Thursday, April 30, 2015

ஜனனீ ஜ்வாலாமுகீ

தாதையர் பெயர் மருவிய
கோதையர் இருவரும்
ஜனகன் புகழ் ஜானகி
துருபத மகள் திரௌபதி

புவியன்ன பொறை உடையாள்
புவியில் தோற்றம்..
எரியனைய திறன் உடையாள்
எரியில் ஜனனம்..

மானுட மனத்தின் கறையைக்  கழுவ
வான்வரை வையக நெருப்பு தழுவ
இழிசொல் நீக்க
இருமுறை தீபுகென
மன்னவன் சொல் விதைத்தது தணல்
அவள் மாட்சி கூறி எழுந்தது கனல்

இவளோ தழலென தோன்றிய கமலி
கனலில் தோன்றியமா பாரதக் கனலி,
காளி..கிருஷ்ணை..பாஞ்சாலி..திரௌபதி
கண்ணீர் தாகம் தணிக்க அருந்தினள் குருதி

அவள் எரியை எரித்த புவிமகள்
இவள் புவியை எரித்த எரிமகள்
முன்னவள் கண்ணீரில் கனன்ற அக்னி
பின்னவளைப் பெற்றெடுத்ததோ?

அன்றோர் பொறுமை தீ குளித்தது
அவள் பொறை கண்டு தீ குளிர்ந்தது
யுகங்கள் தாண்டி செந்தழல் விளைந்தது
தீயிலே பிறந்த தீ தீமையைக் களைந்தது

நிலத்தடி அழுத்தம் ஆண்டுகள் தாங்கக்
கரியும் ஆகும் ஒளிமிகு வைரம்.
எத்துணை வலியும் நேரெதிர் நோக்க
வலிமையாய் மாறும் வல்லமை சேரும். 

Thursday, April 23, 2015

அமுதுக்கும் தமிழென்று பேர் - பாரதி

"நல்ல கவிதை என்பதற்கான வரையறை என்ன?" என்று கேட்டதற்கு கவிதையில் எழுதாத வரிகள் ( unwriiten lines) வாசகன் தானாக உணரும் வண்ணம் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார் எழுத்தாளர் சுஜாதா. சில கவிதைகள் எனக்குப்  புரியவில்லையே என்று சக நண்பர் வினவியபோது, அப்படியென்றால் அது உங்களைப் பொறுத்தவரை நல்ல கவிதையல்ல என்ற குறிப்பிட்டார். நல்ல கவிதை என்பது தனிமனிதன் சார்ந்த ரசனை/வாசிப்பனுபவம் என்ற சுஜாதாவின் கருத்து நியாயமாகப் படுகிறது.

இன்றைய நாளிதழ்களிலும் இணையத்திலும் வெளிவரும் காதலியின் தும்மல் விக்கல் குறித்த கவிதைகளுக்கிடையே unwritten lines இருக்கலாம், ரசிக்க நமக்கு முதிர்ச்சி போதவில்லை போலும். இப்படிப்பட்ட காளான் கவிஞர்களிடம் தமிழ்க் கவிதை படும் பாடு தாளம் படுமோ? தறிபடுமோ? யார் படுவார்?

தமிழின் தகைமை முழுதாய்ப் புரியும் முன்னரே பள்ளிப்பிராயத்தில், தன் கவிதைகள் வாயிலாக என் உள்ளம் கவர் கள்வன் பாரதி. பலருக்கும் அப்படியே. அனைவரும் பாடங்கள் வழி கற்ற பாப்பாப் பாட்டைத் தவிர வீட்டில் அனுதினம் பாடிய 'முருகா முருகா' வழி அறிமுகம். மேற்பார்வைக்கு வெறும் பக்திப்பாடலாய்த் தோற்றமளிக்கும் இப்பாடலுக்குள் நுண்ணிய வரங்கள் கேட்டிருப்பான்.
"அடியார் பலர் இங்கு உளரே -
அவரை  விடுவித்தருள்வாய்" என  விடுதலை கேட்கும் அந்த வரிகள் மாயையிலிருந்து, அறியாமையிலிருந்து, அகங்காரத்திலிருந்து என பலவிதமான அடிமைத்தளைகளில் இருந்து கேட்பதோடு அன்று அந்நியரிடம் அடிமைப்பட்டிருந்த அனைவருக்காகவும் கேட்ட வரம் அது.

