Tuesday, February 23, 2016

சற்குரு - தாத்தா - 24

மலேயா: போர் ஓயும் வழியாகத் தெரியவில்லை. இனி இப்படித்தான், கொத்தடிமைகளாக வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டியதுதான் என்பது போன்ற பேச்சுகள் தொடங்கின. உலகெங்கும் கோலோச்சும் ஆங்கிலேயனையே இரவோடு இரவாக அஞ்சி ஓடச் செய்து விட்டது ஜப்பான். சிங்கப்பூர் ஒரே நாளில் விழுந்துவிட்டது, எதிர்ப்போரையெல்லாம் கடற்கரையில் நிற்க வைத்து தலையை வெட்டியும் கைகளை பின்னுக்குக் கட்டி சுட்டுக் கடலில் தள்ளியும் கொன்று குவிக்கிறார்கள். சிறிது திடகாத்திரமாய் இருக்கும் பொதுமக்களையெல்லாம் பிடித்து சியாம் மரண ரயில் பாதை கட்டுமானத்துக்கு அனுப்பிவிடுகிறார்கள். கொலையினும் கொடுமையாய் நரகினும் கொடூரமாய் வாழ்க்கை மாறி வருகிறது. மானுடனுக்குள் ஒளிந்திருக்கும் குரூரங்களை அள்ளி இரைத்தது போர்.
இவ்வாறெல்லாம் தினந்தோறும் வரும் செய்திகள் பீதியை உண்டு பண்ணத் தொடங்கியது.  

[அந்த சமயத்தில் ஜப்பானியர்கள் நிகழ்த்திய போர்க் கொடூரங்கள் கணக்கற்றது. அகப்பட்ட பெண்களை எல்லாம் வயது வித்தியாசமின்றி சிறைப்பிடித்து பாலியல் அடிமைகளாய் 'Comfort homes' என்ற பெயரில் சிதைத்திருக்கிறார்கள். அதனால் இன்றும் அது குறித்த கசந்த நினைவுகள் இங்கு கிழக்காசிய நாடுகளில் அதிகம். இது குறித்த History channelல் ஒளிபரப்பப்பட்ட காணொளிகளுக்கு இங்கு பார்க்கவும் -
நேதாஜி ஜப்பானியர்கள் உதவியுடன் படை அமைத்ததால் சிங்கப்பூர்/மலேசியாவில் INA மற்றும் சுபாஷ் குறித்த எதிர்மறை உணர்வுகளும் நிறைய இருக்கின்றன. ஹிட்லர், முசோலினி மற்றும் ஜப்பானியரோடு கொண்ட போர் படைகளுக்கான கூட்டு என்பது, அவரவரது சொந்த அரசியல் நிலைப்பாடுகளுக்கு அப்பாற்பட்டது என்பதும், தனிப்பட்ட முறையில் ஜப்பானது போர் முறைகளிலும், நிகழ்ந்த போர்க் கொடுமைகளை அவர் எதிர்த்ததும் பெரிய அளவில் தெளிவு செய்யப்படவில்லை. ]

குண்டடி பட்டு வீழ்வதாயினும் மரணம் ஒரு முறைதான். இறப்பினும் கொடிய வாழ்வுக்கு அஞ்சியே ஒவ்வொரு வினாடியும் இருத்தல் என்பது ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதமாக மாற்றத் தொடங்கியது.
இவ்விதமாய் நரகத்து வாழ்வில் உழலும் போது, கோலாலம்பூர் கடையிலிருந்து வந்த நண்பர் ஒருவர் பலமாதம் முன்பு எழுதப்பட்டு உலகெல்லாம் சுற்றி வந்து சேர்ந்த  உயிர் காக்கும் மருந்தோடு வந்து சேர்ந்தார். ஆம், கடிதம்!! அருமைத் தந்தையிடமிருந்து உறவுகளின் ஸ்பரிசத்தோடு கவலைகளோடு பிரார்த்தனைகளை சுமந்த கடிதம்.ஜப்பானியர்களின் கண்காணிப்பால் உறை பிரிந்து தான் வந்து சேர்ந்திருந்தது. எனினும் கடிதத்தை வெளியே எடுப்பதற்குள் மெய்தான் அரும்பி, விதிர்விதிர்த்து, கண்ணீர்த்திரைக்குப் பின் மங்கலாகத் தெரிந்தது ஐயாவிடமிருந்து வந்த கடிதம்.

உயிர் வாழ்வதன் சாத்தியக்கூறுகள் குறைவான நிலையில் தெய்வ சாந்நித்தியமாய் வந்த கடிதம். அதுவே காலடிகளை முன்னோக்கி எடுத்து வைக்க உதவும் ஊன்றுகோலாகியது. இதற்கு முன் மகன் பிறந்த செய்தி வந்ததுதான் கடைசிக் கடிதம் அது பலநூறு முறை படித்துக் கண்ணீர் படிந்து நொய்ந்திருந்தது. அடுத்தது இந்தக் கடிதம் கலங்கரை விளக்கமாய்.

இதே போல வேறு ஒருவருக்குத் தன் தாயிடம் இருந்து கடிதம் வந்து சேர்ந்திருக்க கண்ணீர் வெள்ளமெனப் பெருக, அதைப் படிக்க முற்படும்போது ஊதியது அபாயச் சங்கு. கடிதத்தை உயிரினும் மேலாய் சுமந்து ஓடி குழிக்குள் மறைந்து, பல மாதங்களாய் காத்திருந்து வந்த செய்தி கையில் கிட்டியும் படிக்க முடியாத சுமை நெஞ்சையழுத்த, குழிக்குள்ளேயே கடிதத்தைப் பிரித்து படிக்க அவர் முற்பட்டார். தலை மேல் விமானம் பறக்க, வேகமாய் காற்று வீசியது - எமனின் பாசக் கயிறா அது? கடிதம் அவர் கையை விட்டுப் பறந்தது. உயிர் பறந்தது போன்ற உணர்வுடன் பதைத்து வெளியேறினார்; கடிதத்தை எட்டிப் பிடிக்க ஓடினார். குண்டு வீழ்ந்தது. அவர் சில நொடிகளுக்கு முன் பதுங்கியிருந்த குழியில்.. மரணத்தைத் தட்டி எறிந்திருந்தாள் அந்தத் தாய். தாய்மடியில் சேயாய் கடிதம் அவரை சுமந்து காத்துநின்றது. பல்லாயிரம் மைல் அக்கரையில் காத்து நிற்கும் உறவுகளின் பாசமும் பிரார்த்தனையும் கவசமாய் உடன் வருவது சத்தியமாய்க் கண் முன் தெரிந்தது.

மனிதனின் சின்னஞ்சிறு பிரயத்தனங்களைத் தாண்டி இதுபோல பிரார்த்தனைகளும், அன்பும், முனனோர் அருளும், இறை அருளும் துணை வரும் என்பதை நமக்கு நினைவூட்டும் இந்நிகழ்வுகள்.

