Sunday, February 22, 2015

இசைபட வாழ்தல்

உயிரின் ஊதியமாய் வள்ளுவன் ஓதும் "ஈதல் இசைபட வாழ்தல்" குறித்த பதிவல்ல இது.

இன்று அதிகாலை கண் விழிக்கும் போதே மனதில் சுழன்ற பாடலின் பின்தொடர்ந்த சிந்தனையின் சுவடு இது.

"ஏதோ ஒன்றைத் தேடும் நெஞ்சம் இங்கே கண்டதே" - நேற்று பயணத்தில் கேட்ட பாடல், அணைந்த பின்னரும் அறையில் தவழும் ஊதுவத்தி மணமாய் உள்ளே கமழ்கிறது.

மனதின் நினைவுச் சரடு பல்வேறு தருணங்களில் கேட்ட பாடல்களாலேயே பின்னப்பட்டிருக்கிறது. ஆதி ஞாபகமெனத் தோன்றும் "அந்தி மழை பொழிகிறது" குழந்தையாய் ஒரு வெளிச்சமான காலைப் பொழுதில் கேட்ட நினைவு. அந்தப் பாடலின் ஆரம்ப  humming-ல் ஒவ்வொரு முறையும் மனம் அந்த நாளைத் தொட்டுத் திரும்பும்,

பள்ளிப் பருவத்தில் அவசரமான காலை நேரத்தில் AIR ல் கேட்ட TMS, சீர்காழி, நாகூர் ஹனிபா பக்திப் பாடல்களும், "Lifebuoy எவ்விடமோ ஆரோக்கியம் அவ்விடமே"-ஐத் தொடர்ந்து ஒலித்த ஆயிரம் பாடல்களும், இலங்கை வானொலியின் சிருங்காரத் தமிழ் உச்சரிப்போடு ஒலித்த இசைப் பூங்கொத்தில் மிதந்து வந்த பழைய பாடல்களும், அப்பா எப்போது ரேடியோ ஸ்டேஷன் மாற்றுவாரென கேட்க ஆரம்பித்த மதுரை மணி ஐயரும் பட்டமாளும் சிறு வயதின் மறக்க முடியாத ஆணிவேர் ஆழங்கள்.

பாடல்களோடு இயைந்த நினைவுகளாய் சில மனிதர்கள், சில சிந்தனைகள், சில இடங்கள், சில தருணங்கள் - செங்கல் இடுக்கில் பூசப்பட்ட காரைப் பூச்சாக நினைவுகளை நிரந்தரம் செய்கிறது இசை.

"உறவுகள் தொடர்கதை" - ஒரு ரயில் சிநேகமாய் கடந்து சென்ற நண்பரை நினைவுபடுத்தும். வள்ளி படத்தின் "என்னுள்ளே என்னுள்ளே" வுக்கு முன்னர் ஒலிக்கும் மிருதங்கம், என் பிரியமான உறவுகளை நினைவுபடுத்தும். "பூ வண்ணம் போல நெஞ்சம்" கல்லூரிக் கனவுகளை மீட்டும். இது பலரும் நினைப்பது போல இளையராஜா அல்ல - Salil Chowdry!!

10 வயதில் அப்பா திரையிசையில் ராகங்களைக் கண்டறியும் நாட்டத்தை ஏற்படுத்திய பிறகு, பாடல்கள் மேல் பற்று அதிதீவிரமாயிற்று. G. ராமநாதனில் ஆரம்பித்து, C.R. சுப்புராமன், சுதர்சனம், S.V.வெங்கட்ராமன், KVM, MSV,... இளையராஜா வரை வற்றாத நீரூற்றுக்களில் திளைத்த பிறகும் வளர்கின்ற தாகம்.

சில நாட்கள் பாட்டு ஒன்று மனதில் ஒட்டிக் கொள்ளும் ஈரத்துணியாக. அன்றாட அலுவல்களூடேயும் உலரமால் ஒட்டிக் கொண்டே இருக்கும். மாற்றுப் பாடல் அகப்படும் வரை மனம் கீறல் விழுந்த பழைய ரெகார்டாக அதையே மீட்டிக் கொண்டு இருக்கும். 

இன்றைய அவசர கதி வாழ்க்கையில் ஸ்வரஜதியாய் சங்கீதம். ரயில் தடதடக்கும் தண்டவாளத்தின் அருகில் பூக்கும் பூவிலும், அதில் அமரும் வண்ணதுப்பூச்சியிலும் வாழ்கிறது இசை. வாழ்வின் சுவை குறையாதிருக்க யாவருக்கும் வேண்டும் செவிக்குணவு.