வாழ்வாங்கு வாழ்ந்து மறைந்த பாட்டியின் (தாத்தாவின் அம்மா) மறைவையொட்டி பெருங்குடை விரித்த கல்லாலமர விழுதுகளென அனைவரும் பலதினங்கள் எங்கள் ஊரானஅம்மைநகரில் கூடியிருந்த நாட்களில் ஒரு நாள்; நம் மின்சார வாரியம் கடைக்கண் மூடியிருந்த ஒரு மாலையில், பிள்ளைகள் அனைவரையும் கட்டி மேய்க்கும் பொறுப்பேற்ற என் தமக்கை பாடலும் ஆடலுமாய் சொல்லிக் கொடுத்த 'காணி நிலம் வேண்டும்', பாரதி மேல் காதலேற்படுத்திய முதற்பாடல். சில நாட்களில், மாமா வீட்டில் பாரதியார் கவிதைகள் புத்தகம் பார்த்து மயங்கி நின்றபோது, மாமா பாரதி குறித்துக் கூறிய வார்த்தைகள் பசுமரத்தாணியாக மனதில் பதிந்தது.

முதல் முறை "காணி நிலம் வேண்டும்" கேட்ட பொழுதில் தோன்றிய அகக்காட்சி அவ்வயதுக்கு உரியதாய் இருந்தது. வெவ்வேறு காலகட்டத்தில் நினைக்கும்தோறும் வேறு வேறு உருவகங்கள். (அந்தப் பாடலைக் கீழே இணைத்திருக்கிறேன்)

கலையெனப்படுவது யாதெனக் கேட்பின் ரசிகனின் மனவளத்திற்கேற்ப கற்பனாசக்தியின் எல்லைகளுக்கேற்ப விரியும் பாங்குடையது எனலாம். சிறந்த கலை ஒவ்வொருவர் மனதிலும் ஒவ்வொரு உருப்பெறும். சில மிகச்சிறந்த புத்தகங்கள் திரைப்படமாக வரும்போது, புத்தகம் அளவு சிறப்பாக இல்லை எனக் கருதப்படுவதற்கு இதுவும் ஒரு காரணம்.

இன்று நாம் உடல் நலம் தொலைத்து, தொலைதூரம் திரிந்தலைந்து வாழ்வின் பெருநோக்கங்களில் ஒன்றாய் ஊர்க்கோடியில் வாங்கும் 3BHK வீடு பேறு அல்ல பாரதி கேட்டது.  தனது வேண்டுதலை ஓர் அழகிய காட்சியாக நம் மனக்கண் முன் விரிக்கிறான். "காணி நிலம்" (லௌகீகமாய் practicalஆகக்  கணக்கு போடவேண்டுமா - 1 காணி 132 சென்ட் அல்லது 1.32 ஏக்கர் - இன்றிருந்தால் shopping mall + multiplex கட்டிவிடலாம்.) - அவனும் அதில் ஒரு மாளிகையை கட்டித் தரும்படி கேட்கிறான் பராசக்தியிடம்.  அருகே ஒரு கேணி - இந்நீர் நிறைந்தூறும் கேணியருகே தென்னை மரங்கள் ஒன்றிரண்டல்ல - பத்து பன்னிரண்டு.

என்ன ஒரு வசந்தமான கோரிக்கை - தென்னங்காற்றும் நிலவொளியும்  நிறையும் வீடு. பகல் முழுதும் உழைத்த களைப்புத்தீர இரவில் அமைதி கொள்ள, சித்தம் மகிழ்ந்திட முத்துச்சுடரொளியாய் நிலவு முகம் காட்டும் முற்றம். வானையும் நிலவையும் வாழ்வில் தொலைத்த நமக்கு இன்று இந்த காட்சியைக் கண்முன் கொண்டு வருமளவேனும் நினைவில் இவை இருக்கிறதா? கத்தும் குயில் - தொலைவில் இருக்கும் தன் துணையை அழைக்கும் குயிலின் குரல் கூவலாக இருக்காது கத்துவது போல்தான் தொனிக்கும், அந்தக் குயிலின் குரல் காதில் விழவேண்டும்.

