Sunday, February 28, 2021

சிங்கை குறிப்புகள் - 20 - வினைக்களம்

எதன் பொருட்டு நாம் ஓரிடத்திற்கு அனுப்பப்படுகிறோமோ எங்கே நமது அனுதின வினைகள் ஆற்றப்படுகிறதோ அது நமது கர்மபூமி எனக்கொண்டால் சிங்கையில் இருக்கும் காலகட்டத்தைப் பொறுத்தவரை தயக்கமின்றி சாங்கி வர்த்தகப் பூங்காவை (Changi Business Park) எனது வினைக்களன் எனக்கொள்ளலாம்.

இணையத்திலிருந்து

2006-ல் மில்லேனியா டவரிலிருந்து,  2008-2010-ல் அலுவலகத்தை சாங்கி விமான நிலையத்தருகே கட்டப்பட்டிருந்த புதிய வர்த்தக மையத்துக்கு இடம்மாற்றிவிட்டார்கள். 2012-ல்  முதல் முறையாக எக்ஸ்போ (expo) ரயில் நிலையத்தில் வந்திறங்கி, முன்னரே அறிமுகமாயிருந்த தோழி ஒருவரோடு சாங்கி வர்த்தகப் பூங்கா அலுவலகம் நோக்கி நடக்கத் துவங்கியபோது சற்று ஏமாற்றமாகக் கூட இருந்தது. இதுவும் அதிநவீன வசதிகொண்ட அழகிய இடம்தான் என்றாலும், நமைச் சுற்றி விண்தொடும் பேருருவங்களாக கட்டிட நிரைகள் இருக்கும்போது ஒவ்வொரு தினமும் அது தரும் எழுச்சி ஒன்றுண்டு. மிகப் பெரிய கனவுகளோடு மானுடர் இங்கே கூடுகிறார்கள் என்பதை அவை மௌனமாக சொன்னபடியே இருக்கும். இங்கே நாம் எங்கும் காணக்கூடிய ஒரு சராசரி மென்பொருள் வளாகத்தின் உணர்வே வந்தது. நம்மைக் கேட்டா மாறுகிறது நாளும் கோளும் அலுவலகமும் என ஆறுதல்பட்டுக் கொண்டேன்.

இணையத்திலிருந்து

முன்னர் நான் வசித்த ஜுராங் கிழக்கு பகுதியில் ஒரு சர்வதேச வர்த்தகப் பூங்கா(International Business Park) அமைந்திருந்தது. 1992-ல் துவக்கப்பட்ட சிங்கையின் முதல் வர்த்தகப் பூங்கா. இதன் தொடர்ச்சியாக விமான நிலையத்துக்கு அருகே ஒரு வர்த்தக மையம் அமைப்பதன் சாத்தியங்கள், அனுகூலங்களைக் கணக்கில் கொண்டு 1997-ல் சாங்கி வர்த்தகப் பூங்காவுக்கான திட்டம் துவங்கியது. தொடக்கத்தில், 2012 வரை கூட ஒரு பத்துப் - பதினைந்து கட்டிடங்கள் அடுத்தடுத்த வீதிகளில் இருக்க பெரும்பான்மையான நிலம், காற்று தலைதடவிச் செல்லும் மிகப்பரந்த புல்வெளிகளோடு ஏகாந்தமாக இருக்கும் இந்தப் பகுதி.

CBP


காடு திருத்தி அமைக்கப்பட்டது என்பதாலும் பூங்கா என்றே அழைக்கப்பட்டதாலும்(!!) (Changi Business Park) சிங்கையில் மிக அரிதாகவே காணக்கூடிய காட்டு நாய்களை இங்கு அப்போது காண முடிந்தது. அப்போது தங்கியிருந்த சீமெய்(Simei) பகுதி இரண்டரை கிமீ தொலைவுதான் என்பதால் அனேகமாக மாலையில் அலுவலகத்தில் இருந்து நடைதான். ஒரு புல்வெளியையும் செயற்கையாக அமைக்கப்பட்டிருந்த குளத்தையும் கடந்து ஒரு வெள்ள வடிநீர் கால்வாய் ஓரமாகவே நடந்து சென்று வீடடைவது அலுவலின் சுமையை முற்றிலும் மனதிலிருந்து அகற்றிவிடும்.



ஆனால் சில மாதங்களிலேயே அந்தக் கால்வாயின் கரையில் ஒரு மாபெரும் கட்டுமானம் துவங்கியது. இரு வருடங்களிலேயே அங்கு சிங்கையின் சிறந்த கல்லூரிகளில் ஒன்றாகிய SUTD தொடங்கியது. அதன்பிறகு அந்த நீர்நிலையை ஒட்டி நடப்பது நின்று போனது.

இந்த வர்த்தகப் பூங்காவில் மென்பொருள் நிறுவனங்கள், மற்றும் வங்கித்துறை சார்ந்த நிறுவனங்கள் தவிர, ஒரு வணிக வளாகம், சிங்கப்பூரில் நூறு கிளைகள் கொண்ட ஃபேர்ப்ரைஸ் ( Fairprice) எனப்படும் கூட்டுறவு பல்பொருள் விற்பனை அங்காடிகளின் ஒரு மாபெரும் கிளை, உடற்பயிற்சி மையங்கள், உணவகங்கள் மற்றும் ஒரு சர்வதேசத் தரம் கொண்ட தங்கும் விடுதி ஆகியவை அமைந்திருக்கின்றன.



தொடக்கத்தில் இவற்றை நகரோடு இணைக்கும் ஒற்றைத் தொடர்பாக சாங்கி விமான நிலையம் செல்லும் தடத்தில் அமைந்த எக்ஸ்போ ரயில் நிலையம்(Expo) மட்டுமே இருந்தது. சிங்கையை இணைக்கும் வலைப்பின்னலான எம்.ஆர்.டி(MRT) எனப்படும் சிங்கப்பூர் துரிதக் கடவு ரயில் பாதைகளில் 2000 வரை  கிழக்கு-மேற்கு முனைகளை இணைக்கும் பச்சை வரிசை ரயில்நிலையங்கள், மற்றும் தெற்கு-வடக்கை இணைக்கும் சிவப்பு வரிசை நிலையங்கள் என இரண்டு பாதைகளே இருந்தன. 2001-ல் பச்சை இணைப்பிலிருந்து தானா மேரா( Tanah Merah - நம் எரேடியா வரைபடத்திலேயே இருந்த அதே தானா மேராதான்) நிலையத்திலிருந்து ஒரு கிளையை இழுத்து சாங்கி விமான நிலையம் வரை இணைத்தனர். அதில் இடையில் உள்ள ஒரே நிறுத்தம் இந்த எக்ஸ்ப்போ (Expo).
எக்ஸ்போ 

இந்த எக்ஸ்போ மாபெரும் கண்காட்சி மற்றும் மாநாட்டு மையங்களுக்கென உள்ள வளாகம். தொடர்ச்சியாக அமைந்த பத்து மண்டபங்கள்; ஒவ்வொரு மண்டபமும் பத்தாயிரம் சதுர மீ தடையற்ற(தூண்களற்ற) பரப்பளவு கொண்டது. பகுதிகளாகப் பிரித்தும் இணைத்தும் கண்காட்சிகளும் மாநாடுகளும் நடக்கும். இதைத் தவிர நூறு பேர் அமரக்கூடிய அதிநவீன வசதிகள் கொண்ட சந்திப்பு அறைகளும் மாநாட்டு அறைகளும் இரண்டாம் தளத்தில் இருக்கின்றன. இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கார்கள் நிறுத்தக் கூடிய இதன் கார் நிறுத்தத்தில் கண்காட்சிகள் நடக்கும் போது போதிய இடமின்றி நெரிசல் நிகழும். தீபாவளியை ஒட்டி இந்தியாவிலிருந்து பல வணிகர்கள் வந்து நிகழ்த்தும் தீபாவளி கண்காட்சி இந்தியர்களிடையே பெரும் புகழ் பெற்றது. இது தவிர கணிப்பொறி மற்றும் மின்னணுப் பொருட்கள் கண்காட்சியும், மாபெரும் வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சியும் புகழ் பெற்றவை. இங்கு வந்த புதிதில் ஒரு கண்காட்சியில் வீட்டுத் தேவைக்கு கட்டில் முதலிய பொருட்கள் வாங்கிய போது குலுக்கல் முறை பரிசுத் திட்டம் ஒன்றிருந்தது. வழக்கமாக இது போன்ற அதிர்ஷ்டம் சார்ந்த விஷயங்களில் ஒரு குண்டூசி கூட கிடைத்தது இல்லை என்பதால் நம்பிக்கையே இன்றி பெயரையும் தொலைபேசி எண்ணையும் எழுதி பெட்டியில் போட்டுவிட்டு வந்தேன். ஒரு வாரம் கழித்து அறியா எண்ணிலிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அறியா எண்களை எடுப்பதில்லை எனும் வழக்கப்படி அதை நான் எடுக்கவில்லை. மாற்று எண்ணாக வீட்டுத் தொலைபேசி எண் கொடுத்திருந்தமையால் தோழி மாதங்கிக்கு அழைப்பு வந்தது. ஐயாயிரம் பரிசுத் தொகை! இது போன்ற அற்புதங்கள் நிகழ்ந்த களம் என்பதால் சற்று வெளியே சென்று இக்கதையை சொல்லத் தோன்றியது.

