Thursday, February 25, 2021

சிங்கை குறிப்புகள் - 17 - நெய்தல் சாட்சி

சாங்கி தேவதை முனையில் நின்று கொண்டிருந்தேன். சுற்றிலும் சிறு நெய்தல் வனம் சூழ்ந்திருந்தது. குறுகிய அந்நடைவழி சென்று திறந்து கொண்ட இடம் இன்னும் பிரிட்டிஷ் காலகட்டத்திலேயே இருந்தது. யாருமே இல்லாத சாலைகளில் தனித்து நின்ற வீடுகள்; தனிமையை யாரும் தொட்டுவிடாதிருக்க  காவல் அமர்த்தப்பட்ட வீடுகள். பறவைகளின் ஒலியும் காற்றின் முணுமுணுப்பும் அன்றி அதுவரை காதில் கேட்டு வந்த கடலோசை கூட இங்கே இல்லை. மனிதர்கள் இல்லாத இடத்தில் காலம் உறைந்து போய்விடுகிறது. எந்த வீட்டுக்குள் இருந்தும் இப்போது சர் ஸ்டாம்போர்ட் ராஃபிள்ஸ் வெளியே வந்தால் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. 



நான் சில பாரம்பரிய மரங்களைத் தேடியே இங்கும் வந்திருந்தேன். எனவே அவற்றைத் தேடத் துவங்கினேன். கடற்கரையோரமாக நான் நடந்து வந்த அதே தொலைவை மீண்டும் எதிர்திசையில் சாலை வழியே நடந்து கடந்தால் அனைத்து மரங்களையும் கண்டு விடலாம் எனத் திட்டம். இப்பகுதி விரிந்த தோட்டங்களுக்கு நடுவில் ஒளிந்திருக்கும் கடலோரக் குடில்களும், ஒவ்வொரு குடிலில் இருந்தும் தனித்த துளிக் கடற்கரையும் கொண்டது. அரசாங்க அதிகாரிகளுக்கான இக்குடில்களும் பங்காளாக்களும் மட்டுமே அதிகம் இச்சாலையில் இருப்பதால் ஆளொழிந்தே காணப்படுகிறது. 




முதல் பாரம்பரிய மரம், நான் பலகைப்பாதையில் இருந்து வெளியேறியதுமே இடப்புறம் சென்ற ஒரு தனியார் மாளிகையின் வெளியே நின்றது. அதன் செல்வழியே காவலிடப்பட்டு தடுக்கப்பட்டிருந்தது. எனவே அதைக் காண இயலவில்லை. இரண்டாகப் பிரிந்த சாலையில் எப்புறம் பிரிவதெனப் பார்த்துக்கொண்டு நின்றேன்.



1927-ல் இதே இடத்தில் நின்று கொண்டு வெப் கில்மன்(Webb Gillman) இந்த சாங்கி பகுதியை நில அளவை செய்திருக்கிறார்.  இவரது பெயராலே கில்மன் பாராக்ஸ்(Gillman Barracks) என்ற இடமும் சிங்கப்பூரில் இருக்கிறது. அப்போது பெருமளவு சேறும் சதுப்பு நிலக்காடுகளுமாய் இருந்த இப்பகுதியை சிங்கையோடு இணைத்தது ஒரு சீரமைக்கப்படாத சாலை. அப்போது இங்கிருந்த கிராமப்புற காவல் நிலையத்துக்கு அவ்வழி இட்டுச் சென்றது. அன்று இங்கே அவர் கண்ணில் பட்டிருக்கக்கூடியவை நீர்த்தென்னை ஓலை வேய்ந்த ஒரு சில வீடுகளும், கோவில் குன்றின் மேல் நின்ற ஒரு சீனக் கோவிலும், பொதுப்பணித்துறையை சேர்ந்த அரசாங்க அலுவலகம் ஒன்றும், யூத செல்வந்தர் ஆகிய மேயரின் (Sir Manasseh Meyer) ஆடம்பர மாளிகையும் ஆக இருந்திருக்கும். 





