Tuesday, December 29, 2020

2020-2021

2020 - இந்த ஆண்டு சென்ற ஆண்டென மாற இன்னும் சில தினங்களே இருக்கின்றன. 2000க்குப் பிறகு 2020 வாழ்க்கையில் இது ஒரு முக்கியமான வருடமாக இருக்கும் என்று வெகு நாட்களாக எண்ணிக் கொண்டிருந்தேன்.  முக்கியமான ஆண்டுதான், யாருமே எண்ணியிராத வகையில் உலகில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த ஆண்டு, நம் வாழ்க்கை முறையையே மாற்றி அமைத்திருக்கும் வருடம். கணினிகளும் கைபேசிகளும் இணைய இணைப்புகளும், இணைய வழிக் காணொளிகளும், கூடுகைகளும் வாழ்வில் இத்தனை இன்றியமையாததாகும் என்று யாரும் கற்பனை செய்திருக்க இயலாது. 


பல நிறுவனங்களில் வெகு காலமாகத் திட்டமிடப்பட்டு பல நிலைகளில் செயல்படுத்த முயற்சிக்கப்பட்டு மிகுந்த தயக்கங்கள் காட்டப்பட்டு வந்த இணைய வழி வேலை முறைமையையும் அதற்கான செயல் திட்டங்களையும் ஒரு சில நாட்களில் கட்டாயமாக்கி நடைமுறைக்கு கொண்டு வந்தது இந்த கோவிட். இதில் மிக அதிகமான சவால்களும் நிறைந்தே இருக்கின்றன. அலுவலக நேரத்துக்கும் தனிப்பட்ட நேரத்துக்குமான எல்லைக்கோடுகளை அனேகமாக அழித்து விட்டது இச்சூழல். எனில் இதுவே எல்லையென்று வரையறை செய்ய முயற்சித்து அதில் ஓரளவேனும் புரிந்துணர்வு ஏற்பட்டு விட்டால் மிக நேர்த்தியாக நமது நேரத்தை வேறு விஷயங்களுக்கு அளிப்பதற்கும் இந்த வருடம் ஒரு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தது. 


வெளி நிலப் பயணங்களை அனேகமாக இல்லையென்றே ஆக்கி விட்ட ஆண்டு. அதனாலேயே சிங்கையிலேயே இதுவரை நான் சென்று பார்த்திராத பகுதிகள் கண்ணில் படத்துவங்கின. பல இடங்களுக்கு காலை மாலை நடைகளில் சென்று வருகிறேன். மற்றபடி இந்த வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் மூன்று முறை இந்தியாவுக்கு வந்து திரும்பியதே இவ்வருடத்தின் பயணங்கள். மேகாலயா பயணம் நிறைவளித்த ஒன்று. மார்ச் 12ஆம் தேதிக்குப் பிறகு வீடே அலுவலகமாகியது. இன்னும் தொடர்கிறது. 


சென்ற சில வருடங்களாக அநேகமாக இரு மாதங்களுக்கு ஒரு முறையேனும் பயணம் என்று பழகி விட்ட மனது, முதலில் சற்று பதைபதைத்தது. வீடடங்கு துவங்கியதுமே ஆசிரியர் ஜெயமோகன் தளத்தில் நூறு நாட்களில் நூறு சிறுகதைகள் எழுதி அன்றாடம் வெளிவந்ததால், அகம் முற்றிலும்  இருளில் மூழ்கி விடாது இக்கதைகள் வெளிச்சம் பாய்ச்சியது. அது தக்க நேரத்தில் வந்த ஒரு நல்லாசி, ஒரு நல்ல வழிகாட்டிக் குறிப்பு. அக்கதைகளின் சாரம் மட்டுமன்றி, இந்த நாட்கள், இது போன்ற ஒரு தருணம் எவ்வளவு பெரிய வாய்ப்பு என்பதும் உரைத்தது.  இவ்வளவு முழுமையாக காலம் கையில் இருக்கையில் ஒவ்வொரு நாளும் ஏதோ ஒன்றை அறிந்து கொள்வதற்கும் தன்னளவில் ஏதோ ஒன்றை நோக்கி பயணம் செய்து கொண்டே இருப்பதும் எவ்வளவு பெரிய வாய்ப்பு என்று தோன்றியதும் மனம் விடுதலை கொண்டுவிட்டது. வீடுறைந்த இந்த ஒன்பது மாதங்கள் வேறொரு விதத்தில் அருங்கொடையாகத் தோன்றியது. ஒவ்வொரு நாளும் செய்வதற்கும், வாசிப்பதற்கும், கற்றுக்கொள்வதற்கும் நீண்ட பட்டியலே இருப்பது கண்ணுக்குப் புலப்பட்டது.  அதன் பிறகு நாட்கள் சிறகு கொண்டு பறந்து சென்று கொண்டிருக்கின்றன. 