இந்த ரயில் நிறுத்தம் மட்டுமே அருகில் இருந்தது. வேறு பொதுமக்கள் உள்ளே வரத்தேவையான எதுவும் இங்கே இல்லாதிருந்தது. இதன் காரணமாக வேறு எந்த வெளி உலகத் தொடர்பும் இல்லாது தபோவனத்து முனிவர்கள் போல இங்கு பணிபுரியும் மென்பொறியாளர்களும் பிற பணியாளர்களும் தனித்து விடப்பட்டிருந்தனர். 



இதைத் தவிர பச்சை இணைப்பின் தானா மேராவுக்கு அடுத்த ஸீமெய் மற்றும் டாம்பனீஸ் (Tampines)
நிறுத்தங்களில் இருந்து சில இணைப்புப் பேருந்துகள்(shuttle bus) இயங்கின. ஸீமெய், டாம்பனீஸ் இரண்டுமே சிங்கை கிழக்கெல்லையில் இரண்டு மாபெரும் குடியிருப்புப் பகுதிகள். இதைத்தவிர சிங்கையின் வடக்குப் புறநகர் குடியிருப்புப் பகுதிகளான செங்காங்(Senkang), புங்கோல்(Punggol) பகுதிகளில் இருந்தும் அதிகளவில் பயணிகள் தினசரி சாங்கி வர்த்தகப் பூங்கா வருவதைக் கணக்கில் கொண்டு மேலும் சில தனியார் பேருந்துகள் துவங்கின. அரசுப் பேருந்துகளை விட இவற்றில் கட்டணம் சற்று அதிகம், ஆனால் விரைவாக அப்பகுதிகளில் இருந்து சாங்கி வந்துவிடலாம் என்பதால் இப்பேருந்துகளில் நல்ல கூட்டம் இருக்கும். காலை ஏழு மணி துவங்கி பத்தரை மணி வரை குடியிருப்புப் பகுதிகளில் இருந்து சாங்கி வர்த்தகப்பூங்காவுக்கு வரும். மாலையில் அதே போல ஐந்து மணி முதல் பத்து மணிவரை இங்கிருந்து செங்காங், புங்கோல் செல்லும்.

தொடக்கத்தில் ஒரு உணவு அங்காடி நிலையமும் ஒரு சில  உணவகங்களும் இங்கு இருந்தன. அதில் சரவண பவன் உணவகமும் ஒன்று. பிறகு மதிய வேளைகளில் பெடோக்(Bedok) மற்றும் விமான நிலைய உணவகங்களுக்கு செல்லும் வகையில் பேருந்துகள் இயங்கத் தொடங்கின.

இதை முக்கியமாக எழுதக்காரணம், அனுதினம் வீட்டிலிருந்து உணவு எடுத்துக் கொண்டு செல்வோர் கூட  வெள்ளிக் கிழமை மதிய உணவை வெளியில் உணவகங்களில் உண்பது வழக்கம். எங்கள் அலுவலகக் குழுவில் அதை ஒரு தனித் திட்டமாகவே போட்டு ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு உணவகம் சென்று கொண்டிருந்த காலம் ஒன்றிருந்தது (கொரோனா பெருமூச்சு...). இங்குள்ள சிங்கப்பூர், மலேசிய, சீன, தாய்லாந்து உணவு வகைகளுக்குப் பரிச்சயம் ஏற்பட்டதும் இதன் வாயிலாகத்தான். இவற்றிலெல்லாம் சைவ உணவும் கிடைக்கிறது என்பதே பெரிய அறிதலாக இருந்தது. அதேபோல உள்ளூர் சீன இந்தோனேசிய நண்பர்களும் நமது இந்திய உணவு வகைகளை ஹைதராபாதி பிரியாணி வரை பதம் பார்த்துக் கண்ணீர் மல்க நன்றி கூறியிருக்கிறார்கள்.

2000-2006 வரை கூட இந்திய உணவகங்கள் என்றால் லிட்டில் இந்தியா செல்ல வேண்டும் என்ற நிலை இருந்தது. 2010லிருந்து அனேகமாக எல்லாப் பகுதிகளிலும் இந்திய உணவகங்கள் வந்து விட்டன. மாம்பழக் காலத்தில் பங்கனபள்ளி மாம்பழங்களை தினுமும் நூற்றுக் கணக்கில் விற்பனை செய்யும் ஒரு ஆந்திர உணவகமும் இங்கே வந்துவிட்டது. சாங்கி வர்த்தகப் பூங்காவில் மட்டும் பத்துப் பன்னிரண்டு இந்திய உணவகங்கள் இருக்கின்றன. இது போதாதென்றே மேற்சொன்னபடி விமான நிலையத்துக்கு மதிய உணவுக்கு செல்வோம். அதிலும் மூன்றாவது முனையத்தில் ஒரு வட இந்திய மற்றும் ஒரு தென்னிந்திய உணவகங்களுக்கு வெள்ளிக்கிழமை மதியங்களில் சென்றால், அனேகமாக  அனைத்துத் துறைகளில் இருந்தும் நண்பர்களைக் காண முடியும். இது ஒன்றரை மணி நேரம் எடுத்துக் கொள்ளும் ஒரு நிகழ்வென்பதால் எல்லா நாட்களிலும் இயலாது. வெள்ளி மட்டுமே இந்த சலுகை.

அன்றாட மதிய உணவுக்குப் பிறகு, அலுவலகத்துக்கு அருகிலேயே நீண்ட நடை செல்லும் வழக்கம் நண்பர்கள் பலருக்கு இருந்தது. ஐபிஎம், டிசிஎஸ், ஸ்டாண்ட் சார்டர்ட், பார்க்லேஸ் என அனைத்து நிறுவனங்களில் இருந்தும் நண்பர்கள் (பலரும் ஏதோ ஒரு கட்டத்தில் உடன் வேலைபார்த்திருப்பார்கள்) உலா சென்று கொண்டிருப்பார்கள்.



 நிரந்தரமாகக் குளிரூட்டப்பட்ட கண்ணாடி முகப்புகள் கொண்ட கார்ப்பரெட் கூண்டுகளிலிருந்து திறந்துவிடப்பட்ட விலங்குகள் போல சிறிது தூரம் பசுமை விரவிய பூங்காக்களில் நடை சென்று, ஆங்காங்கு போடப் பட்டிருக்கும் மர இருக்கைகளில் அமர்ந்து கொண்டும், துணிந்தோர் படுத்து உறங்கிக் கொண்டும், தொலைபேசியில் குடும்பங்களோடு கதைத்துக் கொண்டும் இருப்பார்கள். புதிய வேலைக்கான முயற்சிகளில் தொலைபேசி உரையாடல்களில் இருப்போரும் உண்டு. நமது தலையைக் கண்டதும் வேகமாக வேறு திசைகளில் நடப்பது அதன் முக்கிய அடையாளம்.
அலுவலகத்தில் பிழியப்பட்டது போக உடலில் திராணி மிச்சமிருப்போர் அந்த பூங்காவின் உடற்பயிற்சிக் களங்களில் உடற்பயிற்சிகள் செய்து கொண்டுமிருப்பார்கள்.



அலுவலகப் பகுதிகளுக்கு மத்தியில் ஒரு செயற்கையாக நீர்தேக்கப்பட்ட குளம். அதில் வழக்கமாக தினம் பார்வையில் படும் ஒரு ஆமைக் குடும்பம். வெயில் காய ஆங்காங்கே பாறைகளில் அமர்ந்திருந்து யாரேனும் புகைப்படமெடுத்தால் மிக மெதுவாக நீருள் குதித்து சிறிது நேரம் காணாமல் போய்விடும். அவை அதைத் தங்கள் வாழ்விடமென ஏற்றுக் கொண்டன போலும், வேறெங்கும் செல்வதில்லை. எத்தனை  தலைமுறைகளைப் பார்க்கப் போகின்றனவோ. 



இந்த நீர்க்குளம் சாலைக்கு மறுபுறம் நீண்டு ஏறக்குறைய அரைகிமீ நீளும். செங்கொன்றைகளும், அசோகமும், ஈச்சை மற்றும் பாக்கு மரங்களும், இன்ன பிற மலர் வகைகளும் சீராக வளர்ந்திருக்கும் தோட்டம் இது. பிற பகுதியில் வண்ண மீன்கள் அதிகமுண்டு. நாரைகளும், புறாக்களும், மைனாக்களும் வழக்கமாகக் கண்ணில் படும் இப்பகுதியில் ஹார்ன்பில்களும்(hornbill) ஓரியோல்(black naped oriole) எனப்படும் மஞ்சள் நிறப் பறவையும்  அரிதாக கண்ணில் படுவதுண்டு.
ஒரு முறை பாம்பு போல நீரில் நெளிந்து செல்லும் மீனும் கண்ணில் பட்டிருக்கிறது.



மூன்று நான்கு கிலோமீட்டர் நடைபயணம் சென்று வரக்கூடிய பரப்பளவு கொண்ட பகுதியாதலால், மதிய வெயில் கபாலத்தைக் கிழிப்பதைப் பொருட்படுத்தாத எனைப் போன்றோர் இதன் எல்லையில் விரிந்திருக்கும் புல்வெளி வரை செல்வது வழக்கம். மாலை வேளைகளில் ஓட்டப் பயிற்சியிலும், வேகநடைப் பயிற்சியிலும் ஈடுபடுவோர் ஏராளம்.



