Tuesday, October 31, 2023

ஒரு பயணம்

செயல் தீவிரம் மிக்க, சோர்விலாத, நிறைவான, அழகான, மகிழ்ச்சியான ஒரு பயணம்.  

அக்டோபர் 14ஆம்தேதி முதல் 27 தேதி வரை இலங்கையில் யோகப் பயிற்சி வகுப்புகள் என்றதும் சில நாட்களாவது கலந்து கொள்ள வேண்டும் எனத் தோன்றியது.  நவராத்திரி விடுமுறையை ஒட்டி அக்டோபர் 21 அன்றுதான் செல்ல முடிந்தது. முதல் ஒரு வாரத்திலேயே இரண்டு இடங்களில் ’மூன்று நாள் யோக சிபிரங்களும்’, இரண்டு இடங்களில் ’ஒரு நாள் பயிலரங்குகளும்’, ஒரு மஹாம்ருத்யஞ்சய யக்ஞமும் என மிகத் தீவிரமான பயணமாக நடந்து கொண்டிருந்தது இலங்கைப் பயணம். வகுப்புகளில் கலந்து கொண்ட சிலர் தங்கள் நட்பு/உறவு வட்டங்களில் மேலும் சிலருக்கு அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு அவர்களுக்காக மேலும் சில நாட்கள் பயணத்தைத் தொடரச் சொல்லி கோரிக்கைகள். எனவே 30ஆம் தேதி வரை பயணம் நீட்டிக்கப்பட்டது. பயணத்தை நீட்டிப்பதற்கான முன்பதிவு மாற்றங்களை செய்துவிட்டு 21ஆம் தேதி  அன்று காலை கொழும்பு சென்று சேர்ந்தேன்.





அக்டோபர் 21 முதல் 29 வரை நடந்த அனுபவங்களே முதல் வரியில் குறிப்பிட்டது. ஒவ்வொரு நாளும் அதிகாலை நான்கு மணிக்கு தொடங்கி இரவு பத்து-பதினொரு மணி வரை செயல்களால் நிரம்பிய ஒன்பது தினங்கள். 

வழக்கமான பயணத்தில் இருந்து எவ்வகையில் இது வேறொரு அனுபவமாக இருந்தது என்பதையே தொகுத்துக் கொள்ள முயல்கிறேன்.

ஒரு பயணம் என்றதுமே மனதில் எழும் எதிர்பார்ப்புகள், அந்த இடம் தொடர்பான தகவல்களை வாசிப்பது, எங்கெங்கு செல்லலாம் எனத் திட்டமிடுவது என சில நாட்கள் கழியும். இந்த முறை அவை ஏதும் நிகழவில்லை. யோகப் பயிற்சிகள் சார்ந்த பயணம் என்பதாலும் மற்றொருவர் இட்டிருக்கும் திட்டத்தில் கலந்து கொள்ளவே செல்கிறேன் என்ற பிரக்ஞையாலும் எந்தத் திட்டமிடலும் இல்லாது பயணம் தொடங்கியது.


இருப்பினும் மனப்பழக்கம் அவ்வளவு எளிதில் விலகுவதில்லை. செல்வதற்கு இரு தினங்கள் முன்னர் சிவானந்தர் மேற்கொண்ட இலங்கைப் பயணம் குறித்து இணையத்தில் ஏதேனும் தகவல்கள் இருக்கிறதா என்ற தேடல் துவங்கியது.  ஸ்வாமி சிவானந்தர் 1950 செப்டம்பர் முதல் நவம்பர் வரை இந்தியா முழுக்கப் பயணம் மேற்கொண்டிருக்கிறார். ரிஷிகேஷ் தொடங்கி, தில்லி, லக்னோ, ஃபைஸாபாத், பனாரஸ், பட்னா, கயா, ஹாசிப்பூர், கல்கத்தா, ராஜ்முந்த்ரி, கோவூர், விஜயவாடா, மெட்ராஸ், விழுப்புரம், சிதம்பரம், மாயவரம், திருச்சி, புதுக்கோட்டை, செட்டிநாடு, மதுரை, ராமேஸ்வரம், தனுஷ்கோடி, மன்னார், கொழும்பு, திருநெல்வேலி, நாகர்கோயில், கன்னியாகுமரி, திருவனந்தபுரம், பெங்களூர், மைசூர், ஹைதராபாத், பூனே, பாம்பே, அமல்ஸாத், பரோடா, அஹமதாபாத் சென்று ரிஷிகேஷ் திரும்பியிருக்கிறார். இந்த அனைத்து இடங்களிலும் உரை நிகழ்த்தியிருக்கிறார். அவை மொத்தமும் “இமயம் முதல் இலங்கை வரை (சுவாமி சிவானந்தரின் யாத்திரைச் சொற்பொழிவுகள்)”  SIVANANDA’S LECTURES: ALL-INDIA AND CEYLON TOUR IN 1950"   என்னும் தற்போது பதிப்பில் இல்லாத புத்தகத்தில் இருக்கிறது என்றறிந்து மேலும் மேலும் இணையத்தைத் தேடி புத்தகத்தின் மின்வடிவும் கிடைத்தது. 


