Sunday, September 2, 2018

வனவாசி

https://www.jeyamohan.in/109452#.W4yrWegzZnI

அன்புநிறை ஜெ,

ஊட்டி காவிய முகாம் நாட்களின் ஒரு அதிகாலை நடையில், இந்தியா உருவாகி வந்த சித்திரத்தை, சிறு இனக்குழுக்களில் இருந்து பேரரசுகள் உருவாகும் சித்திரத்தைக் குறித்து ஜெ விளக்கியது, உள்ளூற சுழன்று கொண்டே இருந்தது. டி.டி.கோசாம்பி எழுதிய மேய்ச்சல் இனத்துக்கும் வேளாண் இனத்துக்குமான இடையறாத முரண். இதன் விளைவாக 'வனவாசி' நினைவில் எழுந்து வரவே மீள்வாசிப்பு செய்தேன்.

பழங்குடிச் சமூகங்கள் நிறைந்த வனங்கள் நிறைந்தது பண்டைய இந்தியா. வனங்களில் வாழ்ந்த இனங்களை நாகரிகத்தின் பலம் கொண்ட இனங்கள் வென்றதன் தொடர் சித்திரமே வரலாறு. விபூதி பூஷண் வந்த்யோபாத்யாய எழுதிய 'ஆரண்யக' எனும் வங்க நாவலின் தமிழாக்கம் 'வனவாசி' (தமிழில் த.நா.ஸேனாபதி - விடியல் பதிப்பகம்)

நகரத்திலிருந்து வேலை நிமித்தம் வனம் செல்பவன் வனவாசியாகி நகர் மீளும் கதை. கதை வங்காளத்துக்கும் பீகாருக்கும் இடையிலான ஒரு வனப்பரப்பில், பூர்ணியா பகுதியில், சுதந்திரத்துக்கு முற்பட்ட காலகட்டத்தில் நிகழ்கிறது. பெருங்காட்டு வெளியின் உரிமையாளராகிய ஜமீன் ஒன்றின் எழுத்தராக கல்கத்தாவிலிருந்து செல்லும் சத்தியசரணின் வாழ்வின் பிற்பகுதியில் முன் நினைவுகளென நிகழ்கிறது கதை.

வீட்டின் பரணை சுத்தம் செய்கையில் தட்டுப்படும் நாள்குறிப்பொன்றின் வழியாக சில சமயம் நமது முன்னோரது வாழ்க்கையின் வாயிலுள் நுழைந்துவிட நேருமல்லவா, அதுபோன்ற ஒரு கதையமைப்பு. பயணத்தில் பின் நழுவிச் செல்லும் மரங்கள் போல வனமென்னும் கதைக்களத்துள் பல காட்சிகள், பல சித்திரங்கள், பல மனிதர்கள் வந்து செல்கிறார்கள்.

கதையின் நாயகன் 'நாகரிக' நகரிலிருந்து 'பண்படாத' காட்டுக்குச் செல்கிறான். அவ்வனப் பகுதியை விளைநிலமாக மாற்றி ஜமீனுக்காக குத்தகைக்கு விடுவதே அவனது வேலை. ஓரிரு மாதங்களுக்குப் பிறகு வேலை தனக்கு ஒத்துவரவில்லை என்று கூறித் திரும்பிச்செல்லும் எண்ணத்தில்தான் தொடங்குகிறான். ஆரம்பத்தில் திகிலையும் ஏக்கத்தையும் உண்டுபண்ணும் காடு மெல்ல மெல்ல மோகினியென அவனை வசப்படுத்தி அவனுள் நிறைகிறது. கதைசொல்லியோடு நாமும் வனத்துள் நுழைகிறோம், வனம் நம்முள் நுழைகிறது.

அங்கு அவன் காணும் காட்சிகளும், எளிய மனிதர்களும், அவர்கள் வாழ்க்கை முறையும், அவன் இவற்றின் வழியாக அடையும் தரிசனமுமே இக்கதை.

காட்சிகள்:
லப்துலியா வனப்பகுதியின் அந்நிலப்பரப்பும், காடும் கதை வாசித்து வெகுநாட்களுக்கு மனதில் நிறைந்து விடக்கூடியது. மஞ்சம்புல் வேய்ந்த கூரைகள், தங்குதடையின்றி நிலவு பொழியும் ஃபுல்கியா நிலத்துப் பெருவெளி, பலவிதமான மரங்கள், பூக்களால் நிறைந்தது இக்காடு, எனில் பசுங்காடல்ல. ஆண்டுக்கு ஒரு முறை மழை பெறும், கடும் கோடையையும், கடும் குளிரையும் சந்திக்கும் காடுகள். அதன் உக்கிர வெயிலில், கரடு முரடில் கதை சொல்லிக்கு காளி தெரிகிறாள். கதை சொல்லி குதிரை மேலேறி காட்டினூடே செல்லும் காட்சிகளில் எத்தனை எத்தனையோ மரங்களின், மலர்களின் பெயர்களைக் குறிப்பிடுகிறார் - கஜாரி மரம், காட்டு வாதுமை, பலாசம், சாலமரம், தாதுப மலர்கள், இப்படிப் பலவகை. காட்டின் பல மரங்களும் மலர்களும் அறிய முடிகிறது.

பல பருவங்களும் வந்து செல்கின்றன, கடும் கோடை, காட்டுத்தீ, அடை மழை, குளிர், வசந்த காலம் என காடு பல்லுரு காட்டி அவனுள் வேர்பிடிக்கிறது. வனதேவதைகள் மண்ணிறங்கக் கூடிய நிலவுபூசிய பல இரவுகளை வனவிலங்குகளின் அபாயத்தை மீறிக் குதிரையிலேறிச் சென்று கானகத்தில் கதைசொல்லி செல்லும் பகுதிகள் கவிதையானவை, கனவு நிறைப்பவை.

கதை மாந்தர்கள்:
ஏறத்தாழ இருபதுக்கும் மேற்பட்ட கதைமாந்தர்கள், அவர்களோடு கதைசொல்லிக்கு நிகழும் அறிமுகங்களும், அவர்கள் வனத்தில் மேற்கொள்ளும் வாழ்க்கை முறைகளும், வாழ்வியல் போராட்டங்களுமாக நாட்குறிப்பென நகர்கிறது கதை. மிக மெல்லிய காற்று எதிர்பாராது பெருத்த ஓசையுடன் பொருட்களை வீழ்த்தி விட்டு செல்வது போல, சில கதாபாத்திரங்கள் மிகக் குறைவாகவே வந்து, மனதில் பெருஞ்சலனமேற்படுத்துகிறார்கள்.

தாவ்தால் ஸாஹூ எனும் ஒருவன் வட்டிக்குப் பணம் கொடுப்பவன், அந்நிலப்பகுதியில் செல்வப்பசையுள்ளவன் என்று அறியப்படுபவன், பழந்துணியில் பொரியரிசியுடன் அறிமுகமாகிறான். கடன் கொடுத்தவர்கள் ஏமாற்றிய பிறகு, காலாவதியான கடன் பத்திரங்களை அநாயசமாக கிழித்தெறிந்து விட்டு, 'நானேதான் எல்லாவற்றையும் சேர்த்தேன், நானேதான் தோற்றேன். தொழில் என்றால் லாபம், நஷ்டம் இரண்டும்தான் இருக்கும்' எனக் கடந்து போகிறான் - வறட்சியையும் வெள்ளத்தையும் ஒன்றென எதிர்கொள்ளும் பெருவனம் மட்டுமே கற்பித்திருக்கக்கூடும் இதை.

ஜயபால்குமார் என மற்றொருவன் இருபது வருடங்களாக மனைவி மக்களை இழந்த பிறகு முழுத்தனிமையில், தனது குடிசை வாசலில் வெறுமனே அமர்ந்திருப்பவன் - அவனைக் கண்டு முதலில் கதைசொல்லி வியப்படைகிறார். பிறகு அவனை சூழ்ந்துள்ள வனமும், நீலக்குன்றுகளும், புரசமர நிழலும், ஓடி ஓடி என்ன லாபம் என்று கதைத்தலைவனது மனப்போக்கை அங்கு செல்லும் அமைதியான ஆற்றுநீர் போல அமையச் செய்கிறது.

தாசியின் மகளாகிய குந்தா ராஜ்புத்திரன் ஒருவனுக்கு மனைவியாகி செல்வத்தில் திளைத்து, அவன் மறைவுக்குப் பின் குழந்தைகளுக்காக எச்சில் இலைக்காகக் காத்திருக்கும், இருளில் உதிர்ந்த தானியங்களைப் பொறுக்கும் வாழ்வு விதிக்கப்பட்டும், வலுக்கட்டாயமான தகாத உறவுக்கு இணங்காது இருக்கும் பெண். சரும வியாதி வந்து ஊராரால் கைவிடப்படும் ஒருவனைத் தனது பணிவிடையால் உடல்நலம் தேற்றி, அதற்கீடாகப் பணம் பெற மறுத்து தந்தையென எண்ணும் அவளது அன்பு. அத்தனை பருவகால மாற்றத்திலும் வேரூன்றி நிற்கும் வனவிருட்சம்.

தாதுரியா - காட்டுவாசிச் சிறுவன், கலைஞன். காடு அவனுள் கலையெனத் திகழ்கிறது. ஒரு வேளை உணவுக்கு வழியில்லாத போதும் 'சக்கர்பாஜி' நடனம் கற்றுக்கொள்ள அவன் படும் பாடும் அவனை மாணவனாக ஏற்கும் குருநாதரும்' அந்த மண்ணின் கலையின் இறுதித் துளிகள். அவனது இரும்புப் பாதை மரணம் நகரம் காடை அழிப்பதன் ஒரு காட்சியே.

யுகல் பிரசாத் - நன்கு படித்தவன், எனில் வனத்தில் தன் வாழ்வைக் கழிப்பவன், அரிய மலர்ச்செடிகொடிகளைத் தேடி வேறு நிலங்களிலிருந்து வனத்திற்கு கொண்டு வந்து விதைப்பவன். தனக்கென நோக்கமின்றி, காட்டுப் பகுதியின் வனப்பை மேலும் அதிகரிக்க வாழ்வை செலவழிப்பவன். அழிக்கப்படும் காட்டின் இறுதிக் கொடியை உயர்த்தும் பிரதிநிதி.

