Saturday, January 2, 2021

நில்லா உலகு



புவியில் இரவு (Night on Earth) என்னும் நெட்ப்ளிக்ஸ் ஆவணப்படத் தொடர் ஒன்றை பார்த்துக் கொண்டிருந்தேன்.  இதுவரையில் பதிவு செய்யச் சாத்தியமில்லாதிருந்த இரவுநேர உலகை, ஆழ்கடலின், அடர்கானகத்தின், உறைபனியின், நகர்வாழ்வின் இரவுலாவிகளை மற்றும் பல்வகையான இரவுலகின் காட்சிகளை அதிநவீன புகைப்படக்கருவிகளின் உதவிகொண்டு படம்பிடித்திருக்கிறார்கள். ஒவ்வொரு பகுதியுமே இதுவரை அறிந்திராத அரிய காட்சிகளை, தகவல்களை, அற்புதங்களைப் பதிவு செய்கிறது. 


இதில் நேற்று பார்த்த பகுதி, நகர்ப்புறங்களில் வாழும் உயிரினங்களைப் பற்றியது. மனிதர்கள் இப்புவியை ஒலியாலும் ஒளியாலும் நிரப்பி வைத்திருப்பது குறித்தும் அது ஏனைய உயிரினங்களை பாதிக்கும் விதங்களைக் குறித்தும் பேசியது . உலகெங்கும் நிகழும் புத்தாண்டு வானவேடிக்கையின் காணொளிகளை இணையத்தில் அப்போதுதான் பார்த்திருந்துவிட்டு இதைப் பார்த்தேன். அமெரிக்காவின் மான்ஹாட்டன் பகுதியில் நடைபெறும் சுதந்திர தின வானவேடிக்கை நிகழ்வுகள் கடல்வாழ் ஆமையின் வாழ்வை எவ்விதம் பாதிக்கிறது என்ற மறுபுறத்தை இதில் காண நேர்ந்தது. 



தாய்லாந்தின் உறக்கம் தொலைத்த குரங்குகளும், மும்பையில் நகருள் உலவித் திரியும் சிறுத்தையும், தென்னாப்பிரிக்காவில் தனது மூதாதையின் வழித்தடங்களில் தனது குடும்பத்தையே வழிநடத்தி அழைத்து வரும் மதங்கத்தலைவி இடையில் புதிதாய் முளைத்துவிட்ட நகரத்தைப் பார்த்து திகைப்பதும், நகரவாழ்வெனும் சந்தடியுள் நாம் விலங்குகளையும் எப்படி மாற்றியமைத்துக் கொண்டிருக்கிறோம் எனச் சொன்னது.

24*7 எனப்படும் இருபத்துநான்கு மணிநேரமும் ஏழு நாட்களும் நில்லாமல் ஓடும் நிலையை அடையவே மானுடம் பெருமுயற்சி செய்து வருகிறது. நிலையாமை குறித்து சொல்லப்பட்ட 'நில்லா உலகு' இன்று தடையற்ற ஓட்டம் (Always On) என்ற மந்திரத்தை இடையறாது உச்சரிக்கிறது.

இன்று காலை கேட்ட ஒரு சம்பந்தர் தேவாரப்பதிகம் இப்பகுதியை மீண்டும் நினைவில் எழுப்பியது:

புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி அறிவு அழிந்திட்டு ஐம் மேலுந்தி
அலமந்த போதாக அஞ்சேல் என்று அருள் செய்வான் அமரும் கோயில்
வலம் வந்த மடவார்கள் நடமாட முழவதிர மழை என்று அஞ்சி
சிலமந்தி அலமந்து மரமேறி முகில் பார்க்கும் திருவையாறே


பாடலின் பொருள்: ஐம்புலன்களும் கலங்கி அறிவழிந்து நிலை தடுமாறிப் பதறும் காலத்தில் அஞ்சேல் என அருள்பவன் அமர்ந்திருக்கும் கோவில் ஐயாறு. அதைச் சுற்றி வலம் வரும் நடன மங்கையர் ஆட, முழவு எனும் தாளக்கருவி அதிர, அதை மழையின் வரவு அறிவிக்கும் இடியென்று அஞ்சி குரங்குகள் பதறி மரமேறி முகிலைப் பார்க்கும் திருவையாறு! என்ன ஒரு காட்சி! முழவொலியை இடி என்று அஞ்சி மரமேறுகின்றன குரங்குகள். ஆயிரம் வருடங்களுக்கு முந்தைய ஒலி இடியோடு ஒப்பிடும் அளவில் இருந்திருக்கக்கூடும். இன்று நாம் எட்டுத் திக்கும் சிதறிப் பரப்பும் ஒலியையும் ஒளியையும் எதனோடு இணைத்துப் புரிந்து கொள்வது என்றறியாமல் திகைக்கிறதோ உயிர்க்குலம் எனத் தோன்றியது. ஆனால் அன்று முதல் விலங்குகளும் மனிதர்களின் போக்குகள் அனைத்துக்கும் தகவமைத்துக் கொண்டும் வருகின்றன. இயற்கையின் மாறுபாடுகள் மனிதனையும் தகவைமத்துக் கொள்ள வைத்துக் கொண்டுமிருக்கிறது.



அதே இணையத் தொடரில் சிங்கையின் நீர்நாய்கள் (Otters) குறித்தும், சிங்கை எவ்வண்ணம் விலங்குகளின் வாழ்வியலுக்கு உகந்த நகரமாக மாற்றம் கொண்டு வருகிறது என்றும் காட்டப்பட்டது. இந்த கோவிட் காலகட்டத்தில் அவ்வப்போது நீர்நாய்கள் சிங்கையின் சாலைகளில் கண்ணில்பட்டுக் கொண்டுமிருந்தன. மனித நடமாட்டமும் போக்குவரத்தும் சற்று மட்டுப்பட்டதன் விளைவான சிறு முன்னேற்றம். நீர்நாய் எனில் இது சாத்தியம், மும்பை போல சிறுத்தை உலவினால் என்ன செய்வதெனத் தெரியவில்லை.

அதிவேகமாக ஓடிக் கொண்டிருக்கும் மனிதனை 'நீயும் எனது ஒரு பகுதி'தான் எனக்கூறும் இயற்கையின் மொழி காதில் விழ ஆங்காங்கே நிதானமாக நின்று இளைப்பாற வேண்டி இருக்கிறது. சும்மா இருப்பதெப்படி என்பதைக்கூட இணையத்தில் தேடும் இப்புத்தியை நிறுத்துவதெக்காலம்!

3 comments:

  1. பிரமாதம் சுபா. இன்னிக்கே பார்க்கறேன்.Netflix ஐ தேவாரத்தோடு இணைச்சு சொல்லிட்டீங்களே. சிறப்பான கவலையூட்டும் பதிவு

    ReplyDelete
  2. A good article to read and reflect.

    ReplyDelete
  3. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சாதலை புரிந்து...நடந்தால் விமோசனம்...புரிய வைக்க இயற்கை முயற்சி செய்து கொண்டேயிருக்கிறது

    ReplyDelete