இந்த அனைத்து இடங்களுக்கும்  ஸ்வாமி வெங்கடேசானந்தா என்பவர் உடன் பயணம் செய்து அங்கு ஆற்றிய உரைகள் அனைத்தையும் பதிவு செய்திருக்கிறார். அதில் கொழும்பின் விவேகானந்த சபை நூலகத்தில் சிவானந்தர் ஆற்றிய உரை குறித்தும், இலங்கை வானொலியில் அவர் ஆற்றிய உரை குறித்தும் வாசித்தேன். 





அதே கொழும்பு விவேகானந்த நிலையத்தில் நான் சென்று சேர்ந்த மறுதினம் குருஜி சௌந்தர் உரையாற்றுவதைக் காணக் கிடைத்ததை தற்செயல் என்று எவ்விதம் கொள்வது. 22ஆம் தேதி மாலை விவேகானந்த சபை நிர்வாகிகள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள், மாணவர்கள் நிறைந்த சபையில் யோக மரபு குறித்து ஆசிரியரின் உரையும் சில யோகப் பயிற்சிகளும் நடைபெற்றது. வாணி பூஜை என்ற பெயரில் அனைத்து கல்வி நிலையங்களிலும் நவராத்திரி விழா நடந்து கொண்டிருந்தது. அங்குள்ள நூலகத்தில்தான் சிவானந்தர் உரையாற்றியிருக்கிறார்.  காந்தி,  இந்திரா காந்தி, சரோஜினி நாயுடு, ராஜாஜி எனப் பலரும் வந்து சென்ற நூலகம். ம.ரா. ஜம்புநாதன் அவர்கள் மொழிபெயர்த்த யஜுர்வேதம், மெட்ஸ் ருடால்ஃப் எழுதிய 'A hundres years of British Philosophy', G அவினாஷ் பாண்ட்யா எழுதிய 'The Art of Kathakali' எனப் பல பழைய அரிய புத்தகங்கள் அங்கு இருந்தன. 






22ஆம் தேதி காலை இலங்கையின் வீரகேசரி இதழில் அதற்கு முந்தைய வாரம் நிகழ்ந்த யோக வகுப்புகள் குறித்த கட்டுரையும் வெளியாகியிருந்தது. அந்த ஒரு வாரத்திலேயே 150க்கும் மேற்பட்டவர்களை சத்யானந்தரும சிவானந்தரும் குருநித்யாவும் சென்றடைந்திருந்தார்கள். இந்த குருமார்களின் பெயர்கள் ஒலிக்காத ஒரு அவையும் இல்லை. 