மஞ்சி - அறுவடைக்கு வரும் நாடோடிக் குடும்பத்தில் கிழவன் நக்சேதிக்கு இளையவளாக வாழ்க்கைப்பட்ட துடிப்பான பெண். அவளது உயிர்ப்பும் இளமையும் கான் தந்தது. வருடந்தோறும் அவள் காணும் அறுவடைக்கால சந்தை நகர வாழ்வெனும் மகுடியை அவள் முன் ஊதி மயக்கி அழைத்துச் செல்கிறது. இரண்டு முரணோட்டங்கள் ஏற்படுத்தும் சிக்கலில் குழந்தையையும் இழந்து தொலைந்து போகிறாள்.

இவர்கள் அனைவரும் சிறிதே வரினும், பெரிதும் மனம் நிறைப்பவர்கள்.

தரிசனம்:

கதை நடக்கும் 1920-களுக்கு மட்டுமல்ல என்றென்றும் ஏதோ ஒரு சமூகம் இன்னொன்றை உள்ளிழுத்தோ அழித்தோ முன் சென்று கொண்டுதான் இருக்கிறது. அவ்விதத்தில் வனவாசி பசுமைமாறாதது. ஏறத்தாழ
நூறாண்டுகள் தொடும் தருவாயிலும்(1920களில் விபூதிபூஷண் பந்த்யோபாத்யாய இக்காட்டுப்பகுதிகளில் பணிபுரிந்திருக்கிறார்) இந்த நாவல் இன்றைக்கும் பொருத்தமாகவும், வாசித்து முடித்ததும் வெளிவரும் பெருமூச்சை மேலும் நீட்டிப்பதாகவுமே இருக்கிறது.

மகாலிகாரூப மலைக்காட்டில் சத்யசரண் காணும் 90 வயது வனக்குடியைச் சேர்ந்த மூதாட்டியை அன்னபூரணி என்ற பராசக்தியை நரை மூதாட்டியாக வருணித்த கவிஞரை நினைவுகூறுகிறான். "சில இனத்தாரிடம் என்ன பண்பாட்டின் வித்து ஒளிந்து கிடக்கிறதோ, அதைப்போகப் போக அவர்கள் வளர்த்துக் கொண்டே இருக்கிறார்கள். வேறு சாராரோ ஆயிரம் ஆண்டுகள் ஆகியும் ஒரே இடத்தில் தூணைப் போல அசைவற்று நிற்கிறூர்கள்" என்ற வரி சிந்தனையைக் கிளர்த்தியது. சொல்வளர்காட்டில் வரும் வரி நினைவில் வந்தது - ஞானம் தேடி அனைத்து குருநிலைகளுக்கும் அலைந்த லௌபாயனரிடம் சுஃபலர் சொல்வது - "ஆலமரத்தடியிலிருந்து ஆலமரத்தடிக்குச் செல்லலாம், மரங்கள் வேறு, நிலம் ஒன்று". மாறாதிருப்பதை காலம் உண்ணும், எனினும் ஆறு ஓடி அறிவதை கடல் அமைந்து அறிகிறது. கடல் சுழற்சியில் அறிவதை, விசும்பு பரந்து அறிகிறது, விசும்பு விரிந்து கிடப்பதை, மனம் சுருங்கி அறிகிறது. நாகரீகம் என்பதை பயன்மதிப்பு என அளவிடுகையில் நாமறியாத ஒன்றை தரிசனம் என்று அறிகையில் நாம் உணரக்கூடும். வளர்ச்சியடைந்த நாடுகள் பின்தங்கிய நாடுகளை 'முன்னேற்றும்' பொறுப்பைத் தலைமேல் எடுத்து நடந்து கொள்ளும் முறை கண்கூடு.

இவர்களைத் தவிர முக்கியமான கதை நாயகி சாந்தால் அரசரின் பேத்தி இளவரசி பானுமதி. இவளை கதைசொல்லி சந்திப்பதே இக்கதையின் வனம்-நகரம் சந்திப்பின் மையம். அவள் நேற்றைய 'பூலோகத்தையே ஆண்ட' காட்டரசுக் குலத்தின் இளவரசி, இன்று ஆடுமேய்க்கும் அரசரின் மரணத்துக்குப் பிறகு கடனில் தத்தளிப்பவள். கதைசொல்லி, நாகரிகத்தின் உச்சமென கதைக்குள்ளேயே கருதப்படும் வங்காளத்தின் நவீன இளைஞன். அவன் ஆலமரத்தடியில் சாந்தால் குல முன்னோர்களின் சமாதியில் பூ வைக்கும் காட்சியே இந்தக் கதை என்றும் சொல்லலாம். தோற்றவரின் மறைவுக்கு வென்றவன் சிந்தும் இருதுளிக் கண்ணீர்.

கல்கத்தா நகரில் அமர்ந்து குற்ற உணர்ச்சியோடு அவன் நினைவுகூறும் இக்கதையில், அவன் வனத்தை அழிக்க நீளும் நகரின் இரும்புக் கரம். அவனை மயக்கி அவனுள் நுழைபவள் வனமெனும் மோகினி, எனில் அவளது நினைவுகளுக்கு மலர் வைத்து, காட்டை அழித்து விளை நிலமாக்கி, பலரும் 'முன்னேற' வழி செய்து நகர் திரும்புகிறான் கதைசொல்லி. 'முன்னேற்றம்' என்பதைக் கேள்வியாகவே பார்க்கிறான். "மனிதனுக்கு வாழ்வில் வேண்டியது என்ன? முன்னுக்கு வருவதா? மகிழ்ச்சியா? முன்னுக்கு வந்தும் மகிழ்ச்சி இராவிட்டால் அதனால் என்ன பயன்?" ஒரு சில கணம் பானுமதியை மணந்து அங்கேயே தங்கிவிடும் சாத்தியமொன்றை அவன் மனம் கனவு காண்கிறது. எனில் அவனது பழகிய நரகத்துக்கு அவன் திரும்பி வருகிறான்.

கதையில் கதைசொல்லி நினைத்துக் கொள்கிறான் - "இந்தப் பிரதேசத்தில் காண்பதுபோல் - பரந்த இந்த வெளியும், மேக வரிசைகளும், மலை வரிசைகளும், தொலைதூரம் வரை விரிந்து கிடப்பது போல் - பானுமதியிடமும் ஒருவிதக் கூச்சமற்ற தன்மையும், எளிமையும், தங்குதடையற்ற ஒரு சுதந்திர மனப்பான்மையும் இருந்தன. காடும் மலையும் இவர்கள் மனதில் இப்படி ஒரு விடுதலை உணர்ச்சியை உண்டு பண்ணியிருந்தன. பானுமதியிடம் நான் கண்ட ஆதிப் பெண்ணின் இயல்பை நாகரிகச் சமூகத்தில் காணமுடியாது. அங்கே பெண்ணின் ஆன்மா சமூகக் கட்டுதிட்டங்களில் அழுந்தி, உணர்வற்றுக் கிடக்கிறது."
இது நிதர்சனம், எனில் நாகரிகம் என்பது கூர்மழுங்கிய கூழாங்கல்லின் அழகைக் கண்டு பொறுக்கிச் சேர்க்கும் நாம், கரடுமுரடான கற்களை மிதித்துக் கடந்து செல்வது போலத்தானே.

வனம் என்பது நமது உள்ளுறையும் அகம். இருள் நிறைந்தது, தானாய் வளர்வது, கட்டற்றது, கருணையும் அற்றது, பாவனைகளுக்கான தேவையற்றது. நாம் காட்டும் வெளித்தோற்றம் நகரம், பிறரது பார்வைக்கானது, ஒளிமிக்கது, அழகு செய்யப்படுவது, கட்டுறுத்தி, மட்டுறுத்தப்பட்டது. இவை கொள்ளும் முரண்களில் புறம் வெல்லும் தருணங்களே மிகை, எனில் அகம் அழியாத வரையே சமன் நிலைக்கிறது. இருளே ஒளியை சுமக்கிறது. வனம் சென்று முழுமையை மீண்டவர் இல்லை,தன் மனதுள் சென்றுவிட்டவனும் அவ்விதமே.

'காடு' நாவல் வாசித்ததும் மனதில் நின்ற நிறம் பச்சை. இக்கதையில் காடு இருந்தும் பசுமை மனதில் இல்லை. இரண்டும் காடழிந்து நாடு உட்புகுந்த பின்னர் காட்டை அசைபோடும் நினைவுகளே. இரண்டும் வாசித்த பல நாட்களுக்கு காட்டை நம் கனவுள் புகுத்தி விடுகின்றன. எனில் அவ்வளவிலேயே அதன் ஒற்றுமைகள் நின்றுவிடுகின்றன. காடு நீலியெனில் வனவாசி மோகினி. குறிஞ்சிப்பூச்சூடி காமமென காதலென அலைக்கழிக்கும் யட்சி காடு காட்டும் 'காடு'. கனவில் கண்ட நிலவு மிதக்கும் ஆற்றங்கரை வனவாசி மோகினி 'வனவாசி'.

கானகம் தன்னளவில் ஒரு தனி உயிர். அதற்கெனப் புலன்களும் உணர்வுகளும் உண்டு. அதன் கருவில் உருவான மனிதன், அந்தத் தொப்புள்கொடியறுத்து நாகரிகம் எனும் ஆடை அணிந்து கொண்டாலும் அந்த வடு இன்னும் அவனில் இருக்கிறது. அவனது ஆழ்மனதுள் அச்சமென, இருளென, வேட்டையென, மீறல் என காடு இருந்துகொண்டே இருக்கிறது. அதுவே இந்த நாவல்களோடு நம்மைப் பிணைக்கிறது.

மிக்க அன்புடன்,
சுபா

Wednesday, August 29, 2018

ஆளரவமற்ற வீடு - பஷீர்

காலச்சுவடு வெளியிட்ட அனல்ஹக் தொகுதியில் வந்த 'ஆளரவமற்ற வீடு' நான் தெரிவு செய்திருக்கும் சிறுகதை. ஓவியனும் கவிஞனுமாக இரண்டே கதைமாந்தர்கள்.

