Tuesday, December 29, 2015

சற்குரு - தாத்தா - 20

கார் பாலத்தைக் கடந்தது. சில நொடிகளில் வெடிகுண்டு தலை மேல் விழுந்தது போன்ற சத்தம். நெஞ்சம் காதில் படபடக்க நடந்தது என்ன என்று திரும்பிப் பார்த்தால் கடந்து வந்த பாலம் வெடித்துத் தகர்ந்திருந்தது.  மயிரிழையில் உயிர் பிழைத்த பதைபதைப்புடன்  புயல் வேகம் எடுத்தனர். அதே சமயம் அந்த ஆற்றின் ஆறு பாலங்களும் தகர்க்கப்பட்டிருந்தன. சில நிமிடங்கள் பின்தங்கியிருந்தால் வீடு சேர முடியாமல் அக்கரையிலும் சில நொடிகள் பின்தங்கியிருந்தால் உயிர் பிழைக்க முடியாமலும் ஸ்லிம் ஆற்றின் கரையில் இக்கதை முடிந்திருக்கக் கூடும். 

பினாங் நெருங்கிக் கொண்டிருந்தது. பேசிக் கொள்ளவும் முடியாத கலவரத்தில் இருவரும். அப்போது சாலையோரத்தில் ஒரு சக்கரம் அதிவேகமாய் காருக்கு முன்னால் ஓடுவதைப் பார்த்து வியந்.. சரேல் என  சறுக்கி கார் பக்கத்தில் இறங்கி   பாதியில் நின்ற வியப்பை உறுதிப்படுத்தியது - ஆம் அது அவர்களது காரின் சக்கரம்தான். 
விதியையும் வெல்லக்கூடும் வெல்வதாக விதியிருந்தால் - அப்படி பிழைப்பதாய் விதியிருக்கவே அந்நிய நாட்டு வீதியில் விதி முடியாமல் பினாங் சென்று சேர்ந்தனர்.

அதன் பிறகு தொடங்கியது ஓர் இருண்ட காலம். போரின் பேரிரைச்சலில் அனைவரும் மருண்ட காலம். வெள்ளையர் பினாங்கை விட்டு வெளியேறியது அறியாமல் பினாங்கை தாக்கத் துவங்கியது ஜப்பான். அடுத்த நாள் காலை, துறைமுக வணிக நகரமான பினாங்கின் பரபரப்பான காலை நேரம். பொதுமக்களுக்கு எந்தத் தகவலும் இல்லை. வழக்கம் போல் மொத்த வியாபாரத்திற்கு கூட்டம் நெரித்துக் கொண்டிருந்தது செட்டியார் வீதிகளிலும் அருகிலிருந்த சைனாடவுன் பகுதிகளிலும். (இன்றைய சிங்கப்பூரின் லிட்டில் இந்தியா, சைனா டவுன் போன்றே பினாங்கிலும் இவ்விரு மக்களும் வாழும் இடங்கள் அந்தந்த நாட்டின் அடையாளங்களோடு பினாங்கில் இருந்திருக்கின்றன, இருக்கின்றன.) காற்று வினோதமான பறவை ஒன்றைப் போல் ஒலிக்க, போர் விமானங்கள் வியூகம் அமைத்து வானில் வருவதைப் பார்க்க அனைவரும் வியப்போடு வானத்தைப் பார்த்திருக்கிறார்கள். காதை தீய்ப்பது போன்ற ஒலியுடன் மழை பொழியத் தொடங்கியது - குண்டு மழை. Carpet bombing (படம் இணைக்கபட்டுள்ளது) என்றழைக்கப்படும் தொடர் குண்டுகள் மக்கள் நடமாட்டம் மிகுந்த சைனாடவுன் பகுதிக்கருகே விழுந்தன.  ரத்தக் களறியாய் சதைப் பிண்டங்களாய் மக்களை  விசிறியடித்துவிட்டு வந்த வேகத்தில் பறந்து சென்றன விமானங்கள்.


வெடிகுண்டு வானில் இருந்து விழும் சத்தம் கேட்டால் அருகில் எங்கோ விழுகிறது; சத்தம் கேட்காவிட்டால் நம் தலைமேல் விழுகிறது - அதை சொல்லவும் உயிரோடு இருக்க மாட்டோம் என்பதெல்லாம் அப்போது உணர்ந்த பாடங்கள்.

ஆட்சி செய்வது ராமனோ ராவணனோ நாம் நம் வயிற்றை கவனிப்போம் என்றிருந்த, உலக அரசியலின் போக்கை சிறிதும் உணரமுடியாது இருந்த சராரசரி மக்களின் தலையில் வீழ்ந்தது பேரிடி. எங்கோ செய்தித்தாள் நிகழ்வாய் இருந்த போர், அயல்நாடுகளில் நடந்த போர், அண்டை வீட்டானாய் நிகழ்ந்த போர் அவர்கள் வீட்டுக்குள் குடியேறி வீட்டையும் தகர்த்து அனைவரையும் வெளியில் இழுத்துப் போட்டு கோரமாய் சிரித்தது.

முந்தைய பதிவு (19)


அடுத்த பதிவு (21)

Thursday, December 10, 2015

பாரதி போற்றுதும்



அதிசயம் பாரதிசயம்* பார்!!  பாரதிர** வரும் முரசவன்பா
மறந்தனள் தன்னிடம் பூவினிலேயென அமர்ந்தனள் பாரதி*** நாவினிலே
பொழிந்தனன் பாரதி கவிமழையை அடிமைத்தனமும் கீழ்நிலையும்
விதியெனநம்பாரதிவிரைவாய்**** மதியொடு களம்புகத்தான் துணிந்தார்
இயற்றினன் காவியக் காதல்பா ரதிமதனும்தான்***** மயங்கிடுவார்
போற்றினான் கண்ணனை பலஉருவாய்; ஏற்றினான் பெண்மையை விழித்தெழவே;
தூற்றினான் பொய்மையை அழிந்தொழிய; மாற்றினான் மடமையை சிறுமதியை;
ஆற்றினான் பெருந்தொண்டு மாந்தர்க்கு; போற்றுவோம் நாம்பெற்ற பாரதியை

*அதிசயம் பார்+அதிசயம் பார்
** பார்+அதிர வரும முரசு அவன் பா
***பாரதி - கலைமகள், சரஸ்வதி
**** விதியென நம்பார்+அதிவிரைவாய்
***** காதல்பா+ரதிமதனும் தான் 

Tuesday, December 8, 2015

சற்குரு - தாத்தா - 19


இன்றைக்கு சரியாய் 74 வருடங்களுக்கு முன்னர் டிசம்பர் 8 நள்ளிரவில், Pearl harbour தாக்குதலுக்கு ஒரு மணி நேரம் முன்னர் மலேயாவின் மேற்கு கரையில் கால்பதித்திருந்தது ஜப்பானியப் படை. மிக சில மணித்துளிகள் போருக்குப் பின் அவ்விடத்தைக் கைப்பற்றியது ஜப்பான். அங்கிருந்த பிரிட்டிஷ் படை, ஜப்பானியப் படையின் உண்மையான நிலையைவிட அதிகம் முன்னேறி விட்டதாய்  கிடைத்த தவறான உளவு செய்தியின் அடிப்படையில், தங்கள்  Lt. Col. Hendricks என்ற கமாண்டரைக் கொன்றுவிட்டு முழு செயல்பாட்டில் இருந்த விமான தளத்தையும், ஆயுதங்கள், எரிபொருட்கள் அனைத்தையும் விட்டுவிட்டு வெளியேறி இருந்தது. அடுத்த சில தினங்களில் ஆங்கிலேயப் படையின் கவனம் முழுதும் pearl harbour பக்கம் திரும்பியிருக்க 11 டிசம்பர் பினாங்கில் வெள்ளோட்டம் பார்த்தது ஜப்பானியப் படை. விமானப் படை ஜப்பானியரின் பலமாய் இருந்தது. ஜப்பானியரை எதிர்க்கப் போதிய படையும் ஆயுதங்களும் இன்றி, பினாங்கை நிராதராவாய் எதிரிகள் தாக்குதலுக்கு விட்டுவிட்டு பொதுமக்களுக்கு எந்த அறிவிப்புமின்றி வெளியேறியது பிரிட்டிஷ் படை. 

உண்மையில் ஆங்கிலேயப் படையினரின் அளவைக் குறைவாய் மதிப்பிட்டிருந்தது ஜப்பானியப் படை. எனில் அதன் ஜெனரல் யமஷிட்டோ பின்னாளில் தெரிவித்தது போல் அந்த அறியாமையே அவர்களது பலமாயிருந்தது அப்போது. அதே போல ஜப்பானியர் படை பலத்தை அதிகமாய் நினைத்த அறியாமையே ஆங்கிலேயரின் பலவீனமாய் இருந்தது.

இவை இன்று சரித்திரமாய் காலவரிசைப்படுத்தி படிக்க முடிகிறது. அன்று சரித்திரம் நிகழ்ந்து கொண்டிருந்த போது எத்தகவலும் தெரியாமல், கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டாற் போன்ற நிலைதான்.

மீண்டும் பினாங் நெடுஞ்சாலைக்கு வருவோம்:

என்ன நிகழ்கிறது என விளங்காது எதிர் வரும் படைகளைப் பார்த்து திகைத்த வண்ணம் இருவரும் விரைந்து கொண்டிருந்தனர். ஜப்பானியர் படை ஊடுருவி விட்டதோ எனப் பார்த்தால், எதிரே சென்றது அனைத்தும் union jack கொடி சுமந்த வெள்ளையர் படை. 'என்ன நடக்கிறது இங்கே!!
எங்கே செல்கிறது இப்படை!!' வியப்பு, பயம், ஆர்வம் மேலிட நம்மவர்களின் நான்கு விழிகள். 

'யார் இந்த இரு இளைஞர்கள்? சாவை எதிர்நோக்கி பினாங் நோக்கி ஆர்வமாய் விரையும் இவர்கள் யார்? நம் படை செல்வதைக் கண்டும் ஒற்றையாய் தனித்து செல்பவர்கள்!!' அதே வியப்பு பல நூறு கண்களில் படையினர் தரப்பில்..

ஆபத்தின் வாடை கலந்திருந்தது காற்றில்.

வழியில் ஒரு நதியைக் கடக்க வேண்டும்.  இந்த ஆற்றைக் கடந்துதான் கோலாலம்பூர் இருந்த மலேயாவின் தெற்குப் பகுதியிலிருந்து பினாங் மாகாணம்  நுழைய முடியும். சில மைல் தொலைவுகளில் ஆறு இடங்களில்  பாலங்கள் இருந்தன.  இவற்றில் ஏதேனும் ஒன்றில் கடக்க வேண்டும் பினாங் சென்றடைய. அவற்றில் ஒன்றை நோக்கி விரைந்து கொண்டிருந்தது கார். 

அப்பாலங்களைக் கடந்து கோலாலம்பூர் நோக்கி பிரிட்டிஷ் படை முழுவதும் கடந்ததும், ஜப்பானியர் படை பின்தொடர்வதைத் தடுப்பதற்கும் காலதாமதப் படுததுவதற்கும் ஆறு பாலங்களையும் வெடிகுண்டு போட்டு தகர்க்க முடிவு செய்து கடந்து கொண்டிருந்தது பிரிட்டிஷ் படை.

கடைசிப் படைவாகனமும் கடந்து முடிக்கவும் தாத்தாவின் கார் பாலத்தில் நுழையவும் மிகச் சரியாக இருந்தது. நிமிடங்களின் பிடியில் ஊசலாடிக் கொண்டிருந்தது உயிர் - இதை அறியாமல் பாலத்தில் நுழைந்தது கார். 

முந்தைய பதிவு (18)


அடுத்த பதிவு (20)

Monday, November 30, 2015

சற்குரு - தாத்தா - 18

உயிருக்கு உத்தரவாதமில்லை என்று ஊதிற்று அபாய சங்கு. பணத்தை சரிபார்த்துக் கொண்டிருந்த தாத்தாவும் நண்பரும், வங்கியில் இருந்த அனைவருடன் பதட்டமாய் வெளியேறினர். ஓங்கி அலறிக் கொண்டே இருந்தது சங்கு. தன் உயிரைக் காக்க உடல் பதறி ஓடும் போதும் உள்ளம் பதறுவது உயிரினும் மேலான உறவுகளைக் காணாது போய்விடுவோமோ என்றுதானே. தாத்தா அவசரமாய் இறங்கும்போது கவனம் தவறியதில் படிக்கட்டுகளில் தடுமாறி அத்தனை படிகளிலும் சறுக்கி தரைசேர்ந்து, பாய்ந்து கண்ணுக்குத் தெரிந்த முதல் குழியில் இறங்கிய போது இதயம் காதுகளில் படபடத்தது. மற்ற நேரமாயிருப்பின் படியில் விழுந்த வலி தெரியும். மரணம் கண் முன் ஒத்திகை காட்டும் போது உடல் நினைவில் இருப்பதில்லை.

தலைக்கு மேல் சீழ்கையடித்து பறந்தன சில விமானங்கள். யுகமெனக் கழிந்த சில நிமிடங்களுக்குப் பிறகு, அபாயம் நீங்கியதென மணி ஒலித்தது. போரின் தீவிரம் நிதர்சனமாய் உணர முடிந்தது. 

பாம்பின் வாய் பிழைத்து பாழ்நரகில் சிக்கியது போல, ஆங்கிலேயர் பிடியில் இருந்த மலேயாவை முற்றுகையிடத் தொடங்கியிருந்தது ஜப்பான். 'ஆசியா ஆசியர்களுக்கே' என்ற முழக்கத்துடன் தொடங்கிய இந்த முற்றுகை மேலும் கொடுமைகளையே விளைவிக்கப் போகிறது என யாருக்கும் தெரியவில்லை அப்போது..

அவசரமாய் காரில் ஏறிப் பறக்கத் தொடங்கினர் இருவரும் பினாங் நோக்கி. ஆறு மணி நேரத்துக்கும் மேலான பயணம் செல்ல வேண்டும் பினாங் சென்று சேர்வதற்கு. போர் தொடங்கிவிட்ட சூழலில் நெடுஞ்சாலையில் வேறு வாகனங்கள் ஏதுமில்லை. அடர்ந்த மழைக்காடுகள் நிறைந்த பாதையில் பறந்தது கார்.

