Monday, July 6, 2020

மழைக்கணம் சேக்கும் மாமலை



அமெரிக்காவின் டல்லாஸில் இருந்து வெளியாகும் இணைய இதழான ஆனந்தசந்திரிகை ஆண்டுமலரில் (ஏப் 2020) வெளியான எனது மேகாலயா பயணக் கட்டுரை.






வடகிழக்கு மாநிலங்கள் குறித்து அசாமைச் சேர்ந்த எழுத்தாளர் ஜானவி பரூவா விஷ்ணுபுர விருது விழாவில் பேசியபோது, நிரந்தரமாக மெல்லிய மேகத்துகில் போர்த்திய நிலம் என்று குறிப்பிட்டார். மேகங்களின் ஆலயம் என்று பொருள்படும் மேகாலயா செல்ல வேண்டும் எனத் தோன்றிய போது அந்த சித்திரமே மனதில் எழுந்தது. கொரோனா வைரஸ் பயண எச்சரிக்கைகளால் கிளம்பும் நாள் வரையிலும் பயணம் உறுதியாகவில்லை. எனவே நண்பர்களிடம்கூட சொல்லவில்லை. சிங்கப்பூர் விமான நிலையம் வைரஸ் தொற்று குறித்த பதற்றத்தால் ஆளொழிந்து கிடந்தது (14-பிப்ரவரி-2020). சுற்றுலாத்துறையும் அது சார்ந்த தொழில்களும் பெரும் பங்கு வகிக்கும் சிங்கை போன்ற நாடுகளுக்கு இது பெரிய அடி. பாதுகாப்பு பரிசோதனைக்குப் பிறகும், சகபயணியின் மூச்சுக் காற்றும் பட்டுவிடக்கூடாதென்ற பெருமுயற்சியுடன் திசைக்கொருவராய் சிதறி அமர்ந்திருந்த அனைவரையும் அள்ளி ஒன்றாக்கி விமானம் கிளம்பியது. கொல்கத்தாவின் அதிகாலையில் முகமூடி அணிந்த முகங்களூடே சற்று அலைந்துவிட்டு மதியம் பன்னிரு மணியளவில் கவுஹாத்தி சென்று சேர்ந்தேன். நோய்த் தொற்று பரிசோதனைகளும் விமான நிலைய சாங்கியங்களும் முடித்து, அலுவலகப் பதட்டங்களும் வீடு குறித்த கவனங்களும் மட்டுப்பட்டு கவுஹாத்தியிலிருந்து ஷில்லாங் நோக்கி சென்று கொண்டிருக்கும்போதே உண்மையில் இப்பயணம் தொடங்கியது. பயணங்கள் எங்கிருந்து தொடங்குகின்றன என எண்ணிக் கொண்டேன். தன் சிறகுகளை விண்ணுக்கு ஒப்படைத்து கிளைவிட்டெழும் பறவைகளுக்கே வானம் விரிகிறது. அதுவரை வெறும் சிறகுலைத்தல்தான்.





பயணத்துக்குப் பதிவு செய்திருந்த பெண்கள் ஒன்று கூடி அறிமுகங்கள் செய்து கொண்டு எளிய மதிய உணவுண்டதும் மேகாலயத் தலைநகரான ஷில்லாங் நோக்கிக் கிளம்பினோம். கவுஹாத்தி தாண்டும் வரை நெரிசலும் இரைச்சலும் இருந்தது. மேகாலயா எல்லையைத் தொடுமுன்பே மேகத்திரைக்குப்பின் சூரியன் நிலவெனத் தெரிந்தது. ஷில்லாங் சென்று சேரும் போது அந்தி செவ்விருள் சூடி குளிர்ந்திருந்தது. ஷில்லாங் வடகிழக்கின் பெரிய செழிப்பான நகரம். நகரங்களுக்குரிய நெரிசலுடன் மலைப்புறமாதலால் மேலும் குறுகிய சாலைகளால் திணறியது. நடுக்கும் குளிரில் நடந்து சென்று இரவுணவு முடித்து தங்கும் விடுதி சென்று சேர்ந்தோம். அழகிய வீடொன்றின் அறைகளை விடுதியாக்கியிருந்தனர்.

வீட்டைச் சுற்றிலும் மலர் தலைக் கொண்ட செடிகள். மறுநாள் காலை ஐந்தரை மணிக்கே மலர்கள் ஒளி சூட நாள் விடிந்தது. அன்று அங்கிருந்து கிளம்பி வழியில் மாப்ளாங் காடுகள் (Mawphlang) மற்றும் ஆர்வா (Arwah) குகைகள் பார்த்துவிட்டு சிரபுஞ்சி செல்வது பயணத்திட்டம். உலகிலேயே அதிக மழைபொழியும் இடம் என முன்பு பெயர் பெற்றிருந்த இடம் சிரபுஞ்சி. இப்போது அந்தப் பெயர் மேகாலயாவின் மாசின்ராம்க்கு உரியது. எனில் வருடம் முழுவதும் இங்கு மழை பொழிவதில்லை. பிப்ரவரியில் மழை இல்லை, மிதமான வெயிலும் மிதமான குளிரும் இருந்தது. சாலைகளில் தூசு படிந்து காற்றில் எழுந்து பறந்து பறந்தலைந்தது.


மேகாலயா 80 சதவிகிதத்துக்கும் மேலாக பழங்குடிகள் வாழும் மாநிலம். இதன் முக்கிய பழங்குடிகள் காஸி, ஜைண்டியா மற்றும் காரோ இனத்தவர்கள்.
மேகாலயாவின் கிழக்குக் காஸி பகுதியிலும் ஜைண்டியா மலைப்பகுதியிலும் பழங்குடியினரால் புனிதமெனக் கருதப்படும் பாதுகாக்கப்பட்ட காடுகள் உள்ளன. ஆயிரமாண்டுகளாக அந்தக் காடுகளை பழங்குடியினர் தங்கள் குல நம்பிக்கைகளாலும் கட்டுதிட்டங்களாலும் காத்து வருகின்றனர். காஸி பழங்குடிகளின் புனிதக் காடுகளில் ஒன்று மாப்ளாங். ஷில்லாங்கிலிருந்து அரைமணி நேரத்திலிருக்கிறது. இந்திய விமானப் படையின் கிழக்குத் மண்டலப் பிரிவைக் கடந்து சென்ற சாலையில் ஒரு மணி நேரப் பயணம். வழியில் யானை அருவி செல்லும் திட்டமிருந்தது, நீர் குறைவாக இருப்பதாக அறிந்து அங்கு செல்லவில்லை.