பொதுவாக பஷீருடையது எளிமையும் மேலோட்டமான வாசகர்களுக்கு முகத்தில் சிரிப்பை உருவாக்குவதுமான நடை. ஒரு சிறு குழந்தையின் பார்வையில் விரியும் வியப்பு மேலிட்ட உலகு பஷீருடையது. பஷீரின் ஆரம்பகால படைப்புகளில் ஒன்றான (பிரேம லேகனம்) காதல் கடிதத்தில் எழுதியிருப்பார் - 'வேடிக்கை வாழ்க்கையின் நறுமணமாகிறது. பரவாயில்லையே. வேடிக்கையே வாழ்க்கையின் நறுமணம்'. வேடிக்கையும் வியப்புமான பஷீரின் இனிய உலகத்தில் உட்புகுந்த பின்னர் நுண்ணிய வாசகனுக்குத் திறந்து கொள்வதோ ஒரு எல்லையற்ற பெருவெளி. அவர் அலைந்து திரிந்து கண்டு கொண்ட அன்பின் பெருவெளி.

இக்கதை அந்தக் குழந்தையின் வியப்பின் விழிகள் இல்லாது தனித்துத் தெரிந்தது. எதனால் இப்படி ஒரு கதை அந்தத் தொகுதியில் என்பதே என்னை இதன்பால் ஈர்த்தது.

இக்கதையை இரண்டு தளங்களில் புரிந்து கொள்கிறேன். 

1. கலைகள் எதற்கு? ஓவியம் கவிதைகள் கதைகள் என அனைத்துக் கலை வடிவங்களின் நோக்கமும் தேவையும் என்ன என்று கேட்டால் அது ஒரு பயணம் என்றே தோன்றுகிறது. எங்கிருந்து செல்வது? எங்கு வரை செல்வது? அவரவரது முழுமைக்கான தேடலின் பயணம். அறியாமையிலிருந்து அறிதலுக்கு இட்டுச் செல்லும் பயணத்தின் திசை அறிந்தவற்றிலிருந்து தொடங்கி அறியாதன நோக்கி நகர்வதாகவே உள்ளது. அதுபோன்ற முயற்சியை கலைஞன் ஒருவன் மேற்கொண்டு அதுவரை மானுடன் அறியாத ஒன்றின் தரிசனத்தைக் காட்டும்போது சராசரிக் கவலைகளில் உழல்பவனுக்கு அச்சுறுத்துவதாகவே இருக்கிறது. எனில் சககலைஞர்கள் அவனைப் புரிந்து கொள்கிறார்களா? 

பண்டு மலைக்குகைகளில் பேச மொழியென ஒன்றில்லாத போது தன் கைத்தடங்களையும், வேட்டைக்குச் சென்றவனின் சித்திரங்களையும் செதுக்கி வைத்த ஆதி மானுடன் அளவுக்கே இந்தக் கேள்விகள் பழமையானவைதான். எனில் இக்கதையில் பஷீரின் தரிசனம் தெரிகிறது.


மனித சமூகத்தின் தொடக்கம் முதல் இறுதிவரை நீளும் ஒரு தொடரில், தனிமையும், வறுமையும், காளான் பூத்த, பூனை உறங்கும் அடுப்பும், நீர்த்த கஞ்சி வாழ்க்கையும் கொண்ட சங்க காலப் புலவன் முதல் இன்று வரை நீளும் புறக்கணிக்கப்பட்ட கலைஞர்களின் பெருவரிசையில் ஒரு சாதாரண நிகழ்வென அவனது இருப்பும், இறப்பும் நடந்து முடிகிறது. எனில் கலை எஞ்சுகிறது. இது முதல் தளம்.


2. கலைகள் என்பது நம் அறிவு மற்றும் தர்க்கம் மட்டும் சார்ந்ததல்ல. நமது மனம் நனவுள்ளம், கனவுள்ளம், நுண்ணுள்ளம் - ஜாக்ரத், ஸ்வப்னம், சுஷுப்தி எனும் அடுக்குகளால் ஆனது. இவற்றுள் ஜாக்ரத்ஐத் தாண்டி ஸ்வப்னம், சுஷுப்தி, துரிய நிலைகளின் வெளிப்பாடுதான் கலைகள். அங்கு உறையும் ஆழ்தள அறிதல்களை நிகழ்த்த கலைகளே உள்ளன நம்மிடம். 

ஓயாது கொந்தளிக்கும் சமூகத்தை, கலைஞனைச் சூழ்ந்திருக்கும் புறவுலகை ஜாக்ரத் என்னும் விழிப்புமனம் என்றும், வார்த்தைகளாக, படிமங்களாக, அணிகளாக உணர்வுகளை வெளிப்படுத்தும் அந்தக் கவிஞனை கனவுமனம் ஸ்வப்னம் என்றும், கோடுகளாக, தீற்றல்களாக, வண்ணங்களாக எண்ணங்களை அறிதல்களைத் தொகுத்துக் கொள்ளும் அந்த ஓவியனை நுண்ணுள்ளம் சுஷுப்தி என்றும் புரிந்து கொள்கிறேன். தினசரி வாழ்வின் விழிப்பு நிலையிலிருந்து மேலான விழிப்பு நிலையில் விழித்துக் கொள்வதே கலை எனலாம். சுஷுப்தியில் விதையென உறங்கும் ஆலமரம். இக்கதை மரத்தை அலைக்கழிக்கும் புறவெளியில் - வெயிலும், காற்றும், மழையும், கடுவெளியும், மண்ணும் எனத் தொடங்கி, வேர்வழி மண்ணிறங்கி வேர்களென எஞ்சியிருக்கும் விதையைக் கண்டடையும் பயணம். 

இது இரண்டாம் தளம்


1. விரிவு

முதல் நோக்கிற்கு இது சாதாரணமான சிறுகதை. பொதுவாக ஒரு நல்ல சிறுகதை அதன் கடைசி வரிக்குப் பிறகு வாசகன் மனதில் மீண்டும் தொடங்குவது. இக்கதையில் முதல் வரியே கடைசி வரியும். 

'எனக்கு உடம்புக்கு முடியவில்லை. நான் தூங்கிக் கொண்டிருக்கிறேன். தயவுசெய்து என்னை எழுப்பிவிடாதீர்கள்' என்ற விநோதமான வேண்டுகோள் மூடிக்கிடக்கும் ஜன்னலின் கதவுகளில் எழுதப்பட்டிருக்கும் ஒரு ஆளரவமில்லாத வீடொன்றின் முன் கதை தொடங்குகிறது. 


கதைக்குத் தலைப்பென இருக்கும் அந்த வீடு, அதன் முன் நிற்கையில், "வரலாற்றுக்கு முற்பட்ட ஒரு காலகட்டத்தில், பழமையான ஆள் நடமாட்டமில்லாத பகுதியிலுள்ள தேவாலயத்தின் அருகில் நிற்பது போல ஒரு உணர்வை ஏற்படுத்தும் வீடு". அந்த அம்மானுடத்தன்மை யாரும் அறியாது மரணித்து வெள்ளெலும்பென எஞ்சியதால் அந்த வீட்டை சூழ்ந்தததா? என்றைக்குமான அறிதல்களை உலகுக்கு சொல்பவர்கள் முன்னர் சமுதாயம் உணரும் அல்லது கட்டமைக்கும் அமானுடத்தன்மையா அது!?

அதிர்வு மிக்க இடங்களில் ஆள்நடமாட்டமில்லாத போது ஏற்படும் ஒரு அமானுடத்தன்மை காலம் கடந்து அங்கு காத்திருக்கும் உணர்வுகளின், அதிர்வுகளின் அலையென நம் மேல் படிவதை பல தொன்மையான கோவில்களில் நாம் உணர்ந்திருக்கலாம், அங்கு அமர்ந்திருக்கும் புறாக்களும் வௌவால்களும் கூட நாமறியாத ரகசியத்தோடு நம்மை உற்று நோக்கும் பார்வை கொண்டிருக்கும். 
கம்போடியாவின் காடுகளில் கைவிடப்பட்டு மீண்டும் இன்று சில நூற்றாண்டுகள் கழித்து மீட்டெடுக்கப்படும் பல கோவில்கள் உள்ளன. கோவில்களின் மீது பெருமரங்கள் வளர்ந்து கோவிலை இறுகக் கவ்வியிருக்கும். இன்னும் சிலகாலம் கண்டடையப் படாதிருந்தால் அப்பெரு விருட்சங்கள் தனது வேர்களெனும் உகிர்களால் கவ்வி விண்ணோக்கி ஏகியிருக்கக் கூடும். இத்தகைய மாபெரும் கலைப் படைப்புகள் எதற்காக யாரை நோக்கி எழுப்பப்படுகின்றன! காலத்தோடு இடையறாது கலைஞன் எதற்காகப் போரிடுகிறான்? தான் வாழும் காலத்தில் சமூகத்தால் புறக்கணிக்கப்படினும், கைவிடப்படினும் எதற்காகப் பறந்தெழ முயற்சிக்கிறான்? 

அந்த ஓவியனுக்கு உலகப் புகழ்பெற்றுத் தந்த பல்வேறு ஓவியங்களை அவன் முன்பே வரைந்து வைத்திருந்தான். எனில் ஏன் அவன் அப்போது உலகப் புகழ் பெறவில்லை? ஏன் அவர்கள் அனைவரும் குற்றமும் குறையும் சொன்னார்கள்? 

பல்லாயிரம் பேர்களில் ஒருவன் அந்தப் பல்லாயிரம் பேர் சென்றடையமுடியாத ஒரு புள்ளியைச் சென்று தொடுகிறான். அதுவரை மானுடம் அடையாத ஒன்றை அடைகிறான். அது ஒரு பெரும் அறைகூவல். சராசரிகளுக்குப் புரிவதில்லை. சக கலைஞர்களின் ஆணவத்தைச் சீண்டுகிறது. கலையினூடாக அந்தக் கலைஞன் சென்ற தொலைவை, அவனது ஊடாக அந்தக் கலை சென்ற தொலைவை 
அந்த யாத்ரீகனைத் தவிர, சமகாலத்தில் அறிபவர்கள் வெகுசிலரே. 
கரையோரத்தில் நின்று வேடிக்கை பார்ப்பவன் ஆற்றின் பயணத்தை அறிவது எங்கனம். ஆற்றின் பெருவெள்ளத்தைக் குடங்களில் அள்ளி ஆற்றின் மீதான விமர்சனங்களை வைக்கிறார்கள். ஆற்றின் கட்டின்மையில் குதித்து நீந்துபவர்களுக்கே அனுபவம் கிட்டுகிறது. எனினும் அது நதி என்பதாலேயே ஊற்றுமுகம் விட்டெழுந்து யாருமில்லாத மலையுச்சிகளிலும் நிலங்களிலும் ஆறு பயணித்துக் கொண்டேதான் இருக்கிறது.