இந்த ஒரு வருடத்தில் வாசித்த பக்கங்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. அலுவலகம் செல்வதும் வருவதுமான பயண நேரங்களும் அவற்றுக்கான ஆயத்த நேரங்களும் மிச்சமாயின.ஏறக்குறைய மூன்றரை  மாதங்களில் இரவு பகலாக வெண்முரசின் 26 நூல்களையும் ஒரே மூச்சில் ஒரு மீள்வாசிப்பு செய்து வாசித்து முடிக்க நேரம் கிடைத்தது. ஒவ்வொரு நாளும் ஐந்து முதல் ஆறு மணிநேரமும் வாரயிறுதி நாட்களில் பத்து முதல் பன்னிரண்டு மணிநேரமும் கிடைத்தது. ஒவ்வொரு நாளும் இருநூறு முதல் முன்னூறு பக்கங்கள் படித்துவிடக்கூடியவர்களுக்கு நூறு நாட்களில் வெண்முரசு மீள்வாசிப்பு செய்ய முடியும். இதில் முக்கியமான விஷயம் இது மீள்வாசிப்பு என்பது. முதல் முறை வாசிப்பதற்கான மனநிலையும் அந்த வாசிப்பும் வேறுவகையானது. கதையின் வேகத்திலேயே இழுத்து செல்லப்பட்ட நிலை ஒவ்வொரு நாளும் விடியலில் வாசித்த முதற்சுவை. அதிலேயே தோய்ந்து ஒவ்வொரு பகுதியையும் ஒவ்வொரு வரியையும் மீண்டும் மீண்டும் சுவைத்து ரசித்துக் கிடந்தது/கிடப்பது மற்றொரு சுவை. அதன் பிறகும் நண்பர்கள் எழுதிய கடிதம் கண்டோ, அல்லது நினைவில் தோன்றும் ஏதோ ஒரு பகுதியை மீண்டும் கவனித்து வாசிக்க என்றோ கணக்கற்ற முறை அங்குமிங்குமாக வாசித்தவற்றுக்கு கணக்கு வைக்க இயலாது. அதன் பிறகே இந்த முழுமுற்றான மீள்வாசிப்பு சாத்தியமாகிறது. அப்போதும் அந்த உலகம் அவ்வப்போது முழுமையாக கனவுகளுக்குள் உள்ளிழுத்து விடுவதையும், ஒற்றை ஒரு வரி மனதில் சிக்கிக் கொண்டு அதுவே அந்நாளாகிப் போவதையும் தடுக்க முடியாது போகிறது.


இமயத்தில் பல தினங்கள் பயணம் செய்து விட்டு அதன் சிகரங்களையும் தாழ்வரைகளையும், ரகசியமாய் ஓடும் நீர்பெருக்குகளையும் நாட்கணக்கில் பார்த்து அதன் மடியிலேயே கிடந்து விட்டு கிளம்பிய பிறகு, அங்கிருந்து கிளம்பும் போது விமானத்தில் இருந்து கண்நிறைத்துக் கிடக்கும் பெருவெளியாக இமயம் தெரியும் ஒரு தருணம் உண்டு. அதன் அத்தனை நுண்ணிய அழகுகளையும் மறைத்துக் கொண்டு தனது பேரிருப்பையே ஒரு தரிசனமாக அருளும் ஒரு கணப்பொழுது. அதுபோன்ற ஒரு உச்சம் தரும் வாசிப்பு இது. வேறு எந்த விதமான சிதறல்களும் இன்றி, கனவும் நனவுமென வெண்முரசில் மூழ்கியிருந்த அந்த நூற்று சொச்சம் நாட்கள் இந்த ஆண்டின் முக்கியமான தினங்கள். சிங்கையும் நண்பர்கள் வீட்டுக்குக் கூட எங்கும் செல்லக்கூடாதென கதவுகளை இறுக மூடியிருந்த தினங்கள் அவை. அவையே வரமாக மாறின.


அதன் பிறகு வந்த அடுத்த மூன்று மாதங்களும் மீண்டும் வெண்முரசில்தான் வாழ்ந்து கொண்டிருந்தேன். வெண்முரசின் நிலச்சித்தரிப்புகள் குறித்த குறிப்புகளுக்காக குறுக்கும் நெடுக்குமாக, மீண்டும் மீண்டும் வெண்முரசின் நிலங்களுக்குப் பயணம் செய்துகொண்டிருந்த அந்த மூன்று மாதங்கள் மகத்தானவை.  இந்தக் கட்டுரைக்கான குறிப்புக்கள் எடுக்கவெனத் தொடங்கிய மீள்வாசிப்பு அந்த நோக்கத்தை விடுத்து முற்றாக எண்ணத்தை ஆக்கிரமித்துக் கொள்ளவே, ஆங்காங்கே நிலங்கள் பற்றிய குறிப்புகள் வரும் அத்தியாய எண்களை மட்டுமே ஓரளவு குறிப்பெடுத்திருந்தேன். அதனால் செப்டம்பரில் துவங்கி மீண்டும் கட்டுரைக்கான முனை குவிக்கப்பட்ட வாசிப்பு துவங்கியது. பீஷ்மருடனும், அர்ஜுனனுடனும், சிகண்டியுடனும், பூரிசிரவஸுடனும், சாத்யகியுடனும், இளநாகனுடனும், சண்டனுடனும்,  இந்தியப் பெருநிலத்தை மீண்டும் மீண்டும் நடந்து பார்த்துக்கொண்டே இருந்தேன். உலகின் கதவுகள் திறந்திருந்தால் கூட நான் செல்லச் சாத்தியப்பட்டிருக்காத நிலவெளிகளில், பாலைகளில், பனிமலைகளில், ஆழ்கடல்களில் அலைந்து திரிந்த உணர்வு. எனவே 2020 என்னளவில் மாபெரும் பயணங்களில் ஈடுபட்ட நிறைவையே தந்திருக்கிறது.    