மேகாலயாவின் மழை காண மீண்டும் வரவேண்டும். பிப்ரவரி அதற்கான மாதம் அல்ல, மழை நாட்களின் பழைய நினைவுகளில் சிவந்து கிடந்தது மண். அதிக ஏற்றங்களின்றி வளைந்து சுழன்று செல்லும் மலைச் சுற்றுப் பாதைகள். விரிந்து படர்ந்து கிடந்தது காய்ந்த புல் பரந்த நிலம். அப்பெரும் புல்வெளியின் துணையென ஒற்றை மரம். நோய்வாய்ப்பட்டவர்கள் அதிகாலை நேரத்தில் அந்த மரத்தடியில் அமர்ந்து மாப்ளாங் காட்டிலிருந்து வரும் காற்று மேலே பட்டால் எந்த நோயும் விலகி விடுமென்பது அவர்களது நம்பிக்கை.














இது பெருங்கற்கள் மற்றும் நடுகற்களின் பகுதி. புல்வெளி முடிந்து காடு தொடங்கும் எல்லையில் செங்குத்தாக மூன்று நிலைக்கற்களும் ஒரு கிடைக்கல்லும் நிற்கின்றன. காஸி குடியினரின் வழிபாட்டுத் தலங்களை இக்கற்களைக் கொண்டு அறியலாம். மூன்று நிலைக்கற்கள் மாமன், மகன், மருமகனையும், கிடைக்கல் கொண்டு அமைக்கப்பட்ட சிறு அறை தாயையும் குறிப்பிடுவதாக காஸி குடியைச் சேர்ந்த வழிகாட்டி சொன்னார். காஸி பழங்குடி பல இனக்குழுக்களால் ஆனது. தாய்வழி சமூகம். குடும்பத்தின் இளைய பெண்ணுக்கே சொத்துரிமை. ஆண்கள் திருமணத்துக்குப் பிறகு பிறந்தகத்தை விட்டு வெளியேறி விட வேண்டும். எனில் அரசுரிமை தாய்மாமனிலிருந்து மருமகனுக்குச் செல்கிறது. காஸி மன்னர் இங்கு இந்தக் காட்டில்தான் முடிசூடிக் கொள்வார். நடுகற்களின் முன்னால் காட்டின் தேவதை லபாசாவை வழிபடுகிறார்கள். ஆண்டுக்கொரு முறை நடைபெறும் வழிபாட்டில் காளை பலியாகக் கொடுக்கப்படுகிறது. வழிபாடு முடியும் தருணத்தில் காட்டின் உள்ளிருந்து சிறுத்தை வெளியே வந்தால் நற்சகுனமென்றும், பாம்பு வெளியேறினால் தீய சகுனமென்றும் கொள்கிறார்கள். ஆயிரமாண்டுகளாக சத்தியம் காக்கிறாள் லபாசா. ஒருமுறையும் தவறியதில்லையாம்.

தேனீக்களின் ரீங்காரத்தில் காடு யாழென கார்வைகொண்டு காத்திருந்தது. மரங்களூடே சிறு நுழைவொன்றுள் கற்கள் நிரவிய பாதை நூறடி செல்கிறது. அப்பாதையின் முடிவில் ஓங்கி நிற்கும் ஏக முக உருத்திராட்ச மரத்தை வழிபடுகிறார்கள். அருகிலேயே குடி மூத்தோருக்கான நடுகற்கள் இருக்கின்றன. அவற்றைத் தாண்டி காட்டுக்குள் சென்றுவிட்டால், வழிபாட்டை முழுவதுமாக முடித்த பின்னரே திரும்ப வேண்டும் என்பது அவர்கள் நம்பிக்கை. நீத்தோர் சடலங்களை எரித்துவிட்டு இங்கே எலும்புகளைக் கொண்டுவந்து புதைக்கிறார்கள், அதன்மேல் நடுகற்களை நடுகிறார்கள். குடியின் அரசருக்கு பெருங்கற்கள். அந்தக் காட்டிலிருந்து உதிர்ந்த இலையோ சுள்ளியோ கூட வெளியே எடுத்து வர அனுமதியில்லை.









பல வகையான அரிய மரங்களும், புற்றுநோய், காசநோய் போன்ற நோய் தீர்க்கும் மருத்துவ குணங்கொண்ட செடிகளும் அக்காட்டில் நிறைந்திருக்கிறது. மூங்கில், தேக்கு, சால மரங்கள், வேர்களில் குடைவரை போலக் குழிந்திருந்த மரங்கள், காசி பைன் வகைகள், பல வண்ண ஆர்கிட்கள், ஊணுண்ணிக் குடுவைத்தாவரங்கள், நடுகற்களை மூடி பசுமை போர்த்தும் புற்கள், ஒளி சிந்தும் பெரணிகள், காய்ந்த மரங்களில் விதவிதமான காளான்கள் என அந்தப் பசுமை குன்றாக் காடு தரையிலிருந்து உயர்ந்தெழுந்து முடிகாண இயலா விருட்சங்கள் செறிந்து இருக்கின்றன. ரோடோடென்டரான் பூக்கும் காலத்தில் காடு அதீத வண்ணம்கொண்டு விடுமென்று வழிகாட்டி சொன்னார். அக்காட்டின் தெற்கே அதிக மழை பெரும் சிரபுஞ்சி, மாசின்ராம் தாண்டி வங்காள தேச எல்லை வரை பசுமை மாறாக் காடுகள் அமைந்திருக்கின்றன. காடு ஆழ்ந்த அமைதியில் இருந்தது. அக்காட்டுக்குள் அதிக சிரமமில்லாத ஒன்றரை மணி நேர நடைக்குப் பின்னர் கிளம்பினோம்.

மதியம் இரண்டு மணிக்கே நல்ல குளிர் இறங்கியிருந்தது. பெரிய புல்வெளியில் பைன் மரங்கள் சூழ்ந்த ஒரு அழகான விக்டோரியன் காலத்து வீடு 'கபே சிரபுஞ்சி' என்ற உணவகமாக மாற்றப்பட்டிருந்தது. காத்திருத்தல் என்பதே பருவுருக்கொண்டு வந்தது போன்ற பைன் மரங்கள். தனிமையில் தன்னுள் நிறைந்து மென்மையாக இறங்கும் குளிரில் வான் நோக்கி ஓங்கி நிற்கும் பைன் மரங்களின் வரிசை. குளிர் அதன் கூம்பு வடிவத்தில் தங்க முடியாது சரிந்து தரையிறங்கியது. கதகதப்பான கனப்புக்கு அருகே அமர்ந்து உண்டோம்.