அந்த ஓவியரது வாழ்நாட்களில் அவனைப் பலவிதமான விமர்சனங்கள் நிந்தனைகள் சூழ்கின்றன. ஓவியன் தனது வாசல்களை ஜன்னல்களை அடைத்துக் கொள்கிறான்,எனில் அவனது அறையிலிருந்து இசை கசிவதற்கும், வெளிச்சத்தின் பொன்னூலிழைகள் வெளித்தெரிவதற்குமான இடைவெளி அந்த அடைக்கப்பட்ட கதவுகளில் இருக்கிறது. அவனது சுயசரிதையை எழுதும் அந்தக் கவிஞனுக்கு மட்டும் எப்போதும் உள்நுழைய அனுமதி தருகிறான்.

முதலிலும் இறுதியிலும் ஒளிபாய்ச்சி காட்டப்படும் அந்த வேண்டுகோள் - யாரும் தவறவிடாதிருக்கும்படி நீலவண்ணப் பிண்ணனியில் சிவப்பெழுத்துக்களில் அந்த ஓவியன் எழுதியது. அந்த வேண்டுகோளில் முதல் வாசிப்பு மேலும் விரிந்து மற்றொரு கதவைத் திறந்து கொள்கிறது.

அந்த அறிவிப்பு மானுடத்தின் மேல் அவன் கொண்ட நம்பிக்கையை நோக்கி நீட்டிய கரம். எனக்கு உடம்புக்கு முடியவில்லை என்ற அறிவிப்பு எழுதப்பட்டிருந்தும் அணுகி வரும் கரங்களற்றதாகவே நமது சமூகம் வேடிக்கை பார்த்துக் கடந்து போகிறது. அடைக்குந்தாழ் அன்பிற்கு இல்லை, திறக்கும் அன்பு சூழ்ந்திருந்த சமூகத்துக்கு இல்லை. 

"வாசல்களும் ஜன்னல்களும் அடைத்திருந்தாலும்.. உள்ளே பாட்டுக் கேட்காமலிருந்தாலும்.. நான் உள்ளேதான் இருப்பேன். நீங்கள் ஒரு பேனாக் கத்தியால் அந்த ஜன்னல் கொக்கியை நீக்கிவிட்டு உள்ளே வரலாம்" என்கிறான். 
இரவு பகல் பாராது அவனது அதே வாழ்க்கையை வாழும் கவிஞனிடம் பேசிக் கொண்டிருக்கிறான். உள்ளே பாட்டுக் கேட்காமலிருந்தால், கத்தியால் ஜன்னல் கொக்கியை நீக்கிவிட்டு உள்ளே வரச்சொன்னவன் தனது இறுதியை உணர்ந்தே அந்த வரியைச் சொல்லியிருக்கக் கூடும். 

உள்ளே தொடர்ந்து இசைக்கும் பாடலும், ஒளிக்கோடுகளும் அவனது இருப்பை அறியும் வழியாகி இருக்கின்றன. உள்ளே இசை தவழும் வரை கலை நிகழ்கிறது. அந்த இசை நின்றுவிடில், அங்கு கலை ஒழியுமெனில் எச்சமென அங்கும் கழிவிரக்கங்களும் ஏமாற்றங்களும் மட்கி நாற்றமெடுக்கலாம். இசை நின்று போன பிறகும் அறையில் நிறைந்திருக்கும் எல்லையற்ற ஒளியென அவனது கலை எஞ்சுகிறது.


2. விரிவு

இந்தக் கதைக்கு ஏன் ஒரு ஓவியனும் கவிஞனும் தேவைப்படுகிறார்கள்? 

ஓவியம் உலகை அடக்கும்
உலகம் ஓவியத்தை அடக்கும்
ஓவியன் தன்னை அடக்கி
உலகை ஓவியத்துக்குள் அடக்குவான் - ஆத்மாநாம் கவிதைகளில் ஒன்று.


இன்மையில் கரைவதென்பது அசாதரண நிகழ்வல்ல. அதை ஒரு இடைவெளியாகக் கருத வேண்டியதுமில்லை. நான் இறந்துபோனால்... அந்த இடைவெளி நிரப்பப்படுமா...?இங்கே நான் என்று குறிப்பிடுவது என்னையல்ல.
மனித சமூகத்தின் தொடக்கம் முதல் நீங்கள் வரையிலான ஒரு நான் உண்டல்லவா? அந்த நான் என்றே புரிந்துகொள்ளுங்கள் - என்கிறார் பஷீர்

இந்த நீண்ட நிரையை மானுட மனம் என்று கொள்கிறேன். மனம் என்பதே அறுபடாத நீட்சியென ஓடும் எண்ணங்கள்தானே! 

நமது மேல்மனம் அறியாத போதும், தன்னுள்தான் நிறைந்து விதையென ஓர் எண்ணம் நுண்ணுள்ளத்தில் கருக்கொள்கிறது, யாரும் கண்டுகொள்ளாத போதும் அங்கே ஓவியனால் வரையப்பட்டு காத்திருக்கும் ஓவியங்கள் போல. நமது கனவுள்ளம் ஸ்வப்னம் ஒரு ரகசியப்பாதையைத் திறந்து சுஷுப்தியைத் தொடவல்லது.; திறப்பதற்கான அனுமதியும் வழிகளும் பேனாக்கத்தியும் கொண்ட கவிஞனைப் போல. நனவுள்ளமான ஜாக்ரத் இடையறாத சலனத்தாலானது, சூழ்ந்திருக்கும் சமூகம் போல. அதன் பேரிரைச்சலினிடையே என்றேனும் கனவுள்ளம் வெளிப்படுத்தும் உணர்வுகளை ஜாக்ரத் பெற்றுக்கொள்ளலாம்.

இன்னொரு விதத்தில் மூன்றடுக்குகளும் ஒரு கலைஞனில் நிகழ்பவையே. 
நாம் அறியும் மனமாகிய ஜாக்ரத்தைக் கடந்து ஒரு ரகசியப் பாதை போன்ற ஸ்வப்னத்தைத் திறந்து சுஷுப்தியில் உறைந்திருக்கும் விதையைக் காண்பதே கலை முகிழ்க்கும் தருணம். துரியம்தான் அசைவிலாத உள்ளுணர்வு. அது சுஷுப்தி வழியாக, ஸ்வப்னம் வழியாக வெளிப்படுகிறது. ஜாக்ரத்தால் அதைப் புரிந்து கொள்ள முயல்கிறோம்.

இந்த இரண்டு விதமான வாசிப்புகளிலிருந்தும் நான் புரிந்து கொள்வது:

நான் நீ என்ற இரட்டை நிலையிலிருந்து நீ மட்டும் எஞ்சுவதே மரணம் என்பது பஷீரது தரிசனம். தன்மேல் எச்சமிட்ட பறவைகளை, நாற்சந்தியில் நிறுத்திய சமூகத்தை எல்லையின்றித் தன் புன்னகையால் அரவணைத்துக் கொள்கிறார். எல்லாக் கலைஞர்களும் அதைத்தானே செய்ய இயலும், எவ்வளவு உன்னதமாயினும் மண்ணிலேயே கலை உருவாகிறது. கலைஞன் கலை என்ற இரட்டை நிலையிலிருந்து கலலஞன் மறைந்த பின்னர் கலை மட்டும் எஞ்சுவதே இக்கதையில் பக்ஷீர் காட்டும் மரணம்.

Wednesday, May 23, 2018

நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகும்

நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகும்என்று
அன்னை கூறினள் புன்னையது சிறப்பே

செல்வநிலையத்து வேம்புக்கும் அது பொருந்தும்.மதுரையில் செல்வநிலையம் வீட்டு வாசலில் நின்ற 42 வயதான இரு வேப்பமரங்களில் ஒன்று இன்று விழுந்துவிட்டது. வீடுகட்டப்பட்ட போது தாத்தாவால் வீட்டின் இருபுறமும் நட்டுவைக்கப்பட்டவை. வீட்டின் அடையாளமே வாசலில் இருபுறமும் நிற்கும் வேம்புதான்.

அவை மரமல்ல. நினைவுகள், ஆழ்மனப் படிமங்கள், உணர்வுகள், இன்றளவும் எனது கனவுகளின் நிலத்தின் பிரிக்க முடியாத துணை. தாத்தாவோடு சேர்ந்தேதான் இம்மரம் நினைவில் இருக்கிறது. இரு புறமும் இரண்டு நெட்டிலிங்க மரங்களும் பல வருடங்கள் இருந்தன. அது வெட்டப்பட்ட போதும் ஒரு வெறுமை எழுந்தது. எனில் இது வேறு உணர்வு.

பொதுவாக சில மாதங்களுக்கு ஒரு முறை, விரிந்து கரம் விரித்த மரத்தின் கிளைகளை மின்சாரவாரியம் வெட்டிவிட்டுச் சென்றதும் முடி வெட்டிய குழந்தை போல சில நாட்கள் இருக்கும். அதையே அதிகமாக வெட்டிவிட்டால் ஏதோ ஒரு வெறுமை மனதில் தோன்றும். அதில் வாழும் அணில், வெட்டப்பட்ட கிளையில் பத்து முறை ஏறி இறங்கி நம்மிடம் ஏமாற்றத்தைத் தெரிவிக்கும்.

வீடற்ற எதிர்மனை வாசலில் குழாயடி வந்த பிறகு, வருத்தப்பட்டு பாரஞ்சுமப்பவர்கள் பலருக்கும் வேப்பமரத்தடி இறையைப் போல இளைப்பாறுதல் தந்தது. நெடு வழி மேய்ச்சல் செல்லும் கறவைப் பசுக்கள், பழம் விற்பவர்கள், துணி தேய்க்கும் வண்ணான், தெருவில் விளையாடும் சிறுவர்கள், அனைவருக்கும் அது ஒரு ஆசுவாசம்.

