1945: பேரிடி - பேரிடர் காக்க வந்த பெருந்தலைவர் நேதாஜியின் அகால முடிவு அனைவரையும் நிலைகுலையச் செய்தது. சிலகாலம் யாரும் அந்தச் செய்தியை நம்பவில்லை. ஆனால் 'இன்று வரை நேதாஜி உயிரோடிருக்கிறார்' என்ற கருத்தில் தாத்தாவுக்கு என்றும் உடன்பாடில்லை. 'இக்கட்டுகளைக் கடந்து செல்ல அன்று சிலகாலம் அவர் அஞ்ஞாதவாசம் இருந்திருக்கலாம், நெடுங்காலம் மறைந்திருக்க அந்த சூரியனால் இயலாது, உயிரோடு இருந்திருந்தால் என்றோ ஒரு நாள் வந்திருப்பார்' என்பதே தாத்தாவின் நம்பிக்கை.
எல்லையில் கைப்பற்றப்பட்ட இந்திய தேசிய ராணுவம் போர்க் குற்றவாளிகள் எனக் குற்றம் சாட்டப்பட்டு தில்லி செங்கோட்டையில் நிகழ்ந்த வழக்கும், அதன் தீவிரமும், நாடெங்கும் பரவிவிட்ட ஆதரவும், இந்தியர்களால் ஆன ராணுவத்திலும் காவல்துறையிலும பெரும் பகுதி இந்திய தேசிய ராணுவத்தின் உணர்ச்சிகரமான போர்முழக்கங்களால் கிளர்ச்சியடைந்திருப்பதும் ஆட்சியாளர்களுக்குத் தெளிவாயிற்று. இனிமேலும் கிளர்ந்த கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதும், இந்தியர்களைக் கொண்டே இந்தியர்களை ஒடுக்குவது இயலாதென்பதும் ஆங்கிலேயருக்குப் புரிய, சுதந்திரம் வழங்கும் முடிவு தீவிரமடைந்தது.
ஜப்பானியப் படை சரணடைந்ததும் மெல்ல மெல்லத் தகவல் தொடர்புகள் நிறுவப் பட்டன. அப்போது மலேயா போன்ற கிழக்காசிய நாடுகளில் ஒரு வானொலித் தகவல் ஒளிபரப்பு சேவை தொடங்கப்பட்டிருந்தது. உலகமகாயுத்தத்தில் பிழைத்து உயிரோடு இருப்பவர்கள், தங்கள் பெயரையும் ஊரையும் தெரிவித்து, இந்த ஊரைச் சேர்ந்த இன்னாருக்கென தாங்கள் உயிரோடிருக்கும் தகவல் தெரிவிக்கலாம். அப்போதெல்லாம் எல்லா வீடுகளிலும் ரேடியோப் பெட்டிகள் இல்லாத காலம். இருப்பினும் மேகத்தையும் காற்றையும் தூது விட்ட மனித இதயம் எவ்வண்ணமேனும் நேச நெஞ்சங்களுக்கு செய்தி சொல்லத் துடிப்பது இயல்பல்லவா.
அம்மை நகரில் தந்தை பெயருக்கும் பசளையில் தனது மாமாவுக்கும் தாத்தா சொன்ன செய்தி வானொலியில் காற்றோடு வந்தது. இப்படி ஒரு தகவல் சேவை இருப்பதும் தெரியாது, அதைக் கேட்கவும் இல்லை இரு வீடுகளும்.உறவினர் ஒருவர் கேட்டுவிட்டு வந்து தகவல் சொன்னார். செய்திகேட்டு ஆனந்தக் கண்ணீருடன் உயிர்த்தெழுந்தனர் உற்றாரும் பெற்றோரும்.
அதன் பின்னரும் கப்பல் தொடர்பு சரிசெய்ய பலமாதங்களாயிற்று. தாத்தா தனது செட்டியார் நிறுவனப் பொறுப்பை மற்றொருவரிடம் ஒப்படைத்துக் கிளம்ப மாற்று ஆள் வருவதற்கும் தாமதமாயிற்று. எனினும் கருக்கிருட்டு கடந்து வரும் முதல் கீற்றுப்போல் கடிதத் தொடர்பு தொடங்கியது. அஞ்சல் பெட்டி சேர்ந்து அதுகாறும் அந்தரத்தில் தொங்கிய சில கடிதங்கள் இரு தரப்பிலும் காலம்தாழ்ந்து கைக்குக் கிட்டின.
நாட்டைக்காக்க நேதாஜியின் படை முகப்பில் தந்தை நின்றிருந்த செய்தி, ஐந்து வயது நிரம்பிய தனயனுக்கு சொல்லப்பட்டது. புகைப்படமாக மட்டுமே அறிமுகமாயிருந்த தந்தைக்கு 'ஜெய்ஹிந்த்' என ராணுவ வணக்கம் செய்வது மகனின் வழக்கமாயிற்று.
வண்ணங்கள் இழந்த மலேய வனவாசத்தில் வந்தது வசந்தம் - தந்தையிடமிருந்தும் தலைமகனாம் சிறுமகவிடம் இருந்தும் கடிதம் - என்னே ஒரு பரவசம். வழி மேல் விழி வைத்துக் கடிதம் வரும் வழி காத்திருந்தோருக்கே அதன் அருமை புரியும். அதுவும் இப்படி ஒரு வரிசுமந்து - "On seeing your photo, Velan poured kisses on it"

ஐந்து வயது மகன் சிவசுந்தரவேலன் எழுதிய முதல் கடிதம்
No comments:
Post a Comment