Wednesday, August 9, 2023

அருமணி

சென்ற வருட எகிப்து பயணத்தின் போது செங்கடல் பகுதியில் பவளப்பாறைகளையும் ஆழ்கடல் உயிரிகளையும் காண ஒரு வாய்ப்பு அமைந்தது. அதற்கு நீச்சலோ ஸ்க்யூபா டைவிங்கில் முன்னனுபவமோ பயிற்சியோ தேவையில்லை. நம்மோடு தேர்ந்த ஆழ்கடல் நீச்சல் பயிற்சியாளர்கள், ஸ்க்யூபா டைவர்கள் இருப்பார்கள். படகில் நம்மை பவளப்பாறை பகுதிக்கு அழைத்துச் சென்று, அதற்கான உபகரணங்களையும் பாதுகாப்பு ஆடைகளையும் அணியச் செய்து, நீரில் இறங்கச் செய்வார்கள். அங்கு நீரில் மிதந்தபடி கடலாழத்தைக் காண வேண்டியதுதான் திட்டம்.


ஒரு பெரிய விசைப் படகில் அனைவரும் பயணம் செய்தோம். பச்சையும் நீலமுமான கடல் வெளி. ஒரு மணி நேரப் பயணத்துக்குப் பிறகு எங்களைப் போலவே வேறு சில படகுகளும் ஒரு இடத்தில் குழுமியிருந்தன. அனைத்துப் படகுகளும் சற்றே விரிந்த வட்டமாக நிறுத்தப்பட்டு, ஒவ்வொரு படகில் இருந்தும் ஸ்க்யூபா டைவர்களும் தேர்ந்த நீச்சல்காரர்களும் முதலில் கடலில் இறங்கினர். நாம் பயணித்த படகிலிருந்து சற்றே விலகி நடுப்பகுதியில் கைகளைக் கோர்த்துக் கொண்டு முகத்தை கடலாழத்தை நோக்கி வைத்துக் கொண்டு நீரில் மிதந்தபடி ஆழுலகைக் காண வேண்டியதுதான். அணிந்திருக்கும் மிதவை ஆடைகளால் நாம் நீரில் மூழ்க வாய்ப்பில்லை. வாயில் நுழைத்துக் கொண்டிருக்கும் ஸ்க்யூபா சுவாசக் குழாய் வழியாக மூச்சை வெளியே விடுவதற்கு மட்டும் சற்றுப் பழகிக் கொள்ள வேண்டும். மூச்சை உள்ளிழுப்பது வழக்கம் போல நாசித் துவாரங்கள் வழியே நடக்கலாம். அதெல்லாம் முதல் சில நிமிடங்களில் பழகி விட்டது. நீரில் இறங்குவதற்கு படகிலேயே ஒரு ஏணி இருக்கும். நீச்சல் தெரிந்தவர்களும் துணிச்சல் உள்ளவர்களும் நேரடியாகக் கடலில் குதிக்கலாம், மற்றவர்கள் அந்த ஏணியைப் பற்றி மெதுவாக இறங்கலாம். நீரில் குதித்ததும் நம்மை நீச்சல் வல்லுனர்கள் பற்றிக் கொண்டு ஏற்கனவே மிதந்து கொண்டிருப்பவர்களுடன் கைகளைப் பிணைத்துக் கொள்ள அழைத்துச் செல்வார்கள். இதுதான் திட்டம்.


அந்த நிமிடமும் வந்தது. ஒருவர் பின் ஒருவராக உற்சாகத்துடனும், ஆரவாரத்துடனும், அச்சத்துடனும், ஆர்வத்துடனும் என்னுடன் வந்த பத்து பேர் இறங்கி விட்டனர். அவரவர் இயல்புக்குத் தக்கபடி கூச்சலிட்டுக் கொண்டோ, சிரித்துக் கொண்டோ, புகைப்படங்கள் எடுக்க கைகளை ஆட்டியபடியோ குழு கடலில் அணி வகுத்தது. நான் ஒவ்வொருவரையாக அனுப்பி விட்டு இறுதி ஆளாக மிக மெதுவாக ஏணியில் கால் வைத்து நீரில் இறங்கினேன். உடலின் பாதிப் பகுதி கடலுக்குள். சிங்கையில் நீச்சல் கற்றுக் கொள்ள முயற்சி செய்தது நினைவுக்கு வந்தது. அது பல ஆண்டுகள் பல முறை முயற்சியாக மட்டுமே நீடித்த ஒன்று எனது நீச்சல் முயற்சி. நீரில் மிதக்கவும், ஒரு சில அடிகள் நீச்சல் அடிக்கவும் பயின்றிருந்தேன். ஆனால் அப்போதும் கரையை விட்டு நீருள் பாயும் தருணம் ஒரு பெரிய அச்சம் வந்து கவிந்து விடும். மிக மெதுவாக அதை வெல்ல முயன்று கொண்டிருந்தேன். முழு வெற்றி கிட்டவில்லை. அது போல இதோ ஒரு தருணம். 