மேலும் அன்று காலை ஆன்மீக சொற்பொழிவாளரும், இலங்கை கம்பன் கழகத்தை ஏற்படுத்திய முன்னோடியுமான இலங்கை ஜெயராஜ் அவர்களை சந்திக்க நேர்ந்ததும் மிக முக்கியமான நிகழ்வு. பெற்ற புகழ் எவ்விதத்திலும் தன்னைத் தீண்டாத மனிதர். மிகவும் நேரடியாக உரையாடத் தொடங்கினார். சைவ சித்தாந்த சாதகராகவும் விற்பன்னராகவும் இருப்பினும் திறந்த நோக்கோடு யோகம் குறித்தும் சாங்கியத்தை அடிப்படையாகக் கொண்ட யோகம் இறைபக்தியை எவ்விதம் உள்ளடக்குகிறது என்பது குறித்தும் குருஜியிடம் உரையாடினார். 



ஆன்மீகத்தில் இதுதான் அறுதியான வழிமுறை என்று ஏதும் இருக்க இயலாது; இவ்வுலகில் எத்தனை ஆத்மாக்களோ அத்தனை வழிபாட்டு முறைகள் என்ற கருத்தை சொன்னார். வழிபடுபொருள், வழிபாடு, வழிபடுபவன் மூன்றும் ஒன்றாதல் ஞானம் என்ற அவரது வரியை அறிதல்-அறிபடுபொருள்-அறிபவன் மூன்றும் ஒன்றாகும் நிலையே முக்தி என்ற அத்வைத வரியோடு வைத்து உணர முடிந்தது. 'ஒவ்வொருவருக்கும் அவர் கைக்கொள்ளும் தோத்திரமும் அதற்குரிய சாத்திரமும் இருக்க வேணும், அதுதான் எங்களுக்கு சைவமும், சைவ சித்தாந்தமும்' என்றார். ஒவ்வொரு சாதனாவுக்கும் (பயிற்சி முறைக்கும்) பின்னால் இருந்தாக வேண்டிய தத்துவம் குறித்து ஜெ ஆற்றிய குருபூர்ணிமா உரையை எண்ணிக் கொண்டேன். நிர்ஈஸ்வர சாங்கியம் - சஈஸ்வர சாங்கியம் தொடங்கி, இருபா இருபதின் அமைப்பு, அருநந்தி சிவாச்சாரியர் ,ஆன்மீகமாக சரியான பாதையில்தான் இருக்கிறோமா என்று எப்படி அறிவது, சிவானந்த-சத்யானந்த மரபு எனப் பல தளங்களில் ஏறத்தாழ ஒரு மணி நேரம் நீண்டது அவ்வுரையாடல். நாங்கள் அவரை சந்தித்த கொழும்பு கம்பன் கழகத்துக்கு எதிரிலேயே அவர் முயற்சியில் கட்டப்பட்ட ஆலயம் இருந்தது. முப்பெரும் தேவியரின் ஆளுயர சிற்பங்கள் கருவறையில் வீற்றிருக்க நாங்கள் சென்ற போது துர்காஷ்டமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம். சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகியவற்றைக் குறிக்கும் நான்கு தளங்கள் கொண்ட ஆலயம். சரியை தளத்தில் பூசைகள் நிகழும் தேவியர் கருவறை. சுற்றிலும் யோக ஆஞ்சநேயர், தட்சிணாமூர்த்தி என அற்புதமான சிற்பங்கள் வீற்றிருக்கும் கருவறைகள். இரண்டாம் தளமான கிரியையில் அருவ வழிபாட்டுக்கான சிவம். யோகத்துக்கான மூன்றாம் தளத்தில் பல முக்கிய குருமார்களின் உருவப்படங்கள் நிறைந்த தியான மண்டபம்.  விரிவெளி நோக்கித் திறந்திருப்பது ஞானம். ஒளியும் காற்றும் ஊடாட கடலையும் வானையும் சட்டமிட்ட ஒரு சிறு மண்டபம் மட்டும் நான்காம் தளத்தில். நல்லதொரு அனுபவம்.

 

மறுதினம், சச்சிதானந்த மாதா என்ற இலங்கையைச் சேர்ந்த சிவானந்தரின் சிஷ்யைகளில் ஒருவரின் குருமரபில் வந்த வியாசா என்ற யோக ஆசிரியரின் நவீன யோகப் பயிலரங்கில் பிரத்யாஹாரப் பயிற்சிகள் குறித்த இரண்டு மணிநேர உரையும் பயிற்சியும் நடந்தது. 