கதவுகள் திறப்பதும் அடைந்து கிடப்பதும் முக்கியமாக மனதளவில்தான் என்று உணர்த்திய வருடம் 2020. காணவேண்டிய நண்பர்களின் முகங்களும் செல்லவேண்டிய இடங்களின் பட்டியலும், அதற்கான திட்டங்களும் மனதில் நிறைந்திருக்கின்றன. எனில் துலாத்தட்டில் ஏக்கங்களை நிகர் செய்கின்றன கனவுகள். 2021-ம் செயலூக்கம் நிறைந்த ஒரு மனநிலையை அனைவருக்கும் அருளட்டும்.   


2020-ல் வாசித்தவை:

1. டாக்டர் ஷிவாகோ - போரிஸ் பாஸ்டர்நாக்

2. பகடையாட்டம் - யுவன் சந்திரசேகர்

3. நொடி நேர அரைவட்டம் - கல்யாண்ஜி

4. வாடாமல்லி - சு.சமுத்திரம்

5. சாயாவனம் - சா.கந்தசாமி

6. கடல்புரத்தில் - வண்ணநிலவன்

7. எஞ்சும் சொற்கள் - சுரேஷ் பிரதீப்

8. ஒளி - சுசித்ரா

9. கொற்றவை - ஜெயமோகன்

10. ஊர்சுற்றி - யுவன் சந்திரசேகர்

11. அலகில் அலகு - வேணு வேட்ராயன்

12. பாலை நிலப் பயணம் - செல்வேந்திரன்

13. வயல்காட்டு இசக்கி - அ.கா.பெருமாள்

14. முதலியார் ஓலைகள் - அ.கா.பெருமாள்

15. சடங்கில் கரைந்த கலைகள் - அ.கா.பெருமாள்

16. தென்குமரியின் சரித்திரம் - அ.கா.பெருமாள்

17. கி.ராஜநாராயணன் கதைகள்

18. பிஞ்சுகள் - கி.ரா

19. கல்மலர் - சுநீல் கிருஷ்ணன்

20. தாடகை மலையடிவாரத்தில் ஒருவர் - ஜெயமோகன்

21. Journey to Lhasa and central Tibet - Sarat Chandra Das

22. பின்நவீனத்துவவாதியின் மனைவி - சுரேஷ்குமார் இந்திரஜித்

23. பிண்ணனிப் பாடகர் - சுரேஷ்குமார் இந்திரஜித்

24. பாரதி நினைவுகள் - யதுகிரி அம்மாள்

25. நூறு நிலங்களின் மலை - ஜெயமோகன்

26. இடபம் - பா.கண்மணி

27. கங்காபுரம் - அ.வெண்ணிலா

28. முன்சுவடுகள் - ஜெயமோகன்

29. புதுமைப்பித்தன் வரலாறு - தொ.மு.சி.ரகுநாதன் (வாசிப்பில்)

30. வெண்முரசு (26 புத்தகங்கள் மீள்வாசிப்பு) - ஜெயமோகன்

• முதற்கனல்

• மழைப்பாடல்

• வண்ணக்கடல்

• நீலம்

• பிரயாகை

• வெண்முகில் நகரம்

• இந்திரநீலம்

• காண்டீபம்

• வெய்யோன்

• பன்னிரு படைக்களம்

• சொல்வளர்காடு

• மாமலர்

• கிராதம்

• நீர்க்கோலம்

• எழுதழல்

• குருதிச்சாரல்

• இமைக்கணம்

• செந்நா வேங்கை

• திசைதேர் வெள்ளம்

• கார்கடல்

• இருட்கனி

• தீயின் எடை

• நீர்ச்சுடர்

• களிற்றியானை நிரை

• கல்பொருசிறுநுரை

• முதலாவிண்

3 comments:

  1. What an astounding year in a way !! Amazing Subbu

    ReplyDelete
  2. Weldone Subha .
    அற்புதமான புத்தக வரிசை. வரும் ஆண்டில் மேலும் சிறப்பான வாசிப்பிற்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete