Tuesday, December 29, 2020

2020-2021

2020 - இந்த ஆண்டு சென்ற ஆண்டென மாற இன்னும் சில தினங்களே இருக்கின்றன. 2000க்குப் பிறகு 2020 வாழ்க்கையில் இது ஒரு முக்கியமான வருடமாக இருக்கும் என்று வெகு நாட்களாக எண்ணிக் கொண்டிருந்தேன்.  முக்கியமான ஆண்டுதான், யாருமே எண்ணியிராத வகையில் உலகில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த ஆண்டு, நம் வாழ்க்கை முறையையே மாற்றி அமைத்திருக்கும் வருடம். கணினிகளும் கைபேசிகளும் இணைய இணைப்புகளும், இணைய வழிக் காணொளிகளும், கூடுகைகளும் வாழ்வில் இத்தனை இன்றியமையாததாகும் என்று யாரும் கற்பனை செய்திருக்க இயலாது. 


பல நிறுவனங்களில் வெகு காலமாகத் திட்டமிடப்பட்டு பல நிலைகளில் செயல்படுத்த முயற்சிக்கப்பட்டு மிகுந்த தயக்கங்கள் காட்டப்பட்டு வந்த இணைய வழி வேலை முறைமையையும் அதற்கான செயல் திட்டங்களையும் ஒரு சில நாட்களில் கட்டாயமாக்கி நடைமுறைக்கு கொண்டு வந்தது இந்த கோவிட். இதில் மிக அதிகமான சவால்களும் நிறைந்தே இருக்கின்றன. அலுவலக நேரத்துக்கும் தனிப்பட்ட நேரத்துக்குமான எல்லைக்கோடுகளை அனேகமாக அழித்து விட்டது இச்சூழல். எனில் இதுவே எல்லையென்று வரையறை செய்ய முயற்சித்து அதில் ஓரளவேனும் புரிந்துணர்வு ஏற்பட்டு விட்டால் மிக நேர்த்தியாக நமது நேரத்தை வேறு விஷயங்களுக்கு அளிப்பதற்கும் இந்த வருடம் ஒரு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தது. 


வெளி நிலப் பயணங்களை அனேகமாக இல்லையென்றே ஆக்கி விட்ட ஆண்டு. அதனாலேயே சிங்கையிலேயே இதுவரை நான் சென்று பார்த்திராத பகுதிகள் கண்ணில் படத்துவங்கின. பல இடங்களுக்கு காலை மாலை நடைகளில் சென்று வருகிறேன். மற்றபடி இந்த வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் மூன்று முறை இந்தியாவுக்கு வந்து திரும்பியதே இவ்வருடத்தின் பயணங்கள். மேகாலயா பயணம் நிறைவளித்த ஒன்று. மார்ச் 12ஆம் தேதிக்குப் பிறகு வீடே அலுவலகமாகியது. இன்னும் தொடர்கிறது. 


சென்ற சில வருடங்களாக அநேகமாக இரு மாதங்களுக்கு ஒரு முறையேனும் பயணம் என்று பழகி விட்ட மனது, முதலில் சற்று பதைபதைத்தது. வீடடங்கு துவங்கியதுமே ஆசிரியர் ஜெயமோகன் தளத்தில் நூறு நாட்களில் நூறு சிறுகதைகள் எழுதி அன்றாடம் வெளிவந்ததால், அகம் முற்றிலும்  இருளில் மூழ்கி விடாது இக்கதைகள் வெளிச்சம் பாய்ச்சியது. அது தக்க நேரத்தில் வந்த ஒரு நல்லாசி, ஒரு நல்ல வழிகாட்டிக் குறிப்பு. அக்கதைகளின் சாரம் மட்டுமன்றி, இந்த நாட்கள், இது போன்ற ஒரு தருணம் எவ்வளவு பெரிய வாய்ப்பு என்பதும் உரைத்தது.  இவ்வளவு முழுமையாக காலம் கையில் இருக்கையில் ஒவ்வொரு நாளும் ஏதோ ஒன்றை அறிந்து கொள்வதற்கும் தன்னளவில் ஏதோ ஒன்றை நோக்கி பயணம் செய்து கொண்டே இருப்பதும் எவ்வளவு பெரிய வாய்ப்பு என்று தோன்றியதும் மனம் விடுதலை கொண்டுவிட்டது. வீடுறைந்த இந்த ஒன்பது மாதங்கள் வேறொரு விதத்தில் அருங்கொடையாகத் தோன்றியது. ஒவ்வொரு நாளும் செய்வதற்கும், வாசிப்பதற்கும், கற்றுக்கொள்வதற்கும் நீண்ட பட்டியலே இருப்பது கண்ணுக்குப் புலப்பட்டது.  அதன் பிறகு நாட்கள் சிறகு கொண்டு பறந்து சென்று கொண்டிருக்கின்றன. 


இந்த ஒரு வருடத்தில் வாசித்த பக்கங்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. அலுவலகம் செல்வதும் வருவதுமான பயண நேரங்களும் அவற்றுக்கான ஆயத்த நேரங்களும் மிச்சமாயின.ஏறக்குறைய மூன்றரை  மாதங்களில் இரவு பகலாக வெண்முரசின் 26 நூல்களையும் ஒரே மூச்சில் ஒரு மீள்வாசிப்பு செய்து வாசித்து முடிக்க நேரம் கிடைத்தது. ஒவ்வொரு நாளும் ஐந்து முதல் ஆறு மணிநேரமும் வாரயிறுதி நாட்களில் பத்து முதல் பன்னிரண்டு மணிநேரமும் கிடைத்தது. ஒவ்வொரு நாளும் இருநூறு முதல் முன்னூறு பக்கங்கள் படித்துவிடக்கூடியவர்களுக்கு நூறு நாட்களில் வெண்முரசு மீள்வாசிப்பு செய்ய முடியும். இதில் முக்கியமான விஷயம் இது மீள்வாசிப்பு என்பது. முதல் முறை வாசிப்பதற்கான மனநிலையும் அந்த வாசிப்பும் வேறுவகையானது. கதையின் வேகத்திலேயே இழுத்து செல்லப்பட்ட நிலை ஒவ்வொரு நாளும் விடியலில் வாசித்த முதற்சுவை. அதிலேயே தோய்ந்து ஒவ்வொரு பகுதியையும் ஒவ்வொரு வரியையும் மீண்டும் மீண்டும் சுவைத்து ரசித்துக் கிடந்தது/கிடப்பது மற்றொரு சுவை. அதன் பிறகும் நண்பர்கள் எழுதிய கடிதம் கண்டோ, அல்லது நினைவில் தோன்றும் ஏதோ ஒரு பகுதியை மீண்டும் கவனித்து வாசிக்க என்றோ கணக்கற்ற முறை அங்குமிங்குமாக வாசித்தவற்றுக்கு கணக்கு வைக்க இயலாது. அதன் பிறகே இந்த முழுமுற்றான மீள்வாசிப்பு சாத்தியமாகிறது. அப்போதும் அந்த உலகம் அவ்வப்போது முழுமையாக கனவுகளுக்குள் உள்ளிழுத்து விடுவதையும், ஒற்றை ஒரு வரி மனதில் சிக்கிக் கொண்டு அதுவே அந்நாளாகிப் போவதையும் தடுக்க முடியாது போகிறது.


இமயத்தில் பல தினங்கள் பயணம் செய்து விட்டு அதன் சிகரங்களையும் தாழ்வரைகளையும், ரகசியமாய் ஓடும் நீர்பெருக்குகளையும் நாட்கணக்கில் பார்த்து அதன் மடியிலேயே கிடந்து விட்டு கிளம்பிய பிறகு, அங்கிருந்து கிளம்பும் போது விமானத்தில் இருந்து கண்நிறைத்துக் கிடக்கும் பெருவெளியாக இமயம் தெரியும் ஒரு தருணம் உண்டு. அதன் அத்தனை நுண்ணிய அழகுகளையும் மறைத்துக் கொண்டு தனது பேரிருப்பையே ஒரு தரிசனமாக அருளும் ஒரு கணப்பொழுது. அதுபோன்ற ஒரு உச்சம் தரும் வாசிப்பு இது. வேறு எந்த விதமான சிதறல்களும் இன்றி, கனவும் நனவுமென வெண்முரசில் மூழ்கியிருந்த அந்த நூற்று சொச்சம் நாட்கள் இந்த ஆண்டின் முக்கியமான தினங்கள். சிங்கையும் நண்பர்கள் வீட்டுக்குக் கூட எங்கும் செல்லக்கூடாதென கதவுகளை இறுக மூடியிருந்த தினங்கள் அவை. அவையே வரமாக மாறின.


அதன் பிறகு வந்த அடுத்த மூன்று மாதங்களும் மீண்டும் வெண்முரசில்தான் வாழ்ந்து கொண்டிருந்தேன். வெண்முரசின் நிலச்சித்தரிப்புகள் குறித்த குறிப்புகளுக்காக குறுக்கும் நெடுக்குமாக, மீண்டும் மீண்டும் வெண்முரசின் நிலங்களுக்குப் பயணம் செய்துகொண்டிருந்த அந்த மூன்று மாதங்கள் மகத்தானவை.  இந்தக் கட்டுரைக்கான குறிப்புக்கள் எடுக்கவெனத் தொடங்கிய மீள்வாசிப்பு அந்த நோக்கத்தை விடுத்து முற்றாக எண்ணத்தை ஆக்கிரமித்துக் கொள்ளவே, ஆங்காங்கே நிலங்கள் பற்றிய குறிப்புகள் வரும் அத்தியாய எண்களை மட்டுமே ஓரளவு குறிப்பெடுத்திருந்தேன். அதனால் செப்டம்பரில் துவங்கி மீண்டும் கட்டுரைக்கான முனை குவிக்கப்பட்ட வாசிப்பு துவங்கியது. பீஷ்மருடனும், அர்ஜுனனுடனும், சிகண்டியுடனும், பூரிசிரவஸுடனும், சாத்யகியுடனும், இளநாகனுடனும், சண்டனுடனும்,  இந்தியப் பெருநிலத்தை மீண்டும் மீண்டும் நடந்து பார்த்துக்கொண்டே இருந்தேன். உலகின் கதவுகள் திறந்திருந்தால் கூட நான் செல்லச் சாத்தியப்பட்டிருக்காத நிலவெளிகளில், பாலைகளில், பனிமலைகளில், ஆழ்கடல்களில் அலைந்து திரிந்த உணர்வு. எனவே 2020 என்னளவில் மாபெரும் பயணங்களில் ஈடுபட்ட நிறைவையே தந்திருக்கிறது.    


கதவுகள் திறப்பதும் அடைந்து கிடப்பதும் முக்கியமாக மனதளவில்தான் என்று உணர்த்திய வருடம் 2020. காணவேண்டிய நண்பர்களின் முகங்களும் செல்லவேண்டிய இடங்களின் பட்டியலும், அதற்கான திட்டங்களும் மனதில் நிறைந்திருக்கின்றன. எனில் துலாத்தட்டில் ஏக்கங்களை நிகர் செய்கின்றன கனவுகள். 2021-ம் செயலூக்கம் நிறைந்த ஒரு மனநிலையை அனைவருக்கும் அருளட்டும்.   


2020-ல் வாசித்தவை:

1. டாக்டர் ஷிவாகோ - போரிஸ் பாஸ்டர்நாக்

2. பகடையாட்டம் - யுவன் சந்திரசேகர்

3. நொடி நேர அரைவட்டம் - கல்யாண்ஜி

4. வாடாமல்லி - சு.சமுத்திரம்

5. சாயாவனம் - சா.கந்தசாமி

6. கடல்புரத்தில் - வண்ணநிலவன்

7. எஞ்சும் சொற்கள் - சுரேஷ் பிரதீப்

8. ஒளி - சுசித்ரா

9. கொற்றவை - ஜெயமோகன்

10. ஊர்சுற்றி - யுவன் சந்திரசேகர்

11. அலகில் அலகு - வேணு வேட்ராயன்

12. பாலை நிலப் பயணம் - செல்வேந்திரன்

13. வயல்காட்டு இசக்கி - அ.கா.பெருமாள்

14. முதலியார் ஓலைகள் - அ.கா.பெருமாள்

15. சடங்கில் கரைந்த கலைகள் - அ.கா.பெருமாள்

16. தென்குமரியின் சரித்திரம் - அ.கா.பெருமாள்

17. கி.ராஜநாராயணன் கதைகள்

18. பிஞ்சுகள் - கி.ரா

19. கல்மலர் - சுநீல் கிருஷ்ணன்

20. தாடகை மலையடிவாரத்தில் ஒருவர் - ஜெயமோகன்

21. Journey to Lhasa and central Tibet - Sarat Chandra Das

22. பின்நவீனத்துவவாதியின் மனைவி - சுரேஷ்குமார் இந்திரஜித்

23. பிண்ணனிப் பாடகர் - சுரேஷ்குமார் இந்திரஜித்

24. பாரதி நினைவுகள் - யதுகிரி அம்மாள்

25. நூறு நிலங்களின் மலை - ஜெயமோகன்

26. இடபம் - பா.கண்மணி

27. கங்காபுரம் - அ.வெண்ணிலா

28. முன்சுவடுகள் - ஜெயமோகன்

29. புதுமைப்பித்தன் வரலாறு - தொ.மு.சி.ரகுநாதன் (வாசிப்பில்)

30. வெண்முரசு (26 புத்தகங்கள் மீள்வாசிப்பு) - ஜெயமோகன்

• முதற்கனல்

• மழைப்பாடல்

• வண்ணக்கடல்

• நீலம்

• பிரயாகை

• வெண்முகில் நகரம்

• இந்திரநீலம்

• காண்டீபம்

• வெய்யோன்

• பன்னிரு படைக்களம்

• சொல்வளர்காடு

• மாமலர்

• கிராதம்

• நீர்க்கோலம்

• எழுதழல்

• குருதிச்சாரல்

• இமைக்கணம்

• செந்நா வேங்கை

• திசைதேர் வெள்ளம்

• கார்கடல்

• இருட்கனி

• தீயின் எடை

• நீர்ச்சுடர்

• களிற்றியானை நிரை

• கல்பொருசிறுநுரை

• முதலாவிண்

Monday, November 2, 2020

கங்கையின் அழைப்பு

இன்று(2-நவம்பர்) காலை விழித்ததும் வாசித்த முதல் பதிவு இது.

https://m.facebook.com/groups/TheHimalayanClub/permalink/10158944613165775/
எழுந்ததும் முகநூல் பார்க்கும் வழக்கமில்லை, எனினும் இன்று அவ்விதம்தான் நேர்ந்தது.

