Showing posts with label வாசிப்பனுபவ. Show all posts
Showing posts with label வாசிப்பனுபவ. Show all posts

Saturday, June 27, 2020

பாலை நிலப் பயணம் - நூல் அறிமுகம்


எழுத்தாளர் செல்வேந்திரன் எழுதிய "பாலை நிலப் பயணம்" வாசித்து முடித்தேன்.  செல்வேந்திரன், எழுத்தாளர் ஜெயமோகன் மற்றும் நண்பர்களுடன் குஜராத்/ராஜஸ்தான் பயணம் சென்று வந்தது குறித்த பயண நூல். சிறப்பான நடை, செறிவான விவரங்கள், அழகான மொழி. இவர் எழுதிய மற்ற புத்தகங்களும் எனது வாசிப்புப் பட்டியலில் இருந்தாலும், இது பயணம் சார்ந்தது என்பதால் முதலில் வாசித்துவிட்டேன். மேலும் நண்பர்களும் ஜெ.வும் உடன் வர அந்தப் பயணத்தில் கூடவே வருவது போல கற்பனை செய்து கொள்ளவும் நன்றாக இருந்தது.


இன்றைய காலகட்டத்தில் பயணம் என்பதே அதற்கான ஆடை அணிகளை தேர்வு செய்வதும், அவற்றை வாங்குவதும், புகைப்படங்கள் எடுப்பதும், சமூக வலைதளங்களில் பகிர்வதும் என்றாகிவிட்ட நிலையில் இத்தகைய பயண ஆயத்தம் பலரும் அறிந்திராத ஓன்று.
பயண ஆயத்தங்கள் எனப் பெரும்பான்மையினர் செய்யும் களேபரங்களை விட அப்பகுதியைப் பற்றி பல்வேறு தளங்களில் பயணத்துக்கு முன்னர் அறிந்துகொள்வது மிக முக்கியமான ஆயத்தம். அதற்கு காணுயிர்கள், ஓவியம், இசை, நிலப்பரப்பு, தொல்லியல், வரலாறு என நண்பர்கள் பிரித்துப் பொறுப்பெடுத்துக் கொண்டது அருமை. இம்சைக்கும் இடிதாங்கிக்கும் கூட பொறுப்பேற்றுக்கும் நண்பர்கள் பெரிய கொடுப்பினை 😊

நீல்கே, கூர்ஜர-பிரதிகார கட்டடக்கலை, மங்கோலிய நாரைகள், தேசியப் பறவையாகி இருக்க வேண்டிய கானமயில், பாதிரி கிறிஸ்டோப் சாமுவேல் ஜானுடைய பங்களிப்புகள், ரூடாபாய் சரிதம் என அத்தனை ஆர்வமூட்டும் அறிந்திராத செய்திகள்.

சாம் மணற்குன்றுகளில் திடீரென ஆடிய அச்சிறுமியும் அவளது வெறித்த பார்வையும், அந்த நிலக்காட்சி கிளர்த்தும் கடந்த கால ஏக்கங்களுக்கு நிகராகவே மனதை ஏதோ செய்தது. அகண்ட பாலையில் மின்னலும் ஒரு சித்திரமாக மனதில் தங்கிவிட்டது.

பயணம் முழுவதும் உடன் வரும் கவிதை வரிகளும் அழகு.
ரன் உத்சவமும், ராஜஸ்தான்/குஜராத் பயணமும் எனது பயணத்திட்டங்களில் ஒன்று. இப்புத்தகம் தரும் பல தகவல்கள் அதற்கு மிகவும் உதவுவதோடு அப்பயண அனுபவத்தை செறிவாக மாற்றும் என்பது உறுதி. ரான் ஆப் கட்ச் பகுதியும்,
ராணி கி வாவ் விவரிப்பும் புகைப்படங்களும் கனவுகளைக் கிளர்த்துபவை.

இருபுறமும் விரிந்த வெற்றுப் பாலை விரிவெளியில் கானலில் நடுங்கும் நாகம் போல தொடுவான் வரை நீண்டோடும் சாலையில் பயணிப்பது கனவு அனுபவம். சில ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நோக்கி சென்ற பாலை நிலப் பயணம் நினைவில் எழுந்தது. பயணங்களில் நம் மனதில் ஆழமாகத் தங்குபவை இதுபோன்ற நிலக்காட்சிகளும் அவை கிளர்த்திய அகக்காட்சிகளுமே.

இத்தொகுப்பின் சிற்பப் புகைப்படங்களுக்கு இணையாகவே கோல்டன் ராக் மற்றும் காரி நதி பாறைப் படுகைகளின் புகைப்படங்களும் மிக அழகு. //ஒட்டு மொத்தமாக பாறைச் சுருள்களைப் பார்ப்பது காலாதீத மலைப்பாம்பு மெளனமாக நெளிந்து கொடுப்பது போல இருந்தது//- அருமை

நண்பர்களோடு உணவு வேட்டை, திரைப்பாடல்களுக்குத் துறை வகுப்பது, வேறு வரிகள் அமைத்துப் பாடுவது, சிரி-யோடு நண்பர்களின் சிரிப்பாணி எல்லாம் நினைக்கும் போது முகத்தில் புன்னகை உடனே வந்துவிடுகிறது.

தொல்லியலாளர் கே.கே.முகமது பற்றிய உரையாடல், காரில் நிகழ்ந்த
பெரிய கோவில் விவாதம், நண்பர்கள் ஒவ்வொருவரும் ராஜஸ்தான் குறித்து சேகரித்த தகவல்களே இன்னும் ஏழெட்டு கட்டுரைகளாகும் சாத்தியமுள்ளது என நினைக்கிறேன்.

இந்தியாவிலேயே அதிக பக்கங்கள் எழுதிய காந்தியின் மேஜையைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது அதை விஞ்சப் போகும் எழுத்தாளன் எட்டிப் பார்க்கும் காட்சி உச்சம்.

மொத்தத்தில் இது போன்ற பயணங்களில் கலந்து கொள்ள முடியவில்லையே என்ற வயிற்றெரிச்சலையும்(😁), எழுத்தின் வாயிலாக எவ்வளவு சாத்தியமோ அவ்வளவு அணுகி அறியும் வாய்ப்பைத் தந்ததே என்ற நிறைவும் ஒரு சேர மனதில் நிறைந்திருக்கிறது.

கையில் எடுத்ததும் முழுவதும் வாசிக்கத் தூண்டும் சுவையான பயண நூல்.

பாலை நிலப் பயணம் வாங்க/வாசிக்க: https://amzn.in/c3KZoIv

இவரது ஏனைய பயண எழுத்துக்களுக்காகக் காத்திருக்கிறேன்.

Friday, June 12, 2020

வெண்மலர் பறவை - அலகில் அலகு கவிதைத் தொகுப்பு குறித்து

இன்று (16-06-2020) jeyamohan.in தளத்தில் வெளிவந்தது

https://m.jeyamohan.in/132917/#.XuhXq1PmidM

இந்த ஆண்டின் விஷ்ணுபுரம் - குமரகுருபரன் விருது பெற்ற கவிஞர் வேணு வேட்ராயனின் அலகில் அலகு கவிதைத் தொகுப்பின் வாசிப்பனுபவம்.

வாயிலில் நின்று தயக்கத்துடன் கதவை ஒருக்களித்துத் திறந்து தலைநீட்டும் குழந்தையின் ஒற்றைவிழிப்பார்வை என்றே கவிதை வாசிப்பைக் குறித்து எழுதும் இம்முயற்சியை உணர்கிறேன்.



இத்தொகுதியை வாசித்ததும் மனதில் நிறைவது தூயதொரு வெண்மை.
வெண்மலர்களும் வெண்பறவைகளும் வெண்மேகங்களுமான ஒரு மனவெளி. இறகுகள் இதழ்களாக மயங்கி பறவையும் பூவும் ஒன்றென்றாகும் வெளி. "முடிவிலி இழையில் ஆடிடும் நனவிலி", "இலை உதிரும் தருணம்
நிகழும் ஓர் நடனம். மரணம்", "சிறகதிரும் பால்வெளி"
போன்ற சில வரிகள் வாசித்தது முதல் உடனிருக்கின்றன.

இத்தொகுப்பின் சிறந்த கவிதைகள் என நான் விரும்பியவை அனைத்துமே இருவகைகளுள் வரும். முதல் வகைக் கவிதைகள் தேர்ந்த புகைப்படக் கலைஞனென நுண்தருணங்களை கவிதை மொழியில் காட்சிப்படுத்துபவை. இரண்டாவது வகை மனதை உற்று நோக்கி அகநடனங்களை சொல்பவை.