பொம்மைகளை இறைத்து விளையாடும் குழந்தை உறங்கியதும் தாய் வீட்டை ஒழுங்குபடுத்த முனைய, விழித்தெழுந்ததும் வீடு முழுதும் களம் பரப்பும் சிறு குழந்தை போலத்தான் இம்மரங்கள்.
முதற்கதிர் எழுவதன் முன்னம் தாத்தா எதிர் மனை வாசல் வரை வேப்பமரம் உதிர்த்தவற்றை பெருக்கி அள்ள, அரைமணி நேரத்தில் வாசல் நிறைத்து இலையாய், பூவாய், பழமாய் கொட்டிச் சிரிக்கும்.

தவழ்ந்ததும், நடந்ததும், படித்ததும், பேசியதும், கனவுகள் கண்டதும், கண்ணீர் விட்டதும், வீட்டுக்கு வந்தவரை தெருமுனை திரும்பும் வரை வழியனுப்ப நின்றதும், வருபவரை எதிர்பார்த்து கால்கடுக்க காத்திருந்ததும், தொலைதூர அன்பை சுமந்து வரும் கடிதங்கள் வந்து சேர்வதும் அனைத்தும் அதன் அடியில்தான். கோலத்தின் முதற் கீற்றை இழுத்துவிட்டு அண்ணாந்து பார்க்கும் போது தெரியும் வேம்பின் கிளைவழி இறங்கும் ஒளிக்கீற்று வழியாகவோ, அது உதிர்க்கும் முதல் இலையை கை அகற்றும்போதோ, நான் வைத்த புள்ளிக்கு நிகர் புள்ளியென ஒற்றை வேப்பம் பூவை அது உதிர்க்கும்போதோ கோலம் கைவழி உயிர் பெறும்.

நட்பென வந்த உறவுகளோடு விடை பெற மனமில்லாது, கிளம்பியபின்னர் பல மணித்துளிகள் அதனடியில் நின்று பேசிவிட்டு, உள்ளிருந்து பெரியவர்களின் குரல் கேட்டதும், மனமின்றி வாசற்கதவை மூடும் போது தாழ் விழும் இடத்தில் நான்கு வேப்பம்பூக்கள் அமர்ந்திருக்கும், அதன் மேல் தாழிட மனமிலாது அதை உதிர்த்துவிட்டு உள்ளே செல்ல அந்த நினைவுகளோடு வேம்புமனமும் கலந்தே உள் நிறையும்.

விசும்பின் கீழுள்ள அனைத்தையும் தாத்தாவோடு திண்ணையில் அமர்ந்து பேசியதனைத்தையும் கேட்டது அந்த மரங்கள்தான். வானொலியை சன்னமாக இசைக்கவிட்டு அப்பாவோடு அமர்ந்திருந்ததும் அங்குதான். அனைத்து சகோதர சகோதரியரும் அங்கமர்ந்து பேச உள் திண்ணையில் அமர்ந்து அதைக் கேட்டுக் கொண்டிருந்துவிட்டு, கிளிகள் கிள்ளைமொழி பேசிக் கூச்சலிடுவது போல இருக்கிறது என அப்பா ரசிப்பதையும் அந்த வேம்புதிர் வாசல் கண்டிருக்கிறது. யாருமற்ற தனிமையின் பெருமூச்சுக்களும் அங்கு அந்தக் காற்றில் கலந்தே இருந்தது.

உணர்ச்சிவசப்பட்ட எழுத்து போலத் தோன்றலாம், அங்கு வாழும் அணில்களுக்கும் குருவிகளுக்கும் இது நிச்சயம் புரியும்.

மிகச் சாதாரண ஒரு மழைக்காற்றில் தூரோடு இன்று சாய்ந்திருக்கிறது. பலத்த காற்று இப்போதுதான் வீசத் தொடங்கியிருக்கிறது மனதுள், நினைவுகளின் சுழற்காற்று.

Tuesday, May 15, 2018

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா?

கல்கியில் தொடங்கி, சுஜாதாவில் கால்வைத்து பலதரப்பட்ட எழுத்துகளை மேய்ந்து கொண்டிருந்த பதின்பருவத்து வாசிப்புகளில் பாலகுமாரன் எழுத்துக்களில் கண்டது புது மின்னல். அவரது படைப்புகளில் நான் வாசித்த முதல் கதை அகல்யா. பள்ளிக்கு பாரதி வேடமிட்டு வரும் பல குழந்தைகளைக் கண்டு உணர்ச்சி மேலிடும் சிவசுவையும், அம்மாவையும், அகல்யாவையும் வாசித்து இவர் எழுத்தைத் தொடர ஆரம்பித்த நாட்கள். வரிசையாக நூலகத்தில் இரும்பு குதிரைகள், மெர்குரிப் பூக்கள், பச்சை வயல் மனது, அப்பம் வடை தயிர்சாதம், என் கண்மணித் தாமரை, என்னுயிர்த் தோழி, உள்ளம் கவர் கள்வன், என் மனது தாமரைப்பூ, என்றென்றும் அன்புடன், திருப்பூந்துருத்தி, முதிர்கன்னி, பந்தயப்புறா, அப்பா, ஆனந்த வயல், முன்கதைச் சுருக்கம் என்று மூச்சிரைக்க வாசித்த பொழுதுகள். பொன்னியின் செல்வன் வாசித்தவர்களுக்கு உடையாரும் கடிகையும் காட்டுவது வேறொரு அருள்மொழியை.

அவரது கதையின் மனிதர்கள் குறிப்பாகப் பெண்கள் ரத்தமும் சதையுமாக நாம் வாழ்வில் காணக்கூடியவர்களாகவும், எனில் அவர்கள் எடுக்கும் முடிவுகளும் தீர்மானங்களும், நாம் அந்தரங்கக் கனவுகளில் மட்டுமே காணக் கூடியதாகவும் இருக்கும்.அவரது ஆரம்பகாலக் கதைகளில் ஆண்-பெண் உறவுகளின் தத்தளிப்புகளே பெரும்பான்மையானவை. அவற்றின் கொந்தளிப்பில் திகைத்து நிற்பவர்களுக்கு அவரது எழுத்து பெரும் வழித்துணை அல்லது தன் அகம் காட்டும் கண்ணாடி. இந்த மைய முடிச்சை மிக நன்கு கையாளத் தெரிந்தவர் பாலகுமாரன்.

பூமியில் வேரூன்றி விண்ணில் கிளைபரப்பும் விருட்சங்களாக அவர் கதைகள் இருந்தன. வணிக எழுத்து இலக்கிய எழுத்து எனும் எல்லைகளைத் தாண்டி, அவரது எழுத்தெனும் உச்சாணிக் கிளையிலமர்ந்து வானைக் காணும் கனவைக் கிளர்த்தியவை அவரது எழுத்துகள்.

நம்மில் பெரும்பாலானவர்களுக்கு இளையராஜாவின் பல பாடல்கள், குறிப்பிட்ட தருணத்தையோ, மனிதர்களையோ நினைவுபடுத்தும். அதுபோலத்தான் பாலாவின் எழுத்துக்களையும் நினைக்கத் தோன்றுகிறது. அவரது பெரும்பாலான கதைகளையும் நாவல்களையும் வாசித்து அவரது நடையும் கதைப்போக்கும் பழகிப் போய் பிற எழுத்துகளுக்குக் கடந்து போன பிறகும் அவரது பல வரிகள் மனதில் நிரந்தரமாக இருக்கின்றன, பல இனிய நட்புகளையும் சிநேகங்களையும் நினைவுபடுத்திக் கொண்டு. நாம் அவரது கதைகளை வாசிக்கும் போது ஒப்பிட்டு நாம் மனதில் நினைத்த சில மனிதர்களோடும் நினைவுகளோடும் சேர்ந்தே நினைவில் நிற்கிறார் பாலகுமாரன்.

பந்தயப்புறா என்று நினைக்கிறேன், "மாறுதல் நேரத்து மயக்கம் இது. உனக்கு மயக்கமில்லை. உன் எண்ணம் தொலைதூரம். உன் வழி நெடும் பயணம், பற, பற, மேலே... மேலே.." அக்கதையை வாசித்த இறுக்கமான பொழுதிலிருந்து இன்று வரை இந்த வார்த்தைகள் என்னுடன் இருக்கின்றன. இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா..

இன்று அவரது மறைவுச் செய்தி கேட்டு அவரது எழுத்துகளை மனதுள் மீட்டிக் கொண்டிருக்கும் பல்லாயிரம் வாசகர்களுடன் சேர்ந்து வணக்கங்களுடனும் பிரார்த்தனைகளுடனும் - சுபா

Sunday, May 13, 2018

மின்னல் மலர்த்திடும் தாழை


'மின்னல் மலர்த்திடும் தாழை' என்னும் தலைப்பில் சிங்கப்பூர் சிராங்கூன் டைம்ஸ் மாத இதழில் இம்மாதம் (பிப்ரவரி 2018) வெளிவந்த லா.ச.ரா படைப்புகள் குறித்த எனது வாசிப்பனுபவக் கட்டுரை.


எல்லோருக்குமென சுழலும் உலகில் அவரவருக்கான உலகங்கள் தனித்த அச்சில் சுழல்கின்றன. காட்சிகள் ஒன்றே எனினும் தரிசனங்கள் வேறு - லா.ச.ரா வார்த்தைகளில் சொல்வதெனில் அவரவர் பூத்ததற்கு தக்கபடி. புரியாத நடைக்குச் சொந்தக்காரர் என்று பரவலாகப் பெயர் பெற்ற லா.ச.ராமாமிருதம் எனும் லா.ச.ராவின் எழுத்துக்கள் அந்த வகைமைதான். அவரவர் பூத்ததற்கு தக்கபடி மணம் கொள்பவை.

இது அவரது நடை மற்றும் எழுத்து குறித்த ஆய்வுக் கட்டுரையோ விமர்சனமோ அல்ல. அவ்வெழுத்து என்னுள் நிகழ்த்திய அலைத் தளும்பல்களை, அதிர்வுகளைப் பதிவு செய்யும் முயற்சியே.