முந்தைய பதிவு (23)

அடுத்த பதிவு (25)

Sunday, February 14, 2016

சற்குரு - தாத்தா - 29

ஆறுமுகநேரிக்குப் பிறகு ராமநாதபுரம். எனது எட்டாம் வகுப்பு. உலக வரலாறும் புவியியலும் ஏறக்குறைய 50பாடங்களுக்கும் மேல் இருந்தது சமூகவியலில். வரலாறும் புவியியலும் தாத்தாவுக்கு மிகவும் விருப்பப்பாடம். உலகநாடுகள் அனைத்தின் தலைநகரம், நாணயம், மொழி, முக்கிய ஆறுகள், ஊர்கள், கணிமவளம், தலைவர்கள், நடப்பு செய்திகள் என அனைத்தும் ஏதோ 'கலெக்டர் படிப்பு' படிப்பது போல உள்ளே ஏறும். நிலவொளியில் நனைந்து கொண்டு,  தாத்தாவுடன் கதை போல உலகம் படித்த கனாக் காலம்.
மாலைதோறும் வீட்டின் சிறு பலகணியில் அமர்ந்து, நானும் தாத்தாவும் ஏதேதோ பேசிக் கொண்டிருக்க அப்பத்தாவும் கேட்டுக் கொண்டிருப்பார்கள். தமிழ்ப்பாடத்தில் மதுரையின் சிறப்பைக் கூறும் 'கட்டுக் கலங்காணும் கதிர் உழக்கு நெல் காணும்' பாடல் தாத்தா அப்பத்தா இருவருக்கும் பிடித்த பாடல். அந்தப் பாட்டைத் தொடர்ந்து, சிறுமலைத் தோட்டத்தில் விளைவது குறித்தும், மலை வாழைப்பழம் குறித்தும், தாத்தா உற்சாகமாய் பேசத்தொடங்க, எசப்பாட்டுப் போல அப்பத்தா தனது பிறந்தவீட்டுப் பெருமையையும், பசளையின் கதிரறுப்பு காலத்தின் நிகழ்வுகளையும் கூற, இடையிடையே என்றேனும் நான் பாடமும் படித்ததுண்டு.
தமிழ்ப்பாடத்தில், ராமநாதபுரத்தில் உள்ள லட்சுமிபுரத்தில் தாயுமானவர் சமாதி அடைந்தார் என வந்தது. அடுத்த நாள் அதைத் தேடிக் கண்டு பிடித்து என்னையும் அழைத்துச் சென்றார்கள் தாத்தா.
வேப்மரங்கள் சூழ்ந்த சிறு தபோவனம். மயில்களும் முயல்களும் உலவிக் கொண்டிருக்க  உதிர்ந்தும் மணம் பரப்பிக் கொண்டிருந்தன பன்னீர் புஷ்பங்கள். அமைதியான சூழலுக்கு இடையே ஒரே குரலில் பலர் தாயுமானவர் பாடல்களைப் பாடத் துவங்கினர். நாங்களும் சென்று அமர, அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்த சிவம், மோனத்தில் மூழ்கிய தாத்தாவின் மனதுள் பரிபூரணமாய் நிறைந்ததாய்த் தோன்றியது.
தியானம் முடிந்து திரும்பிக் கொண்டிருந்தோம். இருளை விரட்ட முயன்று, இருளைப் பெரிதாக்கிக் காட்டிய விளக்குகள் நிரம்பிய சாலை. ஆங்காங்கே தெருநாய்கள் தங்கள் சக்திக்கு மீறிக் குரைத்துக் கொண்டிருந்தன. தபோவனம் மனதில் நிரப்பிய அதிர்வுகளோடு ஏதும் பேசாமல் நடந்து கொண்டிருந்த தாத்தா, 'இதுபோல ஒரு இடத்தில் என் இறுதி நாட்கள் அமைதியாகக் கழியும் எனில் அது பெரும் பேறு' என்றார்கள். ஏனோ அந்தப் பேச்சு வருத்தத்தை அளிக்கவில்லை, அதுவே நல்ல முடிவாக இருக்கும் என்றே மனம் எண்ணியது. ஆனால் அந்த எண்ணத்துக்கு பயந்து, தாத்தா கரத்தை மேலும் இறுக்கமாகப் பற்றிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்.

சற்குரு - தாத்தா - 27

Fast forward. எனது கல்லூரி நாட்கள். காலம் எந்தக் கரையிலும் நிற்காத நதி. எதையும் விழுங்கிவிட்டு சுவடின்றிக் கடந்து செல்லும். தாத்தா மறைந்து ஆறு வருடங்கள் ஓடி விட்டன. இறுதியாண்டு ப்ராஜெக்ட் புத்தகங்கள் ஆறு பிரதிகள்  சமர்ப்பிக்க வேண்டும். நல்ல அச்சகம் தேடிய போது செக்கானூரணியில் ஒன்று இருப்பதாகவும், செய்யும் வேலை மிகவும் திருத்தமாக இருப்பதாகவும் கேள்விப்பட்டு அங்கு சென்றேன். வள்ளியென பெயர் பார்த்தவுடன் ஒரு மகிழ்ச்சி மனதுள். மாடியில் இருந்தது அச்சகம். மேலே படி ஏறிச்சென்று அச்சக உரிமையாளரிடம், எனது ப்ராஜெக்ட் தொடர்பான குறுந்தகடுகளை ஒப்படைத்துவிட்டு, அதன் வடிவமைப்பு குறித்து சில தகவல்களும் சொல்லி விட்டுக் கிளம்பினேன். அவர் என் முகத்தை அவ்வப்போது பார்த்துக் கொண்டிருந்தார்.அறையெங்கும்  காகித மணம் - ஏதோ ஒரு அரசாங்க அலுவலகத்தில் நிற்பது போலிருந்தது. கட்டணச் சீட்டு எழுதுவதற்கு முகவரி கேட்டார்; கூறினேன். எழுதிக் கொண்டிருந்தவர், நான் 'செல்வ நிலையம்' என்றதும், எழுதுவதை நிறுத்தி விட்டு முகத்தைப் பார்த்தார். 'செல்வ நிலையம் தாத்தாவுக்கு நீங்கள்..' என்று இழுத்தார்.. 'அந்தத் தாத்தாவின் முதல் பேத்தி நான்..' என்று முடிப்பதற்கு முன்னதாகவே முகம் மலர்ந்து விட்டது. கீழேயே இணைந்திருந்த தன் வீட்டை நோக்கி மனைவியைப் பெயர் சொல்லி அழைத்தார்.
'உக்காருங்க, அதான் வந்ததுலருந்து பாத்துட்டே இருந்தேன். தெரிஞ்ச முகமா இருக்கேன்னு. நல்லா இருக்கீங்களா? நானும் colonyதான்.' எங்கள் வீடிருக்கும் தெருவின், அடுத்த தெருவின் பெயர் சொல்லி அவர் வளர்ந்த வீட்டின் அடையாளம் சொன்னார். 'என்னோட life,  இந்தக் கடை எல்லாமே நல்லா அமையக் காரணம் உங்க தாத்தாதான்' என்றார் குரல் நெகிழ. அவர் மனைவியும் மேலே வர  'இவங்க யார் தெரியுதா? நம்ம செல்வநிலையம் தாத்தாவின் பேத்தி, final year projectக்கு வந்திருக்காங்க' என்றார். அவர் மனைவியும் முகம் மலர, 'உட்காருப்பா, காபியாவது சாப்பிட்டுத்தான் போகனும்' என்றார்கள். இருவரும் அகமும் முகமும் மலரத் தங்கள் கதையைக் கூறினார்கள்.
தனது பள்ளி நாட்கள் முதலே, தாத்தா தன்னை அவ்வப்போது கல்வி குறித்து விசாரித்ததும் வழிநடத்தியதும் குறித்துக் கூறினார். 'எனக்கு மட்டும் இல்லப்பா, colonyல நிறைய பேருக்கு நல்ல friend,philosopher and guide தாத்தா; எத்தனை நாள் அந்தத் திண்ணையிலும் வேப்பமர நிழலிலும் பேசியிருக்கோம்' - தாத்தாவோடு பேசிய நாட்களின் வேப்பமரக் காற்றின் குளுமை அவருள்ளும் நிறைந்திருந்து பேச்சில் தவழ்ந்தது.
படிப்பு முடிந்து, தனது காதல் திருமணமும் முடிந்து, அவர்கள் இருவர் குடும்பமும் பாராமுகமாய் இருந்த காலம்; பல நாட்கள் colonyக்குள் அவர் வராமல் இருந்த நாட்களில் ஒரு நாள்.  எங்கோ செல்லும் வழியில் தாத்தா அவரை சந்தித்திருக்கிறார்கள். பின்னர் ஒருநாள் காலை வேளை நடையின் போது, அவர் அப்போது தங்கியிருந்த அறைக்குச் சென்று, பல மணித்துளிகள் பேசியிருக்கிறார்கள். அது குறித்து அகம் பொங்கக் கூறினார்.
பல்கலைக்கழகத்துக்கு எதிரில் ஒரு சிறு வீடு பிடித்து Job typing செய்து கொடுத்துக் கொண்டிருந்த அவரை சந்தித்து 'இந்த வருமானத்தில் எவ்வளவு நாள் குடும்பம் நடத்த இயலும்? இருவருக்குமான எதிர்காலத் திட்டமென்ன? கையில் காசு இல்லையெனில் எவ்வளவு சிறந்த இல்லறமும் கசந்து போகும், ஏற்கனவே எதிர்ப்பைக் காட்டும் உறவுகள் முன் மேலும் தலை குனிய நேரிடும். உன்னிடம் திறமையும், சிறந்த பண்புகளும், உழைக்கும் உறுதியும் இருக்கிறது. அடுத்தபடி என்ன செய்ய முடியும் என்று முன்னால் நோக்கு' என்று பேசியதை நினைவுகூர்ந்தார். கையிருப்பு நிலை குறித்தும் எதிர்காலக் கனவுகள் இருந்தும், அதில் உள்ள மறை இடர்கள் குறித்தும் தான் மனம் கலங்கியதும், அதற்கு உற்சாகமூட்டி, 'தெளிவான தொலைநோக்கும், குறிக்கோளும் இருக்கும்போது தைரியமாய் அடியெடுத்து வை' எனச் சொல்லி, "Success often comes to those who dare and act" என்று தாத்தா கூறியிருக்கிறார்கள். அந்த நாளே, தன் மீது தாத்தா காட்டிய அந்த நம்பிக்கையே தனது வாழ்வில் முக்கியமான திருப்புமுனை என்று அவர் சொல்லும் போது, அந்த நாளுக்கு அவர் சென்று விட்டதை, பளபளத்த அவர்களது இருவர் விழிகளும் சொல்லியது. பல்கலைக்கழகத்துக்கு எதிரே அந்த சிறிய வீட்டுக்கு ஒருமுறை தாத்தா வந்த போது, உடன் ஒரு சின்னப் பெண் வந்தது நினைவிருக்கிறதா என்று சிரிப்போடு கேட்டேன். 'ஓ அந்த பொண்ணுதான் ப்ராஜெக்ட் செய்ய வந்திருக்கா' என்று அவரும் சிரித்தார்.
அந்த சந்திப்பு, நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது ஒரு காலை நேர நடையில் போன இடம். அன்று எனக்கு ஏதும் பெரிதாய் புரியவில்லை. அன்று அந்த அறை வாசலில் நாற்காலியில் காலை இளம் வெயில் சாய்ந்தாடிக்கொண்டிருந்தது. அதனோடு விளையாடிக் கொண்டிருந்தேன். 
தான் செல்லும் பாதையில், செடி கொடிகளை நாற்றுப் படுகையை தலை தடவிச் செல்லும் தென்றல் போல, வாழும் ஒவ்வொரு நாளும் உடன் வரும் மனிதர்களை ஏதோ ஒரு சிறிய விதத்திலேனும் ஊக்குவித்து, பெரிய பெரிய மாற்றங்களுக்கும் வித்திட்டுக் கொண்டே சென்றிருக்கிறார்கள், யாருக்கும் எந்த விளம்பரமும் இன்றி; எந்தக் கைம்மாறும் பாராட்டும் எதிர்பாராது.
அனிச்சையாய் இது போன்ற அறிமுகமில்லா மனிதர்கள், பல சந்திப்புகளில், 'நாகமலை, வீதியின் பெயர், வேப்பமரம் நிற்கும் வீடு' என்றதும் 'தாத்தாவுக்கு நீங்கள் என்ன உறவு?' என்று கேட்கும் கேள்விகளும், அதைத் தொடர்ந்து தாத்தா அவர்கள் வாழ்வில் ஏற்படுத்திய நல்ல தாக்கமும் - ரயில் பயணத்தில், கோவில்களில் என எங்கெங்கோ தாத்தாவின் தரிசனம் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது; இருக்கிறது. இத்தகைய பிரபல்யத்திற்கு தாத்தாவிடம் அன்று இருந்தது உயர்பதவியோ பெருஞ்செல்வமோ ஆள்பலமோ ஏதுமல்ல. ஒரு மனிதன் அமரத்துவம் பெறுவதற்குத் தேவை வேறொன்று. மனிதம் - சகமனிதர்கள் மீது வைக்கும் அக்கறை, நம்பிக்கை, நேசம். அந்த நேசத்தோடு பிணைத்த உறவுகள் காலம் கடந்தும் உறுதியாய் நிரந்தரமாகின்றன.
சொந்த வாழ்வில் தான் வாழ்ந்த தளத்தில் இருந்து, பல அடிகள் கீழ்மையாய் நடந்து கொண்ட பலரையும் பார்க்க நேர்ந்த போதும், சோதனைகள் மீண்டும் மீண்டும் வந்தபோதும், தாத்தா அந்த தருணத்தில் விசனப்பட்டதுண்டு; எனினும் அதிலேயே உழன்றது இல்லை; ஒட்டுமொத்தமாய் மனிதர்கள் மீது கசப்பாக ஒரு வார்த்தையும் சொல்லாத , எதிர்மறைக் கருத்துகளும் உருவாக்கிக் கொள்ளாத eternal optimism தாத்தாவுடையது. 
'செல்வமில்லையென்று என்னை யாரும் கண்டு கொள்வதில்லை, என்னை யாரும் மதிப்பதே இல்லை' என்பதெல்லாம் தன் மீதான சுய மதிப்பு குறையும் போது பிறர்கருத்துக்கு நாம் கொடுக்கும் அளவு கடந்த முக்கியத்துவமே. உலகே நம்மை மதிக்கவில்லையென, நாமே ஒவ்வொன்றின் முதுகிலும் ஏற்றிப் பார்க்கும் தற்குறிப்பேற்றமே. இதுபோல நம் மனதுள் நாம் நிகழ்த்தும் negative conversations, நம்மை பின்னுக்குத் தள்ளி கீழ்மையுள் உழலச் செய்யும் என்பதே தாத்தாவின் அழுத்தமான கருத்து. தன்னைப் பற்றிய தாழ்வு மனப்பான்மையோ, பிறர் குறித்த எதிர்மறைக் கருத்துகளோ, வேடிக்கையாக சொல்வதாகவே இருந்தாலும், அது நமக்குள் விதை ஊன்றி வளரும் தன்மை கொண்ட நச்சு விதை, அதைக் கண்டவுடன் களைந்து விடவேண்டும் என்பதே பலமுறை தாத்தா கூறிய personal கீதை.
உள்ளுக்குள் தன்னை உணர்ந்து உயர்வாய் நின்றிருப்போருக்கு, புற உலகின் அவமதிப்புகளோ சிறுமைகளோ கடந்து செல்லும் பாதையின் முள்ளே; பிடுங்கி எறிந்துவிட்டு முன்னே செல்ல பாதை விரியும் அகலமாய் ராஜபாட்டையாய்;
மனதின் நீளம் எதுவோ அதுவே வாழ்வின் நீளமடா.. அன்பே சிவம் அன்பே சிவம்..