கில்மனின் பார்வை தொட்ட இடங்களையெல்லாம் காடுகள் வெட்டி, சேறு அகற்றி செம்மைப்படுத்த இந்திய மற்றும் சீன கூலித் தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டார்கள். சதுப்பு நிலத்தின் வண்டுகள், பாம்புகள், கொசு, வெப்பம், அவ்வப்போது கொட்டித் தீர்த்து நிலத்தை மேலும் சதுப்பாக்கும் மழை என அனைத்திலும் பாடுபட்டு மூன்றாண்டுகளில் பாதைகளை சீராக்கினார்கள்.  1928-ல் இங்கு சாங்கி ரயில் பாதைக்கான வேலை துவங்கியது. படகுத் துறையும் கட்டப்பட்டு அதன் வழியாக, புலாவ் உபினிலிருந்து பாறைக்கற்கள் வெட்டி எடுத்து வரப்பட்டன. புது சாலை, குவாரி சாலை என்றெல்லாம் இங்கு நடந்த வேலைகளுக்கொண்டு வைக்கப்பட்ட பெயர்கள் பின்னர் நேத்தராவன் சாலை(Netheravon Road),  கிரான்வெல் சாலை (Cranwell Road) என்றெல்லாம் பிரிட்டனில் இருந்த சாலைகளின் பெயர்களைக் கொண்டன. ஜப்பானியரிகளின் பார்வை கிழக்காசியா முழுவதும் படரத் துவங்கியதும் சிங்கையின் ராணுவ பாதுகாப்பு மையமாக, அது தொடர்பான கட்டிடங்களோடு சாங்கியின் முகம் மாறியது. 

இந்த நேத்தராவன் சாலையில்தான் நடக்கத் துவங்கினேன். Shorea gibbosaவைத்தேடி நடந்தேன். தமர் ஹிடம் கஜாஹ் (Damar Hitam Gajah) என்று மலேய மொழியில் சொல்லப்படும் இம்மரம்(Shorea gibbosa) சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா பகுதிகளை சேர்ந்த இயல் மரம். மழைக்காடுகளில் வளரும் இது மிக உயரமாக வளரக்கூடியது. போர்னியோ தீவில் 81மீ (266அடி) உயரம் கொண்ட இதே மரம் இருக்கிறதாம். நான் நடந்து சென்ற சாலையில் அந்த வேளையில் என்னைத் தவிர யாருமில்லை. ஒரு மலைப்பாதை போல சற்றே ஏற்றமாக ஏறிக்கொண்டிருந்தது. ஒரு நீள்வளையம் போல அந்த இடத்தில் சாலை இரண்டாகப் பிரிந்து மீண்டும் சேர்ந்தது. அந்த இடத்தில்தான் எங்கோ நிற்கிறது அம்மரம் என வரைபடம் சொன்னது. பத்துப் பதினைந்து நிமிடம் அவ்விடத்தையே சுற்றி வந்த பிறகு, திடீரென சாலைக்கும், அந்த இடத்துக்கும், கீழே இருந்த வேறெந்த தாவரத்துக்கும் சம்பந்தம் இல்லாது உயர்ந்து நின்ற ஒரு மரம் கண்ணில் பட்டது. நான் நடந்து கொண்டிருந்த சாலையிலேயே ஒரு பேருந்து நிறுத்தத்தை ஒட்டி இருந்தது. அருகில் சென்று தகவற் பலகையில் அம்மரம் குறித்த தகவல்களை வாசித்தேன். 