முதல் வகைமையில் சில கவிதைகள் வரிசையாக அடுக்கப்படும் காட்சிகள். எனில் அவற்றை செறிவு கொள்ளச் செய்வது மௌனசாட்சியாய் இருக்கும் ஒன்றின் தன்மை. இக்கவிதையில் அது இரவு:

//.
தனிமையில் வளரும் நள்ளிரவு நிலா/ உறக்கத்தில் புரளும் கடல் அலைகள்./அலை அலையாய் மோதி செல்லும் மழைக்காற்று. /
கருவறையில் உதைத்து விளையாடும் செல்ல குழந்தைகள்./ மின்னல் இடும் கணப்பொழுது கோலங்கள். /
மௌனமாய் விழித்திருக்கும் இரவு...//

வானைக் கனவு கண்டு நீரில் துள்ளும் மீன், மரித்ததும் பறவையென்றாகும் கணத்தைப் பாடிய தேவதேவனின் கவிதை வரிசையில் இதில் ஒரு கவிதை

//விரைந்து நெருங்கும் கழுகின் கண்களில்/துள்ளி மறையும் புள்ளிமான்கள் / தரை தொடும் முரட்டுக் கால்களில் சிக்கித் துடிக்கும் முயல்குட்டி/உயரே உயரே பறக்கும் மருண்ட விழிகளில் சிக்குண்ட ஒரு சொல்/ அறியா அர்த்தங்கள் உலவும் வெளியில் சிறகடித்துச் செல்கிறது//

இன்னொரு கவிதை:
"சிறு சிறு குட்டைகளில்
தேங்கி நிற்கிறது
முன்னொரு காலத்தின் பெருநதி.
அவை ஒவ்வொன்றிலும் உதித்தெழுகிறது
அதிகாலைச் சூரியன்"

சென்ற கோடையின் துவக்கத்தில் சோழநாட்டு கோவில்களைக் காணவென்று பயணம் ஒன்று சென்றிருந்தேன். அனுதினமும் எழுந்தது முதல் உறங்குவது வரை பல கோவில்கள்.  பெரும்பாலும் ஆளொழிந்து கிடந்த கோவில்களில் சிற்பக் கலையின் உன்னதங்களும், பாடல் பெற்ற தலங்களாக விளங்கிய அங்கு எழுந்த தமிழும் இசையுமென
வேறொரு காலத்தில் அவ்வாலயங்கள் அமைந்திருக்கின்றன. திருமழபாடியில் கொள்ளிடக் கரையில் பல்லாண்டுகள் கண்ட ஆலமரங்களின் அடியில் நின்று
பார்த்த போது விரிந்த மணற்பரப்பில் ஆங்காங்கே தேங்கிய நதியில் அந்தி வெயில் சுடர்ந்து கொண்டிருந்தது. அந்நதி ஏதோ விதத்தில் அந்த காலமற்ற வெளியை என்றுமென நிற்கும் மகத்தான கலைமரபை பிரதிபலிப்பதாகத் தோன்றியது. அதைக் கவிதைக் கணமாக ஆக்கித் தந்தது இக்கவிதை. அவை ஒவ்வொன்றிலும் உதித்தெழுகிறது சூரியன் எனும் காட்சி மாற்றங்களுக்கிடையே மாறாதிருக்கும் பெருநெறி என்றும் தோன்றியது.

கவிஞர் வேணு வேட்ராயன்


இரண்டாவது வகைமையில் அமைந்த கவிதைகளில் அவரது ஆன்மீகமான தேடலையும் அகப்பயணத்தையும் சொல்லும் மொழி அமைந்திருக்கிறது. ஆழ்ந்திறங்கும் இரவின் அமைதியில் வெடித்துச் சிதறும் எரிமீன்களென சில வரிகள் ஆங்காங்கே தெரிக்கின்றன. புலன்களின் எல்லைகளைக் கடந்த உள்முக அனுபவம் ஒன்றைக் கடத்தும் கவிதைகளில் ஒன்று இது.

//திரிசடை அதிர் நிலம் உகிர் தோய் உதிரம்
பற்றி நாளமெல்லாம் நீரோடும் நெருப்பு
படபடபட சடசடசட
நடனமிடும் குளம்படிகள் சுழன்றடிக்கும் காற்றில் புரளும் செந்தீயின் பிடரி
சுடரும் மலரிதழ் மேல் அனந்தசயனம்
சாந்தம் சாந்தம் சாந்தம்//

ஒடுங்குதல் நிகழ்கிறது எனத் தொடங்கும் மற்றொரு கவிதையிலும் மனது அடங்கி காலாதீதமான ஒன்று நிகழும் கணம் நிகழ்ந்திருக்கிறது. களிறு என்ற படிமம் வரும் கவிதைகளில் சிறப்பான ஒன்று இது:

//நாட்கணக்கில் வனத்தில் திமிறிய களிறு / வெண்இதழ் மலரை கொய்து மெல்ல நீல வெளியில் வீசுகிறது /அந்தரவெளியில் தணித்து நீந்தும் வெண்மலர்//

மனதின் போக்கை கவனித்து நிற்கும் கவிதையென இன்னொன்று:

//ஆயிரமாயிரம்
இறகுகளின் பறவை
ஒரு கணத்தில்
ஒரு திசையில்
நகர்கிறது.
காலமற்ற வெளியுமற்ற
நிலையில் அது நிலைக்கிறது.//

"ஒளிந்திருக்கும் நினைவுகளை ரகசியமாய் மீளவாசிக்கும் மனம்" என்று துவங்கும் கவிதையில் // இரைவேண்டி கடும் வெயில்வெளியில் தவம் புரியும் ஒரு அரவம்// என்ற படிமமே முதல் வரியைச் சொல்லப் போதுமென்றும் படுகிறது.

இவ்விரண்டு வகைகளும் இணைந்து வரும் கவிதைகளும் இத்தொகுதியில் உண்டு.  நதிநீரில் முகம் காணும் மலர்கள், நீரில் காண்பது வேர்வழியே மலரென்றாகி சுடரும் நீரையே என்பதும் இருவகைமைகளையும் இணைக்கும் ஒரு கவிதை.

//நதிநீரில் முகம் காணும் கரைமலர்கள்/அருஞ்சுவை பருகும் வேரிதழ்கள்/மறைந்து மேலேறும் ஆழ்நதியின் நீர்/செந்தளிர்களில் ஒளிரும் உயிரின் சுடர்/


அறிந்தவற்றின் வாயிலாக அறியாதவற்றைத் தொட விழையும் மொழி யத்தனமே கவிதை எனும் வகையில், 'அளக்கமுடியாமைகளின் அலகு' என்றே 'அலகில் அலகு' தலைப்பு பொருள் படுகிறது. இதன் தலைப்பு வரி வரும் கவிதையில் வருவதோ இதேபோல காட்சிச் சித்தரிப்பும் அகப்பயணமும் இணையும் மற்றுமொரு புள்ளி. தன் இருப்பை அருந்திச் செல்ல முயலும் அந்தரப் பறவையின் காட்சி, அந்த நுண்தருணத்தை நலுங்காமல் தொட்டமையாலேயே இது கவிதையாகி வருகிறது.

"சரேலென பறந்து
சரிந்து இறங்கி
நிலைத்த நீரின்மேல் நின்றது
ஒரு நிறமற்ற பறவை.
அலகில் அலகு பொருத்தி அலைகளிலாடும் தன்னை
அது
அருந்திவிட்டுச் சென்றது"

ஓயாத மனதை உற்றுநோக்கி தியானத்தில் தன்னுணர்வை கரைத்துவிடும் முயற்சியின் கணம் என்று காட்சியும் கவிதையும் விரிந்து கொண்டே செல்கிறது.

விழிப்பு மனம் நனவிலியில் பற்றியேறும் கணங்களே கவிதைத் தருணங்கள் என்று சொல்கிறது இக்கவிதைத் தொகுதி.

Sunday, September 2, 2018

வனவாசி

https://www.jeyamohan.in/109452#.W4yrWegzZnI

அன்புநிறை ஜெ,

ஊட்டி காவிய முகாம் நாட்களின் ஒரு அதிகாலை நடையில், இந்தியா உருவாகி வந்த சித்திரத்தை, சிறு இனக்குழுக்களில் இருந்து பேரரசுகள் உருவாகும் சித்திரத்தைக் குறித்து ஜெ விளக்கியது, உள்ளூற சுழன்று கொண்டே இருந்தது. டி.டி.கோசாம்பி எழுதிய மேய்ச்சல் இனத்துக்கும் வேளாண் இனத்துக்குமான இடையறாத முரண். இதன் விளைவாக 'வனவாசி' நினைவில் எழுந்து வரவே மீள்வாசிப்பு செய்தேன்.

பழங்குடிச் சமூகங்கள் நிறைந்த வனங்கள் நிறைந்தது பண்டைய இந்தியா. வனங்களில் வாழ்ந்த இனங்களை நாகரிகத்தின் பலம் கொண்ட இனங்கள் வென்றதன் தொடர் சித்திரமே வரலாறு. விபூதி பூஷண் வந்த்யோபாத்யாய எழுதிய 'ஆரண்யக' எனும் வங்க நாவலின் தமிழாக்கம் 'வனவாசி' (தமிழில் த.நா.ஸேனாபதி - விடியல் பதிப்பகம்)

நகரத்திலிருந்து வேலை நிமித்தம் வனம் செல்பவன் வனவாசியாகி நகர் மீளும் கதை. கதை வங்காளத்துக்கும் பீகாருக்கும் இடையிலான ஒரு வனப்பரப்பில், பூர்ணியா பகுதியில், சுதந்திரத்துக்கு முற்பட்ட காலகட்டத்தில் நிகழ்கிறது. பெருங்காட்டு வெளியின் உரிமையாளராகிய ஜமீன் ஒன்றின் எழுத்தராக கல்கத்தாவிலிருந்து செல்லும் சத்தியசரணின் வாழ்வின் பிற்பகுதியில் முன் நினைவுகளென நிகழ்கிறது கதை.