எதிர்திசையிலிருந்து வந்தது ஒரு போர் வாகனம். ஒன்று இரண்டாக, இரண்டு நான்காக, நான்கு நாற்பதாக, சாரி சாரியாக எதிர்த்திசையில் வரத்தொடங்கின இராணுவ வாகனங்கள். கண்ணுக்கு எட்டிய வரை முன்னும் பின்னும் வாகனங்கள் இல்லை தாத்தாவின் கார் பயணித்த திசையில், பினாங்கை நோக்கி...

முந்தைய பதிவு (17)


அடுத்த பதிவு (19)

Tuesday, October 27, 2015

சற்குரு - தாத்தா - 17

சற்குரு - தாத்தா - 17

இரண்டாம் உலகப் போர் முழுத்தீவிரமடைந்தது.

1941 - 1946 இந்தக் காலகட்டத்தை மூன்று தளங்களில் பார்க்கவேண்டியிருக்கிறது.

1. உலகமெங்கும் பரவிக்கொண்டிருந்த, உயிருக்கு உத்தரவாதமற்ற போர்ச்சூழல், அதில் பதைபதைப்புடன் வாழ்வு, இதற்கிடையே மகாத்மா காந்தி, நேதாஜி போன்ற தலைவர்களின் தலைமையில் விடுதலை வேட்கை கொண்டு சுகவாழ்வைத் துறந்து விடுதலைப் போராட்டக் களமிறங்கிய ஆயிரமாயிரம் இளைஞர் கூட்டம் என்ற உலகளாவிய சமூகச் சூழல்.

2. உற்றார் உறவினரைப் பிரிந்து, இறப்புக்கும் இருப்புக்கும் இடையில் இடையறாது தவித்து, இருள் கவிந்திருக்கும் நிகழ்காலம் எதிர்காலத்தையும் விழுங்கிவிடுமோ? உயிர் தப்பி ஊர்சேர வழிவகை ஏதும் உண்டா? பிழைத்திருக்கும் நாள்வரை பிழையாதிருப்பேனா? என வினாக்களே வினாடிகளாக தவித்திருந்த புலம்பெயர் மனிதர்களின் வாழ்வு.

3. பெற்ற தாய் தந்தையும், உடன்பிறந்தாரும், கட்டிய மனைவியும், பெற்ற மக்களும் ஒவ்வொரு நாள் விடியலிலும் 'இன்று ஏதேனும் சேதி வாராதா நலமாயிருக்கிறார் என்று, இன்ன தேதியில் வருகிறேன் என்று' என எதிர்பார்த்து, மேற்கே கதிரவனோடு எதிர்பார்ப்பும் மறைய, நாட்களை நரகமெனக் கழித்த உறவுகளின் நிலை.

அனைத்தையும் சுமந்து கொண்டு புவி நித்தம் தன் பயணம் மேற்கொண்டுதானிருந்தது விடியலை நோக்கி..

1941-மலேயா அதிதீவிரமான போர்த்தாக்குதலுக்கு உள்ளாயிற்று. அதுவரை ஆங்கிலேயர் வசமிருந்த மலேயா மீது ஜப்பானியர் வான்வழித்தாக்குதல் தொடங்கினர்.

மலேயாவின் போர் வரலாற்றில் முக்கியமான தினங்கள் - டிசம்பர் 1941. ஜப்பானியப் படை மலேயாவைக் கைப்பற்றத் தொடங்கியது. கிழக்கு கடற்கரையில் கோட்டாபாருவில்(kota bahru) தொடங்கிய ஜப்பானியர் ஊடுருவல் 11-டிசம்பர் பினாங்கைத் தொட முயற்சித்தது.

நித்தமும் அநித்தியமாகிக் கொண்டிருந்த சூழலிலும் வேலை தொடர்ந்து கொண்டுதான் இருந்தது. அன்றாடங்களில் புதிதாய் சேர்ந்திருந்த வாடிக்கை - மரணத்தை எண்ணி பதைத்தவாறு பதுங்கு குழிகளில் உயிரைத் தஞ்சமடைவது.

அந்த டிசம்பர் 1941-ல் 25வயது நிரம்பிய தாத்தாவும்(தாத்தா என்ற சொல் ஏற்படுத்தும் வயதான அகத்தோற்றத்தை மாற்றிக் கொள்ளவே வயது குறிப்பிடுகிறேன் - 25 வயதே ஆன அய்யாத்துரை) அவரது நண்பரும் பினாங்கிலிருந்து கோலாலம்பூர் சார்ட்டர்ட் வங்கி சென்றிருந்தார்கள். கடைப்பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்துவதற்கு வங்கியில் நின்று கொண்டிருந்தார்கள். அபாய சங்கு ஊதிற்று.



முந்தைய பதிவு (16)

அடுத்த பதிவு (18)

Monday, October 5, 2015

ஏகாந்தம் ஏதுக்கடி


தன்னை சுமப்பதே கசக்கும் தனிமை - சிறியது;
தனைத்தான்அறியத் தளம்தந்து தன்னை மறக்கச் செய்யும்
ஏகாந்தம் - மிகப் பெரியது.

வெற்றிடத்தில் நாம் மட்டும் தனித்துக் கிடப்பதாய் சொல்லும் தனிமை. எல்லைகளற்று நாம் விரிந்து கிடப்பதாய் சொல்லும் ஏகாந்தம்.

நம்மை உண்டு, மனதை வதைத்து, நல்லியல்புகளை, நம்பிக்கைகளை, கரையான் போல மெல்ல அரிக்கும் தனிமை. அன்றாட அழுத்தங்களைக் கரைத்து நேர்மறை எண்ணங்களில், ஈடுபாடுகளில், சுயத்தை மறக்கும் ஏகாந்தம்.

குரல் இழந்த குருட்டுப் பறவை தனிமை. விட்டு விடுதலையாகி நிற்கும் மோனம் ஏகாந்தம். இருப்பினும் ஏகாந்த வரம் வாங்க தனிமையில்தான் தவம் வேண்டும்.
வரங்களே சாபங்கள் ஆகும் என்றால் இங்கே தவங்கள் எதற்காக என்றொரு கவிதை வரி உண்டு. ஏகாந்தம் இனிது -  துய்க்கத் தெரிந்து விட்டால்; தனிமையில் மனம் தன்னோடு சிநேகமாய் இருக்கத் தெரிந்துவிட்டால். இல்லையெனில் தனிமை பெரும் சாபம்.

'Go cashless' இந்த விளம்பர வாசகம் ஒவ்வொரு முறையும் முகத்தில் புன்னகை பூக்கச் செய்யும்.
Cashless state - positiveஆ negativeஆ? பணம் இல்லாதவனின் நிலை பொருளாதார வறுமை. பணத்தைப் பையில் சுமப்பதே ஒரு சுமையாகும் காலம் பொருளாதார செழுமை. செரிமானம் தாண்டிய செழுமை. மாதந்தோறும் கடன் வாங்க நேரிடும் மக்களுக்கு - மரக்கோடரி தொலைத்த விறகுவெட்டிக்குத் தங்க கோடாரி தந்து ஆசைகாட்டும் தேவதை போல - இரு முனைகளை இணைக்க முயலும் நடுத்தர வர்க்கத்திற்கு இரண்டு லட்சம் வரை கடன் தந்து ஆசை காட்டும் credit cardஜக் குறித்து சொல்லவில்லை. 'You need not carry cash' - என்ற marketing வாசகத்தைக் குறித்து சொல்கிறேன்.

அதேபோல ஆன்மாவின் வறுமை தனிமை. அதன் செழுமையே ஏகாந்தம். You can go 'I'less in solitude.

தனிமையிலிருந்து ஏகாந்தம் நோக்கிய பயணம் மேற்கொள்ள நம்  மனமென்னும் இருட்டறையை அன்பின் வெளிச்சத்திற்கும், அறிதலின் காற்றோட்டத்திற்கும் திறந்து வைக்க வேண்டும். அறிதல், கற்றல் - மனதை தூசு தட்டும். அறிதல் எதுவாயினும் இருக்கலாம். அறிவும் அதனால் வரும் சுகமும் போதை. நம் ஆர்வத்தைப் பொறுத்து கற்றலின் களம் இசையாகவோ இறையாகவோ ஏன் சுயமாகவோ கூட இருக்கலாம். கற்றலும் மறந்து, கற்றதோடு நாம் கரைய ஏகாந்தம் மட்டும் நின்றிருக்கும். 

இனிதாகும் எதுவும் எளிதல்ல - எனினும் கைவர அரிதுமல்ல.

"இனிது இனிது ஏகாந்தம் இனிது;
அதனினும் இனிது ஆதியைத் தொழுதல்;
அதனினும் இனிது அறிவினர்ச் சேருதல்;
அதனினும் இனிது அறிவுள்ளாரைக்
கனவினும் நனவினும் காண்பது தானே" - ஔவையார்

Saturday, September 26, 2015

சற்குரு - தாத்தா - 16

சற்குரு - தாத்தா - 16

பிஞ்சு விரல் பதித்த கடிதம்கண்டு, அடக்கி வைத்திருந்த நேசம் வெடித்துக் கிளம்ப, 'இன்னைக்கு கப்பல் ஒன்று கிளம்புது சென்னைக்கு, இன்னைக்கே கிளம்புறேன்' என்று தாத்தா செட்டியாரிடம் அனுமதி கேட்க, 'நிலவரம் சரியில்லை.. யுத்தம் ஆரம்பிச்சுடுச்சு. இந்த சூழ்நிலைல கப்பல் போக்குவரத்து பாதுகாப்பானதல்ல' என்று அவர் மறுத்துவிட்டார். துக்கம், கோபம், ஆதங்கம், ஏக்கம் மாற்றி மாற்றி பந்தாட, உணர்ச்சிக் கொந்தளிப்பில் கண்ணுறக்கம் தொலைந்த இரவு. 'செட்டியார் ஒத்துக்கொண்டிருந்தால் இந்நேரம் கப்பல் ஏறியிருக்கலாம், இந்நேரம் தாய்மண் நோக்கி பயணம் தொடங்கியிருக்கலாம். பத்துநாட்களில் பெற்ற இளம் மகவு முகம் பார்த்திருக்கலாம். " - அனைத்தையும் கெடுத்து விட்ட முதலாளி மேல் அளவு கடந்த கோபம். உடன் பணிபுரிந்த தோழர்கள் சமாதானப் படுத்தினார்கள்- 'அடுத்த கப்பல்ல போயிடலாம் அண்ணே, கலங்காதீங்க'  என்று. 'ஆமாம்..இது என்ன வாழ்வு, அடுத்த கப்பலில் ஏறிவிட வேண்டும், யார் தடுத்தாலும் சரி..' புயலில் கடையுண்ட கடலாய் மனது. அழுதழுது கண்களில் சிவப்பேற விடிந்தது காலை.

மதிய வேளையில் வந்ததோர் சேதி. தாத்தா பயணம் செய்வதாயிருந்த கப்பல் மீது நடுக்கடலில் குண்டுவீச்சு. கப்பல் மூழ்கி பயணம் செய்த அனைவரும் மரணம். செய்தி கேட்டு வெகுநேரம் உடலும் உள்ளமும் நடுங்கிக் கொண்டிருந்தது. வெற்று செய்தியாய் காதில் விழுந்துகொண்டிருந்த யுத்தம், அண்டை வீட்டான் போல் அருகில் வந்துவிட்டது என்பதை உணர்ந்தனர் அனைவரும். தெரிந்தவர்கள் சிலரும் பயணப்பட்டிருந்தனர் அந்தக் கப்பலில். அந்த துக்கமும், தான் உயிர் பிழைத்து இன்னும் இருப்பதன் சத்தியமும் நெஞ்சம் உணர, பயணத்தைத் தடுத்தவன் தகப்பனாய்த் தெரிந்தான்.

இடையூறென்பது எப்போதும் கெடுதல் அல்ல - நமக்கு விளங்காத பெரிய ஆடுகளத்தில் நமை பேரிடரிலிருந்து காப்பதற்கும் தடங்கல்கள் நேரிடலாம், என்பதற்கு தாத்தா இதை அடிக்கடி உதாரணமாக சொல்வார்கள்.

அத்தோடு கப்பல் தொடர்பும் நின்று போனது.

முந்தைய பதிவு (15)

அடுத்த பதிவு (17)


Thursday, September 3, 2015

திக் விஜயம்

எமிரேட்ஸ் உபயத்தில் சும்மா கிடைத்தது என்பதால் சுமார் 10000km அதிகமாய் பயணித்து உலகை முக்காற் பிரதட்சணம் செய்திருக்கிறேன் SFO எனும் San Franciscoவுக்கு.

சந்திரபாபு ஒரு பாட்டில் "இலங்கை நகரத்திலே இன்பவல்லி நீயிருந்தால்
இந்துமகா சமுத்திரத்தை
இங்கிருந்தே தாண்டிடுவேன்" என்று நாற்காலியிலிருந்து ஒரே தாண்டு தாண்டுவார். அதுபோல சிங்கப்பூரிலிருந்து நேரே ஜப்பான் தொட்டுத் தாண்டவேண்டிய பசிபிக் மகாசமுத்திரம் - அக்கரையில் அக்கறையான தம்பிவீடு. உலகை பிரதட்சணம் பண்ணி 36மணி நேரம் தாண்டி SFO வீடு தொட தலை கிறுகிறுத்தது நேரம்காலம் புரியாமல். முக்கால் சுற்றுக்கே சுற்றுதே தலை- உலகையே முழுதாய் சுற்றிவிட்டு வீட்டுக்கு வந்தால், பழத்தை அண்ணனுக்கு கொடுத்த குடும்பத்தார் மீது மயிலோனுக்கு வந்த கோபம் நன்கு புரிகிறது. 

நேற்றைய என்னுடைய ஒரு மதியப்பொழுது சிங்கப்பூர்/இந்தியாவின் ஒரு முழு நாளும், அமெரிக்காவின் ஒரு முழு இரவும் ஆகும்.  பூகோளம்(Geography) மீட்டிக் கொண்டே பூலோகம் முக்காற்பங்கு கடக்க
பிரம்மனின் ஒரு பகல் ஆயிரம் யுகம்
என்பது புரிவது போல இருந்தது.
பூமியின் சுழற்சிக்கு எதிர்திக்கில் பயணிக்க நேரம் உறைந்து போய்விட்டது போலும். இந்த செப்டம்பர் 2ஆம் தேதி 36 மணி நேரங்களால் ஆனது; 20+ மணி நேரமாய் பகல், அதிலும் துபாயிலிருந்து விமானம் கடந்த பாதை நெடுகிலும் உள்ளூர் நேரம் மதியம் 11.30 - 12.30மணியளவிலேயே ஏறக்குறைய 8 மணிநேரமிருந்தது. பின்னர் சட்டைக்கு மார்பு அளவெடுப்பது போல அமெரிக்காவின் அகலமான பகுதியில் கிழக்கிலிருந்து-மேற்கு கடற்கரைக்கு பயணம். வழியெங்கும் மாலை நேரம் ஆறுமணி நேரம்!!
சில ஆயிரம் அடிகள் உயரத்திலேயே நேரக்கணக்கு இவ்விதம் இருக்க, பிரம்மலோகத்தில் கடிகாரம் சற்று தாமதாய்த்தான் சுழலும்..