மீண்டும் சரிந்தேறி வழிந்திறங்கும் சாலைகளின் வழி பயணம். செம்மையில் தொடங்கி கருமை வரை பல வண்ணங்களாக மண் நிறம் மாறிக் கொண்டே வந்தது. பாறைகளின் நிலம். உலகின் மிகவும் சிக்கலான நீண்ட குகை அமைப்புக்கள் கொண்ட இடமாக மேகாலயா அறியப்படுகிறது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிலங்கள் இருக்கின்றன. மாலை சூரியன் பனி போர்த்தும் வேளையில் அவற்றுள் ஒன்றான ஆர்வா குகையைச் சென்றடைந்தோம். இருபது நிமிட நடைபாதை மலையை வளைத்தேறுகிறது. மறுபுறமிருக்கும் பள்ளத்தாக்கில் மழைக்காலத்தில் அருவிகள் வழியும் தடங்கள் தெரிகின்றன. சுண்ணாம்புப் பாறைகளாலான பிலம்.

பல லட்சம் வருடங்களுக்கு முன் இப்பகுதி சமுத்திரத்தின் அடித்தளமென இருக்கையில் நீர் சிற்பியெனக் குடைந்து செதுக்கிய குகைகள். சில நூறடிகள் மின்விளக்குகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. சிக்கலான வழிகளில் பல இடங்களில் குனிந்தபடியே வெகுநேரம் செல்ல வேண்டியிருக்கிறது. ஹோய்சாலத் தூண்களைப் போல புனல் வழித்தெடுத்த வழுவழுப்பான சுண்ணாம்புப் பாறைகள். சுற்றிலும் நீர் வழிந்தோடிக் கொண்டிருக்கிறது. பல்வேறு ஆழ்கடல் உயிரிகளின் படிவங்கள் பாறைகளில் காணப்படுகின்றன. கடலின் அடிப்பகுதியில் நிற்பதான உணர்வு வருகிறது. அரை மணி நேர நடைக்குப் பிறகு வழி மயக்கும் புதிரொன்றுக்குள் சிக்கிக் கொண்டது போலிருந்தது. பல லட்சம் வருடங்களைக் கடந்து ஆழ்கடலின் தரையில் வாழ்ந்த அவ்வுயிரினங்களைத் தொட்டு மீண்டது ஒரு பேரனுபவம்.













கதிர் விழுவதற்குள் பார்க்க வேண்டுமென நோகாலிகை அருவிக்கு சென்றோம். மலை உச்சியினின்று பாதாளம் ஏழினும் கீழ் சீராக இறங்கும் நோகாலிகை. மற்ற அருவிகளில் நீர் குறைந்தாலும் இந்தியாவின் உயரமான அருவிகளில் ஒன்றான இவ்வருவியில் நீர் இருந்தது. மழைக் காலத்தில் இவ்வருவியில் நீர் பன்மடங்கு நிறைந்து வழியும். அந்தி என்றுமே அழகானது. இதுபோன்ற இயற்கையின் பேருருவுக்கு அருகில் கடக்கும் அந்தி தியான நிலையை ஏற்படுத்துவது. ஒளிப்பந்து சிவந்து பள்ளத்தாக்கில் விழ கிளம்பினோம்.


சொஹ்ரா வெள்ளையர்களால் செரா என்றும் பின்னர் செராபுஞ் என்று மருவி சிரபுஞ்சி ஆயிற்று. 2007ல் மீண்டும் சொஹ்ரா என்று பெயர் மாற்றப்பட்டது.
சிரபுஞ்சி தங்கும் விடுதி கீழ்சொஹ்ராவில் இருக்கிறது. அங்கு செல்லும் சாலையை மலைப்பாறைகளை வெட்டி அமைத்திருக்கிறார்கள். இருபுறமும் நெடிது நின்ற பாறைச்சுவர்களூடே இருள் விழுங்கக் காத்திருந்தது. மாலை ஆறு மணி இரவு எட்டு மணி போல இருண்டிருக்க விடுதியை சென்றடைந்தோம். நெருப்பு மூட்டி சுற்றிலும் அமர்ந்து ஒரு தமிழ்க் குழு விடுமுறையைக் கொண்டாடிக் கொண்டிருந்தது. ஆடல், பாடல், கூச்சலும் குதூகலமுமாக சில குடும்பங்கள் அமைதியைக் கிழித்து நெருப்பிலிட்டுக் கொண்டிருந்தார்கள். காது கடந்து உள்ளே இறங்கும் அமைதியைப் பலரால் தாங்க முடிவதில்லை, பழகிப் போன இரைச்சல்களிலேயே பாதுகாப்பாக உணர்கிறார்கள் போலும். வனங்களில் கூட அதிரும் இசையை வழிய விட்டபடி நடக்கும் மனிதர்களைக் காண முடிந்தது.

அடுத்த நாள் அதிகாலையிலேயே கிளம்பி ஐந்து கிலோமீட்டர் தொலைவுள்ள தீர்னா கிராமம் வரை வண்டியில் பயணம். அதன் பிறகு நோங்ரியாட் வேர்ப் பாலங்கள் நோக்கிய நடை துவங்கியது. முடிவற்ற படிகள் காலையின் அமைதியில் பொதிந்து வைக்கப்பட்டிருந்தன. சிறிது தொலைவு இருபுறமும் கிராமத்து வீடுகள், அவ்வப்போது எதிர்ப்படும் குழந்தைகள், தண்ணீர் சுமந்த பெண்கள். வழியெங்கும் பாக்கு மரங்கள், பிரிஞ்சி இலை குறுமரங்கள். வாசனையான மலைப்பாதை. நோங்ரியாட் கிராமம் வரை 3700 படிகள் என்றார்கள். சில இடங்களில் செங்குத்தாக மாறி நேர்க்கோடென பள்ளத்தாக்கை நோக்கி இறங்கும் படிகள். அத்தகைய நீர்வீழ்ச்சிகளை நிறையப் பார்த்துப் பாதையையும் அப்படியே அமைத்துவிட்டார்கள் போலிருக்கிறது. ஒரு மணி நேர நடைக்குப் பின்னர் முதல் வேர்ப்பாலம் வருகிறது, எனில் பாதையிலிருந்து சற்று விலகி செல்ல வேண்டும், நேரமாகிவிட்டதென அங்கு செல்லவில்லை. வழியில் வந்த சிற்றாற்றைக் கடப்பதற்கு ஓர் இரும்புப்பாலம். சீரமைப்புப்பணிக்கென வழியை மறித்திருந்தார்கள். ஆற்றில் தண்ணீர் குறைவாகவே இருந்ததால் பாறைகளின் வழி ஆற்றைக் கடந்தோம். வெள்ளம் சுழித்து உருவேற்றியிருந்த பாறைகளையும் உருளைக்கற்களையும் தொட்டுக் கடந்து செல்லும் போது நீரின் திட உருவைத் தொட்டுச் செல்வது போலவே இருந்தது. சற்று நேரத்திலேயே இரண்டாவது இரும்புத் தொங்கு பாலம். சிலர் ஏறியதுமே பாலம் ஊசலாடத் தொடங்கியது. அடியில் கற்பாறைகளைச் சுழன்று ஓடும் நீலநிற நதி. ஊஞ்சல் போல ஆடும் பாலம். அதைக் கடந்து சில நூறு படிகள் ஏறி ஆங்காங்கே நின்று இளைப்பாறி நிதானமான நடையில் நோங்ரியாட் சென்றடைந்தோம். பதினொரு மணி முதல் பன்னிரண்டு மணிக்குள் வானவில் அருவியை சென்றடைந்தால் அருவியில் வண்ணங்களின் ஒளிச்சிதறலைக்காண முடியும். நோங்ரியாட் சென்றடையவே பதினொரு மணியாகிவிட்டது. இன்னும் இரண்டு மணி நேர மலைப்பாதை இருக்கிறது. இறங்கிவந்த களைப்பில் கால்கள் ஏற்கனவே நடுங்கத் தொடங்கியிருந்தன. மூவர் அங்கேயே தங்கி விட ஏழு பேர் வானவில் அருவிக்குப் புறப்பட்டோம். நோங்ரியாட் கிராமத்துக்கு அருகிலேயே இருக்கிறது இரண்டடுக்கு வேர்ப்பாலம். ஆற்றின் குறுக்கே ரப்பர் மரத்தின் வேர்களை ஓட வழி செய்து ஆதாரமாக மூங்கில் கழிகளை வைத்து அதன் மேல் அந்த வேர்களை இணையவிட்டு அது காலப்போக்கில் மேலும் உறுதிகொண்டுவிட பாலம் உருவாக்கப்படுகிறது. பாலம் உறுதி கொள்ள இருபது முதல் முப்பது வருடங்கள் ஆகின்றன. மறுநாள் காலை அந்த இடத்தைப் பார்த்துக் கொள்ளலாம் என அதைக் கடந்து பயணத்தைத் தொடர்ந்தோம்.









