் அடியில் இட்ட கையொப்பம் போல, அல்லது ஓரமாகத் தீட்டிவிட்ட வண்ணக்கீற்று போல, கைதவறி சொட்டிவிட்ட இருசொட்டுகள் போல இருக்கிறது நியூஸிலாந்து. அதன் மேலும், கீழும், வலப்புறமும் முடிவிலி வரை நீளும் நீர் வெளிக்கு நடுவே மிக ஏகாந்தமாக இருந்த அந்தத் துளி நிலம் மனதை உடனே கவர்ந்து கொண்டது.
நியூஸிலாந்து செல்லவேண்டும் என்ற எண்ணம் தோன்றிய பிறகுதான் அந்நாட்டைக் குறித்த விரிவான வாசிப்புத் தொடங்கியது. முதலில் மூன்று நண்பர்களின் குடும்பங்கள் இணைந்து செல்வதாக ஒரு திட்டமிருந்தது. இரு மாதங்கள் எடுத்துக் கொண்டு, நியூஸிலாந்தின் அனைத்துப் பகுதிகளையும் பட்டியலிட்டு, ஒவ்வொரு இடமாய் வாசித்து, இணையத்தில் தேடி, அங்கு என்ன சிறப்பு, எந்த வகையான இடம், நாங்கள் செல்ல முடிவெடுத்த ஏப்ரல்-மே மாதங்களில் (குளிர்காலம்) எந்த இடங்கள் செல்லக்கூடியவையாக இருக்கும், என்பதை எல்லாம் சேகரிக்கும் பணி தொடங்கியது. பிறகு உடன் வருபவர்களின் வயது மற்றும் ஆர்வங்களைக் கணக்கில் கொண்டு சில இடங்கள் தெரிவு செய்யப்பட்டன. அவற்றை ஒற்றைப் பயணத்திட்டமாக இணைப்பதன் சாத்தியங்களை யோசித்து மூன்று விதமான பயணத் திட்டங்களை வகுத்தேன். முதல் திட்டத்தில் ஆஸ்திரேலிய 8 நாட்களும், நியூஸிலாந்து 10 நாட்களுமாக இருந்தது. இரண்டாவது திட்டம் - 12 நாட்கள் மட்டும் எடுத்து நியூஸிலாந்தின் தெற்கு தீவு மட்டும் பார்த்து வரும் திட்டம். மூன்றாவது திட்டம் நியூஸிலாந்தின் தெற்கு, வடக்கு இரண்டு தீவுகளையும் சேர்த்து 18 நாட்களில் பார்ப்பதாகத் திட்டம். பிறகு நண்பர்கள் இணைவதில் சில இடர்கள் தோன்றின. முக்கியமாக தேதிகள் ஒரே போல கிடைப்பது, அதுவும் வெவ்வேறு தேசத்தில் இருந்து வருபவர்களுக்கு மிகுந்த சவாலாகப் போனது. மேலும் முழுமையாக நியூஸிலாந்தை பார்ப்பதென ஒரு சாராரும், அவ்வளவு தூரம் போவதால் ஆஸ்திரலேயாவையும் சேர்த்துப் பார்த்துவிடமேண்டுமென ஒரு சாராரும் எண்ணவே திட்டமிடுதல் நீண்டு கொண்டே சென்றது.
18 நாட்கள் பயணத்திட்டம் என்பதால் அத்தனை பேருடைய தேதிகளையும் ஒரே போல முடிவு செய்வதில் உள்ள சிரமங்கள் தலைதூக்கவே, இறுதியாக நானும் கணேஷ்-மாதங்கி மற்றும் பிள்ளைகளும் செல்வதாக முடிவாகியது.
அதன் பிறகு துரிதகதியில் திட்டங்கள் வரையறுத்து முடிவு செய்துகொண்டோம். அவசரம் அவசரமாக அனைத்து இடங்களையும் பார்ப்பதில் ஆர்வம் இல்லை, நீண்ட பயணம் என்பதாலும், இரண்டு பிள்ளைகளுடன் செல்வதாலும், சற்று நிதானமாக ஒவ்வொரு இடத்திலும் தங்கி அவ்விடத்தை சுற்றியுள்ள சில அழகான இடங்களை ரசித்துவிட்டு அடுத்த இடத்துக்கு செல்வது போல ஒரு திட்டம் உறுதியானது.
புனித வெள்ளி மற்றும் மே தினம் என இரண்டு நீள் விடுமுறைகளை இணைக்கவே பத்து தினங்கள் விடுமுறை எடுத்தால் 18 தினங்கள் பயணத்துக்கு கிடைத்தது. பயண ஆயத்தமாக குளிர் ஆடைகள் மற்றும் காலணிகள் மட்டும் வாங்கவேண்டி வந்தது.
2019 ஏப்ரல் 18ஆம் தேதி சிங்கையில் இருந்து ஏர் நியூஸிலாந்து விமானத்தில் கிளம்பினோம். வீட்டில் இருந்து சாங்கி விமான நிலையம் செல்வதே பெரும் கொண்டாட்டமாக இருந்தது. அடுத்த இரண்டு வாரங்களை நினைத்து ஒரே பூரிப்பு. சாங்கி விமான நிலைய சாங்கியங்களை முடித்துக் கொண்டு விமானம் ஓடுதளத்தில் கிளம்பத் தொடங்குகையில்தான் ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது. கணேஷ் தலையில் கையை வைத்துக் கொண்டு கவலையில் ஆழ்ந்தார்.
(தொடரும்)