பூகோள அறிவை நன்கு சோதித்தது விமானம் கடந்த பாதை. துபாயிலிருந்து  இரான்-துருக்கி-கருங்கடல்-பல்கேரியா- ருமேனியா-ஹங்கேரி-போலான்ட்-ஸ்வீடன்-நார்வே-சமுத்திரம்-போஸ்டன். இவை அனைத்துக்கும் தலைநகரம் என்ன - நாணயம் என்ன - ஆயிரம் கேள்விகள்.. விமானமே கவலையின்றி இழுத்துப் போர்த்திக் கொண்டு உறங்க, என்னுள் கேள்விகள்.. கூகுள் கிட்டாத கையறு நிலையில் பல பெயர் தெரியாத மலைகளையும் ஆறுகளையும் கேமராவில் புகைப்படமெடுத்துத் தாகம் தீர்த்துக் கொள்ள வேண்டியிருந்தது. 

துபாயிலிருந்து 3-4 மணிநேரம் பெரும்பாலை நிலம் - பார்த்தால் மட்டுமே புரிகிறது இயற்கையின் இந்த முகம். முடிவே இல்லாத துயர் போன்ற வறண்ட மலைமடிப்புகள்; நம்பிக்கைகளைத் தளரச் செய்யும் நீண்ட இரவு போன்ற மலைத்தொடர்கள். வரலாறு காட்டும் பாலைநில மனிதர்களை புரிந்து கொள்ள இந்த முகத்தின் தரிசனம் அவசியம். இங்கே வாழ்வை வாழ கள்ளியின் வெளிப்புறம் போல் ஒட்டகத்தின் உட்புறம் போல் இயற்கை customize செய்த வரங்கள் தேவை. 



'வால்காவிலிருந்து கங்கை வரை' சொல்லும் ஆதி மனிதன் உலவியதாய் கருதப்படும் டைக்ரிஸ் சற்று தெற்கே வரைபடத்தில். நம் அனைவருக்கும் ஏதோ ஒரு ஜீனில் வாழும் பாட்டன் பாட்டி வாழ்ந்திருக்கக் கூடும் இப்பகுதிகளில்..

இரான் துருக்கி எல்லையில் ஊர்மியா என்றொரு அழகிய ஏரி. இறைவன் ஓவிய ரூபன் - என்னென்ன வண்ணங்கள் குழைத்து தீட்டுகிறான். பின்னர் துருக்கியில் நுழைந்து  வான் என்றொரு மாபெரும் ஏரி - இது பாலை நெற்றியில் நீல வண்ணத் திலகம் போலிருந்தது. மேலும் வடமேற்காய் பறந்து கருங்கடலின் தென்கரையோரம் பறந்து சற்றே கருங்கடல் மீது பறந்து பல்கேரியாவுள் நுழைந்தது. பின்னர்தான்  ருமேனியா-ஹங்கேரி-போலாண்ட்-ஸ்வீடன்-நார்வே-சமுத்திரம்-போஸ்டன். 


இந்தக் கருங்கடல் நீல வண்ணக்கடல், என்னே ஒரு ஏமாற்றம்.


திரையில் ஓடிய வரைபடத்தின் ஊர்களும் என்றோ பயின்ற geographyயும் சற்றே கைகொடுத்தது. நாடுகளின் அரசியல் கோடுகள் மேலிருந்து நோக்கத் தெரிவதில்லை. அனுமானம்தானே எல்லைகள் அனைத்தும்.

SFO இறங்கி தம்பியின் முகம் பார்தத்ததும், உறங்காமல் வரவேற்கக் காத்திருக்க முயன்று உறங்கிய மருமகனையும், அத்தனை வேலைப்பளுவையும் புன்னகையோடு செய்யும் விஜியையும் பார்த்ததும் மறந்தது பயணத்தின் களைப்பு.

Thursday, August 20, 2015

சற்குரு - தாத்தா - 15

சற்குரு - தாத்தா - 15

"பேருந்தில் தனியாகப் பயணம் செய்யப் பழகிக் கொள்" என ஒருமுறை தாத்தா என்னிடம் கூற நான் , - "நீங்கள் தனியாகப்  பேருந்துப் பயணம் செய்தது எப்போது தாத்தா?" எனக் கேட்டதற்கு, "19 வயதில் தனியாகக் கப்பல் பிரயாணம் செய்திருக்கிறேன்" என்றார்கள் தாத்தா. முதல்முறை தனது மாமாவுடன் சென்றார்கள்; இரண்டாவது முறை சென்றபோது தனியாகக் கப்பலில் பிரயாணம்.

முதல் முறை 1935 ஜூன் மாதம் ரங்கூன் சென்ற தாத்தா, தாயகம் திரும்பிய போது தாங்கொணாத பல இடிகளை சந்தித்திருந்தது வீடு.

அன்புத் தங்கையை மணம் புரிந்த தாய் மாமா, உடன் வளர்ந்து தோழமையும் பாசமுமாகத் திகழ்ந்த மாமா இளம் வயதில் (22 வயது) மறைந்தார். மலர்ந்து மணம் வீச இதழ் விரித்த இள மொட்டு கருகினாற் போன்ற பேரிழப்பு. பதினாறு வயதுத் தங்கை, 40 நாட்கள் நிரம்பிய கைக்குழந்தையுடன் கைம்பெண்ணாக, கண்ணீராக...

மரணம் தரும் இழப்பு - வலி; உற்ற உறவின் மரணம் - ஆறாத ரணம்; உறவுகளைப் பிரிந்து தொலைதூரத்தில் இருக்கும் காலங்களில் வரும் துயரச் செய்தி, தனிமை எனும் பூதக்கண்ணாடி வழி நூறாயிரமென உருவெடுக்கும். மூச்சென உள்ளே வியாபிக்கும். அந்த வலியை மனதில் சுமந்து கொண்டு தனிமையில் இருக்கும் காலமும், மேற்கொள்ளும் பயணமும்  சிலுவை சுமந்து முள்முடி தாங்கிய  பயணமாகத்தான் இருக்கும், இருந்திருக்கும்.

இந்தத் தகவல் மட்டுமே ரங்கூன் வரை தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அடுத்தடுத்து 21 நாட்களுக்குள் மறைந்த அருமைத் தம்பி ஆறுமுகம் குறித்தும், அன்புத் தங்கை சொர்ணவல்லி குறித்தும் யாரும் செய்தி சொல்லவில்லை.  புது மணம் முடித்த தம்பதியராய்ப்  பார்த்த தங்கை சௌந்தரத்தை எவ்விதம் இக்கோலத்தில் பார்ப்பது, என்ன ஆறுதல் சொல்வது எனத் தவித்து வீடு சேர்ந்தால், மேலும் இரு மறைவுகளும் சேர்த்து சூறையாடி இருந்தது வீட்டின் மகிழ்ச்சியை. மூத்த மருமகனையும், ஒரு மகளையும் ஒரு மகனையும் இழந்திருந்த வீடு வேறு எப்படி இருக்க முடியும். அடி மேல் அடி வாங்கி கலங்கி நின்றது குடி .

எத்தனை சோதனை வரினும் தளராத இறை நம்பிக்கையும், மனிதர்கள் ஒருவர் மேல் ஒருவர் காட்டிய அன்பும் ஆறுதலுமே ஆணி வேராய்த் தாங்கி இருந்து தழைக்கச் செய்திருக்கிறது முருகன் இல்லத்தை.

முதல் பயணம்; முதல் வேலை;  முதல் சம்பளம்; தம்பி தங்கையருக்காய் ஆசையாய் வாங்கிய ஆடைகள் அர்த்தமற்றுக் கிடந்தன.  விடுதலைப்  போராட்ட வீரர் சத்தியமூர்த்தி போல வெடிப்புடன் பேசும் இளம் தம்பி ஆறுமுகமும், ஆறு வயதே நிரம்பியிருந்த தங்கை சொர்ணவல்லியும் மீண்டும் காணக் கிடைப்பதில்லை - இந்த நாட்களைக் குறித்துப் பேசும் போதெல்லாம் பேச்சு இடையில் நின்று கண்ணீர் வடிய ஒரு மௌனம் கவிந்து விடும் தாத்தா மேல்.

எதுவரினும் வாழ்க்கை நின்று விடுவதில்லை; அடுத்த வேளையே  பசிக்கத்தான்  செய்கிறது. எனவே தானும் தளராது, சோர்ந்த சுற்றங்களையும் அரவணைத்து முன் செல்ல வேண்டும் என்பதை சொல்வதற்காகப்  பலமுறை இந்த நிகழ்வுகள் குறித்து வலியோடும் வேதனையோடும் சொல்லி இருக்கிறார்கள் தாத்தா.

சற்றே நீள் மூச்சுடன் ஆசுவாசப் படுத்திக் கொண்டு மேற்கொண்டு செல்ல வேண்டியிருக்கிறது - வாழ்க்கையைப் போல...

ரங்கூன் வாழ்க்கை, அன்றாட வாழ்க்கை பற்றி பெரிய அளவில் தகவல்கள் இல்லை. இவற்றில் ஒருமுறை கப்பல் பயணத்தின் போது, ஏதோ ஒருவிதமான விஷக்காய்ச்சல் பரவுவதைத் தடுப்பதற்காக, கப்பலை ஒரு சிறு தீவில் நிறுத்தி, அனைவரையும் மருத்துவ சோதனை செய்து இரண்டு நாட்கள் தாமதாக ஏற்றிச் சென்றார்களாம். நோய்வாய்ப்பட்டவர்களை குவாரன்டைன் (quarantine) செய்தார்கள் எனத் தாத்தா கூறிய அன்றுதான் இந்த வார்த்தை அறிமுகம்.  இன்று வைரஸ் பாதித்த filesஐ கணிணியில் quarantined எனப் பார்க்கும் போதெல்லாம், அந்தப் பெயர் தெரியாத தீவு நினைவுக்கு வரும்.

தாத்தாவுக்கு கோலாலம்பூர் அம்பாங் தெரு AMM firm-ல் வேலை. செட்டியார் தெரு என்றும் அழைக்கப்பட்ட இந்த வீதியில் முக்கியமான வணிக நிறுவனங்களும், வட்டிக்கடைகளும் இருந்திருக்கின்றன. இந்த அம்பாங் வீதி இன்றும் இருக்கிறது. - Leboh Ampang என. மலேயாவிலிருந்து ரப்பர், ஈயம்( tin ) போன்றவை அதிக அளவில் ஏற்றுமதி செய்யப் பட்டிருக்கிறது. சார்ட்டர்ட் வங்கி (Chartered bank) என்றழைக்கப்பட்ட (standard chartered ன் மூல வங்கி) வங்கி கோலாலம்பூரிலும், ப்ளாங்கிலும்(சிலாங்கூர்) இருந்திருக்கிறது. ரப்பர் தோட்டங்களில் வேலை பார்த்த பெரும்பாலானோர் தமிழர்கள் - குறிப்பாக இராமநாதபுரம் ஜில்லாவிலிருந்து மிக அதிக அளவில் சென்றிருக்கிறார்கள்.

அம்பாங் தெரு - அன்று

அம்பாங் தெரு - இன்று

தாத்தா குறிப்பிடும் மற்றொரு வீதி - பெட்டாலிங் வீதி - அன்று 

பெட்டாலிங் வீதி - இன்று



மலேயாவில் கோலாலம்பூரில் தலைமைக் கிளையும், பினாங்கில்(Penang) இன்னொரு கிளையும் இருந்திருக்கிறது தாத்தா வேலை பார்த்த AMM firm-ற்கு . (AM Murugappa Chettiar - Cholamandalam, TI cycles, Carborundum groups குழுமத்தின் 1900களின் தொடக்க வணிகம் இந்த மலேய வட்டிக்கடைகள்)

பினாங் நாட்களைப் பற்றிய பகிர்வுகளே அதிகம்.

மனைவி கருவுற்ற செய்தி, முதல் மகன் (சிவசுந்தரவேலன்) பிறந்த செய்தி, அனைத்தும் கடிதங்கள் வாயிலாகத்தான் தாத்தாவை அடைந்திருக்கிறது. 24 வயது நிரம்பிய இளைஞன் முதல் மனைவியின் இழப்புக்குப் பின், இரண்டாவது திருமணம் முடித்து இரண்டரை மாதங்களில், உறவினர் அனைவரையும் பிரிந்து தனிமையில். அந்த தருணத்தில் சொந்தங்கள் அனைவரின் அன்பையும், ஆசாபாசங்களையும், ஏக்கங்களையும் சிற்சில வரிகளில் பொதித்து சுமந்து வரும் கடிதங்கள் தேவதூதர்களாகவே  இருந்திருக்கின்றன.

மகன் பிறந்த மகிழ்ச்சியான செய்தியையும் பிஞ்சு விரல்கள் மஞ்சளில் தோய்த்துப் பதித்த கைத்தடத்தையும் தாங்கி வந்தது ஒரு கடிதம். அதுவே இறுதிக் கடிதம் -தகவல் தொடர்பு அறுந்து போனது.

- தொடரும் -  (தொடரும், தொடர்பும்)

முந்தைய பதிவு (14)

அடுத்த பதிவு (16)

Wednesday, July 29, 2015

சற்குரு - தாத்தா - 14

ஒவ்வொரு மறைவும் உணர்த்திக் கொண்டே இருந்தும், மறந்து விடும் மனித மனம் - நிலையிலா வாழ்வில் நம் நிலை யாதென்று. ஒரு போர்க்களம் பார்த்துவிட்டால், மரணத்தோடு கணம்தோறும் வாழ்ந்தாக வேண்டிய நாட்களில் ஒருமுறை வாழ்ந்து விட்டால், ஒருவேளை உயிரின் மதிப்பு புரிந்துவிடக்கூடும்.

