Tuesday, December 29, 2015

சற்குரு - தாத்தா - 20

கார் பாலத்தைக் கடந்தது. சில நொடிகளில் வெடிகுண்டு தலை மேல் விழுந்தது போன்ற சத்தம். நெஞ்சம் காதில் படபடக்க நடந்தது என்ன என்று திரும்பிப் பார்த்தால் கடந்து வந்த பாலம் வெடித்துத் தகர்ந்திருந்தது.  மயிரிழையில் உயிர் பிழைத்த பதைபதைப்புடன்  புயல் வேகம் எடுத்தனர். அதே சமயம் அந்த ஆற்றின் ஆறு பாலங்களும் தகர்க்கப்பட்டிருந்தன. சில நிமிடங்கள் பின்தங்கியிருந்தால் வீடு சேர முடியாமல் அக்கரையிலும் சில நொடிகள் பின்தங்கியிருந்தால் உயிர் பிழைக்க முடியாமலும் ஸ்லிம் ஆற்றின் கரையில் இக்கதை முடிந்திருக்கக் கூடும். 

பினாங் நெருங்கிக் கொண்டிருந்தது. பேசிக் கொள்ளவும் முடியாத கலவரத்தில் இருவரும். அப்போது சாலையோரத்தில் ஒரு சக்கரம் அதிவேகமாய் காருக்கு முன்னால் ஓடுவதைப் பார்த்து வியந்.. சரேல் என  சறுக்கி கார் பக்கத்தில் இறங்கி   பாதியில் நின்ற வியப்பை உறுதிப்படுத்தியது - ஆம் அது அவர்களது காரின் சக்கரம்தான். 
விதியையும் வெல்லக்கூடும் வெல்வதாக விதியிருந்தால் - அப்படி பிழைப்பதாய் விதியிருக்கவே அந்நிய நாட்டு வீதியில் விதி முடியாமல் பினாங் சென்று சேர்ந்தனர்.

அதன் பிறகு தொடங்கியது ஓர் இருண்ட காலம். போரின் பேரிரைச்சலில் அனைவரும் மருண்ட காலம். வெள்ளையர் பினாங்கை விட்டு வெளியேறியது அறியாமல் பினாங்கை தாக்கத் துவங்கியது ஜப்பான். அடுத்த நாள் காலை, துறைமுக வணிக நகரமான பினாங்கின் பரபரப்பான காலை நேரம். பொதுமக்களுக்கு எந்தத் தகவலும் இல்லை. வழக்கம் போல் மொத்த வியாபாரத்திற்கு கூட்டம் நெரித்துக் கொண்டிருந்தது செட்டியார் வீதிகளிலும் அருகிலிருந்த சைனாடவுன் பகுதிகளிலும். (இன்றைய சிங்கப்பூரின் லிட்டில் இந்தியா, சைனா டவுன் போன்றே பினாங்கிலும் இவ்விரு மக்களும் வாழும் இடங்கள் அந்தந்த நாட்டின் அடையாளங்களோடு பினாங்கில் இருந்திருக்கின்றன, இருக்கின்றன.) காற்று வினோதமான பறவை ஒன்றைப் போல் ஒலிக்க, போர் விமானங்கள் வியூகம் அமைத்து வானில் வருவதைப் பார்க்க அனைவரும் வியப்போடு வானத்தைப் பார்த்திருக்கிறார்கள். காதை தீய்ப்பது போன்ற ஒலியுடன் மழை பொழியத் தொடங்கியது - குண்டு மழை. Carpet bombing (படம் இணைக்கபட்டுள்ளது) என்றழைக்கப்படும் தொடர் குண்டுகள் மக்கள் நடமாட்டம் மிகுந்த சைனாடவுன் பகுதிக்கருகே விழுந்தன.  ரத்தக் களறியாய் சதைப் பிண்டங்களாய் மக்களை  விசிறியடித்துவிட்டு வந்த வேகத்தில் பறந்து சென்றன விமானங்கள்.