சற்குரு - தாத்தா - 23

மீண்டும் கடந்தகாலத்துள் நிகழ்காலம். (சற்குரு - தாத்தா - 13லிருந்து http://manaodai.blogspot.com/2015/07/13.html தொடரும் ஆறுமுகநேரி)
போர்க்கரையில் கதையை நிறுத்தி விட்டு எங்கு செல்கிறாய் என்போருக்கு - இப்படித்தான் ஆபத்தான இடங்களில் தாத்தா கதையை நிறுத்திவிட, அடுத்த நடை வரை காத்திருக்க வேண்டும். காத்திருத்தலில் ஒரு சுகமுண்டு. இன்றைய உடனடித்துவ உலகில் காத்திருத்தலுக்கான பொறுமை காணாமல்போய்க் கொண்டு இருக்கிறது. ஆனால் காலம் கற்றுக் கொடுக்கும், காத்திருக்கவும், கடந்து செல்லவும்.
மீள்வோம்.மலேயாவின் கதைகள் இவ்விதமாய் ஒவ்வொரு நடையிலும் நீளும். இந்தக் கதைகள் கேட்கக் கேட்க அலுத்ததே கிடையாது. ஒவ்வொரு நாளும் பள்ளி முடிந்ததும் மாலையில் மிகவும் எதிர்நோக்கும் தருணங்களாய் நடை நேரம். தொற்றிக் கொள்ளும் கதையின் சுவாரசியமும் தீவிரமும் பள்ளியில் நண்பர்களிடமும் பகிர என் நட்பு வட்டத்தில் என்றுமே (இன்றுவரை) தாத்தா ஒரு மையப்புள்ளியாகவே இருந்தார்கள், இருக்கிறார்கள். கதை வாயிலாய் மட்டுமன்றி, வீட்டின் அருகிருந்த தோழிகள் தாத்தாவுடனான காலை/மாலை பேச்சுக்களிலும், தியான வேளைகளிலும் உடன் வர ஆரம்பிப்பதுண்டு. வயது பாரபட்சமின்றி மிக இயல்பாகத் தன் உற்சாகமான உரையாடல் மற்றும் அக்கறையோடு கூடிய ஊக்கமூட்டும் பேச்சுகள் வாயிலாக ஒரு வாழ்நாள் உறவையும், நல்லியல் சுவடுகளையும் தாத்தா பதிப்பதை அருகிருந்து காணக் கிடைத்தது. என் தோழியர் அனைவரும் தாத்தாவின் நட்பு வட்டத்துக்குள்ளும் வருவது வழக்கமாயிற்று.
அவ்விதம் ஆறுமுகநேரியிலும் பின்னர் தாராபுரத்திலும், மிகச் சிறந்த தருணங்கள் மலர்ந்து, புதிதாக அரும்பத் தொடங்கியிருந்த நட்பு வட்டங்களை நினைவுகளில் நிரந்தரமாக்கியது. அவர்கள் ஒவ்வொருவரும் இன்று வரை தாத்தா குறித்துப் பேசுவதும் தொடர்கிறது.
அடுத்ததாக  மாலை நேர வானில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் தோன்றும் விண்மீன்களாய் random ஆக அகத்தில் மிளிரும் சில நினைவு நட்சத்திரங்கள்:
ஆறுமுகநேரியிலிருந்து அதிகாலை இருள் பிரியும் முன்னர் நாலரை மணியளவில் எழுந்து கிளம்பி திருச்செந்தூர் வரை சென்ற பாதயாத்திரை.   விடிவெள்ளியும் நட்சத்திரங்களும் மறைவதன் முன் இருள் பிரியா அழகோடு அதிகாலை வானம். பிரம்மமுகூர்த்தம் - தேவர்களுக்கும் உகந்த காலம், கற்கும் கலையை கல்மேல் எழுத்தாய் மாற்ற கலைமகள் அருளும் தருணம். அதிகாலையின் சிறப்பைக் குறித்தும், ozone காலை வேளையில் உடலுக்கு நலம் தருவது குறித்தும், பேசிய காலைநேர நடைபயணம். சில காதம் கடந்ததும், முதற்கதிர் நீட்டும் கதிரவனை கண்கொட்டாது பார்த்து, கண்களை மூடிக் கொண்டு, மூடிய கண்களுக்குள் சுழலும் ஒளித்திகிரியை பார்க்கச் சொல்லும் பயிற்சி. விடுமுறைக்கு வந்திருந்த தங்கை ஜெயஸ்ரீயும் நானும் ஏதேதோ பேசிக் கொண்டே தாத்தாவுடன் பத்து பன்னிரண்டு கிலோமீட்டர் நடந்து திருச்செந்தூர் அடைந்தது, கடலலையில் கால்நனைத்து, செந்திலாண்டவன் பாதம் பணிந்தது, ஓம் என ஓங்காரமிடும் அலை ஒலியை ஆலய வளாகத்தில் ஓரிடத்தில் மதில் சுவர் துவாரத்தில் கேட்டது என அனைத்தும் சுடர்விடுகிறது மனப்பேழையில்.
அடுத்து வருவதும் ஒளியேற்றிய தருணம் குறித்துதான்.
காரைக்குடியில் ஒரு கோடை விடுமுறை - செக்காலையில் வீட்டில் இருந்து தொடங்கி கண்ணதாசன் மணிமண்டபம் வரை ஒரு நாள், இளங்காற்றில் கலகலவென சிரிக்கும் அரசமரங்கள் நிறைந்த குளக்கரை ஆஞ்சநேயர் கோவில் வரை ஒரு நாள், என ஒவ்வொரு தினமும் ஒவ்வொரு திக்கில் விஜயம் தங்கையருடன்.
ஒவ்வொரு நடையின்போது உலகம் புதிதாய் மொட்டவிழ்ந்து கொள்ளும் - வீட்டுத் தோட்டத்திலேயே வேரில் காய்த்துத் தொங்கும் பலா, தெருப் பாய்ச்சலாய் அமையும் வீடுகளில் வாசலில் அமர்ந்திருக்கும் விநாயகர், களவாடி வேறிடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டால் சிறப்பு எனக் கருதி கடத்தப்படும் அபாயத்தால்  கம்பிச் சிறைக்குள் அமர்ந்திருக்கும் பிள்ளையார்கள் என சிறு சிறு கவிதைகள் அறிமுகமான அழகிய நாட்கள்.
அங்கு ஒருநாள் - நடை நேரத்தில் செம்மை வீதியெங்கும் உருகி வழிந்து காணும் இடமெல்லாம் மருதோன்றி இட்டிருந்தது. நடை முடித்து நாங்கள் வீடடையும் வேளை, கதிரொளி கூடடைந்திருந்தது. செம்மை மேல் கருமை படர்ந்து இரவு மேலும் இருள் கொள்ளத் தொடங்கியிருந்தது. மின்சாரம் தடைப்பட்டிருந்தது. அம்மா தன் பெயருக்கிணங்க ஏற்றியிருந்த ஜோதி மட்டும் அறையில் இருந்தது. தாத்தா எங்களை அருகில் அழைத்து பாடல் ஒன்று சொல்லிக் கொடுக்கத் தொடங்கினார்கள். இதைப் பாடுங்கள் மின்சாரம் வரும் ஒளி நிறையும் என்று சொல்லி  'அருட்ஜோதி தெய்வம்  எனை ஆண்டு கொண்ட தெய்வம்'.. பாடத் தொடங்கினார்கள். நாங்கள் அனைவரும் பாட, கூடம் அசையாச்சுடர் விளக்கின் பொன்னொளியில் நிறைந்திருந்தது. பாடல் முடியவும் மின் விளக்குகள் உயிர் பெறவும், அன்று அது ஒரு குழந்தைத்தனமான மகிழ்ச்சியை அளித்தது.
ஆனால் அந்த நாள், அந்த அந்தி வேளை, அந்தப் பாடல், அன்று அங்கிருந்த எங்கள் அனைவர் மனதிலும் நித்தியமாயிற்று. அன்றிலிருந்து இன்றுவரை மின்சாரத் தடை ஏற்படும் ஒவ்வொரு பொழுதுகளிலும் தாத்தாவின் மெல்லிய குரலில் அந்தப் பாடலும் அந்த நாளும் எங்கள் அனைவர் மனதிலும் வந்து ஒளிநிறைக்கும்.


சற்குரு - தாத்தா - 25

நினைவின் அலைகளில் மிதந்து வந்து இன்று கரையேறிய இலை ஒரு தீபாவளித் திருநாள்.
பொதுவாக பண்டிகை தினங்கள் அனைத்துமே சூரியன் வருவதற்கு முன்னரே நிகழ்ந்துவிட்டிருக்கும். குளித்து திருநீர் மணக்க அமர்ந்து, புத்தாடைகளுக்கு சந்தன குங்குமமிட்டு, தாத்தா ஆசி வழங்கும் அதிகாலைகள்.
அப்படி ஒரு தீபாவளி நன்னாள். பேரன் பேத்தியர் பலரும் கூடியிருக்கிறோம் (தேவி, ஜெயஸ்ரீ, ரம்யா, ராஜேஷ்,பாலா மற்றும் நான்) அனைவரையும் அழைத்துக்கொண்டு வெளியே கிளம்பினார்கள் தாத்தா. 'திருமலை நாயக்கர் மஹாலுக்குப் போகலாமா? கோவிலுக்குப் போகலாமா?' எனத் தாத்தா வினவ, அனைவரும் 'கோவிலுக்கு' எனச் சொல்ல (எவ்வளவு நல்ல பிள்ளைகள்!!☺) , படை கிளம்பியது பரங்குன்றை நோக்கி. ஊரெங்கும் வெடி வெடிக்கும் ஒலி; எனக்கோ மனதில் கிலி. வெடி என்றால் இன்றும் கிலிதான் - அதனாலேயே தீபாவளியை விட பொங்கல் திருநாள்தான் பிடிக்கும். வெடிக்கு பயந்து அழுது தாத்தாவிடம் திட்டு வாங்கும் தீபாவளிகள்...
திருப்பரங்குன்றம் அடைந்ததும், 'கோவிலுக்குள் போகலாமா? மலை மேல் ஏறலாமா?' எனத் தாத்தா கேட்க, 'மலை மேல் என்ன இருக்கு தாத்தா?' என்று நாங்கள் வினவ, 'அட, பார்த்ததில்லையா? வாங்க போகலாம்' எனத் தாத்தா கூறினார்கள். அனைவரும் உற்சாகமாய் மலையேறத் தொடங்கினோம். இளையவர்களான பாலாவும் ரம்யாவும் குச்சிமிட்டாய் கையில் வேலென ஏந்தி ஏறினார்கள்.
பாதி வழி வரை வெகு உற்சாகமாய் இருந்தது பயணம். காலத்தில் அழியாத கற்பாறைச் சுவடுகளில் எங்கள் சிறு பாதம் பதித்து, தலைவனைத் தொடரும் சேனையாய் மலையேறிக் கொண்டிருந்தோம். வெயிலேறத் தொடங்கியது. தாத்தா ஓரிடத்தில் இளைப்பாற அமர்ந்தார்கள். நாங்கள் சற்று முன்னால் ஏறிச் சென்று கொண்டிருந்தோம்.
எங்கள் படை வருவதைப் பார்த்து நெடுநாள் பிரிந்த உற்றாரைக் காண வரும் உற்சாகத்தோடு வரவேற்றது ஒரு வானரப் படை. குட்டி முதல் குலமூதாதை வரை பெருங்குடும்பம். அனைவரும் ஒரே நேரத்தில பயத்தில் 'தாத்தா!! தாத்தா!!!' என்று அலறினோம். என்ன நிகழ்ந்ததோ எனப் பதற்றத்துடன் மேலே மிக விரைவாக ஏறி வந்தார்கள் தாத்தா(அப்போதே தாத்தாவுக்கு ஏறக்குறைய 75 வயது, இன்றைய தலைமுறைக்கு 75வயதில் திருப்பரங்குன்ற மலையேற முடியுமா, மலையை விட்டு விடலாம், திருப்பரங்குன்றம் செல்ல பேருந்து ஏற முடியுமா என்பதே சந்தேகம்தான்-அதிலும் சின்னஞ் சிறார்களை கட்டி மேய்த்துக் கொண்டு!!) 
அனைவரையும் அமைதியாக இருக்கச் சொல்லி தாத்தா எங்களை அருகில் அழைத்தார்கள். அதற்குள் குச்சி மிட்டாயை உண்டு முடிக்காத பாலாவைப் பார்த்த ஒரு குட்டிக் குரங்கு அதைப் பறிக்க முயல, குரங்கிடம் தரமுடியாது என பாலா விவகார விவாதம் நடத்த, தாத்தா அதைத் தூக்கி எறியச் சொன்னார்கள். எறிந்துவிட்டு
ஓவென பாலா அழ ஆரம்பிக்க நாங்கள் அனைவரும் மருண்டு தாத்தா பின்னால் ஒதுங்கினோம்.
உருவில் பெரிய வானரத்தலைவர் ஒருவர் தலைமை வகிக்க எதிரில் வந்து சுற்றிவளைத்தது அந்தப் படை. தாத்தா பாறைத் தரையில் அமர்ந்து கொள்ள எதிர்கட்சித் தலைவரும் எதிரில் அமர்ந்தார். 'கிர்ர்' என்றார் எ.க.தலைவர். தாத்தா 'என்ன வேண்டும்?' என்று அவரைப் பார்த்துக் கேட்டார்கள். மேலும் அருகில் வந்து தாத்தாவைச் சுற்றிலும் உற்றுப் பார்த்தார் எ.க.தலைவர்.
தாத்தா தன் சட்டைப்பைக்குள் கையை விட்டு சில்லரைக்காசுகளை எடுத்துக்காட்டி, 'இதுதான் இருக்கிறது, வேண்டுமா?' என்றார்கள். பக்கத்தில் இருந்த மந்தி(ரி)கள் தாத்தா கையை ஆர்வத்துடன் எட்டிப் பார்த்தனர். எ.க.தலைவர் காசைக் கையில் எடுத்து முகர்ந்து பார்த்து திருப்பி வைத்துவிட்டார். அவர்கள் நாட்டில் அந்நியச் செலாவணி செல்லாது போலும். மீண்டும் ஒருமுறை 'கிர்ர்..' என்று கட்டளையிட்டுவிட்டு வெளிநடப்பு செய்தார் தலைவர். 'ஐயா சொல்லிட்டாருன்னு வுடறோம். இல்லன்னா நடக்கறதே வேற..' என்று ஆளாளுக்கு ஒரு பார்வை எங்களைப் பார்த்துவிட்டு நகர்ந்தது குரங்கணி. அத்தனைக்கும் நடுவே மிட்டாய் வழிப்பறிக்கு நீதி கிடைக்காமல் அழுது கொண்டிருந்தார் நம் இளம் நாயகன் பாலா. இன்னொரு மிட்டாய் வாங்கித் தருவதாய் இன்னுமொரு சமாதானப் பேச்சு வார்த்தை நடத்தி மலையிறக்கினார்கள் தாத்தா. இத்தனை கலவரத்திலும் ரம்யா கையில் பத்திரமாய் இருந்தது உறை பிரிக்காத குச்சி மிட்டாய்.
ஒருவழியாய் வீடு வந்து சேர்ந்தால், நல்ல நாளும் திருநாளுமாய், ஆளும் பேரும் வரும் நாளில், பிள்ளைகள் அனைத்தையும் கூட்டிக் கொண்டு காணாமல் போனதற்கு தாத்தாவிற்கு ஒரு சிறப்பு அர்ச்சனை நடந்தது. அப்படியாய் ஒரு தீபாவளி.



