Tuesday, January 12, 2021

பசுமையின் ஆயிரம் வண்ணங்கள் - 1

பச்சை என்ற வர்ணத்தின் பேதங்கள் எத்தனை எனக் கேட்டால் பெண் என்பதாலும், வண்ணங்களை ஓரளவு ஓவியத்தில் கையாளுபவள் என்பதாலும் பத்து முதல் பதினைந்து வகைகளை என்னால் தோராயமாக சொல்லி இருக்க முடியும். ஆனால் நியூஸிலாந்துக்கு 2019ஆம் ஆண்டில் சென்று வந்த பின்னர், இந்த பச்சை என்னும் வர்ணத்தையே  மஞ்சள், நீலம், வெண்மை, கருமை என வித விதமான சேர்க்கைகளில் கலந்து தூரிகையில் தோய்த்து வரைந்திட்ட ஒரு நிலத்தைக் கண்கூடாகக் கண்டபின்னர், பசுமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வண்ணங்கள் உண்டு என அறிந்துகொள்ள நேர்ந்தது. இது உயர்வு நவிழ்ச்சி எல்லாம் இல்லவே இல்லை. உண்மை என அந்த நிலம் சொல்கிறது. நமது ஊரிலும் கேரளம் மற்றும் வடகிழக்கில் பயணம் செய்கையிலும், பாலி மற்றும் இந்தோனேசியாவின் வேறு பகுதிகளிலும் பசுமை விரவிக் கிடக்கிறது  என்றாலும் இந்நிலத்தின் பச்சையின் வகைகள் வேறெங்கும் கண்டதில்லை.


உலக வரைபடத்தை பார்த்தால்,  வண்ணங்களைக் குழைத்து உலகை வரைந்த ஓவியன் இறுதியாக ஓவியத்தின் அடியில் இட்ட கையொப்பம் போல, அல்லது ஓரமாகத் தீட்டிவிட்ட வண்ணக்கீற்று போல, கைதவறி சொட்டிவிட்ட இருசொட்டுகள் போல இருக்கிறது  நியூஸிலாந்து. அதன் மேலும், கீழும், வலப்புறமும் முடிவிலி வரை நீளும் நீர் வெளிக்கு நடுவே மிக ஏகாந்தமாக இருந்த அந்தத் துளி நிலம் மனதை உடனே கவர்ந்து கொண்டது. 

நியூஸிலாந்து செல்லவேண்டும் என்ற எண்ணம் தோன்றிய பிறகுதான் அந்நாட்டைக் குறித்த விரிவான வாசிப்புத் தொடங்கியது. முதலில் மூன்று நண்பர்களின் குடும்பங்கள் இணைந்து செல்வதாக ஒரு திட்டமிருந்தது. இரு மாதங்கள் எடுத்துக் கொண்டு, நியூஸிலாந்தின் அனைத்துப் பகுதிகளையும் பட்டியலிட்டு, ஒவ்வொரு இடமாய் வாசித்து, இணையத்தில் தேடி, அங்கு என்ன சிறப்பு, எந்த வகையான இடம், நாங்கள் செல்ல முடிவெடுத்த ஏப்ரல்-மே மாதங்களில் (குளிர்காலம்) எந்த இடங்கள் செல்லக்கூடியவையாக இருக்கும்,  என்பதை எல்லாம் சேகரிக்கும் பணி தொடங்கியது. பிறகு உடன் வருபவர்களின் வயது மற்றும் ஆர்வங்களைக் கணக்கில் கொண்டு சில இடங்கள் தெரிவு செய்யப்பட்டன. அவற்றை ஒற்றைப் பயணத்திட்டமாக இணைப்பதன் சாத்தியங்களை யோசித்து மூன்று விதமான பயணத் திட்டங்களை வகுத்தேன். முதல் திட்டத்தில் ஆஸ்திரேலிய 8 நாட்களும், நியூஸிலாந்து 10 நாட்களுமாக இருந்தது. இரண்டாவது திட்டம்  - 12 நாட்கள் மட்டும் எடுத்து நியூஸிலாந்தின் தெற்கு தீவு மட்டும் பார்த்து வரும் திட்டம். மூன்றாவது திட்டம் நியூஸிலாந்தின் தெற்கு, வடக்கு இரண்டு தீவுகளையும் சேர்த்து 18 நாட்களில் பார்ப்பதாகத் திட்டம். பிறகு நண்பர்கள் இணைவதில் சில இடர்கள் தோன்றின. முக்கியமாக தேதிகள் ஒரே போல கிடைப்பது, அதுவும் வெவ்வேறு தேசத்தில் இருந்து வருபவர்களுக்கு மிகுந்த சவாலாகப் போனது. மேலும் முழுமையாக நியூஸிலாந்தை பார்ப்பதென ஒரு சாராரும், அவ்வளவு தூரம் போவதால் ஆஸ்திரலேயாவையும் சேர்த்துப் பார்த்துவிடமேண்டுமென ஒரு சாராரும் எண்ணவே திட்டமிடுதல் நீண்டு கொண்டே சென்றது. 

18 நாட்கள் பயணத்திட்டம் என்பதால் அத்தனை பேருடைய தேதிகளையும் ஒரே போல முடிவு செய்வதில் உள்ள சிரமங்கள் தலைதூக்கவே, இறுதியாக நானும் கணேஷ்-மாதங்கி மற்றும் பிள்ளைகளும் செல்வதாக முடிவாகியது. 



அதன் பிறகு துரிதகதியில் திட்டங்கள் வரையறுத்து முடிவு செய்துகொண்டோம். அவசரம் அவசரமாக அனைத்து இடங்களையும் பார்ப்பதில் ஆர்வம் இல்லை, நீண்ட பயணம் என்பதாலும், இரண்டு பிள்ளைகளுடன் செல்வதாலும், சற்று நிதானமாக ஒவ்வொரு இடத்திலும் தங்கி அவ்விடத்தை சுற்றியுள்ள சில அழகான இடங்களை  ரசித்துவிட்டு அடுத்த இடத்துக்கு செல்வது போல ஒரு திட்டம் உறுதியானது.

புனித வெள்ளி மற்றும் மே தினம் என இரண்டு நீள் விடுமுறைகளை இணைக்கவே பத்து தினங்கள் விடுமுறை எடுத்தால் 18 தினங்கள் பயணத்துக்கு கிடைத்தது. பயண ஆயத்தமாக குளிர் ஆடைகள் மற்றும் காலணிகள் மட்டும் வாங்கவேண்டி வந்தது.  



2019 ஏப்ரல் 18ஆம் தேதி சிங்கையில் இருந்து ஏர் நியூஸிலாந்து விமானத்தில் கிளம்பினோம். வீட்டில் இருந்து சாங்கி விமான நிலையம் செல்வதே பெரும் கொண்டாட்டமாக இருந்தது. அடுத்த இரண்டு வாரங்களை நினைத்து ஒரே பூரிப்பு. சாங்கி விமான நிலைய சாங்கியங்களை முடித்துக் கொண்டு விமானம் ஓடுதளத்தில் கிளம்பத் தொடங்குகையில்தான் ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது. கணேஷ் தலையில் கையை வைத்துக் கொண்டு கவலையில் ஆழ்ந்தார். 



(தொடரும்)

Monday, January 4, 2021

மண்வீணைக் கம்பி



ஒவ்வொருவருக்குள்ளும் பசுமைமாறா இடம் ஒன்று இருக்கும். வளர்ந்த வீட்டின் திண்ணை, கிணற்றடி, மொட்டைமாடி, முதுகு பட்டுக் காய்ப்பேறிய சில சுவற்றுத் தடங்கள், குளக்கரை, குட்டிச்சுவர்கள், அன்றாடம் நடந்த சில சாலைகள், காத்திருந்த சில பேருந்து நிறுத்தங்கள் என ஏதோ சில இடங்கள், சில வழிகள் என்றைக்குமாய் மனதில் மாறாமல் இருக்கும். அந்த வழியின், இடத்தின் ஒவ்வொரு திருப்பமும் மேடு பள்ளமும், ஒவ்வொரு மரமும் செடிகொடியும், நாம் அறிந்தவையாகத் தோன்றும். அவ்வழி என்பது வழியாக மட்டுமல்லாது உடன் வந்த ஒரு உறவின், நட்பின் இருப்பாக உணர்வதனாலேயே அது ஞாபக அடுக்கில் மணம் மாறாமல் இருக்கும். ஆனால் அது சென்ற காலத்தின் ஒரு துளியாக அங்கேயே உறைந்து விட்ட ஒரு கணம். அதன் பின்னர் காலம் நிகழ்த்தும் பற்பல மாற்றங்கள் அந்தத் துளியை தொடுவதில்லை. 