கங்கையுடன் அடியிலிருந்து முடிவரை ஒரு தொடர் பயணம் என்ற எனது கனவுகளில் ஒன்றை ஒருவர் நடைபயணமாக செய்திருக்கிறார். சச்சின் சாச்சியா எனும் இவர் வாரணாசியில் துவங்கி அலகாபாத், கான்பூர், ஃபரூக்காபாத், ஹரித்வார், ரிஷிகேஷ், உத்தரகாசி, வழியாக கங்கையின் ஊற்றுமுகமான கங்கோத்ரி வரை 1800கிமீ நான்காண்டுகளாக நடந்திருக்கிறார். 2017 ஆகஸ்ட் 24 வாரணாசியில் நடையைத் துவங்கி இந்த அக்டோபர் 2020-ல் தபோவனத்தில் முடித்திருக்கிறார். இதற்கு முன்னர் இதுபோல நர்மதையின் கரையில் 1300கிமீ மிதிவண்டி பயணமாக சென்றிருக்கிறார்.
மிகச் சுருக்கமான முகநூல்-வகைமையிலான குறிப்புகளே இவரது பக்கத்தில் இருக்கின்றன. புத்தகமாகவும் வரப்போகிறது என்றறிய முடிகிறது.

என்னுள் உறங்கும் ஒரு மிக அணுக்கமான கனவைக் கிளர்த்தி விட்டிருக்கிறது இந்தப் பதிவு.

எனது ஆத்மார்த்தமான கனவுகளில் முக்கியமானவை -

பாரதத்தை நடந்து அறிய வேண்டுமென்ற பேரவாவும், கங்கையை கடல்முகத்திலிருந்து ஊற்றுமுகம்வரை உடன் பயணிப்பதும், இமயத்தை கிழக்கிலிருந்து வடக்கு வரை ஒவ்வொரு மாநிலத்திலும் சிலகாலம் தங்கி தெரிவு செய்த சில பகுதிகளையேனும் நிதானமாக தரிசிக்க வேண்டுமென்பதும். இப்பிறவி எனில் இப்பிறவி, இல்லையெனில் இந்த பயணத்தின் தொடக்கமாவது இங்கு அமையட்டுமே.

இதில் மூன்றாவது பகுதியான மலைப்பயணங்களுக்கு ஒரு செயல்திட்டமும் மனதில் உருவாகி இருக்கிறது, நண்பர்களோடும் அதை செயல்படுத்துவது குறித்தும் பேசி வருகிறேன். இந்த கங்கைக்கரைப் பயணம் இப்போது ஒரு பெரிய அழைப்பாக மனதை முற்றிலும் ஆட்கொண்டிருக்கிறது.

பத்து வயதில் தாத்தாவுடனான மாலை நடைகளில் தாராபுரத்தின் அமராவதி ஆற்றங்கரையில் நின்றுகொண்டு ரிஷிகேஷ், ஹரித்வார், கங்கோத்ரி, யமுனோத்ரி செல்வது குறித்து நானும் தாத்தாவும் கனவுகள் கண்டிருக்கிறோம். பல நாட்கள் இது குறித்துப் பேசியபடி அந்திப்பொன்வெயிலும் அதிகாலை முதல் கதிரும் கண்டிருக்கிறோம். சில ஆண்டுகளுக்கு முன் முதன்முறையாக நான் ரிஷிகேஷ் சென்றது தாத்தாவின் திதியன்றே நிகழந்தது. அது அங்கே சென்ற பிறகே கங்கைக்கரையில், ஒரு அந்திப்பொழுதில், திதி அன்றுதான் என்று அறிய நேர்ந்தது. தாத்தா அதை நிறைவேற்றி வைத்தார்கள்.


சென்ற வருடம் இந்நாட்களில் தேவ்தீபாவளியை காசியில் தரிசிக்க எதிர்நோக்கி ஆயத்தமாகிக் கொண்டிருந்தேன். மீண்டும் மீண்டும் அன்னையைக் காணும் தாகம்.

கங்கையின் அடிமுடி காண அழைப்பு வந்திருக்கிறது. எப்படி? எங்கு? எவ்விதம்? எதுவும் இந்த நொடியில் தெளிவாக இல்லை. ஆனால் குருவருள் உடன்வர இந்தப் பயணம் செய்வது உறுதி. அதுமட்டும் தெளிவாகத் தெரிகிறது.

Saturday, September 26, 2020

பாடும் வானம்பாடி

 பாடும் வானம்பாடி!

இசை நம்மை என்ன செய்யக்கூடும், என்னவெல்லாம் செய்திருக்கிறது என உணர்த்திவிட்டுப் போயிருக்கிறார் எஸ்.பி.பி.

எந்தப் பிரபலங்களின், திரை ஆளுமைகளின் மறைவும் இவ்வளவு தூரம் பாதித்ததுமில்லை, இவ்விதம் நேருமென்று நேற்று வரை தோன்றியதுமில்லை. எனக்கு மிகவும் பிடித்த குரல்களில் ஒருவர், நான் ரசிக்கும் இசை ஆளுமைகளில் மிக முக்கியமான ஒருவர். எனில் அவர் அகத்தில் நிறைத்திருக்கும் இடமென்ன என்பதை இந்த இரு தினங்களில் அவ்வப்போது அவரது அந்த மென்மையும் திடமும் சரியான கலவையில் இணைந்த அக்குரல்கேட்டு விழிநிறைகையில் உணரமுடிகிறது. எந்தப் பாடல் வரி கேட்டாலும் அது அவருக்கும் நமக்குமான தனிப்பட்ட உறவை, நேசத்தைக் குறித்ததாகவே ஒலிக்கிறது. 
"பக்கத்தில் நீயுமில்லை, பார்வையில் ஈரமில்லை..", 
"நாயகன் மேலிருந்து நூலினை ஆட்டுகின்றான்
நாமெல்லாம் பொம்மையென்று நாடகம் காட்டுகின்றான்",
"எந்தன் மூச்சும் இந்தப் பாட்டும் அணையா விளக்கே", 
"ஆடாத மேடை இல்லை போடாத வேஷம் இல்லை, சிந்தாத கண்ணீர் இல்லை, சிரிப்புக்கும் பஞ்சம் இல்லை", "துணை நான் அழகே துயரம் விடு", 
"அன்பிலே வாழும் நெஞ்சில் ஆயிரம் பாடலே", 
"நீ இல்லையேல் இன்று நான் இல்லையே...எந்தன் ராகங்கள் தூங்காது..",
" நிலா காலங்களில் சோலைகளில் ஆடும் சுகம் கோடி", 
"விதி மாறலாம் உன் பாடலில் சுதி மாறக் கூடுமா", 
"உதய கானம் போதுமே எந்தன் உயிரில் அமுதம் ஊருமே".. எதைக் கேட்டாலும் மேலெழுந்து வந்து நிறைகிறது அவர் முகம். அந்த சிரிப்பு.

சென்ற வருடம்(2019) சிங்கை வந்திருந்த இசை சிகரங்கள் சித்ரா, பாலு மற்றும் யேசுதாஸ் அவர்களை நேரில் பார்க்க வாய்ப்பு கிடைத்தது. SPBயின் சற்றும் இளமை குன்றாத குரல்; நள்ளிரவு தாண்டி நீண்ட இசை மழையில் சற்றும் தொய்வின்றி இசை பொழிந்தார். மறக்க முடியாத பொன்மாலைப் பொழுது. ஒவ்வொரு இசைமேடையிலும் ஒவ்வொரு சககலைஞரையும் அன்போடு அணுகும் அவரது நேசம், மிகவும் இளவயதுப் பாடகர்களை இலகுவாக்கி, அவர்கள் பதட்டமின்றிப் பாட வகை செய்து பின்னர் மனதாரப் பாராட்டும் உளவிரிவு, இசைக்குழுவைப் பாராட்டவும் ஒரு முறையும் தவறாத அவரது பண்பு.




ஒரு வயதுக் குழந்தையாக எனது முதல் இசை ரசனை இவருடைய "ஆயிரம் தாமரை மொட்டுக்களே" பாடல் என்று பல முறை அம்மா அப்பா சொல்லக் கேட்டிருக்கிறேன். எனக்கு இன்றும் அந்தப் பாடலின் முதலில் வரும் மிருதங்கத்தில் மனம் தாளமிடத் தொடங்கிவிடும். அது ராஜாவின் இசையும் இவரது குரலும் இணைகையில் மட்டுமே எழும் மாயம்.

நல்ல இசை, மனதோடு உறவாடும் இசை என்றும் தன்னிருப்பை பறைசாற்றிக் கொள்ளாது தோன்றாத்துணையாக எப்போதும் உடனிருந்து கொண்டே இருக்கும். நண்பர்களோடு உறவுகளோடு உடனிருக்கையில், மகிழ்ந்திருக்கையில், பிரிந்திருக்கையில், தனிமையில், கண்ணீரில், ஆனந்தத்தில், பயணத்தில், நினைவுகளில், ஒலித்த பாடல்கள். வாழ்வோடு கலந்தவை. சூழ்ந்திருந்த காற்று சுவாசமாவது அறியாதது போல, உணவு நம் உடலாகிவிடுவது போல உள்ளே ஒன்று கலந்து போயிருக்கிறது இந்த இசை, இவரது குரல்.


2013ல் மதுரையிலிருந்து சென்னை வருவதற்கு வழக்கம்போல இரு மணிநேரம் முன்னதாகவே விமான நிலையம் வந்து அமர்ந்த போது ஏறக்குறைய காலியாக இருந்த காத்திருப்பு அறையில், நான் அமர்ந்திருந்த வரிசையின் அடுத்த கோடியில் அமர்ந்திருந்தவர் SPB போலத் தெரிந்தார். மிகத் தயக்கத்துடன் சற்று அணுகி அமர்ந்து சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, அவரது உதவியாளருடனான உரையாடலில் இருந்து அவர்கள் கொடைக்கானலில் இருந்து திரும்புவதை அறிந்து கொண்டு, அருகே செல்லவதா, தொந்தரவாக இருந்து விடப் போகிறதே எனத் தயங்கிவிட்டு, சிறிது நேரம் கழித்து அருகே சென்றேன். வெள்ளை உடையில் பாடும் நிலா. அருகே ஒரு மடிக்கணிணி.

என்ன சொல்வது, எதைச் சொன்னாலும் ஆயிரமாயிரம் பேர் சொல்லி அவர் கேட்டிருக்கக்கூடிய சொற்களைத்தானே சொல்ல முடியும். மிக மெதுவாக அணுகி, 'வணக்கம் சார், உங்கள் பாடல்களால் ஆசீர்வதிக்கப்பட்டது எங்கள் முழுவாழ்வும். உங்கள் ஆசி வேண்டும்' என்று வணங்கினேன். மிக மென்மையான அந்தப் புன்னகை. 'அப்படியா, ரொம்ப சந்தோஷம்' என்று கண்களைப் பார்த்து ஒரு சிரிப்பு. கையெழுத்துப் போட்டுத் தருமாறு படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை கொடுத்ததும்,புத்தகத்தைத் திருப்பி பின்பக்கம் அது என்ன புத்தகம் என்று வாசித்துப் பார்த்தார். (அது Aleph எனும் Paulo Coelho எனும் பிரேசில் எழுத்தாளரின் ஆன்மீக அனுபவத்தளம், மற்றும் குருவுடனான ஆன்மீக உறவு சார்ந்த நாவல்). மீண்டும் முகத்தைப் பார்த்து ஒரு புன்னகை. பிறகு 'God be with you always - Balu' என்று கையெழுத்திட்டுத் தந்தார்.அந்த தருணத்துக்கெனவே இளையராஜா காதுகளில் வீணையும் குழலுமாய் வாசித்துக் கொண்டிருந்தார்.

அதன் பிறகு மெல்ல மெல்ல கூட்டம் சேர்ந்து விமானப் பயணம் துவங்கியது. சிறிய கோழிக்குஞ்சு போன்ற விமானம். இரண்டு வரிசை பின்னால் சன்னலோரத்தில் அமர்ந்திருந்தார் எஸ்.பி.பி. வெளியே பஞ்சுப்பொதிகளுக்கிடையே விமானம் பறந்த போது மனம் விம்மிக்கொண்டிருந்தது. பாடும் நிலவோடு வானில் ஒரு பயணம் என்று.
"என் வானமெங்கும் பௌர்ணமி இது என்ன மாயமோ" என்று காதில் ஒலித்த போது மீண்டும் ஒருமுறை அவரைத் திரும்பிப் பார்த்துக் கொண்டேன். அந்த தருணத்தை என்றைக்குமாக பொத்தி வைத்துக் கொண்டேன்.

இதோ இந்த நள்ளிரவில் வான் அலைவரிசையில்
"நாதம் ஒன்று போதும் எந்தன் ஆயுள் கோடி மாதம், தீயில் நின்றபோதும் அந்தத் தீயே வெந்து போகும் நானே நாதம்" என்று கையடித்து சத்தியம் செய்கிறார். 

பாலு, நீங்களே நாதம், காற்றின் தேசம் எங்கும் உங்கள் கானம் சென்று தங்கும், வாகை சூடும்..

Monday, July 6, 2020

மழைக்கணம் சேக்கும் மாமலை



அமெரிக்காவின் டல்லாஸில் இருந்து வெளியாகும் இணைய இதழான ஆனந்தசந்திரிகை ஆண்டுமலரில் (ஏப் 2020) வெளியான எனது மேகாலயா பயணக் கட்டுரை.






வடகிழக்கு மாநிலங்கள் குறித்து அசாமைச் சேர்ந்த எழுத்தாளர் ஜானவி பரூவா விஷ்ணுபுர விருது விழாவில் பேசியபோது, நிரந்தரமாக மெல்லிய மேகத்துகில் போர்த்திய நிலம் என்று குறிப்பிட்டார். மேகங்களின் ஆலயம் என்று பொருள்படும் மேகாலயா செல்ல வேண்டும் எனத் தோன்றிய போது அந்த சித்திரமே மனதில் எழுந்தது. கொரோனா வைரஸ் பயண எச்சரிக்கைகளால் கிளம்பும் நாள் வரையிலும் பயணம் உறுதியாகவில்லை. எனவே நண்பர்களிடம்கூட சொல்லவில்லை. சிங்கப்பூர் விமான நிலையம் வைரஸ் தொற்று குறித்த பதற்றத்தால் ஆளொழிந்து கிடந்தது (14-பிப்ரவரி-2020). சுற்றுலாத்துறையும் அது சார்ந்த தொழில்களும் பெரும் பங்கு வகிக்கும் சிங்கை போன்ற நாடுகளுக்கு இது பெரிய அடி. பாதுகாப்பு பரிசோதனைக்குப் பிறகும், சகபயணியின் மூச்சுக் காற்றும் பட்டுவிடக்கூடாதென்ற பெருமுயற்சியுடன் திசைக்கொருவராய் சிதறி அமர்ந்திருந்த அனைவரையும் அள்ளி ஒன்றாக்கி விமானம் கிளம்பியது. கொல்கத்தாவின் அதிகாலையில் முகமூடி அணிந்த முகங்களூடே சற்று அலைந்துவிட்டு மதியம் பன்னிரு மணியளவில் கவுஹாத்தி சென்று சேர்ந்தேன். நோய்த் தொற்று பரிசோதனைகளும் விமான நிலைய சாங்கியங்களும் முடித்து, அலுவலகப் பதட்டங்களும் வீடு குறித்த கவனங்களும் மட்டுப்பட்டு கவுஹாத்தியிலிருந்து ஷில்லாங் நோக்கி சென்று கொண்டிருக்கும்போதே உண்மையில் இப்பயணம் தொடங்கியது. பயணங்கள் எங்கிருந்து தொடங்குகின்றன என எண்ணிக் கொண்டேன். தன் சிறகுகளை விண்ணுக்கு ஒப்படைத்து கிளைவிட்டெழும் பறவைகளுக்கே வானம் விரிகிறது. அதுவரை வெறும் சிறகுலைத்தல்தான்.





