"நேர்கோடு வட்டமாகலாம்
நிழல் கூட விட்டுப் போகலாம்
தாளாத துன்பம் நேர்கையில்
தாயாக கண்ணன் மாறுவான்" சமீபத்திய உள்ளம் தொடும் பாடல்களில் ஒன்று.
நேர்கோட்டில் கிளம்பும் பல யாத்திரைகள் இங்கே வட்டத்தில்தான் முடிகிறது, தொடங்கிய இடத்தில்.. பூமியை நேர்கோட்டில் வலம் வந்துபார்த்தால் வட்டம்தானே!! எனினும் எங்கோ தொடங்கி எங்கோ முடியும் இந்த வட்டச் சுழலில் சுற்றும் வரை பூமி காலுக்கடியில் இருப்பதாக நம்பத்தான் வேண்டியிருக்கிறது. புவியே ஒரு நாள் இருந்தவிடத்தில் மறுநாள் இல்லையெனும் போது, நாம் நிலையாய் நிலைத்திருப்பதாய் எண்ணுவது எவ்வளவு பெரிய வேடிக்கை.
ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டு நீரில் மூழ்கி நம் நினைப்பொழியும் வரையேனும், பிறர் நினைவிலிருக்க நாம் செய்வதென்ன... பாரதி சொன்ன வேடிக்கை மனிதராய் வா(வீ)ழ்வதன்றி வாடிக்கை தாண்டி நாம் செய்வதென்ன..
தொடங்கிய இடத்திலேயே நிற்பதற்குத்தானா இந்த நீண்ட பயணம்..
'இன்று முதல்', 'இந்த வருடம் முதல்' என்று எடுத்துக்கொண்ட உறுதிமொழிகள் எல்லாம் மனப் பரணில்.. தூசியடைந்து, தொட்டாலே தும்மல் வருகிறது. தூக்கம் வரும் வரை அல்லது விழிப்பு அலுக்கும் வரை தும்மலைப் பொறுத்துக் கொண்டு தூசி தட்டுகிறேன். படித்து முடித்தபின் ஒவ்வாமையால் யாருக்கேனும் தும்மல் வந்தால் நான் பொறுப்பல்ல..
முதலாவது - அடிக்கடி எடுத்துக்கொள்ளும் ஒரு இலக்கு. "கோபம் கூடாது - பொறுமை வேண்டும்". உத்தமமான எண்ணம்தான் - அடுத்த முறை ஏதேனும் ஒன்று, அல்லது யாரேனும் ஒருவர் நம் எதிர்பார்ப்பை பொய்க்கும் வரை.
ஏன் இந்த முயற்சி தோற்கிறது?
நடைமுறைக்கு ஒவ்வாத உயரத்தை எட்ட முயற்சிப்பதால்?
இன்னும் முதிராத மனத்தால்?
Genetic problem ;)?
பழத்திற்கு மலைமீது தனித்தமர்ந்த குழந்தையை நாளும் ஆராதிப்பதால்?
காரணங்கள் பல இருக்குமெனில் குறிக்கோள் பிழையா?
இன்றைய முதிர்ச்சியில் அல்லது முதிர்ச்சியின்மையில், துலாக்கோல் ஒரு பக்கமாய் சாய்கிறது - கறை நல்லது போல கோபமும் நல்லதுதான்.
எப்போதெல்லாம் கோபப்படலாம்? நியாயமான கோபங்கள் தவறல்ல - யாருடைய நியாயம் அளவுகோல்?
எழுத ஆரம்பித்து இந்த இடம் வருவதன் முன்னரே எண்ணம் எப்போதெல்லாம் கோபப்படலாம் என்று தேடுகிறதே..மனமென்னும் குரங்கு..எனினும் குரங்கைத் தொடர்ந்து பார்க்கலாம்.
அன்பின் கரம் நீட்டும் போது - சிறுமை மறுபக்கம் வெளிப்பட்டால்.. மலரைப் பிய்த்தெறியும் குரங்கென எளிய மென்மையான மனங்களை கசக்கி நசுக்கும் நச்சுப் பதர்களைக் காணும்தோறும்..பிறன் உழைப்பை தனதென்று முன்னிறுத்தும் அற்பத்தனத்தைக் காணுகையில்... மாற்றான் உயர்வில் (நிம்மதியில் கூட) மனம்புழுங்கும் சிறுமதியினர்பால்..பளபளப்பான புறம் காட்டி, உண்மைக்கு புறங்காட்டும் மாக்களை காண நேர்ந்தால்.. TRP தேடும் ஊடகம் போல பிறர் வாழ்வின் துயரில் வாய் தேயும் சிறுமை காணும்போது..உண்மையை சந்திக்கும் தருணத்தைத் தவிர்க்கும் மனிதர்பால்.. பட்டியல் இன்னும் நீளும். இங்கெல்லாம் ஜகத்தினை அழிக்கும் அளவு இல்லை என்றாலும், மறுமுறை அது நமக்கு (குறைந்தபட்சம்) நிகழாமல் தடுக்கும் அளவேனும் சினம் தேவைதான்.
சினமெனப்படுவது மாற்றம் நிகழ, தவறைத் திருத்த, சிறுமை தவிர்க்க, பொய்மை புறம்தள்ள உதவும் ஊக்கியாகக் கைக்கொள்ளலாம். நம் பிழை மறைக்க, 'நான்'ஐ முதன்மைப்படுத்த வெளிப்படும்போது சினம் சிறுமையாகிறது. குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி(சினம்) சேர்ந்தாரைக் கொல்லியாக உருவெடுப்பதில்லை.
இத்தகைய ஆக்க சக்தியாய் நம் கோபம் பண்பட, நமது உள்சமநிலையை இழக்காமல், எதிர்க்க கற்றுக் கொள்ள வேண்டும். அன்பே சிவம் 'நல்லா' போல பக்குவமாய் மூக்கில் குத்தவும் பயிற்சி தேவை.
எனவே இலக்கில் ஓர் திருத்தம் - "கோபம் கொள்ளவும் பொறுமை தேவை"
புவி தன் சுழற்சிப் பாதையில் ஒரு வட்டம் முடித்து, தொடங்கிய இடமே வந்தாலும் மாற்றம் ஏதுமில்லையென சொல்ல முடியாது. புவி சுழலும் போதே பருவநிலை மாற்றங்களையும், ஒரு வருடமென மானுட தினங்களையும் முன்னகர்த்திச் சென்றிருக்கிறது.
வாழ்வின் நெடும் சுழற்சியும் அவ்விதமே. தொடங்கிய இடமே வந்தடைந்தாலும் அனுபவம் வாயிலாக இலக்குகளை கூர்தீட்டிக் கொள்ளலாம். தூசிபடியாது மனதை அவ்வப்போது துலக்கி எடுப்பது நலம்.
**இந்தப் பதிவில் குறிப்பிடப்படும் அனைத்து எண்ணங்களும் நேரில் கண்ட உண்மையான மனிதர்களைக் குறிப்பிடுபவையே...கற்பனை அல்ல :)