மாபெரும் மனிதர்களை இழந்திருக்கும் இத்தருணம், வாழ்வு குறித்த - பயனுள்ள வாழ்வு குறித்த  பல கேள்விகள் அனைவருக்கும் மனதுக்குள்  எழும்பி இருக்கிறது. அதை சற்றே உற்றுநோக்கி மனதுக்குள் விடை தெளிதல் நலம். இல்லையெனில் இயற்கையின் கொடையாக ஞாபக மறதி இருக்கிறதே - அன்றாடக் கவலைகளுக்கு சீக்கிரம் திரும்பி விடுவோம்.

சிற்றலை கரை கடத்தி மீண்டும் அமைதி கொள்ளும் குளம்.

அடிமேல் அடியென அப்பாவின் மறைவுக்குப் பின், மாமாவின் மறைவு... பொதுவாக சமீபத்திய மாதங்களில் பல துறை ஆளுமைகள் அமரர் ஆகி இருக்கிறார்கள். (ஜெயகாந்தன், பாலச்சந்தர், MSV, அப்துல் கலாம் வரை) இறப்பும் இழப்பும் நம் மனதை பண்படுத்தவில்லையெனில், வாழ்வு நமக்கும் பிறர்க்கும் கனியாத காயாய் கசந்துபோக நேரும்.

--------------------

எழுத விழைந்த கதைக் களமும் மரணத்தை சுவாசித்த ஒரு பெரும் போர்ச்சூழல்தான்

1942 - மலேயாவில் கோலாலம்பூர் அருகே ஒரு சிறிய ரயில்வே நிலையம்.  நாடாள்பவர் யாராயினும் உயிர்வாழ உத்தரவாதமின்றி மக்கள் அலைக்கழியத் தொடங்கிஇருந்த காலம்.

நூற்றுக்கணக்கான மக்கள் பயணம் செய்ய, அனைவரது பெருமூச்சுக்களையும் சேர்த்து வெளிவிட்டு வந்து நின்றது ஒரு புகைவண்டி. திடுமென போர் விமானங்களின் வருகையைக் குறிக்கும் எச்சரிக்கை சங்கு ஒலித்ததும், அனைவரும் அருகிருந்த பதுங்குகுழிகளுக்குள் பாய, ரயில் பிரயாணிகளுக்கு அலறுவதற்கும் அவகாசம் இன்றிப் போனது - அடுத்த வினாடி பலருக்கும் சுவாசம் நின்றுபோனது - குண்டுகள் ரயில் மீது விழ பெருநாசம். அன்று உயிர் இழந்த நூற்றுக்கணக்கானோரில் ஒருவர் என் ஆசிரியையின் தந்தை . சில நூறடிகளுக்குள் குழியில் பதுங்கித் தப்பியவர்களில் ஒருவர் தாத்தா . ஆசிரியையிடம் பேசும் போதே இருவர் உணர்வுகளும் பின்னோக்கிப் பாய்கிறது. தாத்தாவைப் பார்த்து, தான் பார்க்க இயலாது போன தன் தந்தையை பார்த்தாய் கண்கலங்கிய தமிழ் ஆசிரியை.

அன்று இரவு, எத்தனையோ முறை தாத்தா கூறக் கேட்டிருந்தாலும் மீண்டும் கேட்டேன் தாத்தா கடல் கடந்த கதை, உற்றாரைப் பிரிந்து, உலகப் போர் நாட்களில் நிலையாமையை மட்டுமே நித்தமும் பார்த்த கதை. ஆங்கே தன்னிகர் இல்லாத் தலைவர் 'நேதாஜி' யின் INA படையில் இணைந்த கதை.

சாரங்கள் சதமல்ல எனத் தெரியும் தருணம், சாரம் அறுத்தும் எழுந்து நிற்கும் கோபுரங்களாய், மனிதர்கள் வேரறுந்த மண்ணில் வான் நோக்கி உயர்ந்த கதை. உற்றார் யாருமில்லை, பெற்ற மகன் காண வழி இல்லை, நாளை நான் உண்டா, நாளை என ஒன்றுண்டா - எதற்கும் பதில் இல்லை - எனும் போது வாழ்வை இரு விதமாய் கழிக்கலாம். இருப்பது ஒரு வாழ்க்கை, எப்போதும் அறுந்து விழக்கூடிய கத்தி தலை மேல்.

அஞ்சிக் கொண்டும், அஞ்சாதது போல் வாழ்வைக்  கட்டற்று மனம் போல் வாழ்வது ஒரு வகை. தோன்றிடின் பயனுற வாழ்வதும், வீழின் விதையென வீழ்வதும், வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் நிகழும் நிகழ்வைக் கர்ம பூமியாய்க் கொண்டு களம் புகுவது இரண்டாம் வகை.

தர்மத்தைக் கையில் எடுத்துக் கர்ம பூமியில் களம்புக வாயில் அனைவருக்கும் திறந்தேதான் இருக்கிறது. சிறகு கொண்ட பறவை எல்லாம் வடதுருவம் வரை பறந்தா விடுகிறது!! மதிவேண்டும், மதிகிட்டும் விதி வேண்டும்.

அந்த களம் காண, காலம் தாத்தாவைக் கொண்டு சேர்த்த கதை:

தேடல் - மானுடனுக்குள் சுடர்விடும் அணையா நெருப்பு. கடல் கடந்து திரவியம் தேட இன்றொரு வாழ்வுமுறை IT. அன்றொரு வாழ்வுமுறை 'வட்டி'. நகரத்தார் எனும் பெருவணிகர் இல்லங்கள் நடத்திய கிழக்காசிய வாணிபம் - பர்மா, மலேயா, இலங்கை என பல தேசங்களில். நேர்மையும் காரியநேர்த்தியும், நிர்வாகத்திறனும் மிக்க இளைஞர்படையை கணக்குப் பிள்ளைகளாய் காரியமாற்ற இருகரம் நீட்டி இழுத்துக் கொண்டது இவ்வணிக வாழ்வு. வாழ்வை புதைகுழியில் ஆழ்த்தும் இன்றைய கந்து வட்டிக் கடைகள் அல்ல. வணிக நிறுவனங்களுக்கு கடன் வழங்கும் நவீன வங்கிகளின் முந்தைய வடிவம் இந்த வட்டிக் கடை. நாடாறு மாதம் காடாறு மாதம் என உற்றாரை பெற்றாரை விட்டு வாழ்க்கை. இதன் வாயிலாய் தாய்மண்ணில் வருமானம் பெருக்கி வளம் கண்டது பலரது வாழ்வு.

19 வயதில் (1935) தன் மாமாவோடு கப்பல் ஏறி முதல் முறை ரங்கூன் சென்றார்கள் தாத்தா . கப்பல் வழி 4 நாள் பயணம் ரங்கூன் - அன்றைய பர்மாவின் தலை நகரம். பல குடும்பங்களின் பொருளாதாரத்தை உச்சியில் ஏற்றவும் அங்கிருந்து சறுக்கவும் செய்த தலைவிதி நகரம்.

முதல் திருமணம் 1938-ல்  தாத்தாவுக்கும் அவரது அத்தை மகள் செல்லம்மாள் அப்பத்தாவுக்கும் நடந்தது.
நல்ல நிறமாயும், சின்னஞ்சிறு பெண் போல இருப்பார்களாம் - பிறர் சொல்லக் கேள்விதான். அதிகாலை காணும் அற்புதக் கனவு யாரோ அடித்து எழுப்பக் கலைவது போல விதியின் கருணையற்ற கரங்களில் கலைந்தது 5 மாதத்தில். முதற் புள்ளியிலேயே முற்றுப் புள்ளி கொண்டு நிறைவடைந்தது அந்தக் கவிதை.

மாமன் மகளை (சேது அப்பத்தாவை) மணந்தது அடுத்த வருடம் 1939. மிகச் சரியாக மூன்றே மாதங்களில் மருமகனை அழைத்துக் கொண்டு கப்பல் ஏறினார்கள் பசளைத் தாத்தா.

இம்முறை சென்றது கோலாலம்பூர் - சென்றடைந்த தினம் 1-மார்ச்-1940

அப்போது தெரியாது - யுத்தம் வருவதும், அடுத்த ஆறு வருடங்கள் கழியப் போவது யாருமற்ற வனவாசமும், உற்றார் உறவினரின் இடையறாத மனவாசமும் - இருப்பிடமும் தெரியாமல், இருப்புக்கும் இறப்புக்கும் இடையே நடந்த அஞ்ஞாதவாசமும் என்று.


சில தேதிகளும் குறிப்புகளும் - தாத்தாவின் குறிப்புகளில் இருந்து

28-ஜூன்-1935-ல் தன் மாமா ஸ்ரீமான் ராமநாத பிள்ளை அவர்களோடு கப்பல் ஏறி முதல் முறை ரங்கூன் பயணம் . கப்பல் வழி 4 நாள் பயணம், 1-ஜூலை-1935 ரங்கூன் .

1936-ல் மார்ச் மாதம் இந்தியா வருகை, டிசம்பர்  வரை (8 மாதம்) மதுரை வாசம்.

1936 டிசம்பர் ரங்கூன் சென்று 1938 மார்ச்-ல் அடுத்த வருகை. 

6-ஏப்ரல்-1938 தாத்தாவுக்கும் செல்லம்மாள் அப்பத்தாவுக்கும் திருமணம்.
(என்னைப் பல வருடங்கள் கழித்து, பெங்களூர்-ல் உமா அத்தை வீட்டில் பார்த்து சிவசாமி தாத்தா சொன்ன முதல் வார்த்தை செல்லம்மா அப்பத்தா போல இருக்கிறேன் என்பது, வேறு யாரும் அவர்கள் குறித்து விரிவாக சொல்லிக் கேட்டதில்லை).

12-செப்டம்பர்-1938 செல்லம்மாள் அப்பத்தா மறைவு.

சேது அப்பத்தாவை மணந்தது அடுத்த வருடம் 14-டிசம்பர்-1939.

கோலாலம்பூர் - சென்றடைந்த தினம் 1-மார்ச்-1940

முந்தைய பதிவு (13)

அடுத்த பதிவு (15)

Saturday, July 4, 2015

சற்குரு - தாத்தா - 13

சற்குரு - தாத்தா - 13


ஆறுமுகநேரி - ரகசியம் பேசத் தெரியாத பனைமரக் காடுகள். அதன் இடையே நடக்கும் போது திகில் பட இசையமைப்பாளராய் காற்று வேலை பார்க்கும். கால்கள் நடந்து உருவாக்கிய பாதைகள் வழியாக நடைபோட புதிய திசைகள் தினந்தோறும் உருவாகும். காக்கா முள் நிறைந்த தடத்தில், ஓணான் , நத்தை உடன் வரும் பாதைகளில் explorers ஆக நடைபயணம். இந்த V வடிவ கருவேலம் முள் alias காக்கா முள் மிகவும் கடினமானது, ஒருநாள் பனை ஓலை காத்தாடி செய்து அதைக் குத்திக் கொடுத்தார்கள் தாத்தா. பலநாள் என் நிலவறை பொக்கிஷங்களில் இருந்தது அது. ஆனால் அந்த முள் குத்தினால் மிகவும் கடுக்கும்-காலணி தாண்டி தாத்தாவின் கால் பதம் பார்த்தது ஒருநாள் - பின்னர் என் காலைப் பதம் பார்த்த அன்றே கடுக்கும் என்ற வார்த்தைக்குப் பொருள் புரிந்தது.


அப்படிப்பட்ட ஒருநாள்(நினைவுக் கோப்பில் எத்தனையோ ஒருநாள்-கள், ஒருநாள் போதுமா!!) காலை நடையில் மரங்களுக்கு ஊடே ஒரு குடிசை இருப்பதைப் பார்த்து அருகில் சென்று பார்க்க கரடுமரடாய் ஒரு மனிதர். இன்று அவ்விதம் நடக்க முடியுமா, அப்போது இன்றிருப்பது போன்ற பாதுகாப்பு குறித்த அச்சங்கள் இல்லையா எனத் தெரியவில்லை. தாத்தா உடனிருக்க நமக்குதான் அச்சமென்பதில்லையே. நாய்களுக்கு மட்டும்தான் எனக்கு பயம் - தாத்தா உடனிருந்தாலும்.. பயமென்றால் 'சுற்றி நில்லாதே போ பகையே துள்ளி வருகுது வேல்' என்று பாரதியின் பா சொல்லி தைரியமாக நடைபோடச் சொல்வார்கள் தாத்தா. பின்னர் எத்தனையோ நாய்கள் - அச்சம் தரும் வேளைகளிலெல்லாம் இந்த வேலே துணை.


பதநீர் கள்ளாவதற்குள் அங்கே செல்வோம். அந்த பதநீர் இறக்குபவருடன் பேசி - அவர் தன் பெயர் 'சுதந்திரம்' என்றதும், 1947-ல் பிறந்தாயா எனத் தாத்தா கேட்க, சுதந்திரம் கிடைத்த அன்று பிறந்தேன் என்று கூற, தொடர்ந்து அவர் குடும்பம் குறித்தும் பேசி, அவர் சிலநாட்களில் தாத்தாவுக்கு மிக நெருக்கமாகிப் போனார்.

அந்த ஆறுமுகநேரியிலிருந்து 10 கிமீ தொலைவில் திருச்செந்தூர். வழியில் 64 வீதிகளில் 64 பள்ளிவாசல்கள் கொண்ட காயல்பட்டணம்; மிகப் பெரிய தேவாலயம் அமைந்த வீரபாண்டியபட்டணம், படித்த பள்ளியோ ஜைனப் பள்ளி - மினி இந்தியா - வடஇந்திய மாணவர்களும், 8ஆம் வகுப்போடு பள்ளிக்கு முழுக்குப்போட வேண்டிய காயல்பட்டிணத் தோழிகளும், வேறெங்கும் கிடைக்காத கலவையாய், ஒரு பள்ளி. 

பயம் வேண்டாம் - மீண்டும் பாடங்களுக்குள் செல்லவில்லை. ஒரு மிக முக்கியமான அத்தியாயத்திற்கு நுழைவதால் சிறு முகவுரை..


அங்கே வீரபாண்டிய கட்டபொம்மன் பற்றிய பாடம் எடுத்த தமிழாசிரியை, மிக உணர்ச்சிவயமாய் உலகப் போரை விவரித்ததை தாத்தாவிடம் நான் கூற, 'அவர்களிடம் கேட்டுப்பார் யாரேனும் அவர் வீட்டில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கலாம்' என்றார்கள் தாத்தா.