பயணத்துக்குப் பதிவு செய்திருந்த பெண்கள் ஒன்று கூடி அறிமுகங்கள் செய்து கொண்டு எளிய மதிய உணவுண்டதும் மேகாலயத் தலைநகரான ஷில்லாங் நோக்கிக் கிளம்பினோம். கவுஹாத்தி தாண்டும் வரை நெரிசலும் இரைச்சலும் இருந்தது. மேகாலயா எல்லையைத் தொடுமுன்பே மேகத்திரைக்குப்பின் சூரியன் நிலவெனத் தெரிந்தது. ஷில்லாங் சென்று சேரும் போது அந்தி செவ்விருள் சூடி குளிர்ந்திருந்தது. ஷில்லாங் வடகிழக்கின் பெரிய செழிப்பான நகரம். நகரங்களுக்குரிய நெரிசலுடன் மலைப்புறமாதலால் மேலும் குறுகிய சாலைகளால் திணறியது. நடுக்கும் குளிரில் நடந்து சென்று இரவுணவு முடித்து தங்கும் விடுதி சென்று சேர்ந்தோம். அழகிய வீடொன்றின் அறைகளை விடுதியாக்கியிருந்தனர்.

வீட்டைச் சுற்றிலும் மலர் தலைக் கொண்ட செடிகள். மறுநாள் காலை ஐந்தரை மணிக்கே மலர்கள் ஒளி சூட நாள் விடிந்தது. அன்று அங்கிருந்து கிளம்பி வழியில் மாப்ளாங் காடுகள் (Mawphlang) மற்றும் ஆர்வா (Arwah) குகைகள் பார்த்துவிட்டு சிரபுஞ்சி செல்வது பயணத்திட்டம். உலகிலேயே அதிக மழைபொழியும் இடம் என முன்பு பெயர் பெற்றிருந்த இடம் சிரபுஞ்சி. இப்போது அந்தப் பெயர் மேகாலயாவின் மாசின்ராம்க்கு உரியது. எனில் வருடம் முழுவதும் இங்கு மழை பொழிவதில்லை. பிப்ரவரியில் மழை இல்லை, மிதமான வெயிலும் மிதமான குளிரும் இருந்தது. சாலைகளில் தூசு படிந்து காற்றில் எழுந்து பறந்து பறந்தலைந்தது.


மேகாலயா 80 சதவிகிதத்துக்கும் மேலாக பழங்குடிகள் வாழும் மாநிலம். இதன் முக்கிய பழங்குடிகள் காஸி, ஜைண்டியா மற்றும் காரோ இனத்தவர்கள்.
மேகாலயாவின் கிழக்குக் காஸி பகுதியிலும் ஜைண்டியா மலைப்பகுதியிலும் பழங்குடியினரால் புனிதமெனக் கருதப்படும் பாதுகாக்கப்பட்ட காடுகள் உள்ளன. ஆயிரமாண்டுகளாக அந்தக் காடுகளை பழங்குடியினர் தங்கள் குல நம்பிக்கைகளாலும் கட்டுதிட்டங்களாலும் காத்து வருகின்றனர். காஸி பழங்குடிகளின் புனிதக் காடுகளில் ஒன்று மாப்ளாங். ஷில்லாங்கிலிருந்து அரைமணி நேரத்திலிருக்கிறது. இந்திய விமானப் படையின் கிழக்குத் மண்டலப் பிரிவைக் கடந்து சென்ற சாலையில் ஒரு மணி நேரப் பயணம். வழியில் யானை அருவி செல்லும் திட்டமிருந்தது, நீர் குறைவாக இருப்பதாக அறிந்து அங்கு செல்லவில்லை.

மேகாலயாவின் மழை காண மீண்டும் வரவேண்டும். பிப்ரவரி அதற்கான மாதம் அல்ல, மழை நாட்களின் பழைய நினைவுகளில் சிவந்து கிடந்தது மண். அதிக ஏற்றங்களின்றி வளைந்து சுழன்று செல்லும் மலைச் சுற்றுப் பாதைகள். விரிந்து படர்ந்து கிடந்தது காய்ந்த புல் பரந்த நிலம். அப்பெரும் புல்வெளியின் துணையென ஒற்றை மரம். நோய்வாய்ப்பட்டவர்கள் அதிகாலை நேரத்தில் அந்த மரத்தடியில் அமர்ந்து மாப்ளாங் காட்டிலிருந்து வரும் காற்று மேலே பட்டால் எந்த நோயும் விலகி விடுமென்பது அவர்களது நம்பிக்கை.














இது பெருங்கற்கள் மற்றும் நடுகற்களின் பகுதி. புல்வெளி முடிந்து காடு தொடங்கும் எல்லையில் செங்குத்தாக மூன்று நிலைக்கற்களும் ஒரு கிடைக்கல்லும் நிற்கின்றன. காஸி குடியினரின் வழிபாட்டுத் தலங்களை இக்கற்களைக் கொண்டு அறியலாம். மூன்று நிலைக்கற்கள் மாமன், மகன், மருமகனையும், கிடைக்கல் கொண்டு அமைக்கப்பட்ட சிறு அறை தாயையும் குறிப்பிடுவதாக காஸி குடியைச் சேர்ந்த வழிகாட்டி சொன்னார். காஸி பழங்குடி பல இனக்குழுக்களால் ஆனது. தாய்வழி சமூகம். குடும்பத்தின் இளைய பெண்ணுக்கே சொத்துரிமை. ஆண்கள் திருமணத்துக்குப் பிறகு பிறந்தகத்தை விட்டு வெளியேறி விட வேண்டும். எனில் அரசுரிமை தாய்மாமனிலிருந்து மருமகனுக்குச் செல்கிறது. காஸி மன்னர் இங்கு இந்தக் காட்டில்தான் முடிசூடிக் கொள்வார். நடுகற்களின் முன்னால் காட்டின் தேவதை லபாசாவை வழிபடுகிறார்கள். ஆண்டுக்கொரு முறை நடைபெறும் வழிபாட்டில் காளை பலியாகக் கொடுக்கப்படுகிறது. வழிபாடு முடியும் தருணத்தில் காட்டின் உள்ளிருந்து சிறுத்தை வெளியே வந்தால் நற்சகுனமென்றும், பாம்பு வெளியேறினால் தீய சகுனமென்றும் கொள்கிறார்கள். ஆயிரமாண்டுகளாக சத்தியம் காக்கிறாள் லபாசா. ஒருமுறையும் தவறியதில்லையாம்.

தேனீக்களின் ரீங்காரத்தில் காடு யாழென கார்வைகொண்டு காத்திருந்தது. மரங்களூடே சிறு நுழைவொன்றுள் கற்கள் நிரவிய பாதை நூறடி செல்கிறது. அப்பாதையின் முடிவில் ஓங்கி நிற்கும் ஏக முக உருத்திராட்ச மரத்தை வழிபடுகிறார்கள். அருகிலேயே குடி மூத்தோருக்கான நடுகற்கள் இருக்கின்றன. அவற்றைத் தாண்டி காட்டுக்குள் சென்றுவிட்டால், வழிபாட்டை முழுவதுமாக முடித்த பின்னரே திரும்ப வேண்டும் என்பது அவர்கள் நம்பிக்கை. நீத்தோர் சடலங்களை எரித்துவிட்டு இங்கே எலும்புகளைக் கொண்டுவந்து புதைக்கிறார்கள், அதன்மேல் நடுகற்களை நடுகிறார்கள். குடியின் அரசருக்கு பெருங்கற்கள். அந்தக் காட்டிலிருந்து உதிர்ந்த இலையோ சுள்ளியோ கூட வெளியே எடுத்து வர அனுமதியில்லை.









பல வகையான அரிய மரங்களும், புற்றுநோய், காசநோய் போன்ற நோய் தீர்க்கும் மருத்துவ குணங்கொண்ட செடிகளும் அக்காட்டில் நிறைந்திருக்கிறது. மூங்கில், தேக்கு, சால மரங்கள், வேர்களில் குடைவரை போலக் குழிந்திருந்த மரங்கள், காசி பைன் வகைகள், பல வண்ண ஆர்கிட்கள், ஊணுண்ணிக் குடுவைத்தாவரங்கள், நடுகற்களை மூடி பசுமை போர்த்தும் புற்கள், ஒளி சிந்தும் பெரணிகள், காய்ந்த மரங்களில் விதவிதமான காளான்கள் என அந்தப் பசுமை குன்றாக் காடு தரையிலிருந்து உயர்ந்தெழுந்து முடிகாண இயலா விருட்சங்கள் செறிந்து இருக்கின்றன. ரோடோடென்டரான் பூக்கும் காலத்தில் காடு அதீத வண்ணம்கொண்டு விடுமென்று வழிகாட்டி சொன்னார். அக்காட்டின் தெற்கே அதிக மழை பெரும் சிரபுஞ்சி, மாசின்ராம் தாண்டி வங்காள தேச எல்லை வரை பசுமை மாறாக் காடுகள் அமைந்திருக்கின்றன. காடு ஆழ்ந்த அமைதியில் இருந்தது. அக்காட்டுக்குள் அதிக சிரமமில்லாத ஒன்றரை மணி நேர நடைக்குப் பின்னர் கிளம்பினோம்.

மதியம் இரண்டு மணிக்கே நல்ல குளிர் இறங்கியிருந்தது. பெரிய புல்வெளியில் பைன் மரங்கள் சூழ்ந்த ஒரு அழகான விக்டோரியன் காலத்து வீடு 'கபே சிரபுஞ்சி' என்ற உணவகமாக மாற்றப்பட்டிருந்தது. காத்திருத்தல் என்பதே பருவுருக்கொண்டு வந்தது போன்ற பைன் மரங்கள். தனிமையில் தன்னுள் நிறைந்து மென்மையாக இறங்கும் குளிரில் வான் நோக்கி ஓங்கி நிற்கும் பைன் மரங்களின் வரிசை. குளிர் அதன் கூம்பு வடிவத்தில் தங்க முடியாது சரிந்து தரையிறங்கியது. கதகதப்பான கனப்புக்கு அருகே அமர்ந்து உண்டோம்.























மீண்டும் சரிந்தேறி வழிந்திறங்கும் சாலைகளின் வழி பயணம். செம்மையில் தொடங்கி கருமை வரை பல வண்ணங்களாக மண் நிறம் மாறிக் கொண்டே வந்தது. பாறைகளின் நிலம். உலகின் மிகவும் சிக்கலான நீண்ட குகை அமைப்புக்கள் கொண்ட இடமாக மேகாலயா அறியப்படுகிறது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிலங்கள் இருக்கின்றன. மாலை சூரியன் பனி போர்த்தும் வேளையில் அவற்றுள் ஒன்றான ஆர்வா குகையைச் சென்றடைந்தோம். இருபது நிமிட நடைபாதை மலையை வளைத்தேறுகிறது. மறுபுறமிருக்கும் பள்ளத்தாக்கில் மழைக்காலத்தில் அருவிகள் வழியும் தடங்கள் தெரிகின்றன. சுண்ணாம்புப் பாறைகளாலான பிலம்.

பல லட்சம் வருடங்களுக்கு முன் இப்பகுதி சமுத்திரத்தின் அடித்தளமென இருக்கையில் நீர் சிற்பியெனக் குடைந்து செதுக்கிய குகைகள். சில நூறடிகள் மின்விளக்குகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. சிக்கலான வழிகளில் பல இடங்களில் குனிந்தபடியே வெகுநேரம் செல்ல வேண்டியிருக்கிறது. ஹோய்சாலத் தூண்களைப் போல புனல் வழித்தெடுத்த வழுவழுப்பான சுண்ணாம்புப் பாறைகள். சுற்றிலும் நீர் வழிந்தோடிக் கொண்டிருக்கிறது. பல்வேறு ஆழ்கடல் உயிரிகளின் படிவங்கள் பாறைகளில் காணப்படுகின்றன. கடலின் அடிப்பகுதியில் நிற்பதான உணர்வு வருகிறது. அரை மணி நேர நடைக்குப் பிறகு வழி மயக்கும் புதிரொன்றுக்குள் சிக்கிக் கொண்டது போலிருந்தது. பல லட்சம் வருடங்களைக் கடந்து ஆழ்கடலின் தரையில் வாழ்ந்த அவ்வுயிரினங்களைத் தொட்டு மீண்டது ஒரு பேரனுபவம்.













கதிர் விழுவதற்குள் பார்க்க வேண்டுமென நோகாலிகை அருவிக்கு சென்றோம். மலை உச்சியினின்று பாதாளம் ஏழினும் கீழ் சீராக இறங்கும் நோகாலிகை. மற்ற அருவிகளில் நீர் குறைந்தாலும் இந்தியாவின் உயரமான அருவிகளில் ஒன்றான இவ்வருவியில் நீர் இருந்தது. மழைக் காலத்தில் இவ்வருவியில் நீர் பன்மடங்கு நிறைந்து வழியும். அந்தி என்றுமே அழகானது. இதுபோன்ற இயற்கையின் பேருருவுக்கு அருகில் கடக்கும் அந்தி தியான நிலையை ஏற்படுத்துவது. ஒளிப்பந்து சிவந்து பள்ளத்தாக்கில் விழ கிளம்பினோம்.


சொஹ்ரா வெள்ளையர்களால் செரா என்றும் பின்னர் செராபுஞ் என்று மருவி சிரபுஞ்சி ஆயிற்று. 2007ல் மீண்டும் சொஹ்ரா என்று பெயர் மாற்றப்பட்டது.
சிரபுஞ்சி தங்கும் விடுதி கீழ்சொஹ்ராவில் இருக்கிறது. அங்கு செல்லும் சாலையை மலைப்பாறைகளை வெட்டி அமைத்திருக்கிறார்கள். இருபுறமும் நெடிது நின்ற பாறைச்சுவர்களூடே இருள் விழுங்கக் காத்திருந்தது. மாலை ஆறு மணி இரவு எட்டு மணி போல இருண்டிருக்க விடுதியை சென்றடைந்தோம். நெருப்பு மூட்டி சுற்றிலும் அமர்ந்து ஒரு தமிழ்க் குழு விடுமுறையைக் கொண்டாடிக் கொண்டிருந்தது. ஆடல், பாடல், கூச்சலும் குதூகலமுமாக சில குடும்பங்கள் அமைதியைக் கிழித்து நெருப்பிலிட்டுக் கொண்டிருந்தார்கள். காது கடந்து உள்ளே இறங்கும் அமைதியைப் பலரால் தாங்க முடிவதில்லை, பழகிப் போன இரைச்சல்களிலேயே பாதுகாப்பாக உணர்கிறார்கள் போலும். வனங்களில் கூட அதிரும் இசையை வழிய விட்டபடி நடக்கும் மனிதர்களைக் காண முடிந்தது.