இங்கு சங்க இலக்கியங்கள் போல அந்த நிலப்பரப்புக்கு உரிய மரங்களையும் பறவைகளையும் பாடலில் கொணர்ந்து பரிபூரணமாக காட்சியாய் கண்முன் விரிக்கிறான். பாட்டுக் கலந்திடவே பத்தினிப் பெண் - மகாகவிஞன் அல்லவா - பாட்டை ரசிக்கும் முதல் ரசிகையாய் ஒரு பெண். அவர்கள் கூட்டுக் களியினிலே பிறக்கும் உன்னதமான கவிதைகள். இந்த உன்னதங்கள் கலைந்துவிடாதிருக்கக் காவலாய் பராசக்தியை அழைக்கிறான். இவையனைத்தும் நீ தந்துவிட, என் பாட்டுத் திறத்தால் இவ்வையத்தைப் பாலித்திடல் வேண்டும் என்கிறான். அவனது கவிதைகளுக்காக பராசக்தி இதற்கு மேலும் தரலாம்.


"வீடென்று எதை சொல்வீர்
அது அல்ல எனது வீடு" - மாலன் கவிதை நினைவுக்கு வரும் ஒவ்வொரு முறையும். பாரதியின் தாக்கம் இல்லாத நல்ல தமிழ்க்  கவிஞர்கள் இல்லை எனலாம்.

இன்னொரு தளத்தில் பார்த்தால் துய்ய நிறத்தினதாய் பராசக்தி கட்டும் மாளிகை அவனது ஆன்மாவுக்கானது.கீழ்மைகள் நிறைந்த இவ்வுலக வாழ்விலிருந்து தனித்து ஏகாந்தமாய் அவனிருக்க ஓர் இல்லம்.அனுதினம் அல்லலுற்று அவதியுறும் சித்தத்தை குளிரவைக்கும் தென்றல், கற்பனைகளின் ஊற்றுக்கண்ணாய் உடனிருக்க சகி. வையம் முழுதையும் காத்திட விழையும் அவன் ஆவலில் பிறக்கும் கவிகள். என்ன ஒரு வரம்!!

பாடத்திட்டம் தாண்டி திரைப்பாடல்கள் வழி மேலும் சில பாடல்கள் அறிமுகம். மணமகள் படத்தில் இடம்பெற்ற "சின்னஞ் சிறு கிளியே கண்ணம்மா" - வில்
"உச்சிதனை முகந்தால் - கருவம் ஓங்கி வளருதடீ
மெச்சி யுனை ஊரார் புகழ்ந்தால் மேனி சிலிர்க்குதடீ" எனும் வரிகளை கண்ணீர் துளிர்க்காமல் கேட்க முடிவதில்லை. மேலும் பாடலின் சரணம் கண்ணம்மாவிடம் சரணடையும் இடம் - "உன் கண்ணில் நீர் வழிந்தால் - என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடீ " - கேட்கும் போதெல்லாம் மெய்சிலிர்க்கும் பாடல் அனுபவம்.

'பாரதி' - "எழுதுகோல் தெய்வமிந்த எழுத்தும் தெய்வம்" என்று எழுத்தை வணங்கிய மகாகவி.
பிரம்மன் பன்னிரண்டு சரியாய் பயிலாப் பிழையால், பல நூற்றாண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே மலரும் குறிஞ்சிப்பூ.

பாப்பாப் பாட்டு முதல் பரசிவ வெள்ளம் வரை பாய்ந்த மாகங்கை. விரிசடை பாய்ந்து மண்ணிறங்கிய கவிதைப் பிரவாகத்தில் அவனது ஊணுடல் தாங்கிய மானிடத் துயரும் இன்னல்களும் கசடுகளாய் அடித்துச் சென்றது போலும். வளமான வண்டலாய்த் தேங்கிய அவருடைய எழுத்துக்களில், வரலாற்று ஆய்வாளர் காட்டும் ஏழ்மையும் நொய்மையும் எங்குமில்லை. அன்றாட அரிசி பருப்புக் கவலைகள் எல்லாம் விட்டு விடுதலை ஆகி நிற்க முடிந்த சிட்டுக்குருவி.. அல்லது விடுதலையாக விரும்பிய கவிக்குருவி. எந்த நிலையிலும் அவரது வாழ்வின் கசடுகள் எண்ணத்திலும் எழுத்திலும் எதிரொலிக்காதிருந்த காரணம் நன்மையில் நல்லியல்புகள்மேல் அவருக்கிருந்த அபார நேர்மறை நம்பிக்கை (optimism) எனலாமா?மண்ணில் வீழ்ந்ததனால் மறைந்து மாய்ந்து விடாமல் கதிரென முளைத்தெழுந்த வீரியமான விதை எங்கள் பாரதி.

