அருமணி - அது நிகழ்ந்து(சர்வாங்காசனம்) ஏறத்தாழ மூன்று வருடம் (ஆகஸ்ட் 2023) ஆகிறது.
இன்று (மே 2026) மீண்டும் ஒரு சிறு நகர்வு, சிரசாசனத்தில் நிற்பது, அதுவும் சுவற்றின் பிடிமானத்தோடுதான். அதிலும் ஓரிரு வினாடிகளே சாத்தியமாகி இருக்கிறது . இன்னும் பல படிகள் இதில் இருக்கிறது. ஆனால் தலைகீழாக சிரசாசனத்தில் நிற்பது இப்பிறவியில் நிகழச் சாத்தியமா என மனம் வியந்ததே அதிகம். குருவருளால் இன்று கைகூடியது.
புறவயமான கண்கூடான மாற்றங்களையே நாம் அடையாளமாக, மைல்கற்களாக கொள்கிறோம். ஆனால், பயணம் என்பது அன்றாடம் சின்னஞ்சிறு அடிகளாக நடந்து கொண்டே இருப்பதில்தான் நிகழ்கிறது.
ஒவ்வொரு முறையும் மலையேற்றத்தில் நமை உடைக்கும் ஒரு கட்டம் வரும். இவ்வளவு தான், இதற்கு மேல் ஒரு அடியும் சாத்தியமில்லை என மனம் அரற்றும். மூச்சை ஏற்க முடியாமல் நுரையீரலும், வலியைத் தாளாமல் கால்களும் இற்றுப் போனது போன்ற ஒரு நிலை. அதிலிருந்து நமை விடுவித்து முன்னகர்த்த மேலிருந்து ஒரு கரம் தேவைப்படும். அது எந்த வடிவிலும் வரலாம். அது நமை தொட்டு மீட்கும் வரை பிரயத்தனத்தை, பயணத்தைக் கைவிடாதிருப்பது மட்டுமே நாம் செய்யக் கூடியது.
அதுபோல கடந்த சில காலமாக இந்த யோகப்பயணம் மலையேற்றமாக மாறி வருகிறது. சாண் ஏறாவிட்டாலும் முழம் சறுக்கும் தருணங்களே அதிகம். ஏற்றமா இறக்கமா எனப் புரிபடாத பாதைகளின் வழி பயணம்.
யோகத்தில் மூன்று வருடங்களுக்கு மேல் கற்பதற்கு என்ன இருக்கிறது என சமீபத்தில் ஒரு நண்பர் கேட்டார். மரபார்ந்த யோகத்தை முறைப்படி 12 வருடங்கள் கற்பதற்கு பாடத்திட்டம் இருக்கிறது. அதனினும் முக்கியமாக முதலில் கற்றவற்றை அன்றாட வாழ்க்கை முறையாக மாற்றுவதற்கே சில வருடங்கள் நீடித்த இடைவிடாத பயிற்சி தேவையாகிறது. அதன் பலன்களை அனுபவித்து உணர்ந்த பிறகே அடுத்த கட்டத்திற்கு வாயில் திறக்கிறது. புதிது புதிதாக எதையோ கற்றுக் கொண்டே இருப்பதே கல்வி எனும் பிரமை உடைவதற்கே காலம் ஆகிறது. 'நிற்க அதற்குத் தக' என கல்வியை நம் முன்னோர் வகுத்திருந்தாலும் யோகத்தில் அதன் பொருள் 'இடையறாது நீடித்து நிற்க அதற்குத் தக' என்றாகிறது. உடல், பிராணன், மனம், சித்தம் என அடுக்குகள் நுண்மையாகிக் கொண்டே செல்வதால், எந்த ஒரு பயிற்சியும் ஒரு சில நாட்களில் முழுவதுமாய் கைவருவதில்லை. உதாரணமாக, முதல் கட்டப் பயிற்சியிலேயே அறிமுகமாகி, சில வாரங்களில் நன்றாக செய்வதாக நாம் எண்ணிக் கொள்ளக்கூடிய ஏகபாத பிரணாமாசனத்தை எடுத்துக் கொண்டால் ஐந்து வருடப் பயிற்சிக்குப் பிறகு அது தரும் பலன் அதற்கு முன்னர் வருவதில்லை. பயிற்சிகளும் அதன் விளைவுகளும் உடல் சார்ந்தது மட்டுமல்ல.