மிகவும் கண்டிப்பான அந்த ஆசிரியையிடம் அதைக் கேட்க பயந்து நான் நாட்களை ஒத்திப் போட்டுக்கொண்டே போக, தாத்தா 'நான் வந்து பேசுகிறேன்' என்று சொல்ல, அதற்கு பயந்து அடுத்தநாளே பேசினேன். அந்த ஆசிரியையின் தந்தை 1940களில் மலேயாவில் (இன்றைய மலேசியா) இருந்திருக்கிறார். ஒரு மாலை வேளையில் தாத்தாவுக்கு அரை மைல் தொலைவில் இருந்திருக்கிறார் - இறந்திருக்கிறார்.


-ஆறுமுகநேரி தொடரும்/மலேயா தொடங்கும்-

முந்தைய பதிவு (12)


அடுத்த பதிவு (14)




Thursday, July 2, 2015

சற்குரு - தாத்தா - 12

சற்குரு - தாத்தா - 12


ஒரே அச்சில் எத்தனை உலகங்கள் சுழல்கின்றன. சிலருக்கு மிக மெதுவாகவும், சிலருக்கு தலை கிறுகிறுத்துப் போகும் வேகத்துடனும்! பெற்றோருக்கு வாழ்வின் சிகரப் புள்ளிதொடும் பகுதியில், கடமைகளும் கட்டாயங்களுமாய் நிர்தாட்சண்யமாய் சுழலும் உலகம்; அப்போது காலடி நிலம் போல நிச்சயத்தன்மையுடன், தாத்தா பாட்டி என முந்தைய தலைமுறை உடன் இருப்பது பிள்ளைகளுக்குப் பெரும் சுகம்.


உறக்கமின்றி, ஓய்வின்றி, விடுமுறைகளின்றி, தனிமனித இயந்திரமாய் ஒரு வங்கிக் கிளையைத் தன் அதீதத் திறமையாலும், அயராத உழைப்பாலும் அப்பா ஒருபுறம் ஓட்டிக்கொண்டிருக்க, தாத்தா அப்பத்தாவுடன் எனக்கு வேறு ஒரு உலகம். மேலும் அம்மா சேகரித்திருந்த வீட்டு நூலகத்தில் மூழ்கியதும் இந்த காலகட்டத்தில்தான்.


பெரியவர்களின் மன உளைச்சலும், இறுக்கங்களும், அதன் வெளிப்பாடுகள் வீட்டுச் சூழலில் சிதறும் தருணங்களில், ஏதோ அவர்கள் கோபமாய் நம் மீது பாய்ந்து விட்டதாய், சற்றும் கருணையின்றி தண்டித்துவிட்டதாய் எத்தனையோ குற்றச்சாட்டுகள் பிள்ளைகளுக்குப் பெற்றோர் மீது. எனக்கும் இருந்திருக்கிறது. அதிலும் சில பிணக்குகள் - திருப்பாவையில் ஆண்டாள் பாடியது போல் 'ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓர் இரவில்- ஒருத்தி மகனாய்..' வளர்ந்த கண்ணனைப் போல் இருதாய்க்கும் தந்தையர்க்கும் இடையே, அவர்கள் வாரி வழங்கும் அன்புக்குப் பாத்திரமாய் இருக்கவும், அதில் ஏற்படும் சிறு சலசலப்புகளுக்கும் அஞ்சவோ மனம் சுளிக்கவோ கூடாது, அன்பு இருமடங்காய் கிடைப்பதற்கு மாதவம் செய்திருக்க வேண்டும் என்றும், இன்னும் எத்தனை எத்தனையோ விதங்களில் யார் பக்கமும் நூலிழை பிசகிவிடாது தாத்தா துலாக்கோல் ஏந்தி நடத்திச் சென்ற நாட்கள். Salute him for the patience and perseverance.


அந்த சூழ்நிலையை மிக இதமாய் விளக்கி, பல நேரத்துக் கோபங்கள் அளவுகடந்த நேசத்தின் வெளிப்பாடே, அன்பைக் குறித்தெழும் ஆற்றாமையே என்பதை விவரித்தது - பொய்யோ புனைவோ அல்ல; 11-12 வயது பேத்தியிடம் சக மனிதராய் மதித்து, இவை புரியும், மயக்கும் பிணக்கும் அகலும் என நம்பிக்கை வைத்து, பேசிட ஒரு மிகச் சிறந்த பக்குவம் வேண்டும். அன்றே சிறு மனதுக்கு அனைத்தும் விளங்கிவிடாது என்பது தாத்தாவுக்குத் தெரிந்தே இருக்கும். பின்னாளில் என்று தேவையோ அன்று இந்த விதை வேரூன்றி இருக்குமென நம்பி விதைத்த நடவு அது. தழைத்துமிருக்கிறது. ஆண்டிறுதித் தேர்வுக்குத் ஆயத்தம் செய்வதன்று குருவின் பணி; ஆயுள் காப்பீடு போல் மறைவுக்குப் பின்னும் காத்து நிற்கும் ஈடு.


இதை எழுதக் காரணம் - அன்பின் அடிப்படையிலையே சில சமயங்களில் நாம் பல வார்த்தைகளையும், பிறர் கூற்றில் நாம் ஏற்றும் தற்குறிப்பேற்ற அணியாய் - பிறர் கருத்தாய் நாம் நினைக்கும் கருத்துக்களையும் சுமத்தி, உறவென்னும் நூலிழையை சிக்கலாக்கி விடுவதுண்டு. அது போன்ற தருணங்களில் அன்பெனும் மாயக்கயிற்றால்தான் அனைத்தும் கட்டி இழுக்கப் படுகிறதென உணர்ந்து, இறுதியில் காண விழையும் நோக்கத்தின் மேல் நம்பிக்கை கொண்டு, அனைவரையும் அனைத்துச் செல்லும் பெருநோக்கு - தவறெனில் சுட்டிக் காட்டும் கடமை, எதுவரினும் ஒதுங்கிக்கொள்ளாமல், ஒத்திப்போடாமல் நேர் எதிர் நின்று ஏற்றுக்கொள்ளும் தீரம். இவற்றையும் பகிர்ந்து கொள்ளவே.


-ஆறுமுகநேரி தொடரும்-

முந்தைய பதிவு (11)


அடுத்த பதிவு (13)

Saturday, June 27, 2015

சற்குரு - தாத்தா - 11

சற்குரு - தாத்தா - 11

அடுத்த களம் - காற்றில் உப்பு மணக்கும் தூத்துக்குடி. ஆறாம் வகுப்பை அங்கே தொடர்வதென பேச்சு. அப்பா அஸ்ஸாம் வேண்டாமென்று, அலுவலகத்தில் மேல்மட்டத்தின் கீழ்மட்டங்கள் பொறுக்காமல், regional manager பதவியைத் துறந்து 30+ வருட அனுபவத்துடன் சாகுபுரம் தாரங்கதாரா கெமிக்கல் ஒர்க்ஸ் PNB கிளை மேலாளராய்,  பதவியேற்பு. வீடு தூத்துக்குடியில். அந்த நாட்களில் அது ஒரு பங்களா. 26கிமீ அன்றாட பயணம் தூத்துக்குடியிலிருந்து - இன்று மிக எளிதாய்த் தோன்றும் இந்தத் தொலைவு, அன்று வெளியூர் பேருந்தில் ஒன்றரை மணி நேரப் பயணம். வீடுகளின் பின்புறம் private jacuzzi போல் தாமிரபரணி ஓடும் தோட்டங்கள் இருகரையிலும் கொண்ட ஆத்தூர் தாண்டியதும் வரும் இந்த சிற்றூர்.

மதுரையிலிருந்து தூத்துக்குடி நோக்கி தாத்தாவுடன் பஸ் பயணம். எப்போது வரும் தூத்துக்குடி என அருப்புக்கோட்டை தாண்டியதுமே என் கேள்விகள். ஏறத்தாழ 100கிமீ இதே கேள்வியுடன் எப்படிப் போவது. எனவே 200மீட்டருக்கு ஒரு முறை வரும் 2, 4, 6, 8 என இலக்கமிட்ட கற்களைக் காட்டி இது ஏறக்குறைய ஒரு ஃபர்லாங்குக்கு ஒரு முறை வரும்.  இது ஒரு முறை முடிந்தால் 1 கிமீ என சொல்லிக் கொடுத்தார்கள். பின்னாளில் பழனி பாதயாத்திரையின் போது மட்டும் இந்தக் கற்களை யாரோ 1மைல்-க்கு ஒன்றாய் வைத்திருப்பதாய்த் தோன்றும். இன்றும் இதில் மட்டும் கவனம் செலுத்திக் கொண்டு ஒரு தியானமாய் பஸ்ஸில் பயணம் செய்வது சுகம்.

தூத்துக்குடி Holycross entrance exam - தாத்தா வழக்கமாய் கேட்பதினும் எளிய கேள்விகளே. Admission கிடைத்து பள்ளி தொடங்கி ஒரு வாரத்தில் அப்பா அலுவலகம் அருகே ஆறுமுகநேரிக்கே வீடு மாற்றம் என முடிவாகியது. எனவே மீண்டும் புதிய வீடு, புதிய பள்ளி, புதிய நண்பர்கள். ஆறாம் வகுப்பு - ஏழாவது பள்ளி.

உப்பளங்கள் - அலை அலையாய் மலை மலையாய் கண்ணுக்கெட்டியவரை. வெண்மை தோய் கரிப்பு மணிகளிடையே கரிய மனிதர்கள். ஊர் புதிது, சொல் புதிது. 'ஏல வயிறு பசிக்கு, அங்க என்ன செய்யுதே! ' என்று ஏச்சைப் போல் தொனிக்கும் தூத்துக்குடிப் பேச்சும், 'அவிய வரட்டும் பாத்துக்கிடுதேன், நீ இஞ்ச இரி' என்ற நாஞ்சில் தமிழுக்கும் கலப்பு மணம் அங்கு ஆறுமுகநேரி பகுதியில் உலவிய தமிழ். நேசமணி, கட்டபொம்மன் போக்குவரத்துக்கழகப் பயணங்கள் - தாத்தாவுடன்.

இங்கே தாத்தாவுடனான நேரங்கள் - இன்னும் உன்னதமாய், உரையாடல்கள் - இன்னும் தீவிரமாய். பின்னாளில் கேட்டாலும் கிடைக்கப் போவதில்லை என்ற உத்வேகம் போலும்.

கால்கள் புதையும் மணல்வெளி. நாற்புறத்திலும் நாளெல்லாம் சலசலக்கும் பனைமரங்கள். தாரங்கதாரா ஊழியர்கள் நிலம் வாங்கிக் கட்டிய பன்னிரண்டே வீடுகள் கொண்ட காலனி. இருபுறமும் ஒரு கிமீ செல்ல வேண்டும் - ஒரு தேங்காய்ச்சில் வாங்குவதற்கும் (அதற்குதான் அதிகம் சென்றிருக்கிறேன்) அம்மாவின் உழைப்பில் மணல் நான்கைந்து மாதங்களில் பசுமை போர்த்தியது.

மொட்டை மாடியில் அனுதினம் தியானம் . அலைபாயத் தொடங்கும் வயதின் மனது, கடிவாளம் சற்குரு கைகளில். விழிமூடி பார்வையைத் திறந்து வைக்கவும், பேச்சைக் குறைத்து மூச்சை அடக்கவும் பயிற்சி. சக்கரங்களும் அதன் விளக்கங்களும், இரு பெரும் நாடிகள் குறித்தும்,  ஓஜஸ் குறித்தும், அனுதினம், அன்றாடம், அருகிருந்த நாட்களில் எல்லாம் பாடம், தீட்சை. கூர் தீட்டப்படும் போது அம்புக்குத் தெரிவதில்லை அதன் இலக்கு. பின்னாளில் வாழ்க்கை நமைப் பின்னோக்கி இழுக்கும் தருணங்களில் முன்னோக்கி சீறி எழும் விசை உந்தித் தள்ள,  கூர்முனை தப்பாது சென்றடையும் அதன் இலக்கு. அன்று இடப்பட்ட வீரியமான விதைகள் இன்றளவும் குருவின் அருள் மழை படும் தோறும் துளிர்த்துக் கொண்டே இருக்கின்றன. புரியா வயதில் கிடைக்கும் புதையலைத் தொலைத்து விடாதிருக்க பல மனப் பயிற்சிகள். To register, recall and recollect at appropriate time. மனித மனதிற்கு அந்தத் திறன் உண்டு; அதனை மேம்படுத்திக் கொள்வதும், கண்டு கொள்ளாது இழப்பதும் நம் கைகளில். ஒரு தலை சிறந்த வீரனுக்கு, 'உனக்குக் கிடைத்த அதி உன்னதமான ஞானம் தேவையான தருணத்தில் மறந்து போகும்' என்ற குரு சாபத்தினும் வலிய பிரம்மாஸ்திரம் ஏதுமில்லை கர்ணனை வீழ்த்தியது.

குருவருள் இருப்பின் திருவருள் சேரும்.

-ஆறுமுகநேரி தொடரும்-

முந்தைய பதிவு (10)

அடுத்த பதிவு (12)


Thursday, June 25, 2015

அமுதுக்கும் தமிழென்று பேர் - 4

அமுதுக்கும் தமிழென்று பேர் - 4

முத்தமிழின் ஓர் இயலாய் திரையிசைத் தமிழும் இடம்பெறும் தகுதியை சில கவிஞர்கள் தம் கவித்திறத்தால் ஏற்படுத்தினார்கள் (past tense intended with some sense)

அப்பாவின் பழைய recordல் 'சாரசம் வசீகரக் கண்கள் சீர்தரும்' கேட்டுவிட்டு அண்ணன் கேட்ட கேள்வி - "அப்பா இது என்ன language?". அன்றைய தமிழுக்கே இந்த கதி.

இன்று வரும் பாடல்களில் பலவும் அஜீரணத்தை ஏற்படுத்தி விடுகின்றன. (அதாரு அதாரு உதாரு உதாரு என்ற பாடலை எதேச்சையாய் கேட்ட அன்று கண்ணதாசனும் பட்டுக்கோட்டையாரும் பாடிய அதே தமிழுக்காய் சிறிது கண்ணீர் சிந்தினேன்) அதைப் பற்றியும் தனியே அரம் பாடலாம் என்றிருக்கிறேன். அரம் பாடுதல் - சங்கத் தமிழில் இதுவும் ஒருவகைப்பாடல்,பாடியே பாட்டுடைத் தலைவனையோ/பொருளையோ அழிப்பது, இதுபற்றிய சுவையான செய்திகள் வேறொரு நாள் பேசலாம்.

இன்றைய பாடல்களில் நல்ல தமிழ் தப்பிப்பிழைத்தாலும் தமிழறியா நாக்குகளில் சிதைந்து வெளிவருவதை 'பர்ருவாயில்லை' என்று கேட்க எனக்குப் பக்குவம் போதவில்லை. அதனால் எடுத்த முடிவு - பாடல் வரிகள் மிக நன்றாக இருக்கிறதென நம்பத் தகுந்த வட்டாரங்கள் சூடம் ஏற்றி சத்தியம் செய்தால் அன்றி நான் பாடல்கள் கேட்பதில்லை.

காவியத்தமிழை மக்களுக்கு எளிமையாய் எடுத்துச் சென்ற சிறந்த ஊடகம் திரைப்படம். அவற்றில் காவியநயத்தை எளிமையாய் வடித்துத் தந்த சில பாடல்களை இன்று பார்க்கலாம்.

கடையெழு வள்ளல்களில் ஒருவரான பாரியின் மறைவுக்குப் பின் பாரிமகளிரின் கையறு நிலை குறித்த சங்கப்பாடல்:

"அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்
எந்தையுமுடையேம் எம் குன்றும் பிறர்கொளார்
இற்றைத் திங்கள் இவ்வெண்ணிலவில்
வென்றெறி முரசின் வேந்தர் எம்
குன்றுங் கொண்டார் யாம் என்தையுமிலரே"


Literalஆக மொழி பெயர்த்தால்
"அந்த நாள் அந்த வெண்ணிலா...
எங்கள் தந்தையும் இருந்தார் எங்கள் குன்றும் இருந்தது
இந்த நாள் இந்த வெண்ணிலா...
பகைவர் எங்கள் குன்றைக் கைப்பற்றினர்; எங்கள் தந்தையும் இல்லை...."

இதனை "அன்றொரு நாள் இதே நிலவில் அவர் இருந்தார் என் அருகில்" என்று காதலின் குரலாய் குழைத்துக் கொடுத்தார் கவியரசர்.

பார்க்காமலே காதல், சொல்லாமலே காதல், செல்போனில் காதல் என காதல் தோல்வி கதாநாயகன் முரளி சில காலம் தமிழ் சினிமாவை வதைத்து எடுத்ததுண்டு. பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் நாவுக்கரசர் கூறும் பக்தியாய்க் கணிந்த காதலைப் பாருங்கள்:

"முன்னம் அவனுடைய நாமங் கேட்டாள்
    மூர்த்தி அவனிருக்கும் வண்ணங் கேட்டாள்
பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்
    பெயர்த்தும் அவனுக்கே பிச்சி யானாள்
அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
    அகன்றாள் அகலிடத்தார் ஆசா ரத்தைத்
தன்னை மறந்தாள்தன் நாமங் கெட்டாள்
    தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே"

தலைவி தலைவனைக் குறித்து அறியத் தொடங்கி, மெல்ல மெல்லத் தன்வயம், சுயம் இழக்கிறாள். தலைவன் இங்கு சிவன்(சாட்ஷாத் சிவபெருமான்தான்) சங்க இலக்கியத்தில் பெயர் சுட்டுதல் மரபன்று - hero, heroine என்றால் தலைவன், தலைவிதான்.

இந்தப் பாடலை மிகப் பொருத்தமாக எடுத்தாண்டது கல்கி - நவீன தமிழ்க் காவியங்களில் ஒன்றாகிய 'சிவகாமியின் சபதத்தை', இந்த தேவாரப் பாடலுடன் 'தலைவன் தாள்' சரணடைந்து முடித்திருப்பார்.

இதனைத் திரையிசையில்

"அன்றொரு நாள் அவனுடைய பேரைக் கேட்டேன் அடுத்த நாள் அவனிருக்கும் ஊரைக் கேட்டேன்" - என்று மீண்டும் கவியரசர் (மீண்டும் MGR!!)

திருக்குறளில் கவிதையாய் ஒரு குறள் வரும் -
"யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்."

கவியரசர் வரிகளில் இதை அழகாய்,
"உன்னை நான் பார்க்கும் போது
மண்ணை நீ பார்க்கின்றாயே
விண்ணை நான் பார்க்கும் போது
என்னை நீ பார்க்கின்றாயே" என்று PBS குரலில்.. இனிமை.

மற்றுமொரு பாடல் - கல்லூரித் தமிழ்ப் பாடத்தில் படித்த பாடல்
"ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரே
அடங்குவித்தால் ஆரொருவர் அடங்காதாரே" - மீண்டும் நாவுக்கரசர் தேவாரம் - கவியரசர் வரிகளில் சாரமாய் வடித்து,
"ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா"

கண்ணதாசன் பல பாடல்களைக் காப்பியடித்தார் என்று யாரேனும் அவசரமாய் முடிவெடுத்துவிடும் முன், இவையெல்லாம் காப்பியங்களை பாமரருக்கும் எடுத்துச் சொல்லும் முயற்சியாய் அவர் எடுத்தியம்பிய ஓரிரு வரிகள் மட்டுமே. அவர் எழுதிய காவியங்கள் கணக்கில்லாதது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாய் இந்தப் பாடலையே எடுத்துக் கொள்ளலாம் - இப்பாடலின் சரணத்திலேயே இரு வரிகள்-
"உள்ளத்திலே உள்ளதுதான் உலகம்கண்ணா-இதை
உணர்ந்து கொண்டேன் துன்பமெல்லாம்விலகும் கண்ணா".

நாம் பலரும் அறிந்திருக்கும் கர்ணன் படப்பாடல்கள் - ஒவ்வொன்றும் இலக்கியத் தரம் வாய்ந்ததே.
"மணநாள் மன்னன் உனைக்கண்டு மதிமயங்குகிறானே", "வறுமைக்கு வறுமையை வைத்ததோர் மாமன்னன்" இதுபோல ஒவ்வொரு பாடலிலும் கவியரசர் அதில் எடுத்தாண்ட சொல்லாட்சியை வியக்காமல் தமிழை ரசிக்க முடியாது.

இதில் வரும் "வலது கை கொடுப்பதை இடது கை அறியாமல்
வைப்பவன் கர்ண வீரன்" பைபிள் மத்தேயு அதிகாரம் எனில் என்னே அவர் வீச்சு.

மத்தேயு - நீயோ தர்மஞ்செய்யும்போது, உன் தர்மம் அந்தரங்கமாயிருப்பதற்கு, உன் வலதுகை செய்கிறதை உன் இடதுகை அறியாதிருக்கக்கடவது

தர்மம் குறித்து இதனினும் தெளிவாய் சொல்லவும் கூடுமோ!!

இன்னும் நூற்றுக்கணக்கான பாடல்கள் சொல்லலாம் கவியரசர் பெருமை சொல்ல. எனின் இந்த இணையிலாப் பாடலோடு இந்தப் பதிவை முடிக்கிறேன். மேலும் பல பாடல்கள், மேலும் பல கவிஞர்களோடு தொடர்வோம்.

"ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி!
அருள் பொங்கும் முகத்தைக் காட்டி இருள் நீக்கும் தந்தாய் போற்றி!
தாயினும் பரிந்து சாலச் சகலரை அணைப்பாய் போற்றி!
தழைக்கும் ஓர் உயிர்கட்கெல்லாம் துணைக்கரம் கொடுப்பாய் போற்றி!
தூயவர் இதயம் போலத் துலங்கிடும் ஒளியே போற்றி!
தூரத்தே நெருப்பை வைத்து சாரத்தைத் தருவாய் போற்றி!
ஞாயிறே நலமே வாழ்க நாயகன் வடிவே போற்றி!
நானிலம் உள நாள் மட்டும் போற்றுவோம் போற்றி போற்றி!"


Thursday, June 18, 2015

சற்குரு - தாத்தா - 9

சற்குரு - தாத்தா - 9



கற்றதும் பெற்றதும் ஆயிரம் உண்டுகாண்-நீ

உற்றதும் உணர்ந்ததும் உணர்ந்திடச் செய்ததும்

சுற்றமது உயர்ந்திட சுப்பன்வழி வந்ததும்

பெற்றவரின் அருளை - நின்கருணை நிதியெனவே

உற்றாரும் உடையாரும் உய்த்திட ஈந்ததும்

செற்றம் செருக்கடக்க படைமுனையில் நின்றதும்

குற்றமற குருவாகி குலம்காத்து நின்றதும் 

கற்றவரின் கருத்தினிலே கருவாகிக் கலந்ததும்

மற்றவரும் போற்றிடவே வாழ்வாங்கு வாழ்ந்ததும்

பற்றதுவும் நீங்கிவிட மாயையாம் பவவினைகள்

அற்றதும் அகன்றதும் அரனடியை சேர்ந்ததும்

கற்றாவின் மனம்போலக் கசிந்துருகி யாம் மனத்-துணுக்

குற்றதும், "துயர்வேண்டாம்! உடனிருக்கும் 

வெற்றிவேல்! துணையிருக்கும் சக்திவேல்!!

தொற்றிவரும் துயரனைத்தும் விட்டகலும் வேல்முனையில்! அவனைப்

பற்றிடுக பாடிடுக பகல்விடியும் இருள்முடியும்!!"என

முற்றிலும் பயம்விலக்கி எமையாளும்

பெற்றவனே உற்றவனே கொற்றவனே 

சிற்றறிவுக்கெட்டியவரை சிறுவிரலால் எழுதுகிறோம் - சீரியநின் சிறப்பை...

முந்தைய பதிவு (8)

அடுத்த பதிவு (10)

Tuesday, June 9, 2015

சற்குரு - தாத்தா - 8

சற்குரு - தாத்தா - 8
இனிதே தொடர்ந்தது செல்வநிலைய வாசம். ஐந்தாம் வகுப்பின் மீதமிருந்த மூன்று மாதங்கள் தெரு முனையில் உள்ள தூய அந்திரேயா சர்ச் பள்ளியில். உண்மையில் கல்வியென்னவோ குருகுலவாசமாய் வீட்டில் தாத்தாவிடம்தான். தாத்தாவின் பார்வையில், பாடப்புத்தகத்தில் உள்ளதைப் படிப்பது கல்வியே அல்ல. அது ஒரு outline, பாடத்திட்டத்தின் உருவெளிக்கோடு. உண்மையான பாடம், புத்தகங்களுக்கு வெளியே, அன்றாட வாழ்விலும், பரந்த புறவுலகின் நிகழ்வுகளிலிருந்துமே பெறப்படுகிறது.

இன்னும் சிறு வகுப்பிலேயே(2ஆம் வகுப்பில்), தாத்தாவிடம் படிக்கிறேன் என்று அம்மாவிடம் சொல்லிவிட்டு, பாடங்களைத் தாண்டி parts of speech, phonetics என்று என்னென்னவோ தாத்தாவிடம் படித்து விட்டு, வகுப்பின் பாடங்களை எழுதவோ revise செய்யவோ இல்லாதது கண்டு அம்மாவுக்கு ஒரே கலக்கம். தாத்தா ஊருக்குச் சென்ற பின் அம்மா களமிறங்கி என்னைத் தேர்வுக்குத் தயார் செய்தார்கள். தாத்தா எப்போதும் ஆயத்தம் செய்தது வாழ்க்கைக்கான கல்விக்கு. Scienceஇல் evaporation குறித்த பாடம், அதைப் பற்றி விஸ்தாரமாக விளக்கிவிட்டு, phonetics நடத்தினார்கள் தாத்தா. e-va-po-ra-tion 5 syllable word, இப்படி அந்த வயதுக்குக் கடினமான ஆங்கில வார்த்தைகளைக் கொடுத்து எத்தனை syllable என்று சொல்வது, அந்த வார்த்தைக்கு எவ்விடத்தில் stress and pause போன்ற பாடம்.

அது போல மூன்றாம் வகுப்பில் fractions பள்ளியில் தொடங்கிய புதிதில் "1/6 என்றால் என்ன அர்த்தம், என்ன புரிந்தது உனக்கு?" என்று தாத்தா வினவ, நான் கிளிப்பிள்ளை போல பள்ளியில் சொல்லிக் கொடுத்ததைச் சொன்னேன். 1 is numerator, 6 is denominator என்று. அப்படி என்றால், என்று மேலும் கேட்க ஒரே குழப்பம். 'ஒரு முழுமையை 6 பகுதிகளாக பிரித்தால் அதில் ஒரு பகுதி' என்றெல்லாம் தாத்தா விளக்க ஒன்றுமே புரியவில்லை. கணிதத்தில் மட்டும் இப்படி எல்லாம் புரியாது விழித்தால் பொறுமை இழந்து விடுவார்கள் தாத்தா. தாத்தா, அப்பா இருவருமே இதில் ஒன்றுதான். கணிதம் அவர்களுக்குப் புரியும் வேகத்தில் நமக்குப் புரியவில்லை என்றால், இதில் புரியாமல் இருக்க என்ன இருக்கிறது என்ற கோபம் வந்துவிடும். குரலை உயர்த்தி தாத்தா "என்ன புரியல உனக்கு?" என்று கேட்டதும் எனக்கு மொத்தமாய் ஒன்றுமே புரியாதது போலிருந்தது. பிறகு மீண்டும் பொறுமையை வரவழைத்துக் கொண்டு பல உதாரணங்கள் கொடுத்து புரிய வைத்தார்கள்.

ஐந்தாம் வகுப்பின் பாடத்திட்டத்தில் scriptures என்ற பைபிள் பாடங்கள் இருந்தன. அதுவரை எனக்கு கிறித்தவ வரலாற்றில் அறிமுகம் இல்லை. தாத்தா அதுவரை கற்பித்ததெல்லாம் ஆங்கிலமும், அறிவியலும், கணிதமும், தாத்தாவுக்கு மிகவும் பிடித்தமான சமூக அறிவியலும்தான். பைபிள் மிகவும் போரடிக்கிறது என்று நான் கூறியதும், அதிலும் தொடங்கியது தாத்தாவின் தீட்சை.

Sermon on the Mount என்ற மலைப்பிரசங்கம் பகுதியை மிகவும் அருமையாக விவரித்தார்கள். பொதுவாய் பிரபலமான "ஒருவன் உன்னை ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் கொடு", "வருத்தப்படுகிறவர்கள் பாக்கியவான்கள், ஏனெனில் அவர்கள் ஆறுதல் அடைவார்கள்" எல்லாம் இந்த மத்தேயு அதிகாரத்தில்தான் வரும். வீரமாமுனிவர் (இவரது இயற்பெயர் Constantine Joesph Beschi இத்தாலியர்) போன்றோர், ஐரோப்பா விட்டு புதிய நிலங்களில் கால்பதித்து, இங்குள்ள மொழியையும் கற்று, வேதாகமங்களை மொழிபெயர்ப்பும் செய்ய முனைந்தது ஒரு பிரம்மப் பிரயத்தனமே. "Taste and see that Lord is good" ஐ மொழி'பெயர்த்து' "கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப் பாருங்கள்" என்றெல்லாம் ஒருவிதமான புதிய தமிழிலிருக்கும் 'புதிய ஏற்பாடு'ஐ எனக்குப் பரிசாக வழங்கி தினம் ஒரு அதிகாரம் வாசிக்கச் சொல்லி, உலக மதங்களின் உயர் கருத்துக்கள் எல்லாம் ஒன்றையே போதிக்கின்றன என்று தாத்தா சொன்னார்கள். Thou, Thee, walketh, maketh என்று பைபிள் ஆங்கிலமும் அப்படித்தான் இருக்கும்.

தாத்தாவின் YSS பாடங்கள் குறித்தும் அப்பியாசங்கள் குறித்தும் அறிமுகம் நேர்ந்தது இந்த காலகட்டத்தில்தான். அதில் வரும் குட்டிக் கதைகள் எனக்கும் walking போகும் போது சொல்வார்கள். குழந்தைக்கு செரிமானம் ஆக வேண்டுமென பக்குவமாய் சாதம் குழைய வைத்துத் தரும் அன்னை போல, மிக ஆழமான கருத்துக்களை எல்லாம் எளிதில் ஜீரணிக்கக் கூடிய விதத்தில் வழங்கிய தனிப்பெருங்கருணை தாத்தாவுடையது. தாடித் தாத்தாவின் குடில் ஒன்று இருந்தது அப்போது இன்றைய வெங்கட்ராமன் நகர் இருக்கும் இடத்தில். செல்வ நிலையத்திற்கும் கீழக்குயில்குடி ரோட்டிற்கும் இடையில் இருந்த ஒரு கண்மாய் நோக்கிப் போகும் வழியில் சுற்றிலும் பூச்செடிகள் அமைத்து நடுவில் இருக்கும் அந்தக் குடில். அங்கே அமர்ந்து ஏதேதோ ஹிந்தி பண்டிட் பேசுவதை எல்லாம் புரிந்தும் புரியாமலும் கேட்டு விட்டு, எங்கள் நடை தொடரும் பொழுதில் இந்தப் பேச்சுக்கள் தொடரும். "நேற்று எங்க நிறுத்தினோம் சொல்லு பார்க்கலாம்?" என்று கேட்டு எனக்கு என்ன புரிந்திருக்கிறது என்று recap கேட்டு விட்டு தொடர்வார்கள்.

அப்படி ஒருநாள் மாலைநேர நடையின் போது மேலக்குயில்குடி சாலையில் நடந்து கொண்டே பைபிளில் படித்தது குறித்து "யாரவது அடித்தால் மறுகன்னத்தைக் காட்டுவது எல்லாம் எப்படித் தாத்தா முடியும்?" என்றதற்கு, அங்குள்ள சர்ச் அருகே புதிதாகக் கட்டப்பட்டுக் கொண்டிருந்த ஒரு வீட்டின் முன் அமர்ந்து கொண்டு, அஹிம்சையின் பலத்தை, அஹிம்சைக்குத் தான் உச்சகட்ட மனபலமும், ஆன்ம பலமும் தேவையென்பதையும் விவரித்து, காந்தியின் சத்தியாக்கிரகத்தின் சக்தியை விளக்கினார்கள்.

நேதாஜி என்ற தன்னிகரற்ற தலைவருடன் நேரடி களவீரராக கடமையாற்றிய தாத்தாவிடம் இருந்து, காந்தியத்தின் ஆணிவேர் பாடங்கள் குறித்து அறிந்தேன். காந்தியையும், நேருவையும், சுபாஷ் சந்திர போஸையும் காழ்ப்புணர்ச்சி கொண்ட இன்றைய தலைவர்களோடு ஒப்பிட்டு, எத்தனையோ சதித்திட்டங்கள் குறித்த செய்திகள் இன்று ஊடகங்களில் வலம் வருகின்றன. அன்று களத்திலிருந்த வீரர்களுக்கு, இவர்களெல்லாம் தேசவிடுதலை என்னும் மாபெரும் இலக்கிற்கு அடிகோலிய ஆதர்ச மூர்த்திகள். கருத்துக்களில் வழிமுறைகளில் பேதங்கள் இருப்பினும், அன்றைய மனங்களில் தலைவர்கள் குறித்த, அவர்களின் கீழ்மையான உள்நோக்கங்கள் குறித்த அனுமான விமர்சனங்கள் இல்லை.

மீண்டும் மறுகன்ன விவாதம்.
"இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்" என்ற குறளையும் அடிக்கடி தாத்தா குறிப்பிடுவாரகள். அதனையும் சொல்லி அது நடைமுறையில் மிகவும் சாத்தியமான கருத்தே என்று கூறி வாழ்வில் பயன்படுத்திய சில தருணங்களையும் சொன்னார்கள். உடன் பணிபுரிவோர் சில சமயங்களில் கீழான செயல்களில் ஈடுபடும் போதும், நாம் நமது நற்குணங்களில் இருந்து விலகத் தேவை இல்லை, அவர்களுக்கும் நன்மையே செய்து வர நாளடைவில்மனம் திருந்தியதையும் குறிப்பிட்டார்கள். இன்று இன்னா செய்தாருக்கு நன்னயம் செய்யும் பொறுமையும், அவர்கள் எக்காரணம் கொண்டேனும் நாணுவார்கள் என்ற நம்பிக்கையும் இல்லாது போனதோ?

அடுத்த வாரம் பள்ளியில் scriptures போட்டி வைக்க, தாத்தாஉடன் பேசியதெல்லாம் எழுத, முதற்பரிசு scriptures இல். அன்றிலிருந்து இன்று வரை, உயிர் உள்ளளவும்,
"நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே
நினைப்பதும் நிகழ்வதும் நின் செயலாலே"
என்று அனுதினம் தாத்தாவின் அருளை சொல்லாத நாளில்லை.

எந்த ஒரு செயலும் முயற்சி செய்து பாராது முடியாதென்று சொல்வது தாத்தாவுக்கு அறவே பிடிக்காத விஷயம். ""Success often comes to those who dare and act" - தாத்தா அடிக்கடி அழுத்திச் சொல்லும் வாசகம்.

அனுதினம் அதிகாலை (எனக்கெல்லாம் 5.30 மணிக்கு தான் சுப்ரபாதம்) எழுந்து, குளித்து, கோலமிட்டு, யோகாசனம் செய்வதற்கு அமர வேண்டும். மார்கழி மாதமெனில் பச்சைக் கற்பூரம் மணக்கும் இளம் சூடான சர்க்கரைப் பொங்கல் பிரசாதம் தாத்தாவின் கையில் இருந்து கிடைக்கும். அப்படி ஒரு நாளில் பாலகனான பாலா செய்த தகராறு, "என்னை மட்டும் ஏன் தினமும் குளிக்க சொல்கிறீர்கள்? தாத்தாவெல்லாம் குளிப்பதும் இல்லை பல் துலக்குவதும் இல்லை" என்பது. சூரியனும் காணாது காலைக் கடன் அனைத்தும் தாத்தா முடித்துவிட்டால் பாலா என்ன செய்ய முடியும். நியாயமான கேள்வி. மேலும் தாத்தாவிடம் கற்ற யோகாசன பாடம் எல்லாம் வாசலில் நின்று உரத்த குரலில் பாடம் எடுப்பார் 3 வயது பாலா. திரிகோனாசனம் செய்வதற்கு தாத்தா "கை நேர்கோட்டில் இருக்க வேண்டும், பார்வை மேல்நோக்கி இருக்கும் கையைப் பார்க்க வேண்டும் எனப் பாடம் நடத்த, பாலாவும் அதே போல "எங்க, மேல பாருங்க நேர மேல பாருங்க" என்று சத்தமாய் வாசலில் நின்று குரல் கொடுக்க, தெருவில் போவோர்கள் எல்லாம் மேலே அண்ணாந்து வேப்பமரத்தைப் பார்த்துக் கொண்டே செல்வார்கள். தாத்தாவுடன் விதண்டா வாதம் செய்ய உரிமை பெற்ற ஒரே நபர் என்ற பெருமை பாலாவையே சேரும்

முந்தைய பதிவு (7)

அடுத்த பதிவு (9)
smile emoticon

சற்குரு - தாத்தா - 7

சற்று அதிகம் personal நினைவுகளும், உறவுகள் குறித்த குறிப்புகள் நிறைந்த பதிவு இது. தொடர்ந்து படிப்போருக்கு ஒரு தொடர்ச்சி இருக்கும் பொருட்டு share செய்கிறேன்.