கல்லூரி நூலகத்தில் ஒரு புத்தகக்தின் அட்டையில் நரைத்த புருவங்களோடு இருந்த இந்தத் தாத்தா ஒரு மந்திரவாதி என்பது அறியாமல் இவரது 'அபிதா'வுடன் அறிமுகமானேன். என் அப்பா அந்தப் புத்தகத்தைப் பார்த்து விட்டு லா.ச.ரா, தான் பணிபுரிந்த பஞ்சாப் நேஷனல் வங்கியில்தான் பணிபுரிந்தார் என்று கூறிவிட்டு மேலதிகமாக 'லா.ச.ரா பார்ப்பதற்கு மகாபாரதத்தில் வரும் பகதத்தன் போலிருப்பார். பகதத்தன் எனும் மன்னனுக்கு வயோதிகம் காரணமாக புருவங்கள் நரைத்து இமை இரப்பைகள் தொங்கி விழிகளை மூடியிருக்கும், எனவே விழித்து நோக்கவென பட்டுத்துணியால் இமைகளை நெற்றியோடு சேர்த்துக் கட்டியிருப்பான். கௌரவ சேனையில் போரிட்ட அவனை வெல்ல அவன் பட்டுத்துணியில் சரம் தொடுக்குமாறு அர்ச்சுனனிடம் கூறினார் கிருஷ்ணர்' என்று ஒரு சிறு காலாட்சேபம் செய்தார்.

வங்கி அலுவலர், பகதத்தன், தாத்தா என ஒரு கலவையான மன உருவகங்களோடு லா.ச.ராவை வாசிக்கத் தொடங்கினேன். கொதிக்கும் வெந்நீர்ப் பானையை சூடறியாது வெறுங்கையில் தூக்கிவிட்டது போல இருந்தது என்று கூறலாம். இன்றளவும் சூடும் குன்றவில்லை, இறக்கிவைக்கவும் மனமில்லை.

அபிதா - தான் சிறுவயதில் காதலித்த பெண்ணின் நினைவுகளோடு தான் வளர்ந்த கிராமத்துக்கு தன் மனைவியோடு வரும் நடுவயது கடந்த நாயகன், தன் காதலியின் பெண்ணைக் காண நேரும்போது, அவன் விட்டுச் சென்ற காலம் அப்போதே உறைந்து இக்கணத்தில் இருந்து தொடர்கிறதெனக் கொண்டு தன் மனதை அவளிடம் இழக்கிறான். அதில் நினைவுகளைக் குறித்து வரும் பத்தி:

'ஆயினும் ஒரு எண்ணம் - ஒரே எண்ணம் - நீர்த்துப் போன சாம்பலுள் இத்தனை நாள் புதைந்து ஒளிந்திருந்த ஒரு பொறி, நினைவின் காற்றுவாக்கில் பற்றிக்கொண்டு மறதியின் சருகுகளை எரித்து ஜ்வாலையாக்கி என்னைத் தன்முன் உந்தித் தள்ளிச் செல்கிறது. நானும் பற்றி எரிகிறேன். ஒன்று கண்டேன். எதுவுமே மறப்பதில்லை. எல்லாமே ஒளிமறைவில் பாயச் சமயம் பார்த்திருப்பவையே'.

இந்த வரிகள் உடனேயே மனதுள் தன்னைச் செதுக்கிக் கொண்டது. எதுவுமே எனக்கும் மறப்பதில்லை; மிக நுண்ணியதாக சில தருணங்களில் மனதுள் ஓடிய வரிகள், மனம் நுகர்ந்த வாசனைகள், ஒலிகள், சிறு வயதில் என் வீட்டில் தலைக்கு மேல் ஓங்கிய ஜன்னல் வழியே, சூரியன் மலைக்குப் பின்னால் மறைவதைப் பார்க்க நின்றிருந்த போது ஒரு காகிதப்பூ பூங்கொத்து அதை மறைக்க முயன்று, அதன் மெல்லிய இதழ்கள் ஒளி பெற்று ஒளிர்ந்து ,மெல்ல மெல்ல சூரியனோடு அவிந்தது - இதுபோல ஆயிரமாயிரம் நினைவுத் துணுக்குகள்; எனக்கு இரண்டு வயதுவாக்கில் இருந்த  வாடகை வீட்டின் முழு வடிவமும் ஒளியும் நிழலும், அங்கு நிகழ்ந்தவற்றின் நினைவுத் துணுக்குகளும், அங்கு முதன்முறையாகக் கேட்ட பாடலும் நினைவிருக்கிறது. அனைத்தும் நினைவில் இருப்பது ஒருவிதமான போதையாகவும் ஒருவிதமான துயரமாகவும் இருக்கிறது ஒரே நேரத்தில்.  
நினைவுகளில் இருந்து விடுதலை உண்டா என்ன? எனவே ஒவ்வொரு முறை முற்றிலும் கடந்து விட்ட ஒன்றை ஏதோ ஒரு நோக்கோ, இசையோ, மணமோ தொட்டு மேலெழுப்புகையில் இந்த வரிகளும் உடன் மேலெழும் - 'எதுவுமே மறப்பதில்லை. எல்லாமே ஒளிமறைவில் பாயச் சமயம் பார்த்திருப்பவையே'

புரிந்தும் புரிந்துவிட்ட பாவனையிலுமாக மகுடி முன் மயங்கி அதைத் தொடர்ந்து சென்றடைந்த மற்றொரு சிறுகதைத் தொகுதி லா.ச.ராவுடையது, 'பச்சைக்கனவு' என நினைக்கிறேன்.

அந்தத் தொகுதியில் ஒரு சிறுகதை தரிசனம். 'எனக்கு வயது பன்னிரண்டிலேயே கன்யாகுமரி மேல் காணாமலே காதல் கொண்டு விட்டேன். நான் குமரன். அவள் குமரி' எனத் தொடங்கும் கதை, கதையென்றே சொல்ல இயலாத நடை. குமரனாய்க் காதலித்த கன்யாகுமரியைக் காண மனைவி சகிதம் தலை நரைத்த காலத்தில் செல்கிறான். (அபிதாவும் இதுதானே! - மானுட வாழ்வே இதுதானே. அவளில் தொடங்கி அவளைத் தேடி அலைந்து அவள் மடியில் மடிவதுதானே. 'அவள்' மீண்டும் மீண்டும் வருகிறாள் லா.ச.ராவின் தேடலில்.). காத்திருந்த வயதுகளின் கணக்குளின்றி குமரியைக் காண நெருங்குகையில் படபடப்பு. கன்யாகுமரியின் அழகை இப்படி எழுதுகிறார்: 'சிற்பியின் செதுக்கல் முடிந்து முழுமை கண்டதும் அவனையே காலால் உதைத்துத் தள்ளிக் கொக்கரிக்கும் சௌந்தர்யம்'. கலை கலைஞனை மீறி பேருருக் கொண்டெழும் தருணம். உமையைப் பிரிந்த சிவம் வடக்கே உறைபனியில் தவமிருக்க, தென்கோடியில் இவள் அவனுக்கென தவமிருக்க, காத்திருத்தலின் வியர்த்தம் குறித்த ஏன் என்ற கேள்வியோடு கதை முடிகிறது. 'வீம்புத் தவம், வீண் தவத்தில் ஒருவருக்கொருவர் ஏன் அரண் கட்டிக் கொண்டே இருக்கிறீர்கள்? ஏன்? அர்ச்சகர் அலங்காரம் செய்யத் திரையை இழுத்து விட்டார். ஏனாகவே அவள் அதன் பின் மறைந்து போனாள்.' என்னுள் இருந்த கன்யாகுமரிக்கு அக்கதை மிகவும் பிடித்துப்போனது. கண்ணறியாது மலர்ந்த தாழை மணம் மனதைப் பித்தாக்குவது போல அறியாத மன இடுக்குகளில் வேர் பிடிக்கும் இவர் எழுத்து.

சமீபத்தில் இணையத்தில் மதுரையின் வாடிக்கைக் காட்சிகளை அரிதான புகைப்பட தருணங்களாகப் படம்பிடித்து கட்புலன்களில் நாம் காணத் தவறியவற்றை அடிக்கோடிட்ட ஒரு வெளிநாட்டுப் பயணியின் புகைப்படத் தொகுப்பைக் கண்டேன். அன்றாடத் தூசு படியாத வெளிப்பார்வையில் ஸ்படிகம் போல மின்னுகிறார்கள் மனிதர்கள்.
அதுபோல நாம் அனுதினமும் காணும் மனிதர்கள்தான் இவரது கதைகளிலும் வருகிறாரகள். எனில் அவர்களது சலிப்புமிக்க அன்றாட வாழ்வைத் தவிர்த்து, உச்ச தருணங்களேயே படம் பிடிக்கிறார் லா.ச.ரா. தீவிர ஸ்வரங்கள் மீட்டி எழுப்பும் உணர்வெழுச்சியே இவரது எழுத்தின் ஆதார ஸ்ருதி எனலாம்.


ஒவ்வொரு வார்த்தைக்கும் தவம் செய்கிறேன் என்று சொல்லும் இவரது நடை, கட்டற்று சிதறிப் பரவும் சொற்பிரவாகம் என்று உருக் கொள்கிறது. அது நம்முள் உறைந்திருக்கும் அனுபவங்களெனும் பாறைகளில் மோதி கரை ஒதுக்கும் சிற்சில அலைகளில் நம்மைக் கண்டுகொள்ள முடிந்ததெனில், நம் உணர்ச்சிகளுக்கு எழுத்துருவம் கொடுத்தவரென லா.ச.ரா நமக்கு அணுக்கமாகிறார். அப்படிக் கரையேறியது கசடெனினும் அமுதெனினும் அது நதியின் பிழையன்று.

இவரது மொழி எண்ணத்தின் மொழி, சிந்திக்கும் வேகத்தில் தெறித்து விழுபவை எனத் தோன்றுபவை. எனில் நாள்கணக்கில் வருடக்கணக்கில் காத்திருந்து அணிகோர்க்கப்படவை என்பது ஒரு முரண்.

