பல நூறு வாகனங்களின் இரைச்சலில் இருந்தும், பிரித்தறிய இயலாத முகங்களின் அலைகளிலிருந்தும் சற்றே வெளியேறியதும், உடலின் ரத்தநாளங்களில் ஒன்றில் புகுந்தது போல காசியின் கங்கைத்துறையொட்டிய பல நூறு சாலைகளில் ஒன்றில் நுழைந்தோம். திசைகளென ஏதுமின்றி குறுக்கும் நெடுக்குமாக ஊடுபாவிக் கிடக்கின்றன. முன் செல்லும் வழிகாட்டியைத் தவறவிட்டுவிடாதீர்கள் என்ற தொடர் வலியுறுத்தல் ஒரு மந்திரம் போல மனதில் இருந்தது. கற்கள் பாவிய தெருக்களில் மிக இயல்பாக விரைகிறது வழிகாட்டியென வந்த அந்த கருநிறத்து இளைஞனின் பாதங்கள். எண்ணற்ற பாதங்கள் பதிந்த மண்ணில் ஒற்றைக் காலடித் தடம் மட்டுமே கண்ணாகப் பின்பற்றி நடந்து சென்ற நிமிடங்களில் அத்தனை இரைச்சலுக்கிடையே மனது குவிந்திருந்தது. பல தெருக்கள், இரு புறமும் உடல் சுவரில் உரசுமளவு குறுகியவை, ஆங்காங்கே சிறிய திருப்பங்களில் ஒற்றை அகல்விளக்கில் சுடரேற்று ஒளிரும் தெய்வங்கள். ஒரு குறுகிய தெருவின் திருப்பத்தில் விரிந்து கிடக்கும் கங்கையின் முதல் காட்சி கிடைத்தது.
.
அதுவரை நடந்து வந்த குறுகிய பாதைகள் எதற்கும் தொடர்பில்லாதவளாக, அவ்வளவு இரைச்சலும் சென்று தொடாதவளாக, தேவர்களின் தீபாவளிக்கென திரண்டிருந்த லட்சக்கணக்கானவர்களின் திரள் சூழ்ந்திருக்க தனித்தவளாக, கங்கையை வாழ்வதாராமாகக் கொண்டவருக்கும், அதன் கரையில் வாழ்வை முடிக்கக் காத்திருப்பவருக்கும், முடித்துவிட்டவருக்குமிடையே எந்த வேறுபாடுமற்று அனைத்தையும் கடந்துவிட்டவளாக சென்று கொண்டே இருக்கிறாள் கங்கை. படகில் ஏறிக்கொள்ள, காசியின் பிறை வடிவ கங்கைத் துறை வரிசைகளின் மையத்திலிருந்து துவங்கியது பயணம். மாலைக்கதிரின் ஒளி நீரில் மிச்சமிருக்கையிலேயே மறுபுறம் எழுந்தது முழுமைக்கு சற்று முந்திய நிலவு. காசியை எப்போதைக்குமென சூழ்ந்திருக்கும் ஒரு புகைப்படலம் ஆற்றின் மீது ஒரு சன்னமான திரையை விரித்திருக்க, படகுகள் அனைத்தும் அரைக்கண்கள் மூடிய காட்சி போல வேறொரு உலகில் பயணித்துக் கொண்டிருந்தன. சுற்றிலும் புகைப்பட யத்தனங்கள், மெல்ல முகம் மறைந்து கொண்டிருந்தது மாலை. நீரோட்டம் வேகமாகவே இருந்தது. மணிகர்ணிகா காட்டில் அணையா நெருப்பு வானோக்கி கைநீட்டிக் கொண்டிருந்தது.
காசியிலிருந்த நான்கு நாட்களும் பலமுறை மீண்டும் மீண்டும் படகில்
கங்கையின் மீது பயணம். எங்கெங்கோ தொடங்கி எங்கோ கரையிறங்கிவிடும் பயணங்கள். அதிகாலை இருளில், எங்கோ வந்துவிட்ட கதிரை உணர்ந்து வானம் முதல் ஒளி சூடும் தருணத்தில், ஒளி புகையை மென்மையாக விலக்கி ஊடுருவும் பின்காலையில், காற்று இளஞ்சூடேற்று கங்கை நீராடும் நண்பகலில், ஆயிரம் தீபங்கள் ஏற்று ஒளிரும் அந்தி மயக்கத்தில், நிலவின் அருகாமை வரை பாதையிட்டுக் காத்திருந்த நீள்இரவின் தொடக்கத்தில் என மீண்டும் மீண்டும் படகுப்பயணங்கள்.