சற்குரு - தாத்தா - 28

1942-43: வறண்டிருந்த பாலை நிலத்தில் புது வெள்ளமெனப் பாய்ந்தது சுபாஷ் சந்திர போஸ் எனும் மாகங்கை. அடிமைத் தளையுண்ட அனைத்து இந்தியரையும் அழியாப் பெருநெருப்பெனக் கிளறியது அந்தப் புயற்காற்று. கீழ்மையின் பிடியில் புழுவென உழன்றவர்க்கும் புத்துயிர் கொடுத்த மகாசக்தி. ஜப்பானிய ஆட்சியிலிருந்த கிழக்காசிய நாடுகளெங்கும் பரவி ஏறியது வேள்வித்தீ.. சோம்பிக் கிடந்த நெஞ்சங்களை, இதுவே முடிவென விதிக்குத் தலைநீட்டியிருந்த பலியாடுகளை உயிர்த்தெழுப்பி சுதந்திர தாகத்தை ஏற்படுத்தினார் நேதாஜி.

இது தொடர்பான எனது பதிவுக்கு கீழ்க்காணும் பதிவுகளைப் பார்க்கவும்:
http://manaodai.blogspot.sg/2016/01/blog-post.html?m=1
http://manaodai.blogspot.sg/2016/01/striding-along-forgotten-alley.html


சுபாஷ் படைக்கு நிதி திரட்டி உதவலாம் என்ற சந்தர்ப்பம் நேர்ந்ததும், அனைவருக்கும் தங்கள் பங்கை நாட்டிற்கு செய்யலாம் என்ற உந்துதல் உருவாகியது. மலேயாவில் அவ்விதம் நடந்த நிதி திரட்டும் நிகழ்வில், நாடகம் போடலாமென தாத்தா மற்றும் நண்பர்கள் முடிவெடுத்தனர். நாடகம் மக்களைக் கவர்ந்திழுப்பதாகவும் இருக்க வேண்டும், நேதாஜியின் படைதிரட்டுதலுக்கு உதவியாக ஆள்பலமோ பணபலமோ சேர்ப்பதாகவும் அமைய வேண்டும். என்ன நாடகம் போடலாம் என யோசித்தனர். வாழ்வில் மனிதனுக்கு ஏற்படக் கூடிய ஒவ்வொரு அறச் சிக்கலுக்கும் வினா எழுப்பி விடையும் அளிக்கும் கீதையே பொருத்தமாகப் பட்டது. அதுவரை பாரதம் கண்டிராத போர்க்களத்தில், தர்மத்தைக் காக்கும் பொருட்டு அவரவர் ஆற்ற வேண்டிய கடமையை நினைவூட்டும், கர்மபூமியில் தலைசிறந்த வீரனுக்கும் ஏற்படக்கூடிய ஆயிரம் சஞ்சலங்களுக்கும், அவனது கேள்விகள் வாயிலாய் மானிடத் திரளுக்கே பதில் அளிப்பதாக கண்ணன் கூறிய மொழிகளுமாய் குருக்ஷேத்திரம் நாடகக் களமாய் முடிவு செய்யப்பட்டது.
கீதையின் நாயகனாய் நம் கதையின் நாயகன் - ஆம் தாத்தா கண்ணனாய் வேடமிட்டு மயிற்பீலி குழல் சூடி, மேடையேறினார்கள்.
'தர்மம் அழிந்து அதர்மம் தலைதூக்கும் போது நான் யுகம் தோறும் அவதரிப்பேன்' என்று கண்ணன் உரைக்க, அது கண்ணன் மொழியா மேடையில் அமர்ந்த சுபாஷின் உறுதிமொழியா - என்ற மயக்கில் முழுநிலவு கண்டெழும் கடலலையாய் கூட்டம் ஆர்ப்பரித்தது.
நாடகம் முடிந்ததும் சுபாஷ் மேடையேறினார். இந்தியாவின் நிலை குறித்தும் அதை விடுவிக்க உயிர் ஈந்த எண்ணற்றவர்கள் குறித்தும் பேசினார். 'நீங்கள் உங்கள் ரத்தத்தை எனக்கு அளியுங்கள்; நான் உங்களுக்கு சுதந்திரத்தை தருகிறேன்' என்று வாக்களித்தார். சுதந்திர வேள்வியில் ஒவ்வொருவரும் இயன்ற வகையில் ஈடுபடுவது கடமை என்று உணர்வுகளைத் தட்டி எழுப்பினார். 'உங்கள் ஒவ்வொருவரையும் அன்னை பாரதமாதா நம்பி இருக்கிறாள். அன்னையை மீட்க வாருங்கள்' என்று குரல் கொடுத்தார்.
அன்றெழுந்த உணர்ச்சி வெள்ளத்தில், ஒற்றை மனிதன் ஏற்படுத்திய ரசவாத மாற்றத்தில், மக்கள் மனதில் புரட்சி விதை வேரூன்றியது நன்கு தெரிந்தது, மானுடனுக்குள் உறையும் தேவனின் முகம் தெரிந்தது. அலை அலையாய் முன்வந்து நிதி வழங்கியோர் எத்தனை பேர்! காது கையிலிருந்த அனைத்து நகைகளையும் கழற்றிக் கொடுத்த பெண்கள் எத்தனை பேர்!! வீடு வாசல் என சொத்து முழுவதையும் நேதாஜி இயக்கத்துக்கு எழுதி வைத்த செல்வந்தர்கள் எத்தனை பேர்!! என்னிடம் இருப்பது இந்த உயிரும் உடலும் தான் எனப் படை சேர்ந்தோர் எத்தனை பேர்!! ரத்தத்தால் கையெழுத்திட்டோர் எத்தனை பேர்!! உணர்ச்சிப் புயல் வீசியது.
ஒப்பனை கலைக்கப் போகாது, சுபாஷ் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த தாத்தா கண்ணீர் வடிய மேடையேறினார்கள் கையெழுத்திட.
'நாட்டு விடுதலைக்காக இந்த உடலையும் உயிரையும் அர்ப்பணிப்பேன்' என உறுதிமொழியில் கையெழுத்திட, பார்த்தனுக்கு கீதை சொன்ன பார்த்தசாரதியாய், பரந்தாமனாய் தாத்தா மேடையேற, சுபாஷ் அதைப் பார்த்து விட்டு கிருஷ்ண பரமாத்வே நம் பக்கம் இருக்கும் போது, வெற்றி நமதே என உரக்க முழங்கினார்.
அரங்கம் அதிர்ந்தது!!!
(நேதாஜியை மீட்பராய் இரட்சகராய்ப் பார்த்த அன்றைய மக்கள் மனநிலையை 'Lord Krishna of the moment' எனத் தலைப்பிட்டு பதிவு செய்திருந்தது அன்றைய நாளிதழான Syonan Sinbun - photo attached)