ஒவ்வொரு அரங்கிலும், வகுப்பிலும், முதலில் உள்ளே வருபவர்களின் உடல்மொழி, முகத்தோற்றம் அனைத்தும் பயிற்சிக்கு பின்னர், தொடரும் கலந்துரையாடலுக்கு பின்னர் வேறொன்றாக உருமாறுவதைக் கண்கூடாகக் காணக் கிடைத்தது. ஆசிரியர் சௌந்தர் ஏற்கனவே நிலவி வரும் யோகம் குறித்த மாயைகளை, மூடநம்பிக்கைகளை, அதன் உள்ளீடற்ற நவீன வடிவை, மலர்ந்த முகத்துடன் உடைத்துப் போட்டுக்கொண்டே வந்தார். 


இப்பயணத்தின் மிகச் சிறந்த அனுபவம் என்பது மலையக கிராமத்துப் பள்ளி ஒன்றில் நிகழ்ந்த யோக வகுப்புகள். இப்பயணத்தை ஏற்பாடு செய்த ரிஷி(ரிஷாந்தன்) என்பவர் பயின்ற பள்ளி அது. அவர் அந்த கிராமத்தில் பிறந்து, கல்வியில் சிறப்பாகத் தேர்ச்சி பெற்றமையால் அரசாங்க உதவித்தொகை பெற்று இலங்கையின் முதன்மையான பொறியியல் கல்லூரி ஒன்றில் பயின்றதன் வாயிலாக வெளியுலக அனுபவம் பெற்று இந்தோனேசியாவில் வெற்றிகரமான பொறியியலாளராக இருப்பவர், இலக்கிய வாசகர். தியான, யோக மரபுகளில் அனுபவம் கொண்டவர். அவரும் அவரது உறவினர்கள் சிலரும் பள்ளி இறுதியாண்டு படிக்கும்(A Level, O Level) மாணவர்கள் 200பேருக்கு ஒரு மணிநேரம் யோகம் குறித்த அறிமுக வகுப்பாக இதனை ஏற்பாடு செய்திருந்தார்கள்.




கொழும்பில் இருந்து நான்கு மணி நேரப் பயணத்தில் நாவலப்பிட்டிய பகுதியில் உள்ள ஒரு சிற்றூர் பள்ளி - வெஸ்ட்ஹோல் வித்யாலயம். மரங்கள் ஊடாக மேகம் இறங்கி நின்ற சாலைகள். சுற்றிலும் தேயிலைத் தோட்டங்கள். மலைகள் தாயினும் பரிந்து மடிகனிந்து நூற்றுக்கணக்கான அருவிகளாக பல இடங்களில் சலசலத்துப் பாய்ந்து கொண்டிருந்தது. வளைந்து நெளிந்தேறும் சாலையில் முன்னால் செல்லும் பேருந்தைத் பின்தொடர்ந்த பயணம். பள்ளி வாசலில் பேருந்து நிற்க ஐம்பது அறுபது பிள்ளைகள் வந்து இறங்கினார்கள். பேருந்தே அப்பள்ளி நிறுத்தத்தோடு காலியாகி விட்டது. இறங்கிய மாணவ மாணவிகள் ஒவ்வொருவரும் பள்ளி வாயிலைத் தொட்டுக் கண்ணில் ஒற்றிக் கொண்டு உள்ளே நுழைந்தனர். 



பெரும்பாலும் தேயிலைத் தோட்ட கூலித் தொழிலாளர்களின் பிள்ளைகள் படிக்கும் பள்ளி. நான்கைந்து தலைமுறைகளாகியும் பெரிய முன்னேற்றம் ஏதுமில்லாத வாழ்க்கைத் தரம். வறுமை, கல்வியின் மீது அக்கறை காட்டக்கூடிய பெற்றோர் இல்லாத சூழலைச் சேர்ந்த குழந்தைகள், பதின்ம வயதுகளில் தடுமாறிவிடக்கூடிய வாழ்க்கைச் சூழல், அதிகபட்சம் வண்டி ஓட்டுனர் ஆவது, கடையில் வேலைக்குப் போவது போன்ற கனவுகளுக்கே அறிமுகம் உள்ள குழந்தைகள் என அங்குள்ள குழந்தைகள் எதிர்கொள்ளும் அறைகூவல்கள் பற்றி ரிஷியின் உறவினர் ஆசிரியை உமா மகேஸ்வரி பின்னர் உரையாடிய போது கூறினார்.   


