Tuesday, January 26, 2016

சற்குரு - தாத்தா - 21

டிசம்பர் 1941 - பினாங் நகர வரலாற்றின் எரி தினங்கள். தீயணைப்பு நிலையத்தின் மேல் தாக்குதல் நடத்தி நாசப்படுத்தியதில் பற்றி எரிந்த நகரின் நிலை நரகமாயிற்று.
காவலன் காவான் எனின் எது நிகழுமோ அதுவே நிகழ்ந்தது. அதுவும் கையறு நிலையில் நாட்டைப் பகைவன் தாக்குதலுக்கு விட்டுவிட்டு எந்த அறிவிப்புமின்றி நிராதரவாக்கியிருந்தது மாட்சிமை பொருந்திய நிர்வாகம். 

இதற்கு ஒரு தினம் முன்னதாகவே ஆங்கிலேய அரசின் அத்தனை ஆங்கிலேய அலுவலர்களுக்கும் ரகசிய ஆணை பிறப்பித்து இரவோடு இரவாக கப்பலேற்றினர். அதனிடையே பினாங் நகராட்சியில் பணிபுரிந்த ஒரு சீனருக்கும் அந்த அழைப்பு வந்திருந்தது - 'நள்ளிரவில் துறைமுகத்துக்கு குடும்பத்துடன் வரவும்'; அவ்வளவுதான் தகவல். காரணம் அறியாத அவரும் துறைமுகம் சென்றடைய அவருக்கு அதிர்ச்சி - நூற்றுக்கும் மேற்பட்ட ஆங்கிலேய கணவான்களும் அவர்கள் குடும்பத்தினரும் அவசரஅவசரமாய் கப்பலேற, இவரும் ஏதென்று அறியாமல் ஏற முற்பட்ட போது, தடுத்து நிறுத்தப்பட்டார். தானும் ஆங்கிலேய அரசின் உயரதிகாரி என்று தெரிவித்து ஆணையைக் காட்டிய போதும், 'தவறுதலாக உங்களுக்குத் தகவல் அனுப்பப் பட்டுவிட்டது. கப்பலில் வெள்ளையர்களை மட்டுமே ஏற்றிக் கொள்ள அனுமதி' என்று இறக்கி விடப்பட்டார். சூரியன் மறையாத ஆங்கிலேய சாம்ராஜ்யத்தின் ஒற்றைப் பிரதிநியாய் இருளில் தனித்து விடப்பட்டு, எவ்விதம் எதிரிகளை எதிர்கொள்ள வேண்டும் என்ற எந்த ஆணையும் இன்றி நின்ற போது, அதுவரை அசைக்க முடியாதிருந்த ராஜவிசுவாசமும் நம்பிக்கையும் அவருக்கும் ஆட்டம் கண்டது. அவர் மூலம் சிறிது சிறிதாய் தாங்கள் நிராதரவாய் விடப்பட்ட நிலை மக்களுக்குப் புரிந்தது.

அடுத்தடுத்து நிகழ்ந்த வெடிகுண்டு தாக்குதல்களில் நிலைகுலைந்த மக்கள் மேய்ப்பன் இல்லா மந்தையாய் அலைந்தனர். 

உள்ளூர் மக்கள் மலைப்புற கிராமங்களையும் ரப்பர் தோட்டங்களையும் நோக்கி பயந்து ஓடினர். அதைத் தொடர்ந்து தாத்தாவும் உடன் பணிபுரிந்தவர்களும் காடுகளுக்கும் மலையில் ரப்பர் தோட்டங்களுக்கும் சென்று தங்க முடிவு செய்தனர். தண்ணீர்மலையான் என்னும் பாலதண்டாயுதபாணியை வணங்கி வாணிபத்தையும், வீடுவாசலையும் விட்டுவிட்டு உயிரை மட்டும் கையில் பிடித்து வெளியேறியது நகரத்தார் குடும்பங்கள். 

நேற்றிருந்தார் இன்றில்லை எனும் போது நாளை என்பது யார் வசம் - அனைத்தையும் மேலிருந்து பார்க்கும் அவன் வசமா? விமானத்தில் வரும் எமன் வசமா?





அக்கரை நிலை இவ்வண்ணமெனில் வீட்டில் அதனினும் மேலாய் தாயும், தகப்பனும், உடன்பிறந்தோரும் தகவலறிய வழியின்றி கடிதம் மேல் கடிதம் எழுதிக்கொண்டு, ஏதேனும் வழியில் நல்ல செய்தி வந்துவிடாதா என நம்பிக்கையோடு காத்துக்கொண்டு நாட்கள் நீண்டு வருடங்களாயின.

"ஆசை மனதுக்கு வாசலை வைத்துப் போனவன் போனான்டி
(போனவன் போனான்டி)
வாசலைத் தேடி வாழ்த்துக்கள் பாடி வந்தாலும் வருவான்டி" - படகோட்டி படத்து வாலியின் வரிகள்; நெய்தல் நிலத்து இரங்கலையும் ஏக்கத்தையும் சுமந்த நெஞ்சை மயக்கும் சுசீலாம்மா குரலில், எப்போது கேட்டாலும் மனதை வருடும்.