பிறிதோர் சொல் அவர் சொல்லிய சொல்லை வெல்வதற்கு இல்லை எனும் வண்ணமே அனைத்துக் கவிதைகளும் இருக்கும். இவ்வண்ணம் இன்பமாய் வாழ வழி சொல்லும் கவி இங்கு தவம் இயற்றச் சொல்கிறார். தவம் என்பது தன்னலம் அற்றுப் போதல், ஒருமுகமாய் உள்நோக்குதல்..

"செய்க தவம்! செய்க தவம்! நெஞ்சே! தவம் செய்தால்
எய்த விரும்பியதை யெய்தலாம் - வையகத்தில்
அன்பிற் சிறந்த தவமில்லை; அன்புடையார்
இன்புற்று வாழ்த லியல்பு"

இவர் கூறும் தவம் அன்பு பழகுதல். தவம் என்றுமே எளிதன்றே..  கலக மானிட பூச்சிகள் சூழப் பறந்தாலும் கலையாதிருப்பது தவம்.

இவ்வன்பு சக மானிடர் மேல் மட்டுமல்ல..
"வானில் பறக்கின்ற புள்ளெல்லாம் நான்; மண்ணில் திரியும் விலங்கெல்லாம் நான்" என நம்மை நாம் நேசிக்கும் அளவுக்கு அனைத்துயிரையும் நேசிப்பதே இவர் சொல்லும் தவம்.

அன்பைப் பாசமாக, கனிவாக, காதலாக, பக்தியாக, நட்பாக காட்டத் துடித்த பாரதி, கண்ணனைத் தனது  தோழனாய், தாயாய், தந்தையாய், சேவகனாய், அரசனாய், சீடனாய், சற்குருவாய், குழந்தையாய், காதலனாய், காதலியாய், கண்ணம்மாவாய், குலதெய்வமாய், ஆண்டானாய் பார்த்த பித்தன்.
அவரது கண்ணன் பாடல்களைப் பற்றி மட்டுமே பல பக்கங்கள் பேசிடலாம்.

தமிழுக்கு இன்முகம் காட்டிய இந்தக் கவிராஜன், பன்முக ஒளிபடைத்த பளீர் வைரம்.

இன்கவி அங்கே குறைகிறதென்று என்று இறைவன் இளமையிலேயே அவரை தன் புறம் அழைத்துக்கொண்டான். சாகாவரம் பெறுவதன் வழியை மொழிந்துவிட்டு 39 வயதில் அமரரானார்  மாகவி
"அச்சத்தை வேட்கைதனை அழித்து விட்டால்
அப்போது சாவுமங்கே அழிந்துபோகும்"

ஆம் பாரதிக்கும் அவர் கவிதைகளுக்கும் சாவென்பது இல்லாமல் அழிந்தே போயிற்று!!

காணி நிலம் வேண்டும் பாடல்

காணி நிலம் வேண்டும் பராசக்தி
காணி நிலம் வேண்டும் - அங்கு
தூணில் அழகியதாய் நன்மாடங்கள்
துய்ய நிறத்தினவாய் - அந்தக்
காணி நிலத்திடையே ஓர் மாளிகை
கட்டித் தர வேண்டும் - அங்கு
கேணி அருகினிலே தென்னைமரம்
கீற்றும் இளநீரும்

பத்துப் பனிரெண்டு தென்னைமரம்
பக்கத்திலே வேணும் நல்ல
முத்துச் சுடர்போலே நிலாவொளி
முன்பு வர வேணும் அங்குக்
கத்தும் குயிலோசை சற்றே வந்து
காதிற் படவேணும் என்றன்
சித்த மகிழ்ந்திடவே நன்றாயிளந்
தென்றல் வரவேணும்

பாட்டுக் கலந்திடவே அங்கே யொரு
பத்தினிப் பெண்வேணும் - எங்கள்
கூட்டுக் களியினிலே கவிதைகள்
கொண்டு தரவேணும் அந்தக்
காட்டு வெளியினிலே அம்மா நின்றன்
காவலுற வேணும் என்றன்
பாட்டுத் திறத்தாலே இவ்வையகத்தைப்
பாலித்திட வேணும்.

