இதற்கும் அதற்கும் இடைப்பட்ட பொழுதின் மயக்கங்கள் - கவிஞர் எழுத்தாளர் பெருந்தேவி, எழுத்து பிரசுரம்
'இதற்கும் அதற்கும் இடைப்பட்ட பொழுதின் மயக்கங்கள்' இன்றுதான் வாசித்தேன். மிகப் பிரமாதமான சிறுகதைத் தொகுதி.
யோக குருஜி சௌந்தர் கட்டுரையை வாசித்துதான் இத்தொகுதி குறித்து அறிந்து கொண்டேன்.
ஒரு சிறுகதைத் தொகுப்பில் ஒவ்வொரு சிறுகதையுமே தன்னளவில் மிகச் சிறப்பாக வந்திருக்கிறது இனிமையான வியப்பு. முதலாவதாக தலைப்பை வாசித்ததும் என்ன ஒரு விசித்திரமான தலைப்பு என எண்ணம் வந்தது. ஆனால் அதுதான் மிகச்சரியாக இவ்வரிசைக் கதைகள் அனைத்தையும் தொட்டுச் செல்லும் சரடு.
ஓவியங்களில் இரு பிரதான வண்ணங்கள் மெல்ல மெல்ல மயங்கி ஒன்று கலக்கும் மென்மையான ஒரு வண்ணமயக்கம் போல வாழ்வின் தொட்டுணரமுடியாத ஒரு பகுதியைத் தொட்டுச் செல்லும் கதைகள். அந்த இரு வண்ணங்கள் சில கதைகளில் நிதர்சனம்- எதிர்பார்ப்பு என்றாகின்றன, சில கதைகளில் வரையறை-மீறல்கள் என்றாகின்றன, சில கதைகளில் அன்றாட உண்மையும் அமானுடமும் ஆகின்றன. ஆனால் அந்த இரண்டும் கலந்துபிரியும் மயக்கங்களே அழகு.
இத்தொகுதியின் கதைகளை இரு வகைமைகளாக மனம் தொகுத்துக் கொண்டது.
முதல் வகைமை, நெருக்கமான உறவில் இருக்கும் இரு நபர்களுக்கிடையேயான கடக்க இயலாத மனத்தொலைவுகள்.
நீண்ட தாம்பத்ய வாழ்வின் எல்லையில் நிற்கும் கணவன்-மனைவி முதல் (தாம்பத்யம்), திருமணமாகி இரண்டே மாதங்கள் ஆன இளம் தம்பதி வரை (கேள்விக்கென்ன பதில்), கணவன்-மனைவி உறவுகளில் இதுவரை புனைவுகளில் தொட்டுக்காட்டப்படாத சில நுண்மைகள் தீட்டப்பட்டிருக்கின்றன. உதாரணமாக கணவன் மன்னிக்கப்படவேண்டுமா என்று யாரோ/தன் மனமே எழுப்பும் ஒரு கேள்வி இளம் மனைவியின் மனதில் எழுப்பும் சஞ்சலங்கள். சந்தேகம் எனும் இடத்தில் இருந்து அவை உறுதியான நம்பிக்கைத் துரோகம்தான் என மனம் முடிவெடுக்கும் வேகம். அவ்விதம் கடத்தியது வேறு யாரும் இல்லை எனக் கொண்டால், மனதின் வீர்யம் விஸ்வரூபம் எடுக்கிறது.
சிறுதுளிக்கும் உயிர்கொடுத்து பேணி எடுத்து பெரிதாக்கி விடும் ப்ரக்ருதி, பேரியற்கை! தாம்பத்யம் சிறுகதையில் மனைவி கண்டுகொள்ளாமல் விடும் தவறுகளை அக்கறையின்மை என அடையாளும் காணும் கணவனின் மனம். அவளைத் துன்புறுத்துவதற்காக அவன் தன் முன்பாகவே குடிப்பதை அக்கறை என நம்பிக் கொள்ள விழையும் மனைவியின் அகம். அதற்கும் இதற்கும் - அன்பென உணரப் படுவதற்கும், அல்லவென உணர்வதற்கும் இடைப்பட்ட தூரம் அதிகமில்லை போலும்! Fragile beings we are!
மயானக் கொள்ளையின் அம்மன் கதையில் தன் கண்ணைக் கணவனிடம் கொடுத்து மண்ணாகிப் போனவளிடம், கணவனால் வீடு கொள்ளை போன நிலையில் செயலற்று நிற்பவள், வேண்டிக் கொள்ளாது வந்துவிட்ட நினைவும் ஒன்றாகிக் கலக்கின்றன. நீண்ட நாள் நினைவில் நிற்கக் கூடிய சித்திரம்.
