கன்னட எழுத்தாளர் ஹெ. எஸ். சிவபிரகாஷ் எழுதிய 'Everyday Yogi' (கன்னடத்தில் 'பத்தீஸ் ராகா')-ன் தமிழ் மொழிபெயர்ப்பு விஷ்ணுபுரம் பதிப்பக வெளியீடாக வெளியாகி இருக்கிறது. அச்சில் எனது முதல் நூல் - ஆசிரியர்கள் பாதங்களில் சமர்ப்பணம்.
2021-ல் கன்னட எழுத்தாளர் ஹெ. எஸ். சிவபிரகாஷ் எழுதிய "GURU: Ten Doors to Ancient Wisdom"-ன் தமிழாக்கத்தை (தமிழில் குரு - பழம்பெரும் ஞானத்திற்கான பத்து வாயில்கள் - ஆனந்த் ஸ்ரீனிவாசன்) வாசித்துவிட்டு ஒரு கடிதம் எழுதியிருந்தேன். https://www.jeyamohan.in/148348/. அதை யோகா குருஜி சௌந்தர் ஹெ.எஸ்.எஸ் அவர்களிடம் பகிர்ந்திருந்தார்.
2021 குரு பௌர்ணமி அன்று காலையில், கோவை அருகே நிகழ்ந்த கவிதை முகாமுக்கு லோகமாதேவியுடன் சென்று கொண்டிருக்கும் போது ஹெ.எஸ்.எஸ்-ன் அழைப்பு வந்தது. "குரு"வைப் பற்றிய சிறிய தொலைபேசி உரையாடல். அது குருபௌர்ணமி அன்று நிகழ்ந்ததை ஆசியாக உணர்ந்தேன்.
பின்னர் குருஜி சௌந்தர் பெங்களூர் வந்தபோது அவரை நேரில் சந்திக்க அழைத்துச் சென்று அறிமுகம் செய்து வைத்தார். அதற்கு முன்னர் 2020 ஜனவரியில் சென்னையில் நடந்த பத்து நூல்கள் வெளியீட்டு விழாவில் ஹெ.எஸ். சிவப்பிரகாஷ் கன்னட இலக்கியம் குறித்தான மிகச் செறிவான உரை ஒன்றை ஆற்றக் கேட்டிருந்தேன். ஆனால் தனிப்பட்ட இந்த சந்திப்பில் அவரது ஆன்மீக அனுபவங்கள் குறித்த உரையாடல் அவரது மற்றொரு பக்கத்தை காட்டியது. Everyday Yogi அவரது ஆன்மீக வாழ்வின் சுயசரிதை. அந்தப் புத்தகத்தில் எழுதியதற்குப் பிறகான காலகட்டத்தின் சில அனுபவங்கள் குறித்து அன்று அவர் பகிர்ந்து கொண்டார். மனதுக்கு மிக அணுக்கமான நாள். அன்று குருஜி நான் செய்து கொண்டிருந்த மற்றொரு மொழிபெயர்ப்பு பற்றிக் குறிப்பிட்டதும் இதைத் தமிழில் மொழியாக்கம் செய்யுமாறு ஹெ.எஸ்.எஸ் சொன்னார்.
அடுத்த குரு பூர்ணிமை அன்று இதன் மொழியாக்கத்தைத் தொடங்கினேன். இப்புத்தகத்தில் ஸ்வாமி சத்யானந்தரிடம் அவர் தீட்சை பெற்ற பகுதியை மொழியாக்கம் செய்யும் போது நான் தீட்சைக்காக சத்யானந்த ஆசிரமம் செல்ல நேர்ந்தது. இதைத் தமிழில் எழுதிய மொத்த நாட்களும் எனக்கு தனிப்பட்ட அளவில் மிக முக்கியமான காலகட்டம். ஒவ்வொரு நாளும் குருவின் கரம் வழிநடத்திச் சென்றது.
ஹெ.எஸ். சிவப்பிரகாஷ் அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்து, பல யோகம் சார்ந்த, சாதனா சார்ந்த வார்த்தைகளை சரிபார்த்து ஆலோசனைகள் கூறி, உறுதுணையாக நின்று, இன்று இது நூலாக வெளிவருவதற்கு முதன்மையான காரணமாக இருந்த குருஜி சௌந்தருக்கு அன்பும் நன்றியும்.
விஷ்ணுபுரம் பதிப்பகத்துக்கு நன்றி!