நிகழ் தருணமெனும் சூரியனை மறைக்கும் ஒரு கடந்தகால மேகம் போதும், அது பொழியும் சிறு மழை போதும், மனதுள் உறங்கும் அந்த நினைவின் விதை முளைவிட்டு இரு பசுஞ்சிறகு கொள்ள.

அந்த இடமும் வழியும் அதனோடு இயைந்த உறவும் முற்றிலும் அடையாளமின்றி மாறிய பின்னரும் உள்ளுறையும் ஒரு நினைவில் அவை பசுமையாய் நீடுவாழும். கணந்தோறும் மாறிக் கொண்டே இருப்பவற்றை மாற்றமின்மையில் நிறுத்திவைக்கும் மாயையின் கருவிக்கு மனமென்று பெயர்.




அப்படி ஒரு கால்பட்டுத் தேய்ந்த நடைவழியைப் பற்றிய ஒரு பாடல். அவ்வழி நடந்த இருவரைப் பற்றிய வெளிப்படையான குறிப்புகள் ஏதுமின்றியே அதைக் குறிப்பால் உணர்த்துவதன் எளிமையாலேயே அழகாகும் பாடல். வழியைப் பாடி, காலடியைப் பாடி, அந்த உறவைப் பாடும் பாடலாகிறது.

சென்ற வருடம் கேட்ட பாடல்களிலேயே மிகப் பிடித்த பாடல்களில் ஒன்று. இப்பாடலின் இசையும் ராகமும் (ஸ்ரோதஸ்வினி) அந்த நினைவோட்டத்துக்கு அழகு சேர்க்கிறது. கேரளத்து செருதோனி ஆற்றங்கரைப் பகுதிகள் நீர்மை மின்ன பதிவாகியிருக்கிறது.




படம்: பூழிக்கடகன்
பாடியவர்கள்: விஜய் யேசுதாஸ், ஆன் ஆமி
கவிஞர்: ரஃபீக் அகமத்
இசை: ரஞ்சித் மேலெபட்

மலையாளப் பாடல் வரிகள்:

பொன்வெயிலின் கசவாய்
பொடிமழையுடெ நொரியாய்
மண்வீணக்கம்பி போலே ஒரு வழி
அதில் புழபோலே ஒழுகுண்ணு களிச்சிரி

ஆ வழியில் சரள்வழியில்
ஆளொழியும் சந்த்யகளில்
ஆரோருமோரார்த்த நேரங்களில்
ஆ வழியில் சரள்வழியில்
ஆளொழியும் சந்த்யகளில்
ஈரந்நிலாவின்டே நாளங்களில்

ஈ புழையுடெ குளிரலையில்
பூவிதழுகள் போலே
நாமொழுகியதோர்க்குன்னு
பூமருதும் ஞானும்

(பொன்வெயிலின்)

ஈ வழியில் நடவழியில்
காலடிதன் பாடுகளில்
பூமூடி இலமூடி
மாய்ஞ்செங்கிலும்
ஈ வழியில் நடவழியில்
காலடிதன் பாடுகளில்
ராவோடிப் பகலோடி
மாய்ஞ்செங்கிலும்
ஆத்ய மழத்துள்ளி வீன்னு
புழையிளகும் நேரம்
ஓர்மைகளில் நிறையுன்னு
மண்மனமும் நீயும்
(பொன்வெயிலின்)

தமிழில் எனது சிறுமுயற்சி:

பொன்வெயிலின் பட்டிழையாய்
சிறுதூறலின் சிற்றிழையாய்
மண்வீணைக்கம்பி போல ஒரு வழி
அதில் நதி போல ஒழுகிவரும் புன்னகை

அவ்வழியில், சரள்வழியில்
ஆளில்லா அந்திகளில்
யாரோடுமில்லாத நேரங்களில்..

அவ்வழியில், சரள்வழியில்
ஆளில்லா அந்திகளில்
குளிர்கொண்ட நிலவொளியின் நாளங்களில்..