அப்பிள்ளைகள் அறிந்தோ அறியாமலோ, அவர்களை அச்சூழலிருந்து கையேற்றி விடக்கூடிய கலைமகள் வீற்றிருக்கும் தலம் அப்பள்ளி. அவர்கள் கற்பிக்கப்பட்ட பழக்கத்தால் வணங்கிய வாணி ஒரு கணமிறங்கினாலும் அங்கிருந்து மற்றொரு ரிஷி உருவாகி வரக்கூடிய வாய்ப்பிருக்கிறது. குருஜி சௌந்தர் அம்மாணவர்களோடு ஒரு விளையாட்டில் தொடங்கி இயல்பாகச் சிரிக்கச் செய்து 'கல்பகவிருட்சம்' என்ற தலைப்பில் உரையாற்றினார். பின்னர் நான்கு யோகப் பயிற்சிகள் கொடுக்கப்பட்டன. பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் நம்மூர் மாணவர்களோடு அந்த மாணவர்களின் ஒழுங்கையும், கவனக்குவிப்பையும், தீவிரத்தையும் ஒப்பிடவே முடியாது. அந்த ஒரு மணிநேரமும் மிக ஆழமாக ஒன்றிப் போயிருந்தனர். இது போன்ற இடங்களிலும் விழும் விதைகள் சிறுதுளி நீர் பட உயிர்த்தெழக்கூடியவை. இங்கு மேன்மேலும் இது போன்ற பெருஞ்செயல்கள் நிகழ வேண்டும், நிகழப்போகிறதெனத் தோன்றியது. அப்பள்ளியின் அதிபரும் ஆசிரியைகளும் எந்த ஒரு அதிகார பாவனைகளும் இன்றி மிகுந்த ஆர்வத்தோடு பயிற்சியிலும் பங்கேற்றனர். இதுபோன்று மேலும் பல வகுப்புகள் நடைபெற வேண்டும் என்ற விருப்பத்தையும் தெரிவித்தனர்.


அங்கிருந்து கொழும்பு திரும்பியதும் இலங்கை தேசிய தொலைக்காட்சி ரூபவாஹினியின் தமிழ் அலைவரிசை நேத்ரா டிவியில் மரபார்ந்த யோகம் தொடர்பான ஒரு அறிமுக நேர்காணல் இருந்தது. இன்னும் இரு வாரங்களில் அது ஒளிபரப்பாகும். ஓரிரு தினங்களில் ஏற்பாடான நிகழ்வு அது. வழக்கமாக இரண்டு மூன்று வாரங்கள் முன்னதாகவே அந்நிகழ்வுக்கான விருந்தினர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுவிடுவார்கள், இவ்வளவு குறுகிய நாட்களில் ஏற்பாடானது அதிசயம்தான் என நிகழ்ச்சியின் இயக்குனர் கூறினார். குருவின் கையில் கருவி எனத் தன்னை ஒப்படைத்துக் கொள்ளும் போது பெருநிகழ்வுகள் தன்னைத் தானே நிகழ்த்திக் கொள்வதை அனுபவபூர்வமாக பார்க்க முடிந்தது.