சற்குரு - தாத்தா - 26

மரண வாயிலில் வாழ்வெனும் போது ஒவ்வொரு உயிரும் ஒவ்வொரு விதமாய் உருமாறி உயிர்வாழ்வைத் தொடர்கிறது.
ஒருமுறை இவ்விதமாய் போர்க்காலத்தில் நடந்த நிகழ்வு - குண்டு வீச்சில் வேரோடு பறிக்கப்பட்ட ஒரு மரம் பறந்து சென்று வேறு ஒரு இடத்தில் குழியில் விழுந்தது. சில நாட்களில் அது அங்கேயே வேர் ஊன்றி துளிர்க்கவும் செய்தது. நிலம் பெயர்ந்து வீழ்ந்த இடத்தில் வேறூன்றிய மரம் போல ஒருசிலர் புலம் பெயர்ந்த நிலத்தில் காலூன்றத் தொடங்கினார்கள்.
நீர் அற்ற நிலத்தில் நிற்கும் மரங்கள் கண்ணுக்குப் புலனாகாது பூமிக்கடியில் பல அடிகள் நீர் தேடி வேர்க்கரம் நீட்டுவதும் இயற்கைதானே. இருத்தலின் தேவைதானே உயிர்களை செலுத்துகிறது. பிழைத்து இருத்தலா பிழையாது இருத்தலா பிழைத்தல் என்ற கேள்விக்கு, பிழையாது பிழைத்திருந்து பதிலிறுத்தோர் வெகுசிலரே. அதற்கு தெய்வமென்றோ, பாசமென்றோ, ஒழுக்கமென்றோ, நெறியென்றோ ஆணிவேர் ஆழ இருக்க வேண்டும். பல்லாயிரம் மைல்களுக்கு அப்பாலும் பசுமை தழைக்கச் செய்யும் நீரோட்டம் வேண்டும்.
சுற்றத்திடமிருந்து எந்தத் தகவலுமின்றி தனித்து விடப்பட்ட பலரும் அங்கு துணையைத் தேடி வாழ்வமைத்துக் கொள்ளவும் தலைப்பட்டனர். அந்த உறவுகள் நிரந்தரமா தற்காலிகமா என்பது வாழ்வுக்கும் அதே கேள்வி எழும்பியிருந்த அன்றைய நிலையில் அர்த்தமற்று இருந்திருக்கலாம். 
விதையின் வீர்யம் விதியின் கைகளில் விண்ணவர்களால் இயற்கையால் சோதிக்கப்படும்போது தெரிகிறது. தந்தையிடம் கண்டதும் கற்றதும் அங்கு கைவந்தது தாத்தாவுக்கு. 'உறுதியான உள்ளம் கைவர உடலினை உறுதிசெய். உடல் வில்லென வளைய மனதை அசையாச் சுடரென நிலைநிறுத்து. யாருமற்ற ஏகாந்த வாழ்வு யோக சாதனத்துக்கு ஏற்றது. கசக்கும் தனிமையை தவமாக்கு' - இவ்விதமாய் சுயகட்டளைகள் விதித்துக் கொண்டு, அதிகாலை எழுந்து யோகாசனப் பயிற்சியும் தியானமும் அன்றாட வழக்கமாய் பயின்று உடல் வன்மையும் மனத் திண்மையும் வளர்த்துக் கொள்ள முற்பட்டார்கள். அந்த காலகட்டத்தில் கொண்ட பல நெறிமுறைகள் வாழ்வின் இறுதி வரை கடைப்பிடிக்கும் நித்திய வழிகளாயிற்று. தனது உயிர்பிரியும் வேளையை வகுத்துக் கொண்ட பீஷ்ம பிதாமகர் போல, தனது இறுதி நாட்கள் ஒருநாளும் படுக்கையில் வீழாது போய்விட வேண்டுமென்ற தாத்தாவின் நெஞ்சுரம் அவ்வண்ணமே நிகழ்வதற்கும் இந்த நெறிமுறைகளே பெருமளவு வழிவகுத்தது - அனாயாசேன மரணம்!!
இப்படியாகத் தனது கர்மபூமிக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தவரை விழியறியாக் காலம் கவனித்துக் கொண்டுதானிருந்தது. நமது தீவிரமான தேடலை பிரபஞ்ச சக்திகள் நிறைவேற்ற முனையும் என்பதற்கிணங்க, நாணிழுத்த வில்லென கூரெழுந்த அம்பென தயாராகி வந்தவரை களம் கொண்டு செல்ல காலம் முடிவு செய்தது.