வீட்டின் பரணை சுத்தம் செய்கையில் தட்டுப்படும் நாள்குறிப்பொன்றின் வழியாக சில சமயம் நமது முன்னோரது வாழ்க்கையின் வாயிலுள் நுழைந்துவிட நேருமல்லவா, அதுபோன்ற ஒரு கதையமைப்பு. பயணத்தில் பின் நழுவிச் செல்லும் மரங்கள் போல வனமென்னும் கதைக்களத்துள் பல காட்சிகள், பல சித்திரங்கள், பல மனிதர்கள் வந்து செல்கிறார்கள்.

கதையின் நாயகன் 'நாகரிக' நகரிலிருந்து 'பண்படாத' காட்டுக்குச் செல்கிறான். அவ்வனப் பகுதியை விளைநிலமாக மாற்றி ஜமீனுக்காக குத்தகைக்கு விடுவதே அவனது வேலை. ஓரிரு மாதங்களுக்குப் பிறகு வேலை தனக்கு ஒத்துவரவில்லை என்று கூறித் திரும்பிச்செல்லும் எண்ணத்தில்தான் தொடங்குகிறான். ஆரம்பத்தில் திகிலையும் ஏக்கத்தையும் உண்டுபண்ணும் காடு மெல்ல மெல்ல மோகினியென அவனை வசப்படுத்தி அவனுள் நிறைகிறது. கதைசொல்லியோடு நாமும் வனத்துள் நுழைகிறோம், வனம் நம்முள் நுழைகிறது.

அங்கு அவன் காணும் காட்சிகளும், எளிய மனிதர்களும், அவர்கள் வாழ்க்கை முறையும், அவன் இவற்றின் வழியாக அடையும் தரிசனமுமே இக்கதை.

காட்சிகள்:
லப்துலியா வனப்பகுதியின் அந்நிலப்பரப்பும், காடும் கதை வாசித்து வெகுநாட்களுக்கு மனதில் நிறைந்து விடக்கூடியது. மஞ்சம்புல் வேய்ந்த கூரைகள், தங்குதடையின்றி நிலவு பொழியும் ஃபுல்கியா நிலத்துப் பெருவெளி, பலவிதமான மரங்கள், பூக்களால் நிறைந்தது இக்காடு, எனில் பசுங்காடல்ல. ஆண்டுக்கு ஒரு முறை மழை பெறும், கடும் கோடையையும், கடும் குளிரையும் சந்திக்கும் காடுகள். அதன் உக்கிர வெயிலில், கரடு முரடில் கதை சொல்லிக்கு காளி தெரிகிறாள். கதை சொல்லி குதிரை மேலேறி காட்டினூடே செல்லும் காட்சிகளில் எத்தனை எத்தனையோ மரங்களின், மலர்களின் பெயர்களைக் குறிப்பிடுகிறார் - கஜாரி மரம், காட்டு வாதுமை, பலாசம், சாலமரம், தாதுப மலர்கள், இப்படிப் பலவகை. காட்டின் பல மரங்களும் மலர்களும் அறிய முடிகிறது.

பல பருவங்களும் வந்து செல்கின்றன, கடும் கோடை, காட்டுத்தீ, அடை மழை, குளிர், வசந்த காலம் என காடு பல்லுரு காட்டி அவனுள் வேர்பிடிக்கிறது. வனதேவதைகள் மண்ணிறங்கக் கூடிய நிலவுபூசிய பல இரவுகளை வனவிலங்குகளின் அபாயத்தை மீறிக் குதிரையிலேறிச் சென்று கானகத்தில் கதைசொல்லி செல்லும் பகுதிகள் கவிதையானவை, கனவு நிறைப்பவை.

கதை மாந்தர்கள்:
ஏறத்தாழ இருபதுக்கும் மேற்பட்ட கதைமாந்தர்கள், அவர்களோடு கதைசொல்லிக்கு நிகழும் அறிமுகங்களும், அவர்கள் வனத்தில் மேற்கொள்ளும் வாழ்க்கை முறைகளும், வாழ்வியல் போராட்டங்களுமாக நாட்குறிப்பென நகர்கிறது கதை. மிக மெல்லிய காற்று எதிர்பாராது பெருத்த ஓசையுடன் பொருட்களை வீழ்த்தி விட்டு செல்வது போல, சில கதாபாத்திரங்கள் மிகக் குறைவாகவே வந்து, மனதில் பெருஞ்சலனமேற்படுத்துகிறார்கள்.

தாவ்தால் ஸாஹூ எனும் ஒருவன் வட்டிக்குப் பணம் கொடுப்பவன், அந்நிலப்பகுதியில் செல்வப்பசையுள்ளவன் என்று அறியப்படுபவன், பழந்துணியில் பொரியரிசியுடன் அறிமுகமாகிறான். கடன் கொடுத்தவர்கள் ஏமாற்றிய பிறகு, காலாவதியான கடன் பத்திரங்களை அநாயசமாக கிழித்தெறிந்து விட்டு, 'நானேதான் எல்லாவற்றையும் சேர்த்தேன், நானேதான் தோற்றேன். தொழில் என்றால் லாபம், நஷ்டம் இரண்டும்தான் இருக்கும்' எனக் கடந்து போகிறான் - வறட்சியையும் வெள்ளத்தையும் ஒன்றென எதிர்கொள்ளும் பெருவனம் மட்டுமே கற்பித்திருக்கக்கூடும் இதை.

ஜயபால்குமார் என மற்றொருவன் இருபது வருடங்களாக மனைவி மக்களை இழந்த பிறகு முழுத்தனிமையில், தனது குடிசை வாசலில் வெறுமனே அமர்ந்திருப்பவன் - அவனைக் கண்டு முதலில் கதைசொல்லி வியப்படைகிறார். பிறகு அவனை சூழ்ந்துள்ள வனமும், நீலக்குன்றுகளும், புரசமர நிழலும், ஓடி ஓடி என்ன லாபம் என்று கதைத்தலைவனது மனப்போக்கை அங்கு செல்லும் அமைதியான ஆற்றுநீர் போல அமையச் செய்கிறது.

தாசியின் மகளாகிய குந்தா ராஜ்புத்திரன் ஒருவனுக்கு மனைவியாகி செல்வத்தில் திளைத்து, அவன் மறைவுக்குப் பின் குழந்தைகளுக்காக எச்சில் இலைக்காகக் காத்திருக்கும், இருளில் உதிர்ந்த தானியங்களைப் பொறுக்கும் வாழ்வு விதிக்கப்பட்டும், வலுக்கட்டாயமான தகாத உறவுக்கு இணங்காது இருக்கும் பெண். சரும வியாதி வந்து ஊராரால் கைவிடப்படும் ஒருவனைத் தனது பணிவிடையால் உடல்நலம் தேற்றி, அதற்கீடாகப் பணம் பெற மறுத்து தந்தையென எண்ணும் அவளது அன்பு. அத்தனை பருவகால மாற்றத்திலும் வேரூன்றி நிற்கும் வனவிருட்சம்.

தாதுரியா - காட்டுவாசிச் சிறுவன், கலைஞன். காடு அவனுள் கலையெனத் திகழ்கிறது. ஒரு வேளை உணவுக்கு வழியில்லாத போதும் 'சக்கர்பாஜி' நடனம் கற்றுக்கொள்ள அவன் படும் பாடும் அவனை மாணவனாக ஏற்கும் குருநாதரும்' அந்த மண்ணின் கலையின் இறுதித் துளிகள். அவனது இரும்புப் பாதை மரணம் நகரம் காடை அழிப்பதன் ஒரு காட்சியே.

யுகல் பிரசாத் - நன்கு படித்தவன், எனில் வனத்தில் தன் வாழ்வைக் கழிப்பவன், அரிய மலர்ச்செடிகொடிகளைத் தேடி வேறு நிலங்களிலிருந்து வனத்திற்கு கொண்டு வந்து விதைப்பவன். தனக்கென நோக்கமின்றி, காட்டுப் பகுதியின் வனப்பை மேலும் அதிகரிக்க வாழ்வை செலவழிப்பவன். அழிக்கப்படும் காட்டின் இறுதிக் கொடியை உயர்த்தும் பிரதிநிதி.

மஞ்சி - அறுவடைக்கு வரும் நாடோடிக் குடும்பத்தில் கிழவன் நக்சேதிக்கு இளையவளாக வாழ்க்கைப்பட்ட துடிப்பான பெண். அவளது உயிர்ப்பும் இளமையும் கான் தந்தது. வருடந்தோறும் அவள் காணும் அறுவடைக்கால சந்தை நகர வாழ்வெனும் மகுடியை அவள் முன் ஊதி மயக்கி அழைத்துச் செல்கிறது. இரண்டு முரணோட்டங்கள் ஏற்படுத்தும் சிக்கலில் குழந்தையையும் இழந்து தொலைந்து போகிறாள்.

இவர்கள் அனைவரும் சிறிதே வரினும், பெரிதும் மனம் நிறைப்பவர்கள்.