அடுத்த நாள் அதிகாலையிலேயே கிளம்பி ஐந்து கிலோமீட்டர் தொலைவுள்ள தீர்னா கிராமம் வரை வண்டியில் பயணம். அதன் பிறகு நோங்ரியாட் வேர்ப் பாலங்கள் நோக்கிய நடை துவங்கியது. முடிவற்ற படிகள் காலையின் அமைதியில் பொதிந்து வைக்கப்பட்டிருந்தன. சிறிது தொலைவு இருபுறமும் கிராமத்து வீடுகள், அவ்வப்போது எதிர்ப்படும் குழந்தைகள், தண்ணீர் சுமந்த பெண்கள். வழியெங்கும் பாக்கு மரங்கள், பிரிஞ்சி இலை குறுமரங்கள். வாசனையான மலைப்பாதை. நோங்ரியாட் கிராமம் வரை 3700 படிகள் என்றார்கள். சில இடங்களில் செங்குத்தாக மாறி நேர்க்கோடென பள்ளத்தாக்கை நோக்கி இறங்கும் படிகள். அத்தகைய நீர்வீழ்ச்சிகளை நிறையப் பார்த்துப் பாதையையும் அப்படியே அமைத்துவிட்டார்கள் போலிருக்கிறது. ஒரு மணி நேர நடைக்குப் பின்னர் முதல் வேர்ப்பாலம் வருகிறது, எனில் பாதையிலிருந்து சற்று விலகி செல்ல வேண்டும், நேரமாகிவிட்டதென அங்கு செல்லவில்லை. வழியில் வந்த சிற்றாற்றைக் கடப்பதற்கு ஓர் இரும்புப்பாலம். சீரமைப்புப்பணிக்கென வழியை மறித்திருந்தார்கள். ஆற்றில் தண்ணீர் குறைவாகவே இருந்ததால் பாறைகளின் வழி ஆற்றைக் கடந்தோம். வெள்ளம் சுழித்து உருவேற்றியிருந்த பாறைகளையும் உருளைக்கற்களையும் தொட்டுக் கடந்து செல்லும் போது நீரின் திட உருவைத் தொட்டுச் செல்வது போலவே இருந்தது. சற்று நேரத்திலேயே இரண்டாவது இரும்புத் தொங்கு பாலம். சிலர் ஏறியதுமே பாலம் ஊசலாடத் தொடங்கியது. அடியில் கற்பாறைகளைச் சுழன்று ஓடும் நீலநிற நதி. ஊஞ்சல் போல ஆடும் பாலம். அதைக் கடந்து சில நூறு படிகள் ஏறி ஆங்காங்கே நின்று இளைப்பாறி நிதானமான நடையில் நோங்ரியாட் சென்றடைந்தோம். பதினொரு மணி முதல் பன்னிரண்டு மணிக்குள் வானவில் அருவியை சென்றடைந்தால் அருவியில் வண்ணங்களின் ஒளிச்சிதறலைக்காண முடியும். நோங்ரியாட் சென்றடையவே பதினொரு மணியாகிவிட்டது. இன்னும் இரண்டு மணி நேர மலைப்பாதை இருக்கிறது. இறங்கிவந்த களைப்பில் கால்கள் ஏற்கனவே நடுங்கத் தொடங்கியிருந்தன. மூவர் அங்கேயே தங்கி விட ஏழு பேர் வானவில் அருவிக்குப் புறப்பட்டோம். நோங்ரியாட் கிராமத்துக்கு அருகிலேயே இருக்கிறது இரண்டடுக்கு வேர்ப்பாலம். ஆற்றின் குறுக்கே ரப்பர் மரத்தின் வேர்களை ஓட வழி செய்து ஆதாரமாக மூங்கில் கழிகளை வைத்து அதன் மேல் அந்த வேர்களை இணையவிட்டு அது காலப்போக்கில் மேலும் உறுதிகொண்டுவிட பாலம் உருவாக்கப்படுகிறது. பாலம் உறுதி கொள்ள இருபது முதல் முப்பது வருடங்கள் ஆகின்றன. மறுநாள் காலை அந்த இடத்தைப் பார்த்துக் கொள்ளலாம் என அதைக் கடந்து பயணத்தைத் தொடர்ந்தோம்.









வனம் அடர்ந்து கொண்டே சென்றது. காட்டாறு ஒன்றின் குறுக்கே ஊசலாடும் தொங்கு பாலம் ஒன்று. மூங்கில் கழிகளையும் அதை இணைக்கும் இரும்புக் கம்பிகளுமாக ஒவ்வொரு காலடிக்கும் முனகியது. சிறிது நேரம் சீரான மலைப்பாதை. பின்னர் இதுவரை பார்த்ததிலேயே நீளமான வேர்ப்பாலம் ஒன்று. சிக்கலான வலைப்பின்னல்களால் வேர்கோர்த்திருந்தன. கடந்து செல்லும் ஒவ்வொரு கால்களையும் தன் வேர்கள்வழி உணர்ந்தபடி நின்றிருக்கும் மரங்கள். கோர்த்த வேர்கள் வழி அம்மரங்கள் பேசிக் கொள்ளக்கூடும். அதில் நடந்து செல்லும் போது உயிருள்ள ஒன்றின் மீது நடப்பதாக உடல் கூசியது.





அதைக் கடந்த பின் வலப்புறம் உயர்ந்த மலைச்சுவர். இடப்புறம் ஆற்றை நோக்கி இறங்கும் சரிவு. நீரின் ஒலி வலுத்துக் கொண்டே வர இடப்பக்கம் நீலத் தடாகம் ஒன்று கண்ணில் பட்டது. அங்கே வெள்ளி நிற சிற்றருவி வழிந்து நீலத்தில் கரைந்தது.


















நீரின் ஒலி உடன் வர கற்களும் பாறைகளுமே படிக்கட்டாக அமைக்கப்பட்ட பாதை வழி பயணம். சில பகுதிகளில் கைகளையும் ஊண்றி ஏற வேண்டியிருந்தது. குடிநீர் மற்றும் மழை ஆடை வைத்திருந்த பை முதுகில் கணத்தது. கால்கள் நிற்கும் போதெல்லாம் நடுங்கிக் கொண்டிருந்தன. பள்ளத்தாக்கை ஓரவிழி கண்ணுற்ற போதெல்லாம் உடல் நடுங்கியது. சித்தத்தின் கட்டுப்பாடின்றி உடல் வேறு புறமாய் நகர்ந்தது. அவரவர் ஆற்றலுக்குத் தக்கபடி குழுவினர் பிரிந்து வந்து கொண்டிருந்தோம். இரு பெண்கள் முன்னால் சென்று விட மீதமிருப்போர் மிகவும் பின்தங்கிவிட தனியே எனது பயணம் தொடர்ந்தது. வேறு மனித நடமாட்டங்கள் அனேகமாக இல்லை. படிகளோ பாதையோ சரியாக இல்லாத போது மனது சற்றுப் பின்வாங்கியது. இங்கேயே சில மணிநேரம் அமர்ந்து ஆற்றையும் இந்தக் காட்டையும் மனதுள் சேகரித்துக் கொண்டு திரும்பிவிடாலமெனத் தோன்றியது.

மதிய வெயிலை குளிரென வடித்துக் கொடுத்தது காடு.
யானைக்காது சேம்பின் ஒற்றை இலை மட்டும் காற்றின் திசைக்கேற்ப குட்டி யானை போல இடவலமாகத் தலையாட்டிக் கொண்டிருந்தது. செடி அமைதியாக அவ்விலையை வேடிக்கை பார்த்தது. (இது குறுந்தொகையின் பாடலொன்றில் வரும் உவமை என்பது இதை எழுதியபின்னர் நினைவுக்கு வந்தது, அவ்விடத்தில் இயல்பாக மனதில் தோன்றிய இந்தச் சித்திரம் ஆயிரமாண்டுகளாக மனித மனதில் எழுகிறது!)

ஒரு செடியில் குறுமிளகு போன்ற காய் காய்த்துக்கிடந்தது. இலைகளின் வழி ஒளியின் நடனம். உட்கார்ந்த இடத்தில் மண் சரியும் உணர்வேற்பட்டது. நிலைகொள்ளாமல் எழுந்து நிற்க கால் தடுமாறியது. நீலவண்ண இறகுகளில் மஞ்சள் புள்ளிகள் கொண்ட பெரிய வண்ணத்துப்பூச்சி வந்து கால்களில் அமர்ந்தது. சற்று முன்னால் அது பறந்து செல்ல, அதைத் தொடர்ந்து பத்தடி நடந்து சென்றேன். பின்னர் நதிப்புற வனச்சரிவில் மறைந்து போனது. சில நொடிகளில் மற்றொரு சாம்பல் நிற வண்ணத்துப்பூச்சி வந்து இரண்டடி முன்னால் அமர்ந்தது. வனங்களின் இறைவியான லபாசாவை எண்ணிக்கொண்டேன். புலியாக வராமல் வண்ணத்துப்பூச்சியாக வந்திருக்கிறாளே என எண்ணிக் கொண்டேன். ஏதோ ஒன்றைப் பற்றிக் கொண்டு மேலேறி விட வேண்டும் என்ற உந்துதல் இருந்தால் மனது எதையேனும் அடையாளம் கண்டுகொள்கிறது.








அதன் பின்னர் அந்த அருவியை அடைய மேலும் ஒரு மணி நேரம் சற்று கடினமான, சறுக்கி விடக்கூடிய பாறைத்தடங்களில் பயணம், வழியெங்கும் ஓவியனின் தூரிகை தொட்ட வண்ணங்கள் அனைத்தும் இறகு முளைத்து எழுந்தது போல எண்ணற்ற பட்டாம்பூச்சிகள். வண்ணத்துப்பூச்சிகளின் வனம். இவ்வுலகைச் சுற்றிவர வண்ணத்துப்பூச்சியின் சிறகுகள் கிடைக்குமாயின் ஒவ்வொரு பூவும் திறந்து கொள்ளக்கூடும்.

ஓன்றரை மணிநேர நடைக்குப் பின் காற்றை பூத்தூறல்களால் நனைத்தபடி கண்முன் தெரிந்தது வானவில்லைத் தன் முகவரியாகக் கொண்ட அருவி. உயரத்திலிருந்து நீல நிறப் பொய்கையுள் பொழிந்தது. இந்தக் காட்டின் அரிய ரகசியம் ஒன்றைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் பெருமையுடன் மூன்று புறமும் ஓங்கிய பாறைச்சுவர்கள். அப்பொய்கையை அடைய, பாதை வந்து முடிந்த இடத்திலிருந்து நடை வழிகள் ஏதுமில்லாத கரடுமுரடான பாறைகள் வழியே தொற்றியும் தொங்கியும் குதித்தும் புரண்டும் இறங்க வேண்டியிருந்தது. அபாயகரமான இரு பாறைகளுக்கு இடையே மட்டும் மூங்கில்களால் சிறு ஏணி போலக் கட்டியிருந்தார்கள். நீர் கிளப்பிய உந்துதலில், உடல் வலியும் பாதையின் சிரமமும் மறைந்துவிட விரைவாகக் கீழே குளத்தருகே இறங்கிச் செல்ல முடிந்தது. அருவி பொய்கையைத் தொடுமிடத்தில் குளத்தை இரண்டாக வகுத்தபடி நின்றது பெரும் பாறை. பாறையின் இருபுறமும் நீலமும் பச்சையுமாக அலைவு இருநிறம் காட்டியது. ஆழத்தை இல்லையென்று ஆக்கியபடி அடித்தரைக் கற்களை அருகில் காட்டியது நீர். களைத்த கால்களை மெல்ல நீருக்குள் இறக்கிக் கற்களை உணர்ந்தபடி அமர்ந்திருந்தேன்.























அவ்வளவு தெளிவான நீலநிறமான நீர்ப்பரப்பை அதற்கு முன்னர் கண்டதில்லை. ஏற்கனவே முன்னால் சென்றடைந்திருந்த பெண்கள் நீர் விளையாடிக் கொண்டிருந்தனர். எங்களைத் தவிர இன்னும் நான்கு பேர். வேறு ஆளரவம் இல்லை. பின்மதியம். சூரியன் மலைச்சுவருக்குப் பின்னால் மறைந்து கொண்டிருந்தது. நீரின் குளுமை கால்களை சுட்டு பின்னர் மரத்துப் போகச் செய்திருந்தது. அடுத்த அரைமணிநேரத்தில் மற்ற பெண்களும் வந்து சேர்ந்தனர். கடினமான ஒன்றை செய்து முடித்துவிட்ட மகிழ்ச்சி அனைவர் முகத்திலும் தெரிந்தது. நீருக்குப் போட்டியாகப் பெண்களின் கூச்சலும் ஆரவாரமும். மீள நோங்ரியாட் நோக்கி நடந்தபோது உடலின் ஒவ்வொரு தசையும் எந்த அசைவில் பயன்படுகிறது எனப் புரிந்தது. மீண்டும் தனிமையிலேயே முழுப் பயணமும் அமைந்தது. கால்கள் நடுங்க கோலையும் ஊன்ற முடியாததால் அந்த நீளமான வேர்ப்பாலத்தைத் தவழ்ந்தே கடக்க முடிந்தது. இது போன்ற மலையேற்றங்களில் பல இடங்களில் அருகாமை கிராமத்து நாய்கள் உடன் வருவது வழக்கம். இம்முறையும் அருவியருகே இருந்த தேநீர்க் கடை ஒன்றிலிருந்து வேர்ப்பாலம் வரை ஒரு நாய் உடன்வந்தது. பாலத்தில் ஏறக்குறைய தவழ்ந்து சென்றபோது அதுவும் நிதானமாக அதன் மூச்சு வெம்மை மேலே பட கூடவே தவழ்ந்து வந்து வழியனுப்பி வைத்தது. இரவு அந்த நோங்ரியாட் கிராமத்தினர் நடத்தும் எளிய தங்கும் அறைகளில் தங்கினோம். ஓர் அறையில் ஆறு பேர் படுத்துக்கொள்வதற்கான படுக்கைகள் இருந்தன். அறைக்குள்ளேயே மலைப்பாறை ஓர் அங்கமாக இருந்தது. இனிய தேநீர், எளிய உணவு.

மறுநாள் அதிகாலை இரட்டையடுக்கு உயிர்வேர்ப்பாலம் காணச் சென்றோம். மிக அழகான இயற்கைசார் கட்டுமானம். அடியிலிருந்த குளத்தில் நூற்றுக்கணக்கில் மீன்கள் அலைந்தன, நீரில் நுழைந்த கால்களை சூழ்ந்தன.


















