Wednesday, June 3, 2020

மௌனத்திடம் ஒரு மன்றாட்டு


1930களில் கிழக்கு வங்காளத்தில் ஆங்கிலேயருக்கு எதிராக சூர்யா சென் (மாஸ்டர் தா) என்பவர் தலைமையில் நடைபெற்ற சிட்டகாங் ஆயுதக்கிடங்கு தாக்குதல் என்ற வரலாற்று நிகழ்வை கதைக்களமாகக் கொண்ட படம் 2012-ல் வெளிவந்த 'சிட்டகாங்'. அதன் நடுவில் மலரும் மெல்லிய நேசத்தை சொல்லும் பாடல் இது

இப்போது இந்த சிட்டகாங் பங்களாதேஷில் உள்ளது.

ஷங்கர் இஷான் லாய் என்ற மூவரின் இசையில் வெளிவந்த படத்தில் இடம்பெற்ற பாடல் 'போலோ நா'. ஷங்கர் மகாதேவன் பாடிய இப்பாடலுக்கு அந்த வருடத்துக்கான சிறந்த பிண்ணனிப் பாடகருக்கான தேசிய விருது கிடைத்தது.

பாடல்:
https://youtu.be/BG_9-7xJuKQ

சில பாடல்கள் விழி அறியாது பூ விரிவது போல மெல்ல மலரும், அதன் மணம் மட்டும் மனதில் தங்கி விட பிறகேதோ தருணத்தில் பாடல் நினைவில் மேலெழுந்து வந்து உள்ளே கமழ்ந்து கொண்டே இருப்பதை உணர்வோம். அப்படி ஒரு பாடல் இது.

படத்தில் இந்த பாடல் ஆங்காங்கே பல துண்டுகளாக வரும். முழுமையாக ஒருமுறை கேட்டு விடமுடியாதா என்று ஏங்கச் செய்யும். படம் பார்த்த அன்று இரவு மற்றதெல்லாம் அகன்ற பின்னர் இந்த ஒரு பாடலின் ராகமும் சரோட் இசையும் மட்டும் உள்ளே எஞ்சியிருந்தது. இது வரமு என்று வெகுநாள் எண்ணியிருந்தேன். பாகேஸ்ரீ (இந்துஸ்தானி ராகம்) என்று இசையமைப்பாளர் சங்கர் மகாதேவன் கூறியிருப்பதால் அதுவே சரியாக இருக்கும். (இந்துஸ்தானி பாகேஸ்ரீயில் அவரோகணத்தில் ஒரு ரிஷபம் மாத்திரம் அதிகம்; வரமுவில் ரி கிடையாது)
ஸ்வரங்களை இனம்காணும் ஞானம் எனக்கில்லை, உணர்வுகளே ராகங்களுக்கு இட்டுச் செல்கின்றன, எதுவாயினும் அழகான நிலவொளி சொட்டும் மெட்டுக்களில் ஒன்று இப்பாடல்.

சரோட் தந்திகள் ஒலிக்க, தம்பூர் மெல்ல சுருதி சேர்க்க இன்னொரு ஒற்றைக் கம்பி மீட்டலென ஷங்கர் மகாதேவன் பாடத் தொடங்கவும், வாத்திய இசை மெல்லத் தேய்ந்து அவர் குரல் மட்டும் ஒலித்து மீண்டும் சிறிது நேரத்தில் இசை இயைந்து கொள்ளும். சரணத்துக்கு முன்னர் வரும் கிடார் இசையும் இந்தப் பாடலோடு உறுத்தாமல் சேர்ந்து கொள்கிறது. மௌனத்திடம் ஒரு மன்றாட்டு இப்பாடல்.

Bolo na, bolo na,
Bolo naa, bolo naa..

பேசிவிடு ஏதேனும் பேசிவிடு

rituon ko ghar se nikalne toh do
boye the mausam khilne toh do
hothon ki munder pe ruki,
motiyon si baat bol do,
pheeki pheeki si hai zindagi
cheeni cheeni khwab ghol do
dekho na beet jaayen,
ye lamhe, ye ghadiyaan..