காற்று மரக்கிளைகளில் ஒளிந்து திரிந்து, அவ்வப்போது விரிந்த புல்வெளியில் பறவைகளோடு ஓடிப் பிடித்து விளையாடுவதைக் காணும் பொழுதுகளுக்காவேனும் மீண்டும் அலுவலகம் செல்ல வேண்டும். வர்த்தகப் பூங்காவின் கிழக்கு எல்லை வரை சென்றால் சாங்கி ஓடுதளம் அருகில் வந்துவிடும். 




அங்கே ஓரிடத்தில் விரிந்த மைதானத்தில் நின்று கொண்டு சாங்கி விமான ஓடுதளத்தில் தரையில் இறங்கும் விமானங்களை நன்கு காண முடியும். 




ஏறக்குறைய முழு இரண்டு நிமிடங்கள் வானிலிருந்து உயரம் குறைந்து நமது தலைக்கு மிக அருகில் பறந்து சென்று ஓடுதளம் அருகே இறங்குவது வரை காணலாம். மதியம் ஒன்றிலிருந்து இரண்டு வரை பல A380ரக சிங்கப்பூர் ஏர்வேஸ்  விமானங்கள், இரட்டை அடுக்கு கொண்ட எமிரேட்ஸ் விமானங்கள் ஆகியவற்றை அருகில் பார்க்கலாம். 




எனவே பல தொழில்முறைப் புகைப்படக் கலைஞர்கள் அங்கே அவ்வப்போது கூடுவார்கள். தினுமும் ஓரிருவரேனும் மதிய வேளையில் அங்கே நின்று விமானங்களை அணுக்கத்தில் புகைப்படமெடுப்பதைக் காண முடியும்.

உண்மையில் இந்தப் பசுமை,  உண்டாக்கியதென்றாலும் ஒரு பெரிய ஆசுவாசம். 




சிங்கையில் பணிச்சுமை மிக அதிகம். காலை எட்டு எட்டரை மணிக்குத் துவங்கி நள்ளிரவு பன்னிரண்டு மணி வரை நீளும் வார நாட்கள். வாரயிறுதி நாட்களும் குறைந்தது பத்து மணிநேரமாவது பெரும்பான்மையினர் வேலை பார்க்க நேரும். இந்தியாவில் நீண்ட நேரம் பணிபுரிவதற்கும் இங்கு வேலை செய்வதற்கும் நிறைய வேறுபாடுகளை உணர்ந்திருக்கிறேன். இங்கு காலை துவங்கி நள்ளிரவு வரை உணவு வேளை தவிர தொடர்ச்சியாக அறுபடாது நாள் முழுவதும் பணி தொடர்பான சந்திப்புகளும் அழைப்புகளும் இருக்கும். வேலைச் சூழலில் ஒரு வித தளர்வற்ற நாணின் இறுக்கம் எப்போதும் உணர முடியும். உணவு வேளையிலும் அலுவல் நிமித்த சந்திப்புகளை சில புண்ணியவான்கள் நிகழ்த்துவதுண்டு. இங்குள்ள கிழக்காசியப் பண்பாட்டில், ஏன் காற்றிலேயே கூட இருக்கும் ஒரு சோர்விலா தேனீத்தனம் என சொல்லலாம். கல்லூரி முடிந்து மேலாண்மை துறைகளில புதிதாக வேலையில் சேர்பவர்களுக்கு, தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் வழிகாட்டும் யோசனையாகக்  குறைந்தது பதினெட்டு மணிநேரம் வேலை பார்க்க வேண்டும் போன்ற அறிவுரைகள் கொடுக்கப்படுவது இங்கு வழக்கம்தான். ஒரு காலத்தில் அதுவே எனக்கும் வாடிக்கையாக இருந்திருக்கிறது.

அலுவலகத்தில் மொத்த சாறும் உறிஞ்சப்பட்டு ஆனைவாய்ப்பட்ட கரும்பு போல களைத்து வெளியேறும் முகங்களை தினமும் பார்க்க முடியும். அதற்கேற்றவாறு மளிகைக் கடை முதல், குழந்தைகள் காப்பகம், மழலையர் பள்ளி, உடற்பயிற்சி நிலையங்கள் என எதற்காகவும் வெளியேறத் தேவையில்லாத கட்டமைப்பு. இந்தப் பணிச்சுமை குறித்து பல பக்கங்கள் எழுதலாம்.  எனது நண்பர் ஒருவர் ஒவ்வொரு நிமிடமும் அவரது காலில் யாரோ ஏறி நிற்பது போன்ற வேதனை கொண்ட முகத்தோடு இருப்பார், துறை சார்ந்த அறிவும், பணி நேர்த்தியும் கொண்டவர், நாளொன்றுக்கு பதினாறு-பதினெட்டு மணிநேரம் ஓய்வின்றி உழைப்பவர். ஒரு நாள் தேநீர் அருந்திவிட்டு அலுவலகத்துக்கு உள்ளே நுழையும் போது வரவேற்பரையில் அவரைப் பார்த்தோம். நின்று பேசத் தொடங்கியதும் பத்து நிமிடங்கள் புலம்பினார், பிறகு நான் விடை பெற்றுக் கொண்டதும், அவரும் திரும்பிச் செல்ல முற்பட்டு, புறா போல தன்னைத்தானே ஒரு முறை சுற்றிக்கொண்டு என்னிடமே வந்து கேட்டார். "நீ என்னை சந்தித்த போது நான் வெளியே சென்றுகொண்டிருந்தேனா உள்ளே சென்று கொண்டிருந்தேனா?" எனக் கேட்டார், அவ்வளவு அதீத மனக்குழப்பம். அத்தகைய உயர் அழுத்த பணிச்சூழலில்  இதுபோன்ற பசுமை நடை பெரிய ஆசுவாசம்.

அலுவலகம் என்பது பணிச்சுமை மாத்திரம் அன்று. சிரிப்பும் மகிழ்ச்சியுமாக பல்வேறு இனிய நினைவுகள் உண்டு. அதைப் பிறகெப்போதாவது பார்க்கலாம்.

குழந்தைகள் தினத்தில் மேதான்ஷுடன் (கணேஷ்-மாதங்கி மகன்)

அலுவலகத்தில் கந்தர்வ் - மேதான்ஷ்



2015வாக்கில் இங்கு புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு இரு பேருந்துத் தடங்கள் துவங்கின. அலுவலகம் அருகிலேயே ஒரு நிறுத்தம் இருந்தாலும், பேருந்து நிலையம் வரை நடந்து சென்று(1.5கிமீ), தொடங்கும் இடத்திலேயே பேருந்தின் இரண்டாவது தளத்தின் முதல் வரிசையில் அமர்ந்து பயணம் செய்வதில் ஒரு பெரும் நிறைவு ஏற்படும். 



வழக்கமாக அடுத்த வீட்டு முகங்கள் கூட அதிகம் பழகிவிட முடியாத இங்குள்ள வாழ்க்கை சூழலில், தொடர்நது அங்கு சென்று பேருந்து ஏறுவதால் நம்மூர் போல இங்கும் பேருந்து ஓட்டுனர்கள் அடையாளம் கண்டு புன்னகைப்பவர்கள் ஆனார்கள். அதுவும் ஒரு வருடம் ஆகப்போகிறது.

காலையில் வீட்டருகே பேருந்து நிறுத்தத்துக்கும், அங்கே பேருந்து நிறுத்தத்திலிருந்து அலுவலகத்துக்குமான நடை, உணவு நேர நீள்நடைகள், தேநீர் வேளை குறுநடைகள், மீண்டும் மாலை நீள்நடை என அனுதினமும் தனி முயற்சி எடுத்து நடைபயிற்சிக்கு செல்லாவிட்டாலும் குறைந்தது எட்டு முதல் பத்து கிமீ நடை அமைந்துவிடும். அதை ஈடுகட்டத்தான் இப்போது வழியின்றி இருக்கிறது.

முன்னர் நடைகளால் ஆன என் காலையையும் மாலையையும் இப்போது அலுவலகமே கூடுதலாக எடுத்துக் கொள்கிறது. வேலை-வாழ்க்கை சமநிலை எல்லாம் பேசப்படுகிறது. என்றாலும் வேலையை வாழ்க்கையிலிருந்து பிரித்து வாழ்வு சாராத ஒன்றாகக் காண நேரும், வாழ்வை அழுத்தம்மிக்க ஒன்றாக ஆக்கும் பணிச்சூழலே இந்த சமநிலை குலைவை ஏற்படுத்துகிறது எனும் புரிதல் வரும்போது சில மாற்றங்களை செய்து கொள்ள முடிகிறது. நம் கைமீறிய புறக்காரணிகளை விட நம் அகக்காரணிகளுக்கும் பெரிய பங்கிருக்கிறது. இதில் நேரம் என்பது அலுவலக வேலையில ஈடுபடும் நேரம் மட்டுமல்ல, அது தொடர்பான மனநேரத்தையும் உள்ளடக்கியது. குறைவான வேலை என்பதல்ல, எதற்கு எவ்வளவு நேரம் ஒதுக்குவது என்ற முடிவு நமது கையில் இருப்பதே உண்மையான சமநிலையாக இருக்க முடியும். அந்த சமநிலையை அடைவதற்கே அனைத்து முயற்சிகளும் தேவையாகின்றன.