தன் வம்சம் விளங்காது போக தன் மகனுக்கே சாபமிட்ட ஓர் அன்னையின் முதல் சொல்லிலிருந்து "அடே" எனத் தொடங்குகிறார் 'புத்ர' எனும் நாவலை. அந்தச் சொல் அருவமாய் ஒரு பாத்திரமாய் பிரசவிக்கும் தருணத்தை இப்படி எழுதிச் செல்கிறார்:

"...ஆத்திரத்தில் பூமிமேல் கையறைந்து எழுந்த ஆவியின் தும்பில், எரிந்த வயிறின் முத்துக் கொதியில், நாபிவேரினின்று கிளைகளோடு பிடுங்கிக்கொண்ட வேகத்தின் சுழலில், அனல் மூச்சின் கொந்தளிப்பில், ரத்தக் கொதிப்பில், உடல் கக்கிய வேர்வையில்,

சப்தத்தின் சத்தியத்தில்,

நா நறுக்கிய வடிவில்,

ஸர்வத்தின் நிரூபத்தினின்று,

வாக்குத் தடுத்த வரம்புள், சொல் விதித்த விதியில், அதுவே என் உயிர்ப்பாய்,

அதன் கதியே என் ப்ரக்ஞையாய்,

நான்

பிதுங்கினேன்."

இதில் 'நான்' அச்சொல். பிறந்துவிட்ட சொல்லின் பிறப்பு அனுபவம் அது. 'உயிரோடு உயிர் கூடி உயிர் பிறப்பதுபோல்.. வார்த்தைகளுக்கே உயிர் உண்டோண்ணோ'(கணுக்கள்)

சபித்த பொழுதில் தவவல்லமை அனைத்தையும் இழக்கும் முனிவர்கள் குறித்துக் கதைகளில் கேட்டிருக்கிறோம். அந்த சாபச் சொல் பிறக்கும் தருணத்தில் அதன் ஊற்று முகத்தில் நாடி நரம்பெங்கும் ஊடுருவும் நடுக்கம் உட்பட சபிக்கப்பட்டவரினும் சபித்தவரே எரிந்து போகும் கனலை எழுத்தில் கொண்டு வருகிறார்.

அச்சொல் தன்னைக் குறித்து இப்படிச் சொல்கிறது:
"நான் விருப்பு வெறுப்பற்ற வாக்கு
என் ஜனிப்பே என் பொருள்
சொல் செயலாவதன்றி ஏன்? எதற்கு? என்று? எனும் கலகங்கள் எனக்கில்லை". சொல் பிரம்மமாகும் தருணம்.

உருவமின்றி, சொற்களென உருத்திரளாமல் வாசகனுள் கடந்து சென்று விட்ட உணர்வுகளை எழுத்தில் கடத்திவிட அவரால் முடிகிறது. கதையுள் பாத்திரங்களுக்குத் தோன்றும் எண்ணங்களை அவை தோன்றிய கணமே அதன் நிர்வாணத்தோடு வாசகனுள் மடைமாற்றுகிறார். அதற்கு அவர் கையாளும் உவமைகளும் படிமங்களும் அடர்த்தியானவை:
'மௌனம் தன் சிறகுகளை விரித்து, உங்கள் மேல் இறங்கியிருக்கிறது' (குரு-ஷேத்ரம்)
'வீணையின் ஸ்வரக் கட்டுகளை விருதாவாய் நெருடிக் கொண்டிருக்கையில், திடீரென்று ஒரு வேளையின் பொருத்தத்தால் ஸ்வரஜதிகள் புதுவிதமாய்க் கூடி ஒரு அபூர்வ ராகம் அளிப்பது போல, அவள் என் வாழ்ககையில் முன்னும் பின்னுமிலாது முளைத்தாள்' (அபூர்வ ராகம்)
இன்னும் பல.

சலனம் குறித்தும் இரைச்சல் குறித்தும் ஏகப்பட்ட வார்த்தைகளை இரைத்து எழுதிவிடலாம். தனிமை குறித்தும் மௌனம் குறித்தும் வாசகனிடத்து அவற்றைக் கடத்துமாறு எழுதுவது அரிது.
த்வனியில் தனிமை குறித்து இப்படி எழுதுகிறார்:

"தனியாயிருந்தால் மட்டும் தனிமை கிட்டி விடுமோ? அதுவே முதலில் இருக்கிறதோ?

ஏனெனில் நான் எங்கு போனாலும், யாரை விட்டுத் தப்பி வந்தாலும், எப்பவும் என்னோடு இருக்கிறேனே!

துறந்து விட்டதால் மட்டும் தனிமை வருமோ? ஒன்றைத் துறந்தால் மற்றொன்று அதனினும் பெரிது இட்டு நிரப்ப வந்து விடுகின்றது.

சகலமும் துறந்தவனுக்கு உலகமே உடைமை. ஆகையால் சின்ன உடைமை, பெரிய உடைமை எனும் தாரதம்மியங்கள் தவிர உண்மையான தனிமையுமில்லை.

உண்மையான துறவுமில்லை"


இவரது எழுத்துக்கள் முதற் பார்வைக்கு பாற்கடலில் அவரே சொல்வது போல, குடும்பம் என்னும் பாற்கடலைக் கடைந்து உள்ளுறையும் அமுதையும் உடன்பிறந்த நஞ்சையும் வெளிக்கொணர்பவை; எனில் அதன் வழியாக பிரபஞ்ச தரிசனம் வரை மேலெழுபவை. குடும்ப வலைகளுக்குள்ளேயே புழங்கி அம்மாக்களும் அத்தைகளும் மாமிகளுமான கதைமாந்தர்களில் நூற்றாண்டு பழைய வாழ்க்கை முறைகளையும் மரபுகளையும் விவரித்த இவரது எழுத்தில் இன்றும் பசுமை இருக்கிறது. மின்னல்கள் தெரிக்கின்றன. இவரது எழுத்தில் வெளிப்படும் பெண்கள் பேராளுமைகள். அனைவரும் அம்மாக்களே. அவரே சொல்வது போல அவரது அம்மா அவர் எழுதித் தீராத நதி. தாய்மையின் எழுதித் தேய்ந்த முகங்களை மட்டுமன்றி தடுமாற்றங்களையும், குரூரங்களையும் எழுதியிருக்கிறார்.


கொல்வேல் கொற்றவையும் அருளும் அன்னையுமென நிற்கும், லா.ச.ரா மீள மீள எழுதும் "அவள்" அவரது குலதெய்வமான பெருந்திருவின் உருவகம். இலக்கியம் வாயிலான அவரது தேடல் பெண்மையின் அழகை, பன்முகங்களை, உள்ளொளியை அவர் எழுதும் படிமங்களாக, உவமைகளாக மாற்றி நிறைக்கிறது.

இவரது எழுத்தை அணுக முடியவில்லை எனக் குறை கூறுபவர்கள் இருக்கலாம், ஒரே கதையைத் தான் மீண்டும் மீண்டும் எழுதுகிறார் என்ற குற்றச்சாட்டும் இவர் மேல் உண்டு. அனைத்தையும் ஒரு புன்னகையோடு கடந்து நிற்கிறார் லா.ச.ரா. அவரது வாக்குமூலம்:
"நீங்கள் ஏற்றுக்கொண்டால் உண்டு. இல்லையேல் அப்பவும் சந்தேகம் உங்களுடையது. உண்மை என்னுடையது அவ்வளவுதான்" - இந்த அறுதியான கூர்மையோடு அவரது சொற்கள் காலத்தைத் தாண்டி நிற்கின்றன.

Tuesday, February 20, 2018

துலாமுனை நடுக்கங்கள்

எனது தந்தை 40+ வருடங்கள் பஞ்சாப் நேஷனல் வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இன்று நாட்டை உலுக்கியிருக்கும் ஒரு மிகப்பெரிய மோசடியின் தருவாயில் இந்தப் பதிவை தலை நிமிர்ந்தே எழுதுகிறேன்.




அப்பாவின் வேலை பற்றிய சிறு குறிப்பு. வேலையில் இருந்த வரை இரவு பகல் பாராது உழைத்தவர். கணக்கில் புலி, வேலையில் சிம்மம். மதுரை மற்றும் பல கிளைகளில் தூண் எனப் பெயர் பெற்றவர். இது தேய்வழக்கல்ல, அதிகாலை மூன்று மணிக்கு எழுந்து காலை ஏழு மணி வரை கணக்கு வழக்குகள் பார்ப்பதும், விடுமுறை நாளன்று வேறு இடையூறுகள் இருக்காதென்று அலுவலகம் சென்று வேலை பார்ப்பதும் பலநாள் வாடிக்கை. இந்த வழிமுறைகள் இன்று காலாவதியாகி பணிபுரியும் நிறுவனத்துக்கு விசுவாசமாய் இருப்பது என்பதே கேலிக்குறியதாகிவிட்டது வேறு விஷயம். இத்தைகைய மாபெரும் இயந்திரங்களை நகர்த்தும் முகமறியா பல்சக்கரங்களில் ஒருவராக இருந்து மறைந்தவர்.

இன்று பஞ்சாப் நேஷனல் வங்கியின் ஊழல் செய்திகளையும் கேலிச் சித்திரங்களையும் பார்க்க நேர்ந்திருந்தால் எவ்வளவு வலியும் வேதனையும் அடைந்திருப்பார் என்று முதலில் தோன்றியது.
முதற்பார்வைக்கு அவ்வண்ணமே தோன்றுகிறதென்றாலும் உண்மையில் அப்பாவின் நிலைப்பாடு இதில் என்னவாக இருந்திருக்கும்! கடந்த இரண்டு மூன்று தினங்களாக இந்த மோசடி, வெளிச்சத்துக்குக் கொண்டு வந்திருக்கும் பல சட்டக இடைவெளிகளையும் ஓட்டைகளையும் ஊடகங்களில் வாசித்துக் கொண்டிருந்த அதே பொழுதுகளில் ஆழுள்ளம் இதை யோசித்துக் கொண்டிருந்தது.

அப்பா குறிப்பிடும் சில சம்பவங்கள் நினைவுக்கு வந்தன.