Tuesday, April 14, 2015

அமுதுக்கும் தமிழென்று பேர்

மன்மத ஆண்டின் முதல் பதிவு.

இன்றைய ஹைவே பயண வாழ்கையின் அவசரங்களுக்கு இடையே இதற்கு அவகாசம் தந்து வாசிக்கும் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். இதைப் படித்துவிட்டு, வாழ்த்தில் என்ன கஞ்சத்தனம், இதை வாசிக்காதவருக்கு வாழ்த்தில்லையா என யாரும் வழக்கு தொடுக்க இயலாது. (வழக்கு எதற்கெல்லாமோ போடப்படுகிறது, தெளிவுபடுத்தி விடுதல் நலம்). இதுவரை வாசித்தாலே வாழ்த்து உங்களுக்கும் உரியது.

முதல் வணக்கம் முன் நின்று காக்கும் முத்தமிழ் முதல்வனுக்கு சொல்லி தமிழ்க்களம் புகுகிறது இந்தத் தொடர் பதிவு. அம்மா என்ற சொல்லோடு அவன் பெயரும் சேர்த்துப் பயின்ற தமிழிது.

அமிழ்து-அமிழ்து என இடைவிடாது சொல்லிப்பார் தமிழ் தமிழ் என ஒலிக்குமென சிறு வயதில் தமிழாசிரியர் விதைத்த தமிழ்காதல் விதை - இந்த பயிருக்கு வேராய், விளைவுக்கு நீராய், உயிருக்கு நேராய் உயிருடன் கலந்தது.

மொழி எனப்படுவது ஒருவர் கருத்தை மற்றொருவருக்கு ஐயமற உணர்த்தும் கருவி என்ற அடிப்படை பயன்பாட்டைத்தாண்டி,  தமிழ், கலையாய் காவியமாய் கனியத் தொடங்கியே பல்லாயிரம் ஆண்டுகள்!! எத்தனை எத்தனை மாமனிதர்களின் அறிவையும், சிந்தனைகளின் உச்சங்களையும், கற்பனைகளின் விஸ்தீரணங்களையும் தன்னுள் கொண்டுள்ளது இம்மொழி!!

பல நாடுகள் வேட்டையாடி குகை வாழ்ந்த காலத்தில் பண்புகளின், வாழ்வியல் தத்துவங்களின், நாகரிகத்தின் சிகரம் தொட்ட தேசமிது. 'Globalization'  நம் வீட்டின் உள்ளே அனுமதியின்றி நுழைந்து தன் காலையும் வாலையும் ஆட்டுவதற்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என ஓங்கிச் சொன்னது தமிழ். அடுத்த வரியிலேயே 'தீதும் நன்றும் பிறர் தர வாரா' என ஒற்றை வரி கீதை சொன்ன கணியன் பேசிய மொழி இது.

இதன் பெருமையை, மொழியின் ஆளுமையை உணரச்செய்தவர்கள் எனக்கு அமைந்த நற்றமிழாசிரியர்கள். வசந்த காலத்தில் மலர்கள் பெறும் பாராட்டை வேர்கள் பெறுவதில்லை. இலையுதிர்காலத்திலும் மரத்தைத் தாங்கும் வேர்களுக்குப் பெயரில்லை. நம் ஒவ்வொருவரையும் உளி கொண்டு செதுக்கிய ஆசிரியர்கள் அத்தகைய பேர் தெரியாத வேர்களாய் இருக்கிறார்கள். தமிழ் ஆர்வத்தைப் பற்றாக்கியதில் சில ஆசிரியர்களுக்கு மிகப்பெரிய பங்குண்டு.ஏழாம் வகுப்பில் கமலாவதியில் தமிழறிவித்த சுந்தர்ராமன் ஸார்-எங்கிருக்கிறீர்கள். Facebook தொடமுடியாத தொலைவிலா!! நீங்கள் சொல்லிக்கொடுத்த எந்தப்பாடலும் மறக்கவேயில்லை. "இளமை கழியும் பிணி மூப்பு இயையும்' இன்னும் காதில் ஒலிக்கிறது.