 நீரைக் காணும் போதெல்லாம், அது ஆறோ, கடலோ, அருவியோ அதில் இறங்கிவிடும் ஆர்வம் கட்டின்றி இருப்பதால் எல்லா இடங்களிலும் நீரில் இறங்கி விடுவதும் வழக்கம்தான். பயணங்கள் செய்யவும் எங்கோ அறியா நிலமொன்றில் அறியா கடல் ஒன்றில் இறங்கும் வரை வாழ்க்கை வாய்ப்புகளை அருளியிருக்கிறது. கடலுள் பாதி காற்றில் பாதியாய் நிற்கிறேன். இறங்கு இறங்கு என டைவரின் குரல். மெதுவாக காலை படிகளில் இருந்து விலக்கி நீரில் மிதக்க முயற்சிக்கிறேன். ஏணியைப் பற்றியிருக்கும் கை மேலும் இறுக்கமாக ஏணியைப் பற்றுகிறது. உடன் வந்தவர்களும் என் பெயர் சொல்லி உற்சாகப் படுத்துகின்றனர். கடலில் மிதக்கிறேன். ஆனால் படகின் பிடியை விடவில்லை. கையை விட்டால் மூழ்க மாட்டேன். மிதவை உடை இருக்கிறது. தேர்ந்த நீச்சல்காரர்கள் ஒரு அடி தொலைவில். பெரிய டைவர்கள் குழுவே அங்கே இருக்கிறது. ஒரு கணம் பிடியை விடவேண்டும், உடலை உந்தித் தள்ள வேண்டும். என் குழுவை அடைந்து விடுவேன். முடியவில்லை. அந்த தருணத்தின் அரிய தன்மை நன்கு தெரிகிறது. இவ்வளவு தொலைவு வந்துவிட்டேன். இதுதான் அந்தக் கணம். ஆனால் அங்கேயே மிதந்தபடி கண்களை நீருள் விரிக்கிறேன். வண்ணமயமாய் கடலாழம். கண்ணில் படும் அந்த ஆயிரம் வண்ணங்களுக்கு மீன்கள் என்று பெயர். பல வண்ணப் படிவங்கள். ஆழம். வெகு ஆழம். விட்டுவிடு என ஒரு குரல். கனத்த உலோக உருண்டை போல அடிவயிறு ஆழத்தை உணர்கிறது. அடுத்த கணம் நீரில் இருந்து ஏணியில் மேலறி நின்று விட்டேன். சுற்றிலும் இருப்பவர்களின் ஏமாற்றக் குரல்கள் என்னுடைய உள்ளாழத்தின் ஏச்சை விடக் குறைவுதான். அரியதொன்றை அச்சத்திற்கு முன் கைவிட நேர்ந்த நாள்.


சிறு வயதின் நினைவுத் துணுக்குகள். பல்வேறு நினைவுகள் அச்சத்தால் ஆனவை. பயணங்களில் நெடிதுயர்ந்து உடன் வரும் மலைத்தொடர்கள் குறித்த அச்சம். மிகச் சிறு வயதில் நீண்ட பெருங்கடல் ஒன்றை இருள்மாலைப் பொழுதில் முதன்முதலாய் கண்ட ஒரு திகைப்பின் கணம் பயம் என்றே உள்ளே பதிவாகி இருக்கிறது. விளக்கு ஏற்றுவதற்கு தீக்குச்சியைப் பற்ற வைக்க, சைக்கிளில் ஏறி அமர, புதிய நபர்களை சந்திக்க, புதிதாக வாங்கிய சுடிதார் என்னும் ஆடையைத் தலை வழியாக அணியும் போது மூச்சு முட்டுமோ என, தீபாவளி நாளின் வெடிகளும் மத்தாப்புகளும் (ஆம் கம்பி மத்தாப்பு உட்பட) என, தெரு என்பதே நாய்களின் குரைப்பால் ஆனது என, என் அச்சத்தின் கணக்குகள் எண்ணிக்கையைத் தோற்கடிப்பவை.