போனவர் குறித்த எந்தத் தகவலுமின்றி கடலைப் பார்த்துப் பார்த்து ஏங்கும் பேதை நெஞ்சின் வரிகள். தாத்தாவின் நினைவலைகள் போர்க்களத்தில் நிற்கும் தருணமதில், அன்று எப்படி இருந்திருக்கும் அப்பத்தாவின் மனநிலை? மணமாகி சிலமாதங்களில் கிளம்பிச் சென்ற கைப்பிடித்த அத்தை மகன்;அவர் சென்ற திசையில் போர்முரசொலிக்க, கடிதங்களே இல்லை; அனுதினம் யுத்தத்தில் ஏற்பட்ட அழிவுகளும் உயிரிழப்புகளும் செய்திகளாய் வர, தனக்கான செய்தியும் அதில்தான் இருக்கிறதோ என மனம் தவித்த தவிப்பு யார் அறிவார். தகவல் ஏதும் அறிய முடியாத நிலைகளில் மனம் போடும் நாடகங்கள் அனைத்தும் அச்சத்தை ஐயத்தைப் பெருக்குவதாகவே இருக்கும் என்று நாம் உணரமுடியும். நாம் தொடர்பு கொள்ளும் நபர் 10 முறை தொடர்ந்து போனை எடுக்கவில்லை என்றாலே என்னவெல்லாம் கற்பனை செய்கிறது மனது. "யாருமே மிச்சமில்லையாம்.. மலேயாவில் எல்லாம் ஊரே அழிந்துவிட்டதாம்" என்றெல்லாம் பரவும் பரபரப்பு வதந்திகள்.



தங்கமாய் குலம்விளங்கப் பெற்றெடுத்த ஆண்மகவு முகம் பார்க்கவும் வரமுடியாத கணவன்; குழந்தை பிறந்த செய்திக்கும் பதில் ஏதுமில்லை; தவழும் பிள்ளைக்கு முகம் காட்டவேனும் எப்போ வருவாரோ எந்தன் கலி தீர என்று எப்படித் தவித்திருக்கும் அந்த மனது. கணவன் உயிரோடுதான் இருப்பான் என எந்த நம்பிக்கையில் உலவுகிறாள் என ஊர் மெல்லப் பின்னால் பேசத் தொடங்கியிருப்பதும் அரசல் புரசலாயாய் காதில் விழவே செய்கிறது. அனைத்தையும் அடிமனதில் அடக்கிக் கொண்டு, பழநியாண்டவன் பதங்களைப் பற்றிக் கொண்டு, நாட்களைக் கழித்த அப்பத்தா சேதுரத்தினம். இன்று (27-ஜனவரி) அவர்களது 93ஆவது பிறந்ததினம்.

முந்தைய பதிவு (20)

அடுத்த பதிவு (22)

Friday, January 8, 2016

அமுதுக்கும் தமிழென்று பேர் - 5

இரட்டைப் புலவர்கள்

தமிழை உயிருக்கு நேராய் வைத்து பெரும் புலமை பெற்றோரில் இளம்சூரியர், முதுசூரியர் என்றறியப்படும் இரட்டைப்புலவர்கள் அடக்கம்.

அவர்கள் புறவாழ்விலும், கவிவாழ்விலும் இணையாகவே இயைந்த இரட்டையர்கள். எவ்விதம் எனில் - இவர்களில் ஒருவர் பிறவியிலேயே கண்பார்வையற்றவர்; மற்றொருவர் நடக்க இயலாதவர். கண்பார்வையற்றவர் நடக்கமுடியாதவரை தோளில் சுமந்து கொள்ள, தோள் அமர்ந்தவர் வழிகாட்ட விழியற்றவர் நடப்பாராம்.

இவ்விதம் உடலால் மட்டுமன்றி, இவர்கள் இயற்றிய கவியாலும் இரட்டையர்கள்; வெண்பா பாடுவதில் வல்லவர்கள் இருவரும். முதலிரண்டடியை ஒருவர் பாட ஈற்றடி (இறுதி அடி) இரண்டையும் மற்றொருவர் பாடி நயமோடு பொருள் விளங்கப் பாடுவது இவர்களது தனிச்சிறப்பு.

அக்கால வழக்கிற்கிணங்க புரவலர்கள்(பொருளோடு அருள் உடையவர்கள், தமிழ்க்கவிக்காக கொடை கொடுத்தோர்) இருப்பிடம் நாடி ஊர்ஊராகப் பயணம் மேற்கொண்ட இவ்விரு புலவர்களும் மதுரை வந்தடைந்தனர்.

பொற்றாமரைக்குளத்தில் நீராடி மீனாட்சி சொக்கநாதரை தரிசிக்கலாம் என எண்ணினர். கால்கள் அற்றவர் கரையில் அமர்ந்திருக்க கண்ணிழந்தவர் துணியைத் துவைக்கத் தொடங்கினார். துணி குளத்துள் கைதவறியது.
அதைக் கண்ட கால் அற்றவர் பாடத் தொடங்கினார்

"அப்பிலே தோய்த்திட்டு அடுத்தடுத்து நாம் அதனைத்
தப்பினால் நம்மையது தப்பாதோ"-

(அப்பு - தண்ணீர்; தண்ணீரிலே துணியை தினமும் போட்டு அப்பினால் - தோய்த்தால், நம்மை விட்டுத் தப்பியோட நினைக்காதோ? என்று பொருள்)

விழியற்றவர் அதற்கு விடைபோல மீதிப் பாடலைப் பாடுகிறார்:
"-அப்படியே 
ஆனாலும் கந்தை, அதிலுமோர் ஆயிரங்கண்
போனால் துயர் போச்சுப்போ"

(போனதென்னவோ கந்தைத் துணிதான்; கந்தை - கிழிசல்; போனால் போகட்டும் - கவலை போனதென்று விடு)

விடவில்லை முன்னவர்- மேலும் தொடர்கிறார்:

"கண்ணாயிரமுடைய கந்தையேயானாலும்
தண்ணார் குளிரையுடன் தாங்காதோ"

சேர்ந்தே இருப்பது - வறுமையும் புலமையும் அல்லவா? அதனால் அவர்களிடம் இருந்ததோ கந்தைத்துணி அதுவும் போய்விட்ட நிலையில், "கிழிந்திருந்தால் என்ன- தண்மை பொருந்திய குளிரைத் தாங்குவதற்கு உதவுமே" என்றார்.