வனம் அடர்ந்து கொண்டே சென்றது. காட்டாறு ஒன்றின் குறுக்கே ஊசலாடும் தொங்கு பாலம் ஒன்று. மூங்கில் கழிகளையும் அதை இணைக்கும் இரும்புக் கம்பிகளுமாக ஒவ்வொரு காலடிக்கும் முனகியது. சிறிது நேரம் சீரான மலைப்பாதை. பின்னர் இதுவரை பார்த்ததிலேயே நீளமான வேர்ப்பாலம் ஒன்று. சிக்கலான வலைப்பின்னல்களால் வேர்கோர்த்திருந்தன. கடந்து செல்லும் ஒவ்வொரு கால்களையும் தன் வேர்கள்வழி உணர்ந்தபடி நின்றிருக்கும் மரங்கள். கோர்த்த வேர்கள் வழி அம்மரங்கள் பேசிக் கொள்ளக்கூடும். அதில் நடந்து செல்லும் போது உயிருள்ள ஒன்றின் மீது நடப்பதாக உடல் கூசியது.





அதைக் கடந்த பின் வலப்புறம் உயர்ந்த மலைச்சுவர். இடப்புறம் ஆற்றை நோக்கி இறங்கும் சரிவு. நீரின் ஒலி வலுத்துக் கொண்டே வர இடப்பக்கம் நீலத் தடாகம் ஒன்று கண்ணில் பட்டது. அங்கே வெள்ளி நிற சிற்றருவி வழிந்து நீலத்தில் கரைந்தது.


















நீரின் ஒலி உடன் வர கற்களும் பாறைகளுமே படிக்கட்டாக அமைக்கப்பட்ட பாதை வழி பயணம். சில பகுதிகளில் கைகளையும் ஊண்றி ஏற வேண்டியிருந்தது. குடிநீர் மற்றும் மழை ஆடை வைத்திருந்த பை முதுகில் கணத்தது. கால்கள் நிற்கும் போதெல்லாம் நடுங்கிக் கொண்டிருந்தன. பள்ளத்தாக்கை ஓரவிழி கண்ணுற்ற போதெல்லாம் உடல் நடுங்கியது. சித்தத்தின் கட்டுப்பாடின்றி உடல் வேறு புறமாய் நகர்ந்தது. அவரவர் ஆற்றலுக்குத் தக்கபடி குழுவினர் பிரிந்து வந்து கொண்டிருந்தோம். இரு பெண்கள் முன்னால் சென்று விட மீதமிருப்போர் மிகவும் பின்தங்கிவிட தனியே எனது பயணம் தொடர்ந்தது. வேறு மனித நடமாட்டங்கள் அனேகமாக இல்லை. படிகளோ பாதையோ சரியாக இல்லாத போது மனது சற்றுப் பின்வாங்கியது. இங்கேயே சில மணிநேரம் அமர்ந்து ஆற்றையும் இந்தக் காட்டையும் மனதுள் சேகரித்துக் கொண்டு திரும்பிவிடாலமெனத் தோன்றியது.

மதிய வெயிலை குளிரென வடித்துக் கொடுத்தது காடு.
யானைக்காது சேம்பின் ஒற்றை இலை மட்டும் காற்றின் திசைக்கேற்ப குட்டி யானை போல இடவலமாகத் தலையாட்டிக் கொண்டிருந்தது. செடி அமைதியாக அவ்விலையை வேடிக்கை பார்த்தது. (இது குறுந்தொகையின் பாடலொன்றில் வரும் உவமை என்பது இதை எழுதியபின்னர் நினைவுக்கு வந்தது, அவ்விடத்தில் இயல்பாக மனதில் தோன்றிய இந்தச் சித்திரம் ஆயிரமாண்டுகளாக மனித மனதில் எழுகிறது!)

ஒரு செடியில் குறுமிளகு போன்ற காய் காய்த்துக்கிடந்தது. இலைகளின் வழி ஒளியின் நடனம். உட்கார்ந்த இடத்தில் மண் சரியும் உணர்வேற்பட்டது. நிலைகொள்ளாமல் எழுந்து நிற்க கால் தடுமாறியது. நீலவண்ண இறகுகளில் மஞ்சள் புள்ளிகள் கொண்ட பெரிய வண்ணத்துப்பூச்சி வந்து கால்களில் அமர்ந்தது. சற்று முன்னால் அது பறந்து செல்ல, அதைத் தொடர்ந்து பத்தடி நடந்து சென்றேன். பின்னர் நதிப்புற வனச்சரிவில் மறைந்து போனது. சில நொடிகளில் மற்றொரு சாம்பல் நிற வண்ணத்துப்பூச்சி வந்து இரண்டடி முன்னால் அமர்ந்தது. வனங்களின் இறைவியான லபாசாவை எண்ணிக்கொண்டேன். புலியாக வராமல் வண்ணத்துப்பூச்சியாக வந்திருக்கிறாளே என எண்ணிக் கொண்டேன். ஏதோ ஒன்றைப் பற்றிக் கொண்டு மேலேறி விட வேண்டும் என்ற உந்துதல் இருந்தால் மனது எதையேனும் அடையாளம் கண்டுகொள்கிறது.