Saturday, February 27, 2021

சிங்கை குறிப்புகள் - 19 - சிறகுகளின் வண்ணங்கள்

சிங்கை வந்து ஓராண்டுக்குப் பிறகு ஒரு முறை, நண்பர்கள் கணேஷ் - மாதங்கி மற்றும் குழந்தைகள் இந்தியா செல்ல அதிகாலை ஐந்து மணி விமானத்துக்கு பயண முன்பதிவு செய்திருந்தனர்.  குறைந்தது ஒரு மணி நேரம் முன்னதாகவேனும் விமான நிலையம் சென்று சேர வேண்டும்.  எனவே இரண்டரை மணிக்கு அலாரம் வைத்து மூன்றரை மணிக்கு விமான நிலையம் சென்று சேர்வதாகத் திட்டம். காலை நான்கு மணியளவில் என் அறையில் இருந்து எழுந்து வந்து வெளியே பார்த்தபோது வீடே  நிசப்தமாக இருந்தது. சொல்லாமல் கிளம்பிவிட்டார்களா, சிறு ஓசைக்கும் எழுந்து விடும் நான் எப்படி இப்படி அவர்கள் கிளம்பியது தெரியாமல் உறங்கினேன் என நொந்து கொண்டு முன் அறையைப் பார்த்தால் அனைத்து பெட்டிகளும் இருந்தன. அவசரமாக சென்று குரல் கொடுத்து எழுப்பினேன். 





அடுத்த அரைமணிநேரத்தில் நிகழ்ந்ததை வேறெங்கும் எதிர்பார்ப்பது கடினம். நான்கு மணிக்கு எழுந்து அப்படியே பிள்ளைகள் இருவரையும் கிளப்பி, பத்தாவது நிமிடம் டாக்சியில் ஏறி விமான நிலையம் ஓடினர். நாங்கள் தங்கியிருந்த சீமெய் பகுதியிலிருந்து விமான நிலையம் 10 நிமிட பயணத்தொலைவு. அதுவும் அதிகாலை வேளை, ஆளரவமற்ற சாலை, ஐந்து நிமிடத்தில் விமான நிலையம் சென்று சேர்ந்தனர். பெட்டிகளை இறக்கச் சொல்லிவிட்டு கணேஷ் பாஸ்போர்ட் டிக்கெட்களோடு உள்ளே ஓடினார். விமானத்துக்கு நாற்பது நிமிடமே இருந்த நிலையில் அனைவரும் உள்ளே சென்றுவிட ஆளில்லாமல் இருந்த கவுண்டர்-ல் இருந்த விமான சேவை பணியாளர், குழந்தைகள் இருவரோடு அவசரமாக உள்ளே நுழைந்ததைப் பார்த்து உடனே பரபரப்பானார்கள். பயண ஆயத்த ஏற்பாடுகளை கணினியில் செய்து கொண்டே உள்ளே அவசரமாக அழைத்து நால்வர் வந்து கொண்டிருப்பதைத் தெரிவித்தார்கள். பெட்டிகள் தனியே அவசரமாக ஒருபக்கம் ஓடின. அதிகாலை வேளையிலும் எத்தனையோ விமானங்கள் வருவதும் போவதுமாக விமான நிலையம் பரபரப்பாகவே இருந்தது. 

2012-2019

இவர்களுடன் கூடவே சென்ற ஒரு விமானப் பணியாளர் இவர்களது விமானத்தைக் குறிப்பிட்டு குடியேற்றப் பரிசோதனை வரிசையில் முன்னால் அனுப்பினார். தானியங்கி முறை குழந்தைகளுக்குக் கிடையாது என்பதால் அந்தத் தாமதம், இல்லையேல் அதுவும் ஒரு நிமிட ஸ்கேனிங் மட்டுமே. அனைத்தையும் விரைவாக முடித்து ஓடிச் சென்று விமானம் ஏறினார்கள். இவ்வளவு அதிவிரைவாக அன்று அனைத்தும் முடிவுற்று விமானத்தை அவர்கள் பிடித்ததில் சாங்கியின் சீரான எளிதாக்கப்பட்ட நடைமுறைகளும் கையாளுதலும் தெரிந்து கொள்ள முடிந்தது.    

நான் ஒவ்வொரு முறையும் பயணம் செய்வதாக இருந்தால் வெகு முன்னதாகவே வந்து விடுவது வழக்கம். பயண சடங்குகள் எல்லாம் முடிந்து உள்ளே சென்றுவிட்டால் அது ஒரு தனியுலகம். வழக்கமாக கடைசி நிமிட பரிசுப்பொருட்கள், சாக்லேட்டுகள் மற்றும் தீர்வை இல்லாத மது விற்பனைக் கடைகளில் கூட்டம் அதிகம் இருக்கும். அவற்றுக்கு நடுவே ஆங்காங்கே தீவு போல சில குட்டி ஆச்சரியங்கள் காத்திருக்கும்.

காத்திருக்கும் வேளையில் கொஞ்சம் இசை


மஞ்சள் வண்ண டேன்டேலியன் மலர்கள் போல படிகத்தில் செய்யப்பட்ட 12 மலர்களின் தோட்டம், இச்சிற்பங்கள் கைகளால் உருவாக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பொஹீமிய கண்ணாடி வடிவங்களால் ஆனவை. முதலில் ஏதோ கடையின் விளம்பரத்துக்காக வைத்திருக்கிறார்கள் என்றெண்ணிக் கடந்திருக்கிறேன். இவற்றைக் குறித்து வாசித்த பிறகு, இதன் வேலைப்பாடுகள் வியக்க வைத்திருக்கின்றன. 

படிகப் பூக்கள்

மூன்றாம் டெர்மினலில் இன்னொரு இடம் இங்குள்ள வண்ணத்துப்பூச்சிகளின் தோட்டம்,  நாற்பதுக்கும் மேற்பட்ட வகைமைகளில் நூற்றுக்கணக்கான பட்டாம்பூச்சிகளைக் காண முடியும். இதற்கென சில குறிப்பிட்ட செடிகளையும் இத்தோட்டத்தில் வளர்க்கிறார்கள். குழந்தைகளுக்கான மிகப் பெரிய சறுக்குக் குழாயும் இங்கு உண்டு.  முதல் தளத்தில் பூலோகத்தில் தொடங்கி அதலம், விதலம், சுதலம் கடந்து மூன்றாவது அடித்தளத்தில் கொண்டுவந்து விடும் உலோக நாகங்கள் குழந்தைகளுக்கு மிகப் பிடித்தவை, பெற்றோருக்கும் ஆசையாகத்தானிருக்கும், உள்நுழைய அனுமதி இல்லை.  

விமான நிலையப் பூந்தோட்டம் - அம்மாவுடன்

ஒவ்வொரு முறையும் பயணம் செல்வதற்கு முன் கிடைக்கும் ஒரு மணிநேரத்தில் ஏதோ முடிந்த அளவு சுற்றிப் பார்ப்பதற்கே நேரமிருக்கும். ஒரு நாள் ஐந்து-ஆறு மணிநேரம் விமான நிலையத்தின் உட்புறம் சுற்றிப் பார்க்க ஒரு அழகிய வாய்ப்பு கிடைத்தது.  கம்போடியா பயணம் முடிந்து ஆசிரியர் ஜெயமோகன் மற்றும் அருணா அக்கா, அஜிதன், சைதன்யா அனைவரும் சிங்கை வழியாக இந்தியா திரும்பினார்கள். எனது பயணம் சிங்கையோடு முடிகிறது. அவர்களுக்கு ஆறு மணிநேரம் அடுத்த விமானத்துக்கு இருந்தது. விமானம் விட்டிறங்கியதும் ஆசான் வெண்முரசு எழுத அமர்ந்துவிட்டார். 

எனது பயணம் முடிந்துவிட்ட நிலையில் நான் உட்பகுதியில் எவ்வளவு நேரம் தங்க முடியும் என்று விமான நிலைய அதிகாரிகளிடம்  சென்று விசாரித்தேன். அன்றைய நள்ளிரவு 12 மணிவரை தங்க முடியும் என அறிந்து கொண்டேன். அன்றுதான் நானும் முதல் முறையாக அஜிதன், சைதன்யா மற்றும் அக்காவோடு விமான நிலையத்தை, அதன் அத்தனை முனையங்களில் உள்ள அழகிய இடங்களையும் சென்று பார்த்தேன். மாலை அவர்களது விமானம் கிளம்பும் வரை அங்கேயே உடன் இருந்துவிட்டு வந்த அந்த நாள் மிக இனியது. வெளியே வந்து காலையில் வந்த எனது பெட்டியைப் பற்றி விசாரிக்க, தொலைந்ததும் பெற்றதும் (Lost and Found) பகுதியில் கிடைக்கும் என்றார்கள். அது வழக்கமான வருகை தளத்திலேயே பின்புறம் இருக்கும் பகுதி. பல்லாயிரம் விமானங்கள் வந்து போகும் நிலையத்தின் கைவிடப்பட்ட பொருட்கள் வைக்கும் அறையே மிகப் பெரிதாக இருந்தது. அதையும் அன்றுதான் காண நேர்ந்தது.  