வெடிகுண்டு வானில் இருந்து விழும் சத்தம் கேட்டால் அருகில் எங்கோ விழுகிறது; சத்தம் கேட்காவிட்டால் நம் தலைமேல் விழுகிறது - அதை சொல்லவும் உயிரோடு இருக்க மாட்டோம் என்பதெல்லாம் அப்போது உணர்ந்த பாடங்கள்.

ஆட்சி செய்வது ராமனோ ராவணனோ நாம் நம் வயிற்றை கவனிப்போம் என்றிருந்த, உலக அரசியலின் போக்கை சிறிதும் உணரமுடியாது இருந்த சராரசரி மக்களின் தலையில் வீழ்ந்தது பேரிடி. எங்கோ செய்தித்தாள் நிகழ்வாய் இருந்த போர், அயல்நாடுகளில் நடந்த போர், அண்டை வீட்டானாய் நிகழ்ந்த போர் அவர்கள் வீட்டுக்குள் குடியேறி வீட்டையும் தகர்த்து அனைவரையும் வெளியில் இழுத்துப் போட்டு கோரமாய் சிரித்தது.

முந்தைய பதிவு (19)


அடுத்த பதிவு (21)

Thursday, December 10, 2015

பாரதி போற்றுதும்



அதிசயம் பாரதிசயம்* பார்!!  பாரதிர** வரும் முரசவன்பா
மறந்தனள் தன்னிடம் பூவினிலேயென அமர்ந்தனள் பாரதி*** நாவினிலே
பொழிந்தனன் பாரதி கவிமழையை அடிமைத்தனமும் கீழ்நிலையும்
விதியெனநம்பாரதிவிரைவாய்**** மதியொடு களம்புகத்தான் துணிந்தார்
இயற்றினன் காவியக் காதல்பா ரதிமதனும்தான்***** மயங்கிடுவார்
போற்றினான் கண்ணனை பலஉருவாய்; ஏற்றினான் பெண்மையை விழித்தெழவே;
தூற்றினான் பொய்மையை அழிந்தொழிய; மாற்றினான் மடமையை சிறுமதியை;
ஆற்றினான் பெருந்தொண்டு மாந்தர்க்கு; போற்றுவோம் நாம்பெற்ற பாரதியை

*அதிசயம் பார்+அதிசயம் பார்
** பார்+அதிர வரும முரசு அவன் பா
***பாரதி - கலைமகள், சரஸ்வதி
**** விதியென நம்பார்+அதிவிரைவாய்
***** காதல்பா+ரதிமதனும் தான் 

Tuesday, December 8, 2015

சற்குரு - தாத்தா - 19


இன்றைக்கு சரியாய் 74 வருடங்களுக்கு முன்னர் டிசம்பர் 8 நள்ளிரவில், Pearl harbour தாக்குதலுக்கு ஒரு மணி நேரம் முன்னர் மலேயாவின் மேற்கு கரையில் கால்பதித்திருந்தது ஜப்பானியப் படை. மிக சில மணித்துளிகள் போருக்குப் பின் அவ்விடத்தைக் கைப்பற்றியது ஜப்பான். அங்கிருந்த பிரிட்டிஷ் படை, ஜப்பானியப் படையின் உண்மையான நிலையைவிட அதிகம் முன்னேறி விட்டதாய்  கிடைத்த தவறான உளவு செய்தியின் அடிப்படையில், தங்கள்  Lt. Col. Hendricks என்ற கமாண்டரைக் கொன்றுவிட்டு முழு செயல்பாட்டில் இருந்த விமான தளத்தையும், ஆயுதங்கள், எரிபொருட்கள் அனைத்தையும் விட்டுவிட்டு வெளியேறி இருந்தது. அடுத்த சில தினங்களில் ஆங்கிலேயப் படையின் கவனம் முழுதும் pearl harbour பக்கம் திரும்பியிருக்க 11 டிசம்பர் பினாங்கில் வெள்ளோட்டம் பார்த்தது ஜப்பானியப் படை. விமானப் படை ஜப்பானியரின் பலமாய் இருந்தது. ஜப்பானியரை எதிர்க்கப் போதிய படையும் ஆயுதங்களும் இன்றி, பினாங்கை நிராதராவாய் எதிரிகள் தாக்குதலுக்கு விட்டுவிட்டு பொதுமக்களுக்கு எந்த அறிவிப்புமின்றி வெளியேறியது பிரிட்டிஷ் படை. 