காசியில் அத்தனை விதமான முகங்களையும் பார்க்க முடிந்தது அத்தனை விதமான மொழிகளும் காதில் விழுந்தது, இந்தியாவின் அனைத்து திசையும் சந்திக்கும் ஒற்றைப் புள்ளி. அல்லது இங்கிருந்து விரிந்த ஓன்றே எங்கும் பரவியிருக்கிறது.
உறங்கும் குழந்தையைத் தொட்டு எழுப்பும் அன்னையின் விரலென கங்கையின் நீரோட்டத்தில் கதிரின் முதல் ஒளி தொடும் நேரம் கங்கையில் படகில் மிதந்தபடி கண்டதே காசியென மனதில் இருக்கிறது. கங்கையும் காசியை இப்படித்தான் காண்கிறாள். காலம்காலமாக. கரையில் அணையாது எரியும் சிதைகளையும், மரணத்துக்குக் காத்திருக்கும் மனிதர்களையும், விண்ணேற்றம் செய்யும் விண்ணப்பங்களையும், வேண்டுதல்களைச் சுமந்த தீபங்களையும், ஆயிரம் பல்லாயிரம் சாதுக்களையும், அந்தியின் விளக்குளையும், ஆயிரமாயிரம் நம்பிக்கைகளையும் தன்னில் பிரதிபலித்தபடி, எனில் வெறும் சாட்சியாக நில்லாது ஓடிக் கொண்டே இருக்கிறாள்.
-----------
இசை: இளையராஜா
படம்: நான் கடவுள்
கவிஞர்: பரத் ஆச்சார்யா
பாடியவர்: குணால் கஞ்சாவாலா
ராகம்: கல்யாணி (ஹிந்துஸ்தானி - யமன்)
Maa Ganga Kashi Pathari
Maa Ganga Kashi Pathari
Gyan Jagaye Moksh Dilaye
Kalukalu Kalukalu Gathi Jaye
Hare Hare Hare Hare Gange Maa Humko Paavan Kardhe Ma
Paavan Nagiri Kashi Hai
Shiv mahima Avinashi Hai
Mayavi Sansar Hai
Kashi Moksh ka Dware Hai
Jai Jai Ganga Maiya Ki
Jai Jai Kashi Nagiri Ki
Harihar yahi par
Aanu base
Jiniki Kripa Se
Jiniki Dhaya Se
Kashi Ajhar Hai
Kashi Amar Hai
Rishi Muni Surnar
Dhyan Karath Hai
‐------
பல நூறு முறை இப்பாடலையும் இதே படத்தின் ஓம் சிவோஹமும் கேட்டிருக்கிறேன். இவற்றுக்கு தமிழாக்கம் தேவையில்லை என்றே தோன்றுகிறது. எனினும் முயன்றிருக்கிறேன்.
-----------
அன்னை கங்கை காசி வருகிறாள்
ஞானம் அருள்கிறாள்
மோட்சம் தருகிறாள்
கலகலவென்று இசைத்தே
கடந்து செல்கிறாள்
வாழிய வாழிய கங்கேமா
பாவத்தை நீக்கிடு கங்கேமா
புண்ணிய நகரம் காசிதான்
சிவனருளுக்கழிவில்லைதான்
மாயையே இந்த வாழ்வுதான்
காசி மோட்சத்தின் வாசல்தான்
ஜெய ஜெய கங்கை அன்னைக்கு
ஜெய ஜெய காசி நகருக்கு
ஹரியும் ஹரனும்
திகழும் தலமிது
அவரது அருளால்
அவரது தயையால்
காசி புனிதமாம்
காசி தெய்வீகமாம்
ரிஷி முனி சுரர் நரர்
தவம் செய்யும் தலமாம்
பல படங்களில் காசியைக் கண்டிருந்தாலும் 'நான் கடவுள்' படம் முதல் முறை பார்த்து படத்தின் முகப்புப் பாடலாக இதைப் பார்த்தபோது ஏற்பட்ட அதிர்வை சொல்லென்றாக்க விழையவில்லை. சற்றே சன்னமான குரலில் ஒலிக்கும் வடஇந்தியரின் குரல். ஒரு பஜனை போல குழுவினர் பின்தொடர கங்கையும் காசியுமாக காட்சி தொடங்கும். காசி அப்படியேதான் இருக்கிறது. கங்கையும் காலமற்ற வெளியில் ஓடிக்கொண்டே இருக்கிறாள். அலகிலா பேரிருப்பை மண்ணில் உணர, கங்கையை அறிவது ஒரு வழி. வளை அறிய அவளில் கரைவதொன்றே வழி. அதுவரை அவரவர்க்கு வாய்த்த சிறு துறையில், அவரவர் கையளவில் அள்ள முடிந்ததே அவரவர்க்கான கங்கை.அன்னையின் ஒரு துளி அமுதமும் அன்னையை உணரப் போதும்.
பாடல்:
https://youtu.be/03vb9dkBAB4

No comments:
Post a Comment