காலை உணவு முடித்து தீர்ணா கிராமம் நோக்கிய நடை துவங்கியது. ஏறும் போது படிகளின் முடிவற்ற தன்மை இன்னும் அதிகமாகத் தெரிந்தது. சில இடங்களில் எழுபது பாகைக் கோணத்தில் செங்குத்தாக நின்றன படிகள். திரும்பிப் பாராது அந்தந்த அடியில் கவனம் குவிப்பது ஒன்றே இது போன்ற தருணங்களில் உதவுவது. ஏறத்தாழ மூன்று மணி நேரத்தில் எல்லோரும் மேலே வந்து சேர்ந்தோம். சிரபுஞ்சிக்கு அருகிலேயே ஆரஞ்சு ரூட்ஸ் என்ற சைவ உணவு விடுதியில் மதிய உணவு. விடுதியின் பெரிய சாளரங்கள் வழி 1931ல் நிறுவப்பபட்ட ராமகிருஷ்ண மிஷன் வளாகம் கண்ணில் பட்டது.

அன்று மதியம் சிரபுஞ்சியை சுற்றியிருந்த வேறு சில அருவிகளும் பார்ப்பதாகத் திட்டம். சிலவற்றில் நீர்வரத்துக் குறைவாக இருந்ததால் செல்லவில்லை. குறிப்பிடும்படியானவை வைசாடங், டையன்த்லன் அருவிகள். ஆறொன்றைக் கடந்து மாபெரும் கரும்பாறைச் சமவெளியில் வண்டி நின்றபோது அங்கு எவ்விதம் நீர்வீழ்ச்சி இருக்க முடியுமென உருவகிக்க முடியவில்லை. தட்டையான நிலம். எரிமலைக் குழம்பு இறுகி உருவாகிய கரும்பாறைத் தளம் கண்ணுக்கெட்டிய தூரம் விரிந்த நிலப்பரப்பு. அதில் ஒரு சிற்றாறு ஓடி விதவிதமான குழிவுகளையும் வடிவபேதங்களையும் பாறைச்செதுக்குகளையும் உருவாக்கியிருந்தது. இன்மையிலும் தன் இருப்பை விட்டுச் சென்றிருந்தது நீர்.

இம்முறை மேகாலயப் பயணத்தில் கண்டறிந்த ஒன்று, நாம் காணச் செல்லும் அருவி அல்லது இயற்கைக் காட்சி நோக்கு தளங்களை எளிதாக அடையாளம் காண வழி 'தற்பட அபாய மண்டலம்' (Selfie danger zone) என்ற அறிவிப்புப் பலகைகள்; அனைத்து இடங்களிலும் இருந்தன. இங்கும் ஓரிடத்தில் இருந்தது கண்டு அருகே சென்றோம். நூறடிகளுக்கு அப்பால் அந்தத் தட்டை நிலம் மடிந்து பெரும்பள்ளத்தாக்கு ஒன்றை நோக்கி விழும் இடத்தில் அச்சிற்றாறு அருவியாகிறது. நாங்கள் நடந்து கொண்டிருந்த அப்பாறை நிலம் மழைநாட்களில் பொங்கி வழியும் ஆற்றின் உடற்பகுதி.

அடுத்த நாள் அதிகாலையிலேயே சிரபுஞ்சியிலிருந்து கிளம்பி வங்காளதேச எல்லையில் ஷ்னோன்ப்டெங் (Shnongpdeng) என்னும் இடம் செல்வது திட்டம். வழியில் முதலில் கண்டது மாஸ்மாய் குகைகள்(Mawsmai caves). மேகாலயா எண்ணற்ற நீண்ட குகைகளை உடையது. அதில் சீராக நுழைவுப்பாதை மற்றும் ஒளியமைப்புகளோடு சுற்றுலா வருபவர்களுக்கென வசதிபடுத்தப்பட்ட இடம் இந்த மாஸ்மாய் குகைகள். ஐம்பது படிகள் ஏறிச்சென்றதும் இப்பிலத்தின் நுழைவாயில் வருகிறது. மிக அழகான குடைவுச் சிற்பங்களையும் தூண்களையும் கொண்ட ஆலயம் போன்ற குகை இது. சில பகுதிகளில் உடலை முழுவதுமாகக் குறுக்கி பாறைகளுக்கிடையே நுழைத்து செல்ல வேண்டியிருக்கிறது. பல இடங்களைக் குனிந்தே கடக்க வேண்டிய அமைப்பு. இதன் கூரை முதல் தரை வரை சுண்ணாம்புப் பாறைகள் மற்றும் நீரின் கலைவண்ணம். அரைமணி நேரம் சுற்றி வேறு வழியில் வெளியேறினோம்.































அங்கிருந்து ஆசியாவிலேயே சுத்தமான கிராமம் என்று பெயர் பெற்றிருக்கும் மாவ்லினாங் (Mawlynong) கிராமம் சென்றோம். கடவுளின் தோட்டம் என்கிறது அறிவிப்புப்பலகை ஒன்று. எங்கெங்கும் மூங்கில் கூடைகள். அதில் சேகரிக்கப்படும் வீட்டுக் குப்பைகள், பெரிய குப்பைக் குழிகளில் சேகரிக்கப்படுகின்றன. அதை மக்கும் குப்பை, மக்காத குப்பை என வகைப்படுத்தி விவசாயத்துக்கான உரம் தயாரிக்கின்றனர். ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் கிராமமே இணைந்து மரக்கன்றுகளை நடுகிறது. மாவ்லின்னாங் கிராமத்தில் கான்க்ரீட் வீடுகள் மிகக்குறைவு. பழைமை மாறாத மண்வீடுகளையும், மூங்கில் வீடுகளையுமே அதிகளவில் இக்கிராம மக்கள் பயன்படுத்துகின்றனர். இயற்கையை மிகுந்த திட்டமிடலோடு பேணி வரும் இடம். அங்கு மேகாலய உணவு உண்டோம். வடகிழக்கில் பெரும்பாலும் அசைவ உணவுகள்தான். சைவ உணவு எனில் அரிசிச் சோறு, பருப்பு மற்றும் உருளைக்கிழங்கு எல்லா இடங்களிலும் கிடைக்கிறது. இங்கு கூடுதலாக கீரை வகைகளும் கேரட்டும் சமைத்திருந்தார்கள். சுவையான உணவு.













மாலை இரவை சந்திக்கும் எல்லையில் டாக்கி அருகே இந்திய பங்களாதேஷ் எல்லையில் நின்றோம். பாக்கு மரங்கள் நிறைந்த மலைச்சரிவுகள் இடப்புறம் இருக்க வேலிக்கு அப்புறம் கண்ணை நிறைத்து விரியும் வங்கதேச சமவெளி. இதற்கு மேல் உயர்ந்து தாழ்ந்து மடிந்து எழுவதில்லை என உறுதிபூண்ட நிலம் மடிப்புகளின்றி நீவிவிடப்பட்ட துணிபோலக் கிடந்தது. ஆங்காங்கே சமவெளி எங்கும் வான்வெளியின் இன்மையைத் தன்னுள் ஒளியெனத் தேக்கி வைத்திருந்த நீர்நிலைகள்.

தொடர்ந்து எல்லைக்கோட்டிலேயே ஊரும் எறும்பாகப் பயணம். வங்கதேசத்துக்கு நிலக்கரி ஏற்றுச் செல்லும் நூற்றுக்கணக்கான லாரிகள் சாலையோரம் அணிவகுத்திருந்தன. எல்லைப்புற ராணுவ மையங்கள், சோதனைச்சாவடிகள், பச்சை சீருடை வாகனங்கள். வங்கதேச வயல்வெளிகளிலிருந்து கூடடைய மேகாலயக் காடுகளுக்குத் திரும்பும் பறவைகள். காற்றும் எல்லைதாண்டி வீசிக் கொண்டிருந்தது. அனைத்துக்கும் சாட்சியாக உம்காட் நதி அமைதியாக நகர்ந்து சென்றது. காஸி ஜைண்டியா மலைப்பகுதிகளின் இயற்கை எல்லையாக ஓடும் உம்காட் நதி இங்கிருந்து வங்கதேசத்துள் நுழைகிறது. ஷ்னோன்ப்டெங்கை ஆறரை மணியளவில் சென்றடைந்தோம். மலைகள் சூழ்ந்த அகன்ற நதிக்கரையில் இரவு ஓய்வெடுத்துக் கொண்டிருக்க, நதி உருட்டி விளையாடிய பாறைகளும் கற்களும் குளிர்காய்ந்து கொண்டிருந்தன. இருளில் கண்கள் பழகும் வரை தடுமாறியபடி படகேறினோம். நட்சத்திரங்களின் ஒளியில் படகில் நதியைக் கடந்து அக்கரை சென்று சேர்ந்தோம். வரிசையாக ஆறு கூடாரங்கள். பின்புறம் குன்றின் சரிவில் சமையல் கூடாரம். கூடாரங்களுக்கு அருகே தீ மூட்டியிருந்தார்கள். குளிரில் நெருப்பு நடுங்கிக் கொண்டிருப்பது போலிருந்தது. சூழ அமர்ந்து குளிருக்கு உடல் பழகியதும் அனைவரும் எளிதானார்கள். அன்னையராக மனைவியாக மகளாக என்று எதுவுமே இல்லாமல் பெண்கள் இருக்க வெறும் சிரிப்பும் பாட்டுமாக இரவு ஒழுகிச் சென்றது. நதியும் கூடவே சிரித்தது. உறங்கவே கூடாது எனச் சொல்லிக் கொண்டிருந்த பெண்கள் ஒவ்வொருவராக உறங்கச் சென்றார்கள். வாசலில் தீ அனைந்து கங்குகள் கனன்றன. ஒவ்வொரு கூடாரத்து வாசலிலும் வைக்கப்பட்டிருந்த அரிக்கேன் விளக்குகள் மங்கத் தொடங்கின. இருவருக்கு ஒரு கூடாரம். கூடாரத்திற்குள் மெல்லிய போர்வைக்குள் குளிரும் இதமும் கலந்திருந்தது. நள்ளிரவுக்கு மேல் காற்றாலான நதி குடில்களுக்கு மேலே அலைபுரண்டு ஓடுவது போலிருந்தது. குடில் பறந்தெழும் பரிதவிப்பில் சிறகு படபடத்தது. நள்ளிரவு தாண்டியும் உறங்க முடியவில்லை. நதிக்கு அருகே படுத்திருந்ததால் இரவு முழுவதும் தொடர்ந்து நீர் சார்ந்த கனவுகளும் நினைவுகளும் கற்பனைகளும். நாலரை மணிக்குக் குடிலுக்கு வெளியே வந்து அமர்ந்தேன். கூடாரங்களை நோக்கியபடி அமர்ந்திருந்ததால் யாரோ பின்னால் காலடி எடுத்து வைத்து வருவது போல நடந்தது நதி. விரிப்பு ஒன்றில் மணல் சிதறிக் கிடந்தது; வானோக்கி அதில் படுத்துக் கொண்டேன். ஒரே ஒரு அரிக்கேன் விளக்கு மட்டும் மினுங்கிக் கொண்டிருந்தது. நட்சத்திரங்களை மங்கலாக்கிய வெண்திரை ஒன்றால் வானம் போர்த்தப்பட்டிருந்தது. ரத்தம்தோய்ந்த நகக்கீறலென கீற்று நிலா. இரவெல்லாம் இடையறாத காற்றின் ஒலியும் நீரின் ஒலியும் நரம்புகள் அனைத்தையும் நீவி எளிதாக்கியிருந்தது. காலமெல்லாம் இசைக்கும் வெளி. ஓயாத குழலோசையெனக் காற்று. இசை கேட்டு மயங்கும் பெயரரியா நட்சத்திரங்கள். இவ்விசை எட்டாத் தொலைவுகளில் காதுகளை இறுக மூடிக் கொண்டு வெற்றிரைச்சல் தேடும் வாழ்வு எங்கோ இவையனைத்துக்கும் அப்பாலிருந்தது. பார்த்திருக்கையிலேயே கருக்கிருட்டுள் ஒளி ஊடுருவியது. நிலவு மறைந்து கதிர் எழுவதற்கு முந்தைய நிமிடங்கள் அற்புதமான ஒளிக்கணங்கள். சூழ்ந்திருந்த மலை முகடுகள் ஒளி கொண்டு நீருக்குள் மின்னொளி குடிகொண்டது. ஆற்றின் கரைகளில் யாருமற்ற படகுகளில் ஏறி குதித்தாடியது காற்று. தாளவியலாத தத்தளிப்பு.


















மெதுவாக அனைவரும் விழித்துக் கொள்ள அன்றைய நாள் நீர் கேளிக்கைகளுக்கானதாக வகுக்கப்பட்டிருந்தது. இருப்பத்தைந்து முதல் ஐம்பது வயது கொண்ட பெண்கள் குழுவில் இருந்தனர். எல்லோரும் சேர்ந்து பாண்டி ஆட்டம் விளையாட முயன்றோம். உடலெங்கும் இருந்த வலியும் விளையாடியது.














வெயில் ஏறிய பின்னர் உம்காட் ஆற்றில் படகுகள் அந்தரத்தில் மிதப்பது போன்ற தோற்றமேற்படுகிறது. நதியின் அடியாழம் வரை பளிங்கெனத் தெரிவதால் ஏற்படும் விளைவு. எனில் கதிரொளி ஏறக்குறைய உச்சிவானிலிருந்து விழும் நேரமே அந்தக் காட்சி தோன்றுகிறது. ஆழம் வரை ஒளி ஊடுருவுவதால் அதிக ஆழம் இல்லையென காட்சிப்பிழை கொள்ளச் செய்யும் தோற்றம். ஷ்னோன்ப்டெங்கிலிருந்து கிளம்பி டாக்கி தொங்குபாலத்திலிருந்து பச்சை நிற ஆற்றையும் அதில் மிதந்தலையும் படகுகளையும் பார்த்துவிட்டு ஷில்லாங் நோக்கிக் கிளம்பினோம்.






வழியில் மேலுமொரு அழகிய அருவி-கிராங் சுரி அருவி. இங்கும் அதை அணுகும் வரை அருவிக்கான தடயமே இல்லாத மொட்டைமலை. பல நூறடி ஆழத்தில் கிராங் சுரி அருவி கொட்டிக் கொண்டிருந்தது.
தேவதைக் கதைகளுக்குரிய அழகுடன் வளைவான கூரை போன்ற பாறையிலிருந்து அடர்நீல/கரும்பச்சைக் குளத்துள் குதித்தது. தண்ணீர் இந்த வண்ணம் கொண்டிருக்கும் எனப் புகைப்படங்களைப் பார்த்தால் நம்பியிருக்கமாட்டேன். சமீபத்திய கேமராவின் ஒளி வடிகட்டிகளின் மாயம் என்றே தோன்றும். நீலமென முதல் பார்வைக்கும், சொடுக்கித் திரும்பும் மயில் கழுத்தின் நிறமென ஒரு கணமும், ஆழ் பச்சை என மறு கணமும் தோன்றும் நீலம். அருவியை அணுகும் பாதையை கற்படிகளால் சீர்மைப்படுத்தியிருக்கிறார்கள். இன்னும் சில பகுதிகளில் பணி நடைபெறுகிறது.








மறுநாள் ஷிலாங்கின் அருகிலிருக்கும் லயத்லும் (Laitlum Canyons) கணவாய் பார்க்கச் சென்றிருந்தோம். மலைகளின் எல்லை என்று பொருள்படும். மேலே பார்வைத்தளத்திலிருந்து பள்ளத்தாக்கை பார்க்க மட்டுமே நேரமிருந்தது. பார்வையின் எல்லை வரை பல்வேறு வண்ணங்களின் சிதறல். அணுகிச் சென்று பார்க்க பாதை இருக்கிறது. இன்னொரு முறை கீழே செல்லத் திட்டமிட வேண்டும்.






அதன் பின்னர் ஷில்லாங்கிலுள்ள டான் பாஸ்கோ அருங்காட்சியகம் சென்றோம். வடகிழக்கு மாநிலங்களின் வீடுகள், மூங்கில், பிரம்பு கைவினைத் தொழில்கள், ஆடைகள், இசைக்கருவிகள், பழங்குடி ஆயுதங்கள் குறித்த அருங்காட்சியகம், ஏழு தளங்களிலாக பதினாறு கேலரிகளில் உள்ளது. எனில் பெரும்பகுதி கிறித்தவ மிஷனரியின் வளர்ச்சி குறித்தே இருக்கிறது. வடகிழக்கு மாநிலங்கள் ஒவ்வொன்றின் தனித்தன்மைகள், பழங்குடியினர் குறித்த அதிகப்படியான தகவல்கள், நீர்வளம், கணிமவளங்கள், தொல்லியல் குறித்து எல்லாம் இன்னும் செறிவாக இருந்தால் வடகிழக்கு மாநிலங்கள் குறித்த அருங்காட்சியகம் என்ற பெயருக்கு இன்னும் நிறைவளிப்பதாக இருக்கும்.

அடுத்தநாள் காலை கவுஹாத்தி திரும்பியதோடு சுற்றுலாத் திட்டம் நிறைவு. குழுவினர் விமான நிலையம் திரும்பினர். எனது விமானம் இரவு எட்டரை மணிக்குதான் என்பதால் பிரம்மபுத்திரா நதியைக்காணச் சென்றேன். காமாக்யா கோவிலுக்குச் செல்ல முயல முந்தைய நாள் சிவராத்திரி என்பதாலும் வாரயிறுதி நாள் என்பதாலும் கூட்டம் மிக அதிகமாக இருக்கும், மாலை ஆறு மணிக்குள் தரிசிக்க வாய்ப்பில்லை என்றார்கள். எனவே பிரம்மபுத்திராவைப் பார்க்கக் கிளம்பினேன். அந்திநேர படகுப் பயணம் ஒன்றிருந்தது.


படகின் மேல்தளம் முழுமையாக நிரம்பிவிடவே கீழ்த்தளத்துக்குப் பயணச்சீட்டு வாங்கினேன். மேகங்கள் மேலை வானில் நிறைந்திருந்தன. கீழ்தளம் மெல்லிசை நிகழ்வுக்கான ஏற்பாடுகளில் இருந்தது. ஆற்றைப் பார்க்கும்படியான இடமிருக்கிறதா எனக் கேட்டு படகின் முகப்பில் இருந்த இரு நாற்காலிகளில் ஒன்றில் சென்றமர்ந்தேன். இன்னொரு நாற்காலியில் ஓர் இளம்பெண். ஒளிபொருந்திய கண்கள். இயல்பாக இருந்தார், அறிமுகமானோம். மும்பையைச் சேர்ந்தவர், ஐ.நாவில் பணிபுரிபவர், நாகாலாந்தின் கோகிமாவின் நிலைத்த வளர்ச்சிக்கானத் திட்டமிடலில் இருக்கிறார். நாகாலாந்தின் நிலை குறித்துப் பேசிக் கொண்டிருந்தார். அவரது பணி மைய நிலத்திலிருந்து எல்லை நோக்கி நீளும் வளர்ச்சியின் சிறு கரம். அன்றாடத்தின் வசதிகள் குறைவாகவே கிடைக்கும் இது போன்ற இடத்தில் ஒரு தேச முன்னேற்றப் பணியை மிகுந்த உற்சாகத்தோடு எடுத்துப் பணிபுரியும் இளையோரைக் காணுகையில் மனது நம்பிக்கை கொள்கிறது.அந்த மாலையை, இருகரை அறியாது அகன்று விரிந்த நதியின் வசீகரமான கம்பீரத்தை, நீரில் பொன்னுருக்கொண்ட அந்தி வெயிலை, காற்றில் அவ்வப்போது கேட்ட இசையை இன்னும் அழகும் நிறைவும் மிக்கதாக்கியது அந்த சந்திப்பு. மேகங்களோடு நடப்பதற்கும், வண்ணத்துப்பூச்சி இறகு கொண்டு பறப்பதற்கும், முடிவற்ற மழையில் கிடப்பதற்கும், குகை வழிகளில் அலைவதற்கும், பொழிவுகளில் கரைவதற்கும் வடகிழக்கின் வாயில் திறந்தே இருக்கிறது. அடுத்து வரும் வாய்ப்பில் நாகலாந்து செல்ல வேண்டும் என எண்ணிக் கொண்டேன்.

















ஒரு பயணம் மற்றொரு பயணத்திற்கான விதை விதைத்தே நிறைவு கொள்கிறது.

Saturday, June 27, 2020

பாலை நிலப் பயணம் - நூல் அறிமுகம்


எழுத்தாளர் செல்வேந்திரன் எழுதிய "பாலை நிலப் பயணம்" வாசித்து முடித்தேன்.  செல்வேந்திரன், எழுத்தாளர் ஜெயமோகன் மற்றும் நண்பர்களுடன் குஜராத்/ராஜஸ்தான் பயணம் சென்று வந்தது குறித்த பயண நூல். சிறப்பான நடை, செறிவான விவரங்கள், அழகான மொழி. இவர் எழுதிய மற்ற புத்தகங்களும் எனது வாசிப்புப் பட்டியலில் இருந்தாலும், இது பயணம் சார்ந்தது என்பதால் முதலில் வாசித்துவிட்டேன். மேலும் நண்பர்களும் ஜெ.வும் உடன் வர அந்தப் பயணத்தில் கூடவே வருவது போல கற்பனை செய்து கொள்ளவும் நன்றாக இருந்தது.


இன்றைய காலகட்டத்தில் பயணம் என்பதே அதற்கான ஆடை அணிகளை தேர்வு செய்வதும், அவற்றை வாங்குவதும், புகைப்படங்கள் எடுப்பதும், சமூக வலைதளங்களில் பகிர்வதும் என்றாகிவிட்ட நிலையில் இத்தகைய பயண ஆயத்தம் பலரும் அறிந்திராத ஓன்று.
பயண ஆயத்தங்கள் எனப் பெரும்பான்மையினர் செய்யும் களேபரங்களை விட அப்பகுதியைப் பற்றி பல்வேறு தளங்களில் பயணத்துக்கு முன்னர் அறிந்துகொள்வது மிக முக்கியமான ஆயத்தம். அதற்கு காணுயிர்கள், ஓவியம், இசை, நிலப்பரப்பு, தொல்லியல், வரலாறு என நண்பர்கள் பிரித்துப் பொறுப்பெடுத்துக் கொண்டது அருமை. இம்சைக்கும் இடிதாங்கிக்கும் கூட பொறுப்பேற்றுக்கும் நண்பர்கள் பெரிய கொடுப்பினை 😊

நீல்கே, கூர்ஜர-பிரதிகார கட்டடக்கலை, மங்கோலிய நாரைகள், தேசியப் பறவையாகி இருக்க வேண்டிய கானமயில், பாதிரி கிறிஸ்டோப் சாமுவேல் ஜானுடைய பங்களிப்புகள், ரூடாபாய் சரிதம் என அத்தனை ஆர்வமூட்டும் அறிந்திராத செய்திகள்.

சாம் மணற்குன்றுகளில் திடீரென ஆடிய அச்சிறுமியும் அவளது வெறித்த பார்வையும், அந்த நிலக்காட்சி கிளர்த்தும் கடந்த கால ஏக்கங்களுக்கு நிகராகவே மனதை ஏதோ செய்தது. அகண்ட பாலையில் மின்னலும் ஒரு சித்திரமாக மனதில் தங்கிவிட்டது.

பயணம் முழுவதும் உடன் வரும் கவிதை வரிகளும் அழகு.
ரன் உத்சவமும், ராஜஸ்தான்/குஜராத் பயணமும் எனது பயணத்திட்டங்களில் ஒன்று. இப்புத்தகம் தரும் பல தகவல்கள் அதற்கு மிகவும் உதவுவதோடு அப்பயண அனுபவத்தை செறிவாக மாற்றும் என்பது உறுதி. ரான் ஆப் கட்ச் பகுதியும்,
ராணி கி வாவ் விவரிப்பும் புகைப்படங்களும் கனவுகளைக் கிளர்த்துபவை.

இருபுறமும் விரிந்த வெற்றுப் பாலை விரிவெளியில் கானலில் நடுங்கும் நாகம் போல தொடுவான் வரை நீண்டோடும் சாலையில் பயணிப்பது கனவு அனுபவம். சில ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நோக்கி சென்ற பாலை நிலப் பயணம் நினைவில் எழுந்தது. பயணங்களில் நம் மனதில் ஆழமாகத் தங்குபவை இதுபோன்ற நிலக்காட்சிகளும் அவை கிளர்த்திய அகக்காட்சிகளுமே.

இத்தொகுப்பின் சிற்பப் புகைப்படங்களுக்கு இணையாகவே கோல்டன் ராக் மற்றும் காரி நதி பாறைப் படுகைகளின் புகைப்படங்களும் மிக அழகு. //ஒட்டு மொத்தமாக பாறைச் சுருள்களைப் பார்ப்பது காலாதீத மலைப்பாம்பு மெளனமாக நெளிந்து கொடுப்பது போல இருந்தது//- அருமை

நண்பர்களோடு உணவு வேட்டை, திரைப்பாடல்களுக்குத் துறை வகுப்பது, வேறு வரிகள் அமைத்துப் பாடுவது, சிரி-யோடு நண்பர்களின் சிரிப்பாணி எல்லாம் நினைக்கும் போது முகத்தில் புன்னகை உடனே வந்துவிடுகிறது.

தொல்லியலாளர் கே.கே.முகமது பற்றிய உரையாடல், காரில் நிகழ்ந்த
பெரிய கோவில் விவாதம், நண்பர்கள் ஒவ்வொருவரும் ராஜஸ்தான் குறித்து சேகரித்த தகவல்களே இன்னும் ஏழெட்டு கட்டுரைகளாகும் சாத்தியமுள்ளது என நினைக்கிறேன்.

இந்தியாவிலேயே அதிக பக்கங்கள் எழுதிய காந்தியின் மேஜையைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது அதை விஞ்சப் போகும் எழுத்தாளன் எட்டிப் பார்க்கும் காட்சி உச்சம்.

மொத்தத்தில் இது போன்ற பயணங்களில் கலந்து கொள்ள முடியவில்லையே என்ற வயிற்றெரிச்சலையும்(😁), எழுத்தின் வாயிலாக எவ்வளவு சாத்தியமோ அவ்வளவு அணுகி அறியும் வாய்ப்பைத் தந்ததே என்ற நிறைவும் ஒரு சேர மனதில் நிறைந்திருக்கிறது.

கையில் எடுத்ததும் முழுவதும் வாசிக்கத் தூண்டும் சுவையான பயண நூல்.

பாலை நிலப் பயணம் வாங்க/வாசிக்க: https://amzn.in/c3KZoIv

இவரது ஏனைய பயண எழுத்துக்களுக்காகக் காத்திருக்கிறேன்.

Friday, June 12, 2020

வெண்மலர் பறவை - அலகில் அலகு கவிதைத் தொகுப்பு குறித்து

இன்று (16-06-2020) jeyamohan.in தளத்தில் வெளிவந்தது

https://m.jeyamohan.in/132917/#.XuhXq1PmidM

இந்த ஆண்டின் விஷ்ணுபுரம் - குமரகுருபரன் விருது பெற்ற கவிஞர் வேணு வேட்ராயனின் அலகில் அலகு கவிதைத் தொகுப்பின் வாசிப்பனுபவம்.

வாயிலில் நின்று தயக்கத்துடன் கதவை ஒருக்களித்துத் திறந்து தலைநீட்டும் குழந்தையின் ஒற்றைவிழிப்பார்வை என்றே கவிதை வாசிப்பைக் குறித்து எழுதும் இம்முயற்சியை உணர்கிறேன்.



இத்தொகுதியை வாசித்ததும் மனதில் நிறைவது தூயதொரு வெண்மை.
வெண்மலர்களும் வெண்பறவைகளும் வெண்மேகங்களுமான ஒரு மனவெளி. இறகுகள் இதழ்களாக மயங்கி பறவையும் பூவும் ஒன்றென்றாகும் வெளி. "முடிவிலி இழையில் ஆடிடும் நனவிலி", "இலை உதிரும் தருணம்
நிகழும் ஓர் நடனம். மரணம்", "சிறகதிரும் பால்வெளி"
போன்ற சில வரிகள் வாசித்தது முதல் உடனிருக்கின்றன.

இத்தொகுப்பின் சிறந்த கவிதைகள் என நான் விரும்பியவை அனைத்துமே இருவகைகளுள் வரும். முதல் வகைக் கவிதைகள் தேர்ந்த புகைப்படக் கலைஞனென நுண்தருணங்களை கவிதை மொழியில் காட்சிப்படுத்துபவை. இரண்டாவது வகை மனதை உற்று நோக்கி அகநடனங்களை சொல்பவை.