உண்மையில் ஆங்கிலேயப் படையினரின் அளவைக் குறைவாய் மதிப்பிட்டிருந்தது ஜப்பானியப் படை. எனில் அதன் ஜெனரல் யமஷிட்டோ பின்னாளில் தெரிவித்தது போல் அந்த அறியாமையே அவர்களது பலமாயிருந்தது அப்போது. அதே போல ஜப்பானியர் படை பலத்தை அதிகமாய் நினைத்த அறியாமையே ஆங்கிலேயரின் பலவீனமாய் இருந்தது.

இவை இன்று சரித்திரமாய் காலவரிசைப்படுத்தி படிக்க முடிகிறது. அன்று சரித்திரம் நிகழ்ந்து கொண்டிருந்த போது எத்தகவலும் தெரியாமல், கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டாற் போன்ற நிலைதான்.

மீண்டும் பினாங் நெடுஞ்சாலைக்கு வருவோம்:

என்ன நிகழ்கிறது என விளங்காது எதிர் வரும் படைகளைப் பார்த்து திகைத்த வண்ணம் இருவரும் விரைந்து கொண்டிருந்தனர். ஜப்பானியர் படை ஊடுருவி விட்டதோ எனப் பார்த்தால், எதிரே சென்றது அனைத்தும் union jack கொடி சுமந்த வெள்ளையர் படை. 'என்ன நடக்கிறது இங்கே!!
எங்கே செல்கிறது இப்படை!!' வியப்பு, பயம், ஆர்வம் மேலிட நம்மவர்களின் நான்கு விழிகள். 

'யார் இந்த இரு இளைஞர்கள்? சாவை எதிர்நோக்கி பினாங் நோக்கி ஆர்வமாய் விரையும் இவர்கள் யார்? நம் படை செல்வதைக் கண்டும் ஒற்றையாய் தனித்து செல்பவர்கள்!!' அதே வியப்பு பல நூறு கண்களில் படையினர் தரப்பில்..

ஆபத்தின் வாடை கலந்திருந்தது காற்றில்.

வழியில் ஒரு நதியைக் கடக்க வேண்டும்.  இந்த ஆற்றைக் கடந்துதான் கோலாலம்பூர் இருந்த மலேயாவின் தெற்குப் பகுதியிலிருந்து பினாங் மாகாணம்  நுழைய முடியும். சில மைல் தொலைவுகளில் ஆறு இடங்களில்  பாலங்கள் இருந்தன.  இவற்றில் ஏதேனும் ஒன்றில் கடக்க வேண்டும் பினாங் சென்றடைய. அவற்றில் ஒன்றை நோக்கி விரைந்து கொண்டிருந்தது கார். 

அப்பாலங்களைக் கடந்து கோலாலம்பூர் நோக்கி பிரிட்டிஷ் படை முழுவதும் கடந்ததும், ஜப்பானியர் படை பின்தொடர்வதைத் தடுப்பதற்கும் காலதாமதப் படுததுவதற்கும் ஆறு பாலங்களையும் வெடிகுண்டு போட்டு தகர்க்க முடிவு செய்து கடந்து கொண்டிருந்தது பிரிட்டிஷ் படை.