பைந்தமிழைப் பன்னெடும் காலமாய் சிறக்கச் செய்வது அதனோடு இழைந்தோடும் பக்தியே. இதைப் பறைசாற்றுவது போல் பதில் சொல்கிறார் மற்றவர்:

 "எண்ணிப்பார் இக்கலிங்கம் போனாலென்
ஏகலிங்க மாமதுரைச் சொக்கலிங்கம் உண்டே துணை"

(கலிங்கம் - துணி; இந்தத் துணி போனால் என்ன. ஏகாம்பரனாகிய லிங்க ஸ்வரூபமாய் சொக்கலிங்கம் உண்டு நமக்குத் துணையாக நம்மைக் காப்பதற்கு என்று பொருள்)

மேலும் ஒரு சமயம் திருவாரூர் கோவிலில்
"நாணென்றால் நஞ்சிருக்கும் நற்சாபம் கற்சாபம் பாணந்தான்" 
என்று எழுதி நிறுத்திவிட்டார்கள். அதற்கு மேல் அவர்களால் எழுத இயலவில்லை. அதை அப்படியே கோயில் சுவரில் எழுதிச் சென்றார்கள்.

பிறகு வேறு பல ஊர்களுக்கு சென்று திரும்பியபோது பாடல்
 "மண்தின்ற பாணமே - தாணுவே சீரார் மேவும் சிவனே நீர் எப்படியோ நேரார் புரம் எரித்த தேர்" என்று யாராலோ சந்தத்தோடு முடிக்கப்பட்டிருந்தது.

பொருள்: 

முப்புரம் எரிக்க எடுத்துச் சென்ற நாண்(அம்பு) நஞ்சிருக்கின்றது - நைந்து இருக்கின்றது. வில் கல் போல (கற்சாபம்) கனமாக இருக்கின்றது. கல்லால் ஆன வில்லை எப்படி வளைத்து அம்பெய்ய முடியும்? 
அம்போ மண்ணால் அரிக்கப்பட்ட அம்பு  (மண் தின்ற பாணம்).
சிவனே, இவற்றையெல்லாம் கொண்டு எப்படித்தான் முப்புரம் எரித்தீர்களோ!!

இது மேலோட்டமான பொருள்.
 நஞ்சு எனும் விஷம் இருக்கும் வாசுகி எனும் பாம்பை நாணாகக் கொண்டும், நற்சாபம் கற்சாபம் - மேரு மலையே வில்லாகவும், மண் தின்ற பாணம் - கண்ணன் சிறு வயதில் மண் தின்றார். அந்த கண்ணணையே பெருமாளையே அம்பாகவும் கொண்டு முப்புரம் எரித்தார் என்று அர்த்தம் கிடைக்கின்றது. 

அவ்விதம் அழகுறப் புணைந்து அற்புதமாக முடித்தது வேறு யாருமல்ல - நாம் முன்னரே சந்தித்த கவி காளமேகம்!!

சிலகாலம் கழித்து திருவானைக்காவல் கோவிலுக்கு வந்த இரட்டையர் காளமேகத்தைக் காண ஆவலோடு சென்றனர். சிறது நேரம் முன்னரே காளமேகம் காலமானார் என்றறிந்த இருவரும் துடித்தனர்.

"ஆசுகவியால் அகில உலகெங்கும்
வீசுபுகழ்க் காளமேகமே"
என முன்னவர் பாட, இரண்டாமவர் உடனே,
'-பூசுரா
விண்கொண்ட செந்தனவாய் வேகுதே ஐயையோ
மண்தின்ற பாணமென்றவாய்!'
எனப்பாடி அழுதார்.

பள்ளிநாட்களில் இந்த இரட்டைப் புலவர்களைக் குறித்து நான் கேட்ட சந்தேகத்திற்கு மிகுந்த ஆர்வத்தோடு பதில் அளித்து, ஊருக்கு சென்றபின்னர் கடிதம் வாயிலாக மேலும் தகவல்கள் எழுதியனுப்பிய தாத்தா சிதம்பரம் பிள்ளையையும் அவர்களின் தமிழ்க்காதலோடு, தமிழ்ப்புலமையோடு சேர்த்து நினைவுகூரக் கடமைப்பட்டிருக்கிறேன்.

ஊனம் தாண்டும் மனவலிமை; ஆசுகவி(நினைத்தவுடன் பாடுவது spontaneous ) பாடும் பெரும் புலமை; பொருள் இல்லாத ஏழ்மை; அனைத்தையும் கடந்து செல்ல ஊன்று கோலாய் தமிழும் நகைச்சுவை உணர்வும் கொண்டு பாடல் பல எழுதிய இவர்கள் அனைவரையும் நினைவு கூர்வோம்.




Saturday, January 2, 2016

காற்றில் கலையுமோ சுடுமணல் சுவடுகள்

தொலையதிருக்கத்  தேடல் வேண்டும்

அன்றாடங்களின் அவசர அணிவகுப்புகளில் மிதிபடும் பட்டாம்பூச்சி ரகசியங்கள் எத்தனை எத்தனை!! வாழ்க்கை என்பதே பரபரப்பு என்றாகிவிட, நம் காதுகளில் வாழ்த்துப் பாட வரும் தேவதைகள் மௌனமாய் நம் கவனம்பெறாமல் காத்து நிற்கின்றன.