அதன் பின்னர் அந்த அருவியை அடைய மேலும் ஒரு மணி நேரம் சற்று கடினமான, சறுக்கி விடக்கூடிய பாறைத்தடங்களில் பயணம், வழியெங்கும் ஓவியனின் தூரிகை தொட்ட வண்ணங்கள் அனைத்தும் இறகு முளைத்து எழுந்தது போல எண்ணற்ற பட்டாம்பூச்சிகள். வண்ணத்துப்பூச்சிகளின் வனம். இவ்வுலகைச் சுற்றிவர வண்ணத்துப்பூச்சியின் சிறகுகள் கிடைக்குமாயின் ஒவ்வொரு பூவும் திறந்து கொள்ளக்கூடும்.

ஓன்றரை மணிநேர நடைக்குப் பின் காற்றை பூத்தூறல்களால் நனைத்தபடி கண்முன் தெரிந்தது வானவில்லைத் தன் முகவரியாகக் கொண்ட அருவி. உயரத்திலிருந்து நீல நிறப் பொய்கையுள் பொழிந்தது. இந்தக் காட்டின் அரிய ரகசியம் ஒன்றைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் பெருமையுடன் மூன்று புறமும் ஓங்கிய பாறைச்சுவர்கள். அப்பொய்கையை அடைய, பாதை வந்து முடிந்த இடத்திலிருந்து நடை வழிகள் ஏதுமில்லாத கரடுமுரடான பாறைகள் வழியே தொற்றியும் தொங்கியும் குதித்தும் புரண்டும் இறங்க வேண்டியிருந்தது. அபாயகரமான இரு பாறைகளுக்கு இடையே மட்டும் மூங்கில்களால் சிறு ஏணி போலக் கட்டியிருந்தார்கள். நீர் கிளப்பிய உந்துதலில், உடல் வலியும் பாதையின் சிரமமும் மறைந்துவிட விரைவாகக் கீழே குளத்தருகே இறங்கிச் செல்ல முடிந்தது. அருவி பொய்கையைத் தொடுமிடத்தில் குளத்தை இரண்டாக வகுத்தபடி நின்றது பெரும் பாறை. பாறையின் இருபுறமும் நீலமும் பச்சையுமாக அலைவு இருநிறம் காட்டியது. ஆழத்தை இல்லையென்று ஆக்கியபடி அடித்தரைக் கற்களை அருகில் காட்டியது நீர். களைத்த கால்களை மெல்ல நீருக்குள் இறக்கிக் கற்களை உணர்ந்தபடி அமர்ந்திருந்தேன்.























அவ்வளவு தெளிவான நீலநிறமான நீர்ப்பரப்பை அதற்கு முன்னர் கண்டதில்லை. ஏற்கனவே முன்னால் சென்றடைந்திருந்த பெண்கள் நீர் விளையாடிக் கொண்டிருந்தனர். எங்களைத் தவிர இன்னும் நான்கு பேர். வேறு ஆளரவம் இல்லை. பின்மதியம். சூரியன் மலைச்சுவருக்குப் பின்னால் மறைந்து கொண்டிருந்தது. நீரின் குளுமை கால்களை சுட்டு பின்னர் மரத்துப் போகச் செய்திருந்தது. அடுத்த அரைமணிநேரத்தில் மற்ற பெண்களும் வந்து சேர்ந்தனர். கடினமான ஒன்றை செய்து முடித்துவிட்ட மகிழ்ச்சி அனைவர் முகத்திலும் தெரிந்தது. நீருக்குப் போட்டியாகப் பெண்களின் கூச்சலும் ஆரவாரமும். மீள நோங்ரியாட் நோக்கி நடந்தபோது உடலின் ஒவ்வொரு தசையும் எந்த அசைவில் பயன்படுகிறது எனப் புரிந்தது. மீண்டும் தனிமையிலேயே முழுப் பயணமும் அமைந்தது. கால்கள் நடுங்க கோலையும் ஊன்ற முடியாததால் அந்த நீளமான வேர்ப்பாலத்தைத் தவழ்ந்தே கடக்க முடிந்தது. இது போன்ற மலையேற்றங்களில் பல இடங்களில் அருகாமை கிராமத்து நாய்கள் உடன் வருவது வழக்கம். இம்முறையும் அருவியருகே இருந்த தேநீர்க் கடை ஒன்றிலிருந்து வேர்ப்பாலம் வரை ஒரு நாய் உடன்வந்தது. பாலத்தில் ஏறக்குறைய தவழ்ந்து சென்றபோது அதுவும் நிதானமாக அதன் மூச்சு வெம்மை மேலே பட கூடவே தவழ்ந்து வந்து வழியனுப்பி வைத்தது. இரவு அந்த நோங்ரியாட் கிராமத்தினர் நடத்தும் எளிய தங்கும் அறைகளில் தங்கினோம். ஓர் அறையில் ஆறு பேர் படுத்துக்கொள்வதற்கான படுக்கைகள் இருந்தன். அறைக்குள்ளேயே மலைப்பாறை ஓர் அங்கமாக இருந்தது. இனிய தேநீர், எளிய உணவு.

மறுநாள் அதிகாலை இரட்டையடுக்கு உயிர்வேர்ப்பாலம் காணச் சென்றோம். மிக அழகான இயற்கைசார் கட்டுமானம். அடியிலிருந்த குளத்தில் நூற்றுக்கணக்கில் மீன்கள் அலைந்தன, நீரில் நுழைந்த கால்களை சூழ்ந்தன.


















காலை உணவு முடித்து தீர்ணா கிராமம் நோக்கிய நடை துவங்கியது. ஏறும் போது படிகளின் முடிவற்ற தன்மை இன்னும் அதிகமாகத் தெரிந்தது. சில இடங்களில் எழுபது பாகைக் கோணத்தில் செங்குத்தாக நின்றன படிகள். திரும்பிப் பாராது அந்தந்த அடியில் கவனம் குவிப்பது ஒன்றே இது போன்ற தருணங்களில் உதவுவது. ஏறத்தாழ மூன்று மணி நேரத்தில் எல்லோரும் மேலே வந்து சேர்ந்தோம். சிரபுஞ்சிக்கு அருகிலேயே ஆரஞ்சு ரூட்ஸ் என்ற சைவ உணவு விடுதியில் மதிய உணவு. விடுதியின் பெரிய சாளரங்கள் வழி 1931ல் நிறுவப்பபட்ட ராமகிருஷ்ண மிஷன் வளாகம் கண்ணில் பட்டது.