கடைசிப் படைவாகனமும் கடந்து முடிக்கவும் தாத்தாவின் கார் பாலத்தில் நுழையவும் மிகச் சரியாக இருந்தது. நிமிடங்களின் பிடியில் ஊசலாடிக் கொண்டிருந்தது உயிர் - இதை அறியாமல் பாலத்தில் நுழைந்தது கார். 

முந்தைய பதிவு (18)


அடுத்த பதிவு (20)

Monday, November 30, 2015

சற்குரு - தாத்தா - 18

உயிருக்கு உத்தரவாதமில்லை என்று ஊதிற்று அபாய சங்கு. பணத்தை சரிபார்த்துக் கொண்டிருந்த தாத்தாவும் நண்பரும், வங்கியில் இருந்த அனைவருடன் பதட்டமாய் வெளியேறினர். ஓங்கி அலறிக் கொண்டே இருந்தது சங்கு. தன் உயிரைக் காக்க உடல் பதறி ஓடும் போதும் உள்ளம் பதறுவது உயிரினும் மேலான உறவுகளைக் காணாது போய்விடுவோமோ என்றுதானே. தாத்தா அவசரமாய் இறங்கும்போது கவனம் தவறியதில் படிக்கட்டுகளில் தடுமாறி அத்தனை படிகளிலும் சறுக்கி தரைசேர்ந்து, பாய்ந்து கண்ணுக்குத் தெரிந்த முதல் குழியில் இறங்கிய போது இதயம் காதுகளில் படபடத்தது. மற்ற நேரமாயிருப்பின் படியில் விழுந்த வலி தெரியும். மரணம் கண் முன் ஒத்திகை காட்டும் போது உடல் நினைவில் இருப்பதில்லை.

தலைக்கு மேல் சீழ்கையடித்து பறந்தன சில விமானங்கள். யுகமெனக் கழிந்த சில நிமிடங்களுக்குப் பிறகு, அபாயம் நீங்கியதென மணி ஒலித்தது. போரின் தீவிரம் நிதர்சனமாய் உணர முடிந்தது. 

பாம்பின் வாய் பிழைத்து பாழ்நரகில் சிக்கியது போல, ஆங்கிலேயர் பிடியில் இருந்த மலேயாவை முற்றுகையிடத் தொடங்கியிருந்தது ஜப்பான். 'ஆசியா ஆசியர்களுக்கே' என்ற முழக்கத்துடன் தொடங்கிய இந்த முற்றுகை மேலும் கொடுமைகளையே விளைவிக்கப் போகிறது என யாருக்கும் தெரியவில்லை அப்போது..

அவசரமாய் காரில் ஏறிப் பறக்கத் தொடங்கினர் இருவரும் பினாங் நோக்கி. ஆறு மணி நேரத்துக்கும் மேலான பயணம் செல்ல வேண்டும் பினாங் சென்று சேர்வதற்கு. போர் தொடங்கிவிட்ட சூழலில் நெடுஞ்சாலையில் வேறு வாகனங்கள் ஏதுமில்லை. அடர்ந்த மழைக்காடுகள் நிறைந்த பாதையில் பறந்தது கார்.

எதிர்திசையிலிருந்து வந்தது ஒரு போர் வாகனம். ஒன்று இரண்டாக, இரண்டு நான்காக, நான்கு நாற்பதாக, சாரி சாரியாக எதிர்த்திசையில் வரத்தொடங்கின இராணுவ வாகனங்கள். கண்ணுக்கு எட்டிய வரை முன்னும் பின்னும் வாகனங்கள் இல்லை தாத்தாவின் கார் பயணித்த திசையில், பினாங்கை நோக்கி...

முந்தைய பதிவு (17)


அடுத்த பதிவு (19)

Tuesday, October 27, 2015

சற்குரு - தாத்தா - 17

சற்குரு - தாத்தா - 17

இரண்டாம் உலகப் போர் முழுத்தீவிரமடைந்தது.

1941 - 1946 இந்தக் காலகட்டத்தை மூன்று தளங்களில் பார்க்கவேண்டியிருக்கிறது.