Thursday, February 11, 2016

சற்குரு - தாத்தா - 22

மலைக்காடுகளில் உள்ள ரப்பர் தோட்டங்களில் ஒளிந்து வாழ்ந்தும், இடங்களை அவ்வப்போது மாற்றிக் கொண்டும் உடன் பணிபுரிந்தவர்களோடு தொடர்ந்தது சிலகாலம். கடிதங்களில் மட்டுமே ஸ்பரிசிக்கும் தாயகத் தொடர்பும் அடியோடு நின்று போயிருந்தது. தெளிவும் அறியாது முடிவும் தெரியாது மயங்கிய எதிர்காலத்தை எண்ணிய இருண்ட நாட்கள். இரவில் ஒளிமிக்க விளக்குகள் ஏற்றத் தடை. ஊர்கள் இருக்குமிடம் தெரிந்தால் குண்டுகள் விழலாம் என்ற அச்சம்.
மாலையில் வீட்டுக் கதைகளை நண்பர்களோடு அசைபோட்டபடி தொடங்கும் உரையாடல்கள் பெரும்பாலும் மனம் கனக்க முடியும். இரவு புரண்டு புரண்டு ஒருவழியாய் மனம் களைத்து உறங்கத் தொடங்குகையில், ஊளையிடும் போர்விமான எச்சரிக்கை முழக்கம். இருளிலும் நிழலெனத் தொடரும் மரணவாடை. பதறியடித்து மாடியிலிருந்து படிகளில் தாவி இறங்கி காட்டுப் பகுதியில் இருக்கும் குழிகளில் பதுங்கி விமானம் தலைக்கு சில நூறடிகள் மேலே பறக்க, உயிர் அதற்கும் சில அடிகள் கீழே பதறித் தவிக்க, அபாயம் நீங்கிய அறிவிப்பு ஒலிக்கும். அதுவரை புதர் மறைவில் இருந்து வேறு நச்சரவு அபாயம் வராது என்று யார் உத்தரவாதம் அளிக்க முடியும். மெல்ல மீண்டும் படுக்கைகளுக்குத் திரும்பினால், வெளியேறிச் செல்லாமல் அங்கேயே அமர்ந்திருக்கும் சில வயதானவர்கள் - "எமனோடு ஓடிப் பிடித்து விளையாடத் தெம்பு இல்லை, இங்கேயே பார்த்துக் கொள்ளலாம் என இருந்துவிட்டோம்" என்று விரக்தி சிரிப்போடு சொல்வார்கள்.
அது போன்ற ஒரு மாலை வேளை. இருள்கவியத் தொடங்கியிருந்தது. இருளுக்குள் ஒடுங்கத் தொடங்கியிருந்தனர் அனைவரும். வழக்கம் போன்ற விமானத் தாக்குதல் எச்சரிக்கை ஒலி. இது வாடிக்கையாகிவிட்டது போன்ற வழக்கத்துடன் அனைவரும் பதுங்கினர்.
அதேநேரம் அருகில் அரைகிலோமீட்டர் தொலைவில் ஒரு ரயில் சிறு ரயில்நிலையத்துக்குள் நுழைந்து கொண்டிருந்தது. மலைப்புற கிராமப்புற மக்களுக்கும் நகரத்துக்கும் இருந்த ஒரே தொப்புள்கொடித்தொடர்பு அந்த ரயில். காய்களும் அரிசியும் அன்றாடத் தேவைகளும் மலேயாவின் பிற பகுதிகளில் இருந்து பெரும்பாலும் இந்த ரயில் வழியாகவே வந்து கொண்டிருந்தது. ஏறுவதற்கு ஆயத்தமாயிருந்தவர்களும், நிலைய ஊழியர்களும் எச்சரிக்கை சங்கொலி கேட்டு செய்வதறியாது திகைக்க, காலனை அருகில் உணர்ந்தது போல் பெருமூச்சு விட்டது ரயில். அடுத்த விநாடி அங்கிருந்த ஏறக்குறைய 200-300 பேர் உயிர் குடித்தது மழையெனப் பொழிந்த குண்டுகள். காது செவிடாகிய உணர்வோடு பதைப்போடு குழியைவிட்டு தாத்தாவும் நண்பர்களும் வெளியேறினர். சிலவிநாடி முன் மக்கள்திரளோடு இயங்கிக் கொண்டிருந்த ரயில் நிலையம் நிணமும் சதையுமாய் பற்றி எரிந்து கருகும் நெடியோடு புகையும் பெரு ஓலமுமாய் சரிந்திருந்தது. பதறித் துடித்து ஓடினர். அங்கு கண்ட காட்சி போரின் கொடிய கோர அழிவு முகத்தை மீண்டும் காட்டியது. பலநாள் உணவுண்ணவும் முடியாமல் மனம் அதிர்ந்து போயினர்.
எத்தனையோ போர் செய்திகளும் ஜப்பானியர் முகாம்களில் நடக்கும் கொடுமைகளும் தினம்தோறும் வாடிக்கை செய்தியாகிவிட்ட போதிலும், தலைக்கு மிக அருகில் தொங்கும் கத்தியென மரணத்தை உணர்த்திய, அரைகிலோமீட்டர் தொலைவில் நடந்த இப்பேரழிவு வெகுவாய் அனைவரையும் பாதித்துவிட்டது. இந்த துரதிர்ஷ்டவசமான ரயிலில்தான், நான் முன்னர் குறிப்பிட்ட, எனது தூத்துக்குடி பள்ளியின் ஆறாம் வகுப்புத் தமிழாசிரியையின் தந்தை அன்று அந்த விநாடி இருந்தார், இல்லாது போனார்.


Wednesday, February 10, 2016

இலையுதிர மனமதிர..

ஏதோ நினைவுகளில்
மரத்தின் பெருமூச்சு
சருகாய் உதிர்கிறது
கண்ணீரோடு எழுந்து சென்ற
யாரோ ஒருவனுக்கு
ஆறுதல் சொல்ல
முகவரி சுமந்த முதிர்இலைகள்
மெல்லப் புரள்கின்றன
அவன் காலடித் தடம்தேடி..
துரத்திப் பிடிப்பவை என்றுமே
தொலைந்த இடம்தாண்டி
வெகுதொலைவு சென்றிருக்கும்
அடுத்த கவலைக்கு அவசரமாய் அவன்நடக்க
மிதித்த காலடியில்
நொறுங்குகிறது சருகு
இன்னொரு பெருமூச்சை
உதிர்க்கிறது மரம்

கனவுகள் சுவடுகள்

கண்ணெரியக் கனன்றெரியும்
வெந்நீர் அடுப்பு விறகுப் புகை..
கிணற்றுறையில் கூடுகட்டி
தவறி விழும் சிறுகுருவி..
பிசின் வடியும் பட்டை
தூரில்துளிர் சிறு வேம்பு..
வால் தூக்கி அணில் துரத்த
தாவும் ஒரு காகம்..
துணி துவைக்கும் கல்லில்
காக்கை அணில் சமபந்தி..
மஞ்சள் உரசிப் பச்சையான
கல்லிடுக்கு ரசவாதம்..
நிலவொளியை வடிகட்டி
இளநீராக்கும் தென்னை..
நிலவுதிர் கால இரவுகளில்
இறைந்து கிடக்கும் வேப்பம்பூ..
கனவுகள் தொட்டெடுக்கும்
நடைபயின்ற நாட்களின்
நாற்றங்கால் பதியங்கள்..
நேற்று'கள்' நிறைந்திட்ட
இன்றைய கனவுகளில்
இன்றுக்கு இடமில்லை..
நாளைவரும் கனவுகளில்
அசைபோட இசைகூட
இன்றெவையோ கருப்பொருட்கள்..

தொலையும் வரை தேடு

 யாரோ சொல்லிப்போன 
சொற்களில் தேடாதே
என் விதையாம் கவிதைகளை
நிழலில் ஒளிதேடி
நிறமில்லை என்னாதே
நன்றாகத் தேடிப்பார்
தொலையும்வரை கிட்டும்வரை
அன்றொருநாள்
குடைதேடிக் கவிகள்
கூரையுள் புகும்போது
நனைந்தபடி கவிதை
மழையோடு போனது
அன்றும் ஒருநாள்
சந்தையடி சந்தடியில்
நடமாட இடமின்றி
அஞ்சுவதஞ்சிக் காணாமல்போன
பஞ்சுமிட்டாய் பொம்மையுடன்
தோளேறிப் போனது
இன்றும் அன்றுதானோ
என்றும் இன்றுதானோ
எங்கேயோ வழிதவறி
சொற்காட்டில் சிக்கி
திக்குத்தெரியாமல்
மயங்கி நிற்கலாம்
அந்தமயக்க விதை
சித்தமோ சிவன்போக்கு
நித்தமும் நீள்வாக்கு
நடந்த தடம் காணாது
மேகம்போல் கடந்துவிடும்
எங்கேனும் எவரேனும்
கண்ணால் கண்டுகொண்டால்
கண்டவர் அக்கணமே
காணாமல் போகுங்கால்
பிழைத்திருக்கக் கூடும்
பிழையாத என் கவிதை!!