அப்படி ஒரு பொக்கிஷத்தை தன்னுள் சுமந்து, கண் திறந்து காண்பதற்காய் காத்துக் கிடந்தன சில  இடங்கள் இந்த சிங்கப்பூரில். ஒரு தன்னிகரற்ற தலைவனின் கர்மபூமி; எண்ணிலடங்காத வீர்ரகளை உருவாக்கிப் புடம் போட்ட தர்மபூமி; இந்திய சுதந்திரப் பயிர் விளைய அந்நிய தேசங்களில் நாற்றங்கால் பயிரிடப்பட்ட இடங்கள்.  அந்த மனிதர்கள் அதுவரை வாழ்ந்த, பொருள் தேடும் வாழ்விலிருந்து பொருள் பொதிந்த வாழ்வுக்கு உருமாற்றிய ரசவாத கூடங்கள்.

இதுகாறும் இத்தலங்கள் எங்கேயிருந்தன? 

"நம்முடைய அதிதீவிரமான தேடலை பிரபஞ்ச சக்திகள் நமக்காக நிறைவேற்றி வைக்கும்" என்பது எனக்கு மிகவும் பிடித்த மேற்கோள். 

அதற்கிணங்க தாத்தாவின் நூற்றாண்டை முன்னிட்டு எழுதத் தொடங்கிய தொடருக்காய் நினைவோடையிலிருந்து மனவோடைக்கு சுரந்த நினைவுகளின் தடத்தில் பயணிக்கத் தொடங்க, பல முறை படித்த கடிதங்களில் - அதுவரை கவனம் பெறாதிருந்த சில விவரங்கள் கண்ணில் பட்டன. அவற்றுள் முக்கியமானது தாத்தா தங்கியிருந்த ஒரு முகவரி - Syonan, Chancer Lane. 

பினாங் சென்று தாத்தா வாழ்ந்த இடங்களைக் காண வேண்டுமென்ற ஆவலில் தொடங்கிய தேடல் பட்டியலில் இவ்விடத்தையும் குறித்துக் கொண்டேன். 

கடந்த சில மாதங்களுக்கு முன் பேருந்தில் வழக்கமாய் சனி ஞாயிற்றுக் கிழமைகளில் கடக்கும் புகிட் திமா பாதையில் 'Chancery Lane' என்ற பலகை கண்ணில் பட, மின்னல் வெட்டியது. அதுவரை தாத்தா மலேயாவில் இருந்த இடங்கள் என்றே இருந்த புதிர்க்கட்டங்களில் ஒன்றுக்கு விடைகிட்டியது. Syonan என்றே அக்காலகட்டங்களில் சிங்கப்பூர் அழைக்கப்பட்டது என்பதும், சிங்கப்பூரும் 1965 வரை மலேசியாவின் பகுதியாகவே விளங்கியது என்பதும் புது வெளிச்சம் போட்டது. அதன் பின்னர் தொடர்ந்து இணைய தேவதையின் தயவால் விளங்கிய கூடுதல் தகவல்  - Indian National Army & Indian Independence League-ன் தலைமையகம் சிங்கப்பூர் Chancery Laneல்தான் இருந்திருக்கிறது என்ற தகவல். 

மலேசியாவின் Pahang கிளையில் IIL ல் பணியாற்றிய தாத்தா பயிற்சி பெற்று சில காலம் சிங்கப்பூரில் பணியாற்றி இருக்கிறார்கள். தாத்தாவின் பயிற்சிக் களமாய் விளங்கிய சிங்கப்பூரில், நேதாஜியின் சக்திபீடமாய் விளங்கிய சிங்கப்பூரில் இத்தனை வருடங்களாய் இருந்தும் இன்றுவரை காணாதிருந்த மறைபொருட்கள் தெரியத் தொடங்கிட, புதிய பார்வையில் தேடல் தொடங்கிட, கடந்த பத்து தினங்களாய் நிகழ்ந்த தொடர் தேடலில் நேதாஜியுடன் நெருக்கமாகப் பணியாற்றிய திரு. S.A.Ayer** என்பவர் எழுதிய "Story of the INA" என்ற புத்தகம் நூலகத்தில் கிடைத்தது.

மேலும் Institue of Southeast Asian Studies & Netaji Research Centre வெளியிட்ட சில ஆவணங்களில் இருந்து INA தொர்பான சில முக்கிய நிகழ்வுகளும் அவற்றின் நிகழ்களங்களும் தெரிய வந்தன. ஜப்பானியருக்கு  பயந்து பிரிட்டிஷாரும் பின்னர் பிரிட்டிஷாருக்கு பயந்து ஜப்பானியர்களும் சிலபல தகவல்களை அழித்துவிட, இரண்டாம் உலகப் போர் காலகட்டங்கள் குறித்த தகவல்கள் மிகக் குறைவாகவே எஞ்சின . எனவே 1980களில் நேதாஜி குறித்த தகவல்களைத் திரட்டுவதை ஒரு தனித்திட்டமாக நடத்தி, நேதாஜியின் அமைப்புகளில் நேரிடையாக கலந்து கொண்ட,  பங்கேற்ற, பணிபுரிந்த பலரது நேர்காணலின் மூலம் அவற்றைத் தொகுத்து ஆவணக் காப்பகங்களில் சேர்த்திருக்கிறார்கள். இத்தகைய பலரின் பேட்டிகள், கடிதங்கள், 1940களின் சிங்கப்பூர் வீதிகளின் வரைபடங்கள், கட்டிட வரைபடங்கள், புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் NAS Archivesல்  கிடைக்கின்றன. 