1. உலகமெங்கும் பரவிக்கொண்டிருந்த, உயிருக்கு உத்தரவாதமற்ற போர்ச்சூழல், அதில் பதைபதைப்புடன் வாழ்வு, இதற்கிடையே மகாத்மா காந்தி, நேதாஜி போன்ற தலைவர்களின் தலைமையில் விடுதலை வேட்கை கொண்டு சுகவாழ்வைத் துறந்து விடுதலைப் போராட்டக் களமிறங்கிய ஆயிரமாயிரம் இளைஞர் கூட்டம் என்ற உலகளாவிய சமூகச் சூழல்.

2. உற்றார் உறவினரைப் பிரிந்து, இறப்புக்கும் இருப்புக்கும் இடையில் இடையறாது தவித்து, இருள் கவிந்திருக்கும் நிகழ்காலம் எதிர்காலத்தையும் விழுங்கிவிடுமோ? உயிர் தப்பி ஊர்சேர வழிவகை ஏதும் உண்டா? பிழைத்திருக்கும் நாள்வரை பிழையாதிருப்பேனா? என வினாக்களே வினாடிகளாக தவித்திருந்த புலம்பெயர் மனிதர்களின் வாழ்வு.

3. பெற்ற தாய் தந்தையும், உடன்பிறந்தாரும், கட்டிய மனைவியும், பெற்ற மக்களும் ஒவ்வொரு நாள் விடியலிலும் 'இன்று ஏதேனும் சேதி வாராதா நலமாயிருக்கிறார் என்று, இன்ன தேதியில் வருகிறேன் என்று' என எதிர்பார்த்து, மேற்கே கதிரவனோடு எதிர்பார்ப்பும் மறைய, நாட்களை நரகமெனக் கழித்த உறவுகளின் நிலை.

அனைத்தையும் சுமந்து கொண்டு புவி நித்தம் தன் பயணம் மேற்கொண்டுதானிருந்தது விடியலை நோக்கி..

1941-மலேயா அதிதீவிரமான போர்த்தாக்குதலுக்கு உள்ளாயிற்று. அதுவரை ஆங்கிலேயர் வசமிருந்த மலேயா மீது ஜப்பானியர் வான்வழித்தாக்குதல் தொடங்கினர்.

மலேயாவின் போர் வரலாற்றில் முக்கியமான தினங்கள் - டிசம்பர் 1941. ஜப்பானியப் படை மலேயாவைக் கைப்பற்றத் தொடங்கியது. கிழக்கு கடற்கரையில் கோட்டாபாருவில்(kota bahru) தொடங்கிய ஜப்பானியர் ஊடுருவல் 11-டிசம்பர் பினாங்கைத் தொட முயற்சித்தது.

நித்தமும் அநித்தியமாகிக் கொண்டிருந்த சூழலிலும் வேலை தொடர்ந்து கொண்டுதான் இருந்தது. அன்றாடங்களில் புதிதாய் சேர்ந்திருந்த வாடிக்கை - மரணத்தை எண்ணி பதைத்தவாறு பதுங்கு குழிகளில் உயிரைத் தஞ்சமடைவது.

அந்த டிசம்பர் 1941-ல் 25வயது நிரம்பிய தாத்தாவும்(தாத்தா என்ற சொல் ஏற்படுத்தும் வயதான அகத்தோற்றத்தை மாற்றிக் கொள்ளவே வயது குறிப்பிடுகிறேன் - 25 வயதே ஆன அய்யாத்துரை) அவரது நண்பரும் பினாங்கிலிருந்து கோலாலம்பூர் சார்ட்டர்ட் வங்கி சென்றிருந்தார்கள். கடைப்பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்துவதற்கு வங்கியில் நின்று கொண்டிருந்தார்கள். அபாய சங்கு ஊதிற்று.