தரிசனம்:

கதை நடக்கும் 1920-களுக்கு மட்டுமல்ல என்றென்றும் ஏதோ ஒரு சமூகம் இன்னொன்றை உள்ளிழுத்தோ அழித்தோ முன் சென்று கொண்டுதான் இருக்கிறது. அவ்விதத்தில் வனவாசி பசுமைமாறாதது. ஏறத்தாழ
நூறாண்டுகள் தொடும் தருவாயிலும்(1920களில் விபூதிபூஷண் பந்த்யோபாத்யாய இக்காட்டுப்பகுதிகளில் பணிபுரிந்திருக்கிறார்) இந்த நாவல் இன்றைக்கும் பொருத்தமாகவும், வாசித்து முடித்ததும் வெளிவரும் பெருமூச்சை மேலும் நீட்டிப்பதாகவுமே இருக்கிறது.

மகாலிகாரூப மலைக்காட்டில் சத்யசரண் காணும் 90 வயது வனக்குடியைச் சேர்ந்த மூதாட்டியை அன்னபூரணி என்ற பராசக்தியை நரை மூதாட்டியாக வருணித்த கவிஞரை நினைவுகூறுகிறான். "சில இனத்தாரிடம் என்ன பண்பாட்டின் வித்து ஒளிந்து கிடக்கிறதோ, அதைப்போகப் போக அவர்கள் வளர்த்துக் கொண்டே இருக்கிறார்கள். வேறு சாராரோ ஆயிரம் ஆண்டுகள் ஆகியும் ஒரே இடத்தில் தூணைப் போல அசைவற்று நிற்கிறூர்கள்" என்ற வரி சிந்தனையைக் கிளர்த்தியது. சொல்வளர்காட்டில் வரும் வரி நினைவில் வந்தது - ஞானம் தேடி அனைத்து குருநிலைகளுக்கும் அலைந்த லௌபாயனரிடம் சுஃபலர் சொல்வது - "ஆலமரத்தடியிலிருந்து ஆலமரத்தடிக்குச் செல்லலாம், மரங்கள் வேறு, நிலம் ஒன்று". மாறாதிருப்பதை காலம் உண்ணும், எனினும் ஆறு ஓடி அறிவதை கடல் அமைந்து அறிகிறது. கடல் சுழற்சியில் அறிவதை, விசும்பு பரந்து அறிகிறது, விசும்பு விரிந்து கிடப்பதை, மனம் சுருங்கி அறிகிறது. நாகரீகம் என்பதை பயன்மதிப்பு என அளவிடுகையில் நாமறியாத ஒன்றை தரிசனம் என்று அறிகையில் நாம் உணரக்கூடும். வளர்ச்சியடைந்த நாடுகள் பின்தங்கிய நாடுகளை 'முன்னேற்றும்' பொறுப்பைத் தலைமேல் எடுத்து நடந்து கொள்ளும் முறை கண்கூடு.

இவர்களைத் தவிர முக்கியமான கதை நாயகி சாந்தால் அரசரின் பேத்தி இளவரசி பானுமதி. இவளை கதைசொல்லி சந்திப்பதே இக்கதையின் வனம்-நகரம் சந்திப்பின் மையம். அவள் நேற்றைய 'பூலோகத்தையே ஆண்ட' காட்டரசுக் குலத்தின் இளவரசி, இன்று ஆடுமேய்க்கும் அரசரின் மரணத்துக்குப் பிறகு கடனில் தத்தளிப்பவள். கதைசொல்லி, நாகரிகத்தின் உச்சமென கதைக்குள்ளேயே கருதப்படும் வங்காளத்தின் நவீன இளைஞன். அவன் ஆலமரத்தடியில் சாந்தால் குல முன்னோர்களின் சமாதியில் பூ வைக்கும் காட்சியே இந்தக் கதை என்றும் சொல்லலாம். தோற்றவரின் மறைவுக்கு வென்றவன் சிந்தும் இருதுளிக் கண்ணீர்.

கல்கத்தா நகரில் அமர்ந்து குற்ற உணர்ச்சியோடு அவன் நினைவுகூறும் இக்கதையில், அவன் வனத்தை அழிக்க நீளும் நகரின் இரும்புக் கரம். அவனை மயக்கி அவனுள் நுழைபவள் வனமெனும் மோகினி, எனில் அவளது நினைவுகளுக்கு மலர் வைத்து, காட்டை அழித்து விளை நிலமாக்கி, பலரும் 'முன்னேற' வழி செய்து நகர் திரும்புகிறான் கதைசொல்லி. 'முன்னேற்றம்' என்பதைக் கேள்வியாகவே பார்க்கிறான். "மனிதனுக்கு வாழ்வில் வேண்டியது என்ன? முன்னுக்கு வருவதா? மகிழ்ச்சியா? முன்னுக்கு வந்தும் மகிழ்ச்சி இராவிட்டால் அதனால் என்ன பயன்?" ஒரு சில கணம் பானுமதியை மணந்து அங்கேயே தங்கிவிடும் சாத்தியமொன்றை அவன் மனம் கனவு காண்கிறது. எனில் அவனது பழகிய நரகத்துக்கு அவன் திரும்பி வருகிறான்.

கதையில் கதைசொல்லி நினைத்துக் கொள்கிறான் - "இந்தப் பிரதேசத்தில் காண்பதுபோல் - பரந்த இந்த வெளியும், மேக வரிசைகளும், மலை வரிசைகளும், தொலைதூரம் வரை விரிந்து கிடப்பது போல் - பானுமதியிடமும் ஒருவிதக் கூச்சமற்ற தன்மையும், எளிமையும், தங்குதடையற்ற ஒரு சுதந்திர மனப்பான்மையும் இருந்தன. காடும் மலையும் இவர்கள் மனதில் இப்படி ஒரு விடுதலை உணர்ச்சியை உண்டு பண்ணியிருந்தன. பானுமதியிடம் நான் கண்ட ஆதிப் பெண்ணின் இயல்பை நாகரிகச் சமூகத்தில் காணமுடியாது. அங்கே பெண்ணின் ஆன்மா சமூகக் கட்டுதிட்டங்களில் அழுந்தி, உணர்வற்றுக் கிடக்கிறது."
இது நிதர்சனம், எனில் நாகரிகம் என்பது கூர்மழுங்கிய கூழாங்கல்லின் அழகைக் கண்டு பொறுக்கிச் சேர்க்கும் நாம், கரடுமுரடான கற்களை மிதித்துக் கடந்து செல்வது போலத்தானே.

வனம் என்பது நமது உள்ளுறையும் அகம். இருள் நிறைந்தது, தானாய் வளர்வது, கட்டற்றது, கருணையும் அற்றது, பாவனைகளுக்கான தேவையற்றது. நாம் காட்டும் வெளித்தோற்றம் நகரம், பிறரது பார்வைக்கானது, ஒளிமிக்கது, அழகு செய்யப்படுவது, கட்டுறுத்தி, மட்டுறுத்தப்பட்டது. இவை கொள்ளும் முரண்களில் புறம் வெல்லும் தருணங்களே மிகை, எனில் அகம் அழியாத வரையே சமன் நிலைக்கிறது. இருளே ஒளியை சுமக்கிறது. வனம் சென்று முழுமையை மீண்டவர் இல்லை,தன் மனதுள் சென்றுவிட்டவனும் அவ்விதமே.

'காடு' நாவல் வாசித்ததும் மனதில் நின்ற நிறம் பச்சை. இக்கதையில் காடு இருந்தும் பசுமை மனதில் இல்லை. இரண்டும் காடழிந்து நாடு உட்புகுந்த பின்னர் காட்டை அசைபோடும் நினைவுகளே. இரண்டும் வாசித்த பல நாட்களுக்கு காட்டை நம் கனவுள் புகுத்தி விடுகின்றன. எனில் அவ்வளவிலேயே அதன் ஒற்றுமைகள் நின்றுவிடுகின்றன. காடு நீலியெனில் வனவாசி மோகினி. குறிஞ்சிப்பூச்சூடி காமமென காதலென அலைக்கழிக்கும் யட்சி காடு காட்டும் 'காடு'. கனவில் கண்ட நிலவு மிதக்கும் ஆற்றங்கரை வனவாசி மோகினி 'வனவாசி'.

கானகம் தன்னளவில் ஒரு தனி உயிர். அதற்கெனப் புலன்களும் உணர்வுகளும் உண்டு. அதன் கருவில் உருவான மனிதன், அந்தத் தொப்புள்கொடியறுத்து நாகரிகம் எனும் ஆடை அணிந்து கொண்டாலும் அந்த வடு இன்னும் அவனில் இருக்கிறது. அவனது ஆழ்மனதுள் அச்சமென, இருளென, வேட்டையென, மீறல் என காடு இருந்துகொண்டே இருக்கிறது. அதுவே இந்த நாவல்களோடு நம்மைப் பிணைக்கிறது.

மிக்க அன்புடன்,
சுபா

Wednesday, August 29, 2018

ஆளரவமற்ற வீடு - பஷீர்

காலச்சுவடு வெளியிட்ட அனல்ஹக் தொகுதியில் வந்த 'ஆளரவமற்ற வீடு' நான் தெரிவு செய்திருக்கும் சிறுகதை. ஓவியனும் கவிஞனுமாக இரண்டே கதைமாந்தர்கள்.