அவற்றையெல்லாம் தொகுத்துக் கொண்டு தொடங்கியது சுதந்திர வேள்வியின் சுடுமணல் பதிந்த INA சுவடுகளைத் தேடும் பயணம்.

முதலில் சென்ற இடம்: Old Ford Motor Factory. 

15 பிப்ரவரி 1942-ல் பிரிட்டிஷ் ஜப்பானியரிடம் சிங்கப்பூரை ஒப்படைத்தது இந்த கட்டிடத்தில்தான்.  

உலகப் போர் குறித்த பல ஆவணங்கள் ஒலி/ஒளிப்பதிவுகள், பழைய போர்க்கால தகவல் தொடர்பு சாதனங்கள், செய்திதாள்கள் எனப் பல பொருட்கள் இங்கே இருக்கின்றன.

அடுத்தது "Chancery Lane". 

பேருந்தில் சென்று இறங்கியதும் காற்று குளிர்ந்து, மழை பொழியத் தொடங்கியது. சிங்கப்பூருக்கே உரிய திடீர் மழை. உடல் சிலிர்த்தது மழைக்காற்றினால் மட்டுமா? வானவர் ஆசீர்வாதமாய், பன்னீர்த் துளிகளாய் மழைத்தூறல் மாறியதும், மெல்ல நடந்து நேதாஜி பாதம் பதிந்த, தாத்தா பாதம் பதிந்த IIL (Indian Independence League - Administrative wing of INA) தலைமையகம் இருந்த வீதியில் நடக்கத் துவங்கினோம்.

Propagandist & Finance Controller ஆக தாத்தா நேதாஜியின் நேரடிப் பார்வையில்  பணிபுரிந்த ஸ்தலம். உடலைத் தழுவிக் கடந்து செல்லும் காற்றில் இன்னும் அந்த மகான்களின் மூச்சுக் காற்று மிச்சம் இருக்குமா? சாலை எங்கும் மழை கழுவிச் சென்று கண்ணாடியாய் பளபளத்தது. INA வீரர்கள் அன்றாடம் காலை ஓட்டப் பயிற்சிக்கு அருகிருக்கும் Dunearn வீதிக்கு  செல்லும் போது இந்தப் பாதையில் பதிந்திருக்கக் கூடிய ஏதோ ஒரு காலடித் தடம் எங்கள் பாதங்களில் பட்டிருக்கக் கூடுமா? 

நேதாஜி பகல் இரவைத் துறந்து 25 மாதங்கள்  சுதந்திர பாரதம் ஒன்றே நினைவாய் வேள்வித்தீ வளர்ந்த Chancery Lane. 'சலோ தில்லி', 'ஜெய்ஹிந்த்' முழக்கங்கள் எங்கிருந்தோ காதுகளில் ஒலித்தது. ஒப்பற்ற தலைவனின் காலடியில் பணிபுரிந்த தினங்களை பெருமிதத்தோடு நெகிழ்ச்சியோடு தாத்தா நினைவு  கூறுவது மனதுள் இன்று நிகழ்ந்தது போல நினைவில் எழ, காற்றில்  மிக அருகில் தாத்தாவின் வாசம். தாத்தாவின் விரல்களைப் பற்றுகையில் உணரும் குளிர் நீரில் குளித்த குளிர்ச்சியும், ரேகைகளில் விபூதி குடியேறிய வாசமும் - 70 வருடமா 30 வருடமா? பின்னோக்கி சென்றது நானா? காலங்கள் கடந்து இன்று முன்னோக்கி வந்து உடன் நிற்கும் எம் தலைவனா? யார் அறியக்கூடும்?? Moments of Emotional high!

மூன்றாவது இடம்: Padang ground.

5 ஜூலை 1943 - Padang மைதானம். INA வீரர்கள் படை அணிவகுத்து நிற்க, சுபாஷ் சந்திர போஸ் அவர்கள் வீரவணக்கங்களை ஏற்கிறார். இரண்டு தினங்கள் கழித்து அதே இடத்தில் மாபெரும் பொது மக்கள் திரளுக்கு முன்னால் உணர்ச்சி மிக்க உரை ஆற்றுகிறார். இன்று போல அன்றும் மழை பொழியத் தொடங்குகிறது. யாரோ குடை நீட்டுகிறார்கள் அவர் தலை நனையாதிருக்கும் பொருட்டு. குடையை விலக்கிவிட்டு, இங்கு நிற்கும் எனது அனைத்து INA சகாக்களுக்கும் குடை தர இயலுமா? அவர்களுக்கு நிகழ்வதே எனக்கும் நிகழட்டும் என்று கொட்டும் மழையில் உணர்ச்சி பொங்கும் பேச்சைத் தொடர்கிறார். ஒருவரும் எங்கும் நகரவில்லை.

நனைந்தனர் - உள்ளிருக்கும் ஆன்மாவை தொட்ட பேச்சு மழையில், அவர் பேச்சு எழுப்பிய உணர்ச்சி மழையில், உணர்ச்சி பெருகிய கண்ணீர் மழையில், வான் பொழிந்த மழை யாருக்கும் உரைக்காது அனைவரும் நனைந்தபடி அந்த 3 மணி நேர பேச்சைக் கேட்டனர்.