முந்தைய பதிவு (16)

அடுத்த பதிவு (18)

Monday, October 5, 2015

ஏகாந்தம் ஏதுக்கடி


தன்னை சுமப்பதே கசக்கும் தனிமை - சிறியது;
தனைத்தான்அறியத் தளம்தந்து தன்னை மறக்கச் செய்யும்
ஏகாந்தம் - மிகப் பெரியது.

வெற்றிடத்தில் நாம் மட்டும் தனித்துக் கிடப்பதாய் சொல்லும் தனிமை. எல்லைகளற்று நாம் விரிந்து கிடப்பதாய் சொல்லும் ஏகாந்தம்.

நம்மை உண்டு, மனதை வதைத்து, நல்லியல்புகளை, நம்பிக்கைகளை, கரையான் போல மெல்ல அரிக்கும் தனிமை. அன்றாட அழுத்தங்களைக் கரைத்து நேர்மறை எண்ணங்களில், ஈடுபாடுகளில், சுயத்தை மறக்கும் ஏகாந்தம்.

குரல் இழந்த குருட்டுப் பறவை தனிமை. விட்டு விடுதலையாகி நிற்கும் மோனம் ஏகாந்தம். இருப்பினும் ஏகாந்த வரம் வாங்க தனிமையில்தான் தவம் வேண்டும்.
வரங்களே சாபங்கள் ஆகும் என்றால் இங்கே தவங்கள் எதற்காக என்றொரு கவிதை வரி உண்டு. ஏகாந்தம் இனிது -  துய்க்கத் தெரிந்து விட்டால்; தனிமையில் மனம் தன்னோடு சிநேகமாய் இருக்கத் தெரிந்துவிட்டால். இல்லையெனில் தனிமை பெரும் சாபம்.

'Go cashless' இந்த விளம்பர வாசகம் ஒவ்வொரு முறையும் முகத்தில் புன்னகை பூக்கச் செய்யும்.
Cashless state - positiveஆ negativeஆ? பணம் இல்லாதவனின் நிலை பொருளாதார வறுமை. பணத்தைப் பையில் சுமப்பதே ஒரு சுமையாகும் காலம் பொருளாதார செழுமை. செரிமானம் தாண்டிய செழுமை. மாதந்தோறும் கடன் வாங்க நேரிடும் மக்களுக்கு - மரக்கோடரி தொலைத்த விறகுவெட்டிக்குத் தங்க கோடாரி தந்து ஆசைகாட்டும் தேவதை போல - இரு முனைகளை இணைக்க முயலும் நடுத்தர வர்க்கத்திற்கு இரண்டு லட்சம் வரை கடன் தந்து ஆசை காட்டும் credit cardஜக் குறித்து சொல்லவில்லை. 'You need not carry cash' - என்ற marketing வாசகத்தைக் குறித்து சொல்கிறேன்.

அதேபோல ஆன்மாவின் வறுமை தனிமை. அதன் செழுமையே ஏகாந்தம். You can go 'I'less in solitude.

தனிமையிலிருந்து ஏகாந்தம் நோக்கிய பயணம் மேற்கொள்ள நம்  மனமென்னும் இருட்டறையை அன்பின் வெளிச்சத்திற்கும், அறிதலின் காற்றோட்டத்திற்கும் திறந்து வைக்க வேண்டும். அறிதல், கற்றல் - மனதை தூசு தட்டும். அறிதல் எதுவாயினும் இருக்கலாம். அறிவும் அதனால் வரும் சுகமும் போதை. நம் ஆர்வத்தைப் பொறுத்து கற்றலின் களம் இசையாகவோ இறையாகவோ ஏன் சுயமாகவோ கூட இருக்கலாம். கற்றலும் மறந்து, கற்றதோடு நாம் கரைய ஏகாந்தம் மட்டும் நின்றிருக்கும். 

இனிதாகும் எதுவும் எளிதல்ல - எனினும் கைவர அரிதுமல்ல.