Shorea gibbosa


Damar Hitam Gajah

இம்மரம் "டிப்டீரோகார்ப் (Dipterocarp)" என்ற சிறு வகைமையைச் சேர்ந்தது. அதன் சிறப்பு என்னவென்றால் இவை மிக நீண்ட பரிணாம வரலாற்றைக் கொண்டது, கண்டங்கள் பிரிந்து விலகுவதற்கு முன்னர் நிலம் ஒன்றாக இருந்த காலகட்டத்தில் இருந்து வருபவை. உதாரணமாக ஆசியக் காடுகளைச் சேர்ந்த   டிப்டீரோகார்ப் மரங்களும் மடகாஸ்கர் தீவில் உள்ள டிப்டீரோகார்ப் மரங்களும் ஒரே வழிவந்தவை என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். சிங்கையில் ஜூரோங் பகுதியில் இருந்த சதுப்புக் காடுகளும் டிப்டீரோகார்ப் வனங்கள் என்றே சொல்லப்படுகின்றன.  அந்த மரத்தை பார்ப்பதன் வழியாக பல லட்சம் ஆண்டுகள் முன்னிருந்த இம்மரத்தின் மூதாதை நின்றிருந்த நிலத்தை அறிந்து கொண்ட ஒரு தருணத்தை உணர்ந்தேன். ஒற்றைப் புள்ளியில் இருந்து வெடித்துச் சிதறி விரிந்து செல்லும் பிரபஞ்சம் என்பதை தூலமாக பார்ப்பது போல தோன்றியது.

ஒரு முறை தகவல் பலகை கண்ணில் பட்டு விட்டதும் அடுத்தடுத்து அவற்றைக் கண்கள் அடையாளம் கண்டன. அங்கேயே ஐம்பது அடிக்குள் சற்று பள்ளத்தில் சென்ற இணை சாலையில் இன்னொரு மரம் இருந்தது. ஒரு பேருருவ யட்சனைப் போல ஆறுகரம் விரித்து நின்றது அணிற்பலா எனப் பெயர்கொண்ட இம்மரம். இதன் பழங்கள் குறும்பலாவைப் போல இருப்பதால் "Squirrels Jack" (Artocarpus kemando - மலேய மொழியில் Pudu )என்ற பெயர்.  Artocarpus எல்லாமே பலா குடும்பத்தைச் சார்ந்தவையாம், ஆனால் இந்த வகை சிங்கையில் சற்று அரிதான மரம்.

Artocarpus kemando

அடுத்ததாக காண வேண்டிய மரம் சாங்கி சிறையில் இருக்க வேண்டிய மரம் என்றே சொல்லலாம். கழுத்தை நெரிக்கும் அத்தி மரம்( Ficus stricta - Strangling fig). அது மற்றொரு மரத்தின் மேற்பகுதியில் முளைக்க ஆரம்பித்து வேர்களைக் கொண்டு முதல் மரத்தின் உடலை முற்றிலும் நெரித்து வளரும். காலப்போக்கில் அந்த ஆதி மரம் உயிர் விடவே நேரும். இதுவும் ஒரு சுற்றுச்சுவருக்கு அப்பால்  இருந்தது. சற்றுத் தொலைவில் இருந்தே இந்தப் அமுக்குவான் பேயை படம் எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டேன். சாங்கி என்றதும் ஆவியின் நினைவு வருவதும் இயல்பானதே. 

Ficus stricta - Strangling fig

அப்பகுதியில் இருந்து வெளியேறுவதற்கு ஒரே ஒரு பேருந்துதான் இருந்தது. பேருந்து நிறுத்தம் நோக்கி நடந்து வரலாற்றில் இருந்து எழுந்து வரவேண்டிய பேருந்துக்காக காத்திருந்தேன். யாருமற்ற சாலையில் ஒரு பேருந்துக்கு காத்திருக்கும் போது கூட, வெயிலில்  ஒற்றறியும் பார்வைகளையும், காற்றில் உளவு கேட்கும் காதுகளையும் உணர்ந்து புலன்கள் சிலிர்த்துக் கொள்கிறது.

நான் நின்ற இடத்துக்கு சற்றுத் தொலைவில் ஒரு மேட்டில் ஒரு ஆங்கிலேய பாணி கட்டிடம் கண்ணில் பட்டது - பழைய சாங்கி மருத்துவமனை. 