அன்று மதியம் ஒரு அழைப்பு வவுனியாவில் இருந்து ஒரு நண்பர், அருள் என்பவர் அழைத்திருந்தார். எழுத்தாளர் சாருவின் வாசகர். இலங்கையின் முதல் யோகப் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டவர். தான் பெற்ற அனுபவத்தைத் தன் மக்களுக்குக் கொண்டு செல்ல முடியுமா என்ற தவிப்பு கொண்டிருந்தார். பயணத்தில் இரு நாட்களே எஞ்சியிருந்த சூழலில் இது எப்படி சாத்தியம் என மலைப்பாக இருந்தது (எனக்கு). ஒரு நொடியும் தயங்காமல் ’நாளை அங்கு வந்து விடுகிறோம், காலையில் ஏற்பாடு செய்து விடுங்கள்’ என்றார் ஆசிரியர் சௌந்தர். எந்தப் பயண ஏற்பாடுகளும் அதுவரை இல்லை. குழந்தையை மற்றொரு ந்ண்பர் இல்லத்தில் விட்டுவிட்டு குருஜியும் அவர் மனைவியும், நானும் வவுனியாவுக்கு பேருந்தில் பயணமானோம். ஆறு மணிநேரப் பயணம். அதிகாலை மூன்று மணிக்கு வவுனியா. அருகே ஒரு குளங்கள் சூழ்ந்த அழகிய சிற்றூரில் மணிபுரம் மீனாட்சி ஆலயத்தில் எட்டு மணிக்கு யோகப் பயிற்சி வகுப்பு ஏற்பாடு செய்திருந்தனர். பதினைந்து பேர் கலந்து கொண்டனர். சிறப்பான உரையும் வகுப்பும். அதன் பின்னர் நிகழ்ந்த கலந்துரையாடலில் இலக்கிய வாசகர்களும் பயிற்சி மருத்துவர்களுமான மூவர் பேசினர். அவர்களுக்கான சொற்களை அவ்வுரையாடலில் இருந்து அவர்கள் பெற்றுக் கொண்டனர் எனத் தோன்றியது. சிவானந்தரும் ஒரு நவீன மருத்துவராக இருந்ததும், அப்துல் கலாம் சிவானந்தரை சந்தித்த முக்கிய தருணம் குறித்தும் பேச்சு வந்தது. அதன் பின்னர் 'உங்களைப் பற்றி ஜெ தளத்திலும், சாரு தளத்திலும் வாசித்த போது ஒரு மாபெரும் வணிக அமைப்பின் உச்சத்தில் இருப்பீர்கள் என எண்ணினோம். எப்படி இவ்வளவு எளிதாக அணுகக் கூடியவராக, கூப்பிட்ட மாத்திரத்தில் இங்கு வந்து எங்களோடு பேசிக் கொண்டிருக்கிறீர்கள்? நீங்கள் எதிர்பார்த்து வந்திருக்கக்கூடிய அளவு கூட்டமும் இங்கில்லை. உங்களை ஆதாயம் நோக்காது இயங்க வைப்பது எது?" என உளம் பொங்க அந்த இளம் மருத்துவர் குருஜியிடம் கேட்டார். 'வகுப்புக்கு வருபவர் ஒரே ஒருவர்தான் என்றாலும் ஓராயிரம் பேர் என்றாலும் வழங்கப்படுவது ஒன்றாகத்தான் இருக்கும். எனவே ஏமாற்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை' எனத் தொடங்கி ஆத்மார்த்தமான உரையாடல் ஒன்று அங்கு நிகழ்ந்தது.



இந்த பதினைந்து தினங்களில் நவீன யோக அரங்குகளில், மரபார்ந்த பள்ளிகளில், பொது அரங்குகளில், கிராமப்புறப் பள்ளிகளில், சிற்றூர்களில், கோவில்களில், இல்லங்களில், தன்னார்வ நிறுவனங்களில் என ஆறு வயது தொடங்கி அறுபது வயதுக்கு மேற்பட்டவர்கள் வரை, ஆசிரியர்கள், மருத்துவர்கள், மாணவர்கள், யோக சாதகர்கள், யோக ஆசிரியர்கள், தொழில்முனைவோர் எனப் பலதரப்பினரிடையே, தமிழர்கள், சிங்களவர்கள் என்ற பாகுபாடின்றி ஆங்கிலத்திலும் தமிழிலுமாக 350க்கும் மேற்பட்டோரை யோகம் சென்றடைந்திருக்கிறது. பலரும் உள்ளூர ஒரு தொடுகையை, மாற்றத்தை உணர்ந்து குருஜியோடு உரையாடினர். இதில் ஒரு சிலரேனும் வாழ்நாள் சாதகர்கள் ஆகப்போகும் சாத்தியம் கொண்டவர்கள். 