பொதுவாக பஷீருடையது எளிமையும் மேலோட்டமான வாசகர்களுக்கு முகத்தில் சிரிப்பை உருவாக்குவதுமான நடை. ஒரு சிறு குழந்தையின் பார்வையில் விரியும் வியப்பு மேலிட்ட உலகு பஷீருடையது. பஷீரின் ஆரம்பகால படைப்புகளில் ஒன்றான (பிரேம லேகனம்) காதல் கடிதத்தில் எழுதியிருப்பார் - 'வேடிக்கை வாழ்க்கையின் நறுமணமாகிறது. பரவாயில்லையே. வேடிக்கையே வாழ்க்கையின் நறுமணம்'. வேடிக்கையும் வியப்புமான பஷீரின் இனிய உலகத்தில் உட்புகுந்த பின்னர் நுண்ணிய வாசகனுக்குத் திறந்து கொள்வதோ ஒரு எல்லையற்ற பெருவெளி. அவர் அலைந்து திரிந்து கண்டு கொண்ட அன்பின் பெருவெளி.

இக்கதை அந்தக் குழந்தையின் வியப்பின் விழிகள் இல்லாது தனித்துத் தெரிந்தது. எதனால் இப்படி ஒரு கதை அந்தத் தொகுதியில் என்பதே என்னை இதன்பால் ஈர்த்தது.

இக்கதையை இரண்டு தளங்களில் புரிந்து கொள்கிறேன். 

1. கலைகள் எதற்கு? ஓவியம் கவிதைகள் கதைகள் என அனைத்துக் கலை வடிவங்களின் நோக்கமும் தேவையும் என்ன என்று கேட்டால் அது ஒரு பயணம் என்றே தோன்றுகிறது. எங்கிருந்து செல்வது? எங்கு வரை செல்வது? அவரவரது முழுமைக்கான தேடலின் பயணம். அறியாமையிலிருந்து அறிதலுக்கு இட்டுச் செல்லும் பயணத்தின் திசை அறிந்தவற்றிலிருந்து தொடங்கி அறியாதன நோக்கி நகர்வதாகவே உள்ளது. அதுபோன்ற முயற்சியை கலைஞன் ஒருவன் மேற்கொண்டு அதுவரை மானுடன் அறியாத ஒன்றின் தரிசனத்தைக் காட்டும்போது சராசரிக் கவலைகளில் உழல்பவனுக்கு அச்சுறுத்துவதாகவே இருக்கிறது. எனில் சககலைஞர்கள் அவனைப் புரிந்து கொள்கிறார்களா? 

பண்டு மலைக்குகைகளில் பேச மொழியென ஒன்றில்லாத போது தன் கைத்தடங்களையும், வேட்டைக்குச் சென்றவனின் சித்திரங்களையும் செதுக்கி வைத்த ஆதி மானுடன் அளவுக்கே இந்தக் கேள்விகள் பழமையானவைதான். எனில் இக்கதையில் பஷீரின் தரிசனம் தெரிகிறது.


மனித சமூகத்தின் தொடக்கம் முதல் இறுதிவரை நீளும் ஒரு தொடரில், தனிமையும், வறுமையும், காளான் பூத்த, பூனை உறங்கும் அடுப்பும், நீர்த்த கஞ்சி வாழ்க்கையும் கொண்ட சங்க காலப் புலவன் முதல் இன்று வரை நீளும் புறக்கணிக்கப்பட்ட கலைஞர்களின் பெருவரிசையில் ஒரு சாதாரண நிகழ்வென அவனது இருப்பும், இறப்பும் நடந்து முடிகிறது. எனில் கலை எஞ்சுகிறது. இது முதல் தளம்.


2. கலைகள் என்பது நம் அறிவு மற்றும் தர்க்கம் மட்டும் சார்ந்ததல்ல. நமது மனம் நனவுள்ளம், கனவுள்ளம், நுண்ணுள்ளம் - ஜாக்ரத், ஸ்வப்னம், சுஷுப்தி எனும் அடுக்குகளால் ஆனது. இவற்றுள் ஜாக்ரத்ஐத் தாண்டி ஸ்வப்னம், சுஷுப்தி, துரிய நிலைகளின் வெளிப்பாடுதான் கலைகள். அங்கு உறையும் ஆழ்தள அறிதல்களை நிகழ்த்த கலைகளே உள்ளன நம்மிடம். 

ஓயாது கொந்தளிக்கும் சமூகத்தை, கலைஞனைச் சூழ்ந்திருக்கும் புறவுலகை ஜாக்ரத் என்னும் விழிப்புமனம் என்றும், வார்த்தைகளாக, படிமங்களாக, அணிகளாக உணர்வுகளை வெளிப்படுத்தும் அந்தக் கவிஞனை கனவுமனம் ஸ்வப்னம் என்றும், கோடுகளாக, தீற்றல்களாக, வண்ணங்களாக எண்ணங்களை அறிதல்களைத் தொகுத்துக் கொள்ளும் அந்த ஓவியனை நுண்ணுள்ளம் சுஷுப்தி என்றும் புரிந்து கொள்கிறேன். தினசரி வாழ்வின் விழிப்பு நிலையிலிருந்து மேலான விழிப்பு நிலையில் விழித்துக் கொள்வதே கலை எனலாம். சுஷுப்தியில் விதையென உறங்கும் ஆலமரம். இக்கதை மரத்தை அலைக்கழிக்கும் புறவெளியில் - வெயிலும், காற்றும், மழையும், கடுவெளியும், மண்ணும் எனத் தொடங்கி, வேர்வழி மண்ணிறங்கி வேர்களென எஞ்சியிருக்கும் விதையைக் கண்டடையும் பயணம். 

இது இரண்டாம் தளம்


1. விரிவு

முதல் நோக்கிற்கு இது சாதாரணமான சிறுகதை. பொதுவாக ஒரு நல்ல சிறுகதை அதன் கடைசி வரிக்குப் பிறகு வாசகன் மனதில் மீண்டும் தொடங்குவது. இக்கதையில் முதல் வரியே கடைசி வரியும். 

'எனக்கு உடம்புக்கு முடியவில்லை. நான் தூங்கிக் கொண்டிருக்கிறேன். தயவுசெய்து என்னை எழுப்பிவிடாதீர்கள்' என்ற விநோதமான வேண்டுகோள் மூடிக்கிடக்கும் ஜன்னலின் கதவுகளில் எழுதப்பட்டிருக்கும் ஒரு ஆளரவமில்லாத வீடொன்றின் முன் கதை தொடங்குகிறது. 


கதைக்குத் தலைப்பென இருக்கும் அந்த வீடு, அதன் முன் நிற்கையில், "வரலாற்றுக்கு முற்பட்ட ஒரு காலகட்டத்தில், பழமையான ஆள் நடமாட்டமில்லாத பகுதியிலுள்ள தேவாலயத்தின் அருகில் நிற்பது போல ஒரு உணர்வை ஏற்படுத்தும் வீடு". அந்த அம்மானுடத்தன்மை யாரும் அறியாது மரணித்து வெள்ளெலும்பென எஞ்சியதால் அந்த வீட்டை சூழ்ந்தததா? என்றைக்குமான அறிதல்களை உலகுக்கு சொல்பவர்கள் முன்னர் சமுதாயம் உணரும் அல்லது கட்டமைக்கும் அமானுடத்தன்மையா அது!?

அதிர்வு மிக்க இடங்களில் ஆள்நடமாட்டமில்லாத போது ஏற்படும் ஒரு அமானுடத்தன்மை காலம் கடந்து அங்கு காத்திருக்கும் உணர்வுகளின், அதிர்வுகளின் அலையென நம் மேல் படிவதை பல தொன்மையான கோவில்களில் நாம் உணர்ந்திருக்கலாம், அங்கு அமர்ந்திருக்கும் புறாக்களும் வௌவால்களும் கூட நாமறியாத ரகசியத்தோடு நம்மை உற்று நோக்கும் பார்வை கொண்டிருக்கும். 
கம்போடியாவின் காடுகளில் கைவிடப்பட்டு மீண்டும் இன்று சில நூற்றாண்டுகள் கழித்து மீட்டெடுக்கப்படும் பல கோவில்கள் உள்ளன. கோவில்களின் மீது பெருமரங்கள் வளர்ந்து கோவிலை இறுகக் கவ்வியிருக்கும். இன்னும் சிலகாலம் கண்டடையப் படாதிருந்தால் அப்பெரு விருட்சங்கள் தனது வேர்களெனும் உகிர்களால் கவ்வி விண்ணோக்கி ஏகியிருக்கக் கூடும். இத்தகைய மாபெரும் கலைப் படைப்புகள் எதற்காக யாரை நோக்கி எழுப்பப்படுகின்றன! காலத்தோடு இடையறாது கலைஞன் எதற்காகப் போரிடுகிறான்? தான் வாழும் காலத்தில் சமூகத்தால் புறக்கணிக்கப்படினும், கைவிடப்படினும் எதற்காகப் பறந்தெழ முயற்சிக்கிறான்? 

அந்த ஓவியனுக்கு உலகப் புகழ்பெற்றுத் தந்த பல்வேறு ஓவியங்களை அவன் முன்பே வரைந்து வைத்திருந்தான். எனில் ஏன் அவன் அப்போது உலகப் புகழ் பெறவில்லை? ஏன் அவர்கள் அனைவரும் குற்றமும் குறையும் சொன்னார்கள்? 