பழைய சாங்கி மருத்துவமனை




இக்கட்டிடமும் சாங்கியில் சிந்தப்பட்ட ரத்தத்தின் வாடை கொண்டது, கிச்சேனெர் பாராக்ஸ் (Kitchener Barracks) என்ற ராணுவ கட்டிடமாக முதலில் இருந்தது. 1935-ல் கட்டப்பட்ட இக்கட்டிடம் ராயல் விமானப் படையின் மருத்துவமனையாயிற்று. இங்கும் ஜப்பானியர் ஆட்சி காலத்தில் கொடூரமான தண்டனைகள் நிறைவேற்றப் பட்டதாக சொல்லப்படுகிறது. அதில் இறந்தவர்களின் அலைவுறும் ஆவிகள் இன்றும் அலறல்களாக, நடமாட்டமாக இக்கைவிடப்பட்ட கட்டிடத்தில் இருப்பதாக சொல்கிறார்கள். இக்கட்டிடம் பல தொலைக்காட்சித் தொடர்களில் இடம்பெற்றிருக்கிறது.

முன்னர் தெலாக் குராவ் நடையில் நாம் பார்த்த சூக் சிங் (Sook Ching) படுகொலைகள் நாடெங்கும் நடந்த படுகளங்களில் முதலாவது சாங்கி கடற்கரையிலேதான் நடந்திருக்கிறது. சாங்கி கடற்கரையிலும் 66 சீன ஆண்கள் கெம்பிதாய் படையினரால் கொல்லப்பட்டனர். கயிறுகளால் கட்டப்பட்டு கடலை நோக்கி வரிசையாக நடக்கும் படி செய்து, நீரை நெருங்கியதும் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தியிருக்கிறார்கள். நீரில் விழுந்து தப்பிப் பிழைக்க முயன்றோரும் பயோநெட் கத்திமுனைகளால் குத்தப்பட்டு கடலில் வீழ்த்தப்பட்டனர். எனவே சாங்கி கடற்கரையின் சில பகுதிகளிலும் இன்றும் அமானுஷ்ய நடமாட்டங்களை கண்டதாக பலர் சொல்வதுண்டு.

 1942 பிப்ரவரி ஏழாம் தேதி ஜப்பானியர்கள் புலாவ் உபின் தீவைக் கைப்பற்றினார்கள். ஆனால் சாங்கியை கைப்பற்ற முனையவில்லை. ஆங்கிலேயர்கள் துப்பாக்கிச்சூடு நிகழ்த்தி இக்கரையின் காவலை பலப்படுத்தினார்கள். ஆனால் அது கவனத்தை திசை திருப்பும் உத்தி என்பது வெகு விரைவிலேயே தெரிந்தது. இந்தக் கிழக்குப் பகுதியில் நடமாட்டம் காட்டிக்கொண்டே எதிர்பாராது சிங்கப்பூரின் மேற்குப் புறத்திலிருந்து  ஜப்பானியப் படைகள் தாக்கத் துவங்கின. இங்கிருந்த படைகள் அனைத்தும் ஏற்கனவே எதிரிகளை எதிர்கொள்ளத்தொடங்கிவிட்ட மேற்குப்புறத்துக்கும் நகரமையத்துக்கும் அனுப்பப்பட்டனர். சிங்கப்பூர் ஜப்பானியர்களிடம் சரணடைந்ததும் பிப்ரவரி மாத இறுதியில் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட போர்க்கைதிகள் சாங்கிக்கு கொண்டு வந்து சிறை வைக்கப்பட்டனர்.  மேலும் தாய்லாந்து பர்மாவை இணைக்கும் மரண ரயில் பாதை என இன்றழைக்கப்படும் வேலைக்கு பலரும் அனுப்பி வைக்கப்பட்டனர். திரும்பும் வழியில்லாத ஒற்றை வழி மரணப் பாதையாகவே பலருக்கும் அது அமைந்தது.