தனிப்பட்ட முறையில், இப்பயணம் தொடங்கிய போது எனக்கு மனதோரத்தில் ஒரு சில தயக்கங்கள் இருந்தன. புதிய மனிதர்களோடு தங்குவது, பயணிப்பது,  பயணத்தில் நான் ஆற்றக்கூடியது என ஏதுமில்லையே, அவர்களுக்கு நான் ஏதேனும் சிரமம் கொடுத்து விடுவேனோ என்பது போன்ற தயக்கங்கள், வழக்கமான மனப்பிசுக்குகள். ஆனால் களத்தில் இறங்கிய பின் 'நான்' எங்கும் எழவேயில்லை. வெறும் சாட்சியென பெருநிகழ்வுகள் அருகே இருந்திருக்கிறேன். மாணவியென ஆசிரியர் காலடியில் அமர்ந்திருக்கிறேன். பயணத்தின் செயல்தீவிரத்துக்கு ஒப்புக் கொடுத்து ஓடியதில் எந்தத் தயக்கங்களும் தலை தூக்கவே இல்லை. எல்லையற்ற நிறைவு ஒன்றை மனம் உணர்கிறது. அது ஏனென்று எண்ணிப் பார்த்ததில் ஒன்று தோன்றியது. பெரும்பாலும் இதுவரை மகிழ்ச்சி என்பது தன்னடையாளம் சார்ந்ததாக, ஆணவநிறைவு சார்ந்ததாக தன்னை முன்னிறுத்தியதாக இருந்திருக்கிறது. அறிவு சார்ந்த செயல்களில் கூட, கற்றலில் கூட நுண்ணியதான ஆணவ நிறைவொன்றை மனம் எதிர்பார்க்கவே செய்கிறது.  தன்னடையாளங்களில்லாத மகிழ்ச்சியை உணர வாய்ப்பும் அனுபவமும் எளிதில் அமைவதில்லை. பயணங்களில், கலையில் கரைந்து போவதை இதுபோன்ற ஒரு ஆனந்த அனுபவமாக இதற்கு முன்னர் சிலமுறை உணர முடிந்திருக்கிறது.  ஆனால் எல்லா அடையாளங்களையும் துறந்த மகிழ்ச்சி இது. இங்கு தொழில்சார்ந்தோ, திறன் சார்ந்தோ, எந்த அடையாளங்களும் இல்லை. பெருஞ்செயல் ஒன்றில் கரைந்து போய் தன்முனைப்பு ஏதுமின்றி மகிழ்ந்திருந்த நாட்கள் இவை. எனவே உடல், ஆற்றல், மனம், உள்ளுணர்வு என அனைத்து தளங்களிலும் ஆனந்தத்தை தொட்ட பயணம்.  ஒன்றரை வருட யோகப் பயணம் இந்தப் பயணத்தை சாத்தியமாக்கியிருக்கிறது. 

இது தவிர இப்பயணம்  ரிஷி-மிராண்டி, குணா - பிரேமினி, உமா, பிரசான், அருள் போன்ற தன்னல எதிர்பார்ப்புகள் இல்லாத இணை மனங்களை, சில வாழ்நாள் நட்புகளை பெற்றுத் தந்திருக்கிறது.  இவர்கள் அனைவரும் இந்த நாட்களில் ஆத்மார்த்தமான ஈடுபாட்டுடன் பெரும் உழைப்பை செலுத்தியிருக்கிறார்கள். சிரமங்களையும் அசௌகரியங்களையும் பொருட்படுத்தாது முகமலர்ச்சியோடு அனைத்துக் காரியங்களிலும் உடன் நின்றிருக்கிறார்கள். எல்லையற்ற மகிழ்ச்சியை அளித்திருக்கிறார்கள், அடைந்திருக்கிறார்கள்.

எல்லையற்றதொன்றை அனுபவமாக அளித்துக் கொண்டே இருக்கும் ஆசிரியர் சௌந்தருக்கு நன்றி! 