பல்லாயிரம் பேர்களில் ஒருவன் அந்தப் பல்லாயிரம் பேர் சென்றடையமுடியாத ஒரு புள்ளியைச் சென்று தொடுகிறான். அதுவரை மானுடம் அடையாத ஒன்றை அடைகிறான். அது ஒரு பெரும் அறைகூவல். சராசரிகளுக்குப் புரிவதில்லை. சக கலைஞர்களின் ஆணவத்தைச் சீண்டுகிறது. கலையினூடாக அந்தக் கலைஞன் சென்ற தொலைவை, அவனது ஊடாக அந்தக் கலை சென்ற தொலைவை 
அந்த யாத்ரீகனைத் தவிர, சமகாலத்தில் அறிபவர்கள் வெகுசிலரே. 
கரையோரத்தில் நின்று வேடிக்கை பார்ப்பவன் ஆற்றின் பயணத்தை அறிவது எங்கனம். ஆற்றின் பெருவெள்ளத்தைக் குடங்களில் அள்ளி ஆற்றின் மீதான விமர்சனங்களை வைக்கிறார்கள். ஆற்றின் கட்டின்மையில் குதித்து நீந்துபவர்களுக்கே அனுபவம் கிட்டுகிறது. எனினும் அது நதி என்பதாலேயே ஊற்றுமுகம் விட்டெழுந்து யாருமில்லாத மலையுச்சிகளிலும் நிலங்களிலும் ஆறு பயணித்துக் கொண்டேதான் இருக்கிறது.

அந்த ஓவியரது வாழ்நாட்களில் அவனைப் பலவிதமான விமர்சனங்கள் நிந்தனைகள் சூழ்கின்றன. ஓவியன் தனது வாசல்களை ஜன்னல்களை அடைத்துக் கொள்கிறான்,எனில் அவனது அறையிலிருந்து இசை கசிவதற்கும், வெளிச்சத்தின் பொன்னூலிழைகள் வெளித்தெரிவதற்குமான இடைவெளி அந்த அடைக்கப்பட்ட கதவுகளில் இருக்கிறது. அவனது சுயசரிதையை எழுதும் அந்தக் கவிஞனுக்கு மட்டும் எப்போதும் உள்நுழைய அனுமதி தருகிறான்.

முதலிலும் இறுதியிலும் ஒளிபாய்ச்சி காட்டப்படும் அந்த வேண்டுகோள் - யாரும் தவறவிடாதிருக்கும்படி நீலவண்ணப் பிண்ணனியில் சிவப்பெழுத்துக்களில் அந்த ஓவியன் எழுதியது. அந்த வேண்டுகோளில் முதல் வாசிப்பு மேலும் விரிந்து மற்றொரு கதவைத் திறந்து கொள்கிறது.

அந்த அறிவிப்பு மானுடத்தின் மேல் அவன் கொண்ட நம்பிக்கையை நோக்கி நீட்டிய கரம். எனக்கு உடம்புக்கு முடியவில்லை என்ற அறிவிப்பு எழுதப்பட்டிருந்தும் அணுகி வரும் கரங்களற்றதாகவே நமது சமூகம் வேடிக்கை பார்த்துக் கடந்து போகிறது. அடைக்குந்தாழ் அன்பிற்கு இல்லை, திறக்கும் அன்பு சூழ்ந்திருந்த சமூகத்துக்கு இல்லை. 

"வாசல்களும் ஜன்னல்களும் அடைத்திருந்தாலும்.. உள்ளே பாட்டுக் கேட்காமலிருந்தாலும்.. நான் உள்ளேதான் இருப்பேன். நீங்கள் ஒரு பேனாக் கத்தியால் அந்த ஜன்னல் கொக்கியை நீக்கிவிட்டு உள்ளே வரலாம்" என்கிறான். 
இரவு பகல் பாராது அவனது அதே வாழ்க்கையை வாழும் கவிஞனிடம் பேசிக் கொண்டிருக்கிறான். உள்ளே பாட்டுக் கேட்காமலிருந்தால், கத்தியால் ஜன்னல் கொக்கியை நீக்கிவிட்டு உள்ளே வரச்சொன்னவன் தனது இறுதியை உணர்ந்தே அந்த வரியைச் சொல்லியிருக்கக் கூடும். 

உள்ளே தொடர்ந்து இசைக்கும் பாடலும், ஒளிக்கோடுகளும் அவனது இருப்பை அறியும் வழியாகி இருக்கின்றன. உள்ளே இசை தவழும் வரை கலை நிகழ்கிறது. அந்த இசை நின்றுவிடில், அங்கு கலை ஒழியுமெனில் எச்சமென அங்கும் கழிவிரக்கங்களும் ஏமாற்றங்களும் மட்கி நாற்றமெடுக்கலாம். இசை நின்று போன பிறகும் அறையில் நிறைந்திருக்கும் எல்லையற்ற ஒளியென அவனது கலை எஞ்சுகிறது.


2. விரிவு

இந்தக் கதைக்கு ஏன் ஒரு ஓவியனும் கவிஞனும் தேவைப்படுகிறார்கள்? 

ஓவியம் உலகை அடக்கும்
உலகம் ஓவியத்தை அடக்கும்
ஓவியன் தன்னை அடக்கி
உலகை ஓவியத்துக்குள் அடக்குவான் - ஆத்மாநாம் கவிதைகளில் ஒன்று.


இன்மையில் கரைவதென்பது அசாதரண நிகழ்வல்ல. அதை ஒரு இடைவெளியாகக் கருத வேண்டியதுமில்லை. நான் இறந்துபோனால்... அந்த இடைவெளி நிரப்பப்படுமா...?இங்கே நான் என்று குறிப்பிடுவது என்னையல்ல.
மனித சமூகத்தின் தொடக்கம் முதல் நீங்கள் வரையிலான ஒரு நான் உண்டல்லவா? அந்த நான் என்றே புரிந்துகொள்ளுங்கள் - என்கிறார் பஷீர்

இந்த நீண்ட நிரையை மானுட மனம் என்று கொள்கிறேன். மனம் என்பதே அறுபடாத நீட்சியென ஓடும் எண்ணங்கள்தானே! 

நமது மேல்மனம் அறியாத போதும், தன்னுள்தான் நிறைந்து விதையென ஓர் எண்ணம் நுண்ணுள்ளத்தில் கருக்கொள்கிறது, யாரும் கண்டுகொள்ளாத போதும் அங்கே ஓவியனால் வரையப்பட்டு காத்திருக்கும் ஓவியங்கள் போல. நமது கனவுள்ளம் ஸ்வப்னம் ஒரு ரகசியப்பாதையைத் திறந்து சுஷுப்தியைத் தொடவல்லது.; திறப்பதற்கான அனுமதியும் வழிகளும் பேனாக்கத்தியும் கொண்ட கவிஞனைப் போல. நனவுள்ளமான ஜாக்ரத் இடையறாத சலனத்தாலானது, சூழ்ந்திருக்கும் சமூகம் போல. அதன் பேரிரைச்சலினிடையே என்றேனும் கனவுள்ளம் வெளிப்படுத்தும் உணர்வுகளை ஜாக்ரத் பெற்றுக்கொள்ளலாம்.

இன்னொரு விதத்தில் மூன்றடுக்குகளும் ஒரு கலைஞனில் நிகழ்பவையே. 
நாம் அறியும் மனமாகிய ஜாக்ரத்தைக் கடந்து ஒரு ரகசியப் பாதை போன்ற ஸ்வப்னத்தைத் திறந்து சுஷுப்தியில் உறைந்திருக்கும் விதையைக் காண்பதே கலை முகிழ்க்கும் தருணம். துரியம்தான் அசைவிலாத உள்ளுணர்வு. அது சுஷுப்தி வழியாக, ஸ்வப்னம் வழியாக வெளிப்படுகிறது. ஜாக்ரத்தால் அதைப் புரிந்து கொள்ள முயல்கிறோம்.

இந்த இரண்டு விதமான வாசிப்புகளிலிருந்தும் நான் புரிந்து கொள்வது:

நான் நீ என்ற இரட்டை நிலையிலிருந்து நீ மட்டும் எஞ்சுவதே மரணம் என்பது பஷீரது தரிசனம். தன்மேல் எச்சமிட்ட பறவைகளை, நாற்சந்தியில் நிறுத்திய சமூகத்தை எல்லையின்றித் தன் புன்னகையால் அரவணைத்துக் கொள்கிறார். எல்லாக் கலைஞர்களும் அதைத்தானே செய்ய இயலும், எவ்வளவு உன்னதமாயினும் மண்ணிலேயே கலை உருவாகிறது. கலைஞன் கலை என்ற இரட்டை நிலையிலிருந்து கலலஞன் மறைந்த பின்னர் கலை மட்டும் எஞ்சுவதே இக்கதையில் பக்ஷீர் காட்டும் மரணம்.

Sunday, May 13, 2018

மின்னல் மலர்த்திடும் தாழை


'மின்னல் மலர்த்திடும் தாழை' என்னும் தலைப்பில் சிங்கப்பூர் சிராங்கூன் டைம்ஸ் மாத இதழில் இம்மாதம் (பிப்ரவரி 2018) வெளிவந்த லா.ச.ரா படைப்புகள் குறித்த எனது வாசிப்பனுபவக் கட்டுரை.