 ஒவ்வொரு முறையும் விமான நிலைய காட்சிகள் காண சலிக்காதவை. இந்தியாவிலேயே கிடைத்தாலும் இன்றும் கோடாலித் தைலம் எனப்படும் ஆக்ஸ் ஆயில், டைகர் பாம் போன்றவற்றை வாங்கக் கடைகளில் கூட்டம் இருக்கிறது. இங்குள்ள மிக முக்கியமான இன்னொரு கூட்டத்தை ஈர்க்கும் விஷயம் கால்களைப் பிடித்துவிடும் தானியங்கி சாதனங்கள். பயண ஆயத்தங்கள்  முடிந்து உள்ளே விமானம் புறப்படும் வாயிலுக்கு வெகுதூரம் செல்ல வேண்டியிருக்கும். அதற்கும் ரயில், பேட்டரி கார், தானியங்கி நடைப்பட்டைகள் எல்லாம் இருந்தாலும் நடந்து சென்றால்தான் காத்திருக்கையில் மக்கள் என்னென்ன செய்கிறார்கள் எனப் பல காட்சிகளைக் காண முடியும். முக்கியமாக நம்மூரில் இருந்து வரும் பலரும்  காத்திருந்து தங்கள் குடும்பத்தினருக்கு இந்தக் கால்பிடித்துவிடும் இருக்கைகளில் இடம் பிடித்து சில நிமிடங்கள் அங்கே அமர்ந்து பிறகு அழைத்துச் செல்வார்கள். முதலில் இதென்ன ஒரு சர்வதேச விமான நிலையத்தில் இதற்கு இப்படி வரிசையில் காத்திருக்கிறார்களே எனத் தோன்றினாலும், இத்தகைய கைக்கு எட்டாத வசதிகளை விளம்பரத்துக்குத்தான் என்றாலும் அனைத்து தரப்பினருக்கும் கைக்கெட்டும்படி (காலுக்கெட்டும்படி) செய்திருக்கிறார்களே என மகிழ்ச்சியடைந்து கொண்டேன். மதுரை சுங்கடி சேலையணிந்து நெற்றியில் பெரிய பொட்டோடு, முகத்தில் ஒரு குழந்தைச் சிரிப்போடு இந்தக் கால் அமுக்கிவிடும் இயந்திரம் ஏற்படுத்தும் புதிய குறுகுறுப்பை அனுபவித்தபடி, பக்கத்தில் நின்ற மகனின் கையைப் பிடித்துக்கொண்டு ஒரு கேளிக்கையில் ஈடுபட்டிருக்கும் மனநிலையோடு அமர்ந்திருந்த வயதான தாயாரின் முகம் இன்றும் நினைவில் இருக்கிறது. அந்த சந்தோஷம் கிடைக்குமென்றால் எந்த நாசூக்கும் பார்க்கத் தேவையில்லை. 

விமான நிலைய சுற்றுலா

வழக்கமாக சென்னை, பெங்களூர் விமானங்கள் டெர்மினல் 3லிருந்து கிளம்பும், அரிதாக 2ஆவது முனையம். டெர்மினல் 1 சீனா மற்றும் கிழக்காசிய நாடுகளுக்கு செல்லும் விமானங்களுக்கானது. அதனால் வெகு காலம் வரை முதல் டெர்மினலின் உட்புறம் நான் பார்த்தது இல்லை. மூன்றில் அது காலத்தால் முந்தையது(1981-ல் கட்டப்பட்டது) என்பதால் வெளியில் உள்ள வளாகமே சற்று மங்கிய ஒளியோடு தெரியும். நான் சிங்கை வந்த சில மாதங்களிலேயே அங்கு பகுதி பகுதியாக புணரமைப்புப் பணிகள் நடந்தேறின. 2019-ல் சாங்கியின் அணிநகை எனப்படும் சாங்கி ஜ்வெல் (Changi Jewel) கட்டி முடித்து திறக்கப்பட்டபோது இந்த முதல் டெர்மினலும் புத்தொளி கொண்டு மின்னியது.

Kinetic Rain - Terminal 1

வழக்கமாக செல்லும் மூன்றாவது டெர்மினல் 2008-ல் தான் கட்டி முடிக்கப்பட்டது. முகப்பிலும் உட்புறமும் மிகுதியும் கண்ணாடி பயன்படுத்தப்பட்டிருக்கும் இக்கட்டுமானத்தில் கூரையில் இருந்து வரும் இயற்கை வெளிச்சத்துக்கும் பெரும் பங்கு இடம் விட்டிருக்கிறார்கள். தரைத்தளத்தில் புறப்பாடு தொடர்பான நீண்ட வரிசைகளும், மேல் தளத்தில் விமான வருகைகளும் இருக்க, மூன்றாம் நான்காம் தளங்கள் உணவகங்கள், கடைகள் நிரம்பியது. விமானங்கள் கிளம்புவதை பார்க்கும் வண்ணம் ஒரு பார்வையாளர் உப்பரிகையும் நான்காம் தளத்தில் உண்டு. இதுவும் வெளியிலிருந்து உணவகங்களுக்கு வரும் மக்கள் கூட சென்று பார்கக முடியும், இலவசம். இது தவிர நிலத்துக்கடியில் மூன்று தளங்களில் கார் நிறுத்துமிடங்களும், பிற கடைகளும், மற்ற டெர்மினல்களை இணைக்கும் நடை பாதையும், நகரத்துக்கு செல்லும் ரயில், பேருந்து நிறுத்தங்களுக்கு செல்லும் வழியும் அடித்தளங்களில் இருக்கின்றன. 


ஏறக்குறைய இதே அமைப்புதான் முதல் மற்றும் இரண்டாவது டெர்மினல்களும் கொண்டிருக்கின்றன, என்றாலும் காலத்தால் முற்பட்டவை. காலம் என்றவுடன் நினைவில் எழுவது ஒன்று இரண்டாவது டெர்மினல் புறப்பாடு தளத்தில் முகப்பிலேயே பொதுமக்கள் பார்வைக்கு உள்ளது. 

ஒவ்வொரு கணமும், இதற்கு முன்னும் பின்னும் நிகழும் பல்லாயிரம் நொடிகளில் நடந்தவற்றால்/நடக்கப்போவதால் சமைக்கப்பட்டது என்பதை ஒவ்வொரு முறையும் நினைவூட்டிய வண்ணம் இருக்கும் "A Million Times at Changi". பல நூறு கடிகார முட்களின் ஒன்றிணைந்த நடனத்தில் கணப்பொழுது  சிங்கை நேரம் தோன்றி மறையும்.  ஸ்டாக்ஹோமை  சேர்ந்த வல்லுநர்களால் வடிவமைக்கப்பட்ட இந்தக் கடிகாரத்தைப்  பார்த்துக் கொண்டேயிருந்தால் நேரம் போவதே தெரிவதில்லை என்பது தேய்வழக்கில் ஓர் நகைமுரண். நேரம் என்பது அலகிலா நடனத்தில் நம் சிந்தையில் அள்ள முடிந்த ஒரு துளி, அதுவும் காலம் தனது இருப்பை உணரச்செய்யும் தருணங்களில் மட்டும். அங்குமிங்குமாக ஏதோ நடனம் புரியும் இயந்திரக் கரங்கள் அவ்வப்போது அந்த நிமிடத்தைக் காட்டுவது மீள மீள நம்மை மயக்குவதும் அதை விலக்குவதுமான அனுபவம்.  அவசியம் இந்தக் காணொளியில் அதன் ஒரு துளியைக் காணுங்கள் - https://youtu.be/MgkCe8cbi-Y. இறுதியில் வரும் "Celebrating the beauty of time" என்ற வாசகம் மேலும் ஒரு மனஎழுச்சியைத் தருகிறது.

Mesmerized

முதல் முனையத்துக்கு செல்லும் வாய்ப்பு வியட்நாம் சென்றபோது அமைந்தது. அங்கும் கள்ளிகள் தோட்டம்,மழைக்காட்டு வாழ்விடங்கள் (Rainforest  vivarium) என பல இடங்கள் இருக்கின்றன. இதைத் தவிர இளைஞர்களை ஈர்க்கும் வண்ணம்  ஒரு சமூக மரம் ஒன்றிருக்கிறது.  டிஜிடல் திரைகள் கொண்டு வடிவமைக்கப்பட்ட பெரிய மரம் போன்ற மைய வடிவம். அங்குள்ள புகைப்படக்கருவியில் புகைப்படம் எடுத்துக்கொண்டால் சிறிது நேரத்தில் நமது புகைப்படம் அந்த மரத்தில் கிளையேறும். சில நிமிடங்கள் வரை பறவைகள் மரத்தில் தத்தித் தாவுவது போல பலநூறு படங்களுக்கு நடுவே நமது முகங்களும் தத்தித் திரியும். ஆணும் பெண்ணும் இருமையைக் குறித்து இருவிரல் காட்டி இம்மரம் முழுவதும் சிரிக்கின்றனர்.    



2017-ல் திறக்கப்பட்ட நான்காம் டெர்மினல் இத்துடன் இணைக்கப்படாமல் தனியாக இருக்கிறது. அங்கு பேருந்தில் செல்லலாம்.   ஏறத்தாழ முற்றிலும் தானியங்கிகளாகி விட்ட முனையம் இது. பயண ஆயத்தம்,  பயணச்சீட்டு விவரங்களை அச்சிட்டு பெட்டிகளில் ஒட்டி உள்ளே அனுப்புவது, பாஸ்போர்டைக் காட்டி குடியேற்ற முறைமைகள் செய்வது அனைத்தும் இயந்திரங்களோடும் கணிப்பொறிகளோடும் மட்டுமே. ஒரு நபரிடம் கூட கண் நோக்காமல், ஒரு வார்த்தையும் பேசாமல் கடந்து உள்நுழைகிறது பெரும் பயணியர் கூட்டம்.  