முதல் வகைமையில் சில கவிதைகள் வரிசையாக அடுக்கப்படும் காட்சிகள். எனில் அவற்றை செறிவு கொள்ளச் செய்வது மௌனசாட்சியாய் இருக்கும் ஒன்றின் தன்மை. இக்கவிதையில் அது இரவு:

//.
தனிமையில் வளரும் நள்ளிரவு நிலா/ உறக்கத்தில் புரளும் கடல் அலைகள்./அலை அலையாய் மோதி செல்லும் மழைக்காற்று. /
கருவறையில் உதைத்து விளையாடும் செல்ல குழந்தைகள்./ மின்னல் இடும் கணப்பொழுது கோலங்கள். /
மௌனமாய் விழித்திருக்கும் இரவு...//

வானைக் கனவு கண்டு நீரில் துள்ளும் மீன், மரித்ததும் பறவையென்றாகும் கணத்தைப் பாடிய தேவதேவனின் கவிதை வரிசையில் இதில் ஒரு கவிதை

//விரைந்து நெருங்கும் கழுகின் கண்களில்/துள்ளி மறையும் புள்ளிமான்கள் / தரை தொடும் முரட்டுக் கால்களில் சிக்கித் துடிக்கும் முயல்குட்டி/உயரே உயரே பறக்கும் மருண்ட விழிகளில் சிக்குண்ட ஒரு சொல்/ அறியா அர்த்தங்கள் உலவும் வெளியில் சிறகடித்துச் செல்கிறது//

இன்னொரு கவிதை:
"சிறு சிறு குட்டைகளில்
தேங்கி நிற்கிறது
முன்னொரு காலத்தின் பெருநதி.
அவை ஒவ்வொன்றிலும் உதித்தெழுகிறது
அதிகாலைச் சூரியன்"

சென்ற கோடையின் துவக்கத்தில் சோழநாட்டு கோவில்களைக் காணவென்று பயணம் ஒன்று சென்றிருந்தேன். அனுதினமும் எழுந்தது முதல் உறங்குவது வரை பல கோவில்கள்.  பெரும்பாலும் ஆளொழிந்து கிடந்த கோவில்களில் சிற்பக் கலையின் உன்னதங்களும், பாடல் பெற்ற தலங்களாக விளங்கிய அங்கு எழுந்த தமிழும் இசையுமென
வேறொரு காலத்தில் அவ்வாலயங்கள் அமைந்திருக்கின்றன. திருமழபாடியில் கொள்ளிடக் கரையில் பல்லாண்டுகள் கண்ட ஆலமரங்களின் அடியில் நின்று
பார்த்த போது விரிந்த மணற்பரப்பில் ஆங்காங்கே தேங்கிய நதியில் அந்தி வெயில் சுடர்ந்து கொண்டிருந்தது. அந்நதி ஏதோ விதத்தில் அந்த காலமற்ற வெளியை என்றுமென நிற்கும் மகத்தான கலைமரபை பிரதிபலிப்பதாகத் தோன்றியது. அதைக் கவிதைக் கணமாக ஆக்கித் தந்தது இக்கவிதை. அவை ஒவ்வொன்றிலும் உதித்தெழுகிறது சூரியன் எனும் காட்சி மாற்றங்களுக்கிடையே மாறாதிருக்கும் பெருநெறி என்றும் தோன்றியது.

கவிஞர் வேணு வேட்ராயன்


இரண்டாவது வகைமையில் அமைந்த கவிதைகளில் அவரது ஆன்மீகமான தேடலையும் அகப்பயணத்தையும் சொல்லும் மொழி அமைந்திருக்கிறது. ஆழ்ந்திறங்கும் இரவின் அமைதியில் வெடித்துச் சிதறும் எரிமீன்களென சில வரிகள் ஆங்காங்கே தெரிக்கின்றன. புலன்களின் எல்லைகளைக் கடந்த உள்முக அனுபவம் ஒன்றைக் கடத்தும் கவிதைகளில் ஒன்று இது.

//திரிசடை அதிர் நிலம் உகிர் தோய் உதிரம்
பற்றி நாளமெல்லாம் நீரோடும் நெருப்பு
படபடபட சடசடசட
நடனமிடும் குளம்படிகள் சுழன்றடிக்கும் காற்றில் புரளும் செந்தீயின் பிடரி
சுடரும் மலரிதழ் மேல் அனந்தசயனம்
சாந்தம் சாந்தம் சாந்தம்//

ஒடுங்குதல் நிகழ்கிறது எனத் தொடங்கும் மற்றொரு கவிதையிலும் மனது அடங்கி காலாதீதமான ஒன்று நிகழும் கணம் நிகழ்ந்திருக்கிறது. களிறு என்ற படிமம் வரும் கவிதைகளில் சிறப்பான ஒன்று இது:

//நாட்கணக்கில் வனத்தில் திமிறிய களிறு / வெண்இதழ் மலரை கொய்து மெல்ல நீல வெளியில் வீசுகிறது /அந்தரவெளியில் தணித்து நீந்தும் வெண்மலர்//

மனதின் போக்கை கவனித்து நிற்கும் கவிதையென இன்னொன்று:

//ஆயிரமாயிரம்
இறகுகளின் பறவை
ஒரு கணத்தில்
ஒரு திசையில்
நகர்கிறது.
காலமற்ற வெளியுமற்ற
நிலையில் அது நிலைக்கிறது.//

"ஒளிந்திருக்கும் நினைவுகளை ரகசியமாய் மீளவாசிக்கும் மனம்" என்று துவங்கும் கவிதையில் // இரைவேண்டி கடும் வெயில்வெளியில் தவம் புரியும் ஒரு அரவம்// என்ற படிமமே முதல் வரியைச் சொல்லப் போதுமென்றும் படுகிறது.

இவ்விரண்டு வகைகளும் இணைந்து வரும் கவிதைகளும் இத்தொகுதியில் உண்டு.  நதிநீரில் முகம் காணும் மலர்கள், நீரில் காண்பது வேர்வழியே மலரென்றாகி சுடரும் நீரையே என்பதும் இருவகைமைகளையும் இணைக்கும் ஒரு கவிதை.

//நதிநீரில் முகம் காணும் கரைமலர்கள்/அருஞ்சுவை பருகும் வேரிதழ்கள்/மறைந்து மேலேறும் ஆழ்நதியின் நீர்/செந்தளிர்களில் ஒளிரும் உயிரின் சுடர்/


அறிந்தவற்றின் வாயிலாக அறியாதவற்றைத் தொட விழையும் மொழி யத்தனமே கவிதை எனும் வகையில், 'அளக்கமுடியாமைகளின் அலகு' என்றே 'அலகில் அலகு' தலைப்பு பொருள் படுகிறது. இதன் தலைப்பு வரி வரும் கவிதையில் வருவதோ இதேபோல காட்சிச் சித்தரிப்பும் அகப்பயணமும் இணையும் மற்றுமொரு புள்ளி. தன் இருப்பை அருந்திச் செல்ல முயலும் அந்தரப் பறவையின் காட்சி, அந்த நுண்தருணத்தை நலுங்காமல் தொட்டமையாலேயே இது கவிதையாகி வருகிறது.

"சரேலென பறந்து
சரிந்து இறங்கி
நிலைத்த நீரின்மேல் நின்றது
ஒரு நிறமற்ற பறவை.
அலகில் அலகு பொருத்தி அலைகளிலாடும் தன்னை
அது
அருந்திவிட்டுச் சென்றது"

ஓயாத மனதை உற்றுநோக்கி தியானத்தில் தன்னுணர்வை கரைத்துவிடும் முயற்சியின் கணம் என்று காட்சியும் கவிதையும் விரிந்து கொண்டே செல்கிறது.

விழிப்பு மனம் நனவிலியில் பற்றியேறும் கணங்களே கவிதைத் தருணங்கள் என்று சொல்கிறது இக்கவிதைத் தொகுதி.

Thursday, June 11, 2020

அன்னையின் வருகை

பல நூறு வாகனங்களின் இரைச்சலில் இருந்தும், பிரித்தறிய இயலாத முகங்களின் அலைகளிலிருந்தும் சற்றே வெளியேறியதும், உடலின் ரத்தநாளங்களில் ஒன்றில் புகுந்தது போல காசியின் கங்கைத்துறையொட்டிய பல நூறு சாலைகளில் ஒன்றில் நுழைந்தோம். திசைகளென ஏதுமின்றி குறுக்கும் நெடுக்குமாக ஊடுபாவிக் கிடக்கின்றன. முன் செல்லும் வழிகாட்டியைத் தவறவிட்டுவிடாதீர்கள் என்ற தொடர் வலியுறுத்தல் ஒரு மந்திரம் போல மனதில் இருந்தது. கற்கள் பாவிய தெருக்களில் மிக இயல்பாக விரைகிறது வழிகாட்டியென வந்த அந்த கருநிறத்து இளைஞனின் பாதங்கள். எண்ணற்ற பாதங்கள் பதிந்த மண்ணில் ஒற்றைக் காலடித் தடம் மட்டுமே கண்ணாகப் பின்பற்றி நடந்து சென்ற நிமிடங்களில் அத்தனை இரைச்சலுக்கிடையே மனது குவிந்திருந்தது. பல தெருக்கள், இரு புறமும் உடல் சுவரில் உரசுமளவு குறுகியவை, ஆங்காங்கே சிறிய திருப்பங்களில் ஒற்றை அகல்விளக்கில் சுடரேற்று ஒளிரும் தெய்வங்கள். ஒரு குறுகிய தெருவின் திருப்பத்தில் விரிந்து கிடக்கும் கங்கையின் முதல் காட்சி கிடைத்தது.

.
அதுவரை நடந்து வந்த குறுகிய பாதைகள் எதற்கும் தொடர்பில்லாதவளாக, அவ்வளவு இரைச்சலும் சென்று தொடாதவளாக, தேவர்களின் தீபாவளிக்கென திரண்டிருந்த லட்சக்கணக்கானவர்களின் திரள் சூழ்ந்திருக்க தனித்தவளாக, கங்கையை வாழ்வதாராமாகக் கொண்டவருக்கும், அதன் கரையில் வாழ்வை முடிக்கக் காத்திருப்பவருக்கும், முடித்துவிட்டவருக்குமிடையே எந்த வேறுபாடுமற்று அனைத்தையும் கடந்துவிட்டவளாக சென்று கொண்டே இருக்கிறாள் கங்கை. படகில் ஏறிக்கொள்ள, காசியின் பிறை வடிவ கங்கைத் துறை வரிசைகளின் மையத்திலிருந்து துவங்கியது பயணம். மாலைக்கதிரின் ஒளி நீரில் மிச்சமிருக்கையிலேயே மறுபுறம் எழுந்தது முழுமைக்கு சற்று முந்திய நிலவு. காசியை எப்போதைக்குமென சூழ்ந்திருக்கும் ஒரு புகைப்படலம் ஆற்றின் மீது ஒரு சன்னமான திரையை விரித்திருக்க, படகுகள் அனைத்தும் அரைக்கண்கள் மூடிய காட்சி போல வேறொரு உலகில் பயணித்துக் கொண்டிருந்தன. சுற்றிலும் புகைப்பட யத்தனங்கள், மெல்ல முகம் மறைந்து கொண்டிருந்தது மாலை. நீரோட்டம் வேகமாகவே இருந்தது. மணிகர்ணிகா காட்டில் அணையா நெருப்பு வானோக்கி கைநீட்டிக் கொண்டிருந்தது.

காசியிலிருந்த நான்கு நாட்களும் பலமுறை மீண்டும் மீண்டும் படகில்
கங்கையின் மீது பயணம். எங்கெங்கோ தொடங்கி எங்கோ கரையிறங்கிவிடும் பயணங்கள். அதிகாலை இருளில், எங்கோ வந்துவிட்ட கதிரை உணர்ந்து வானம் முதல் ஒளி சூடும் தருணத்தில், ஒளி புகையை மென்மையாக விலக்கி ஊடுருவும் பின்காலையில், காற்று இளஞ்சூடேற்று கங்கை நீராடும் நண்பகலில், ஆயிரம் தீபங்கள் ஏற்று ஒளிரும் அந்தி மயக்கத்தில், நிலவின் அருகாமை வரை பாதையிட்டுக் காத்திருந்த நீள்இரவின் தொடக்கத்தில் என மீண்டும் மீண்டும் படகுப்பயணங்கள்.


காசியில் அத்தனை விதமான முகங்களையும் பார்க்க முடிந்தது அத்தனை விதமான மொழிகளும் காதில் விழுந்தது, இந்தியாவின் அனைத்து திசையும் சந்திக்கும் ஒற்றைப் புள்ளி. அல்லது இங்கிருந்து விரிந்த ஓன்றே எங்கும் பரவியிருக்கிறது.

உறங்கும் குழந்தையைத் தொட்டு எழுப்பும் அன்னையின் விரலென கங்கையின் நீரோட்டத்தில் கதிரின் முதல் ஒளி தொடும் நேரம் கங்கையில் படகில் மிதந்தபடி கண்டதே காசியென மனதில் இருக்கிறது. கங்கையும் காசியை இப்படித்தான் காண்கிறாள். காலம்காலமாக. கரையில் அணையாது எரியும் சிதைகளையும், மரணத்துக்குக் காத்திருக்கும் மனிதர்களையும், விண்ணேற்றம் செய்யும் விண்ணப்பங்களையும், வேண்டுதல்களைச் சுமந்த தீபங்களையும், ஆயிரம் பல்லாயிரம் சாதுக்களையும், அந்தியின் விளக்குளையும், ஆயிரமாயிரம் நம்பிக்கைகளையும் தன்னில் பிரதிபலித்தபடி, எனில் வெறும் சாட்சியாக நில்லாது ஓடிக் கொண்டே இருக்கிறாள்.

-----------

இசை: இளையராஜா
படம்: நான் கடவுள்
கவிஞர்: பரத் ஆச்சார்யா
பாடியவர்: குணால் கஞ்சாவாலா
ராகம்: கல்யாணி (ஹிந்துஸ்தானி - யமன்) 

Maa Ganga Kashi Pathari
Maa Ganga Kashi Pathari
Gyan Jagaye Moksh Dilaye
Kalukalu Kalukalu Gathi Jaye

Hare Hare Hare Hare Gange Maa Humko Paavan Kardhe Ma

Paavan Nagiri Kashi Hai
Shiv mahima Avinashi Hai
Mayavi Sansar Hai
Kashi Moksh ka Dware Hai
Jai Jai Ganga Maiya Ki
Jai Jai Kashi Nagiri Ki

Harihar yahi par
Aanu base
Jiniki Kripa Se
Jiniki Dhaya Se
Kashi Ajhar Hai
Kashi Amar Hai
Rishi Muni Surnar
Dhyan Karath Hai


‐------
பல நூறு முறை இப்பாடலையும் இதே படத்தின் ஓம் சிவோஹமும் கேட்டிருக்கிறேன். இவற்றுக்கு தமிழாக்கம் தேவையில்லை என்றே தோன்றுகிறது. எனினும் முயன்றிருக்கிறேன்.