இந்நதியின் குளிரலைகளில்
பூவிதழ்கள் போலே
நாம் ஓடிய நினைவுகளில்
பூ மருதமும் நானும்..

(பொன்வெயிலின்....)

இவ்வழியில் நடைவழியில்
காலடியின் சுவடுகளில்
பூமூடி இலைமூடி
மறைந்திருந்தாலும்..

இவ்வழியில் நடைவழியில்
காலடியின் சுவடுகளில்
இரவுகளும் பொழுதுகளும்
கடந்திருந்தாலும்..

முதல்மழையின் துளிவிழுந்து
நதி சிலிர்க்கும் நேரம்..
நினைவுகளில் நிறைகிறது மண்மனமும் நீயும்..

(பொன்வெயிலின்....)

பொன் வெயிலிலும் பொடி மழையிலும் சரிகையென மின்னும் சிறுவழி. அவ்விருவர் கால்களன்றி அதிகம் யாரும் நடந்திராத வழி. சரளை பாவிய அவ்வழியில் உதிர்ந்து மூடிய இலைகளும், மலர்களும், காலைகளும், மாலைகளும், குளிர்நிலவொளியும், ஏகாந்தமும் மட்டுமே அறிந்த பாதை.


மனதில் ஒட்டிக் கொண்டது மண்வீணைக் கம்பி போல ஒரு வழி எனும் வரி. மண் எனும் வீணையில் காலடிகள் மீட்ட, இசை எழுப்பிய கம்பி போன்ற சிறுவழி எனலாம். இசைக்க சாத்தியமில்லாத ஒரு மண்வீணை, அதில் ஒரு மீட்ட முடியாத கம்பி, எக்கணமும் இல்லாதாகிவிடக்கூடிய ஒன்றின் நுண்மையை உணர்த்தும் படிமமாகவும் பொருள்கொள்கிறது. அவரவர் நடைவழிக்குத் தக்கபடி..

https://youtu.be/YtBke3ys2_U








Saturday, January 2, 2021

நில்லா உலகு



புவியில் இரவு (Night on Earth) என்னும் நெட்ப்ளிக்ஸ் ஆவணப்படத் தொடர் ஒன்றை பார்த்துக் கொண்டிருந்தேன்.  இதுவரையில் பதிவு செய்யச் சாத்தியமில்லாதிருந்த இரவுநேர உலகை, ஆழ்கடலின், அடர்கானகத்தின், உறைபனியின், நகர்வாழ்வின் இரவுலாவிகளை மற்றும் பல்வகையான இரவுலகின் காட்சிகளை அதிநவீன புகைப்படக்கருவிகளின் உதவிகொண்டு படம்பிடித்திருக்கிறார்கள். ஒவ்வொரு பகுதியுமே இதுவரை அறிந்திராத அரிய காட்சிகளை, தகவல்களை, அற்புதங்களைப் பதிவு செய்கிறது. 


இதில் நேற்று பார்த்த பகுதி, நகர்ப்புறங்களில் வாழும் உயிரினங்களைப் பற்றியது. மனிதர்கள் இப்புவியை ஒலியாலும் ஒளியாலும் நிரப்பி வைத்திருப்பது குறித்தும் அது ஏனைய உயிரினங்களை பாதிக்கும் விதங்களைக் குறித்தும் பேசியது . உலகெங்கும் நிகழும் புத்தாண்டு வானவேடிக்கையின் காணொளிகளை இணையத்தில் அப்போதுதான் பார்த்திருந்துவிட்டு இதைப் பார்த்தேன். அமெரிக்காவின் மான்ஹாட்டன் பகுதியில் நடைபெறும் சுதந்திர தின வானவேடிக்கை நிகழ்வுகள் கடல்வாழ் ஆமையின் வாழ்வை எவ்விதம் பாதிக்கிறது என்ற மறுபுறத்தை இதில் காண நேர்ந்தது. 



தாய்லாந்தின் உறக்கம் தொலைத்த குரங்குகளும், மும்பையில் நகருள் உலவித் திரியும் சிறுத்தையும், தென்னாப்பிரிக்காவில் தனது மூதாதையின் வழித்தடங்களில் தனது குடும்பத்தையே வழிநடத்தி அழைத்து வரும் மதங்கத்தலைவி இடையில் புதிதாய் முளைத்துவிட்ட நகரத்தைப் பார்த்து திகைப்பதும், நகரவாழ்வெனும் சந்தடியுள் நாம் விலங்குகளையும் எப்படி மாற்றியமைத்துக் கொண்டிருக்கிறோம் எனச் சொன்னது.