குடியேற்ற முறைமைகள் நிகழும் மாபெரும் வாயிலில் தலைக்கு மேலே பல டிஜிடல் திரைகள் ஒன்றிணைக்கப்பட்ட மாபெரும் திரையில் ஏதேதோ காட்சிகள், சிங்கை, மற்றும் கிழக்காசிய நகரங்களின் காணொளிகள். நமை பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கும் தொலைதூர நகரங்களுக்கு அழைத்துச் செல்லும் விமானங்களின் விளம்பரங்கள், மற்ற சில அறிவிப்புகள். உண்மையில் அதில் வரும் தகவல்களை விட இந்திரபிரஸ்த மாளிகையைக் கண்ட கௌரவ நூற்றுவர் போல தலைசுற்றிப் போவதே அதிகம்.

நான்காவது முனையம்

இவை எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தது போல அமைந்திருப்பது 2019-ல் புதிதாகத் திறக்கப்பட்ட சாங்கி ஜ்வெல் வளாகம். 'ப' வடிவ முதல் மூன்று டெர்மினல்களை 'ப்' வடிவமாக்கிய கட்டிடம். உண்மையாகவே ஒரு இந்திரபுரி போல அமைக்கப்பட்டிருக்கிறது. தரை, சுவர், கண்ணாடி ஒவ்வொன்றும் தொடுவதற்கே கூச்சம் கொள்ளும் அளவுக்கு உயர்தர வெளிச்சம் பொருத்தப்பட்டு மின்னுகிறது. தலைக்கு மேல் அந்தரத்தில் மிதக்கும் பூக்குலைகள், மேகங்கள், வைரங்கள். 





இதன் மையத்தில் விண்கங்கை மண்ணிறங்க சித்தம் கொண்டது போல மேலிருந்து ஒரு நீர்ப்பொழிவு. மேலே சுழன்றிறங்கும் நீர் அறுபடாது மென்மையாக வடிந்து மையத்தில் உட்புறமாகப் பொழியும் காட்சியில் அது ஒரு நீர்ப்பெரும்தூண் என்றே தோன்றுகிறது, அல்லது நீர் கிளைவிரித்தெழுந்த மரம் போல. அடித்தளம் சென்று காண ஒரு மாபெரும் கண்ணாடிக்குவளைக்குள் அத்தனை நீரும் பொழிகிறது. இந்த நீர்மரத்தில் பல வண்ணங்கள் பட்டுத் தெரிகின்றன. அவ்வப்போது அந்நீரையே திரையாக்கி வண்ணக் கதிர்கள் கோலமிட காட்சிகள் சித்தரிக்கப்படுகின்றன. 



இதை ரயிலில் சென்ற படி பார்க்கும் வண்ணம் முனையங்களை இணைக்கும் சிறிய ரயில் இதன் குறுக்கே மிதந்து செல்கிறது. சுற்றிலும் நூற்றுக்கணக்கான கடைகள். இக்கட்டிடம் முதன்மையாக ஒரு வணிக வளாகம், சிங்கை வழியாக விமானத்தில் பயணம் செய்யும் சுற்றுலாப் பயணிகளையும் ஈர்க்கும் வண்ணம் இது அமைக்கப்பட்டிருக்கிறது. ஆரம்பித்து ஒரு வருடத்துக்குள்ளாகவே நோய்த்தொற்று ஆரம்பித்துவிடவே பல பகுதிகள் தற்காலிகமாக மூடப்பட்டிருக்கின்றன. எதிர்பார்த்த வருவாய் கிட்டியிருக்காது. 

ஸ்கைட்ராக்ஸ் (Skytrax) என்னும் விமான நிறுவனங்கள் மற்றும் விமான நிலையங்களை தர வரிசைப்படுத்தும் அமைப்பு தரும் சிறந்த விமான நிலையத்துக்கான விருதை சாங்கி எட்டு வருடங்களாய் தொடர்ச்சியாய் தக்க வைத்திருக்கிறது.  இந்த நிலையை சிங்கப்பூர் விமான நிலையம் அடைவதற்கு முன் நீண்ட வரலாறு இருக்கிறது.

1943-44-ல் போர்க்கைதிகளைக் கொண்டு ஜப்பானியர்கள் முதல் சாங்கி விமான ஓடுதளத்தை அமைத்ததை முன்னர் பார்த்தோம். அதை அடிப்படையாகக் கொண்டே ராயல் விமானப் படை 1946-ல் முதற்கட்ட விமானப் படை செயல்பாடுகளைத் துவங்கியது. 1955-ல் பாயா லேபரில் (Paya Lebar) குடிமக்கள் பயன்பாட்டுக்கான விமான நிலையம் துவங்கியது. 1937-ளிலேயே துவங்கப்பட்ட கல்லாங் (Kallang) விமானதளம் மிகச் சிறிய விமானங்களையே கையாளக்கூடியதாக இருந்தது. அதன் பிறகு அளவிற் பெரிய பயண விமானங்கள் பெருகவும் விமான நிலையத்தை விரிவாக்க வேண்டிய நிலை வந்தது. நகர மையத்தின் அருகே இருந்த கல்லாங்கில் விமான நிலையத்தை  விரிவாக்க முடியாததால் சாங்கி அடுத்த தேர்வாக இருந்தது. ஆனால் அதன் மண்ணின் உறுதி பற்றிய சந்தேகம் இருந்தமையால் பாயா லேபருக்கு போனது விமான நிலையம். 1952-களில்  பாயா லேபர் விமான நிலையம் கட்டுவதற்கு நிலம் தோண்டும் முயற்சியில் அங்கு அதுவரை வெடிக்காமல் மண்ணில் புதையுண்டிருந்த ஜப்பானிய வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. மீண்டும் தோண்டிப் பார்த்ததில் மேலும் சில குண்டுகள் சிக்கின. எனவே திட்டமிட்டதை விட அதிக பொருட்ச்செலவில் அவ்விடத்தை பாதுகாப்பாக்கி, ஆங்கிலேய அரசால் கட்டி முடிக்கப்பட்டது அவ்விமான நிலையம். 1955-ல் எல்லா வர்த்தக விமானங்களும் பாயா லேபர் விமான நிலையத்திலிருந்து இயங்கத் தொடங்கின. ஆனால் 1970-களில் விமானப் போக்குவரத்து அதிகரித்து விட்டது. அது வடிவமைக்கப்பட்ட கையாளும் அளவாகிய வருடத்துக்கு 1 மில்லியன் என்ற பயணிகள் எண்ணிக்கையை விட நான்கு மடங்கு பயணிகளை அது கையாள வேண்டிவந்தது. 

சாங்கி கைகொடுத்தது. இதுவும் கடல் தந்த கொடைதான். கடலைப் பின்தள்ளி  மண் உறுதியாக்கப்பட்டு விமான நிலையம் கட்டி முடிக்கப்பட்டது. முதல் டெர்மினல் 1981-ல் இயங்கத் துவங்கியது. எதிர்காலத் தொலைநோக்கோடு திட்டமிடுதல் என்பதை முக்கியமான அடிக்கல்லாகக் கொண்டு சாங்கி விமான நிலையம் இயக்கப்படுகிறது. 1986-லேயே இரண்டாவது முனையத்துக்கான கட்டுமானப் பணிகள் துவங்கின. 1991-ல் அதுவும் செயல்படத்துவங்கி வருடத்துக்கு 44 மில்லியன் பயணிகளை கையாளத் துவங்கியது சாங்கி. 



விமானப் பயணம் அனைவருக்கும் சாத்தியமாகிக் கொண்டிருந்த 90-களின் இறுதியில் மூன்றாவது முனையத்துக்கான திட்டமிடல் துவங்கியது. வெறும் பரப்பளவு, கொள்ளளவு போன்ற கணக்குகள் மட்டுமின்றி சேவையின் தரம், மற்றும் வசதி என்பதை முதன்மையாக்கிக் கொண்டது சாங்கி. 2006களில் குறைந்த செலவு விமானங்களுக்கான முனையம் ஒன்றும் கட்டிமுடிக்கப்பட்டது. ஆனால் அதன் திட்டமிட்ட கணக்குகளை விட அதிக அளவில் போக்குவரத்து சூடு பிடிக்கவே, அதை முழுமையாக இடித்துவிட்டு, நாளைய உலகுக்கான விமான நிலையம் என்னும் கனவோடு நான்காவது முனையம் கட்டும் பணிகள் துவங்கின. மற்ற முனையங்களுக்கான சாலைப் போக்குவரத்து எவ்விதமும் தடங்கல்களே இல்லாமல் இந்தப் பணி நடந்ததைக் கண்கூடாகக் கண்டோம். உதாரணமாக பாதசாரிகள் கடக்கும் பாலம் 24-மணிநேரமும் வாகனங்கள் கடக்கும் சாலைக்கு மேலாக அமைக்கப்பட்ட விதம், சாலையில் வாகனப் போக்குவரத்துக்கு எந்த இடையூறும் இன்றி இந்தப் பாதசாரிகள் கடக்கும் பாலம் தூக்கி நிறுத்தப்பட்டதைக் காணலாம். இந்தக் கட்டுமானப் பணிகளில் சிங்கப்பூர் அடைந்திருக்கும் திறமை தனியாகப் பேசப்பட வேண்டியது. 