அன்று மதியம் சிரபுஞ்சியை சுற்றியிருந்த வேறு சில அருவிகளும் பார்ப்பதாகத் திட்டம். சிலவற்றில் நீர்வரத்துக் குறைவாக இருந்ததால் செல்லவில்லை. குறிப்பிடும்படியானவை வைசாடங், டையன்த்லன் அருவிகள். ஆறொன்றைக் கடந்து மாபெரும் கரும்பாறைச் சமவெளியில் வண்டி நின்றபோது அங்கு எவ்விதம் நீர்வீழ்ச்சி இருக்க முடியுமென உருவகிக்க முடியவில்லை. தட்டையான நிலம். எரிமலைக் குழம்பு இறுகி உருவாகிய கரும்பாறைத் தளம் கண்ணுக்கெட்டிய தூரம் விரிந்த நிலப்பரப்பு. அதில் ஒரு சிற்றாறு ஓடி விதவிதமான குழிவுகளையும் வடிவபேதங்களையும் பாறைச்செதுக்குகளையும் உருவாக்கியிருந்தது. இன்மையிலும் தன் இருப்பை விட்டுச் சென்றிருந்தது நீர்.

இம்முறை மேகாலயப் பயணத்தில் கண்டறிந்த ஒன்று, நாம் காணச் செல்லும் அருவி அல்லது இயற்கைக் காட்சி நோக்கு தளங்களை எளிதாக அடையாளம் காண வழி 'தற்பட அபாய மண்டலம்' (Selfie danger zone) என்ற அறிவிப்புப் பலகைகள்; அனைத்து இடங்களிலும் இருந்தன. இங்கும் ஓரிடத்தில் இருந்தது கண்டு அருகே சென்றோம். நூறடிகளுக்கு அப்பால் அந்தத் தட்டை நிலம் மடிந்து பெரும்பள்ளத்தாக்கு ஒன்றை நோக்கி விழும் இடத்தில் அச்சிற்றாறு அருவியாகிறது. நாங்கள் நடந்து கொண்டிருந்த அப்பாறை நிலம் மழைநாட்களில் பொங்கி வழியும் ஆற்றின் உடற்பகுதி.

அடுத்த நாள் அதிகாலையிலேயே சிரபுஞ்சியிலிருந்து கிளம்பி வங்காளதேச எல்லையில் ஷ்னோன்ப்டெங் (Shnongpdeng) என்னும் இடம் செல்வது திட்டம். வழியில் முதலில் கண்டது மாஸ்மாய் குகைகள்(Mawsmai caves). மேகாலயா எண்ணற்ற நீண்ட குகைகளை உடையது. அதில் சீராக நுழைவுப்பாதை மற்றும் ஒளியமைப்புகளோடு சுற்றுலா வருபவர்களுக்கென வசதிபடுத்தப்பட்ட இடம் இந்த மாஸ்மாய் குகைகள். ஐம்பது படிகள் ஏறிச்சென்றதும் இப்பிலத்தின் நுழைவாயில் வருகிறது. மிக அழகான குடைவுச் சிற்பங்களையும் தூண்களையும் கொண்ட ஆலயம் போன்ற குகை இது. சில பகுதிகளில் உடலை முழுவதுமாகக் குறுக்கி பாறைகளுக்கிடையே நுழைத்து செல்ல வேண்டியிருக்கிறது. பல இடங்களைக் குனிந்தே கடக்க வேண்டிய அமைப்பு. இதன் கூரை முதல் தரை வரை சுண்ணாம்புப் பாறைகள் மற்றும் நீரின் கலைவண்ணம். அரைமணி நேரம் சுற்றி வேறு வழியில் வெளியேறினோம்.































அங்கிருந்து ஆசியாவிலேயே சுத்தமான கிராமம் என்று பெயர் பெற்றிருக்கும் மாவ்லினாங் (Mawlynong) கிராமம் சென்றோம். கடவுளின் தோட்டம் என்கிறது அறிவிப்புப்பலகை ஒன்று. எங்கெங்கும் மூங்கில் கூடைகள். அதில் சேகரிக்கப்படும் வீட்டுக் குப்பைகள், பெரிய குப்பைக் குழிகளில் சேகரிக்கப்படுகின்றன. அதை மக்கும் குப்பை, மக்காத குப்பை என வகைப்படுத்தி விவசாயத்துக்கான உரம் தயாரிக்கின்றனர். ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் கிராமமே இணைந்து மரக்கன்றுகளை நடுகிறது. மாவ்லின்னாங் கிராமத்தில் கான்க்ரீட் வீடுகள் மிகக்குறைவு. பழைமை மாறாத மண்வீடுகளையும், மூங்கில் வீடுகளையுமே அதிகளவில் இக்கிராம மக்கள் பயன்படுத்துகின்றனர். இயற்கையை மிகுந்த திட்டமிடலோடு பேணி வரும் இடம். அங்கு மேகாலய உணவு உண்டோம். வடகிழக்கில் பெரும்பாலும் அசைவ உணவுகள்தான். சைவ உணவு எனில் அரிசிச் சோறு, பருப்பு மற்றும் உருளைக்கிழங்கு எல்லா இடங்களிலும் கிடைக்கிறது. இங்கு கூடுதலாக கீரை வகைகளும் கேரட்டும் சமைத்திருந்தார்கள். சுவையான உணவு.













மாலை இரவை சந்திக்கும் எல்லையில் டாக்கி அருகே இந்திய பங்களாதேஷ் எல்லையில் நின்றோம். பாக்கு மரங்கள் நிறைந்த மலைச்சரிவுகள் இடப்புறம் இருக்க வேலிக்கு அப்புறம் கண்ணை நிறைத்து விரியும் வங்கதேச சமவெளி. இதற்கு மேல் உயர்ந்து தாழ்ந்து மடிந்து எழுவதில்லை என உறுதிபூண்ட நிலம் மடிப்புகளின்றி நீவிவிடப்பட்ட துணிபோலக் கிடந்தது. ஆங்காங்கே சமவெளி எங்கும் வான்வெளியின் இன்மையைத் தன்னுள் ஒளியெனத் தேக்கி வைத்திருந்த நீர்நிலைகள்.