அதே மைதானம், அவர் நின்ற அதே படிகள். National Art Gallery யாக உருமாறி விட்ட அன்றைய Municipal Office கட்டிடம். தங்கள் உடல்களைப் படிக்கட்டுகள் ஆக்கி நாம் சுதந்திரர்களாய் உலவ வழிவகுக்க முன்வந்த வீரர்கள் நின்ற மைதானத்தில் ஒரு கிரிக்கெட் கிளப் இருக்கிறது இன்று.

நான்காவது இடம்: 61, Meyer Road 
கடற்கரை ஓரம் ஒரு colonial bungalow. அந்த காலகட்டத்தில் நேதாஜி தங்கியிருந்த வீடு. பல முக்கியமான சிந்தனைகள் உருப்பெற்ற இடம், உறக்கத்தை மறந்து விட்டு இரவெல்லாம் தொடர்ச்சியாக அவர் எழுதிய Provisional Government-ன் உறுதிமொழி, அரசாங்கம் நடத்துவதற்கு அவர் தீட்டிய மிக விவரமான திட்டங்கள் கருத்தரித்த இடம். கொதிநிலை தாண்டிய விதி நிலையிலும், பிரச்சனைகளுக்கு இடையேயும்  அமைதி தேடி தியானத்தில் அமர்ந்த வீடு. சில முதிர்ந்த பின்னிரவுகளில் ராமகிருஷ்ணா மிஷன் கோவிலுக்கு(அப்போது நோரிஸ் ரோட்டில் இருந்தது) சென்று தியானத்தில் ஈடுபடுவதும் அவரது வழக்கம். சுபாஷ் அவரது ஆன்ம பலத்தையே அதிகம்  நம்பிய தீவிர ஆன்மிகத் தேடல் நிரம்பிய introvert மனிதர் என்பது பலருக்கும் தெரியாத தகவல். எப்போதும் கையில் வைத்திருந்த பகவத் கீதையும், தியானம் முடித்து வெளி வரும் போது உயிருக்கு ஆபத்து என்ற நிலையிலும் அவருக்கு ஏற்படும் அமைதி நிரம்பிய நேர்மறை அதிர்வுகளும் உடன் இருந்தவர்களை அவர் தொடும் போது அவர்களுக்கும் அந்த அமைதி பரவுவதும் S.A.Ayer வார்த்தைகளில் படிக்கும் போது தோன்றிய காட்சிகள் நினைவிலாடியது.

61, மேயர் ரோடு - இன்று வானளாவி நிற்கிறது ஒரு ஆடம்பரமான அடுக்குமாடி வளாகம் (condo). உள்ளே குடியிருக்கும்  உங்களில் யாருக்கேனும்  இந்த இடத்தின் அதிர்வுகள் புரிகிறதா? தெரியவில்லை.


இறுதியாக - The Cathay Cinema Hall

உலகப் போர் காலத்தில் INA radio broadcast centre ஆக விளங்கிய, நேதாஜி தலைமையில் தற்காலிக அரசாங்கத்தின் பதவியேற்பை நிகழ்த்தும் பேறு கிட்டிய  The Cathay Cinema Hall.  இன்றும் அந்த Cathay building முன் புறம் நினைவுச் சின்னமாக அப்படியே விட்டு வைத்திருக்கிறார்கள். பின்னால் ஒரு பெரிய வணிக வளாகமும் ஒரு சிறு கண்காட்சியும் இருக்கிறது.


 21 அக்டோபர் 1943 - எள் விழ இடமின்றி நிறைந்திருக்கிறது. நிற்கும் கொள்ளளவும் நிறைந்து வழிகிறது; காற்றில் எதிர்பார்ப்பின் இறுக்கம் நிரம்பி இருக்கிறது. நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சுதந்திர இந்தியாவின் தற்காலிக அரசாங்கம் அமைத்து அதன் தலைவராக ஆற்றப்போகும் முதல் பிரகடன உரை. இமைக்கும் ஒலியும் கேட்கக்  கூடிய அமைதி.

நேதாஜி தொடங்குகிறார்:
"கடவுளின் பெயராலும், பாரத தேசத்தை ஒருங்கிணைத்து அதன் உன்னததுக்காக  உழைத்து மறைந்த கடந்து சென்ற தலைமுறைகளின் பெயராலும், அவர்கள் நமக்கு விட்டுச் சென்றிருக்கும் வீரம் செறிந்த  தியாகத்தின் பாரம்பரியத்தின் பெயராலும் - இந்திய மக்களாகிய உங்களை இந்திய சுதந்திரப் போராட்டத்துக்கு அழைக்கிறோம். இந்திய மண்ணின் இறுதி வெற்றிக்கான இறுதிப் போராட்டம் - கடைசி எதிரியும் வெளியேறும் வரை, இந்தியா சுதந்திர மூச்சை சுவாசிக்கும் வரை, வீரத்துடனும் விடாமுயற்சியுடனும் போராட ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் அழைப்பு விடுக்கிறோம்"


நீண்ட பிரகடனத்தின் முடிவில் உறுதி மொழி எற்றுக் கொள்ளத்தொடங்கினார். அதுவரை The Cathay hall கண்டதிலேயே பெருமதிப்பிற்கு உரியதும் உன்னதமானதும் ஆன ஒரு காட்சி அங்கே அரங்கேறத் தொடங்கியது.