'அட மக்குக் கழுதை' என தாத்தா கடிந்து கொண்ட தருணங்களும் இதுபோன்ற பயங்கள் தொடர்பானவைதான்.


எனக்கு ஏழெட்டு வயதில் தாத்தா யோகப் பயிற்சிகள் தொடங்கினார்கள். பத்மாசனம், த்ரிகோணாசனம் தொடங்கி பல்வேறு ஆசனங்கள். சர்வாங்காசனம் வரை எல்லாம் இனிதாகச் சென்றது. சர்வாங்காசனம் தொடங்கியதும் வந்தது பிரச்சனை. படுத்துக் கொண்டு காலை மெதுவாகத் தூக்கி உடலை ஒட்டுமொத்தமாக கைகளில் தாங்கிக் கொண்டு நிற்க வேண்டும். உடலில் தோள்பட்டையும் கழுத்தும் தலையும் தவிர அனைத்தும் மேலே காற்றில். எனக்கோ சாய்வுநாற்காலியில் பின்னால் சரிவது கூட பயம். அதனால் இதை செய்ய முடியாது என்றேன். தாத்தா விடுவதாக இல்லை. காலைத் தூக்க வேண்டிய பயிற்சி எனப் புதிதாக சுடிதார்-பைஜாமா வேறு. அதை அணிவதே பெரும் பிரயத்தனம். தினமும் பயிற்சி ஆரம்பித்து சர்வாங்காசனம் வந்ததும் கண்ணீரும் கம்பலையுமாகி விடுவேன். 'காலைப் பிடித்துக் கொள்கிறேன், விழமாட்டாய்' என்ற தாத்தாவின் உத்தரவாதங்களும் என்னை ஆற்றவில்லை. வானோக்கி உயர்ந்த கால்களுடன், உறுதியான உடலுடன் தாத்தா தினமும் சர்வாங்காசனத்திலும், சிரசாசனத்திலும் தலைகீழாக நிற்பதைப் பார்க்கும் போது ஆர்வமாக இருக்கும். ஆனால் நான் செய்ய எண்ணி காலைத் தலைக்கு மேல் உயர்த்தும் போது அடிவயிறு நடுங்கிவிடும். ஒரு முறை கூட செய்ய முடியவில்லை. நாலைந்து வாரங்களுக்குப் பின் அம்முயற்சி கைவிடப்பட்டது. அரியதொன்று தொடராது நின்று போன தருணம்.



நான் சில வருடங்கள் முன்னர் தனித்த பயணங்கள் தொடங்கியதும் அச்சங்களை எதிர்கொள்ளத்தான். அதிலும் முதல் பயணமே இமயத்தில் தொடங்கியது மலை குறித்த வசீகர அச்சத்தை எதிர்நோக்கத்தான். ஆம் வசீகரிப்பவை அனைத்தின் ஆழத்திலும் அச்சம் உறைகிறது. அறியமுடியாமை தரும் அச்சம். முடிவின்மை தரும் அச்சம். பேரழகு, பேரியற்கை, முற்றமைதி, கடல் ஆழம், காரிருள், வன்பாலை, விரிபனி என அனைத்து வசீகரங்களும் அச்சத்தின் அடிநாச் சுவையோடு தித்திப்பவையே . மறுக்க முடியாத, மறுக்க ஒன்னாத அழைப்புகள் அனைத்தும் அச்சத்தின் ஆடை அணிந்தே முன்னே வருகின்றன. நிலையாமையும் உட்பொருளில்லாமையும் அச்சத்தை அளிப்பவைதான். அவை முன்னோக்கி நகர உதவுபவை. மேலும் ஆழமானவை. அவை குறித்துப் பேசும் அனுபவம் இன்றில்லை. 


இன்று எதற்காக அச்சங்கள் அனைத்தும் மேலெழுந்து வருகிறது?