இணையத்திலிருந்து

அதே போல கட்டுமானத்துக்கு மிக அருகில் இருந்த ஒரு மரத்தை வெட்ட வேண்டிய நிலை வந்தபோது அது அப்படியே குழந்தை போல தூக்கி சாலையின் அப்புறம் இறக்கிவிடப்பட்டது. மரங்களும் அவ்வப்போது பெரிய கனரக வாகனங்களில் இங்கு இடம் பெயர்ந்து புது மனை குடி போவதை இங்கு பார்க்கலாம்.  சாங்கி நான்காவது முனைய நிர்மாணத்தில் இது நடந்தது.

இணையத்திலிருந்து

 வணிகத்தின் வாயிலாக வரும் பணமே முக்கிய வருவாய் என்பதால்  விலைகுறைந்த விமான சேவைகளுக்கான முனையம் என்ற பிம்பத்தையும் மாற்றியாக வேண்டி இருந்தது. எனவே மற்ற மூன்று டெர்மினல்களையும் விஞ்சி எழுந்தது நான்காவது முனையம். 

நண்பர் கணேஷ் - நான்காவது டெர்மினலில் 



நான்காவது முனையம்

தனக்குத்தானே அறைகூவல் விட்டுக்கொண்டு முன்செல்கிறது சாங்கி. ஐந்தாவது முனையத்துக்கான கனவுகளும் திட்டங்களும் ஏற்கனவே கையில் இருக்கின்றன. விமான நிலைய விரிவாக்கங்களுக்கென தொடர்ந்து கடலுடன் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டுக்கொண்டே இருக்கிறது சிங்கப்பூர். 


கட்டுமானத்தில், அழகியலில், தொழிநுட்பத்தில், வசதிகளில், அன்றாட இயங்குமுறைகளை அதிக மனிதத் தேவைகளின்றி தானியங்கி மயமாக்கியதில் என பல விதங்களிலும் தன்னைத்தானே வென்று முன்னிலையைத் தக்க வைத்துக்கொள்கிறது சாங்கி விமான நிலையம். ஒரு விதத்தில் சிங்கப்பூர் எனும் ஒரு பானை சோற்றின் பதம் காட்டும் ஒரு சோறு சாங்கி விமான நிலையம் என்றும் சொல்லலாம்.

https://eresources.nlb.gov.sg/infopedia/articles/SIP_130_2005-01-22.html
https://eresources.nlb.gov.sg/infopedia/articles/SIP_574_2004-12-23.html
https://www.changiairport.com/content/dam/cacorp/publications/T4%20CommemorativeBook.pdf


Friday, February 26, 2021

சிங்கை குறிப்புகள் - 18 - சிங்கையின் சிறகுகள்

அப்பாவின் பணிநிமித்தம்  பள்ளிநாட்களில் இடமாற்றமும் ஊர்மாற்றமும் வருடாவருடம் நிகழ்ந்திருக்கிறது. எனவே ஒரு ஊரை விட்டுப் புறப்படுவதும் பதிய ஊருக்கு சென்றிறங்குவதும் பழகிவிட்ட ஒன்றுதான். ஆனால் அந்த புறப்படும் கணம் எப்போதுமே மன எழுச்சியையே தந்திருக்கிறது. 



சாங்கி விமானநிலையம் - புறப்பாடு

'இனி இங்கில்லை' என்பது போல விடுதலை தருவது வேறொன்றில்லை. பறவைகள் ஒவ்வொன்றும் அச்சொல்லை உதிர்த்துவிட்டே இறகு விரிக்கின்றன. கிளம்பும் இடத்தின் எடையோடு பறக்க இயலாது. மனதுக்கு மிக அணுக்கமான இடத்தை விட்டுக் கிளம்பினாலும் கூட விட்டுச்செல்லும் ஏக்கத்தை விட, முன்னே காத்திருக்கும் அறியா வெளியின் ஈர்ப்பு  இனிது.



ரயில் நிலையங்கள் முன்பு அந்த இனிய மனவெழுச்சியைத் தரும். எத்தனை எத்தனையோ உணர்வுகளை ஆங்காங்கே ஏற்றிக்கொண்டு கதம்பமாய் கட்டி இழுத்துச் செல்லும் ரயில், அனைத்தையும் எங்கெங்கோ இறக்கிவிட்டு பயணத்தைத் தொடரும். வழியில் அதன் ஒவ்வொரு நிறுத்தமும் கூட நிறுத்த இயலாத சக்கரங்களையே, பயணத்தையே நினைவுபடுத்துகிறது. பயணத்துக்குப் பிறகு சேர வேண்டிய இடம் சென்றடைந்த பிறகும், விரையும் மனது பல மணிநேரங்கள் ஓடிக்கொண்டே இருப்பதை உணரமுடியும்.

தரைவழிப்பயணங்களில்  நிலக்காட்சிகள் ஏற்படுத்தும் உணர்வுநிலைகளும், வான்வழிப்பயணத்தின் எல்லையகளற்ற திசைசூழ் வெளி கிளர்த்தும் மனநிலைகளும், நில்லாப் புவி மேல் ஓயா அலைகளில் நீளும் நீர்வழிப் பயணம் தரும் உள்ளோட்டங்களும் வேறு வேறானவை.
பெயரறியா தீவு


முதல் சில வான்வழிப் பயணங்களின் உளக்கிளர்ச்சிகள் அடங்கிய பிறகு, எப்போதுமே விமானப் பயணங்களை மிகவும் விரும்பியே செய்திருக்கிறேன். முதல் காரணம் முன்னர் சொன்னது போல, அந்தத் தரையிலிருந்து மேலெழும் தருணத்தின் ஒரு பரவசம். விமான நிலைய சடங்கு சம்பிரதாயங்களெல்லாம் முடிந்து ஏறி அமர்ந்த பிறகு, இவ்வுலகு அச்சிறு உலோகக் கூண்டென சுருங்கி கூட்டுப்புழு போல உணரும் சில நிமிடங்கள். சில கணங்களுக்குப் பிறகு எல்லையற்ற வெளியில் ஒரு துளியென விரியும் பயணம். 


அதிலும் சிங்கை போன்ற  மிகவும் பரபரப்பான விமான நிலையங்களில் ஓடுதளம் நோக்கி, வெகு தூரம் காரை ஓட்டிச் செல்வது போல விமானம் உருண்டு செல்லும். அதன்பிறகான சில நிமிடங்கள் நான் தவறவே விடாதவை. ஓடுதளத்தில் மெதுவாகத் தொடங்கி சரசரவெனத் தீபோல பற்றியேறும் வேகம்; புவியீர்ப்பிலிருந்து விடுபட்டு விமானம் அந்தரத்தில் தொற்றி ஏறிக் கொள்ளும் அந்த ஒரு நொடி; வயிற்றில் நிகழும் ஒருகண அமிலமாற்றம்; நேர்க்கோட்டில் தெரியும் நிலம் சாய்வான கோணத்தில் தெரியும் கணங்கள், நாம் கடுகென நின்றிருந்த மாபெரும் நிலவெளி உரு சிறுத்து, சுருங்கி ஒரு வரைபடம் போல மாறும் நிமிடங்கள்,  மேகப்பொதிகள் வந்து விமானத்தை முற்றிலும் ஏந்திக் கொள்ளும் தருணங்கள் என ஒவ்வொரு முறையும் இக்கணங்கள் அற்புதமானவை.



இரண்டாவது காரணம், புவியில் கால்பாவாது மேகமென மிதந்தவாறு நிலத்தைக் கடலைக் கண்டு செல்லும் பயண நிமிடங்கள். வானும் கடலும் ஒன்றென்றே ஆகும் விரிவெளியில் ஒரு சிறு புள்ளியென கரையக் கிடைக்கும் வாய்ப்பு. முழுநிலவின் மேகங்களை விமானத்திலிருந்து பார்த்த பிறகு மண்ணிறங்குவது மிகக் கடினம். பகலென்றாலோ மேகக்குவைகளும் நீலக்கடலும் போதும் பித்தெழச்செய்ய.