1950களில் சிவானந்தர் தொடங்கிய பயணம். அன்று அவர் சொற்களை விதைத்துச் சென்ற நிலம். அன்று அச்சொற்களை உள்வாங்கிய ஆத்மாக்கள் அதன் வழிவந்தோரென இன்றும் அந்நிலத்தில் தாகத்துடன் காத்திருக்கக் கூடும். சிறுதூறல் எனத்தொடங்கியிருக்கும் இது பெருமழையென நனைக்கட்டும். சிவமும்  சத்யமும் நித்யம் தழைக்கட்டும்.


நவநாதசித்தர் ஆலயம் என்ற ஒரு மலைச் சிற்றூர் ஆலயத்துக்கு செல்லும் வாய்ப்பும் ஒரு நாள் அமைந்தது. நாவலப்பிட்டியவில் இருந்து மிக மோசமான சாலைகள் வழி, எழிலான காட்சிகள் உடன்வர ஒன்றரை மணி நேரப் பயணம். சித்தர் ஒருவர் ஜீவசமாதியான தலம். முருகன் ஆலயமும் அருகில் சித்தர் சமாதியும். அங்கு அமர்ந்து ஜபமாலையோடு ஆளுக்கொரு புறம் தியானத்தில் அமர்ந்திருந்தோம். கண் மூடி அமர்ந்திருக்கையில் இரு தேயிலைத் தோட்டப் பெண்கள் அங்கு வந்தனர். ஆலயப் பூசகரிடம் 'அவர்கள் என்ன செய்கிறார்கள், எங்களுக்குக் கற்றுத் தந்தால் நாங்களும் செய்வோம் அல்லவா?' என்றார் ஒரு பெண். 'சும்மா இரு, என அடக்கிய மற்றவளை அமர்த்தி, 'ஏன் நமக்குக் கத்துக் கொடுத்தால் நாமும் செய்யலாமே' என்று மீண்டும் சொன்னாள். குருஜி கண்விழித்துப் பார்க்கும் முன்னர் சிறிது தொலைவு சென்றுவிட்டனர். அந்தப் பெண்ணிடம் அடுத்த முறை நிச்சயம் அவருக்கு கற்றுக் கொடுப்பதாக சொல்லுமாறு கோவில் பூசகரிடம் குருஜி சொன்னார். 


தலையில் துணி கட்டியபடி தோட்ட வேலையிலிருந்து வீடு திரும்பும்  தோற்றம். வாழ்க்கையே போராட்டமாக இருக்கக்கூடிய சூழல். விஜயதசமி அன்று ஒரு சித்தர் முன்னிலையில், ஒரு ஆசிரிய மரபின் முன் எனக்கு தீட்சை கிடையாதா எனக் கேட்டு விட்டுப் போயிருக்கிறாள். அவளுக்கு உறுதியாகக் கதவு திறக்கும். அப்படி ஏதோ ஒரு பிறவியில் கேட்டதன் பலன்தான் இன்று இப்படி ஆசிரியருடன் அமரும் அனுபவம் வாய்த்திருக்கிறது. சிவானந்தரையும் சத்யானந்தரையும் சில கணங்களேனும் உணர நேர்ந்திருக்கிறது.

இதை எழுதுவதும் கூட இந்த நொடி வரை யாரிடமும் பகிர்ந்து கொள்வதற்காக இல்லை. யாருக்கேனும் இவ்வனுபவங்கள் என்றேனும் பயன்படலாம் என்ற உள்ளுணர்வால் இதைப் பதிவிடுகிறேன்.

3 comments:

  1. // இமயம் முதல் இலங்கை வரை (சுவாமி சிவானந்தரின் யாத்திரைச் சொற்பொழிவுகள்)” // can you pls share the link to download the pdf?

    ReplyDelete
  2. குருவின் கையில் கருவி எனத் தன்னை ஒப்படைத்துக் கொள்ளும் போது பெருநிகழ்வுகள் தன்னைத் தானே நிகழ்த்திக் கொள்வதை அனுபவபூர்வமாக பார்க்க முடிந்தது.
    This line was soul -touching.. such a detailed writing.. thanks for this

    ReplyDelete