 

போர்க்கைதிகளைக் கொண்டே ஒரு விமான ஓடுதளத்தையும் ஜப்பானியர் அமைத்தனர். அப்போது இவர்கள் சாங்கியின் தலைவிதியை எப்போதைக்குமாக மாற்றுவதை அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஒரு வருடத்துக்கு மேல் எடுத்துக்கொண்ட அப்பணியின் நிறைவில் 1944-ல் இங்கிருந்து முதல் முறையாக ஒரு விமானம் வானோக்கி எழுந்தது. மீண்டும் ஆங்கிலேயர் ஆட்சிக்கு சிங்கப்பூர் வந்தபோது இந்த ஓடுதளத்தை மேலும் விரிவாக்கி பயன்படுத்திக்கொண்டனர். அதுவே ராயல் ஏர் போர்ஸ்-ன்(Royal Air Force (RAF) அடித்தளமாயிற்று. சாங்கி விண்ணளக்க தொடங்கியது. 1968-ல் பிரிட்டிஷ் படைகள் சிங்கப்பூரில் இருந்து விலகின. செலெட்டர் விமான தளம் (Seletar Air Base) 1969ல் சிங்கப்பூர் அரசின் வசம் வந்தது. ஆனால் RAF ஆங்கிலேயர் வசமே இருந்தது. 1971-ல் தான் ராயல் ஏர் போர்ஸ் சிங்கப்பூர் ஆயுதப் படையின் கைக்கு வந்தது. 



பேருந்து வந்துவிடவே அதில் ஏறி சாங்கியை விட்டு வெளியேறத் தொடங்கினேன். சாங்கி ராமர் கோவிலில் இருந்து நகர் நோக்கி செல்லும் வழியில் இந்த விமானப் படைத்தளங்களையும், விமானப் படை அலுவலகங்களையும் காண முடியும். நுழைய அனுமதியில்லாத பகுதியில் நுழைந்துவிட்டு, எங்கிருந்தோ மறைந்து நம்மைக் கண்காணிக்கும் பார்வைகள் உடலில் உணரக் கூடிய விதமாகவே இப்பகுதியின் பயணம் எப்போதும் இருந்திருக்கிறது. 

சாங்கியில் விமான நிலையத்தையும் இந்த கடற்கரையையும் தவிர புகழ்பெற்ற மற்றொரு இடம், சாங்கி சிறை.

சாங்கி சிறை

இன்றும் சிங்கையின் குற்றவாளிகள் அடைக்கப்படும்  இச்சிறை 1936-ல் கட்டப்பட்டது. இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பான் சிங்கப்பூரைக் கைப்பற்றிய பின் ஐம்பதாயிரம் போர்க்கைதிகள் இங்கு அடைபட்டிருந்தனர். தற்போது சாங்கி சிறை வளாகத்தில் அமைந்துள்ள சிறை மிகவும் கடுமையான கண்காணிப்பு கொண்டதும், தொழில்நுட்ப ரீதியில் மிகவும் முன்னேறியதும் ஆன ஒன்று என்கிறார்கள். 

கண்காணிப்புப் பணிகளில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் சாங்கி சிறை மிகவும் முன்னணியில் இருக்கிறது. முற்றிலும் தொழில்நுட்பம் சார்ந்த கண்காணிப்பை அதிகரித்து அதற்கான காவல் பணியாளர்களை வேறு  பணிகளுக்கு மாற்றியிருக்கிறார்கள். அதே போல குற்றவாளிகளின் நடவடிக்கைகள், முகமாற்றங்கள், உடல் மொழி போன்றவற்றை தொடர்ந்து கண்காணித்து ஏதேனும் அதீதங்களோ, அல்லது நடத்தை மாறுபாடுகளோ தெரியும் போது எச்சரிக்கை செய்யும் படி 'அவதார்' என்னும் தொழிநுட்பமும் பயன்படுத்தப் படுகிறது. இதன் மூலம் குற்றவாளிகளின் தற்கொலை முயற்சிகள், அல்லது வன்முறை மனநிலை ஆகியவை முன்கூட்டியே கணிக்கப்படுகிறது. 