"இனிது இனிது ஏகாந்தம் இனிது;
அதனினும் இனிது ஆதியைத் தொழுதல்;
அதனினும் இனிது அறிவினர்ச் சேருதல்;
அதனினும் இனிது அறிவுள்ளாரைக்
கனவினும் நனவினும் காண்பது தானே" - ஔவையார்

Saturday, September 26, 2015

சற்குரு - தாத்தா - 16

சற்குரு - தாத்தா - 16

பிஞ்சு விரல் பதித்த கடிதம்கண்டு, அடக்கி வைத்திருந்த நேசம் வெடித்துக் கிளம்ப, 'இன்னைக்கு கப்பல் ஒன்று கிளம்புது சென்னைக்கு, இன்னைக்கே கிளம்புறேன்' என்று தாத்தா செட்டியாரிடம் அனுமதி கேட்க, 'நிலவரம் சரியில்லை.. யுத்தம் ஆரம்பிச்சுடுச்சு. இந்த சூழ்நிலைல கப்பல் போக்குவரத்து பாதுகாப்பானதல்ல' என்று அவர் மறுத்துவிட்டார். துக்கம், கோபம், ஆதங்கம், ஏக்கம் மாற்றி மாற்றி பந்தாட, உணர்ச்சிக் கொந்தளிப்பில் கண்ணுறக்கம் தொலைந்த இரவு. 'செட்டியார் ஒத்துக்கொண்டிருந்தால் இந்நேரம் கப்பல் ஏறியிருக்கலாம், இந்நேரம் தாய்மண் நோக்கி பயணம் தொடங்கியிருக்கலாம். பத்துநாட்களில் பெற்ற இளம் மகவு முகம் பார்த்திருக்கலாம். " - அனைத்தையும் கெடுத்து விட்ட முதலாளி மேல் அளவு கடந்த கோபம். உடன் பணிபுரிந்த தோழர்கள் சமாதானப் படுத்தினார்கள்- 'அடுத்த கப்பல்ல போயிடலாம் அண்ணே, கலங்காதீங்க'  என்று. 'ஆமாம்..இது என்ன வாழ்வு, அடுத்த கப்பலில் ஏறிவிட வேண்டும், யார் தடுத்தாலும் சரி..' புயலில் கடையுண்ட கடலாய் மனது. அழுதழுது கண்களில் சிவப்பேற விடிந்தது காலை.

மதிய வேளையில் வந்ததோர் சேதி. தாத்தா பயணம் செய்வதாயிருந்த கப்பல் மீது நடுக்கடலில் குண்டுவீச்சு. கப்பல் மூழ்கி பயணம் செய்த அனைவரும் மரணம். செய்தி கேட்டு வெகுநேரம் உடலும் உள்ளமும் நடுங்கிக் கொண்டிருந்தது. வெற்று செய்தியாய் காதில் விழுந்துகொண்டிருந்த யுத்தம், அண்டை வீட்டான் போல் அருகில் வந்துவிட்டது என்பதை உணர்ந்தனர் அனைவரும். தெரிந்தவர்கள் சிலரும் பயணப்பட்டிருந்தனர் அந்தக் கப்பலில். அந்த துக்கமும், தான் உயிர் பிழைத்து இன்னும் இருப்பதன் சத்தியமும் நெஞ்சம் உணர, பயணத்தைத் தடுத்தவன் தகப்பனாய்த் தெரிந்தான்.

இடையூறென்பது எப்போதும் கெடுதல் அல்ல - நமக்கு விளங்காத பெரிய ஆடுகளத்தில் நமை பேரிடரிலிருந்து காப்பதற்கும் தடங்கல்கள் நேரிடலாம், என்பதற்கு தாத்தா இதை அடிக்கடி உதாரணமாக சொல்வார்கள்.

அத்தோடு கப்பல் தொடர்பும் நின்று போனது.

முந்தைய பதிவு (15)

அடுத்த பதிவு (17)