Thursday, June 4, 2020

அன்னப்பறவையின் அழைப்பு




அது ஒரு மென்மழை பெய்தோய்ந்த மஞ்சள் வெயில் மாலை. துணிக்கம்பிகளில் நீர்க் கோர்வையை பொன் ஆரமென ஆக்கியிருந்தது மேற்திசை. இன்னும் மழை எங்கோ பெய்து கொண்டிருப்பதை காற்று சொல்லிக் கொண்டிருந்தது. மழை நேரத்தில் கிளர்ந்தெழும் வாசனை வெந்த மண்ணுடையதா, உள்ளுறையும் தீயுடையதா, நனைத்த மழையுடையதா, மழை உதித்த விண்ணுடையதா, காற்றே அறியக் கூடும்.
புத்தகம் ஒன்றை கைத்துணைக்கு அழைத்துக் கொண்டு மொட்டைமாடிக்குச் சென்றேன். வீட்டின் முகப்பில் நின்று குடை விரித்த இரு வேம்புகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அணில் ஒன்றையொன்று துரத்திக் கொண்டு வேம்பின் கிளைகளுக்குள் ஓடி மறைந்தது. அதன் வால் ஆடுவதை நினைவுறுத்தும் அதன் ஒலி மட்டும் கேட்டது. பார்த்துக் கொண்டிருக்கையிலையே இலைகளுக்குள் பொன்மங்கி இருள் புகத் தொடங்கியது. புத்தகத்தின் எழுத்துக்கள் மறையும் இருள்.
கருமை ஏறத் தொடங்கவிட்ட செவ்வோடுகளின் தண்மை காலுக்கு சுகமாக இருந்தது. மெத்தென்ற தொடுகை புறங்கையில். இருளுக்குள் வெண்மையாய் ஏதோ ஒரு பறவை இறகொன்றை உதிர்த்து விட்டு சென்றது. மழை ஓய்ந்த வானம் எனினும் பௌர்ணமிக்கு அடுத்த நாள் என்பதால் ஒளி முற்றிலும் இல்லாமலும் இல்லை.
காற்று வீசத் துவங்கியது. சாம்பல் மேகங்கள் நிலவைத் தொட்டும் விலகியும் விளையாடிக் கொண்டிருந்தன. மேகங்கள் விரைந்தோடுவதன் பழி நிலவின் மேல். நிலவு நில்லாதது போல் ஓடிக்கொண்டிருந்தது.
பக்கத்து வீட்டு வானொலியில் பாடல் துவங்கியது. இசை தொடங்கியது, காற்றும் வேகம் கொண்டது. எழப்போகும் அசைவு கொண்டது இறகு . இசையோடு தபலா சில நொடி மோனத்திற்குப் பின் சேர்ந்து கொள்ள, சில நொடிகளில் நான்கு முறை வயலின் ஒரே ஸ்வரக்கோர்வையை வாசித்ததும் கானகந்தர்வன் யேசுதாசின் குரல் தொடங்கியது - 'தென்றல் வந்து என்னைத் தொடும்'.
மழைக்காற்றை மேலும் குளிர்வித்தது இசை. மாலை பெய்த மழை நினைவுகளில் ஈரமாயிருக்கும் தென்னை ஓலைகளில் நிலவு சொட்டுகிறது. ஜானகியின் பல்லவி முடிந்ததும் தரையிலிருந்து விண்ணுக்கு ஒரே நொடியில் பறந்தெழும் பறவைக் கூட்டம் போல வயலின் இசை தொடங்கியது. அதற்கு மேல் தரையிலிருக்க வழியில்லை. பறவையென வான் பறந்த நினைவு போலும், சுழன்று மேலெழுந்தது வெண் இறகு. வீணையும் குழலுமாய் அந்தரத்தில் மிதக்கும் நொடிகள்.
கந்தர்வன் தொடர்கிற கானம் - "தூறல் போடும் - இந்நேரம் - தோளில் சாய்ந்தால் போதும்" அந்தப் போதும்-க்குப் பிறகு இன்னொரு 'ம்' மில் சுழன்று நிற்கும் மாய தருணம். தரை இறங்க விடுவதாயில்லை. மேலேயே சஞ்சரிக்கும் சரணத்தில் அனுவளவும் சுகம் குன்றாது பெண் குரல் இழைகிறது. (நாணம் என்ற வார்த்தையில் ஒலிக்கும் செயற்கையான சிரிப்பு பாடல் உருவாக்கும் நெகிழ்வை ஒரு மாற்றுக் குறைக்கிறது) அந்த இழைவிலும் கணீரென்று நேசத்தைச் சொல்லும் ஆண் குரல் அழகாக ஒலிக்கிறது. நேசம் என்பதில்தான் எத்தனை வண்ணங்கள், இது ஒரு விதமான உன்னதத்தை, வியந்தோதலை, போற்றுதலைக் கிளர்த்தியது இவ்விசை.
