Friday, June 5, 2020

காலையெனும் கவிதை




ஒவ்வொரு அதிகாலையும் ஒரு தொடக்கம். புவியின் முன் அனுதினுமும் முதல் விளக்கேந்தும் புலரி. விண்ணொளி எழ, இரவின் ஐயங்களும் சஞ்சலங்களும் விலகுகின்றன.


பயணங்களில் எப்போதும் தவறவே கூடாத பொழுதுகள் அதிகாலையும் அந்திமாலையும். இயற்கை மனிதனோடு பேசுவதற்காகக் காத்திருக்கும் பொழுது அது.  இமயத்தின் பனிமுகடுகளில் சூரியன் முதல் திலகம் தீட்டியவுடன் அடுக்கடுக்காக அத்தனை மலைகளும் மங்காப்பொன் சூடக் கண்டது இறையெழுந்த தருணங்களில் ஒன்று.

அதிகாலை குறித்த இளம் பருவத்து நினைவுகள் தாத்தாவோடு பிரிக்க முடியாதபடி பின்னப்பட்டவை. ஆதித்ய ஹ்ருதயம் சொல்லியபடி, வட்டத் திகிரியென சூரியன் கண்களுக்குள் சுழல்வது வரை அதிகாலைக் கதிரைப் பார்க்கச் சொல்வார்கள் தாத்தா. வேம்பின் ஊடாக சூரியன் தொலைவில் உதிப்பதைப் பார்த்து நின்ற காலைகள். தூக்கத்தில் விடியலைத் தவற விட்ட நாட்களில் கூட நேரடியாக வீட்டின் உள்ளே கரங்களை நீட்டி முகம் காட்டும் கதிரோன். சன்னல் வழியே உள்நுழைந்த சாய்ந்த ஒளித்தூண்களில் தெரியும் நுண்துகள்களைப் பற்ற முயன்றபடி வெகுநேரம் அமர்ந்திருந்தது குழந்தைப்பருவத்தின் ஆழப்பதிந்த நினைவுகளில் ஒன்று.

பல அதிகாலைகள் நினைவில் எழுகின்றன. விடிவதற்கு முன் வாசல் முழுவதும் வண்ணங்கள் வரையும் மார்கழி மாதத்து அதிகாலை. தேர்வுக்காக படிக்க எழுந்தமர்ந்து தூக்கத்துடன் போராடும் காலைகள், பழனி நடைபயணத்தில் முதற்கதிர் மண்தொடுவதைப் பார்த்தபடி நடந்த காலைகள், சீர்காழியின் குரலோடு விடியும் அதிகாலைகள், பள்ளி நாட்களின் பதட்டமான காலைகள். பரபரப்பு மட்டுமேயான நகர வாழ்க்கையில் கூட அதிகாலைகள் காணக்கண்ணிருப்போருக்காக வெகு அழகாகவே விடிகின்றன. ஒவ்வொரு நாளையும் புதிய முகம் கொண்டே கிழக்கு வரவேற்கிறது.


ஆயிரம் கரங்கள் நீட்டும் அன்னையாய் அருள் பொங்கும் முகத்தைக் காட்டி இருள் நீக்கும் தந்தையாய் வெய்யோனைப் பாடியவர் கண்ணதாசன். நானிலம் உளநாள் மட்டும் நிற்கும் பாடல். எனில் இன்றைய பதிவு காலையைக் குறித்தது, தலைவனைப் பற்றியதல்ல தலைவியைப் பற்றியது - உஷை எனும் தலைவி.

காலையைக் கவிதையெனக் காணும் ஒரு பாடல். 2017ல் வெளிவந்த, மஞ்சு வாரியரின் அழகான நடிப்பில் 'உதாரணம் சுஜாதா' மலையாளத் திரைப்படத்தில் காயத்ரி வர்மா பாடிய "கசவு நொரியுமொரு புலரி".

ஸ்ரீரஞ்சனி ராகத்தின் ஒளியைக் காலைக்கு உரித்தாக்கிய இசையமைப்பாளர் கோபி சுந்தர். D. சந்தோஷ் எழுதிய வரிகள்.

https://www.youtube.com/watch?v=Hy6hKjk9CLc&feature=share

Kasavu njoriyum oru pulari…
Kalabham aniyum usha malari… பொன்பட்டுத் துகில் அணியும் ஓர் அதிகாலை
சந்தனத் திலகம் தீட்டும் அதிகாலை

Aalolam ilakum orithalile himakanam aruliya kathirukal oru puthu,
மெல்ல ஆடும் ஓரிதழில் பனித்துளிகள் அருளிய கதிரொளி

Aakaasham aruna niramaniyum asulabha surabhila yaamamaayi
Aa Ganga ozhuki ozhuki varum anupama niralaya kavyamaayi
வானம் சிவப்பை அணிந்துகொள்ளும் அழகான சுகந்தமான தருணமாக..
அந்த கங்கை ஒழுகி வரும் நிகரில்லாத வண்ணமய காவியமாக ..