நினைவின் நிறம் இரண்டு, தாம்பத்யம் - இரண்டு கதைகளும் அனுமானத்திலேயே மனதளவில் வளர்ந்து செல்லும் விலகலை சொல்கின்றன. நினைவின் நிறம் இரண்டு கதையில், தன் சித்தத்தின் நினைவு மீட்டல் மீதே அவள் மனம் கொள்ளும் சந்தேகம் குறித்த வரி மிக கச்சிதமாக இக்கதையை சொல்கிறது. விசித்திரக் கணவனின் வினோதப் பரிசுகள் கதையின் கணவன் எவ்விதமாவது தன்னை மனைவியின் மனதில் நிறுவிக் கொள்ள விழையும் விசை - தமிழில் மிகப் புதிய அழகான கதை இது!
கணவன்-மனைவி மட்டுமன்றி தாய்-மகன், தந்தை-மகன் என்ற உறவின் இடுக்குகளையும் இரு கதைகள் அடையாளம் காட்டுகின்றன.ரோஜா மொட்டுடன் ஒரு செல்ஃபி - அம்மா எனும் வரையறை தரும் எதிர்பார்ப்பு, அதற்கு அப்பாலிருக்கும் ஒரு பெண் என்ற பிம்பத்தை பொருத்திக் கொள்ள இயலாத மகனின் தவிப்பு. "அம்மா எப்போதும் அம்மா வயதுதான்" - எவ்வளவு உண்மை!
அப்பாவுக்குச் சென்னை பிடிக்கவில்லை - அப்பாவின் மீதான மகனின் எதிர்பார்ப்பு செலுத்தும் வன்முறை எனலாம். இத்தொகுப்பிலேயே மிக உறுதியாக மண்ணில் காலூன்றி நிற்கும் கதை.
இரண்டாவது வகைமைக் கதைகளை, 'இங்கு இவ்விதமாக' எனத் தெளிவாக வரையறுக்கப்பட்டவற்றுக்கும், 'அங்கு (ஒருவேளை) அவ்விதமாக இருக்கலாம்' என அனுமானிக்கப்பட்டவற்றுக்கும் இடையில் நடப்பவை என்று சொல்லலாம். இம்மை மறுமை போல..
பாப் சாந்தி, மழை நிற்கப்போவதில்லை, பெயராய்ப் பின்தொடர்தல், பத்தொன்பதாம் நூற்றாண்டுக்காரி வரை, போன்ற கதைகள். நாம் கட்புலன்களால் அறிவதாலேயே உண்மை என உணரும் அனுபவங்களுக்கும், அவற்றை மீறிய காரணத்தாலேயே அமானுடமென நினைக்கும் அனுபவங்களுக்கும் இடையிலான அறியமுடியாமைகள் மீது மிகச் சிறப்பாக நெய்யப்பட்டிருக்கின்றன.
பாப் சாந்தியில், ஒருபுறம் அறியாத, அழையா விருந்தாளியை, நம்மிடம் எதிர்பார்க்கப்படும் குறைந்தபட்ச சமூக சம்பிரதாயங்களுடன் உபசரித்துக்கொண்டே மறுபுறம் மனம் எழுப்பிக் கொள்ளும் சந்தேகங்கள், தயக்கங்கள், கணக்குகள் என கதை நகர்ந்து கொண்டிருக்கையில், திடீரென கத்தியோடு பாயும் பாப் சாந்தி போல கதையின் தளம் யதார்த்தத்தில் இருந்து மனப்பிறழ்வுக்கும் அமானுடத்துக்கும் இடைப்பட்ட தளத்துக்குத் தாவுகிறது. மிக அழகான கதை.
எஞ்சியது சிறுகதை - உண்மையிலேயே இவ்விரண்டு வகைமையிலும் இல்லாது எஞ்சிய ஒன்று. நம் நினைவின் அடுக்கில் மிக உன்னதமாக வளர்ந்து விட்ட ஒன்று காலப்போக்கில் முற்றிலும் வேறொன்றாக மாறியிருக்கும் நிதர்சனம்.
இத்தொகுதியின் இறுதிச்சிறுகதையில் 'மிஸஸ் தெரஸா பேயாக இருக்க வாய்ப்பில்லை என்பது ஏமாற்றமாக இருந்தது' என வருவது போல, இந்த புரிபடாத அமானுடத்தன்மைகளும் உணர்வுமயக்கங்களும் இல்லையென்று ஆனால், ஒற்றைநிறம் கொண்ட வெற்று வாழ்வில் பெரும் சலிப்பே எஞ்சும் எனத் தோன்றுகிறது.
சிறப்பான அழகான புதிதான கதைகளுக்காக ப்ரியமும் நன்றியும்.

No comments:
Post a Comment