 

நாளையுடன் குருஜி சௌந்தரிடம் யோக ஆசிரியப் பயிற்சி தொடங்கி ஒரு வருடமாகிறது. சென்ற இரு வாரங்களாக சர்வாங்காசனம், விபரீத கரணி, ஹாலாசனம். அதைப் பார்த்ததும் சர்வமும் நடுங்கி விட்டது. வகுப்பில் கயிறு கொண்டு முயற்சித்த போது வரவில்லை. படிப்படியாக சுவற்றை ஆதாரமாகக் கொண்டு தொடங்கச் செய்தார். இரண்டு வாரங்களுக்குப் பிறகு இப்போது இந்தத் தருணம் அமைந்திருக்கிறது. ஆம், இன்று சர்வாங்காசனம் சித்தியாயிருக்கிறது. ஹாலாசனம் முயற்சி செய்ய முடிந்திருக்கிறது. பலருக்கும் இவை மிக எளிதாக முதல் நாளே இயல்வதுதான். எனவே நான் சொல்ல வருவது ஆசனசித்தி குறித்தல்ல. அச்சத்தை வெல்லும் சிறு சிறு படிகள் குறித்து. அச்சம் விலக்கத்தை அளிக்கிறது. சந்தேகத்தை வளர்க்கிறது. அச்சத்தை வெல்லும் போது அனைத்தும் இனிமையாகிறது. அருமணியைக் காத்து நிற்கும் நாகமென அரியவற்றின் முன் அச்சம் காவலிருக்கிறது.





இங்கு நடந்திருப்பது உடல் சார்ந்த ஒன்று மட்டுமல்ல. இந்த ஒரு வருட அனுபவத்தில், யோகம் என்பதும் அதன் அனுபவ ரீதியான விளைவுகளும் கால் பங்கு மட்டுமே உடல் சார்ந்தது என சொல்லலாம். பாதிப் பங்கு மனம் சார்ந்தது. எத்தனை எத்தனை தயக்கங்கள், சந்தேகங்கள். மீதிப்பகுதி ஆழ்மனம் சார்ந்தது. பிறவிகடந்த வாசனைகளாகவும், மரபணு வழியாகவும் தொடர்ந்து வரும் எண்ணற்ற தடைகள், அச்சங்கள். அதன் ஒரு சிறு தளையை முதன் முறையாக குருவருளால் தாண்ட முடிந்த இத்தருணம் என்னளவில் ஒரு சிறு மைல்கல். இது சாத்தியம்தான், இதுவே வழி என ஒரு உறுதிப்பாடு.


இந்த ஒரு வருட யோகப் பயணம் எத்தனை எத்தனை விதமாக இந்த அச்சங்களை உருமாற்றி உள்ளே வைத்துக் கொண்டிருக்கிறேன் எனக் காட்டியிருக்கிறது. வெளியேற வேண்டியவை, உடனிருக்க வேண்டியவை என அச்சத்தை வகை பிரித்துக் காட்டியிருக்கிறது. என் ஆற்றல்கள், திறமைகள், எல்லைகள் என அனைத்தையும் வகுப்பவையும் அச்சங்கள்தான். அவற்றை நேர்மையாக எதிர்கொள்ள சாதனா கற்றுத் தருகிறது.



இப்பயணத்தின் ஒவ்வொரு அடியிலும் வழிநடத்தி முன்னே அழைத்துச் செல்லும் ஆசிரியர் சௌந்தருக்கு இந்த தருணத்தில் உள்ளே எழும் நன்றிப் பெருக்கை உளமார சமர்ப்பிக்கிறேன். அச்சத்தின் காரணமாக தயங்கித் துவண்ட அனைத்து தருணங்களிலும் உடன் நின்ற நண்பர் சௌந்தருக்கு அன்பும் பிரியமும். என் ஊசல்களைப் புரிந்து கொண்டு, தொடர்ந்து ஊக்கமளிக்கும் நண்பர்களுக்கு என் முழுமையான அன்பு.


இந்நாள் மேலும் உறுதியாக சாதனாவில் அமையச் செய்கிறது. யோகம் என்னும் அறுபடா பொன்னிழையில் நீளும் ஒரு சரடென இந்நாள்.





    




3 comments:

  1. "அருமணியைக் காத்து நிற்கும் நாகமென அரியவற்றின் முன் அச்சம் காவலிருக்கிறது."

    🙏🙏 Wonderful analogy

    ReplyDelete
  2. அச்சம் விலக்கத்தை அளிக்கிறது. சந்தேகத்தை வளர்க்கிறது. அச்சத்தை வெல்லும் போது அனைத்தும் இனிமையாகிறது. True line

    ReplyDelete