24*7 எனப்படும் இருபத்துநான்கு மணிநேரமும் ஏழு நாட்களும் நில்லாமல் ஓடும் நிலையை அடையவே மானுடம் பெருமுயற்சி செய்து வருகிறது. நிலையாமை குறித்து சொல்லப்பட்ட 'நில்லா உலகு' இன்று தடையற்ற ஓட்டம் (Always On) என்ற மந்திரத்தை இடையறாது உச்சரிக்கிறது.

இன்று காலை கேட்ட ஒரு சம்பந்தர் தேவாரப்பதிகம் இப்பகுதியை மீண்டும் நினைவில் எழுப்பியது:

புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி அறிவு அழிந்திட்டு ஐம் மேலுந்தி
அலமந்த போதாக அஞ்சேல் என்று அருள் செய்வான் அமரும் கோயில்
வலம் வந்த மடவார்கள் நடமாட முழவதிர மழை என்று அஞ்சி
சிலமந்தி அலமந்து மரமேறி முகில் பார்க்கும் திருவையாறே


பாடலின் பொருள்: ஐம்புலன்களும் கலங்கி அறிவழிந்து நிலை தடுமாறிப் பதறும் காலத்தில் அஞ்சேல் என அருள்பவன் அமர்ந்திருக்கும் கோவில் ஐயாறு. அதைச் சுற்றி வலம் வரும் நடன மங்கையர் ஆட, முழவு எனும் தாளக்கருவி அதிர, அதை மழையின் வரவு அறிவிக்கும் இடியென்று அஞ்சி குரங்குகள் பதறி மரமேறி முகிலைப் பார்க்கும் திருவையாறு! என்ன ஒரு காட்சி! முழவொலியை இடி என்று அஞ்சி மரமேறுகின்றன குரங்குகள். ஆயிரம் வருடங்களுக்கு முந்தைய ஒலி இடியோடு ஒப்பிடும் அளவில் இருந்திருக்கக்கூடும். இன்று நாம் எட்டுத் திக்கும் சிதறிப் பரப்பும் ஒலியையும் ஒளியையும் எதனோடு இணைத்துப் புரிந்து கொள்வது என்றறியாமல் திகைக்கிறதோ உயிர்க்குலம் எனத் தோன்றியது. ஆனால் அன்று முதல் விலங்குகளும் மனிதர்களின் போக்குகள் அனைத்துக்கும் தகவமைத்துக் கொண்டும் வருகின்றன. இயற்கையின் மாறுபாடுகள் மனிதனையும் தகவைமத்துக் கொள்ள வைத்துக் கொண்டுமிருக்கிறது.



அதே இணையத் தொடரில் சிங்கையின் நீர்நாய்கள் (Otters) குறித்தும், சிங்கை எவ்வண்ணம் விலங்குகளின் வாழ்வியலுக்கு உகந்த நகரமாக மாற்றம் கொண்டு வருகிறது என்றும் காட்டப்பட்டது. இந்த கோவிட் காலகட்டத்தில் அவ்வப்போது நீர்நாய்கள் சிங்கையின் சாலைகளில் கண்ணில்பட்டுக் கொண்டுமிருந்தன. மனித நடமாட்டமும் போக்குவரத்தும் சற்று மட்டுப்பட்டதன் விளைவான சிறு முன்னேற்றம். நீர்நாய் எனில் இது சாத்தியம், மும்பை போல சிறுத்தை உலவினால் என்ன செய்வதெனத் தெரியவில்லை.

அதிவேகமாக ஓடிக் கொண்டிருக்கும் மனிதனை 'நீயும் எனது ஒரு பகுதி'தான் எனக்கூறும் இயற்கையின் மொழி காதில் விழ ஆங்காங்கே நிதானமாக நின்று இளைப்பாற வேண்டி இருக்கிறது. சும்மா இருப்பதெப்படி என்பதைக்கூட இணையத்தில் தேடும் இப்புத்தியை நிறுத்துவதெக்காலம்!