தொடர்ந்து எல்லைக்கோட்டிலேயே ஊரும் எறும்பாகப் பயணம். வங்கதேசத்துக்கு நிலக்கரி ஏற்றுச் செல்லும் நூற்றுக்கணக்கான லாரிகள் சாலையோரம் அணிவகுத்திருந்தன. எல்லைப்புற ராணுவ மையங்கள், சோதனைச்சாவடிகள், பச்சை சீருடை வாகனங்கள். வங்கதேச வயல்வெளிகளிலிருந்து கூடடைய மேகாலயக் காடுகளுக்குத் திரும்பும் பறவைகள். காற்றும் எல்லைதாண்டி வீசிக் கொண்டிருந்தது. அனைத்துக்கும் சாட்சியாக உம்காட் நதி அமைதியாக நகர்ந்து சென்றது. காஸி ஜைண்டியா மலைப்பகுதிகளின் இயற்கை எல்லையாக ஓடும் உம்காட் நதி இங்கிருந்து வங்கதேசத்துள் நுழைகிறது. ஷ்னோன்ப்டெங்கை ஆறரை மணியளவில் சென்றடைந்தோம். மலைகள் சூழ்ந்த அகன்ற நதிக்கரையில் இரவு ஓய்வெடுத்துக் கொண்டிருக்க, நதி உருட்டி விளையாடிய பாறைகளும் கற்களும் குளிர்காய்ந்து கொண்டிருந்தன. இருளில் கண்கள் பழகும் வரை தடுமாறியபடி படகேறினோம். நட்சத்திரங்களின் ஒளியில் படகில் நதியைக் கடந்து அக்கரை சென்று சேர்ந்தோம். வரிசையாக ஆறு கூடாரங்கள். பின்புறம் குன்றின் சரிவில் சமையல் கூடாரம். கூடாரங்களுக்கு அருகே தீ மூட்டியிருந்தார்கள். குளிரில் நெருப்பு நடுங்கிக் கொண்டிருப்பது போலிருந்தது. சூழ அமர்ந்து குளிருக்கு உடல் பழகியதும் அனைவரும் எளிதானார்கள். அன்னையராக மனைவியாக மகளாக என்று எதுவுமே இல்லாமல் பெண்கள் இருக்க வெறும் சிரிப்பும் பாட்டுமாக இரவு ஒழுகிச் சென்றது. நதியும் கூடவே சிரித்தது. உறங்கவே கூடாது எனச் சொல்லிக் கொண்டிருந்த பெண்கள் ஒவ்வொருவராக உறங்கச் சென்றார்கள். வாசலில் தீ அனைந்து கங்குகள் கனன்றன. ஒவ்வொரு கூடாரத்து வாசலிலும் வைக்கப்பட்டிருந்த அரிக்கேன் விளக்குகள் மங்கத் தொடங்கின. இருவருக்கு ஒரு கூடாரம். கூடாரத்திற்குள் மெல்லிய போர்வைக்குள் குளிரும் இதமும் கலந்திருந்தது. நள்ளிரவுக்கு மேல் காற்றாலான நதி குடில்களுக்கு மேலே அலைபுரண்டு ஓடுவது போலிருந்தது. குடில் பறந்தெழும் பரிதவிப்பில் சிறகு படபடத்தது. நள்ளிரவு தாண்டியும் உறங்க முடியவில்லை. நதிக்கு அருகே படுத்திருந்ததால் இரவு முழுவதும் தொடர்ந்து நீர் சார்ந்த கனவுகளும் நினைவுகளும் கற்பனைகளும். நாலரை மணிக்குக் குடிலுக்கு வெளியே வந்து அமர்ந்தேன். கூடாரங்களை நோக்கியபடி அமர்ந்திருந்ததால் யாரோ பின்னால் காலடி எடுத்து வைத்து வருவது போல நடந்தது நதி. விரிப்பு ஒன்றில் மணல் சிதறிக் கிடந்தது; வானோக்கி அதில் படுத்துக் கொண்டேன். ஒரே ஒரு அரிக்கேன் விளக்கு மட்டும் மினுங்கிக் கொண்டிருந்தது. நட்சத்திரங்களை மங்கலாக்கிய வெண்திரை ஒன்றால் வானம் போர்த்தப்பட்டிருந்தது. ரத்தம்தோய்ந்த நகக்கீறலென கீற்று நிலா. இரவெல்லாம் இடையறாத காற்றின் ஒலியும் நீரின் ஒலியும் நரம்புகள் அனைத்தையும் நீவி எளிதாக்கியிருந்தது. காலமெல்லாம் இசைக்கும் வெளி. ஓயாத குழலோசையெனக் காற்று. இசை கேட்டு மயங்கும் பெயரரியா நட்சத்திரங்கள். இவ்விசை எட்டாத் தொலைவுகளில் காதுகளை இறுக மூடிக் கொண்டு வெற்றிரைச்சல் தேடும் வாழ்வு எங்கோ இவையனைத்துக்கும் அப்பாலிருந்தது. பார்த்திருக்கையிலேயே கருக்கிருட்டுள் ஒளி ஊடுருவியது. நிலவு மறைந்து கதிர் எழுவதற்கு முந்தைய நிமிடங்கள் அற்புதமான ஒளிக்கணங்கள். சூழ்ந்திருந்த மலை முகடுகள் ஒளி கொண்டு நீருக்குள் மின்னொளி குடிகொண்டது. ஆற்றின் கரைகளில் யாருமற்ற படகுகளில் ஏறி குதித்தாடியது காற்று. தாளவியலாத தத்தளிப்பு.


















மெதுவாக அனைவரும் விழித்துக் கொள்ள அன்றைய நாள் நீர் கேளிக்கைகளுக்கானதாக வகுக்கப்பட்டிருந்தது. இருப்பத்தைந்து முதல் ஐம்பது வயது கொண்ட பெண்கள் குழுவில் இருந்தனர். எல்லோரும் சேர்ந்து பாண்டி ஆட்டம் விளையாட முயன்றோம். உடலெங்கும் இருந்த வலியும் விளையாடியது.














வெயில் ஏறிய பின்னர் உம்காட் ஆற்றில் படகுகள் அந்தரத்தில் மிதப்பது போன்ற தோற்றமேற்படுகிறது. நதியின் அடியாழம் வரை பளிங்கெனத் தெரிவதால் ஏற்படும் விளைவு. எனில் கதிரொளி ஏறக்குறைய உச்சிவானிலிருந்து விழும் நேரமே அந்தக் காட்சி தோன்றுகிறது. ஆழம் வரை ஒளி ஊடுருவுவதால் அதிக ஆழம் இல்லையென காட்சிப்பிழை கொள்ளச் செய்யும் தோற்றம். ஷ்னோன்ப்டெங்கிலிருந்து கிளம்பி டாக்கி தொங்குபாலத்திலிருந்து பச்சை நிற ஆற்றையும் அதில் மிதந்தலையும் படகுகளையும் பார்த்துவிட்டு ஷில்லாங் நோக்கிக் கிளம்பினோம்.