பருவங்களை வீடுகளுக்குள் இருந்து வெளியே வரவிடு..
நாம் விதைத்த வசந்தங்களை மலரவிடு..
இதழின் எல்லைகளில் சிக்கிய சொற்களை
முத்துக்களென உதிர்த்துவிடு..
சாரம் இல்லாதிருக்கிறது வாழ்வு இனிமையின் கனவுகளைக் கலந்து விடு..
பார்..இந்த தருணங்களை..இந்த மணித்துளிகளை நழுவவிடாதே..

dhadkan jhoom jhoom
saansein rum-jhum,
man ghunghroo sa baaje
ankhiyaan payal
sapne kangna
tan mein thirkan saaje
kuhniyon se dhel ke kehti hawa
itar ki sheeshi khol do zara
raag mehkao,
geet chhalkao,
misri si gholo na..
bolo na..

இதயத்துடிப்பு தாளமிட,
சுவாசம் இயைந்துவிட,
மனம் சலங்கையென சிணுங்குகிறது..
கண்களே கொலுசுகள்,
கனவுகளே வளையல்கள்,
நடனம் உடலை அலங்கரிங்கிறது..
காற்று தன் கரங்களால் உந்தி
சுகந்தத்தைத் திறந்து விடச் சொல்கிறது..
ராகத்தைக் கமழ விடு..
கீதத்தை இசைத்துவிடு..
இனிமையைக் கலக்கவிடு..
பேசிவிடு ஏதேனும் பேசிவிடு...

sannaton ki choti kheencho
shor ki raunak laao.
kaanch khamoshi farsh pe todo
halla pyaar sajao..
aaj inkaar pukaar bane
aaj chuppi jhankaar bane
shabd khankao, chhand bikhrao,
man ke sang ho lo na, holo na,
bolo na.. bolo naa..

நிசப்தத்தின் இறுகிய பின்னலை அவிழ்த்துவிடு..
ஒலியின் ஒளிர்வைக் கொடு..
மௌனமெனும் கண்ணாடியை தரையில் சிதறவிடு..
அன்பின் ஆரவாரத்தை ஒலிக்க விடு..
இன்று மறுப்பு அழைப்பாகட்டும்..
இன்று மௌனம் பேரிசையாகட்டும்..
சொற்களைத் துள்ளவிடு..சந்தத்தை பரவவிடு..
மனதோடு ஒன்றிவிடு..ஒன்றிவிடு..
பேசிவிடு ஏதேனும் பேசிவிடு..

ப்ரீத்திலதாவாக நடித்த நடிகை வேகா டாமோடியாவின் ஒளி மின்னும் எளிய முகமும் இப்படத்தின் அழகுகளில் ஒன்று. நடிகை ஷோபாவின் முகத்தில் திடீரென்று தோன்றி மறையும் ஒரு கணப் புன்னகை மின்னல் போல ஒன்று இவரது சிரிப்பிலும் மிளிர்கிறது.

இத்திரைப்படத்தில் வரும் மற்றொரு பாடலான 'Bechain hein sapne' வங்காள மொழியின் இசையும் இனிமையும் கலந்த பாடல், அழகான வரிகள். அது இன்னொரு நாள்.

2 comments:

  1. அருமை! பாடலைக் கேட்டதில்லை எனும் போதிலும் உங்களுடை மொழிபெயர்ப்பும் , உங்கள் அனுபவமும் அதன் விவரணையுமே ஒரு முழுமையைத் தருகிறது.... மொழி பெயர்ப்புக்கான வார்த்தைகளின் தேர்வும் , மொழிநடையும் ஆழமான உண்ர்வை ஏற்படுத்தியது.

    ReplyDelete
  2. நன்றி ஸ்ரீ.. அவசியம் பாட்டைக் கேளுங்கள்..

    ReplyDelete