சாங்கி சிறையில் நீண்ட கால தண்டனை அடைந்தோரும், மரண தண்டனை விதிக்கப்பட்டோரும் கடும் குற்றங்கள் புரிந்தவர்களும் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இதுதவிர  கடைகளில் பொருட்களைத் திருடுவது, பொது இடங்களில் அத்துமீறி நடந்து கொள்வது போன்ற குற்றங்களுக்கும் சிறை  தண்டனை வரை உண்டு என்பதால் சிறை சென்று மீள்வோர் இயல்பான சமூக வாழ்வில் மீண்டு வந்து அமைவதற்கான திட்டங்களும் இங்கே திறமையாக செயல்படுத்தப்படுகிறது. 


2006-ல் நான் குடியிருந்த வீட்டு உரிமையாளரின் மகன் ஏதோ ஒரு காரணத்துக்காக சிறையில் இருந்தார். முதியவரான தந்தை எங்களிடம் வீட்டு வாடகை வசூலித்து விட்டு தனது மகனைப் பார்க்க செல்வதாக சொல்வார். அவர் மகனுக்கு விடுதலைக்கு சில வாரங்களே இருந்த நிலையில் எங்கோ வேலை கிடைத்திருப்பதையும் ஒரு முறை மகிழ்ச்சியாகப் பகிர்ந்துகொண்டார். 

வேலை நிமித்தம் அலுவலகத்தில் தரப்படும் ஆளுமைப் பயிற்சிகளில் ஒரு முறை வந்த பயிற்சியாளர் சாங்கி சிறையில் இளம் குற்றவாளிகளுக்கு வழக்கமாக ஆளுமைத் திறன் பயிற்சிகள் கொடுப்பவர். மிகவும் இளவயதில் சிறை செல்வோரின் மனநிலை, மற்றும் குடும்ப சூழல் காரணமாக புரிந்த குற்றத்தின் பேரில் எந்தக் குற்றவுணர்வும் இன்றி பலரும் இருப்பது போன்ற சில உளவியல் ரீதியான கருத்துகளையும் அவர் பகிர்ந்து கொண்டார். இன்றும் வாரம் இருமுறை நிகழும் பிரம்படி குறித்தும் அவர் கூறிய தகவல்களே சிறையை அஞ்சப் போதுமானதாக இருந்தது. 



 நேற்றைய பார்வையில் மிக அழகாகத் தெரிந்த நீலமும் பசுமையும் நிறைந்த கடற்கரை இன்று வரலாற்றின்  செங்கருமை பூசித்தெரிகின்றன. காட்சி என்பதும் காணும் மனதைப் பொறுத்ததுதானே. அதோ ஒரு காரில் வந்திறங்கி திருமணத்துக்கான வெள்ளை ஆடை பால் போல பொங்கி வழிய நடக்கும் இளம்பெண், அவளோடு இணையாக செல்லும் அந்த இளைஞன்,  திருமணத்துக்கு முந்தைய படப்பிடிப்புக்கென சாங்கி கடற்கரை நோக்கி செல்லும் அந்த ஜோடிக்கு இந்தக் கட்டிடத்தின், இந்த இடத்தின் அதிர்வுகள் வேறுவிதமாக இருக்கலாம்.

The Loyang Rock / Squance Rock / Batu Putih

இந்தக் கடற்கரையோரப் பாறை பது புதி கம்போங் (Batu Putih Kampong) என்ற மலேய கிராமம் இருந்ததன் அடையாளம் என்கிறார்கள். 200 வருடங்களாகவேனும் இந்தப் பாறை தனித்து இருக்கிறது.  அனைத்துக்கும் சாட்சியாக. கடலும் காற்றும் அனுதினம் புதிதெனத் தோன்ற பாறை மட்டும் வரலாறு போலத் தோன்றுகிறது.

References:

https://www.aasingapore.com/articles/changi-a-presentday-perspective-and-its-history/

https://remembersingapore.org/2013/09/20/colonial-changi-history/


முந்தைய பதிவு: சிங்கை குறிப்புகள் - 16 - நெய்தல் நடை

அடுத்த பதிவு: சிங்கை குறிப்புகள் - 18 - சிங்கையின் சிறகுகள்

2 comments:

  1. Very interesting. Thrilling,inquisitive and mesmerizing article

    ReplyDelete
  2. Ending is nice... witness of history!!

    ReplyDelete