-----------
அன்னை கங்கை காசி வருகிறாள்
ஞானம் அருள்கிறாள்
மோட்சம் தருகிறாள்
கலகலவென்று இசைத்தே
கடந்து செல்கிறாள்
வாழிய வாழிய கங்கேமா
பாவத்தை நீக்கிடு கங்கேமா

புண்ணிய நகரம் காசிதான்
சிவனருளுக்கழிவில்லைதான்
மாயையே இந்த வாழ்வுதான்
காசி மோட்சத்தின் வாசல்தான்
ஜெய ஜெய கங்கை அன்னைக்கு
ஜெய ஜெய காசி நகருக்கு

ஹரியும் ஹரனும்
திகழும் தலமிது
அவரது அருளால்
அவரது தயையால்
காசி புனிதமாம்
காசி தெய்வீகமாம்
ரிஷி முனி சுரர் நரர்
தவம் செய்யும் தலமாம்


பல படங்களில் காசியைக் கண்டிருந்தாலும் 'நான் கடவுள்' படம் முதல் முறை பார்த்து படத்தின் முகப்புப் பாடலாக இதைப் பார்த்தபோது ஏற்பட்ட அதிர்வை சொல்லென்றாக்க விழையவில்லை. சற்றே சன்னமான குரலில் ஒலிக்கும் வடஇந்தியரின் குரல். ஒரு பஜனை போல குழுவினர் பின்தொடர கங்கையும் காசியுமாக காட்சி தொடங்கும். காசி அப்படியேதான் இருக்கிறது. கங்கையும் காலமற்ற வெளியில் ஓடிக்கொண்டே இருக்கிறாள். அலகிலா பேரிருப்பை மண்ணில் உணர, கங்கையை அறிவது ஒரு வழி. வளை அறிய அவளில் கரைவதொன்றே வழி.  அதுவரை அவரவர்க்கு வாய்த்த சிறு துறையில், அவரவர் கையளவில் அள்ள முடிந்ததே அவரவர்க்கான கங்கை.அன்னையின் ஒரு துளி அமுதமும் அன்னையை உணரப் போதும்.

பாடல்:
https://youtu.be/03vb9dkBAB4

Wednesday, June 10, 2020

ஆயிரம் மலர்களின் எடை


வானொலி மட்டுமே திரைப்படங்களோடு வீடுகளுக்குத் தொடர்பாக இருந்த காலத்திலேயே மிகப் புகழ்பெற்ற பாடல்களில் ஒன்று. பின்னர் 90களில் சன்டிவி தொடங்கி பல்வேறு அலைவரிசைகள் பெருகி அனைத்திலும் 24 மணிநேரமும் திகட்டத் திகட்ட திரைநிகழ்ச்சிகள் வந்த பிறகும் இப்பாடல் வானொலியோடு 0மட்டுமே மனதில் பதிந்திருக்கிறது. இப்பாடலின் காட்சியை பார்த்தது வெகு நாட்களுக்குப் பிறகே. அதுவரை மனது வரைந்த கற்பனையிலேயே பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. மிகவும் குழந்தைப்பருவத்தில் இப்பாடலை வெளிச்சம் நிறைந்த ஒரு பொன்னொளிர் காலைப் பொழுதில் கேட்ட நினைவு. அந்த பொன்பொழுதாகவே இப்பாடல் நினைவிலிருக்கிறது.


Springtime - Art by Claude Monet, French painter


கண்ணதாசன் இதற்குப் பாடல் எழுதிய வேகத்தை இளையராஜா விவரிக்கும் ஒரு காணொளியை சமீபத்தில் பார்த்தேன். இசை கேட்ட நிமிடம் தெறித்து உதிர்ந்த வரிகள்.

'எழுதிச் செல்லும் விதியின் கை' என்ற உமர்கய்யாம் மொழிபெயர்ப்பில் கவிமணி தேசிக விநாயகம் எழுதிய சொற்பிரயோகம் ஒரு திரையிசைப்பாடலில் வந்தமரச் செய்கிறார் கண்ணதாசன்.

படம்: நிறம் மாறாத பூக்கள்
இசை: இளையராஜா
பாடல்: கண்ணதாசன்
பாடியவர்கள்: ஜென்சி, எஸ்.பி.ஷைலஜா, மலேசியா வாசுதேவன்
———————

ஆயிரம் மலர்களே
மலருங்கள் அமுத கீதம் பாடுங்கள் ஆடுங்கள்
காதல் தேவன் காவியம்
நீங்களோ நாங்களோ
நெருங்கி வந்து சொல்லுங்கள்
சொல்லுங்கள்
ஆயிரம் மலர்களே மலருங்கள்

வானிலே வெண்ணிலா
தேய்ந்து தேய்ந்து வளரலாம்
மனதிலுள்ள கவிதை கோடு மாறுமோ ராகங்கள் நூறு
பாவங்கள் நூறு
என் பாட்டும் உன் பாட்டும் ஒன்றல்லவோ
(ஆயிரம் மலர்களே)

கோடையில் மழை வரும்
வசந்தகாலம் மாறலாம்
எழுதிச் செல்லும்
விதியின் கைகள் மாறுமோ
காலதேவன் சொல்லும்
பூர்வ ஜென்ம பந்தம்
நீ யாரோ நான் யாரோ
யார் சேர்த்ததோ
(ஆயிரம் மலர்களே)

பூமியில் மேகங்கள்
ஓடியாடும் யோகமே
மலையின் மீது ரதி உலாவும் நேரமே சாயாத குன்றும்
காணாத நெஞ்சும்
தாலாட்டு பாடாமல்
தாயாகுமோ
(ஆயிரம் மலர்களே)

ஆயிரம் மலர்கள் ஒருமித்து மலர்வதைப் பார்ப்பது எப்படி இருக்கும். சிறு குழந்தைகள் தன்னிடமிருக்கும் பொம்மைகளின் எண்ணிக்கையை மிகையாக்கிச் சொல்ல தான் அறிந்த பெரிய எண்ணைக் கொண்டு சொல்வது வழக்கம். என்கிட்ட அஞ்சு கார் பொம்மை இருக்கே என்பது போல.. ஐந்து அக்குழந்தைக்கு கோடிகள் போல ஒரு பெரிய எண். அப்படித்தான் இந்த ஆயிரம். ஆயிரம் என்பது முடிவிலி எனப் பெருகும் எண்ணிக்கையின் ஒரு அடையாளம் மாத்திரமே. கவிமனம் புவியெங்கும் மலர் விரிக்க அந்த ஆயிரம் என்ற எண் போதும்.




சென்ற வருடம் நியூஸிலாந்து சென்ற போது தொடர்ந்து பதினைந்து நாட்கள் ஆயிரமாயிரம் பொன்மலர் பூத்துக் குலுங்கிய வழிகளினூடே பயணம் செய்தபோது ஒரு கனவு வந்தது. ஒரு நீண்ட மிகப்பெரிய மலைச்சரிவு, மலை முழுவதும் பள்ளத்தாக்கு முழுவதும் மஞ்சள் நிறப் பூக்கள். இலைகளின் பச்சை கூடக் கண்ணுக்குப் படாத பொன்பரப்பு. அச்சரிவெங்கும் பொன்பூசிய ஒளியின் மீது ஆங்காங்கே மேகத்தின் நிழல்கள் ஓவியம் வரைந்து கொண்டிருந்தன. மேகங்கள் போல மிதந்து அக்காட்சியைக் கண்ட அக்கனவு வெகு துல்லியமாக மனதில் இருக்கிறது. ஆயிரம் மலர் மலரக் கண்ட தருணம்.

பாடல் தொடக்கத்தில் ஜென்சியின் முதல் ஹம்மிங்கிலேயே ஒரு பறவை வானவெளியில் சஞ்சரித்துவிட்டு பறந்திறங்கும் உணர்வு. தொடக்க இசையில் பொன்மலர்களால் வண்ணம் கொண்ட ஒரு மலைச்சரிவு கண்முன் வருகிறது. பழைய உணர்வுகளை மீட்டெடுக்கும் ஒரு மலரும் நினைவுகளுக்கான இசை. முதல் சரணத்துக்கு முந்தைய இசையில் வரும் புல்லாங்குழலில் மனதை ஏதேதோ செய்துவிடுகிறார் ராஜா. 'வானிலே வெண்ணிலா' என ஜென்சி கொஞ்சுவது போல மனப்பறவையை மெல்ல அழைத்துச் செல்கிறார். இன்னுமா இயல்பாக இருக்கிறாய் என்பது போல இரண்டாவது சரணத்துக்கு முன் வரும் வயலின் இசை மனதைக் கரைக்கத் தொடங்குகிறது. காற்றில் ஏற்கனவே உதிர்ந்த மலரொன்று வழியில் கிளையொன்று ஏந்திக் கொள்ள தொடுக்கி நிற்கிறது.
'வசந்தகாலம் மாறலாம், எழுதிச் செல்லும் விதியின் கைகள் மாறுமோ'வில் கீழிறங்கிய பறவை கிளையில் வந்தமர அந்த மலர் மண் நோக்கி உதிர்கிறது.
ஒருதுளிக் கண்ணீரை, ஒரு விசும்பலை, ஒரு பெருமூச்சை 'நீ யாரோ நான் யாரோ யார் சேர்த்ததோ'வில் யார் சேர்த்தது கவியா இசையா!

இறுதிச் சரணத்துக்கு முன்பாக வரும் குழல் இசையில் வீழ்ந்து கிடக்கும் மலரை மெல்ல வருடிகிறது காற்று. மலேசியா வாசுதேவன் "பூமியில் மேகங்கள்" என்று தொடங்க மலரை அலகிலேந்திக் கொண்டு மீண்டும் விண்ணேகுகிறது பறவை. மலரென மலர்ந்தது மண்ணும் விண்ணும் காற்றும் நீரும் சுடரும் இயைந்த ஒன்றல்லவா. அதையே இசையாக்கியிருக்கிறார் இளையராஜா. என்றோ மலர்ந்த ஒன்று, அன்றலர்ந்தது போலிருப்பதன் ரகசியம். என் பாட்டும் உன் பாட்டும் ஒன்றாகும் ரகசியம் அதுவேதான்.

"மலையின் மீது ரதி உலாவும் நேரமே" என்ற வரியில் மலர்நிறை மலைச்சரிவு பறவையின் பார்வையில் விரிகிறது, ஆயிரம் மலர்கள் மலர்ந்து நிற்கும் அம்மலர்வெளியின் நினைவாக உதிர்ந்த ஒற்றைப் பூவோடு நம் கண்ணிலிருந்து மறைகிறது அப்பறவை.

https://youtu.be/5VjTqg2JaZM

Tuesday, June 9, 2020

ஏகா (தனியே)




இப்பாடலை முதன் முறையாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் போஸ் (Bose - the forgotten hero) இந்தித் திரைப்படத்தில் கேட்டேன். வங்காள மொழியில் வரும் முதல் இரு வரிகள் மட்டும் ரவீந்திரநாத் தாகூர் எழுதியவை என்றறிந்து முழுப் பாடலைத் தேடிய போது கிஷோர் குமார் பாடிய இப்பாடல் கிடைத்தது. இது ஹேமந்த் முகோபாத்யாய் இசையில் வெளியான பாடல்.

https://youtu.be/Pmzvr3aZXQc

வங்காள மொழியின் இசைநயம், நதியின் இசைவிலே பிறந்ததென்று தோன்றுவது. நதியின் தளும்பல்கள் பேசிக் கொள்ளும் மொழி, அதில் அலைப்புறும் படகுகள் பேசிக் கொள்ளும் மொழி. அந்த நீரின் அலைவு இப்பாடலின் இசையில் ஒலிக்கிறது.

பின்னர் வித்யா பாலன் நடித்த கஹானி படத்தில் அமிதாப்பச்சனின் ஆழ்ந்த குரலில் இந்தப் பாடலைக் கேட்ட போது இன்னும் மனதுக்கு அணுக்கமானது இப்பாடல்.

Jodi tor dak shune keu na ashe tobe Ekla cholo re,
Tobe Ekla cholo, Ekla cholo, Ekla cholo, Ekla cholo re

Jodi keu kotha na koe, ore ore o obhaga,keu kothana koi
Jodi shobai thake mukh phiraee shobai kore bhoe,
Tobe poran khule
O tui mukh phute tor moner kotha Ekla bolo re.

Jodi shobai phire jae, ore ore o obhaga,shobai phire jai
Jodi gohon pothe jabar kale keu phire na chae,
jodi gohon pothe jabar kale keu phire naa chaai—
Tobe pother kata
O tui roktomakha chorontole ekla dolo re

Jodi alo na dhore, ore ore o obhaga,
Jodi jhor-badole adhar rate duar dee ghore -
Tobe bojranole
Apon buker pajor jalie nie ekla jolo re.
Jodi tor dak shune keu na ashe tobe ekla cholo re


உனது அழைப்பை யாரும் ஏற்கவில்லை எனினும்
தனியே நடை போடு!!
தனியே நட! முன்னேறு! சென்று கொண்டே இரு!!

உன்னோடு பேச யாரும் துணியவில்லை எனினும்,
வாய்மூடி அனைவரும் முகம்திருப்பி கொண்டாலும்,
நீ கைவிடப்பட்டவன் அல்ல!!
தயக்கமின்றி திறந்தமனதோடு
உனது சொற்களை உரக்கப் பேசு!!

உனைவிட்டு அனைவரும் அகன்று சென்ற போதிலும்,
நீ செல்லும் அறியமுடியாத பாதையை பின்தொடர யாருமில்லையெனினும் ,
நீ கைவிடப்பட்டவன் அல்ல!!
பாதையின் முட்கள் ஏறி சிவந்த பாதங்களோடேனும்
தனியாக நடைபோடு!!

உன் பாதையின் விளக்கு அணைந்து போயினும்,
காரிருள் இடிபுயலை உன் வாசலுக்கு அழைத்து வந்தாலும்,
நீ கைவிடப்பட்டவன் அல்ல!!
மின்னல் உன்னில் ஒளியேற்ற,. நீயே பாதையின் ஒளியாக
தனியாக நடைபோடு!!
---------
வார்த்தைக்கு வார்த்தை இதை மொழிபெயர்க்கவில்லை. உதாரணமாக 'ஓ அபோகா' என்ற விளி அபாக்கியவானே, துரதிருஷ்டசாலியே என்று நேரடியாக பொருள் கொடுக்கிறார்கள், எனில் பாடலின் தொனி குறிப்பிடுவது 'கைவிடப்பட்டவன் அல்ல நீ' என்றே என்பதால் இவ்விதம் எழுதியிருக்கிறேன்.

"உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை " என்ற பாரதியின் வரிகளுக்கிணையான ஒரு பாடல்.


இப்பாடலை 1906'ல் பண்டார் இதழில் ஏகா என்ற தலைப்பில் தாகூர் எழுதியிருக்கிறார். காந்திக்கு மிகவும் பிடித்த பாடல் என்று வாசித்திருக்கிறேன். எனக்கும்தான்.

அவரது அகக்குரலென்றே ஒலிக்கிறது இதன் வரிகள். முதல் வழி உருவாகும் பாதை, முதல் காலடிகள் செல்லும் பாதை என்றும் முட்கள் நிறைந்ததே, தனிமை மட்டுமே துணை வருவது. எனில் தொடர்ந்து நடந்துவிட பாதை உருவாகி வரும். "பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும், பார்த்து நடந்தால் பயணம் தொடரும், பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும்"

மற்ற பாடல்கள்:
அமிதாப் பச்சன் குரலில், விஷால் சேகர் இசையில் கஹானி திரைப்படப் பாடல்
https://youtu.be/-d9QOzkxMKU

சோனு நிகாம் குரலில், ஏ.ஆர்.ரஹ்மான் குரலில் சுபாஷ் சந்திர போஸ் படப்பாடல் (இரு வரிகள்)
https://youtu.be/xO-xmHRd6cc