Maarimukilin thoovalithu pozhinjeedumoru kanni paadam
Onnu viriyan innulayum ilam pookkal ivide
மழைமுகிலின் மென்தூறல் இப்பதியன்களில் விழ
மொட்டவிழக் காத்திருக்கும் இளம்பூக்கள் இங்கே

Pularoli aetho kanyayayi mizhi ezhuthunnarike
Poothu vidarum punyamithu pulari malaru thiriyum aria kathiroli
ஒரு கன்னி மைதீட்டுவது போல இக்காலை
பூத்து மலரும் நன்மை போல இந்த அதிகாலை

Aaraamam udaya radham anayum abhinava kisalaya gehamaayi
Aashaadam uyiril ithal aniyum athisaya sumadhura soonamaayi
சூரியனின் தேர் அருகணைய ஒளிக்கரங்கள் முளைத்தெழும் கதிர்களாகும்
ஆஷாட மாதம் அதிசய அமுதம் நிறைந்த மலராகும்


Ethu kuliril mungi ithal ulanjaadum oru panineer poovu,
onnu theliyan kaathirunnu veyil naalam ivide
இந்த குளிர்காலையில் உலைந்தாடும் பனிமலர்
கதிர் இந்த நாளைத் துலங்கிடக் காத்திருக்கிறது

Nira kathiretho thoovalaayi niram ezhuthum vazhiye,
kaattilulayum pulakamithu tharala lathika padarum aria pularoli
எழுகதிர் வண்ணத்தூரிகை கொண்டு வரைந்து செல்லும் பாதையில்
மெல்லிய கொடி மென்காற்றில் உலைவது போல ஒளி படர்கிறது

-------
ஒளியோடு நம்பிக்கையை நிறைக்கும் அழகான பாடல். அறையோடு அடைந்து கிடக்கும் இந்நாட்களில் கூட இசை வழியாக காலையின் புத்துணர்வை நிறைத்துவிட இந்த ஸ்ரீரஞ்சனியால் முடிகிறது.  பனித்துளிகள் புல்பரப்பில் உருளும் உணர்வைத் தரும் மலையாளத்தின் மனம் மயக்கும் சொற்கட்டுகள்.

எனக்குப் பிடித்த மற்றும் சில அதிகாலைப் பாடல்கள்


1. Pavanarachezhuthunnu kolangal - இசை: S.பாலகிருஷ்ணன்
கவிஞர்: பிச்சு திருமலா
திரைப்படம்: வியட்நாம் காலனி
ராகம்: மாயமாளவகௌளை
https://youtu.be/Gh3NBwBW0Tg

2. Brahma kamalam sreelakamakiya - இசை: ஜான்சன்
திரைப்படம்: சவிதம்
கவிஞர்: கைத்தப்பரம்
ராகம்: மலயமாருதம்
https://youtu.be/6ir83IT6eQI

3. Pularippoo manjuthulliyil
இசை: G. தேவராஜன்
திரைப்படம்: உல்சவப்பிட்டென்னு
கவிஞர்: கவலம் நாராயண பணிக்கர்
ராகம்: சாருகேசி
https://youtu.be/xqa9dm8rP8s

4. Dheere Dheere Subah huyi
இசை: பப்பி லஹரி
திரைப்படம்: ஹைசியத்
கவிஞர்: இந்தீவர்
ராகம்: ஆஹிர் பைரவ் (ஹிந்துஸ்தானி)
https://youtu.be/qqieb54NMfE

5. புத்தம் புது காலை
இசை: இளையராஜா
கவிஞர்: கங்கை அமரன்
திரைப்படம்: அலைகள் ஓய்வதில்லை
https://youtu.be/rElxu7BR0Kc

6. காலைத் தென்றல்
இசை: இளையராஜா
கவிஞர்: வைரமுத்து
திரைப்படம்: உயர்ந்த உள்ளம்
https://youtu.be/ab9zPF1RM8A


ஆனால் மனிதப் பிரயத்தனங்களுக்கு அப்பாற்பட்டது இயற்கை. கவிகளின் இத்தனை சொற்களுக்குப் பிறகும் காலையின் அழகு வார்த்தைகளால் தொட முடியாத தொலைவில் அனைத்துயிரும் அண்ணாந்து பார்க்க எங்கோ உயரே நிற்கிறது.

3 comments:

  1. Hi akka this is bhavani.nature loverka neenga.semma.enakum romba pidikumka.but enalathan rasikamudila.tension tension.......luv u akka

    ReplyDelete
  2. Thank you for your loving comment

    ReplyDelete
  3. Semma�� I impressed by this line விளக்கேந்தும் புலரி.

    ReplyDelete