தரையிறங்குவது எதனாலோ எப்போதும் பதற்றமாகவே இருக்கும். இத்தனை நூற்றுக்கணக்கான பயணங்களுக்குப் பிறகும் கூட சக்கரங்கள் வெளியே வந்து  தரையை வேகமாக உணரும் அந்த நொடி உள்ளுக்குள் சகலமும் அடங்கியே காத்திருக்கச் செய்யும்.
முதல் முறை சிங்கை வந்த விமானப் பயணத்திலோ மழைக்காலம் ஆதலால் வங்காள விரிகுடாவின் மேலேறியதுமே விமானம் அவ்வப்போது சற்றுத் தளளாடியபடியே வந்தது.  தரையிறங்க முக்கால்மணி நேரம் முன்பே மலேசியா தெரியத் தொடங்கிவிட
மலேசிய வானில் பல இடங்களில் மின்னல் கொடிவிரித்துக் கொண்டே இருந்தது. இருளில் நகர ஒளிகளில் சுடர்கொள்ளும் மேகங்களும் அவ்வப்போது கிளைபிரியும் மின்னல்களும் என அந்த இரவு கடந்தது. யாரோ விட்டுச் சென்ற ஒளிரும் நகையென சிங்கை கீழே கிடந்தது. பிறகு உயரம் குறையத் தொடங்கி சில நிமிடங்களுக்கு எதுவுமே கண்ணில் தெரியவில்லை. கனத்த மேகங்களூடே, விமானத்தின் சிறுவிளக்கின் ஒளி மேகத்தில் பிரதிபலிக்க, உடல் பதறியபடி இறங்கிய விமானமும், சாளரம் வழியே கண்ணுக்குத் தெரிந்த படபடத்த விமான இறக்கையும் என சில நிமிடங்கள்.
சிங்கையின் கிழக்கு கடற்கரை - தரைதொடும் முன்னர்


 சட்டென்று நீருக்குள் பாய்ந்து ஆழத்துக்குள் வந்தது போல அவ்வளவு அடர் மேகங்களுக்கு அடியில் சிங்கை வழக்கம் போல பரபரப்பாக பளபளத்துக் கொண்டிருந்துது. குழந்தைகள் விளையாடும் பொம்மைகள் போலத் தெரிந்த  சாலைகள் விரைந்து நெருங்கி பெரிதாகி விமானத்தை நோக்கி வந்தன. கடலின் எல்லையிலேயே துவங்கும் ஓடுதளம் அதிவேகமாக பின்னோக்கி விரைய சாங்கிக்குள் ஒரு சிறு வெள்ளி மீனென நுழைந்தது வான்பறவை. கதவு திறக்க மயன் படைத்த உலகு  கண்முன் விரிந்தது.


அன்றுமுதல் இன்றுவரை எனக்கு சிங்கையிலேயே மிகப் பிடித்த இடங்களின் பட்டியலில் சாங்கி விமான நிலையத்துக்கு முக்கிய இடமுண்டு.  மற்ற விமான நிலையங்கள் போல வருவதற்கும் போவதற்குமான வாயில் மட்டுமல்ல இவ்விமான நிலையம். இதுவே ஒரு தனித்த சுற்றுலாத் தலமும், வணிக மையமும், உணவகங்களின் தொகுதியும், கேளிக்கை மையமும் ஆக விளங்குகிறது. எனவே இங்குள்ள வாழ்வின் ஒரு பகுதியாகிறது.

இரண்டாவது கட்டமாக சிங்கை வந்த பிறகு தங்கியிருந்த வீடும் விமான நிலையத்துக்கு வெகு அருகில் என்பதாலும், அலுவலகம் அமைந்திருக்கும் வர்த்தகப் பூங்கா இதற்கு அடுத்த ரயில் நிலையம்தான் என்பதாலும்  இது வீட்டுப் புழக்கடை போல பழகிப்போனது. அதிநவீனமான புழக்கடை.



பயணம் மேற்கொள்ளாவிட்டாலும் சாங்கி விமான நிலையத்தில் நுழைவதற்கு நம்மூர் விமான நிலையங்கள் போல கெடுபிடிகள் கிடையாது. பயணச்சீட்டு சோதனை வரிசை, பெட்டிகளை பயணவரிசையில் சேர்க்குமிடம் ஆகியவை தாண்டி பயண ஆயத்தம் முடிந்து குடியேற்ற  (Immigration) நுழைவாயில் வரை எத்தடையுமின்றி பொதுமக்கள் வந்து வெளியேறும் வண்ணம் அமைக்கப்பட்டிருக்கிறது. எனவே வழியனுப்ப வருவோரும், எதிர்கொண்டு அழைக்க வருவோரும் எக்காரணமும் இன்றி எனைப் போல சுற்றிப் பார்க்க வருவோருமென கலகலப்பாகவே விமான நிலையம் இருக்கும். 



இங்கு நான்கு முனையங்கள் (terminals) உள்ளன. நான்காவது முனையம் சில வருடங்கள் முன்னர்தான் (2017-ல்) திறக்கப்பட்டது. இவற்றில் மற்ற மூன்று நிறுத்தங்கள் 'ப' வடிவில் அமைந்தவை. மூன்று முனையங்களை இணைத்து சிறிய ரயில் ஒன்று உயரத்தில் செல்லும். அதைக் காணவே, பயணம் செய்யவே தொடக்கத்தில் பல முறை சென்றிருக்கிறோம். அதில் மிக வியப்பான ஒன்றாகத் தெரிந்த ஒரு விஷயம் - அந்த இரண்டு ரயில் பெட்டிகளில் முதல் பெட்டியில் பயண ஆயத்தம் முடித்தவர்கள் பயணம் செய்ய, இரண்டாவது பெட்டியில் பொதுமக்கள் பயணம் செய்யலாம். அவரவர் உள்நுழையும்/வெளியேறும் பக்கங்கள் வேறு. பயண ஆயத்தம் பெற்றவர்கள் பயணிக்கும் பகுதி விமான நிலைய குடியேற்றம் கடந்தவர்களுக்கான பக்கம் உட்புறமாகத் திறக்க, மற்றொரு பெட்டி வெளிப்புறம் திறக்கும். மிக எளிதானது போலத் தோற்றம் தரும் அந்த எல்லைக்கோட்டைக் கையாளும் விதம் மிக வியப்பாக இருந்தது.  
Skytrain

வாடிக்கையாளர்களுக்கு உராய்வுகளற்ற அதாவது செயல் சிரமமற்ற அனுபவத்தை ஏற்படுத்தித் தருதல் இன்று நவீன வங்கி, வணிக செயலிகளை வடிவமைக்கும் பொழுது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.   அது போல இந்த விமான நிலையத்தில் நிகழும் எந்த ஒரு அனுபவத்தாலும் ஒரு நடைமுறை சிரமம் இருப்பதாக மக்கள் உணர்ந்துவிடலாகாது என்ற கவனத்தை முதன்மையாகக்கொண்டு வடிவமைக்கப்பட்ட செயல்முறைகள், முறைமைகளின்  மேலாண்மை. 

மேலும் நகரத்தில் இருந்து சாங்கி விமான நிலையத்துக்குள் பேருந்திலோ காரிலோ வந்து நுழையும் பொழுது ஓரிடத்தில் தலைக்கு மேல் விமான ஓடுதளம் சாலையைக் கடக்கும். அதில் பெரிய விமானங்கள் குறிப்பாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானங்கள், ஒரு அழகிய பெரிய திமிங்கிலம் போல நாம் வரும் அதே நேரம் நம்மைக் கடந்து செல்வதைப் பார்க்க நேர்ந்தால் குழந்தைகள் போல குதூகலிப்பது உண்டு. 




இது தவிர சில சமயங்களில் இங்குள்ள உணவகளுக்கென, கடைகளுக்கென, சிங்கை வரும் நண்பர்களுக்கு விமான நிலையத்தையும் சுற்றிக் காட்ட என்று பல காரணங்களுக்காக வருவதும் உண்டு.  மாதம் ஒரு முறையேனும் பயணம் செய்து கொண்டிருந்த காலகட்டத்தில் கூட ஒவ்வொரு பயணத்துக்கு முன்னும் மூன்று மணிநேரம் முன்னதாகவே வந்துவிட்டு இங்குள்ள வண்ணத்துப்பூச்சிகளுக்கான தோட்டத்தையோ(T3), டெய்ஸி எனப்படும் மாபெரும் இயந்திர மலர் நமது நடமாட்டங்களைப் பொறுத்து தலை திருப்புவதையோ(T3), பல வண்ண மலர்கள் நிறைந்த மயக்கும் தோட்டத்தையோ(T2), மனதை ஒருநிலைப்படுத்திவிடும் ஆயிரம் தாமிர மழைத்துளிகள் அந்தரத்தில் புரியும்  நடனத்தையோ (T1),   கள்ளிகளின் தோட்டத்தையோ(T1), முகமே மலரென விரியும் சூரியகாந்தி மலர்களையோ(T2),  எஃகு மலர்க்குவைகளையோ பார்த்தவண்ணம் விமானம் கிளம்ப சில நிமிடங்கள் முன் வரை திளைத்து நிற்பேன். பித்துப் பிடித்த குரங்கு தேறல் மாந்தியது போல ஏற்கனவே பயணம் தரும் மன எழுச்சியை மேலும் அதிகரிப்பவை இந்தக் காட்சிகள்.

Kinetic Rain


Daisy 


ஒவ்வொரு இடமும் அங்கே நாம் அடைந்த உணர்வுநிலைகளாலும் அத்துடன் தொடர்புறுத்திக் கொள்ளும் நினைவுகளாலும் ஆனது.  
சில மறக்கவே முடியாத வாழ்நாளுக்கான நட்புகளை இங்கே முதல் முறை சந்தித்த தருணங்களையும், நெருங்கிய ஒரு உறவினரை அவரது மறைவுக்கு முன் கடைசி முறையாக இங்கு சந்தித்ததும் என பல நெகிழ்வான நினைவுகள் இந்த விமான நிலையத்தில் நிறைந்திருக்கின்றன.  பிரிதலும் பிரிதல் நிமித்தமும் தொடங்கி  ஐந்திணையின் உரிப்பொருளும் இங்கே நிகழக் காணலாம். நாளையும் இங்கே வரலாம்.