அப்பாவின் பிறந்த தினம் இன்று - ரவி அப்பா.
அப்பா பிறந்த 1951 மே 29 தினத்தை நினைவுகூறக் கூடிய யாருளர் இன்று. தாத்தா மற்றும் அம்மாச்சியிடம் கேட்டுப் பார்க்கலாம்.
தாத்தா, அப்பாவைப் பற்றிய சிறு வயது நினைவுகளில் அதிகம் குறிப்பிடுவது - very soft and gentle, obedient என்ற பார்வையில்தான். பெருமாள் கோவில் தெருவில் (இன்றைய aarathy hotel பின்புறம்)வீட்டுக்கு அருகில் PSS bus வந்து திரும்புமாம். இரண்டு வயது நிரம்பிய ரவி அப்பாவும் அவர்களை விட இரண்டு வயது மூத்த செல்லத்தையும் வாசலில் அமர்ந்திருப்பார்களாம். பஸ் அருகில் வந்ததும் ஆர்வத்தில் அப்பா வாயில் விரலோடு 'ஸ்..' என எழுந்து நின்று விட, அத்தை 'வேண்டாம் தம்பி, விழுந்துடுவ' என சொன்னதும் அப்பா அப்படியே உட்காரந்து கொள்வார்களாம். ஒவ்வொரு பஸ் திரும்பும் போதும் இது நடக்குமென, தாத்தா புன்னகையோடு விவரிப்பார்கள்.
மேற்கொண்டு பெருமாள் கோவில் வீதி கதைகள் அப்பாவின் எழுத்திலேயே கேட்கலாம்..
"அழும்தொறும் அணைக்கும் அன்னை - அறிவிலாது ஓடி
விழும்தொறும் எடுக்கும் அப்பன்
தொழும்தொறும் காக்கும் தெய்வம்
சொந்தமாய் எடுப்போர்க்கெல்லாம் குழந்தை" - கானகந்தர்வன் யேசுதாஸ் குரலில் இப்பாடல் கேட்கும் போதெலாம் நெஞ்சம் நிறைந்து தளும்பும்.
இறையும் குருவும் இவ்விதமே..
அஸ்ஸாம் தவிர்த்த எனது ஐந்தாம் வகுப்பின் எஞ்சிய நாட்கள் தாத்தாவுடன் கண் விழிக்கும் நேரமெல்லாம் இருக்கும் தினங்கள் ஆயிற்று
உறவுகள் தொடர்கதை - உணர்ந்தது இக்காலத்தில்தான். வழக்கமாய் பார்த்துப் பழகிய உறவுகளைத் தவிர யாரிடமும் பழகாத தொட்டாற்சுருங்கி நான் அப்போது.(மனசாட்சி: இப்போது மட்டும் என்னவாம்?? சற்று அதிகமானோரைத் தெரியும் அவ்வளவுதான்)
பாட்டியின் மறைவை ஒட்டி பல தினங்கள் அம்மை நகரில் இருந்தபோதுதான் பல பெயர்களுக்கு எனக்கு முகங்கள் அறிமுகம். மருதுபாண்டியன் அண்ணனை நன்கு தெரியும், அண்ணன் மதுரையில் படித்துக் கொண்டிருந்த போது தாத்தா சொன்னது - உங்கள் அனைவருக்கும் மூத்தவன். அண்ணன்!! Sorry கோபிண்ணா.. "என்னைத் தெரியுமா" என அம்மையநாயக்கனூர் மாடி அறையில், தோடி ராகம் படம் பார்த்துக்கொண்டிருந்த போது அரையிருளில் நீங்கள் கேட்ட போது, எனக்கு நிஜமாய் உங்களைத் தெரியாது. இது போன்ற அறியாமைக்கு அதிகம் திட்டு வாங்கியிருக்கிறேன் தாத்தாவிடம்.. வேகவேகமாய் நடந்து வரும் செண்பக அத்தானை நன்கு தெரியும். ஆனால் அவர்கள் வீடும் அம்மையநாயக்கனூரில் அரசமரத்துக்கு எதிரிலிருந்த சாரதி மாமா வீடுதான் என்பது எங்களுக்கு ஆச்சரியமான செய்தி. வானதி அத்தாச்சி வீடு அது!!!
மதுரையில் இருந்த காலத்தில் யாரேனும் வீட்டுக்கு வருகிறார்கள் என்றால் quiz ஒன்று நடக்கும் எனக்கு. பேந்தப் பேந்த விழித்ததுதான் அதிகம். ஒருமுறை தாத்தா தன் இளமைக்கால நினைவுகளைப் பகிர்ந்து கொண்டிருக்கும் போது, 'தங்கப்பாண்டியன் வீட்டருகில்' எனக் குறிப்பிட, 'யாரது?' என்று கேட்டுவிட்டேன். பழியாய் வந்ததே கோபம் தாத்தாவிற்கு. தாத்தாவையும் தெரியவில்லை, அம்மை நகரையும் தெரியவில்லை. அன்றுமுதல் குலவரலாறு விலாவரியாய் பாடம் நடத்தப்பட்டது எனக்கு!!
இதற்கும் சில வருடங்களுக்கு முன்னால்-ஒரு சின்ன flashback: தாத்தாவுக்கும் எனக்குமான secret..இன்று என் எழுத்து வாயிலாய் மனம்திறக்கையில் அப்பாவும் தாத்தாவும் பெரியம்மாச்சியும் மேலிருந்து புன்னகை புரிவதாய் அகக்காட்சி. மாயை அகன்ற அரன் உலகன்றோ அவர்களுடையது -
"பாசிபடு குட்டத்திற் கல்லினைவிட் டெறியப்
படும்பொழுது நீங்கிஅது விடும்பொழுதிற் பரக்கும்
மாசுபடு மலமாயை அருங்கன்மம் அனைத்தும்
அரனடியை உணரும்போ தகலும்பின் அணுகும்" தாத்தா சொல்லிக்கொடுத்த பாடல்...
அது ஒரு பொங்கலுக்கு முன்தினம்.
சில வருடங்கள் ஷண்முக பவனமும் செல்வ நிலையமும் மௌனம் சாதித்த காலம். போக்குவரத்தின்றிப் போனதால், என் தாய்க்குத் தாயாகி எனக்கும் தாலாட்டுப் பாடிய மாதரசி - another great legend - சௌந்தரம் அம்மாச்சி - பெரியம்மாச்சி என்னைப் பார்க்கவேண்டும் என, தாத்தா ரகசியமாய் அங்கு அழைத்துப்போனது; மிகத் தெளிவாய் அந்த மாலையின் விளக்கேற்றும் வேளையின் இருளோடு நினைவில் அச்சேறி இருக்கிறது. அருகில் பார்த்ததில்லையே தவிர, தாத்தா அதிகம் குறிப்பிடும் நபர் பெரியம்மாச்சி.தாத்தா பலமுறை அங்குள்ளோர் அனைவர் குறித்தும் சொல்லி அழைத்துச் செல்கிறார்கள். As usual I was blank, the moment I entered there.. பெரியம்மாச்சி தழுவி உச்சிமுகர்ந்த சேலை வாசமும், கன்னத்தை கைகளால் அழுத்தி முத்தமிட்ட பத்மாத்தையும், வேலேந்திய முருகனும் that scene is etched in memory forever..
அங்கிருந்த ஒரு சில நிமிடங்கள் அந்த முருகனையேதான் பார்த்துக்கொண்டிருந்தேன்.. அவர் கையிலிருப்பது சக்திவேலா (வீரவேலா, தாரைவேலா, விண்ணோர் சிறை மீட்ட தீரவேலா எனப் பெருத்த சந்தேகம்) எனத் தெற்குப் பக்கத்து வாசற்படியில் அமர்ந்து அம்மாச்சியிடம் பேசிக் கொண்டிருந்த தாத்தாவிடம் கேட்டதும் நினைவிருக்கிறது. மீண்டும் வீடு நோக்கி நடக்கும் போது, தாத்தா கண் கலங்கியிருந்தது (மனதின் வேதனை நானறியேன்), கூரைப்பூ வாங்கிக்கொண்டு போகும் போது, கடையில் கூட்டமென சொல்லிவிடலாம் என்றார்கள், நான் அதுவரை அறிந்திராத கம்மிய குரலில். அண்ணனின் அந்த ரகசியம் பெரியம்மாச்சியும் இறுதி வரை காத்தார்கள். TVS ஆஸ்பத்திரியில் இறுதித் தறுவாயில், அம்மா என்னையும் அழைத்துக் கொண்டு பெரிய அம்மாச்சியைப் பார்க்கச் சென்ற போது, "சிறு வயதிலேயே பிரித்துச் சென்று விட்டீர்களே, பார்க்காத குழந்தைக்கு எப்படி நினைவிருக்கும்?" எனக் கேட்டு என் தலையை வருடியதை நினைக்கும்போது, அந்த அண்ணன் தங்கையின் புரிதலும் பகிர்தலும் உணர முடிகிறது. தாத்தாவின் வழிகாட்டுதலில் பின்னாட்களில் ஷண்முக பவனம், மனம் திறந்து லேசாக்கும் தனிப்பட்ட புனித ஸ்தலமாகவே இருந்தது.
மீண்டும் ஐந்தாம் வகுப்பு தினங்கள் - தாத்தா அப்பத்தாவுடன் - பாலா, செண்பகவல்லி அத்தை அனைவருடன். பெரியவர்களின் மனத்துயரங்கள் எல்லாம் புரியாத வயது. 'துன்பம் நிறைந்து வந்த போதும் மனம் சோர்ந்து மதிமயங்க மாட்டேன்' - மேல் ஸ்தாயியில் அத்தை தழுதழுக்கும் போது, அத்தையின் குரலை எட்டிப்பிடிக்க முயன்று கொண்டிருப்பேன். ஜெய ஜெய 'பாலா' சாமுண்டேஸ்வரியும், ஓம் நமோ 'நாராயணா'வும் பாடச் சொல்லி பாலா ஒருபுறம் நேயர் விருப்பம் கேட்க, அருகிலோ திண்ணையிலோ அமர்ந்தபடி 'வெஞ்சமரில் அஞ்சேல் என வேல் தோன்றும்', போன்ற வரிகளில் நெக்குருகி கண்ணீர் வடிய அமர்ந்திருக்கும் தாத்தா. அழுகை புரியவில்லை எனினும், தவத்தை கலைத்தலாகாதென அன்றும் புரிந்தது.
நல்ல அழுகை, நல்ல ஸ்னானம் - லா.ச.ரா சொல்ல, அனுபவத்தில் மேலும் புரிந்தது.
சில அனுபவங்கள் அனைவருக்கும் நிகழும்போதிலும், அவற்றிலிருந்து பெறப்படும் தரிசனங்கள், அவரவர் தீட்சண்யத்தைப் பொறுத்ததே. நமக்கு எவ்வளவு கொள்ளளவோ அவ்வளவுதான்.

முந்தைய பதிவு (6)

அடுத்த பதிவு (8)

Friday, June 5, 2015

அமுதுக்கும் தமிழென்று பேர் - 3

"தேனூறும் தேவாரம் இசைப் 
பாட்டின் ஆதாரம்
தமிழிசையே தனியிசையே 
தரணியிலே முதலிசையே
ஊன் மெழுகாய் உருகும் கரையும் 
அதில் உலகம் மறந்து போகும்" - இன்னிசை ராஜாவின் இசையில் இப்பாடல் திகட்டாத தீஞ்சுவை.

தமிழின் இனிமையும் வளமையும் உணரத் திரைப்படங்களே பெரும் பங்கு வகித்தது. திருவிளையாடல் படத்தின் வசனம் அப்பாவின் tape recorder-இல் பல முறை அந்த "ற்றொயிங்ங்ங்" இசையோடு கேட்டு முதல் காதல். 

"சொற்சுவை பொருட்சுவை அனைத்தும் கூட்டி 
சுந்தரத் தமிழினிலே பாட்டிசைத்து 
செந்தமிழ்க் கவி பாடும் புலவன் நான்" என்ற வசனம் பிள்ளைப் பிராயத்தில் அப்பாவிடம் பாராட்டுப் பெறுவதற்காக பேசியது. இது போன்ற படங்களின் வசனங்கள் பேசி விட்டாலே மனதுக்குள்  தமிழ்ப் புலமை வந்துவிட்டாதாய் ஒரு பூரிப்பு வந்துவிடும். பின்னர் மேலும் மேலும் என்று மனம் பித்துக் கொள்ளும். "அங்கம் புழுதிபட", "சங்கறுப்பது எங்கள் குலம்" எல்லாம் புரிய இன்னும் சில வருடங்கள் ஆனது. 

ஆனால் இந்த "ஞானப் பழத்தைப் பிழிந்து" பாட்டில் ஔவைப் பாட்டி பாடும் அடுத்த வரி புரிய வெகு காலம் ஆயிற்று!!

பத்தாம் வகுப்பில் "திருவிளையாடற் புராணம்" பாடத்தில் படித்த போது, சங்கத் தமிழ் பாடலாகிய 
 
கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறியெயிற் றரிவை கூந்தலின்

நறியவும் உளவோ நீயறியும் பூவே

என்ற பாடலை ஜனரஞ்சகமாய் அனைவரிடமும் கொண்டு சேர்த்த சிவாஜி கணேசனையும் ஏ.பி.நாகராஜனையும் எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை.

தமிழின் செழுமைஅறிய சங்க காலம் தொடங்கி இன்று வரை நடை பயில வேண்டும் தமிழோடு கரம் கோர்த்து.

பள்ளிப் பாடத் திட்டத்தின் ஊடேயும் தமிழின் நேர் நேர் தேமா, கருவிளம், கூவிளம், குற்றியலுகரம், லிகரம் போன்ற கடபுடா இலக்கணம்(இலக்கணமும் இனிமையே, அது குறித்து இப்போதே எழுதினால் வழக்கமாய் வாசிக்கும் 10 பேரும் நிறுத்தி விட்டால் என்ன செய்வதென்று அஞ்சி அந்த பக்கம் இப்போது செல்லவில்லை) தவிர சில ரசிக்கவேண்டிய இரட்டுற மொழிதல் போன்ற பாடல்களும் இருந்தன. 

இது போன்ற double meaning சிலேடையில் மன்னர் கவி காளமேகம். இவர் மதுரையை அடுத்த திருமோகூர் என்ற ஊரைச் சேர்ந்தவர் என்று ஒரு செய்தி.

"நஞ்சிருக்கும் தோலுரிக்கும் நாதர்முடி மேலிருக்கும் வெஞ்சினத்தில் பல்பட்டால் மீளாது - விஞ்சுமலர்த் தேன் பாயும் சோலைத் திருமலை ராயன் வரையில் பாம்பாகும் வாழைப் பழம் "

என்று இவர் பாம்பையும் வாழைப்பழத்தையும் குறித்து இரட்டுற மொழிந்தது பாடத்தில் இருந்தது. 

நஞ்சிருக்கும் - விஷமிருக்கும்தோலுரிக்கும் - பாம்பு தோல் உரிக்கும் நாதர்முடி மேலிருக்கும் -  சிவனின் சிரசில் இருக்கும் வெஞ்சினத்தால் பற்பட்டால் மீளாது - பாம்பின் பல் பட்டால் உயிர் மீளாது என்று படித்தவுடன் பாம்பைக் குறித்தே பாடுவது போலத் தோன்றினாலும்,.

நஞ்சிருக்கும் - நைந்துபோயிருக்கும் (பேச்சுவழக்கில்) நஞ்சிருக்கும்தோலுரிக்கும்_ சாப்பிடும் முன் தோல் உரிக்கப்படும்நாதர்முடி மேலிருக்கும் - அபிஷேகத்தின் போது சிவனின் சிரசில்  வாழைப்பழத்துக்கும் இடமுண்டுவெஞ்சினத்தால் பற்பட்டால் மீளாது - பல்லில் அரை பட்டால் மீளாது.


ஆகவே வாழைப்பழம் பாம்புக்கு நிகராகின்றது என்று முடிக்கிறார் இந்தக் கவி
.

இவரது பல பாடல்களில் இப்படி சிலேடையைக் காணலாம். 

மேலும் "த"கர வர்க்க எழுத்துக்களாலேயே அமைந்த பாடல், "க"கர வர்க்கத்திலேயே எழுதிய பாடல் எல்லாம் இவரிடம் உண்டு.

தத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதிதுத்தித் துதைதி துதைத்தத்தா தூதுதிதித்தித்த தித்தித்த தாதெது தித்தித்ததெத்தாதோ தித்தித்த தாது.

இது ஒரு வண்டைப் பார்த்துப் பாடுவதாக அமைத்திருக்கிறார்.

தத்தித் தாது ஊதுதி - தாவிச் சென்று பூவின் மகரந்தத்தைஊதி உண்கிறாய் 
தாது ஊதித் தத்துதி - மகரந்தத்தை ஊதி உண்ட பின் மீண்டும் தாவிச் செல்கிறாய்
துத்தித் துதைதி - துத்தி என்று ரீங்கரித்தபடியே அடுத்த பூவிற்குச் செல்கிறாய்
துதைது அத்தா ஊதி - அப்பூவையும் நெருங்கி மகரந்தத்தை உண்ணுகிறாய்
தித்தித்த தித்தித்த தாதெது - இரண்டிலும் தித்திப்பான இருந்த மகரந்தம் எது?
தித்தித்த தெத்தாதோ தித்தித்த தாது - தித்திப்பான பூ எது? அழகான பூவின் இதழ் எது?


காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை கோக்குக்கூ காக்கைக்குக் கொக்கொக்க - கைக்கைக்குக் காக்கைகுக் கைக்கைக்கா கா  
சரியாக வாசிக்க முடிந்தால் comment போடவும், அர்த்தம் கூறுகிறேன் ;)

மேலும் இவர் ஒரு பாடலில்  
கண்டீரோ பெண்காள் கடம்பவனத் தீசனார்பெண்டீர் தமைச் சுமந்த பித்தனார்-எண்டிசைக்கும்மிக்கான தங்கைக்கு மேலே நெருப்பையிட்டார்அக்காளை ஏறினாராம்.

அக்காளை தங்கையை எல்லாம் என்னவோ பண்ணி விட்டார் ஈசன் என்று சிவனைக் கண்டபடி ஏசி பெண்பித்தன் எனச் சொன்னது போலத் தொனிக்கும் இப்பாடலின் உண்மையான கருத்து 

கடம்ப வனத்து ஈசனார் உடலில் பாதியை உமைக்கும், தலையை கங்கைக்கும் அளித்திருக்கும் பித்தர். எட்டுத் திசைகளிலும் புகழ் மிக்க தன் கைகளிலே நெருப்பை ஏந்தி இருக்கிறார் 
காளை மாட்டை வாகனமாகக் கொண்டவர்.

இன்னும் இவர் பாடல்கள் சொல்லிக் கொண்டே போகலாம். மோர் கொடுத்த ஆய்ச்சியர் மேல் பாடிய வஞ்சப் புகழ்ச்சிப் பாடல், உணவு சமைக்க தாமதமாக்கிய சத்திரக்காரன் மேல் கோபமாகப் பாடிய பாடல் என..

"23ஆம் புலிகேசி" படத்தில் "நீ மன்னரைப் பார்த்து சற்றும் இடைவெளி இல்லாமல் திட்டினாயே" என்ற பகுதி சமீபத்திய படங்களில் இது போன்ற தமிழ் நகைச்சுவையை மீண்டும் தூசி தட்டும் முயற்சி.

Lighter side of Tamil - இன்றைய பதிவில்.. அடுத்த பதிவில் வேறொரு சுவையோடு சந்திக்கலாம்