மீண்டும் பல்லவியில் தரையிறங்குவது போலப் பறக்கிறது இறகு. தரை தொடுவதற்கு முந்தைய வினாடி கையிலேந்திவிட வேண்டும் என்கிறது மனம். உடல் நகரவில்லை.
இரண்டாவது சரணம் தொடங்கும் முன் இடையிட்ட இசையில் குழல் சுருள் சுருளாய் முரல்கிறது. இருவரும் குழலை நகல் செய்ய முயலும் ஹம்மிங். மீண்டும் விண்ணோக்கி ஏறுகிறது இசை. இம்முறை கால்கள் தரையில் பாவாமல் இறகைப் பற்றி உடனேறிப் பறக்கிறேன்.
நிலவுப் பூச்சில் பச்சையம் வெள்ளியெனத் தெரியும் மர உச்சிகள் கீழே எங்கோ தெரிகின்றன. வீடும் சமணமலையும் நாகமலையும் மறைகின்றன. காற்றும் வெளியும் நீர்த்துவாலைகளுமான வெளியில் மிதந்து கொண்டிருக்கிறேன். இன்னும் கூர்மையாக இசை மட்டும் தெளிவாகக் கேட்கிறது. இல்லையில்லை, அந்தக் குரலோடு வரும் வயலின் இசையாக எங்கோ இசைந்து கொண்டிருக்கிறேன் வெளியில். நிலவு நகரவேயில்லை. மேகமும்தான், புவியும்தான். இறகு மட்டும் மெல்ல அசைந்து, அசைவிழந்து, அந்தரத்தில் சுழன்று, அந்தகாரத்தை வெண்மையாக்கி, இருப்பை இன்மையாக்கி, நிலவுக் கிரணங்களைப் பற்றியபடி நழுவிவந்து எங்கோ தரை தொடுகிறது.
அது ஒரு பித்தின் தருணம் என்று நம்ப மறுக்கும் தரையிறங்கிய தர்க்கம் அவ்விறகு அன்னத்தின் இறகு என்றால் நம்பிவிடுமா என்ன! விண்வெளியில அழைத்துச் சென்ற இந்த அன்னப்பறவையின் அழைப்பு ஹம்சநாதம் எனும் ராகம் என்றறிந்தது பிறகே. இதன் ராக இலக்கணங்கள் ஏதும் அறியேன். உணர்வுகளின் உணர்கொம்புகளால் இசையறியும் உயிரி நான்.
இதில் சாரங்க தரங்கிணியின் ஸ்வரங்கள் வருகிறது என்றும் வாசித்தேன். திரையிசையில் இது போன்ற மீறல்கள் இயல்புதான். எனில் பாடல் உருவாக்கும் மனநிலை இதே சிறகெனப் பறந்தெழுந்த உணர்வைத் தருமெனில் அதை ஹம்சநாதம் என்றே மனம் உணர்கிறது.
ஹம்சநாதம் என பின்னர் அறிந்த அனைத்துப் பாடல்களிலும் எப்போதும் கிளர்ந்தெழுவது இதே உணர்வுகள்தான். இருள் மயங்கும் நிலவொளியும், தென்றலும், போற்றுதலுக்குரிய ஒரு உணர்வு கொண்ட மனநிலையும்.
இன்னும் எனக்கு மிகவும் பிடித்த சில ஹம்சநாதங்கள் உண்டு. அவற்றுள் இளையராஜா இசையில் ஹேராம் திரைப்படத்தில் 'இசையில் தொடங்குதம்மா' மற்றும் மலையாளத் திரைப்படம் 'சிந்தூர ரேகா'வில் இசையமைப்பாளர் சரத் இசையில் இடம்பெற்ற 'ராவில் வீணா நாதம் போலே' இரண்டும் மீள மீள போதையில் ஆழ்த்துபவை.
தரையோடு கட்டுண்ட கால்களை விடுவித்து சில நொடிகளுக்கேனும் சிறகுகள் அருள இசையால் இயல்கிறது. இசை இசை என்று பேருணர்வில் இசையச் செய்யும் இசை தெய்வம். அத்தெய்வம் அன்னப்பறவை உருவெடுத்து வருமெனில் அதுவே இந்த ஹம்சநாதம்.
இதோ இன்றும் மென்மழை பெய்கிறது. அதே பாடல், அன்னப்பறவையாகி உடன் பறந்தெழுகிறேன்.

4th June 2020

1 comment:

  1. ஒரு திரைப்பட பாடல் கேட்டு இத்தனை விரிவும் மலர்வும் சாத்தியமா. அப்படியே என்றாலும் அதை வைத்து இத்தனை அழகு தமிழில் விவரிக்க எத்தனை பேரால் முடியும். அற்புதம். இதே ராகத்தில் அமைந்த மேம்பட்ட பாடல் கர்ணன் படத்தில் வரும் இரவும் நிலவும் வளரட்டுமே. அதைப்பற்றி பிறகு எழுதவும். பூவாசம் புறப்படும் பெண்ணே... வித்யாசாகர் இசையமைத்துள்ளார்.உங்களுக்கு தெரிந்து இருக்கலாம்.

    கானப்ரியன்

    ReplyDelete