மாலை வானைப் பரபரப்பின்றி பார்க்கக்கிடைத்த இந்நாள் இனியது.
மயங்குதலும் மயக்குதலுமாய் அந்தி வானம்.
மிகக்குறைந்த இடைவெளியில் ஸ்வரஸ்தானங்கள் கொண்ட விவாதி ராகம் போல, வெளிர் நீலம் முதல் கருநீலம் வரை பரவி முழுமுதல் நீலமாய் வசீகரித்தது மாலைக் கருக்கல். கீழே ஆயிரம் விளக்குகளால் மின்ன முயன்ற நகரத்தைப் பார்த்து, முழுநிலவென்னும் ஒற்றை விளக்கேற்றி நகைத்தது இயற்கை.
கனவுகளை முன்னோக்கியும் நினைவுகளைப் பின்னோக்கியும் நகர்த்த வல்ல மாயவிளக்கு. நகரத்தின் பரபரப்பை
ஏளனம் செய்வது போல ஏகாந்தமாய் பெருவெளியில் ஊர்ந்து செல்லும் வெள்ளித்தேர்.
இன்னும் சிறிது உற்றுப் பார்க்க கண் சிமிட்டும் ஓராயிரம் புள்ளிகள்.
ஒவ்வொன்றாய் புள்ளி வைத்தாற் போல ஒன்றுமில்லாத இடங்களிலும்
புதிது புதிதாய் முளைத்தது.
கவிந்திருக்கும் வான் என்னும் ஒற்றைப் பெருவிழி.-
விழி
கூட அல்ல.
பெருவிழியின் கருவிழி.
புவியைக் கண்ணருகே வைத்துப் பார்த்திருக்கும் பொற்கொல்லன். ஒரு விழியால்
உலகளக்கும் கொல்லன்.
உலகென்னும் சிறுதூசைக் கொல்லாத கொல்லன்.
தூசியின் துச்சம்
புவியின் அளவு.
பொன்னில்லை எனக் கண்டதும் அவன் மூச்சுக்காற்றே போதும் புறம்தள்ள. புறம்தள்ளிடப் போக்கிடம் ஏது. ஒப்பற்ற எண்ணங்கள், அளவற்ற கவலைகள், ஈடற்ற சாதனைகள் எனத் தலைவீங்கும் இக்கடுகை பொறுத்திருக்கும் தாய்விழி. விழியால் அடைகாக்கும் மீன்விழி. மீள மீள நோக்கும் மீள் விழி. இதில் இயற்கையின் சத்தியம் அன்றி சாத்தியம் ஏது.
This comment has been removed by a blog administrator.
ReplyDelete