பலத்த வாழ்துக்களுக்கிடையே நேதாஜி  உறுதிமொழியைத் தொடங்கினார்:  "சுபாஷ் சந்திர போஸ் ஆகிய நான், எனது தேசத்தின் 38 கோடி மக்களின் விடுதலைக்காக கடவுளின் பெயரால் இந்த புனிதமான உறுதி மொழியை எடுக்கிறேன்.  இந்தப் புனிதமான  போரை எனது கடைசி மூச்சு உள்ள வரை.." உணர்ச்சிவயப்பட்ட குரல் நடுங்க அதற்கு மேல் தொடர முடியாமல் உணர்ச்சி மேலிட நிறுத்தினார். கன்னத்தில் கண்ணீர் வடிந்தது; கைக்குட்டையால் கண்ணீரை துடைத்து விட்டு மிகுந்த பிரயாசையுடன் உணர்ச்சியைக் கட்டுப்படுத்தி மேற்கொண்டு உறுதிமொழியைத் தொடர்ந்தார்.

உறுதியான குரலில்,
"என்றும் இந்தியத் திருநாட்டின்  38 கோடி சகோதர சகோதரிகளின் நலனுக்காக உழைக்கும் சேவகனாய் இருப்பேன், இதுவே எனது தலையாய கடமையாக இருக்கும் . விடுதலை கிடைத்த பின்னரும் இந்தியத் திருநாட்டின் சுதந்திரத்தைப் பேணும் பொருட்டு எனது இறுதித் துளி இரத்தத்தையும் சிந்துவதற்கு சித்தமாக இருப்பேன்"

முழு உறுதிமொழியும் அவர் எடுத்து முடிக்கையில் அரங்கம் அதிர்கிறது - ஜெய் ஹிந்த்;
கூடி இருந்தோர் உள்ளம் அதிர்கிறது - ஜெய்ஹிந்த்;
ரத்த நாளங்கள் எங்கும் சுதந்திர வேட்கை உணர்ச்சி பாய எல்லோர் நாவிலும் மனதிலும் - ஜெய் ஹிந்த்!!!

- ஜெய் ஹிந்த்!!!-

** Minister for Publicity and Propaganda in Subhas Chandra Bose'sAzad Hind Government between 1943 and 1945 - https://en.wikipedia.org/wiki/S._A._Ayer

புகைப்படத் தொகுப்பு: https://www.facebook.com/media/set/?set=a.10207570163509384.1073741848.1149053476&type=1&l=f0cc46c970

Striding along the forgotten alley

Not all those who wander are lost:

In our march of racy routine, amidst the plights of hurried trips up and down the trodden path, trampled are those innumerable magical butterflies. The blessings meant for us, lie silenced in the lips of unnoticed angels awaiting our mindful glance.

Such was a treasure that was right in front of the plain sight yet not visible; a treasure from a bygone era - places that were graced by one of the GREATEST LEADERs witnessed by the world; places which were 'Karmabhoomi' for numerous commoners who found immense inner strength under the great leadership of Netaji.

Those men were from across India - from many regions, languages, religions, social strata - stranded on alien soil, uprooted from the home ground and lost direction and hopes of going back home with the clutches of World War II tightening up; unaware of who is the real master of their fates, abandoned by the kingsmen of yesterday and unwelcomed by the new rulers of today, unsure of the life beyond that moment. Life seemed to be nothing but a mirage.

Then came the man - Netaji Subhas Chandra Bose.

When I started blogging on my grandfather Sri Aiyadurai Pillai's centennial year, I got to stride along the trickling stream of memories shared by him on World war and INA days in Malaya, and then a new secret popped out of a letter from my collection of his letters. Having myself read umpteen number of times, what struck me suddenly was the address that mentioned - "Syonan, Chancery Lane"

Then, I added this place to my laundry list of places-to-be-visited in and around Penang & KualaLumpur (KL) in Malaysia; since we knew he was working in a business firm in Malaya during the dark period of 2nd world war days; with no communication whatsoever with home since the war broke. Inspired by Netaji's goal and vision, he joined the IIL(Indian Independence League) and worked in Pahang branch of Malaya. But he got his training in Singapore HQ and worked for some time in Singapore Headquarters too.  My Malaysia trip tracing his footsteps is still to be made.

My favourite saying from Paulo Coelho's Alchemist goes this way: "When you want something, all the universe conspires in helping you to achieve it."
And that’s what happened.

Not long ago, may be a few months back, on my regular weekend trip via Bukit Timah Road, a signboard with "Chancery Lane" caught my attention and something flashed. So far my focus was on Malaysia (Penang & KL), and it never struck that Singapore (Syonan) was then part of Malaya.  Then this quest began with this new light on tracing the INA footsteps in Singapore. With the help of a book written by S.A.Ayer** a close confidant and comrade of Netaji "Story of the INA" and few other publications released by Institute of Southeast Asian Studies and Netaji Research Centre, I got to know of few key incidents that happened in this very same Singapore!

Lots have been destroyed - documents, records, evidences of wartime artefacts - afraid of the opponents - by both British and Japanese in those days of invasion and captivity. So a separate project was conducted in 1980s to interview lots of people who were part of various events, organizations (INA, IIL, Jhansi Rani Regiment, Balak Sena, etc), who attended various public meetings, and who have personally seen Netaji. All those recording are archived and made available online by National Archives of Singapore - A tremendous, commendable initiative and an impressive collection indeed.

All these added sufficient markers for our " A day striding along INA Footprints"

First place of visit: 'Memories at Old Ford Factory".

It was 15th Feb 1942 - British surrendered Singapore to Japanese in this very same building. A good collection of documents, newspapers, audio/video recording, wartime artefacts and the very room where the surrender happened - everything was on display.