மேலும் ஒரு ஆசனத்தை மிகச் சரியாக செய்து விடுவதும் உடலை செம்மைப்படுத்துவதும் யோகத்தின் அறுதி நோக்கமல்ல. நம் மனதையும் நம் வாழ்க்கைப் பாதையை உருவாக்கும் குணங்களையும் பற்றிய விழிப்புணர்வைப் பெறுவதும், அவற்றை எவ்விதம் மாற்றுவது, என்னவாக உருமாற்றுவது, எப்படிக் கடந்து செல்வது என யோகம் கற்பிக்கிறது.
பலருக்கும் எளிதாகவே வாய்த்து விடக்கூடிய இந்த சிரசாசனத்திற்காக இவ்வளவு எழுதவில்லை. நாம் கண்ணால் பார்த்துவிடக்கூடிய ஒரு கருவியாக இங்கு உடல் உள்ளிருப்பதை வெளிக்காட்டுகிறது. உள்ளே ஒன்றைத் தலைகீழாக்குவதும், கட்டுடைப்பதும் அறிவாலோ, உணர்வுகளாலோ, வார்த்தைகளாலோ நிகழ்வது அல்ல. ஒவ்வொரு தளத்திலும் மாற்றம் நிகழ வேண்டி இருக்கிறது. உடலின் நிலை மாறுவதைக் காட்டிலும் மனப்பாங்குகள், மன அமைப்புகள் மாற்றமடைய பல மடங்கு முயற்சியும் சிரத்தையும் தேவைப்படுகிறது. இன்னும் ஆழ்மனமும் அதைத் தாண்டிய ஞானமும் என செல்திசை நீள்கிறது.
ஒவ்வொரு சிறு அறிதலும், அதனால் அடையும் மிகச் சிறிய மாற்றமும், அத்தனைக்கு அத்தனை அரியதாக இருக்கிறது. பிறவிப் பழக்கங்கள், நாட்பட்ட விருப்பு வெறுப்புகள், பழகிப்போன பயங்கள், அடையாளம் காணவே இயலாமல் உள்ளே ஒளிந்திருக்கும் அகங்காரத்தின் வண்ணப்பூச்சுகள், என ஒவ்வொன்றையும் உணர்வதற்கே பல முறை ஒவ்வொரு சில்லாக உடைத்தெறிய வேண்டி இருக்கிறது.
அதனையே யோகம் செய்கிறது; நல்லாசிரியரும் செய்கிறார். இதன் வழியே நாம் உணரச் சாத்தியமான அனைத்து ஏற்றத் தாழ்வுகளிலும் அவரது கரம் உடன் வருகிறது.
"நன்றும் வரலாம் தீதும் வரலாம்
நண்பன் போலே கண்ணன் வருவான்"
எனக்கு மிகப் பிடித்த கண்ணன் பாடலின் வரிகள் இவை. கண்ணன் என் சற்குரு என்றான் பாரதி. நல்லாசிரியனாய் நண்பனாய் சற்குருவாய் உடன் வருவது கண்ணன் என்றே அகம் உணர்கிறது.
இந்த அனுபவங்களால் உணரப்படுபவற்றை யோகம் உத்தேசிக்கும் பயனாக ஆகும்வரை தொடர்ந்து பயில்வது, அதன் வழியே ஒரு சிலவற்றை ஸ்திரமாக்குவது, வேறு சிலவற்றைத் தலைகீழாக்குவது, ஒரு சிலவற்றை இல்லாமலாக்குவது, பகீரதப் பிரயத்தனம் என்று சில சமயங்களில் மலைப்பு ஏற்படுகிறது. அது நிகழ சிறிதேனும் வாய்ப்பிருக்கிறது என இன்று சிரசாசனம் உணர்த்தியதால் இந்தப் பதிவு.
மனத்துக்கண் நிகழாமல் சொற்களாக நின்று விடுபவை யாவும், குறள் சொல்வது போல 'ஆகுல நீர பிற' - வெற்று ஆரவாரம்தான். அவ்விதம் வெற்று ஆரவாரமாக தேங்கிவிடாது, ஆழமும் அதன் சிகரமும் காணும் பயணம் குருவருளால் தொடரட்டும்.