தளர்ந்த தருணங்களில் தாய் மடியாய் 
தொலைந்த உறவுகளின் நீள்நிழலாய் 
கலைந்த கனவுகளின் கண்ணீராய் 
சொல்லாத வார்த்தைகளின் உட்பொருளாய் 
தொலைதூர மீட்சியின் சாட்சியாய் 
தொடுவான நிம்மதியின் ஒளிக்கீற்றாய் 
நம்பிக்கை கோபுரம் சாயாதிருக்க சாரங்களாய் 
யாரோ எழுதி யாரோ இசைத்து யாரோ பாடிய பாடல்கள் - நாமறியாமல் நம்மைப் பார்த்து எழுதியது போல, நாமே முன்பொரு பிறப்பில் பாடியது போல...

திரையிசைக் காற்றடித்து விலகிய திரை ஒன்று, நம் கர்நாடக இசை என்னும் வெளிச்சக் கீற்றை மெல்லத் திறந்து காட்டியது.

சத்தியமாக - தெரியுமென்று சொல்லிக்கொள்ள பாடறியேன் படிப்பறியேன். வீணைக்குள் உறங்கும் நாதங்களை மீட்டியெடுக்க, அதன் வாயிலாக என்னை நானே மீட்டெடுக்க - மீண்டும் மீண்டும் எடுக்கும் முயற்சியாய் மட்டுமே நகர்கிறது வாழ்க்கை. கீதம் தாண்டாத சங்கீதம் என்னுடையது. எனினும் ஏதோ விட்ட குறை தொட்ட குறையாய் உயிரை வருடுகிறது இசையும் ராகங்களும். "தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ" பாடல் அனுபவம் போல உணர்வுகளாய் நிறம் காட்டுகிறது ராகங்கள்.

அதிகாலை வீசும் இளங்காற்று பிருந்தாவனி, மாலை நேரம் மனதுக்குகந்த நட்போடு நடக்கும் போது வீசும் தென்றல் ஹம்சநாதம், மனதை உருக்கும் பக்தி, கருணை - சாருகேசி, நினைவுகளை பின்னோக்கி நகர்த்தும் nostalgic கௌரிமனோஹரி, மிகத் தீவிரமான ஒற்றை நினைவில் உருக வைத்து உரிமையோடு இறையிடம் வாதம் செய்யும் சிம்மேந்திரமத்யமம் - என பார்வை அற்றவனின் யானை அனுபவம்தான் எனக்குப் புரிகின்ற இசை.
எனினும் பற்றற்றான் பற்றைப் பற்றுதற்கு இசை போல இனிதான வேறு மார்க்கம் இருப்பதாய் தெரியவில்லை.

உன்னதமான நம் இசையை, அதன் ஆழங்களையும் சிகரங்களையும் தொட்ட மேதைகளையும் அவர்களின் மேதைமைகளையும் அறிமுகப்படுத்திய நட்புக்கு (Ganesh) நன்றிகள் பல.

மேலும் சில இசை தொடர்பான நினைவுகள் - பாடும் நிலவை (SPB) நேரில் ஒரு முறை ஏர்போர்ட்-ல்  பார்த்தபோது எங்கள் வாழ்வு உங்கள் குரலால் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறது எனச் சொன்னேன். அன்று விமானம் மேகங்களால் நெய்யப்பட்டிருந்தது. அதே போல, இசையால் நம் தலைமுறை ஆண்ட இசை ராஜாவின் நேரடி இசை நிகழ்ச்சி ஒன்றுக்கு என் தங்கையுடன் சென்றிருந்தேன். வயலினும் புல்லாங்குழலும் கொண்டு ஊடும் பாவுமாய் இதயத்தை இசையோடு நெய்தார் ராஜா.

பகல்நிலவின் "பூமாலையே தோள் சேரவா" பாடலின் முன்னர் எழும் 100 violin சேர்ந்திசையும், "தாலாட்டும் பூங்காற்றில்" உருளும் சருகென உதிரும் குழல் ஒலியும் கேட்ட போது உள்ளமொன்று உணரும் மொழி இசை மட்டுமே என்று தோன்றியது.

கானகந்தர்வனை நேரில் கண்டு வெள்ளைக் கமலத்தில் உறை வாணி வந்தது போல வெள்ளாடை வேந்தனாய் வந்த யேசுதாஸ் கச்சேரியில், அவரின் மனமும் மதியும் மயக்கும் குரலில், அவரது சிம்மேந்திர மத்யமத்தில் உயிர் மேலெழுந்து இறையைத் தொட்ட போது மனித்த பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே என்றே தோன்றியது.

இசை குறித்து எழுதிக் கொண்டே இருக்கலாம். நாளை திங்கள், மற்றுமொரு விறுவிறுப்பான வாரம் தொடங்க இருக்கிறது. அதன் இறுக்கத்தை சற்று தளர்த்துவதற்கு இன்னும் சில பாடல்கள் தேவைப்படலாம். எழுதும் விழைவிருப்பின் மீண்டும் எழுதுகிறேன்.

பாடல் மேல் காதலை ஏற்படுத்திய கவிஞர் குறித்தும் மதுவென அமிழ்தென மயக்கும் அவர் தமிழ் குறித்தும் அடுத்த பதிவில்..



No comments:

Post a Comment