இன்றைக்கு சரியாய் 74 வருடங்களுக்கு முன்னர் டிசம்பர் 8 நள்ளிரவில், Pearl harbour தாக்குதலுக்கு ஒரு மணி நேரம் முன்னர் மலேயாவின் மேற்கு கரையில் கால்பதித்திருந்தது ஜப்பானியப் படை. மிக சில மணித்துளிகள் போருக்குப் பின் அவ்விடத்தைக் கைப்பற்றியது ஜப்பான். அங்கிருந்த பிரிட்டிஷ் படை, ஜப்பானியப் படையின் உண்மையான நிலையைவிட அதிகம் முன்னேறி விட்டதாய் கிடைத்த தவறான உளவு செய்தியின் அடிப்படையில், தங்கள் Lt. Col. Hendricks என்ற கமாண்டரைக் கொன்றுவிட்டு முழு செயல்பாட்டில் இருந்த விமான தளத்தையும், ஆயுதங்கள், எரிபொருட்கள் அனைத்தையும் விட்டுவிட்டு வெளியேறி இருந்தது. அடுத்த சில தினங்களில் ஆங்கிலேயப் படையின் கவனம் முழுதும் pearl harbour பக்கம் திரும்பியிருக்க 11 டிசம்பர் பினாங்கில் வெள்ளோட்டம் பார்த்தது ஜப்பானியப் படை. விமானப் படை ஜப்பானியரின் பலமாய் இருந்தது. ஜப்பானியரை எதிர்க்கப் போதிய படையும் ஆயுதங்களும் இன்றி, பினாங்கை நிராதராவாய் எதிரிகள் தாக்குதலுக்கு விட்டுவிட்டு பொதுமக்களுக்கு எந்த அறிவிப்புமின்றி வெளியேறியது பிரிட்டிஷ் படை.
உண்மையில் ஆங்கிலேயப் படையினரின் அளவைக் குறைவாய் மதிப்பிட்டிருந்தது ஜப்பானியப் படை. எனில் அதன் ஜெனரல் யமஷிட்டோ பின்னாளில் தெரிவித்தது போல் அந்த அறியாமையே அவர்களது பலமாயிருந்தது அப்போது. அதே போல ஜப்பானியர் படை பலத்தை அதிகமாய் நினைத்த அறியாமையே ஆங்கிலேயரின் பலவீனமாய் இருந்தது.
இவை இன்று சரித்திரமாய் காலவரிசைப்படுத்தி படிக்க முடிகிறது. அன்று சரித்திரம் நிகழ்ந்து கொண்டிருந்த போது எத்தகவலும் தெரியாமல், கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டாற் போன்ற நிலைதான்.
மீண்டும் பினாங் நெடுஞ்சாலைக்கு வருவோம்:
என்ன நிகழ்கிறது என விளங்காது எதிர் வரும் படைகளைப் பார்த்து திகைத்த வண்ணம் இருவரும் விரைந்து கொண்டிருந்தனர். ஜப்பானியர் படை ஊடுருவி விட்டதோ எனப் பார்த்தால், எதிரே சென்றது அனைத்தும் union jack கொடி சுமந்த வெள்ளையர் படை. 'என்ன நடக்கிறது இங்கே!!
எங்கே செல்கிறது இப்படை!!' வியப்பு, பயம், ஆர்வம் மேலிட நம்மவர்களின் நான்கு விழிகள்.
'யார் இந்த இரு இளைஞர்கள்? சாவை எதிர்நோக்கி பினாங் நோக்கி ஆர்வமாய் விரையும் இவர்கள் யார்? நம் படை செல்வதைக் கண்டும் ஒற்றையாய் தனித்து செல்பவர்கள்!!' அதே வியப்பு பல நூறு கண்களில் படையினர் தரப்பில்..
ஆபத்தின் வாடை கலந்திருந்தது காற்றில்.
வழியில் ஒரு நதியைக் கடக்க வேண்டும். இந்த ஆற்றைக் கடந்துதான் கோலாலம்பூர் இருந்த மலேயாவின் தெற்குப் பகுதியிலிருந்து பினாங் மாகாணம் நுழைய முடியும். சில மைல் தொலைவுகளில் ஆறு இடங்களில் பாலங்கள் இருந்தன. இவற்றில் ஏதேனும் ஒன்றில் கடக்க வேண்டும் பினாங் சென்றடைய. அவற்றில் ஒன்றை நோக்கி விரைந்து கொண்டிருந்தது கார்.
அப்பாலங்களைக் கடந்து கோலாலம்பூர் நோக்கி பிரிட்டிஷ் படை முழுவதும் கடந்ததும், ஜப்பானியர் படை பின்தொடர்வதைத் தடுப்பதற்கும் காலதாமதப் படுததுவதற்கும் ஆறு பாலங்களையும் வெடிகுண்டு போட்டு தகர்க்க முடிவு செய்து கடந்து கொண்டிருந்தது பிரிட்டிஷ் படை.
கடைசிப் படைவாகனமும் கடந்து முடிக்கவும் தாத்தாவின் கார் பாலத்தில் நுழையவும் மிகச் சரியாக இருந்தது. நிமிடங்களின் பிடியில் ஊசலாடிக் கொண்டிருந்தது உயிர் - இதை அறியாமல் பாலத்தில் நுழைந்தது கார்.
முந்தைய பதிவு (18)
அடுத்த பதிவு (20)
No comments:
Post a Comment