Sunday, November 20, 2016

தவம்

தன்னிடத்தில் தனித்தே
மலர்ந்திருக்கும் தாமரைகள்
வீழ்ந்தும் எழுந்துவரும் சூரியன்
வரம்தரவே பயணம் அனைத்தும்
வரம்பெறக் காத்திருத்தலே போதும்


Friday, September 23, 2016

சற்குரு - தாத்தா - 10

சற்குரு - தாத்தா - 10 (பிடித்த பத்து)
யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே - மாணிக்கவாசகர்




Thursday, September 22, 2016

சாபவிமோசனம்

கடுமொழி மோனத்துக்
கனன்ற சொல்லொன்று
புடமிட்டுத் தகத்தக்க
புள்ளொன்றால் கலைந்ததவம்
புலன்மறுத்த சித்தனவன்
கல்லென்று சபித்திட்டான்
கடுஞ்சொல்லால்
தவம் இழந்தான்.
காடுறையும் காலம்
கல்லாய் உறைந்திட
கூர்முனைகள் மழுங்கிட
உருட்டியது காலநதி.
உருவமிலி உருவேறி
பூசனைக்கு வந்தமர்ந்த
யுகங்கடந்த கல்தன்னை
பூசித்த முனிவனின்
யாசித்த கரங்களில்
கல்உறையும் புள்தருமோ
சாபவிமோசனம்

Tuesday, September 6, 2016

Kutti Buski - The Little Master - 3

Again Kutti Buski - on the day of Ganesh Chathurthi

Kutti Buski: Suvaanty, Is Ganesha the biggest God?
Suvaanty: There are no big or small gods. All are equal.
Kutti Buski: There are so many Gods right. How many Gods are there? Who made them all?
Suvaanty: After some thought... There is only one Big God Medhaansh
Kutti Buski: Only one!!! Who is he?
Suvaanty: Nature, Brahmam
Kutti Buski: Whaaaaaat.. then who created the Earth. Nature is in Earth right..
Suvaanty: When I say nature, I meant the one God which created the whole universe...
Kutti Buski: (After a deep thought) then who created that First Big God?
Suvaanty: Thats what everyone is searching for...
Kutti Buski: Does God have a brain?
Suvaanty: Should be, He created all of us and we are having brains. So He should be having one.
Kutti Buski: Once a person dies and becomes a star, will God fix that brain to another new baby?
Suvaanty: I dont think so, I think He gives new brain for everyone
Kutti Buski: (After some thought) Oh, God may use the same brain when it is time for the stars' next birth. He will be fixing the same brain for us I think..
Suvaanty: !!##@@

ஆதியிலிருந்தது என்ன
ஆதியின் மூலமென்ன
அறியொணாத ஒன்றென்றால்
உன் அறிவால் ஆவதென்கொல்
தேடிடும் இரந்திடும் நீ
அகந்தையென்றாகிடும் நீ
அறியாத ஒன்றுள்ள வரை
அறிவின் ஆணவம் ஏன்

Kutti Buski - The Little Master - 2

Another day of philosophical rambling between Kutti Buski and his Suvaanti..

Suvaanti was preparing brocolli soup, Kutti buski in his usual relentless inquistive mood started firing questions. Questions that are endless, countless and tireless. Only kids seem to be capable of such an inquiring spirit. Suvaanti was answering one by one, and then he started saying in a suggestive tone:

Kutti Buski: Suvaanty, you should have kept vegetables in this vessel, that one seems shaky
Kutti Buski: Suvaanty, I think you should not grind the broccoli
- and so on.
Suvaanty: Medhaansh, Do you know how to make soup?
KB: No..
Suvaanty: Then, dont you think you should keep quiet?
KB: Ya, but..
Suvaanty: Better you also learn how to keep quiet at times.
KB: Suvaanty I already know how to keep quiet..
Suvaanty: Thats good kutti buski
KB: No one taught me how to keep quiet. I knew it myself.
Suvaanty: True, No one can teach you how to keep quiet. It should come naturally.
KB: God taught me how to keep quiet when I was two years old.

Suvaanty busy cooking didnt mind what he said..

KB: Suvaanty, you know.. God taught me how to keep quiet, when I was two years old. Thats when I learnt how to talk right. You should learn to know how to keep quiet, when you learn how to talk right.. so God taught me at that time.

Suvaanty Dumbfounded!!!

How to true it is - silence and keeping quiet is an effective and integral part of speech!! What part of speech is silence - am not talking about the answer "noun"
It is the part of speech that can convey powerful emotions!!

உடன்பாட்டின் மொழியாகலாம் மோனம்
வெளிப்படா உணர்வாகலாம்

தெய்வத்தின் நிழலாகலாம் மோனம்
உய்வதன் வழியாகலாம்

உள்ளத்தின் வலியாகலாம் மோனம்
கள்ளத்தின் கறையாகலாம்

மடமையின் திரையாகலாம் மோனம்
கடமையின் நிறைவாகலாம்

எதிர்ப்பின் குரலாகலாம் மோனம்
முதிர்வின் முறையாகலாம்

மொழியின் முதலும் மோனம்
உணர்வின் செறிவும் மோனம்
அறிவின் அழகும் மோனம்
நிறைவின் நிறமும் மோனம்

Kutti Buski - The Little Master - 1

Kutti Buski (The Little Master)

A series of conversations that range from Mickey to the Millenium, silly thoughts to scintillating science between Kutti Buski and his Suvaanti...

Kutti Buski on his 6th birthday, in a philosophical mood:

Buski: Suvaanti, are birthdays endless?
Suvanti: (after some deliberation) Hmm, no dear. Birthdays will come to an end.
Buski: When Suvaanti?
Suvaanti: When we become old and then we become star, birthdays end.
Buski: But we are born again and birthdays start from number 1 again right? So birthdays are endless right?
Suvaanti:.....
Buski: And there is no largest number right?
Suvaanti: Yes, numbers are endless.
Buski: But my friend says Infiniti is the largest number!!
Suvaanti: (Thinking: At what age did I come to know about infiniti) Infiniti means endless dear..
Buski: So birthdays are until Infiniti?
Suvaanti: Great question!!

முன்னும் பின்னும் சூழும் முடிவிலி
பின்னங்கள் இடையே பிதற்றல் பிணக்குகள்
பூஜ்ஜியம் என்றோ வெடித்துச் சிதற
லட்சம் கோடி பரந்து பரவ
தூசி அடங்கும் நாளில் மீண்டும்
சூன்யம் சிரிக்கும் மோனக் கணக்கில்
கோடியில் எத்தனை பூஜ்ஜியம் - அறிவோம்!
சூன்யத்தின் கருவில் எத்தனை கோடி?
முற்றுப் பெறாத கேள்விகள் தொடர
முற்றும் பெறாத விடைகளே எஞ்சும்..

Tuesday, July 19, 2016

அந்திக் கருக்கல்






மாலை வானைப் பரபரப்பின்றி பார்க்கக்கிடைத்த இந்நாள் இனியது.

மயங்குதலும் மயக்குதலுமாய் அந்தி வானம்.

மிகக்குறைந்த இடைவெளியில் ஸ்வரஸ்தானங்கள் கொண்ட விவாதி ராகம் போல, வெளிர் நீலம் முதல் கருநீலம் வரை பரவி முழுமுதல் நீலமாய் வசீகரித்தது மாலைக் கருக்கல். கீழே ஆயிரம் விளக்குகளால் மின்ன முயன்ற நகரத்தைப் பார்த்து, முழுநிலவென்னும் ஒற்றை விளக்கேற்றி நகைத்தது இயற்கை.

கனவுகளை முன்னோக்கியும் நினைவுகளைப் பின்னோக்கியும் நகர்த்த வல்ல மாயவிளக்கு.  நகரத்தின் பரபரப்பை
ஏளனம் செய்வது போல ஏகாந்தமாய் பெருவெளியில் ஊர்ந்து செல்லும் வெள்ளித்தேர்.

இன்னும் சிறிது உற்றுப் பார்க்க கண் சிமிட்டும்  ஓராயிரம் புள்ளிகள்.
ஒவ்வொன்றாய் புள்ளி வைத்தாற் போல ஒன்றுமில்லாத இடங்களிலும்
புதிது புதிதாய் முளைத்தது.

கவிந்திருக்கும் வான் என்னும் ஒற்றைப் பெருவிழி.-
விழி
கூட அல்ல.
பெருவிழியின் கருவிழி.
புவியைக் கண்ணருகே வைத்துப் பார்த்திருக்கும் பொற்கொல்லன். ஒரு விழியால்
உலகளக்கும் கொல்லன்.
உலகென்னும் சிறுதூசைக் கொல்லாத கொல்லன்.
தூசியின் துச்சம்
புவியின் அளவு.
பொன்னில்லை எனக் கண்டதும் அவன் மூச்சுக்காற்றே போதும் புறம்தள்ள.  புறம்தள்ளிடப் போக்கிடம் ஏது. ஒப்பற்ற எண்ணங்கள், அளவற்ற கவலைகள், ஈடற்ற சாதனைகள் எனத் தலைவீங்கும் இக்கடுகை பொறுத்திருக்கும் தாய்விழி. விழியால் அடைகாக்கும் மீன்விழி. மீள மீள நோக்கும் மீள் விழி.  இதில் இயற்கையின் சத்தியம் அன்றி சாத்தியம் ஏது.

Monday, July 18, 2016

அலைபிழைத்த கிளிஞ்சல்கள்



இந்த நொடி -
இவ்விடத்தில் இருக்கிறேன் நான்.
இந்த நொடி -
அந்த நொடி இறந்தகாலம்
இந்த நொடி -
அவ்விடம் புவிநகர்ந்து போக
இந்த நொடி -
அந்த நான் இருக்கிறேனா!!

கடந்துபோன
காலம் அது இறந்த காலம்
தொடர்ந்து வரும்
நான் இங்கே என்னஆனேன்
இறந்திறந்து பிறக்கிறது
கணங்கள் தோறும்
முதலுமிலி முற்றுமிலி
முடிவிலி என்பார்

மாலை முதல்
இரவு வரை பறந்ததாலே
நித்தியக் கனவுறுமோ
ஈசல் கூட்டம்
நேற்று முதல்
இன்றுவரை பார்த்ததாலே
நாளைவரை நம்புகிறோம்
நமதே என்று

Sunday, May 8, 2016

சற்குரு - தாத்தா - இறுதிக்கனல்

21 மார்ச் 1946: கப்பல் கரை சேர்ந்தது.

கண்ணீர் பொங்க நிலத்தை முத்தமிட்டனர் கரைசேர்ந்த பலரும்.
ஆனந்த வெள்ளத்தில் நீந்தி மதுரையிலிருந்து வந்திருந்த தோழர்களுடன் தாத்தா மதுரை நோக்கிய ரயில் பயணம் மேற்கொண்டார்கள். கொடை ரோட்டில் ரயில் நிலையத்திலேயே உற்றார் உறவினர் வரவேற்பு. 'மதுரைக்குள் நம் வீடு வரை பேருந்து செல்கிறது' என்றெல்லாம் நவீன மாற்றங்களை நண்பர்கள் உற்சாகமாய் கூறிக் கொண்டே வந்தார்கள். தன் முகம் பாராது வளரும் மகனைக் காண, மன எழுச்சியோடு விரையும் தந்தை. 

ஆறு வயது மகன் சிவசுந்தரவேலனுக்கு,  தந்தை போல இந்திய தேசிய ராணுவ உடை தைத்து அணிவித்து அனைவரும் காத்திருந்தனர். வாசலில் வந்து இறங்கியதும் தாய் தந்தையும் தம்பி தங்கையரும் பழனி மலை தெய்வத்துக்கும், குலதெய்வக் கருப்பனுக்கும் நன்றி சொல்லிக் கண்ணீர் விட, முதன் முதலாய் அதுவரை கண்டிராத மகன் நேதாஜியின் ராணுவ உடையில் முன் வந்து, வீர வணக்கம் செலுத்தி, 'ஜெய்ஹிந்' என்று முதல் வணக்கம் சொன்னான். மகனை ஆரத்தழுவிக் கொண்டு மண்ணில் விண்ணைக் கண்டார்கள் அந்த மகான்.


மிகச் சரியாக 48 வருடங்களுக்குப் பிறகு:
20 மார்ச் 1994: கப்பல் கரை சேர்ந்தது.

குலம் விளங்க மூத்த மகனாய்ப் பிறந்து, தம்பி தங்கையர் குடும்பங்களுக்கு எல்லாம் உற்ற துணையாய் திகழ்ந்து, நாட்டுக்கென களப்பணியில் முன் நின்று, சுற்றத்துக்கென, சமூகத்துக்கென, நட்புக்கென, பெயரறியா சகபயணிகளுக்கென, மனம் விரிந்த மலர், தன் பணி முடிந்தது என அமைதி கொண்டிருந்தது. எண்ணற்ற சுழல்களையும், சூறாவளிகளையும், ஏற்றத் தாழ்வுகளையும் கடந்து வந்த கப்பல் கரை சேர்ந்து விட்டது.

மயானத்தில் இறுதிச் சடங்குகளும் முடிந்து பூவுடலைத் தீ உண்ணத் தரும் தருணம்.  தகவலறிந்து மதுரை INA கிளையிலிருந்து  மிகவும் வயதான தளர்ந்த ஒரு முதியவர் நேராக மயானக் கரை வந்து சேர்ந்தார். தடுமாறி நடந்து வந்து, இராணுவ வீரர்களுக்கே உரிய இறுதி அஞ்சலிக்காக தேசியக்கொடி ஒன்றைக் கொண்டு வந்து தாத்தா உடலின் மீது போர்த்தினார். தன் கால்களைச் சேர்த்து, உடலை விரைத்துக் குரலை உயர்த்தி வீர முழக்கமிட்டார். அந்தத் தளர்ந்த உடலுக்குள் அவ்வளவு திடமான ஜீவன் இருப்பதை நடுக்கமற்று உயர்ந்த அவர் குரல் உணர்த்திற்று. கூடியிருந்தோர் அனைவரையும் அவர் குரல் உலுக்கியது - 'ஜெய்ஹிந்'. 

அதுவரை ஒரு துளியும் கலங்காதிருந்த மூத்த மகன் சிவசுந்தரவேலன், தனது தந்தைக்கும் தனக்குமான முதல் முழக்கம் வானதிர முழங்கவே உடைந்து அழுதார்.

காற்றில் அந்த நெருப்பு வீரவணக்கத்தையும்  அனைவரது அஞ்சலியையும் ஏற்றுக் கொண்டு உயர எழுந்தது.

இன்றும் அனைவரது வாழ்விலும் இருள் சூழ்ந்த பாதைகளில் ஒளியேற்றிக் கொண்டுதானிருக்கிறது அந்த அருட்ஜோதிதெய்வம். தன்னலம் கருதாத அன்பினில், இளம் தலைமுறையை வழிநடத்தும் ஆசிரியர் மனதினில், விளம்பரங்கள் தேடாத கருணையில்,  பிறர் வாழ சிறு உதவியேனும் செய்யும் உள்ளங்களில், நேர்மை தவறாத மாண்பினில், நேர்மறை எண்ணங்கள் விதைக்கும் மனங்களில், நம்பிக்கை தளராத இறையாண்மையில் மிளிர்கிறது அந்த அருட்ஜோதி தெய்வம்.

மறுபடி மரணம்
மறுபடி ஐனனம்
இடையினில் இருளினில்
தேடல்தான் பயணம்..

சிலர் வழிகாட்டுவார்
பலர் நடைபோட்டிட -
சிலர் பலராகவே
அவர் வலிதாங்குவார்

பிறன் நலம்வாழ்ந்திடத்தன்
பிறவியை மாற்றுவார்
முள்முடி தாங்கியும்
முகமலர் காட்டுவார்

விறகொடு எரிவது
உடலது தானே
உடன்வரப் போவது
அவனருள் தானே

மண்ணொடு கலந்தபின்
எஞசுவதென்ன
மனதொடு கலந்திடும்
நினைவுகள்தானே

வெற்றுத் தாளொடு
பிறந்தவர் நாமே
எழுதுவோம் பாக்களை
அன்பொடு தினமே

தாளது ஒருதினம்
அவன்தாள் சேரும்
எழுதிய கவிதைகள்
மனதிடை வாழும்

அன்பது சிவமாம்
அன்பது தவமாம்
வாழ்வை நீட்டும்
அன்பின் கரமாம்..

அன்பே சிவம்! அன்பே சிவம்!!

முந்தைய பதிவு (34)
(நிறைவு)

Wednesday, May 4, 2016

சற்குரு - தாத்தா - 34

1946: கப்பல் போக்குவரத்து துவங்கியது. மிக நீண்ட ஆறு வருடங்கள் கழித்து வந்தது விடியல்.

ஆறு வருடம் கழித்து தாயகம் திரும்பும் பரபரப்பு அனைவரையும் தொற்றிக் கொண்டது. சிங்கப்பூர் வந்து பயண உரிமச் சீட்டும் அனுமதிக் கடிதமும் பெற்றுக் கொண்டு கப்பலேறினார்கள் தாத்தா. (காண்க: அனுமதிக் கடித புகைப்படம். இந்த Havelock Roadல் தான் நான் சிங்கப்பூர் வந்ததும் ஒரு மாதம் தங்கியிருந்தேன். தினசரி நாம் நடக்கும் பாதைகளில் ஒளிந்திருக்கும் கடந்தகால நிகழ்வுகள் -  காணக் கண்கள் திறக்கும் வரை கிடைப்பதில்லை அதன் தரிசனம்)

அனுமதிக் கடிதம்



சென்னை துறைமுக அனுமதியும் ஜப்பான் நோட்டுகளும்





மலேயாவிலிருந்து கப்பலில் சென்னை துறைமுகம் நோக்கி ஒரு வாரத்திற்கும் மேற்பட்ட பயணம். கப்பலின் அனைத்துத் தளங்களிலும் உற்சாகம் அலைபுரண்டது.

நீலம்..பச்சை.. கருப்பு என மாறி மாறி மாயம் காட்டியது எல்லையற்ற நீர்வெளி... மேலே அமைதியாய் இருந்தது கடல்பரப்பு. ஒளிந்திருந்தது ஆழமும் அதன்மடியில் கண்ணாமூச்சி ஆடும் அலைவீச்சும்..அன்னையையும் தந்தையையும் உடன்பிறந்தாரையும் உற்றாரையும் மனைவியையும் முகமறியா மகனையும்  காணப்போகும் தருணத்தை எண்ணி எண்ணி ஆனந்த அலையாடும் மனது. கடல் மேல் இரவுகள் - இருள் மீது மேலும் கருமை பூசியது போன்ற காரிருள் கடந்தகாலமாய். எப்போதாவது ஒளிகோபுரமாய் மற்றொரு கப்பல் கடந்து செல்லும் எதிர்கால நம்பிக்கையாய். (தாத்தாவின் காலடிச்சுவடுகள் தேடி கோலாலம்பூர் பினாங் - கப்பல் வழிப் பயணம் சென்ற கடந்த மூன்று நாட்கள், தாத்தா விவரித்த கப்பல் பயணத்தை மனதுள் கொண்டு வந்து நிரப்பியது - look this space next week for further photos and blog on Penang trip)


பயணத்தின் நடுவில் தாத்தாவுக்கு கடும் ஜுரம். உடல் அனலாய்க் கொதித்தது. உணவுண்ணவும் நகர இயலாது, மேல் தளத்திற்கு வரவும் முடியாது உடல்வலியோடு கடும் காய்ச்சலில் தனது அறையில் படுத்திருந்தார்கள்.

ஒருநாள் நண்பகலில் திடீரென மேல்தளத்தில் உற்சாகக் கூக்குரல்களின் ஒலி, கதவு திறந்து வந்த நண்பரோடு அறைக்குள் வந்து நுழைந்தது.  நண்பர் 'அண்ணே மேல வந்து பாருங்க, கரை தெரியுது' என்று உரக்கக் கூவினார். உண்மையாகவே தாயகம் உயிரோடு திரும்பிவிட்டோம் என்று உள்ளம் பொங்கியது. தாத்தா எழ முயன்றார்கள் -  உடல் தள்ளாடியது கடும் சுரத்தினாலும், அலைமோதிய உணர்ச்சியாலும்.

தாத்தாவை அள்ளித் தோளில் சேர்த்துக் கொண்டு தளர்ந்த கால்களோடு துவண்ட தாத்தாவை மேல் தளத்துக்கு கைத்தாங்கலாய் அழைத்து வந்தார் அந்த நண்பர். கடல்காற்று உடலில் மோதி அறைந்தது.  தொலைவில் சென்னைப் பட்டணம் அடிவானில் தெரிந்தது. உணர்ச்சி வெள்ளம் கண் வழியே பாய்ந்தது.

"கடவுளே! என் தாயகம்! உன்னருளாலே நான் உயிரோடு கரை மீள்கிறேன் குறையின்றி, ஊனமின்றி, மனச்சுமைகளின்றி!! இது சத்தியம்! இந்த தருணம் சத்தியம்!! ஆயிரம் முறை மனம் நடித்து பார்த்த ஒத்திகை அல்ல இது."  காய்ச்சலை மீறி உடல் உவகையால் நடுங்கியது.  கப்பலில் எழுந்த ஒலி அலைகளை மீறி வானைத் தொட்டது.

எத்தனை நூறு முறை இதைச் சொல்லும் போதும் தாத்தாவுக்கு உணர்ச்சி மேலிட்டுக் கண்கள் கலங்கும். இப்போதும் விமானம் தரையிறங்க முற்படும்போது ஒவ்வொரு முறையும் மெரீனாவின் அழகிய கடற்கரை கண்களுக்குத்  தெரியும் போது, தாத்தா விவரித்த அந்தக் காட்சி என் கண்முன் விரியும் - I feel as if I was there in the ship on that memorable day.

எம் தலைவனை சுமந்து வந்த அந்தப் பெயர் தெரியாத தோள் கொடுத்த தோழன் யாரோ! அந்த உன்னத தருணங்களிலும் அதற்கு முந்தைய போர்முகங்களிலும் உடனிருந்த நட்புக்கள் எத்தனையோ!! எத்தனை எத்தனையோ நிகழ்வுகள்; அனிச்சையாய் மானுடம் மலர்ந்த முகடுகள்!! நிரந்தரமாய் ஆழ் தடம் பதித்து ஒரு மனிதனை வாழ்நாளுக்கும் புடம் போட்ட நெருப்புக் குளியல்கள்!!

எம் தலைவனைக் காத்து தோள்கொடுத்து உளம்சோரும் போது உடனிருந்த பெயர் தெரியாத அத்தனை கருணைகளுக்கும் நட்புகளுக்கும்  உன்னதங்களுக்கும் எமது நன்றி. எங்கோ காற்று வெளியில் நிறைந்திருக்கும் உங்கள் அனைவரது நினைவுகளுக்கும், பெருமூச்சுகளுக்கும், புன்னகைகளுக்கும், எதிர்காலத்தின் -நிகழ்காலத்தின் மனமார்ந்த நன்றிகளும் வணக்கங்களும்!! உங்கள் வலிகள் எங்களுக்கு மேடையமைத்துக் கொடுத்திருக்கின்றன.

அன்றிலிருந்து 70 ஆண்டுகள் கழித்து இன்று விழுது இங்கு நிலம்தொடும் தருணம் நிலைமை முற்றிலும் மாறியிருக்கிறது.
சதுப்பு நிலமாயும் நிணமும் கொலையுமாயும் இருந்த சிங்கப்பூர் இன்று  உலகிலேயே சிங்காரமாய்  மயனமைத்த மாய நகராய் செல்வ செழிப்பாய் மாறியிருக்கிறது. பினாங்கும் கோலாலம்பூரும் தடதடக்கும் இரயில்தடத்து அருகில் படபடக்கும் பட்டாம்பூச்சியென, இன்றைய பரபரப்பின் ஊடே எழுபத்தைந்து வருட நினைவுகள் பொதித்துக் காத்திருக்கிறது.

வாழ்வென்றும் தாழ்வென்றும் வளமென்றும் குறைவென்றும் சக்கரம் சுழல்கின்றது.
அதில்தான் சரித்திரம் நிகழ்கின்றது.

முந்தைய பதிவு (33)

அடுத்த பதிவு (35)

Monday, April 25, 2016

சற்குரு - தாத்தா - 33

மாமதுரை:

தென்னன் புகழ் பாடும் அழகான தென்மதுரை.
கரும்பும் இளநீரும்  கண்திறந்து மடைபாயும்
கட்டுக் கலங்காணும் கதிர் உழக்கு நெல்காணும்
அறுதாள் அறுத்துவர  மறுதாளும் பயிராகும்
அரிதாளின் அடியினிலே ஐங்கலந்தேன் கூடுகட்டும்  
மாடுகட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று
யானைகட்டிப் போரடிக்கும்  அழகான தென்மதுரை -

தாத்தாவுக்கு மிகவும் பிடித்த பாடல், பள்ளியில் பாடத்தில் வந்த இந்த நாட்டுப்புறப் பாடலை மீண்டும் மீண்டும் பாடச் சொல்லிக் கேட்பார்கள் தாத்தா. 


பத்துப் பதினைந்து நாட்கள் வேறு ஊரில் வந்து தங்கிவிட்டால், செல்வ நிலையம் வீடு நினைவில் வந்து விடும். சில சமயம் கனவாகவும் வீடு தாத்தாவுக்கு செய்தி சொல்வதுண்டு; ஒருமுறை கிணற்று உறைக்குள் கூடுகட்டியிருக்கும் சிட்டுக்குருவி கிணற்றில் விழுந்திருப்பதாய் கனவு கண்டு, உடனே போக வேண்டும் என மறுநாளே கிளம்பிப் போனார்கள். அந்த முறை நிஜமாகவே குருவி விழுந்திருந்தது. அப்படி ஒரு மனதோடு உரையாடும் பந்தம் செல்வ நிலையத்தோடு. வேட்டியை மடித்துக் கொண்டு மாடிப் படியிலிருந்து நிழல் தரும் பரண் மேல் தாவி ஏறி வேப்பிலை சருகுகளைப் பெருக்கி அள்ளுவதும், வாசலில் ஒரு கல் இல்லாமல் தென்னந்துடைப்பத்தைக் கொண்டு விரவி எடுப்பதும், கிணற்றடி முழுதும் நீர் இறைத்து ஊற்றி சுத்தம் செய்வதுமாய் வீட்டின் ஒவ்வொரு அங்குலத்திலும் நிரம்பியிருக்கும் தாத்தா, வீட்டைப் பழநிமலை சந்நிதியாய் மாற்றி வைத்து, குத்துவிளக்கை பொன்னென ஒளிரச் செய்து, தினந்தோறும் வாசல் மிளிரக் கோலமிட்டு பொலியச் செய்த அப்பத்தா - இருவருடனும் தாராபுரத்தில் இருந்து பயணித்தோம். நினைவிழந்த நிலையிலிருந்த தாத்தாவுடன் அண்ணனும் மாமாவும் உடன்வர மதுரை நோக்கிப் புறப்பட்டோம். 

ஒரு சிலதினங்கள் முன்னர் மாமா தாராபுரம் வந்தபோது தாத்தாவுடன் மிகவும் மனம்திறந்து பேசியிருந்ததை நினைவு கூறியபடி, மிக விரைவாக முடிவை நோக்கி நகரும் நிதர்சனத்தைத் தாளமுடியாமல் மாமாவும், தனது சிறுவயது முதலே தாத்தாவின் குருகுலவாசத்தில், அருகாமையில் இருந்த அண்ணனும் அன்று தாத்தாவை மடியில் சுமந்து வந்து மதுரை சேர்த்தார்கள்.  (சில பந்தங்கள் புறக்கண்களுக்கு விளங்காதது - தாத்தாவின் இறுதி மணித்துளிகளில் உடன்பயணித்த அண்ணனை 20 வருடங்களுக்குப் பிறகு அப்பாவின் இறுதி வினாடிகளிலும் கொண்டு சேர்த்தது விதியா இறையா..)

வரும்வழியில் அம்மை நகரில் செய்தி சொல்ல நுழைந்தால், தொலைவில் நடக்கும் துயர சம்பவத்தின் எதிரொலி போல், சிறு குழந்தையான தங்கைக்கும் ஒருநாளும் நிகழாத வண்ணம் குரங்கால் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது.
செல்வநிலையம் - உற்றார் உறவினர் குழுமியிருந்தனர்.

மறுநாள் காலையில் மகளென பாசம் கொண்ட மருத்துவர் வந்து நாடி பார்த்து இன்னும் சில நிமிடங்கள்தான் என்று சொல்ல, உறவினர் அனைவரும் குழுமியிருக்க பிரியமான பேத்திகளும் இளைய மகன் மருமகளும் நாகமலையில் கால்பதித்ததும் பறந்தது உயிர்ப்பறவை - ஓம் எனக் குவித்த உதடுகள் வழியாகவா? மேலேறிய விழிகள் வாயிலாகவா? அனைவர் கண் முன்னால் எத்திசையில் கொண்டு சென்றான் விதிக்கிறைவன்.

[தங்கை ஜெயஸ்ரீயின் வாய்மொழியில்:வாழ்வில் நம்மை பாதிக்கும் சிறு வயது நிகழ்வுகள் சில இருக்கும். அது போன்று எனை பாதித்த நிகழ்வு தாத்தாவின் மறைவு. அன்று சனிக்கிழமை தாத்தாவுக்கு உடல் நலமில்லை என செய்தி கிடைத்த போது அப்பா வேலை நிமித்தம் சென்னை சென்றிருக்க, அம்மா தன் பெருமதிப்புற்குரிய மாமாவை எண்ணி கண்கள் கலங்க, என்னையும் தங்கை ரம்யாவையும் அழைத்துக் கொண்டு தூத்துக்குடியில் இருந்து மதுரை புறப்பட்டார்கள். அப்பாவும் விஷயமறிந்து ஊர் திரும்ப, ஞாயிறு காலை மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில், கைபேசி இல்லாத அந்த காலத்தில், ஒரு பேருந்தில் ஏற, அதே பேருந்தில் அப்பாவும் அமர்ந்திருந்தார்கள். வீட்டை நெருங்க நெருங்க உறவினர்கள் நிறைந்த வீடு பதற்றத்தை விளைவித்தது. வீட்டினுள் நுழைந்ததும் தான் அப்பாவுக்கும் எங்களுக்கும் தாத்தா இறைவனடி சேர்ந்த விஷயமே தெரிந்தது. பேரதிர்ச்சியில் உறைந்தழுதோம். எப்போதும் பேத்திகளைக் கண்டதும் மலரும் தாத்தாவின் முகம் அன்று அசைவற்று இருந்தது. தாத்தா இல்லாத செல்வ நிலையம் தன் பொலிவை இழந்தது போல் அனைவரும் உணர்ந்தோம். தாத்தா மறைந்தாலும் இன்றும் நம் மனங்களில், நம் எண்ணங்களின் எழுச்சியில், உயர்ந்த சிந்தனைகளில் உலாவுகிறார்கள். என்ன காரியம் செய்தாலும் "இப்போது மட்டும் தாத்தா இருந்திருந்தால்.." என்ற எண்ணம் மேலோங்கத்தான் செய்கிறது. இறைவன் எமக்களித்த எங்கள் புதல்வனை எங்களது தாத்தாவே வந்து பிறந்ததாக கருதி மனநிறைவடைகிறோம். வாழும் வரை "அய்யாதுரை பிள்ளையின் பேத்தி" என்ற பெருமை ஒன்றே போதும். வாழ்க்கை பல்வேறு திசைகளில் பயணிக்கும் போதும் தாத்தா கற்றுத்தந்த values எப்போதும் வழிகாட்டும். Saluting him. ஜெய்ஹிந்த்..! ]

கூட்டம் கூடி அழுதது. ஒவ்வொருவரும் தத்தமது வாழ்வில் தாத்தா செய்த மாயங்களை மாற்றங்களை சொல்லிச் சொல்லி அழுதனர். கடைசியாய் முகம் பார்க்கவும் வர இயலாது போன செல்ல மகளுக்காகவும் அழுதனர். 

ஊரெல்லாம் கூடி உரக்க அழுதாலும் சூரையங்காட்டிடை கொண்டு போய் சுட்டாலும் நீரினில் மூழ்கி மறந்திடும் நினைவல்லவே. ஏனோ கண்கள் வறண்டு மனம் அலையற்றுக் கிடந்தது.

"ஆசை அறுமின் ஆசை அறுமின்
ஈசனோடாயினும் ஆசையறுமின்
ஆசைப் படப்பட ஆய்வரும் துன்பம்
ஆசை விடவிட ஆனந்தந்தானே" - தாத்தா அடிக்கடி சொல்லும் மற்றொரு பாடல்.

எந்த ஆசையை விட வேண்டும்? இப்படி ஒரு மகானை மீண்டும் காணும் ஆசையையா? மீண்டும் அந்த விரல்கள் பற்றி உலகை வலம் வரும் ஆசையையா?

ஆசை அறுத்து ஆனந்த யாத்திரை புறப்பட்டது.

முந்தைய பதிவு (32)

அடுத்த பதிவு (34)

Monday, April 18, 2016

சற்குரு - தாத்தா - 32

1945: பேரிடி - பேரிடர் காக்க வந்த பெருந்தலைவர் நேதாஜியின் அகால முடிவு அனைவரையும் நிலைகுலையச் செய்தது. சிலகாலம் யாரும் அந்தச் செய்தியை நம்பவில்லை. ஆனால் 'இன்று வரை நேதாஜி உயிரோடிருக்கிறார்' என்ற கருத்தில் தாத்தாவுக்கு என்றும் உடன்பாடில்லை. 'இக்கட்டுகளைக் கடந்து செல்ல அன்று சிலகாலம் அவர் அஞ்ஞாதவாசம் இருந்திருக்கலாம், நெடுங்காலம் மறைந்திருக்க அந்த சூரியனால் இயலாது, உயிரோடு இருந்திருந்தால் என்றோ ஒரு நாள் வந்திருப்பார்' என்பதே தாத்தாவின் நம்பிக்கை.
எல்லையில் கைப்பற்றப்பட்ட இந்திய தேசிய ராணுவம் போர்க் குற்றவாளிகள் எனக் குற்றம் சாட்டப்பட்டு தில்லி செங்கோட்டையில் நிகழ்ந்த வழக்கும், அதன் தீவிரமும், நாடெங்கும் பரவிவிட்ட ஆதரவும்,  இந்தியர்களால் ஆன ராணுவத்திலும் காவல்துறையிலும பெரும் பகுதி இந்திய தேசிய ராணுவத்தின் உணர்ச்சிகரமான போர்முழக்கங்களால் கிளர்ச்சியடைந்திருப்பதும் ஆட்சியாளர்களுக்குத் தெளிவாயிற்று. இனிமேலும் கிளர்ந்த கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதும், இந்தியர்களைக் கொண்டே இந்தியர்களை ஒடுக்குவது இயலாதென்பதும் ஆங்கிலேயருக்குப் புரிய, சுதந்திரம் வழங்கும் முடிவு தீவிரமடைந்தது.

ஜப்பானியப் படை சரணடைந்ததும் மெல்ல மெல்லத் தகவல் தொடர்புகள் நிறுவப் பட்டன. அப்போது மலேயா போன்ற கிழக்காசிய நாடுகளில் ஒரு வானொலித் தகவல் ஒளிபரப்பு சேவை தொடங்கப்பட்டிருந்தது. உலகமகாயுத்தத்தில் பிழைத்து உயிரோடு இருப்பவர்கள், தங்கள் பெயரையும் ஊரையும் தெரிவித்து, இந்த ஊரைச் சேர்ந்த இன்னாருக்கென தாங்கள் உயிரோடிருக்கும் தகவல் தெரிவிக்கலாம். அப்போதெல்லாம் எல்லா வீடுகளிலும் ரேடியோப் பெட்டிகள் இல்லாத காலம். இருப்பினும் மேகத்தையும் காற்றையும் தூது விட்ட மனித இதயம் எவ்வண்ணமேனும் நேச நெஞ்சங்களுக்கு செய்தி சொல்லத் துடிப்பது இயல்பல்லவா. 

அம்மை நகரில் தந்தை பெயருக்கும் பசளையில் தனது மாமாவுக்கும் தாத்தா சொன்ன செய்தி வானொலியில் காற்றோடு வந்தது. இப்படி ஒரு தகவல் சேவை இருப்பதும் தெரியாது, அதைக் கேட்கவும் இல்லை இரு வீடுகளும்.உறவினர் ஒருவர் கேட்டுவிட்டு வந்து தகவல் சொன்னார். செய்திகேட்டு ஆனந்தக் கண்ணீருடன் உயிர்த்தெழுந்தனர் உற்றாரும் பெற்றோரும்.

அதன் பின்னரும் கப்பல் தொடர்பு சரிசெய்ய பலமாதங்களாயிற்று. தாத்தா தனது செட்டியார் நிறுவனப் பொறுப்பை மற்றொருவரிடம் ஒப்படைத்துக் கிளம்ப மாற்று ஆள் வருவதற்கும் தாமதமாயிற்று. எனினும் கருக்கிருட்டு கடந்து வரும் முதல் கீற்றுப்போல் கடிதத் தொடர்பு தொடங்கியது. அஞ்சல் பெட்டி சேர்ந்து அதுகாறும் அந்தரத்தில் தொங்கிய சில கடிதங்கள் இரு தரப்பிலும் காலம்தாழ்ந்து கைக்குக் கிட்டின.

நாட்டைக்காக்க நேதாஜியின் படை முகப்பில் தந்தை நின்றிருந்த செய்தி, ஐந்து வயது நிரம்பிய தனயனுக்கு சொல்லப்பட்டது. புகைப்படமாக மட்டுமே அறிமுகமாயிருந்த தந்தைக்கு 'ஜெய்ஹிந்த்' என ராணுவ வணக்கம் செய்வது மகனின் வழக்கமாயிற்று.

வண்ணங்கள் இழந்த மலேய வனவாசத்தில் வந்தது வசந்தம் - தந்தையிடமிருந்தும் தலைமகனாம் சிறுமகவிடம் இருந்தும் கடிதம் -  என்னே ஒரு பரவசம். வழி மேல் விழி வைத்துக் கடிதம் வரும் வழி காத்திருந்தோருக்கே அதன் அருமை புரியும். அதுவும் இப்படி ஒரு வரிசுமந்து - "On seeing your photo, Velan poured kisses on it"






ஐந்து வயது மகன் சிவசுந்தரவேலன் எழுதிய முதல் கடிதம்






Monday, April 11, 2016

சற்குரு - தாத்தா - 31

மீண்டும் தாராபுரம்

ராமநாதபுரத்தில் இருந்து அடுத்த வருடமே மாற்றலாகியது. மீண்டும் தாத்தாவுக்குப் பிடித்த தாராபுரம். விதியொன்று நிகழும் களமாக இம்முறை. மானிடர்க்கு முன்னோக்கும் விழி அருளாத இறை கருணை மிக்கது. தெரிந்தால் மாற்றி விட முடியாத போது முன்கூட்டிப் பார்த்து என்ன பயன்?

ஒன்பதாம் வகுப்பு. புதிய பள்ளியில் சேர்ந்த ஒரே வாரத்தில் புதிதாய் மற்றுமொரு பெண்ணும் பள்ளியில் சேர்ந்தாள்.  பயந்த சுபாவமும் மெல்லியல்பும் நிறைந்தவள். கருணையை போதிக்கும் ஏசு அடியார்கள் - இயல்பிலேயே வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடிடும் குடும்பம். திருட்டுப் போன சைக்கிளைக் குறித்து, 'யாரோ இல்லாதவர்தானே எடுத்திருப்பார்' என இரங்கும் அவளுடைய தந்தை, கருணையே வடிவாய், அதற்கு மிக உகந்ததாய் செவிலியராய் சேவை செய்யும் தாய். அழகான அருமையான குடும்பம்.
அவள் அந்த வருடம் தமிழ்வழிக் கல்வியிலிருந்து ஆங்கிலவழிக் கல்விக்கு மாறியிருந்தாள். பள்ளியில் வழி தவறிய ஆட்டுக்குட்டியாய் மருண்டு நின்றவள் - பார்த்த முதல் பார்வையிலேயே மனதில் இடம் பிடித்தாள். அன்று முதல் அந்த வருடம் முழுவதும் மாலையில் அவள் என்னுடன் வீட்டுக்கு வருவதும், சேர்ந்து படிப்பதும் வழக்கமாயிற்று.

இந்த முறையும் தாத்தாவோடும் சேர்ந்தே உருவாகி உறுதியானது அவளுடனான நட்பு. இந்த முறை ஒரு சிறு மாற்றம். நாங்கள் படிப்பதையும், ஆங்கிலத்தில் இருக்கும் அறிவியல் கணக்கு பாடங்களை, அவளுக்கு நான் தமிழில் விளக்குவதையும் அமைதியாய் பார்த்துக் கொண்டு அமர்ந்திருப்பார்கள் தாத்தா. இது அன்றாட வழக்கமாயிற்று.

அவர்கள் வீட்டிற்கு நடையின் போது நானும் தாத்தாவும் செல்வதும், அவளது தாய் தந்தையருக்கும் தாத்தாவை மிகவும் பிடித்துப் போனதும் அனிச்சையாய் நிகழ்ந்தது. நாங்கள் குடியிருந்த வீட்டின் முன்புறம் பெரிய மண்தரை. அம்மா கைங்கர்யத்தில் ஓரிரு மாதங்களில் வெறுமையாய் இருந்த மண்தரை பசுமை போர்த்தி மலர்ந்தது. யாருக்கும் காத்திராத காலநதி விரைவாய் சுழித்தோடிக் கொண்டிருந்தது. 

வீட்டு வாசலில் செவ்வகமாய் பெரிய திண்ணை. அதில்தான் தாத்தா அமர்ந்திருப்பார்கள் நாள் முழுவதும். 
எத்தனையோ நிகழ்வுகள், நெகிழ்வுகள் கண்ட திண்ணை அது. நாட்கள் துளிகளாய் வழிந்து மாதங்கள் ஓட
ஒன்பதாம் வகுப்பு முடிய ஓரிரு மாதங்களே இருந்தன. தாத்தா விரும்பியதுபோல மதுரைக்கிளைக்கு மாற்றல் வாங்க அப்பா முயற்சித்துப் பலனின்றி நாட்கள் ஓடிக்கொண்டிருந்தன. மிகுந்த சிரமத்தோடு, ஒரு கிராமப்புற வங்கிக் கிளைக்கு அப்பா அலைந்து கொண்டிருந்த நாட்கள். 


ஒரு நாள் அப்பா என்னிடம், 'உன் தோழியைப் போல நீயும் சைக்கிளில் பள்ளிக்குப் போ' என சைக்கிள் வாங்கிக் கொடுத்தார்கள். அதை சாலையில் ஓட்ட பயந்து கொண்டிருந்த என்னைக் கண்டு தாத்தா, 'அச்சம் என்பது நேருக்கு நேர் நோக்காத வரைதான் பெரிதாய் இருக்கும். பயத்தை எதிர்கொள்ள அது சிறிதாய் காணாமல் போகும்' என என்னை சாலையில் ஓட்டச் சொல்லி, சாலை விதிகள், கையில் காட்ட வேண்டிய சமிஞ்ஞைகள் என  அனைத்தும்  கற்றுக் கொடுத்தார்கள் தாத்தா. இது நடந்தது ஒரு சனிக்கிழமை. நண்பகல். வீட்டு முன்னால் திண்ணையில் வெயில் இளைப்பாறிக் கொண்டிருந்தது. அருகே தாத்தா கண்களை மூடி மோனத்தில் அமர்ந்திருந்தார்கள்.  நான் சைக்கிளை எடுத்துக் கொண்டு தோழியின் வீட்டுக்கு சைக்கிள் பழகச் செல்கிறேன் எனக் கூறி விட்டு கிளம்பினேன். 'நானும் வரட்டுமா?' என்று கேட்டு தாத்தாவும் எழ, 'ஓய்வெடுங்கள். நான் மட்டும் செல்கிறேன்' என்ற என்னை விதி மேலிருந்து பார்த்துக் கொண்டிருந்தது. 

முதல் நாள் தாத்தா சஷ்டி விரதமிருந்து ஏதும் சாப்பிடாத நாள். அன்று மதியம் உணவுண்ணும் வேளை வீடு திரும்பினேன். வீட்டில் தாத்தா இல்லை. என்னைப் பார்த்ததும் 'தாத்தா உன்னைப் பார்க்க வரவில்லையா?' என்ற கேள்வியோடு அம்மா காத்திருந்தார்கள். நான் சென்றதும் சிறிது நேரத்தில் வெளியேறிச் சென்ற தாத்தா, மதியம் ஒரு மணி தாண்டியும் வீடு வரவில்லை. நேரமாக ஆக பதட்டம் ஏறியது. என்னைத் தேடி வந்திருக்கக் கூடுமோ என மீண்டும் தோழி வீடு வரை சென்றேன். அம்மா மற்றொரு புறம் தேடிச் சென்றார்கள். தோழியின் தம்பியரும் ஆளுக்கொரு புறம் தேடி அலைய, மனதில் ஏதோ ஒரு கலக்கம் இதற்குப் பிறகு பேசக் கிடைக்காதோ என.

பிறகு அப்பாவுக்குத் தகவல் அனுப்பி, அப்பா வந்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துக் காத்திருந்தோம். மாலை நேரம் - காவல் நிலையத்திலிருந்து தகவல் வந்தது - 'யாரோ ஒருவர் நினைவிழந்து, சாலையில் மயங்கி விழுந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்' என்று. தகவல் அறிந்து அப்பா விரைந்த போது, இதுவே இறுதியென மருத்துவர்கள் கூறினர். வெயிலில் சாலையில் மயங்கி விழுந்த தாத்தாவை, யாரோ ஒரு வக்கீல் பார்த்து விட்டு, சுதந்திர போராட்ட வீரர் என்ற அடையாள அட்டையைப் பார்த்து அதையே அடையாளமாக்கி மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்.
உற்றாரை, நண்பர்களை, ஊராரை, சமூகத்தை என அனைவரையும் சொந்தமெனக் கருதிய தாத்தாவை சேர்த்திருந்த அரசு மருத்துவமனை ஏட்டில் எழுதியிருந்தது - 'உறவினர்கள் - யாருமில்லை'.


அடுத்த கட்டத்துக்குப் பறவை பறந்து சென்று கொண்டிருப்பதை ஒவ்வொன்றும் சொல்லிச் சென்றது. சூசகமாய் செய்தி காற்றில் கண்ணாமூச்சி ஆடும் தருணங்கள்.

பிறந்த கணம் முதல் ஆயிரமாயிரம் வார்த்தைகள் பேசிய வாய், திருநீறு மணக்கும் சுட்டு விரலை விடாமல் பற்றியிருந்த கரம், அன்று ஏனோ 'ஓய்வெடுங்கள், நான் மட்டும் செல்கிறேன்' என்று சொன்னதையே இறுதிச் சொல்லாய் மாற்றி உயிர் காற்றில் ஆடிக் கொண்டிருந்தது.

முந்தைய பதிவு (30)

அடுத்த பதிவு (32)

Tuesday, April 5, 2016

சற்குரு - தாத்தா - 30

இந்திய தேசிய ராணுவ நாட்கள்:




ஒவ்வொருவருக்கும் வாழ்வின் உச்சமாக ஒரு காலகட்டம் அமைவதுண்டு. அவ்விதமான தலைசிறந்த நாட்களாய் தாத்தா கருதியது, தன்னிகரற்ற தனிப்பெருந்தலைவர் நேதாஜியுடன் நேரிடையாகப் பணியாற்றிய அந்த நாட்கள். பாரத வரலாற்றின் முகடுகளைத் தொடும் நாட்களில் தன் வாழ்வின் சிகரங்களும் அமைவது எப்பேற்பட்ட கொடுப்பினை!
நேதாஜியின் களப்பணிகளுக்கான நிதி நிர்வாகப் பொறுப்பும், கிழக்காசிய மக்களிடையே சுதந்திர வேட்கையையும் சுதந்திர பாரதத்துக்கு நேதாஜியின் கொள்கைகளையும் எடுத்து இயம்புவதுமான பணி (Finance Controller and Propagandist). என்னே ஒரு உன்னதமான வாய்ப்பு! 

அதன் அருமை பெருமை உணராது, குழந்தை மனதுக்கே உரிய சந்தேகங்களுடன்  -  'அவரை நேரில் தொட்டுப் பார்த்திருக்கிறீர்களா தாத்தா?' என்ற எனது கேள்விக்கு - பெருமிதம் பொங்க, கை நீட்டும் தொலைவு காட்டி, 'இதோ, இவ்வளவு தொலைவில் அன்றாடம் காலையிலும் மாலையிலும் என்னைக் கடந்து செல்வார். பணி குறித்துப் பேசியதும், கைகுலுக்கியதும், ஊக்கமும் பாராட்டும் பெற்றதும், பலநூறு முறை வீரவணக்கம் செய்ததும் உண்டு' என்று சொல்லும் போது தாத்தா முகத்தில் சுடர் விடும் ஒளி - இன்று போல் கண் முன் நிற்கிறது.

சொந்த வாழ்வின் துயர்களைப் புறம் தள்ளி, தேசத்துக்காக உயிரையும் தரச் சித்தமாக்கப் படைக்களப் பயிற்சி. பர்மா வழியாக தில்லி செல்லப் புறப்பட்ட இரண்டு ரெஜிமெண்டுகளுக்கு அடுத்து, தாத்தா இருந்த படை, களம் காண்பதாய் திட்டம். இந்திய தேசிய ராணுவம் இந்திய பர்மா எல்லையில் நிகழ்த்திய தாக்குதலும் ஏறக்குறைய இரண்டு மாதங்கள் அந்தப் படையை முறியடிக்க ஆங்கிலேய அரசாங்கம் திணறியதும், தக்க சமயத்தில் உதவி தருவதாய் வாக்களித்திருந்த ஜப்பானியப் படைகள் பின்வாங்கியதும், மிகவும் அதீதமான மழைக்குப் பெயர் போன அப்பகுதியில் பருவ மழை அப்போது  தீவிரமடைந்ததும் வரலாறு.
எதிர்பார்த்ததை விட அதிக தினங்கள் நீடித்த முற்றுகையால், படையினருக்கு ஒற்றை வேளை உணவு மட்டுமே எஞ்சிய நிலையிலும், காலரா, மலேரியா, ஜன்னி என நோய்த் தாக்குதல் தொடங்கிய நிலையிலும்,  INA படையின் ஒற்றை வீரனும் பின்வாங்கவோ மனம் தளரவோ இல்லை.

அந்தப் பின்னடைவு வந்த போதிலும் மனம் தளராத நேதாஜி , அடுத்த கட்ட நகர்வுக்குத் திட்டமிடத் தொடங்கினார். ஆங்கிலேயர் விழித்துக் கொண்டு, பர்மா எல்லையை மீண்டும் கைப்பற்றி, ஜப்பான் வசமிருந்த ரங்கூன் நோக்கி முன்னேறினர். ரங்கூனில் அப்போது ஜான்சி ராணி படையுடனும்(லஷ்மி சேகல் மற்றும் ஜானகி என்ற இளம்பெண்கள் தலைமையிலான INA மகளிர் படை) மற்றுமொரு அணியுடனும் தங்கியிருந்த நேதாஜியை பாதுகாப்புக் கருதி, தாய்லாந்து சென்று விடுமாறு அனைவரும் கூறினர்.('அந்தப் பெண்மணி லக்ஷ்மி செகல் போல நீ இருக்க வேண்டும், ஜான்சி ராணி, Joan of Arc என்றெல்லாம் நேதாஜியாலே பாராட்டப் பட்ட பெண் - இது குறித்துப் பேசும் போதெல்லாம் தாத்தா கூறிய மொழிகள். மேலும் அவர் குறித்த தகவல்கள் இந்தப் பதிவில் வாசிக்கலாம் https://www.facebook.com/notes/sfi-students-federation-of-india/dr-capt-lakshmi-sahgal-ina-a-revolutionary-life-of-struggle-sacrifice/429214980455600/)

  

ரங்கூன் எல்லையை சில மைல் தொலைவுகளில் நெருங்கிக் கொண்டிருந்தது ஆங்கிலேயப் படை. ஜப்பானியப் படையும் ரங்கூனில் இருந்து பின்வாங்கத் துவங்கியிருந்தது. ரங்கூனை வெள்ளையர் பிடிக்கையில் சுபாஷ் பிடிபட்டால் எல்லாம் குலைந்து விடுமென அனைவரும் அவரைக் கிளம்பும்படி நிர்பந்தித்தார்கள். சுபாஷ் பயணம் செய்ய விமானம் ஒன்று தருவதாக ஜப்பானியர் கூறினர். தனது படைக்கு நேர்வதே தனக்கும் நேரட்டும் எனக் கூறினார் அந்த உன்னதத் தலைவர். 'சராசரியாக பதினெட்டு வயதே நிரம்பிய மகளிர் படை, சுற்றத்தின் பாதுகாப்புகளை உதறி என் வாக்குறுதியை நம்பிக் களம் இறங்கிய படை, பகைவனை நேருக்கு நேர் முகம்நோக்க கொற்றவையென எழுந்த படை உடனிருக்க எது வரினும் அதை சேர்ந்தே எதிர்கொள்வோம்' என முடிவெடுத்தார்.

வேறு வழியின்றி அனைவரும் ஒப்புக் கொள்ள, தனது படைகளுடன் உலகின் மிக அதீத மழை பொழியும் அடர் காடுகளுக்கு இடையே தொடங்கினார் தாய்லாந்து  நோக்கிய தனது நடைபயணத்தை. பகலெல்லாம் வான்வழித் தாக்குதலுக்குத் தப்பியும் இரவெல்லாம் நடந்தும், அனைவருக்குமான அணிவகுப்பு முறையிலேயே தானும் ஓர் எளிய படை வீரனாய் நடந்து சென்றார் - தலைவன் என்ற சொல்லுக்கே வழிகாட்டிய நேதாஜி. எல்லோருக்கும் ஒரு வேளை அளவு உணவுதான், எனினும் உற்சாகமாய் படையோடு அமர்ந்து, அதே வாழ்வைத் தானும் மேற்கொண்டு தனது அணியை மேலும் உரங்கொள்ளச் செய்தார். மூன்று மணி நேரத்தில் பறந்து செல்ல வாய்ப்பிருந்த போது, மூன்று கடினமான வாரங்கள் படைகளுடன் நடந்து தாய்லாந்து சென்று சேர்ந்தார்.

ஹிரோஷிமா தாக்குதலுக்குப் பின் ஜப்பான் நிலைகுலந்தது; பின்வாங்கியது. தனது INA இளம் படையினரை வான் வழித் தாக்குதல் முறைகளும், விமானத் தொழில் நுட்பமும் கற்க ஜப்பான் அனுப்பியிருந்த நேதாஜி,  'டோக்கியோ பாய்ஸ்' என்றழைக்கப்பட்ட அந்தக் குழுவை பத்திரமாய் மீட்க உத்தரவிட்டுவிட்டு, பாசக் கயிறாய் வந்திறங்கிய விமானத்தில் Saigonலிருந்து முடிவிலியை நோக்கிப் புறப்பட்டார்.

முந்தைய பதிவு (29)

அடுத்த பதிவு (31)

Tuesday, February 23, 2016

சற்குரு - தாத்தா - 24

மலேயா: போர் ஓயும் வழியாகத் தெரியவில்லை. இனி இப்படித்தான், கொத்தடிமைகளாக வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டியதுதான் என்பது போன்ற பேச்சுகள் தொடங்கின. உலகெங்கும் கோலோச்சும் ஆங்கிலேயனையே இரவோடு இரவாக அஞ்சி ஓடச் செய்து விட்டது ஜப்பான். சிங்கப்பூர் ஒரே நாளில் விழுந்துவிட்டது, எதிர்ப்போரையெல்லாம் கடற்கரையில் நிற்க வைத்து தலையை வெட்டியும் கைகளை பின்னுக்குக் கட்டி சுட்டுக் கடலில் தள்ளியும் கொன்று குவிக்கிறார்கள். சிறிது திடகாத்திரமாய் இருக்கும் பொதுமக்களையெல்லாம் பிடித்து சியாம் மரண ரயில் பாதை கட்டுமானத்துக்கு அனுப்பிவிடுகிறார்கள். கொலையினும் கொடுமையாய் நரகினும் கொடூரமாய் வாழ்க்கை மாறி வருகிறது. மானுடனுக்குள் ஒளிந்திருக்கும் குரூரங்களை அள்ளி இரைத்தது போர்.
இவ்வாறெல்லாம் தினந்தோறும் வரும் செய்திகள் பீதியை உண்டு பண்ணத் தொடங்கியது.  

[அந்த சமயத்தில் ஜப்பானியர்கள் நிகழ்த்திய போர்க் கொடூரங்கள் கணக்கற்றது. அகப்பட்ட பெண்களை எல்லாம் வயது வித்தியாசமின்றி சிறைப்பிடித்து பாலியல் அடிமைகளாய் 'Comfort homes' என்ற பெயரில் சிதைத்திருக்கிறார்கள். அதனால் இன்றும் அது குறித்த கசந்த நினைவுகள் இங்கு கிழக்காசிய நாடுகளில் அதிகம். இது குறித்த History channelல் ஒளிபரப்பப்பட்ட காணொளிகளுக்கு இங்கு பார்க்கவும் -
நேதாஜி ஜப்பானியர்கள் உதவியுடன் படை அமைத்ததால் சிங்கப்பூர்/மலேசியாவில் INA மற்றும் சுபாஷ் குறித்த எதிர்மறை உணர்வுகளும் நிறைய இருக்கின்றன. ஹிட்லர், முசோலினி மற்றும் ஜப்பானியரோடு கொண்ட போர் படைகளுக்கான கூட்டு என்பது, அவரவரது சொந்த அரசியல் நிலைப்பாடுகளுக்கு அப்பாற்பட்டது என்பதும், தனிப்பட்ட முறையில் ஜப்பானது போர் முறைகளிலும், நிகழ்ந்த போர்க் கொடுமைகளை அவர் எதிர்த்ததும் பெரிய அளவில் தெளிவு செய்யப்படவில்லை. ]

குண்டடி பட்டு வீழ்வதாயினும் மரணம் ஒரு முறைதான். இறப்பினும் கொடிய வாழ்வுக்கு அஞ்சியே ஒவ்வொரு வினாடியும் இருத்தல் என்பது ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதமாக மாற்றத் தொடங்கியது.
இவ்விதமாய் நரகத்து வாழ்வில் உழலும் போது, கோலாலம்பூர் கடையிலிருந்து வந்த நண்பர் ஒருவர் பலமாதம் முன்பு எழுதப்பட்டு உலகெல்லாம் சுற்றி வந்து சேர்ந்த  உயிர் காக்கும் மருந்தோடு வந்து சேர்ந்தார். ஆம், கடிதம்!! அருமைத் தந்தையிடமிருந்து உறவுகளின் ஸ்பரிசத்தோடு கவலைகளோடு பிரார்த்தனைகளை சுமந்த கடிதம்.ஜப்பானியர்களின் கண்காணிப்பால் உறை பிரிந்து தான் வந்து சேர்ந்திருந்தது. எனினும் கடிதத்தை வெளியே எடுப்பதற்குள் மெய்தான் அரும்பி, விதிர்விதிர்த்து, கண்ணீர்த்திரைக்குப் பின் மங்கலாகத் தெரிந்தது ஐயாவிடமிருந்து வந்த கடிதம்.

உயிர் வாழ்வதன் சாத்தியக்கூறுகள் குறைவான நிலையில் தெய்வ சாந்நித்தியமாய் வந்த கடிதம். அதுவே காலடிகளை முன்னோக்கி எடுத்து வைக்க உதவும் ஊன்றுகோலாகியது. இதற்கு முன் மகன் பிறந்த செய்தி வந்ததுதான் கடைசிக் கடிதம் அது பலநூறு முறை படித்துக் கண்ணீர் படிந்து நொய்ந்திருந்தது. அடுத்தது இந்தக் கடிதம் கலங்கரை விளக்கமாய்.

இதே போல வேறு ஒருவருக்குத் தன் தாயிடம் இருந்து கடிதம் வந்து சேர்ந்திருக்க கண்ணீர் வெள்ளமெனப் பெருக, அதைப் படிக்க முற்படும்போது ஊதியது அபாயச் சங்கு. கடிதத்தை உயிரினும் மேலாய் சுமந்து ஓடி குழிக்குள் மறைந்து, பல மாதங்களாய் காத்திருந்து வந்த செய்தி கையில் கிட்டியும் படிக்க முடியாத சுமை நெஞ்சையழுத்த, குழிக்குள்ளேயே கடிதத்தைப் பிரித்து படிக்க அவர் முற்பட்டார். தலை மேல் விமானம் பறக்க, வேகமாய் காற்று வீசியது - எமனின் பாசக் கயிறா அது? கடிதம் அவர் கையை விட்டுப் பறந்தது. உயிர் பறந்தது போன்ற உணர்வுடன் பதைத்து வெளியேறினார்; கடிதத்தை எட்டிப் பிடிக்க ஓடினார். குண்டு வீழ்ந்தது. அவர் சில நொடிகளுக்கு முன் பதுங்கியிருந்த குழியில்.. மரணத்தைத் தட்டி எறிந்திருந்தாள் அந்தத் தாய். தாய்மடியில் சேயாய் கடிதம் அவரை சுமந்து காத்துநின்றது. பல்லாயிரம் மைல் அக்கரையில் காத்து நிற்கும் உறவுகளின் பாசமும் பிரார்த்தனையும் கவசமாய் உடன் வருவது சத்தியமாய்க் கண் முன் தெரிந்தது.

மனிதனின் சின்னஞ்சிறு பிரயத்தனங்களைத் தாண்டி இதுபோல பிரார்த்தனைகளும், அன்பும், முனனோர் அருளும், இறை அருளும் துணை வரும் என்பதை நமக்கு நினைவூட்டும் இந்நிகழ்வுகள்.

முந்தைய பதிவு (23)

அடுத்த பதிவு (25)

Sunday, February 14, 2016

சற்குரு - தாத்தா - 29

ஆறுமுகநேரிக்குப் பிறகு ராமநாதபுரம். எனது எட்டாம் வகுப்பு. உலக வரலாறும் புவியியலும் ஏறக்குறைய 50பாடங்களுக்கும் மேல் இருந்தது சமூகவியலில். வரலாறும் புவியியலும் தாத்தாவுக்கு மிகவும் விருப்பப்பாடம். உலகநாடுகள் அனைத்தின் தலைநகரம், நாணயம், மொழி, முக்கிய ஆறுகள், ஊர்கள், கணிமவளம், தலைவர்கள், நடப்பு செய்திகள் என அனைத்தும் ஏதோ 'கலெக்டர் படிப்பு' படிப்பது போல உள்ளே ஏறும். நிலவொளியில் நனைந்து கொண்டு,  தாத்தாவுடன் கதை போல உலகம் படித்த கனாக் காலம்.
மாலைதோறும் வீட்டின் சிறு பலகணியில் அமர்ந்து, நானும் தாத்தாவும் ஏதேதோ பேசிக் கொண்டிருக்க அப்பத்தாவும் கேட்டுக் கொண்டிருப்பார்கள். தமிழ்ப்பாடத்தில் மதுரையின் சிறப்பைக் கூறும் 'கட்டுக் கலங்காணும் கதிர் உழக்கு நெல் காணும்' பாடல் தாத்தா அப்பத்தா இருவருக்கும் பிடித்த பாடல். அந்தப் பாட்டைத் தொடர்ந்து, சிறுமலைத் தோட்டத்தில் விளைவது குறித்தும், மலை வாழைப்பழம் குறித்தும், தாத்தா உற்சாகமாய் பேசத்தொடங்க, எசப்பாட்டுப் போல அப்பத்தா தனது பிறந்தவீட்டுப் பெருமையையும், பசளையின் கதிரறுப்பு காலத்தின் நிகழ்வுகளையும் கூற, இடையிடையே என்றேனும் நான் பாடமும் படித்ததுண்டு.
தமிழ்ப்பாடத்தில், ராமநாதபுரத்தில் உள்ள லட்சுமிபுரத்தில் தாயுமானவர் சமாதி அடைந்தார் என வந்தது. அடுத்த நாள் அதைத் தேடிக் கண்டு பிடித்து என்னையும் அழைத்துச் சென்றார்கள் தாத்தா.
வேப்மரங்கள் சூழ்ந்த சிறு தபோவனம். மயில்களும் முயல்களும் உலவிக் கொண்டிருக்க  உதிர்ந்தும் மணம் பரப்பிக் கொண்டிருந்தன பன்னீர் புஷ்பங்கள். அமைதியான சூழலுக்கு இடையே ஒரே குரலில் பலர் தாயுமானவர் பாடல்களைப் பாடத் துவங்கினர். நாங்களும் சென்று அமர, அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்த சிவம், மோனத்தில் மூழ்கிய தாத்தாவின் மனதுள் பரிபூரணமாய் நிறைந்ததாய்த் தோன்றியது.
தியானம் முடிந்து திரும்பிக் கொண்டிருந்தோம். இருளை விரட்ட முயன்று, இருளைப் பெரிதாக்கிக் காட்டிய விளக்குகள் நிரம்பிய சாலை. ஆங்காங்கே தெருநாய்கள் தங்கள் சக்திக்கு மீறிக் குரைத்துக் கொண்டிருந்தன. தபோவனம் மனதில் நிரப்பிய அதிர்வுகளோடு ஏதும் பேசாமல் நடந்து கொண்டிருந்த தாத்தா, 'இதுபோல ஒரு இடத்தில் என் இறுதி நாட்கள் அமைதியாகக் கழியும் எனில் அது பெரும் பேறு' என்றார்கள். ஏனோ அந்தப் பேச்சு வருத்தத்தை அளிக்கவில்லை, அதுவே நல்ல முடிவாக இருக்கும் என்றே மனம் எண்ணியது. ஆனால் அந்த எண்ணத்துக்கு பயந்து, தாத்தா கரத்தை மேலும் இறுக்கமாகப் பற்றிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்.

சற்குரு - தாத்தா - 27

Fast forward. எனது கல்லூரி நாட்கள். காலம் எந்தக் கரையிலும் நிற்காத நதி. எதையும் விழுங்கிவிட்டு சுவடின்றிக் கடந்து செல்லும். தாத்தா மறைந்து ஆறு வருடங்கள் ஓடி விட்டன. இறுதியாண்டு ப்ராஜெக்ட் புத்தகங்கள் ஆறு பிரதிகள்  சமர்ப்பிக்க வேண்டும். நல்ல அச்சகம் தேடிய போது செக்கானூரணியில் ஒன்று இருப்பதாகவும், செய்யும் வேலை மிகவும் திருத்தமாக இருப்பதாகவும் கேள்விப்பட்டு அங்கு சென்றேன். வள்ளியென பெயர் பார்த்தவுடன் ஒரு மகிழ்ச்சி மனதுள். மாடியில் இருந்தது அச்சகம். மேலே படி ஏறிச்சென்று அச்சக உரிமையாளரிடம், எனது ப்ராஜெக்ட் தொடர்பான குறுந்தகடுகளை ஒப்படைத்துவிட்டு, அதன் வடிவமைப்பு குறித்து சில தகவல்களும் சொல்லி விட்டுக் கிளம்பினேன். அவர் என் முகத்தை அவ்வப்போது பார்த்துக் கொண்டிருந்தார்.அறையெங்கும்  காகித மணம் - ஏதோ ஒரு அரசாங்க அலுவலகத்தில் நிற்பது போலிருந்தது. கட்டணச் சீட்டு எழுதுவதற்கு முகவரி கேட்டார்; கூறினேன். எழுதிக் கொண்டிருந்தவர், நான் 'செல்வ நிலையம்' என்றதும், எழுதுவதை நிறுத்தி விட்டு முகத்தைப் பார்த்தார். 'செல்வ நிலையம் தாத்தாவுக்கு நீங்கள்..' என்று இழுத்தார்.. 'அந்தத் தாத்தாவின் முதல் பேத்தி நான்..' என்று முடிப்பதற்கு முன்னதாகவே முகம் மலர்ந்து விட்டது. கீழேயே இணைந்திருந்த தன் வீட்டை நோக்கி மனைவியைப் பெயர் சொல்லி அழைத்தார்.
'உக்காருங்க, அதான் வந்ததுலருந்து பாத்துட்டே இருந்தேன். தெரிஞ்ச முகமா இருக்கேன்னு. நல்லா இருக்கீங்களா? நானும் colonyதான்.' எங்கள் வீடிருக்கும் தெருவின், அடுத்த தெருவின் பெயர் சொல்லி அவர் வளர்ந்த வீட்டின் அடையாளம் சொன்னார். 'என்னோட life,  இந்தக் கடை எல்லாமே நல்லா அமையக் காரணம் உங்க தாத்தாதான்' என்றார் குரல் நெகிழ. அவர் மனைவியும் மேலே வர  'இவங்க யார் தெரியுதா? நம்ம செல்வநிலையம் தாத்தாவின் பேத்தி, final year projectக்கு வந்திருக்காங்க' என்றார். அவர் மனைவியும் முகம் மலர, 'உட்காருப்பா, காபியாவது சாப்பிட்டுத்தான் போகனும்' என்றார்கள். இருவரும் அகமும் முகமும் மலரத் தங்கள் கதையைக் கூறினார்கள்.
தனது பள்ளி நாட்கள் முதலே, தாத்தா தன்னை அவ்வப்போது கல்வி குறித்து விசாரித்ததும் வழிநடத்தியதும் குறித்துக் கூறினார். 'எனக்கு மட்டும் இல்லப்பா, colonyல நிறைய பேருக்கு நல்ல friend,philosopher and guide தாத்தா; எத்தனை நாள் அந்தத் திண்ணையிலும் வேப்பமர நிழலிலும் பேசியிருக்கோம்' - தாத்தாவோடு பேசிய நாட்களின் வேப்பமரக் காற்றின் குளுமை அவருள்ளும் நிறைந்திருந்து பேச்சில் தவழ்ந்தது.
படிப்பு முடிந்து, தனது காதல் திருமணமும் முடிந்து, அவர்கள் இருவர் குடும்பமும் பாராமுகமாய் இருந்த காலம்; பல நாட்கள் colonyக்குள் அவர் வராமல் இருந்த நாட்களில் ஒரு நாள்.  எங்கோ செல்லும் வழியில் தாத்தா அவரை சந்தித்திருக்கிறார்கள். பின்னர் ஒருநாள் காலை வேளை நடையின் போது, அவர் அப்போது தங்கியிருந்த அறைக்குச் சென்று, பல மணித்துளிகள் பேசியிருக்கிறார்கள். அது குறித்து அகம் பொங்கக் கூறினார்.
பல்கலைக்கழகத்துக்கு எதிரில் ஒரு சிறு வீடு பிடித்து Job typing செய்து கொடுத்துக் கொண்டிருந்த அவரை சந்தித்து 'இந்த வருமானத்தில் எவ்வளவு நாள் குடும்பம் நடத்த இயலும்? இருவருக்குமான எதிர்காலத் திட்டமென்ன? கையில் காசு இல்லையெனில் எவ்வளவு சிறந்த இல்லறமும் கசந்து போகும், ஏற்கனவே எதிர்ப்பைக் காட்டும் உறவுகள் முன் மேலும் தலை குனிய நேரிடும். உன்னிடம் திறமையும், சிறந்த பண்புகளும், உழைக்கும் உறுதியும் இருக்கிறது. அடுத்தபடி என்ன செய்ய முடியும் என்று முன்னால் நோக்கு' என்று பேசியதை நினைவுகூர்ந்தார். கையிருப்பு நிலை குறித்தும் எதிர்காலக் கனவுகள் இருந்தும், அதில் உள்ள மறை இடர்கள் குறித்தும் தான் மனம் கலங்கியதும், அதற்கு உற்சாகமூட்டி, 'தெளிவான தொலைநோக்கும், குறிக்கோளும் இருக்கும்போது தைரியமாய் அடியெடுத்து வை' எனச் சொல்லி, "Success often comes to those who dare and act" என்று தாத்தா கூறியிருக்கிறார்கள். அந்த நாளே, தன் மீது தாத்தா காட்டிய அந்த நம்பிக்கையே தனது வாழ்வில் முக்கியமான திருப்புமுனை என்று அவர் சொல்லும் போது, அந்த நாளுக்கு அவர் சென்று விட்டதை, பளபளத்த அவர்களது இருவர் விழிகளும் சொல்லியது. பல்கலைக்கழகத்துக்கு எதிரே அந்த சிறிய வீட்டுக்கு ஒருமுறை தாத்தா வந்த போது, உடன் ஒரு சின்னப் பெண் வந்தது நினைவிருக்கிறதா என்று சிரிப்போடு கேட்டேன். 'ஓ அந்த பொண்ணுதான் ப்ராஜெக்ட் செய்ய வந்திருக்கா' என்று அவரும் சிரித்தார்.
அந்த சந்திப்பு, நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது ஒரு காலை நேர நடையில் போன இடம். அன்று எனக்கு ஏதும் பெரிதாய் புரியவில்லை. அன்று அந்த அறை வாசலில் நாற்காலியில் காலை இளம் வெயில் சாய்ந்தாடிக்கொண்டிருந்தது. அதனோடு விளையாடிக் கொண்டிருந்தேன். 
தான் செல்லும் பாதையில், செடி கொடிகளை நாற்றுப் படுகையை தலை தடவிச் செல்லும் தென்றல் போல, வாழும் ஒவ்வொரு நாளும் உடன் வரும் மனிதர்களை ஏதோ ஒரு சிறிய விதத்திலேனும் ஊக்குவித்து, பெரிய பெரிய மாற்றங்களுக்கும் வித்திட்டுக் கொண்டே சென்றிருக்கிறார்கள், யாருக்கும் எந்த விளம்பரமும் இன்றி; எந்தக் கைம்மாறும் பாராட்டும் எதிர்பாராது.
அனிச்சையாய் இது போன்ற அறிமுகமில்லா மனிதர்கள், பல சந்திப்புகளில், 'நாகமலை, வீதியின் பெயர், வேப்பமரம் நிற்கும் வீடு' என்றதும் 'தாத்தாவுக்கு நீங்கள் என்ன உறவு?' என்று கேட்கும் கேள்விகளும், அதைத் தொடர்ந்து தாத்தா அவர்கள் வாழ்வில் ஏற்படுத்திய நல்ல தாக்கமும் - ரயில் பயணத்தில், கோவில்களில் என எங்கெங்கோ தாத்தாவின் தரிசனம் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது; இருக்கிறது. இத்தகைய பிரபல்யத்திற்கு தாத்தாவிடம் அன்று இருந்தது உயர்பதவியோ பெருஞ்செல்வமோ ஆள்பலமோ ஏதுமல்ல. ஒரு மனிதன் அமரத்துவம் பெறுவதற்குத் தேவை வேறொன்று. மனிதம் - சகமனிதர்கள் மீது வைக்கும் அக்கறை, நம்பிக்கை, நேசம். அந்த நேசத்தோடு பிணைத்த உறவுகள் காலம் கடந்தும் உறுதியாய் நிரந்தரமாகின்றன.
சொந்த வாழ்வில் தான் வாழ்ந்த தளத்தில் இருந்து, பல அடிகள் கீழ்மையாய் நடந்து கொண்ட பலரையும் பார்க்க நேர்ந்த போதும், சோதனைகள் மீண்டும் மீண்டும் வந்தபோதும், தாத்தா அந்த தருணத்தில் விசனப்பட்டதுண்டு; எனினும் அதிலேயே உழன்றது இல்லை; ஒட்டுமொத்தமாய் மனிதர்கள் மீது கசப்பாக ஒரு வார்த்தையும் சொல்லாத , எதிர்மறைக் கருத்துகளும் உருவாக்கிக் கொள்ளாத eternal optimism தாத்தாவுடையது. 
'செல்வமில்லையென்று என்னை யாரும் கண்டு கொள்வதில்லை, என்னை யாரும் மதிப்பதே இல்லை' என்பதெல்லாம் தன் மீதான சுய மதிப்பு குறையும் போது பிறர்கருத்துக்கு நாம் கொடுக்கும் அளவு கடந்த முக்கியத்துவமே. உலகே நம்மை மதிக்கவில்லையென, நாமே ஒவ்வொன்றின் முதுகிலும் ஏற்றிப் பார்க்கும் தற்குறிப்பேற்றமே. இதுபோல நம் மனதுள் நாம் நிகழ்த்தும் negative conversations, நம்மை பின்னுக்குத் தள்ளி கீழ்மையுள் உழலச் செய்யும் என்பதே தாத்தாவின் அழுத்தமான கருத்து. தன்னைப் பற்றிய தாழ்வு மனப்பான்மையோ, பிறர் குறித்த எதிர்மறைக் கருத்துகளோ, வேடிக்கையாக சொல்வதாகவே இருந்தாலும், அது நமக்குள் விதை ஊன்றி வளரும் தன்மை கொண்ட நச்சு விதை, அதைக் கண்டவுடன் களைந்து விடவேண்டும் என்பதே பலமுறை தாத்தா கூறிய personal கீதை.
உள்ளுக்குள் தன்னை உணர்ந்து உயர்வாய் நின்றிருப்போருக்கு, புற உலகின் அவமதிப்புகளோ சிறுமைகளோ கடந்து செல்லும் பாதையின் முள்ளே; பிடுங்கி எறிந்துவிட்டு முன்னே செல்ல பாதை விரியும் அகலமாய் ராஜபாட்டையாய்;
மனதின் நீளம் எதுவோ அதுவே வாழ்வின் நீளமடா.. அன்பே சிவம் அன்பே சிவம்..


சற்குரு - தாத்தா - 23

மீண்டும் கடந்தகாலத்துள் நிகழ்காலம். (சற்குரு - தாத்தா - 13லிருந்து http://manaodai.blogspot.com/2015/07/13.html தொடரும் ஆறுமுகநேரி)
போர்க்கரையில் கதையை நிறுத்தி விட்டு எங்கு செல்கிறாய் என்போருக்கு - இப்படித்தான் ஆபத்தான இடங்களில் தாத்தா கதையை நிறுத்திவிட, அடுத்த நடை வரை காத்திருக்க வேண்டும். காத்திருத்தலில் ஒரு சுகமுண்டு. இன்றைய உடனடித்துவ உலகில் காத்திருத்தலுக்கான பொறுமை காணாமல்போய்க் கொண்டு இருக்கிறது. ஆனால் காலம் கற்றுக் கொடுக்கும், காத்திருக்கவும், கடந்து செல்லவும்.
மீள்வோம்.மலேயாவின் கதைகள் இவ்விதமாய் ஒவ்வொரு நடையிலும் நீளும். இந்தக் கதைகள் கேட்கக் கேட்க அலுத்ததே கிடையாது. ஒவ்வொரு நாளும் பள்ளி முடிந்ததும் மாலையில் மிகவும் எதிர்நோக்கும் தருணங்களாய் நடை நேரம். தொற்றிக் கொள்ளும் கதையின் சுவாரசியமும் தீவிரமும் பள்ளியில் நண்பர்களிடமும் பகிர என் நட்பு வட்டத்தில் என்றுமே (இன்றுவரை) தாத்தா ஒரு மையப்புள்ளியாகவே இருந்தார்கள், இருக்கிறார்கள். கதை வாயிலாய் மட்டுமன்றி, வீட்டின் அருகிருந்த தோழிகள் தாத்தாவுடனான காலை/மாலை பேச்சுக்களிலும், தியான வேளைகளிலும் உடன் வர ஆரம்பிப்பதுண்டு. வயது பாரபட்சமின்றி மிக இயல்பாகத் தன் உற்சாகமான உரையாடல் மற்றும் அக்கறையோடு கூடிய ஊக்கமூட்டும் பேச்சுகள் வாயிலாக ஒரு வாழ்நாள் உறவையும், நல்லியல் சுவடுகளையும் தாத்தா பதிப்பதை அருகிருந்து காணக் கிடைத்தது. என் தோழியர் அனைவரும் தாத்தாவின் நட்பு வட்டத்துக்குள்ளும் வருவது வழக்கமாயிற்று.
அவ்விதம் ஆறுமுகநேரியிலும் பின்னர் தாராபுரத்திலும், மிகச் சிறந்த தருணங்கள் மலர்ந்து, புதிதாக அரும்பத் தொடங்கியிருந்த நட்பு வட்டங்களை நினைவுகளில் நிரந்தரமாக்கியது. அவர்கள் ஒவ்வொருவரும் இன்று வரை தாத்தா குறித்துப் பேசுவதும் தொடர்கிறது.
அடுத்ததாக  மாலை நேர வானில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் தோன்றும் விண்மீன்களாய் random ஆக அகத்தில் மிளிரும் சில நினைவு நட்சத்திரங்கள்:
ஆறுமுகநேரியிலிருந்து அதிகாலை இருள் பிரியும் முன்னர் நாலரை மணியளவில் எழுந்து கிளம்பி திருச்செந்தூர் வரை சென்ற பாதயாத்திரை.   விடிவெள்ளியும் நட்சத்திரங்களும் மறைவதன் முன் இருள் பிரியா அழகோடு அதிகாலை வானம். பிரம்மமுகூர்த்தம் - தேவர்களுக்கும் உகந்த காலம், கற்கும் கலையை கல்மேல் எழுத்தாய் மாற்ற கலைமகள் அருளும் தருணம். அதிகாலையின் சிறப்பைக் குறித்தும், ozone காலை வேளையில் உடலுக்கு நலம் தருவது குறித்தும், பேசிய காலைநேர நடைபயணம். சில காதம் கடந்ததும், முதற்கதிர் நீட்டும் கதிரவனை கண்கொட்டாது பார்த்து, கண்களை மூடிக் கொண்டு, மூடிய கண்களுக்குள் சுழலும் ஒளித்திகிரியை பார்க்கச் சொல்லும் பயிற்சி. விடுமுறைக்கு வந்திருந்த தங்கை ஜெயஸ்ரீயும் நானும் ஏதேதோ பேசிக் கொண்டே தாத்தாவுடன் பத்து பன்னிரண்டு கிலோமீட்டர் நடந்து திருச்செந்தூர் அடைந்தது, கடலலையில் கால்நனைத்து, செந்திலாண்டவன் பாதம் பணிந்தது, ஓம் என ஓங்காரமிடும் அலை ஒலியை ஆலய வளாகத்தில் ஓரிடத்தில் மதில் சுவர் துவாரத்தில் கேட்டது என அனைத்தும் சுடர்விடுகிறது மனப்பேழையில்.
அடுத்து வருவதும் ஒளியேற்றிய தருணம் குறித்துதான்.
காரைக்குடியில் ஒரு கோடை விடுமுறை - செக்காலையில் வீட்டில் இருந்து தொடங்கி கண்ணதாசன் மணிமண்டபம் வரை ஒரு நாள், இளங்காற்றில் கலகலவென சிரிக்கும் அரசமரங்கள் நிறைந்த குளக்கரை ஆஞ்சநேயர் கோவில் வரை ஒரு நாள், என ஒவ்வொரு தினமும் ஒவ்வொரு திக்கில் விஜயம் தங்கையருடன்.
ஒவ்வொரு நடையின்போது உலகம் புதிதாய் மொட்டவிழ்ந்து கொள்ளும் - வீட்டுத் தோட்டத்திலேயே வேரில் காய்த்துத் தொங்கும் பலா, தெருப் பாய்ச்சலாய் அமையும் வீடுகளில் வாசலில் அமர்ந்திருக்கும் விநாயகர், களவாடி வேறிடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டால் சிறப்பு எனக் கருதி கடத்தப்படும் அபாயத்தால்  கம்பிச் சிறைக்குள் அமர்ந்திருக்கும் பிள்ளையார்கள் என சிறு சிறு கவிதைகள் அறிமுகமான அழகிய நாட்கள்.
அங்கு ஒருநாள் - நடை நேரத்தில் செம்மை வீதியெங்கும் உருகி வழிந்து காணும் இடமெல்லாம் மருதோன்றி இட்டிருந்தது. நடை முடித்து நாங்கள் வீடடையும் வேளை, கதிரொளி கூடடைந்திருந்தது. செம்மை மேல் கருமை படர்ந்து இரவு மேலும் இருள் கொள்ளத் தொடங்கியிருந்தது. மின்சாரம் தடைப்பட்டிருந்தது. அம்மா தன் பெயருக்கிணங்க ஏற்றியிருந்த ஜோதி மட்டும் அறையில் இருந்தது. தாத்தா எங்களை அருகில் அழைத்து பாடல் ஒன்று சொல்லிக் கொடுக்கத் தொடங்கினார்கள். இதைப் பாடுங்கள் மின்சாரம் வரும் ஒளி நிறையும் என்று சொல்லி  'அருட்ஜோதி தெய்வம்  எனை ஆண்டு கொண்ட தெய்வம்'.. பாடத் தொடங்கினார்கள். நாங்கள் அனைவரும் பாட, கூடம் அசையாச்சுடர் விளக்கின் பொன்னொளியில் நிறைந்திருந்தது. பாடல் முடியவும் மின் விளக்குகள் உயிர் பெறவும், அன்று அது ஒரு குழந்தைத்தனமான மகிழ்ச்சியை அளித்தது.
ஆனால் அந்த நாள், அந்த அந்தி வேளை, அந்தப் பாடல், அன்று அங்கிருந்த எங்கள் அனைவர் மனதிலும் நித்தியமாயிற்று. அன்றிலிருந்து இன்றுவரை மின்சாரத் தடை ஏற்படும் ஒவ்வொரு பொழுதுகளிலும் தாத்தாவின் மெல்லிய குரலில் அந்தப் பாடலும் அந்த நாளும் எங்கள் அனைவர் மனதிலும் வந்து ஒளிநிறைக்கும்.


சற்குரு - தாத்தா - 25

நினைவின் அலைகளில் மிதந்து வந்து இன்று கரையேறிய இலை ஒரு தீபாவளித் திருநாள்.
பொதுவாக பண்டிகை தினங்கள் அனைத்துமே சூரியன் வருவதற்கு முன்னரே நிகழ்ந்துவிட்டிருக்கும். குளித்து திருநீர் மணக்க அமர்ந்து, புத்தாடைகளுக்கு சந்தன குங்குமமிட்டு, தாத்தா ஆசி வழங்கும் அதிகாலைகள்.
அப்படி ஒரு தீபாவளி நன்னாள். பேரன் பேத்தியர் பலரும் கூடியிருக்கிறோம் (தேவி, ஜெயஸ்ரீ, ரம்யா, ராஜேஷ்,பாலா மற்றும் நான்) அனைவரையும் அழைத்துக்கொண்டு வெளியே கிளம்பினார்கள் தாத்தா. 'திருமலை நாயக்கர் மஹாலுக்குப் போகலாமா? கோவிலுக்குப் போகலாமா?' எனத் தாத்தா வினவ, அனைவரும் 'கோவிலுக்கு' எனச் சொல்ல (எவ்வளவு நல்ல பிள்ளைகள்!!☺) , படை கிளம்பியது பரங்குன்றை நோக்கி. ஊரெங்கும் வெடி வெடிக்கும் ஒலி; எனக்கோ மனதில் கிலி. வெடி என்றால் இன்றும் கிலிதான் - அதனாலேயே தீபாவளியை விட பொங்கல் திருநாள்தான் பிடிக்கும். வெடிக்கு பயந்து அழுது தாத்தாவிடம் திட்டு வாங்கும் தீபாவளிகள்...
திருப்பரங்குன்றம் அடைந்ததும், 'கோவிலுக்குள் போகலாமா? மலை மேல் ஏறலாமா?' எனத் தாத்தா கேட்க, 'மலை மேல் என்ன இருக்கு தாத்தா?' என்று நாங்கள் வினவ, 'அட, பார்த்ததில்லையா? வாங்க போகலாம்' எனத் தாத்தா கூறினார்கள். அனைவரும் உற்சாகமாய் மலையேறத் தொடங்கினோம். இளையவர்களான பாலாவும் ரம்யாவும் குச்சிமிட்டாய் கையில் வேலென ஏந்தி ஏறினார்கள்.
பாதி வழி வரை வெகு உற்சாகமாய் இருந்தது பயணம். காலத்தில் அழியாத கற்பாறைச் சுவடுகளில் எங்கள் சிறு பாதம் பதித்து, தலைவனைத் தொடரும் சேனையாய் மலையேறிக் கொண்டிருந்தோம். வெயிலேறத் தொடங்கியது. தாத்தா ஓரிடத்தில் இளைப்பாற அமர்ந்தார்கள். நாங்கள் சற்று முன்னால் ஏறிச் சென்று கொண்டிருந்தோம்.
எங்கள் படை வருவதைப் பார்த்து நெடுநாள் பிரிந்த உற்றாரைக் காண வரும் உற்சாகத்தோடு வரவேற்றது ஒரு வானரப் படை. குட்டி முதல் குலமூதாதை வரை பெருங்குடும்பம். அனைவரும் ஒரே நேரத்தில பயத்தில் 'தாத்தா!! தாத்தா!!!' என்று அலறினோம். என்ன நிகழ்ந்ததோ எனப் பதற்றத்துடன் மேலே மிக விரைவாக ஏறி வந்தார்கள் தாத்தா(அப்போதே தாத்தாவுக்கு ஏறக்குறைய 75 வயது, இன்றைய தலைமுறைக்கு 75வயதில் திருப்பரங்குன்ற மலையேற முடியுமா, மலையை விட்டு விடலாம், திருப்பரங்குன்றம் செல்ல பேருந்து ஏற முடியுமா என்பதே சந்தேகம்தான்-அதிலும் சின்னஞ் சிறார்களை கட்டி மேய்த்துக் கொண்டு!!) 
அனைவரையும் அமைதியாக இருக்கச் சொல்லி தாத்தா எங்களை அருகில் அழைத்தார்கள். அதற்குள் குச்சி மிட்டாயை உண்டு முடிக்காத பாலாவைப் பார்த்த ஒரு குட்டிக் குரங்கு அதைப் பறிக்க முயல, குரங்கிடம் தரமுடியாது என பாலா விவகார விவாதம் நடத்த, தாத்தா அதைத் தூக்கி எறியச் சொன்னார்கள். எறிந்துவிட்டு
ஓவென பாலா அழ ஆரம்பிக்க நாங்கள் அனைவரும் மருண்டு தாத்தா பின்னால் ஒதுங்கினோம்.
உருவில் பெரிய வானரத்தலைவர் ஒருவர் தலைமை வகிக்க எதிரில் வந்து சுற்றிவளைத்தது அந்தப் படை. தாத்தா பாறைத் தரையில் அமர்ந்து கொள்ள எதிர்கட்சித் தலைவரும் எதிரில் அமர்ந்தார். 'கிர்ர்' என்றார் எ.க.தலைவர். தாத்தா 'என்ன வேண்டும்?' என்று அவரைப் பார்த்துக் கேட்டார்கள். மேலும் அருகில் வந்து தாத்தாவைச் சுற்றிலும் உற்றுப் பார்த்தார் எ.க.தலைவர்.
தாத்தா தன் சட்டைப்பைக்குள் கையை விட்டு சில்லரைக்காசுகளை எடுத்துக்காட்டி, 'இதுதான் இருக்கிறது, வேண்டுமா?' என்றார்கள். பக்கத்தில் இருந்த மந்தி(ரி)கள் தாத்தா கையை ஆர்வத்துடன் எட்டிப் பார்த்தனர். எ.க.தலைவர் காசைக் கையில் எடுத்து முகர்ந்து பார்த்து திருப்பி வைத்துவிட்டார். அவர்கள் நாட்டில் அந்நியச் செலாவணி செல்லாது போலும். மீண்டும் ஒருமுறை 'கிர்ர்..' என்று கட்டளையிட்டுவிட்டு வெளிநடப்பு செய்தார் தலைவர். 'ஐயா சொல்லிட்டாருன்னு வுடறோம். இல்லன்னா நடக்கறதே வேற..' என்று ஆளாளுக்கு ஒரு பார்வை எங்களைப் பார்த்துவிட்டு நகர்ந்தது குரங்கணி. அத்தனைக்கும் நடுவே மிட்டாய் வழிப்பறிக்கு நீதி கிடைக்காமல் அழுது கொண்டிருந்தார் நம் இளம் நாயகன் பாலா. இன்னொரு மிட்டாய் வாங்கித் தருவதாய் இன்னுமொரு சமாதானப் பேச்சு வார்த்தை நடத்தி மலையிறக்கினார்கள் தாத்தா. இத்தனை கலவரத்திலும் ரம்யா கையில் பத்திரமாய் இருந்தது உறை பிரிக்காத குச்சி மிட்டாய்.
ஒருவழியாய் வீடு வந்து சேர்ந்தால், நல்ல நாளும் திருநாளுமாய், ஆளும் பேரும் வரும் நாளில், பிள்ளைகள் அனைத்தையும் கூட்டிக் கொண்டு காணாமல் போனதற்கு தாத்தாவிற்கு ஒரு சிறப்பு அர்ச்சனை நடந்தது. அப்படியாய் ஒரு தீபாவளி.



சற்குரு - தாத்தா - 28

1942-43: வறண்டிருந்த பாலை நிலத்தில் புது வெள்ளமெனப் பாய்ந்தது சுபாஷ் சந்திர போஸ் எனும் மாகங்கை. அடிமைத் தளையுண்ட அனைத்து இந்தியரையும் அழியாப் பெருநெருப்பெனக் கிளறியது அந்தப் புயற்காற்று. கீழ்மையின் பிடியில் புழுவென உழன்றவர்க்கும் புத்துயிர் கொடுத்த மகாசக்தி. ஜப்பானிய ஆட்சியிலிருந்த கிழக்காசிய நாடுகளெங்கும் பரவி ஏறியது வேள்வித்தீ.. சோம்பிக் கிடந்த நெஞ்சங்களை, இதுவே முடிவென விதிக்குத் தலைநீட்டியிருந்த பலியாடுகளை உயிர்த்தெழுப்பி சுதந்திர தாகத்தை ஏற்படுத்தினார் நேதாஜி.

இது தொடர்பான எனது பதிவுக்கு கீழ்க்காணும் பதிவுகளைப் பார்க்கவும்:
http://manaodai.blogspot.sg/2016/01/blog-post.html?m=1
http://manaodai.blogspot.sg/2016/01/striding-along-forgotten-alley.html


சுபாஷ் படைக்கு நிதி திரட்டி உதவலாம் என்ற சந்தர்ப்பம் நேர்ந்ததும், அனைவருக்கும் தங்கள் பங்கை நாட்டிற்கு செய்யலாம் என்ற உந்துதல் உருவாகியது. மலேயாவில் அவ்விதம் நடந்த நிதி திரட்டும் நிகழ்வில், நாடகம் போடலாமென தாத்தா மற்றும் நண்பர்கள் முடிவெடுத்தனர். நாடகம் மக்களைக் கவர்ந்திழுப்பதாகவும் இருக்க வேண்டும், நேதாஜியின் படைதிரட்டுதலுக்கு உதவியாக ஆள்பலமோ பணபலமோ சேர்ப்பதாகவும் அமைய வேண்டும். என்ன நாடகம் போடலாம் என யோசித்தனர். வாழ்வில் மனிதனுக்கு ஏற்படக் கூடிய ஒவ்வொரு அறச் சிக்கலுக்கும் வினா எழுப்பி விடையும் அளிக்கும் கீதையே பொருத்தமாகப் பட்டது. அதுவரை பாரதம் கண்டிராத போர்க்களத்தில், தர்மத்தைக் காக்கும் பொருட்டு அவரவர் ஆற்ற வேண்டிய கடமையை நினைவூட்டும், கர்மபூமியில் தலைசிறந்த வீரனுக்கும் ஏற்படக்கூடிய ஆயிரம் சஞ்சலங்களுக்கும், அவனது கேள்விகள் வாயிலாய் மானிடத் திரளுக்கே பதில் அளிப்பதாக கண்ணன் கூறிய மொழிகளுமாய் குருக்ஷேத்திரம் நாடகக் களமாய் முடிவு செய்யப்பட்டது.
கீதையின் நாயகனாய் நம் கதையின் நாயகன் - ஆம் தாத்தா கண்ணனாய் வேடமிட்டு மயிற்பீலி குழல் சூடி, மேடையேறினார்கள்.
'தர்மம் அழிந்து அதர்மம் தலைதூக்கும் போது நான் யுகம் தோறும் அவதரிப்பேன்' என்று கண்ணன் உரைக்க, அது கண்ணன் மொழியா மேடையில் அமர்ந்த சுபாஷின் உறுதிமொழியா - என்ற மயக்கில் முழுநிலவு கண்டெழும் கடலலையாய் கூட்டம் ஆர்ப்பரித்தது.
நாடகம் முடிந்ததும் சுபாஷ் மேடையேறினார். இந்தியாவின் நிலை குறித்தும் அதை விடுவிக்க உயிர் ஈந்த எண்ணற்றவர்கள் குறித்தும் பேசினார். 'நீங்கள் உங்கள் ரத்தத்தை எனக்கு அளியுங்கள்; நான் உங்களுக்கு சுதந்திரத்தை தருகிறேன்' என்று வாக்களித்தார். சுதந்திர வேள்வியில் ஒவ்வொருவரும் இயன்ற வகையில் ஈடுபடுவது கடமை என்று உணர்வுகளைத் தட்டி எழுப்பினார். 'உங்கள் ஒவ்வொருவரையும் அன்னை பாரதமாதா நம்பி இருக்கிறாள். அன்னையை மீட்க வாருங்கள்' என்று குரல் கொடுத்தார்.
அன்றெழுந்த உணர்ச்சி வெள்ளத்தில், ஒற்றை மனிதன் ஏற்படுத்திய ரசவாத மாற்றத்தில், மக்கள் மனதில் புரட்சி விதை வேரூன்றியது நன்கு தெரிந்தது, மானுடனுக்குள் உறையும் தேவனின் முகம் தெரிந்தது. அலை அலையாய் முன்வந்து நிதி வழங்கியோர் எத்தனை பேர்! காது கையிலிருந்த அனைத்து நகைகளையும் கழற்றிக் கொடுத்த பெண்கள் எத்தனை பேர்!! வீடு வாசல் என சொத்து முழுவதையும் நேதாஜி இயக்கத்துக்கு எழுதி வைத்த செல்வந்தர்கள் எத்தனை பேர்!! என்னிடம் இருப்பது இந்த உயிரும் உடலும் தான் எனப் படை சேர்ந்தோர் எத்தனை பேர்!! ரத்தத்தால் கையெழுத்திட்டோர் எத்தனை பேர்!! உணர்ச்சிப் புயல் வீசியது.
ஒப்பனை கலைக்கப் போகாது, சுபாஷ் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த தாத்தா கண்ணீர் வடிய மேடையேறினார்கள் கையெழுத்திட.
'நாட்டு விடுதலைக்காக இந்த உடலையும் உயிரையும் அர்ப்பணிப்பேன்' என உறுதிமொழியில் கையெழுத்திட, பார்த்தனுக்கு கீதை சொன்ன பார்த்தசாரதியாய், பரந்தாமனாய் தாத்தா மேடையேற, சுபாஷ் அதைப் பார்த்து விட்டு கிருஷ்ண பரமாத்வே நம் பக்கம் இருக்கும் போது, வெற்றி நமதே என உரக்க முழங்கினார்.
அரங்கம் அதிர்ந்தது!!!
(நேதாஜியை மீட்பராய் இரட்சகராய்ப் பார்த்த அன்றைய மக்கள் மனநிலையை 'Lord Krishna of the moment' எனத் தலைப்பிட்டு பதிவு செய்திருந்தது அன்றைய நாளிதழான Syonan Sinbun - photo attached)


சற்குரு - தாத்தா - 26

மரண வாயிலில் வாழ்வெனும் போது ஒவ்வொரு உயிரும் ஒவ்வொரு விதமாய் உருமாறி உயிர்வாழ்வைத் தொடர்கிறது.
ஒருமுறை இவ்விதமாய் போர்க்காலத்தில் நடந்த நிகழ்வு - குண்டு வீச்சில் வேரோடு பறிக்கப்பட்ட ஒரு மரம் பறந்து சென்று வேறு ஒரு இடத்தில் குழியில் விழுந்தது. சில நாட்களில் அது அங்கேயே வேர் ஊன்றி துளிர்க்கவும் செய்தது. நிலம் பெயர்ந்து வீழ்ந்த இடத்தில் வேறூன்றிய மரம் போல ஒருசிலர் புலம் பெயர்ந்த நிலத்தில் காலூன்றத் தொடங்கினார்கள்.
நீர் அற்ற நிலத்தில் நிற்கும் மரங்கள் கண்ணுக்குப் புலனாகாது பூமிக்கடியில் பல அடிகள் நீர் தேடி வேர்க்கரம் நீட்டுவதும் இயற்கைதானே. இருத்தலின் தேவைதானே உயிர்களை செலுத்துகிறது. பிழைத்து இருத்தலா பிழையாது இருத்தலா பிழைத்தல் என்ற கேள்விக்கு, பிழையாது பிழைத்திருந்து பதிலிறுத்தோர் வெகுசிலரே. அதற்கு தெய்வமென்றோ, பாசமென்றோ, ஒழுக்கமென்றோ, நெறியென்றோ ஆணிவேர் ஆழ இருக்க வேண்டும். பல்லாயிரம் மைல்களுக்கு அப்பாலும் பசுமை தழைக்கச் செய்யும் நீரோட்டம் வேண்டும்.
சுற்றத்திடமிருந்து எந்தத் தகவலுமின்றி தனித்து விடப்பட்ட பலரும் அங்கு துணையைத் தேடி வாழ்வமைத்துக் கொள்ளவும் தலைப்பட்டனர். அந்த உறவுகள் நிரந்தரமா தற்காலிகமா என்பது வாழ்வுக்கும் அதே கேள்வி எழும்பியிருந்த அன்றைய நிலையில் அர்த்தமற்று இருந்திருக்கலாம். 
விதையின் வீர்யம் விதியின் கைகளில் விண்ணவர்களால் இயற்கையால் சோதிக்கப்படும்போது தெரிகிறது. தந்தையிடம் கண்டதும் கற்றதும் அங்கு கைவந்தது தாத்தாவுக்கு. 'உறுதியான உள்ளம் கைவர உடலினை உறுதிசெய். உடல் வில்லென வளைய மனதை அசையாச் சுடரென நிலைநிறுத்து. யாருமற்ற ஏகாந்த வாழ்வு யோக சாதனத்துக்கு ஏற்றது. கசக்கும் தனிமையை தவமாக்கு' - இவ்விதமாய் சுயகட்டளைகள் விதித்துக் கொண்டு, அதிகாலை எழுந்து யோகாசனப் பயிற்சியும் தியானமும் அன்றாட வழக்கமாய் பயின்று உடல் வன்மையும் மனத் திண்மையும் வளர்த்துக் கொள்ள முற்பட்டார்கள். அந்த காலகட்டத்தில் கொண்ட பல நெறிமுறைகள் வாழ்வின் இறுதி வரை கடைப்பிடிக்கும் நித்திய வழிகளாயிற்று. தனது உயிர்பிரியும் வேளையை வகுத்துக் கொண்ட பீஷ்ம பிதாமகர் போல, தனது இறுதி நாட்கள் ஒருநாளும் படுக்கையில் வீழாது போய்விட வேண்டுமென்ற தாத்தாவின் நெஞ்சுரம் அவ்வண்ணமே நிகழ்வதற்கும் இந்த நெறிமுறைகளே பெருமளவு வழிவகுத்தது - அனாயாசேன மரணம்!!
இப்படியாகத் தனது கர்மபூமிக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தவரை விழியறியாக் காலம் கவனித்துக் கொண்டுதானிருந்தது. நமது தீவிரமான தேடலை பிரபஞ்ச சக்திகள் நிறைவேற்ற முனையும் என்பதற்கிணங்க, நாணிழுத்த வில்லென கூரெழுந்த அம்பென தயாராகி வந்தவரை களம் கொண்டு செல்ல காலம் முடிவு செய்தது.


Thursday, February 11, 2016

சற்குரு - தாத்தா - 22

மலைக்காடுகளில் உள்ள ரப்பர் தோட்டங்களில் ஒளிந்து வாழ்ந்தும், இடங்களை அவ்வப்போது மாற்றிக் கொண்டும் உடன் பணிபுரிந்தவர்களோடு தொடர்ந்தது சிலகாலம். கடிதங்களில் மட்டுமே ஸ்பரிசிக்கும் தாயகத் தொடர்பும் அடியோடு நின்று போயிருந்தது. தெளிவும் அறியாது முடிவும் தெரியாது மயங்கிய எதிர்காலத்தை எண்ணிய இருண்ட நாட்கள். இரவில் ஒளிமிக்க விளக்குகள் ஏற்றத் தடை. ஊர்கள் இருக்குமிடம் தெரிந்தால் குண்டுகள் விழலாம் என்ற அச்சம்.
மாலையில் வீட்டுக் கதைகளை நண்பர்களோடு அசைபோட்டபடி தொடங்கும் உரையாடல்கள் பெரும்பாலும் மனம் கனக்க முடியும். இரவு புரண்டு புரண்டு ஒருவழியாய் மனம் களைத்து உறங்கத் தொடங்குகையில், ஊளையிடும் போர்விமான எச்சரிக்கை முழக்கம். இருளிலும் நிழலெனத் தொடரும் மரணவாடை. பதறியடித்து மாடியிலிருந்து படிகளில் தாவி இறங்கி காட்டுப் பகுதியில் இருக்கும் குழிகளில் பதுங்கி விமானம் தலைக்கு சில நூறடிகள் மேலே பறக்க, உயிர் அதற்கும் சில அடிகள் கீழே பதறித் தவிக்க, அபாயம் நீங்கிய அறிவிப்பு ஒலிக்கும். அதுவரை புதர் மறைவில் இருந்து வேறு நச்சரவு அபாயம் வராது என்று யார் உத்தரவாதம் அளிக்க முடியும். மெல்ல மீண்டும் படுக்கைகளுக்குத் திரும்பினால், வெளியேறிச் செல்லாமல் அங்கேயே அமர்ந்திருக்கும் சில வயதானவர்கள் - "எமனோடு ஓடிப் பிடித்து விளையாடத் தெம்பு இல்லை, இங்கேயே பார்த்துக் கொள்ளலாம் என இருந்துவிட்டோம்" என்று விரக்தி சிரிப்போடு சொல்வார்கள்.
அது போன்ற ஒரு மாலை வேளை. இருள்கவியத் தொடங்கியிருந்தது. இருளுக்குள் ஒடுங்கத் தொடங்கியிருந்தனர் அனைவரும். வழக்கம் போன்ற விமானத் தாக்குதல் எச்சரிக்கை ஒலி. இது வாடிக்கையாகிவிட்டது போன்ற வழக்கத்துடன் அனைவரும் பதுங்கினர்.
அதேநேரம் அருகில் அரைகிலோமீட்டர் தொலைவில் ஒரு ரயில் சிறு ரயில்நிலையத்துக்குள் நுழைந்து கொண்டிருந்தது. மலைப்புற கிராமப்புற மக்களுக்கும் நகரத்துக்கும் இருந்த ஒரே தொப்புள்கொடித்தொடர்பு அந்த ரயில். காய்களும் அரிசியும் அன்றாடத் தேவைகளும் மலேயாவின் பிற பகுதிகளில் இருந்து பெரும்பாலும் இந்த ரயில் வழியாகவே வந்து கொண்டிருந்தது. ஏறுவதற்கு ஆயத்தமாயிருந்தவர்களும், நிலைய ஊழியர்களும் எச்சரிக்கை சங்கொலி கேட்டு செய்வதறியாது திகைக்க, காலனை அருகில் உணர்ந்தது போல் பெருமூச்சு விட்டது ரயில். அடுத்த விநாடி அங்கிருந்த ஏறக்குறைய 200-300 பேர் உயிர் குடித்தது மழையெனப் பொழிந்த குண்டுகள். காது செவிடாகிய உணர்வோடு பதைப்போடு குழியைவிட்டு தாத்தாவும் நண்பர்களும் வெளியேறினர். சிலவிநாடி முன் மக்கள்திரளோடு இயங்கிக் கொண்டிருந்த ரயில் நிலையம் நிணமும் சதையுமாய் பற்றி எரிந்து கருகும் நெடியோடு புகையும் பெரு ஓலமுமாய் சரிந்திருந்தது. பதறித் துடித்து ஓடினர். அங்கு கண்ட காட்சி போரின் கொடிய கோர அழிவு முகத்தை மீண்டும் காட்டியது. பலநாள் உணவுண்ணவும் முடியாமல் மனம் அதிர்ந்து போயினர்.
எத்தனையோ போர் செய்திகளும் ஜப்பானியர் முகாம்களில் நடக்கும் கொடுமைகளும் தினம்தோறும் வாடிக்கை செய்தியாகிவிட்ட போதிலும், தலைக்கு மிக அருகில் தொங்கும் கத்தியென மரணத்தை உணர்த்திய, அரைகிலோமீட்டர் தொலைவில் நடந்த இப்பேரழிவு வெகுவாய் அனைவரையும் பாதித்துவிட்டது. இந்த துரதிர்ஷ்டவசமான ரயிலில்தான், நான் முன்னர் குறிப்பிட்ட, எனது தூத்துக்குடி பள்ளியின் ஆறாம் வகுப்புத் தமிழாசிரியையின் தந்தை அன்று அந்த விநாடி இருந்தார், இல்லாது போனார்.


Wednesday, February 10, 2016

இலையுதிர மனமதிர..

ஏதோ நினைவுகளில்
மரத்தின் பெருமூச்சு
சருகாய் உதிர்கிறது
கண்ணீரோடு எழுந்து சென்ற
யாரோ ஒருவனுக்கு
ஆறுதல் சொல்ல
முகவரி சுமந்த முதிர்இலைகள்
மெல்லப் புரள்கின்றன
அவன் காலடித் தடம்தேடி..
துரத்திப் பிடிப்பவை என்றுமே
தொலைந்த இடம்தாண்டி
வெகுதொலைவு சென்றிருக்கும்
அடுத்த கவலைக்கு அவசரமாய் அவன்நடக்க
மிதித்த காலடியில்
நொறுங்குகிறது சருகு
இன்னொரு பெருமூச்சை
உதிர்க்கிறது மரம்

கனவுகள் சுவடுகள்

கண்ணெரியக் கனன்றெரியும்
வெந்நீர் அடுப்பு விறகுப் புகை..
கிணற்றுறையில் கூடுகட்டி
தவறி விழும் சிறுகுருவி..
பிசின் வடியும் பட்டை
தூரில்துளிர் சிறு வேம்பு..
வால் தூக்கி அணில் துரத்த
தாவும் ஒரு காகம்..
துணி துவைக்கும் கல்லில்
காக்கை அணில் சமபந்தி..
மஞ்சள் உரசிப் பச்சையான
கல்லிடுக்கு ரசவாதம்..
நிலவொளியை வடிகட்டி
இளநீராக்கும் தென்னை..
நிலவுதிர் கால இரவுகளில்
இறைந்து கிடக்கும் வேப்பம்பூ..
கனவுகள் தொட்டெடுக்கும்
நடைபயின்ற நாட்களின்
நாற்றங்கால் பதியங்கள்..
நேற்று'கள்' நிறைந்திட்ட
இன்றைய கனவுகளில்
இன்றுக்கு இடமில்லை..
நாளைவரும் கனவுகளில்
அசைபோட இசைகூட
இன்றெவையோ கருப்பொருட்கள்..