வழியில் மேலுமொரு அழகிய அருவி-கிராங் சுரி அருவி. இங்கும் அதை அணுகும் வரை அருவிக்கான தடயமே இல்லாத மொட்டைமலை. பல நூறடி ஆழத்தில் கிராங் சுரி அருவி கொட்டிக் கொண்டிருந்தது.
தேவதைக் கதைகளுக்குரிய அழகுடன் வளைவான கூரை போன்ற பாறையிலிருந்து அடர்நீல/கரும்பச்சைக் குளத்துள் குதித்தது. தண்ணீர் இந்த வண்ணம் கொண்டிருக்கும் எனப் புகைப்படங்களைப் பார்த்தால் நம்பியிருக்கமாட்டேன். சமீபத்திய கேமராவின் ஒளி வடிகட்டிகளின் மாயம் என்றே தோன்றும். நீலமென முதல் பார்வைக்கும், சொடுக்கித் திரும்பும் மயில் கழுத்தின் நிறமென ஒரு கணமும், ஆழ் பச்சை என மறு கணமும் தோன்றும் நீலம். அருவியை அணுகும் பாதையை கற்படிகளால் சீர்மைப்படுத்தியிருக்கிறார்கள். இன்னும் சில பகுதிகளில் பணி நடைபெறுகிறது.








மறுநாள் ஷிலாங்கின் அருகிலிருக்கும் லயத்லும் (Laitlum Canyons) கணவாய் பார்க்கச் சென்றிருந்தோம். மலைகளின் எல்லை என்று பொருள்படும். மேலே பார்வைத்தளத்திலிருந்து பள்ளத்தாக்கை பார்க்க மட்டுமே நேரமிருந்தது. பார்வையின் எல்லை வரை பல்வேறு வண்ணங்களின் சிதறல். அணுகிச் சென்று பார்க்க பாதை இருக்கிறது. இன்னொரு முறை கீழே செல்லத் திட்டமிட வேண்டும்.






அதன் பின்னர் ஷில்லாங்கிலுள்ள டான் பாஸ்கோ அருங்காட்சியகம் சென்றோம். வடகிழக்கு மாநிலங்களின் வீடுகள், மூங்கில், பிரம்பு கைவினைத் தொழில்கள், ஆடைகள், இசைக்கருவிகள், பழங்குடி ஆயுதங்கள் குறித்த அருங்காட்சியகம், ஏழு தளங்களிலாக பதினாறு கேலரிகளில் உள்ளது. எனில் பெரும்பகுதி கிறித்தவ மிஷனரியின் வளர்ச்சி குறித்தே இருக்கிறது. வடகிழக்கு மாநிலங்கள் ஒவ்வொன்றின் தனித்தன்மைகள், பழங்குடியினர் குறித்த அதிகப்படியான தகவல்கள், நீர்வளம், கணிமவளங்கள், தொல்லியல் குறித்து எல்லாம் இன்னும் செறிவாக இருந்தால் வடகிழக்கு மாநிலங்கள் குறித்த அருங்காட்சியகம் என்ற பெயருக்கு இன்னும் நிறைவளிப்பதாக இருக்கும்.

அடுத்தநாள் காலை கவுஹாத்தி திரும்பியதோடு சுற்றுலாத் திட்டம் நிறைவு. குழுவினர் விமான நிலையம் திரும்பினர். எனது விமானம் இரவு எட்டரை மணிக்குதான் என்பதால் பிரம்மபுத்திரா நதியைக்காணச் சென்றேன். காமாக்யா கோவிலுக்குச் செல்ல முயல முந்தைய நாள் சிவராத்திரி என்பதாலும் வாரயிறுதி நாள் என்பதாலும் கூட்டம் மிக அதிகமாக இருக்கும், மாலை ஆறு மணிக்குள் தரிசிக்க வாய்ப்பில்லை என்றார்கள். எனவே பிரம்மபுத்திராவைப் பார்க்கக் கிளம்பினேன். அந்திநேர படகுப் பயணம் ஒன்றிருந்தது.


படகின் மேல்தளம் முழுமையாக நிரம்பிவிடவே கீழ்த்தளத்துக்குப் பயணச்சீட்டு வாங்கினேன். மேகங்கள் மேலை வானில் நிறைந்திருந்தன. கீழ்தளம் மெல்லிசை நிகழ்வுக்கான ஏற்பாடுகளில் இருந்தது. ஆற்றைப் பார்க்கும்படியான இடமிருக்கிறதா எனக் கேட்டு படகின் முகப்பில் இருந்த இரு நாற்காலிகளில் ஒன்றில் சென்றமர்ந்தேன். இன்னொரு நாற்காலியில் ஓர் இளம்பெண். ஒளிபொருந்திய கண்கள். இயல்பாக இருந்தார், அறிமுகமானோம். மும்பையைச் சேர்ந்தவர், ஐ.நாவில் பணிபுரிபவர், நாகாலாந்தின் கோகிமாவின் நிலைத்த வளர்ச்சிக்கானத் திட்டமிடலில் இருக்கிறார். நாகாலாந்தின் நிலை குறித்துப் பேசிக் கொண்டிருந்தார். அவரது பணி மைய நிலத்திலிருந்து எல்லை நோக்கி நீளும் வளர்ச்சியின் சிறு கரம். அன்றாடத்தின் வசதிகள் குறைவாகவே கிடைக்கும் இது போன்ற இடத்தில் ஒரு தேச முன்னேற்றப் பணியை மிகுந்த உற்சாகத்தோடு எடுத்துப் பணிபுரியும் இளையோரைக் காணுகையில் மனது நம்பிக்கை கொள்கிறது.அந்த மாலையை, இருகரை அறியாது அகன்று விரிந்த நதியின் வசீகரமான கம்பீரத்தை, நீரில் பொன்னுருக்கொண்ட அந்தி வெயிலை, காற்றில் அவ்வப்போது கேட்ட இசையை இன்னும் அழகும் நிறைவும் மிக்கதாக்கியது அந்த சந்திப்பு. மேகங்களோடு நடப்பதற்கும், வண்ணத்துப்பூச்சி இறகு கொண்டு பறப்பதற்கும், முடிவற்ற மழையில் கிடப்பதற்கும், குகை வழிகளில் அலைவதற்கும், பொழிவுகளில் கரைவதற்கும் வடகிழக்கின் வாயில் திறந்தே இருக்கிறது. அடுத்து வரும் வாய்ப்பில் நாகலாந்து செல்ல வேண்டும் என எண்ணிக் கொண்டேன்.

















ஒரு பயணம் மற்றொரு பயணத்திற்கான விதை விதைத்தே நிறைவு கொள்கிறது.