Second Destination: "Chancery Lane", the INA Headquarters was in 3, Chancery Lane (19 Chancery Lane was also part of the INA as seen from my grandpa's letter)

When we reached there and alighted from the bus, the wind turned chill and it started raining - a typical Singapore monsoon rain which starts and ends abruptly. Felt a slight shiver - Oh is it just the cold wind? Once the rain paced down to a sprinkle, we continued walking the alley. This pathway had witnessed the march of majestic, magnificent, monumental men with burning ambition and fire within. INA men had had their morning walks and jogging in the nearby Dunearn Road via this lane and Netaji had crossed this same lane day in and day out, my grandfather had lived and breathed this lane, worked in a building that stood here where he worked as a Propagandist and Finance Controller directly under Netaji Subhas Chandra Bose - probably with S.A.Ayer.

Does this air remember and behold the breath of such Men of Great Sacrifice? Have we touched any of those innumerable footsteps taken for the Independence of the nation? Mindless of days and nights, with a sole purpose in mind, those people had performed penance in this Chancery Lane. I can feel my Thaathaa (Grandfather) reminiscing with pride on his days with Netaji - eyes glistening and voice chocked. Was it today that he told all those inspiring, stimulating events? Or was it 30 years back? Or am I somewhere teleported 70 years back? Moments of emotional high!!

Third Place of Visit: Padang Grounds

5th Jul 1943 - INA warriors have assembled, parade has started. Netaji is accepting the salute from the dais of the then Municipal Building and an impressive parade is happening in the Padang ground. Two days later, he made the soul-stirring speech and war cry of "Delhi Chalo" to the assembled army from the same place. Just like today, it started raining abruptly on that day, when Netaji started that monumental historic speech. Someone opens the umbrella and tries to shield Netaji from the torrents. He denies and brushes it away asking - "Can you offer the umbrella to all my INA Comrades now? Whatever is their fate will be mine too". He continued his 3 hour long speech. None moved a bit.

Drenched in the fiery speech, immersed with the high emotions stirred up by his speech, flooded by the emotions that ran as tears, the monsoon torrents had no effect on them for those 3 hours. To understand their emotional state, we should have an understanding of the state of those men - who had been treated not even as a human being, left vulnerable and not being worthy of anyone’s concern, and suddenly someone uplifting their soul and believing on them, that they can contribute to their Nation!!

Here we stand - same ground; same dais where HE stood to accept the INA salute. The Municipal building where he stood - that impressive building which served as Supreme Court for Singapore and now a National Art Gallery. What a magnificent building for a Municipal office? That parade ground houses a cricket club in another colonial building today.

Fourth Place of Visit: 61, Meyer Road

1943 - 1945: A grand colonial bungalow stands facing the sea. This was where he stayed during his Singapore tenure. A womb where many grand plans were conceived, a sacred altar where many nights midnight oil was burnt to detail on elaborate intricate plans of war strategy and governance plans were chartered. 

S.A.Ayer’s depiction fills the mind: It is in this house - Netaji drafted the 1500 word proclamation in a single stretch sitting up all night for his provisional government. Those were days of extreme tensions and he relied completely on his spiritual strength. Netaji used to sit on meditation in his pooja room or goes to the Ramakrishna Mission temple (it was in Norris Road then) for a late night meditation. When he finishes the meditation, he used to have regained his composure filled with positive vibrancy and his very touch would transmit that to his companions. Not many knew that Netaji was a highly introvert individual with a strong spiritual demeanour and he always carried a Bhagavad Gita which he read every day before sleep.

And today, there stands a luxurious condominium. “Does anyone of you residing here know or feel those vibrations eternally filled in this place?” – a question echoed in my mind

Final place of Visit: The Cathay Cinemas

21st Oct 1943 - the occasion was solemn; the hall was packed to capacity; every inch of standing space was occupied; tense expectation prevailed. Netaji Subhas Chandra Bose is to make the historic proclamation of the establishment of the provisional government of Free India.

It was pin drop silence and Netaji started: "In the name of God, in the name of bygone generations who have welded the Indian people into one nation and in the name of the dead heroes who have bequeathed to us a tradition of heroism and self-sacrifice - we call upon the Indian people to rally round our banner and strike for India's Freedom. We call upon them to launch the final struggle against the British and all their allies in India and to prosecute that struggle with valour and perseverance and with full faith in Final Victory - until the enemy is expelled from Indian soil and the Indian people are once again a Free Nation" 

After a lengthy proclamation Nethaji proceeded to take the oath of allegiance to India. The Cathay hall saw the most epic and poignant scene it has ever witnessed. 

Amidst cheers, Netaji read out the oath, "In the name of God, I take this sacred Oath that to Liberate India and 38 crores of my countrymen, I, Subhas Chandra Bose, will continue the sacred war of freedom till the last breath of my life ....." He then paused, he could not proceed, his voice was choked with emotion; tears started rolling down his cheeks; he pulled out his kerchief and wiped his eyes. He broke down and with difficulty resumed in a steady voice "I shall always remain a servant of India and look after the welfare of 38 crores of Indian brothers and sisters. This shall be for me my highest duty. Even after winning freedom I will always be prepared to shed the last drop of my blood for the preservation of India's freedom".

When Netaji finished the oath, the pent up feelings of his audience burst open- echo went sky-high in the auditorium - Jai Hind!! That reverberates in everyone’s heart - Jai Hind!! The blood pulsated with the only Mantra - Jai Hind!!!


-JAIHIND- 


** Minister for Publicity and Propaganda in Subhas Chandra Bose'sAzad Hind Government between 1943 and 1945 - https://en.wikipedia.org/wiki/S._A._Ayer

Photo Collection: https://www.facebook.com/media/set/?set=a.10207570163509384.1073741848.1149053476&type=1&l=f0cc46c970