அப்பா வேலை பார்த்த வங்கிக் கிளை, ஒரு வணிக முதலீட்டாளருக்குக் கொடுத்திருந்த காலக்கெடு முடிவடைந்த பின்னரும் அவர் கடனைத் திருப்பி அடைக்காததால் வழக்கு நீதிமன்றத்துக்குப் போனது. அந்த வழக்கில் அப்பா வங்கியின் ஒரு சாட்சியாக செல்ல வேண்டியிருந்தது. குறிப்பிட்ட ஒரு தேதியில் வங்கி மேற்படி நினைவூட்டல் அறிவிப்புக் கடிதம் அனுப்பி விட்டதென சொல்லவேண்டும். ஆனால் உண்மையில் வங்கி அந்தத் தேதியில் அறிவிப்பை அனுப்பவில்லை, தாமதாகவே அனுப்பியிருந்தது. அதை அப்பா வங்கியின் வழக்கறிஞரிடம் எடுத்துச் சொன்ன போது, "அதை உள்ளபடி நீதிமன்றத்தில் சொன்னால் வழக்கு கடன் பெற்றவருக்குச் சாதகமாகத் தீர்ப்பாகி விடும். எனவே நீங்கள் உங்களை இந்தத் தேதியில் அனுப்பப்பட்டதா எனக் கேட்கும் போது, ஆம் என்று மட்டும் சொல்லுங்கள்" என்று பயிற்றுவித்தார்கள். எனில் அப்பா நீதிமன்றத்தில் விசாரணையின் போது உண்மையில் தாமதமாகவே கடிதம் அனுப்பப்பட்டது என்று கூறி, அதனால் வங்கிக்கு எதிராகவே தீர்ப்பு வழங்கப்பட்டது

இரண்டாவது சம்பவம்: கல்கத்தாவுக்கு பிராந்திய மேலாளராக பதவி உயர்வு கிடைத்துப் போன போது, மேல்தட்டில் நிகழும் பலவிதமான கீழ்த்தரமான ஊழல் நடவடிக்கைகளுக்குப் பணிந்து போகாமல் இருக்கவே, அசாம் மாநிலத்தின் குக்கிராமம் வரை பந்தாடப்பட்டதும் நடந்தது. வேலையே போனாலும் பரவாயில்லை என்று சில ஒழுங்கீனங்களுக்கு உடன்பட மறுக்கும் போது தண்ணியில்லாக் காடுகளுக்கும் யாரும் போக விரும்பாத ஒற்றை ஊழியர் மட்டுமே கையாளும் குக்கிராமக் கிளைகளுக்கும் பந்தாடப்படுவதும் இறுதி வரை நிகழ்ந்து கொண்டேதான் இருந்தது. 12ஆம் வகுப்புக்குள் பதினோரு பள்ளிகள் நான் பார்த்ததும் அதன் விளைவே 😊

ஓய்வு பெற்ற பின்னரும் கூட, அப்பா மருத்துவமனையில் ஒரு அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்படதற்கான மருத்துவச் செலவுகளை காப்பீட்டுத் திட்டத்தில் திரும்பிப் பெற்றுக் கொள்ள ஓய்வு பெற்றோருக்கான திட்டம் வழியாக முயன்ற போது, மிகவும் மோசமாக அலைக்கழித்தது வங்கி. மருத்துவமனை ரசீதுகள் அனைத்தையும் அனுப்பிய பின்னரும், பலமுறை டில்லிக்குத் தொலைபேசியில் அழைத்தபின்னர், அவை எதுவும் வந்து சேரவில்லை என்று அலைக்கழித்தனர். ஓய்வு பெற்ற முதியவர்களை முடிந்தவரை அலைக்கழிப்பார்கள், அவர்கள் தாமாக காப்பீடு பெற முயற்சி செய்வதையும், தொடர்ந்து அதற்காக அலைவதையும் விட்டுவிடுவார்கள் என்று அவ்விதம் செய்கிறார்கள் என்று எண்ணிய அப்பா, சட்டபூர்வ அறிவிப்பொன்றை அனுப்பினார்கள். அடுத்த மாதமே பணம் வந்து சேர்ந்தது.

இதனால் எல்லாம், அப்பா தான் பார்த்தவேலை மீதும் வங்கி மீதும் இருந்த மதிப்பையும் நம்பிக்கையையும் இறுதிவரை இழக்கவில்லை. ஓய்வூதியத்துக்கு வாழ்வுச் சான்றிதழ் புதுப்பிபதற்கு வங்கி ஊழியரை வீட்டுக்கு வர முடியுமா எனக் கேட்கலாம் என்று அப்பாவின் இறுதி தினங்களில் ஒரு முறை கூறியதற்கு, வங்கி மேலாளருக்கு இருக்கக்கூடிய பணிச்சுமையை வலியுறுத்தி, எழுந்து அமரவே சிரமப்பட்ட தனது இறுதிக்கட்டத்திலும் நேரில் வங்கிக்கு செல்ல வேண்டும் என்று முனைப்பாக இருந்தார்கள்.

இவ்வளவு விரிவாக இதை எழுதக் காரணம், அப்பா இன்றிருந்தால், இத்தகைய ஊழல் பெருச்சாளிகள் என்றுமே இருந்தனர் என்பதையும் அதற்கு நடுவில்தான் நாம் நமது மனசாட்சிக்கு உட்பட்டு வேலை செய்ய வேண்டியிருக்கும் என்பதே அப்பாவின் நிலைப்பாடாக இருந்திருக்கும். என்னை இந்த உயர் அழுத்த வங்கி வேலை வேண்டாம் என்று அப்பா பலமுறை அறிவுறித்தியது இதனால்தான். ஊழ் வலியது - மென்பொருள் பயணமும் ஒருவகையில் அங்குதான் எனைக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது 😊

ஆனால் எங்குதான் இவர்கள் இல்லை! தனியாரோ, அரசுப்பணியோ, பெருநிறுவனங்களோ எல்லா இடங்களிலும் நீக்கமற இவர்கள் இருக்கிறார்கள். துலாமுள்ளை நிகர் செய்ய, அலுக்காமல் தங்கள் உண்மையையும் உழைப்பையும் தந்து நிகர் செய்பவர்களும் இருக்கிறார்கள். இரண்டு தரப்பும் என்றுமே உண்டு.

வாங்கும் ஊதியத்துக்கு உண்மையாக உழைப்பதும், எதிர்மறை மனிதர்களை, நமது இயல்பு, அல்லது சூழல் மற்றும் சார்ந்திருப்போர் முதலிய புறக்காரணிகளைப் பொறுத்து தவிர்த்தோ, தகர்த்தோ அவரவர் தன்னறத்தையும் நெஞ்சுறுதியையும் பொறுத்து எதிர்கொண்டே நாம் எந்த ஒரு வேலையையும் பார்க்க வேண்டியிருக்கிறது. பணம் அதிகமாகப் புழங்கும் துறைகளில் அழுத்தமும் அசிங்கமும் அதிகம். மிக சமீபத்தில் தங்கை ரம்யா தன்னுடைய அலுவலகத்தில் காலம்காலமாக நிகழ்ந்து கொண்டிருந்த ஒரு பெரிய மேல்மட்ட ஊழலை வெளிக்கொணர்ந்து மேலிடம் வரை எடுத்துச் சென்று நேருக்கு நேர் மோதி வென்றது. அன்றைய தினம் தந்தையின் இருப்பு இன்றும் தொடர்வது என்ற எண்ணம் மேலும் உறுதிப்பட்டது.

இதனால் எலலாம் நமக்குக் கிட்டுவது மன உளைச்சலும் பல சமயங்களில் நமது வேலையே இழப்பதும்தான். பிழைக்கத்தெரியாதவர் என்ற பெயர் உட்பட எல்லாம் கிடைக்கும்.

பிழைப்பு என்பது வெறும் வயிற்றால் நிரப்பப்படுவதாக அனைவருக்கும் இருப்பதில்லை, அதை மீறிய ஒன்று, வெறும் வசதிகளாலும் அதிகாரத்தாலும் நிரப்ப முடியாத ஒன்று, நம்மில் சிலருக்கேனும் முக்கியமாக இருப்பதால்தான் பிழைக்கத் தெரியாவிடிலும் பிழை இழைக்கத் தெரியாதவர்களாக இருப்பதில் முனைப்புக் கொள்கிறோம்.இது என்றென்றும் தொடரவிருக்கும் ஒரு சரடு. எனவே தந்தையர் வழி நடப்பதில் பெருமையே.

"எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே -- அதன்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
முடிந்ததும் இந்நாடே -- அவர்
சிந்தையி லாயிர மெண்ணம் வளர்ந்து
சிறந்தது மிந்நாடே -- இதை
வந்தனை கூறி மனத்தில் இருத்திஎன்
வாயுற வாழ்த்தேனோ -- இதை
வந்தே மாதரம், வந்தே மாதரம்
என்று வணங்கேனோ? "

#என்தந்தைஎன்ஆதர்சம்

இந்த பஞ்சாப் நேஷனல் வங்கி தொடர்பான பல இணையப் பகடிகள் சிரிப்பை வரவழைத்தாலும், நானும் சில சமயங்களில் அது போன்றவற்றை நண்பர்களுடன் பகிர்ந்தாலும், ஆழத்தில் உணர்வது இதுதான்:
நமது முதல் மந்திரிகளையும், எம் எல் ஏ- க்களையும், பிரதமரையும் உட்பட அனைவரையும் அவர்கள் நமக்கு எதிர்நிலைக் கொள்கைகள் உடையவர்களாயிருப்பினும் ஏதோ ஒரு வகையில் நமது பிரதிநிதிகள்தான் என்ற பிரக்ஞையின்றி பகடியெனும் பகிர்வுகள் மூலம் வரையறையின்றி சமூக ஊடகங்களில் பகிரும் வழக்கம் இன்று பலருக்கும் இருக்கிறது. அது, பிடிக்காத நடிகர் அல்லது தலைவர் சுவரொட்டியில் சாணியடிப்பது போலத்தான், நம்முள் ஒரு கீழ்மை நிறைவு கொள்வதன்றி பயன் இல்லை. எனது வீடு குப்பையாக இருக்கிறது என நாமே உரக்க ஊருக்குச் சொல்வதுதான். நம்மால் முடிந்த இடங்களைத் தூய்மை செய்வோம். வீட்டு எல்லையை விஸ்தரித்து குழாயடி வரை சுத்தம் செய்த தாத்தாவும் இதைத்தான் வாழ்ந்து காட்டிச் சென்றார்கள்.

அதே போலத்தான் இந்த ஊழல் ஒரு அலை, கூடிய சீக்கிரம் இந்த ஊழலை மறந்து அடுத்த ஊழல் நோக்கி நகர்ந்து விடுவோம். எனில் பல்சக்கரங்களை நகர்த்துபவர்களின் சத்தியத்தால் இந்த தேசம் முன்னகர்ந்து கொண்டேதான் இருக்கும்.

இந்தப் பதிவை எழுதத் தூண்டிய தம்பி ராஜேஷ்க்கு நன்றி