தமிழ்ப்பற்றைப் தமிழ்பித்தாக்கியதில் பல எழுத்தாளர்கள் தங்கள் பங்கை செவ்வனே செய்தார்கள். புத்தகங்களின் மாயா உலகின் கதவைத் திறந்தது - ஒரு சிறு நூலகத்தையே வீட்டில் சேகரித்து வைத்த என் அம்மா. அப்பாவின் அலுவல் மாற்றல் பந்தாட்டங்களுக்கு இடையே 50+ வீடுகள் மாற்றி அத்தனைக்கும் இடையில் புதையலாய், பொக்கிஷங்களாய் புத்தகங்கள் சேகரித்தது நிச்சயமாய் வாழ்நாள் சாதனை விருதுக்குரிய விஷயம். தன் எழுத்தாளர் தந்தையிடமிருந்து கொண்ட தமிழார்வத்தை எனக்குள்ளும் வேரூன்றினார்.

உங்கள் பிள்ளைகள் தமிழில் ஆர்வம் கொள்ள எளிய வழி. ஐந்து வயதிலேயே தமிழ் கதைப் புத்தகம் கொடுங்கள். உணவோடு தமிழ் உள்ளே செல்லட்டும். ஒருவரைத் தமிழ் பித்தனாக்க, கையில் கல்கியின் 'பொன்னியின் செல்வனை' சிறுவயதிலேயே கொடுத்தால் போதுமானது. ஆறாம் வகுப்பு பள்ளி விடுமுறையில் மூன்றே நாளில் ஊணுறக்கம் இன்றி வாசித்த முதல் முறை தொடங்கி, பல நூறு முறை தனித்தனி அத்தியாயங்களாகவும், 30 முறையேனும் அனைத்து பாகங்களும் படித்து, பல முறை பலருடனும் விவாதித்து, கதை சொல்லி மகிழ்ந்த அமரர் கல்கியின் அமர காவியம் அது. (எனக்கு ஒரு நல்ல நட்பையும் கொடுத்த கதை இது ) இளமையிலேயே வல்லவரையன் வந்தியத்தேவனும், பழுவேட்டரையரும், அன்பில் அநிருத்த பிரம்மராயரும் வாயில் சடுகுடு ஆடிவிட்டால், விரைவிலேயே T.M.S போல 'முத்தைத்தரு பத்தித்திருநகை அத்திக்கிறை சக்திச்சரவண' வரை பல்லுடைய தமிழ் படித்துவிடலாம்.( TMS  தான் பாடினார் -அருணகிரிநாதரா அவர் யார் - விரைவில் பேசுவோம்)

எழுத்தறிவித்த இறைவர்கள் வரிசையில் கம்பன், சைவ சமயக் குரவர்கள் நால்வர், பாரதி தொடங்கி கண்ணதாசன், கல்கி வரை பலரும் இருக்க, எந்த விதமான சந்தேகத்துக்கும் இடமில்லாமல் சீர்காழி,  T.M.S,  சிவாஜி போன்றோர் மூலம் வெகுஜன ஊடகத்தின் வழி அனைவரையும் நல்ல தமிழ் சென்று சேர்ந்தது.

இன்றைய டமிலும் ஊடகத்தின் பாதிப்பே!! 'ழ' கூட எப்படியோ சொல்லி விடுகிறார்கள். 'ள'கரம் மனநிலை பாதிக்கப்பட்டு காணாமல் போனவர்கள் பட்டியலில் சேர்ந்து விட்டது.

நல்ல புத்தகங்கள், நல்ல பாடல்கள், நல்ல தமிழ் பேசும் திரைப்படங்கள், நமது பேச்சு வழக்கில் நல்ல தமிழ் - அனைத்தும் அடுத்த தலைமுறைக்கு தமிழைக் கொண்டு சேர்க்கும்.

இந்த வருடம் இதனை முயற்சிப்போம். யாரேனும் ஒருவருக்கேனும் நல்ல தமிழை அறிமுகம் செய்வோம். நாமும் தொடர்ந்து வாசிப்போம்-வளர்வோம்.

முந்தைய பதிவுகளையும்  part1 ஆக எழுதி பிற பகுதிகளை வெளிவராத விஸ்வரூபம்2வாய் வைத்திருக்கிறேன். எனின் இதன் தொடர்ச்சி தொடர்ந்து எழுதிவிடுவேன் என நம்புகிறேன்.