எல்லோருக்குமென சுழலும் உலகில் அவரவருக்கான உலகங்கள் தனித்த அச்சில் சுழல்கின்றன. காட்சிகள் ஒன்றே எனினும் தரிசனங்கள் வேறு - லா.ச.ரா வார்த்தைகளில் சொல்வதெனில் அவரவர் பூத்ததற்கு தக்கபடி. புரியாத நடைக்குச் சொந்தக்காரர் என்று பரவலாகப் பெயர் பெற்ற லா.ச.ராமாமிருதம் எனும் லா.ச.ராவின் எழுத்துக்கள் அந்த வகைமைதான். அவரவர் பூத்ததற்கு தக்கபடி மணம் கொள்பவை.

இது அவரது நடை மற்றும் எழுத்து குறித்த ஆய்வுக் கட்டுரையோ விமர்சனமோ அல்ல. அவ்வெழுத்து என்னுள் நிகழ்த்திய அலைத் தளும்பல்களை, அதிர்வுகளைப் பதிவு செய்யும் முயற்சியே.

கல்லூரி நூலகத்தில் ஒரு புத்தகக்தின் அட்டையில் நரைத்த புருவங்களோடு இருந்த இந்தத் தாத்தா ஒரு மந்திரவாதி என்பது அறியாமல் இவரது 'அபிதா'வுடன் அறிமுகமானேன். என் அப்பா அந்தப் புத்தகத்தைப் பார்த்து விட்டு லா.ச.ரா, தான் பணிபுரிந்த பஞ்சாப் நேஷனல் வங்கியில்தான் பணிபுரிந்தார் என்று கூறிவிட்டு மேலதிகமாக 'லா.ச.ரா பார்ப்பதற்கு மகாபாரதத்தில் வரும் பகதத்தன் போலிருப்பார். பகதத்தன் எனும் மன்னனுக்கு வயோதிகம் காரணமாக புருவங்கள் நரைத்து இமை இரப்பைகள் தொங்கி விழிகளை மூடியிருக்கும், எனவே விழித்து நோக்கவென பட்டுத்துணியால் இமைகளை நெற்றியோடு சேர்த்துக் கட்டியிருப்பான். கௌரவ சேனையில் போரிட்ட அவனை வெல்ல அவன் பட்டுத்துணியில் சரம் தொடுக்குமாறு அர்ச்சுனனிடம் கூறினார் கிருஷ்ணர்' என்று ஒரு சிறு காலாட்சேபம் செய்தார்.

வங்கி அலுவலர், பகதத்தன், தாத்தா என ஒரு கலவையான மன உருவகங்களோடு லா.ச.ராவை வாசிக்கத் தொடங்கினேன். கொதிக்கும் வெந்நீர்ப் பானையை சூடறியாது வெறுங்கையில் தூக்கிவிட்டது போல இருந்தது என்று கூறலாம். இன்றளவும் சூடும் குன்றவில்லை, இறக்கிவைக்கவும் மனமில்லை.

அபிதா - தான் சிறுவயதில் காதலித்த பெண்ணின் நினைவுகளோடு தான் வளர்ந்த கிராமத்துக்கு தன் மனைவியோடு வரும் நடுவயது கடந்த நாயகன், தன் காதலியின் பெண்ணைக் காண நேரும்போது, அவன் விட்டுச் சென்ற காலம் அப்போதே உறைந்து இக்கணத்தில் இருந்து தொடர்கிறதெனக் கொண்டு தன் மனதை அவளிடம் இழக்கிறான். அதில் நினைவுகளைக் குறித்து வரும் பத்தி:

'ஆயினும் ஒரு எண்ணம் - ஒரே எண்ணம் - நீர்த்துப் போன சாம்பலுள் இத்தனை நாள் புதைந்து ஒளிந்திருந்த ஒரு பொறி, நினைவின் காற்றுவாக்கில் பற்றிக்கொண்டு மறதியின் சருகுகளை எரித்து ஜ்வாலையாக்கி என்னைத் தன்முன் உந்தித் தள்ளிச் செல்கிறது. நானும் பற்றி எரிகிறேன். ஒன்று கண்டேன். எதுவுமே மறப்பதில்லை. எல்லாமே ஒளிமறைவில் பாயச் சமயம் பார்த்திருப்பவையே'.

இந்த வரிகள் உடனேயே மனதுள் தன்னைச் செதுக்கிக் கொண்டது. எதுவுமே எனக்கும் மறப்பதில்லை; மிக நுண்ணியதாக சில தருணங்களில் மனதுள் ஓடிய வரிகள், மனம் நுகர்ந்த வாசனைகள், ஒலிகள், சிறு வயதில் என் வீட்டில் தலைக்கு மேல் ஓங்கிய ஜன்னல் வழியே, சூரியன் மலைக்குப் பின்னால் மறைவதைப் பார்க்க நின்றிருந்த போது ஒரு காகிதப்பூ பூங்கொத்து அதை மறைக்க முயன்று, அதன் மெல்லிய இதழ்கள் ஒளி பெற்று ஒளிர்ந்து ,மெல்ல மெல்ல சூரியனோடு அவிந்தது - இதுபோல ஆயிரமாயிரம் நினைவுத் துணுக்குகள்; எனக்கு இரண்டு வயதுவாக்கில் இருந்த  வாடகை வீட்டின் முழு வடிவமும் ஒளியும் நிழலும், அங்கு நிகழ்ந்தவற்றின் நினைவுத் துணுக்குகளும், அங்கு முதன்முறையாகக் கேட்ட பாடலும் நினைவிருக்கிறது. அனைத்தும் நினைவில் இருப்பது ஒருவிதமான போதையாகவும் ஒருவிதமான துயரமாகவும் இருக்கிறது ஒரே நேரத்தில்.  
நினைவுகளில் இருந்து விடுதலை உண்டா என்ன? எனவே ஒவ்வொரு முறை முற்றிலும் கடந்து விட்ட ஒன்றை ஏதோ ஒரு நோக்கோ, இசையோ, மணமோ தொட்டு மேலெழுப்புகையில் இந்த வரிகளும் உடன் மேலெழும் - 'எதுவுமே மறப்பதில்லை. எல்லாமே ஒளிமறைவில் பாயச் சமயம் பார்த்திருப்பவையே'

புரிந்தும் புரிந்துவிட்ட பாவனையிலுமாக மகுடி முன் மயங்கி அதைத் தொடர்ந்து சென்றடைந்த மற்றொரு சிறுகதைத் தொகுதி லா.ச.ராவுடையது, 'பச்சைக்கனவு' என நினைக்கிறேன்.

அந்தத் தொகுதியில் ஒரு சிறுகதை தரிசனம். 'எனக்கு வயது பன்னிரண்டிலேயே கன்யாகுமரி மேல் காணாமலே காதல் கொண்டு விட்டேன். நான் குமரன். அவள் குமரி' எனத் தொடங்கும் கதை, கதையென்றே சொல்ல இயலாத நடை. குமரனாய்க் காதலித்த கன்யாகுமரியைக் காண மனைவி சகிதம் தலை நரைத்த காலத்தில் செல்கிறான். (அபிதாவும் இதுதானே! - மானுட வாழ்வே இதுதானே. அவளில் தொடங்கி அவளைத் தேடி அலைந்து அவள் மடியில் மடிவதுதானே. 'அவள்' மீண்டும் மீண்டும் வருகிறாள் லா.ச.ராவின் தேடலில்.). காத்திருந்த வயதுகளின் கணக்குளின்றி குமரியைக் காண நெருங்குகையில் படபடப்பு. கன்யாகுமரியின் அழகை இப்படி எழுதுகிறார்: 'சிற்பியின் செதுக்கல் முடிந்து முழுமை கண்டதும் அவனையே காலால் உதைத்துத் தள்ளிக் கொக்கரிக்கும் சௌந்தர்யம்'. கலை கலைஞனை மீறி பேருருக் கொண்டெழும் தருணம். உமையைப் பிரிந்த சிவம் வடக்கே உறைபனியில் தவமிருக்க, தென்கோடியில் இவள் அவனுக்கென தவமிருக்க, காத்திருத்தலின் வியர்த்தம் குறித்த ஏன் என்ற கேள்வியோடு கதை முடிகிறது. 'வீம்புத் தவம், வீண் தவத்தில் ஒருவருக்கொருவர் ஏன் அரண் கட்டிக் கொண்டே இருக்கிறீர்கள்? ஏன்? அர்ச்சகர் அலங்காரம் செய்யத் திரையை இழுத்து விட்டார். ஏனாகவே அவள் அதன் பின் மறைந்து போனாள்.' என்னுள் இருந்த கன்யாகுமரிக்கு அக்கதை மிகவும் பிடித்துப்போனது. கண்ணறியாது மலர்ந்த தாழை மணம் மனதைப் பித்தாக்குவது போல அறியாத மன இடுக்குகளில் வேர் பிடிக்கும் இவர் எழுத்து.

சமீபத்தில் இணையத்தில் மதுரையின் வாடிக்கைக் காட்சிகளை அரிதான புகைப்பட தருணங்களாகப் படம்பிடித்து கட்புலன்களில் நாம் காணத் தவறியவற்றை அடிக்கோடிட்ட ஒரு வெளிநாட்டுப் பயணியின் புகைப்படத் தொகுப்பைக் கண்டேன். அன்றாடத் தூசு படியாத வெளிப்பார்வையில் ஸ்படிகம் போல மின்னுகிறார்கள் மனிதர்கள்.
அதுபோல நாம் அனுதினமும் காணும் மனிதர்கள்தான் இவரது கதைகளிலும் வருகிறாரகள். எனில் அவர்களது சலிப்புமிக்க அன்றாட வாழ்வைத் தவிர்த்து, உச்ச தருணங்களேயே படம் பிடிக்கிறார் லா.ச.ரா. தீவிர ஸ்வரங்கள் மீட்டி எழுப்பும் உணர்வெழுச்சியே இவரது எழுத்தின் ஆதார ஸ்ருதி எனலாம்.


ஒவ்வொரு வார்த்தைக்கும் தவம் செய்கிறேன் என்று சொல்லும் இவரது நடை, கட்டற்று சிதறிப் பரவும் சொற்பிரவாகம் என்று உருக் கொள்கிறது. அது நம்முள் உறைந்திருக்கும் அனுபவங்களெனும் பாறைகளில் மோதி கரை ஒதுக்கும் சிற்சில அலைகளில் நம்மைக் கண்டுகொள்ள முடிந்ததெனில், நம் உணர்ச்சிகளுக்கு எழுத்துருவம் கொடுத்தவரென லா.ச.ரா நமக்கு அணுக்கமாகிறார். அப்படிக் கரையேறியது கசடெனினும் அமுதெனினும் அது நதியின் பிழையன்று.

இவரது மொழி எண்ணத்தின் மொழி, சிந்திக்கும் வேகத்தில் தெறித்து விழுபவை எனத் தோன்றுபவை. எனில் நாள்கணக்கில் வருடக்கணக்கில் காத்திருந்து அணிகோர்க்கப்படவை என்பது ஒரு முரண்.

தன் வம்சம் விளங்காது போக தன் மகனுக்கே சாபமிட்ட ஓர் அன்னையின் முதல் சொல்லிலிருந்து "அடே" எனத் தொடங்குகிறார் 'புத்ர' எனும் நாவலை. அந்தச் சொல் அருவமாய் ஒரு பாத்திரமாய் பிரசவிக்கும் தருணத்தை இப்படி எழுதிச் செல்கிறார்:

"...ஆத்திரத்தில் பூமிமேல் கையறைந்து எழுந்த ஆவியின் தும்பில், எரிந்த வயிறின் முத்துக் கொதியில், நாபிவேரினின்று கிளைகளோடு பிடுங்கிக்கொண்ட வேகத்தின் சுழலில், அனல் மூச்சின் கொந்தளிப்பில், ரத்தக் கொதிப்பில், உடல் கக்கிய வேர்வையில்,

சப்தத்தின் சத்தியத்தில்,

நா நறுக்கிய வடிவில்,

ஸர்வத்தின் நிரூபத்தினின்று,

வாக்குத் தடுத்த வரம்புள், சொல் விதித்த விதியில், அதுவே என் உயிர்ப்பாய்,

அதன் கதியே என் ப்ரக்ஞையாய்,

நான்

பிதுங்கினேன்."

இதில் 'நான்' அச்சொல். பிறந்துவிட்ட சொல்லின் பிறப்பு அனுபவம் அது. 'உயிரோடு உயிர் கூடி உயிர் பிறப்பதுபோல்.. வார்த்தைகளுக்கே உயிர் உண்டோண்ணோ'(கணுக்கள்)

சபித்த பொழுதில் தவவல்லமை அனைத்தையும் இழக்கும் முனிவர்கள் குறித்துக் கதைகளில் கேட்டிருக்கிறோம். அந்த சாபச் சொல் பிறக்கும் தருணத்தில் அதன் ஊற்று முகத்தில் நாடி நரம்பெங்கும் ஊடுருவும் நடுக்கம் உட்பட சபிக்கப்பட்டவரினும் சபித்தவரே எரிந்து போகும் கனலை எழுத்தில் கொண்டு வருகிறார்.

அச்சொல் தன்னைக் குறித்து இப்படிச் சொல்கிறது:
"நான் விருப்பு வெறுப்பற்ற வாக்கு
என் ஜனிப்பே என் பொருள்
சொல் செயலாவதன்றி ஏன்? எதற்கு? என்று? எனும் கலகங்கள் எனக்கில்லை". சொல் பிரம்மமாகும் தருணம்.

உருவமின்றி, சொற்களென உருத்திரளாமல் வாசகனுள் கடந்து சென்று விட்ட உணர்வுகளை எழுத்தில் கடத்திவிட அவரால் முடிகிறது. கதையுள் பாத்திரங்களுக்குத் தோன்றும் எண்ணங்களை அவை தோன்றிய கணமே அதன் நிர்வாணத்தோடு வாசகனுள் மடைமாற்றுகிறார். அதற்கு அவர் கையாளும் உவமைகளும் படிமங்களும் அடர்த்தியானவை:
'மௌனம் தன் சிறகுகளை விரித்து, உங்கள் மேல் இறங்கியிருக்கிறது' (குரு-ஷேத்ரம்)
'வீணையின் ஸ்வரக் கட்டுகளை விருதாவாய் நெருடிக் கொண்டிருக்கையில், திடீரென்று ஒரு வேளையின் பொருத்தத்தால் ஸ்வரஜதிகள் புதுவிதமாய்க் கூடி ஒரு அபூர்வ ராகம் அளிப்பது போல, அவள் என் வாழ்ககையில் முன்னும் பின்னுமிலாது முளைத்தாள்' (அபூர்வ ராகம்)
இன்னும் பல.

சலனம் குறித்தும் இரைச்சல் குறித்தும் ஏகப்பட்ட வார்த்தைகளை இரைத்து எழுதிவிடலாம். தனிமை குறித்தும் மௌனம் குறித்தும் வாசகனிடத்து அவற்றைக் கடத்துமாறு எழுதுவது அரிது.
த்வனியில் தனிமை குறித்து இப்படி எழுதுகிறார்:

"தனியாயிருந்தால் மட்டும் தனிமை கிட்டி விடுமோ? அதுவே முதலில் இருக்கிறதோ?

ஏனெனில் நான் எங்கு போனாலும், யாரை விட்டுத் தப்பி வந்தாலும், எப்பவும் என்னோடு இருக்கிறேனே!

துறந்து விட்டதால் மட்டும் தனிமை வருமோ? ஒன்றைத் துறந்தால் மற்றொன்று அதனினும் பெரிது இட்டு நிரப்ப வந்து விடுகின்றது.

சகலமும் துறந்தவனுக்கு உலகமே உடைமை. ஆகையால் சின்ன உடைமை, பெரிய உடைமை எனும் தாரதம்மியங்கள் தவிர உண்மையான தனிமையுமில்லை.

உண்மையான துறவுமில்லை"


இவரது எழுத்துக்கள் முதற் பார்வைக்கு பாற்கடலில் அவரே சொல்வது போல, குடும்பம் என்னும் பாற்கடலைக் கடைந்து உள்ளுறையும் அமுதையும் உடன்பிறந்த நஞ்சையும் வெளிக்கொணர்பவை; எனில் அதன் வழியாக பிரபஞ்ச தரிசனம் வரை மேலெழுபவை. குடும்ப வலைகளுக்குள்ளேயே புழங்கி அம்மாக்களும் அத்தைகளும் மாமிகளுமான கதைமாந்தர்களில் நூற்றாண்டு பழைய வாழ்க்கை முறைகளையும் மரபுகளையும் விவரித்த இவரது எழுத்தில் இன்றும் பசுமை இருக்கிறது. மின்னல்கள் தெரிக்கின்றன. இவரது எழுத்தில் வெளிப்படும் பெண்கள் பேராளுமைகள். அனைவரும் அம்மாக்களே. அவரே சொல்வது போல அவரது அம்மா அவர் எழுதித் தீராத நதி. தாய்மையின் எழுதித் தேய்ந்த முகங்களை மட்டுமன்றி தடுமாற்றங்களையும், குரூரங்களையும் எழுதியிருக்கிறார்.


கொல்வேல் கொற்றவையும் அருளும் அன்னையுமென நிற்கும், லா.ச.ரா மீள மீள எழுதும் "அவள்" அவரது குலதெய்வமான பெருந்திருவின் உருவகம். இலக்கியம் வாயிலான அவரது தேடல் பெண்மையின் அழகை, பன்முகங்களை, உள்ளொளியை அவர் எழுதும் படிமங்களாக, உவமைகளாக மாற்றி நிறைக்கிறது.

இவரது எழுத்தை அணுக முடியவில்லை எனக் குறை கூறுபவர்கள் இருக்கலாம், ஒரே கதையைத் தான் மீண்டும் மீண்டும் எழுதுகிறார் என்ற குற்றச்சாட்டும் இவர் மேல் உண்டு. அனைத்தையும் ஒரு புன்னகையோடு கடந்து நிற்கிறார் லா.ச.ரா. அவரது வாக்குமூலம்:
"நீங்கள் ஏற்றுக்கொண்டால் உண்டு. இல்லையேல் அப்பவும் சந்தேகம் உங்களுடையது. உண்மை என்னுடையது அவ்வளவுதான்" - இந்த அறுதியான கூர்மையோடு அவரது சொற்கள் காலத்தைத் தாண்டி நிற்கின்றன.