Friday, January 8, 2016

அமுதுக்கும் தமிழென்று பேர் - 5

இரட்டைப் புலவர்கள்

தமிழை உயிருக்கு நேராய் வைத்து பெரும் புலமை பெற்றோரில் இளம்சூரியர், முதுசூரியர் என்றறியப்படும் இரட்டைப்புலவர்கள் அடக்கம்.

அவர்கள் புறவாழ்விலும், கவிவாழ்விலும் இணையாகவே இயைந்த இரட்டையர்கள். எவ்விதம் எனில் - இவர்களில் ஒருவர் பிறவியிலேயே கண்பார்வையற்றவர்; மற்றொருவர் நடக்க இயலாதவர். கண்பார்வையற்றவர் நடக்கமுடியாதவரை தோளில் சுமந்து கொள்ள, தோள் அமர்ந்தவர் வழிகாட்ட விழியற்றவர் நடப்பாராம்.

இவ்விதம் உடலால் மட்டுமன்றி, இவர்கள் இயற்றிய கவியாலும் இரட்டையர்கள்; வெண்பா பாடுவதில் வல்லவர்கள் இருவரும். முதலிரண்டடியை ஒருவர் பாட ஈற்றடி (இறுதி அடி) இரண்டையும் மற்றொருவர் பாடி நயமோடு பொருள் விளங்கப் பாடுவது இவர்களது தனிச்சிறப்பு.

அக்கால வழக்கிற்கிணங்க புரவலர்கள்(பொருளோடு அருள் உடையவர்கள், தமிழ்க்கவிக்காக கொடை கொடுத்தோர்) இருப்பிடம் நாடி ஊர்ஊராகப் பயணம் மேற்கொண்ட இவ்விரு புலவர்களும் மதுரை வந்தடைந்தனர்.

பொற்றாமரைக்குளத்தில் நீராடி மீனாட்சி சொக்கநாதரை தரிசிக்கலாம் என எண்ணினர். கால்கள் அற்றவர் கரையில் அமர்ந்திருக்க கண்ணிழந்தவர் துணியைத் துவைக்கத் தொடங்கினார். துணி குளத்துள் கைதவறியது.
அதைக் கண்ட கால் அற்றவர் பாடத் தொடங்கினார்

"அப்பிலே தோய்த்திட்டு அடுத்தடுத்து நாம் அதனைத்
தப்பினால் நம்மையது தப்பாதோ"-

(அப்பு - தண்ணீர்; தண்ணீரிலே துணியை தினமும் போட்டு அப்பினால் - தோய்த்தால், நம்மை விட்டுத் தப்பியோட நினைக்காதோ? என்று பொருள்)

விழியற்றவர் அதற்கு விடைபோல மீதிப் பாடலைப் பாடுகிறார்:
"-அப்படியே 
ஆனாலும் கந்தை, அதிலுமோர் ஆயிரங்கண்
போனால் துயர் போச்சுப்போ"

(போனதென்னவோ கந்தைத் துணிதான்; கந்தை - கிழிசல்; போனால் போகட்டும் - கவலை போனதென்று விடு)

விடவில்லை முன்னவர்- மேலும் தொடர்கிறார்:

"கண்ணாயிரமுடைய கந்தையேயானாலும்
தண்ணார் குளிரையுடன் தாங்காதோ"

சேர்ந்தே இருப்பது - வறுமையும் புலமையும் அல்லவா? அதனால் அவர்களிடம் இருந்ததோ கந்தைத்துணி அதுவும் போய்விட்ட நிலையில், "கிழிந்திருந்தால் என்ன- தண்மை பொருந்திய குளிரைத் தாங்குவதற்கு உதவுமே" என்றார்.

பைந்தமிழைப் பன்னெடும் காலமாய் சிறக்கச் செய்வது அதனோடு இழைந்தோடும் பக்தியே. இதைப் பறைசாற்றுவது போல் பதில் சொல்கிறார் மற்றவர்:

 "எண்ணிப்பார் இக்கலிங்கம் போனாலென்
ஏகலிங்க மாமதுரைச் சொக்கலிங்கம் உண்டே துணை"

(கலிங்கம் - துணி; இந்தத் துணி போனால் என்ன. ஏகாம்பரனாகிய லிங்க ஸ்வரூபமாய் சொக்கலிங்கம் உண்டு நமக்குத் துணையாக நம்மைக் காப்பதற்கு என்று பொருள்)

மேலும் ஒரு சமயம் திருவாரூர் கோவிலில்
"நாணென்றால் நஞ்சிருக்கும் நற்சாபம் கற்சாபம் பாணந்தான்" 
என்று எழுதி நிறுத்திவிட்டார்கள். அதற்கு மேல் அவர்களால் எழுத இயலவில்லை. அதை அப்படியே கோயில் சுவரில் எழுதிச் சென்றார்கள்.

பிறகு வேறு பல ஊர்களுக்கு சென்று திரும்பியபோது பாடல்
 "மண்தின்ற பாணமே - தாணுவே சீரார் மேவும் சிவனே நீர் எப்படியோ நேரார் புரம் எரித்த தேர்" என்று யாராலோ சந்தத்தோடு முடிக்கப்பட்டிருந்தது.

பொருள்: 

முப்புரம் எரிக்க எடுத்துச் சென்ற நாண்(அம்பு) நஞ்சிருக்கின்றது - நைந்து இருக்கின்றது. வில் கல் போல (கற்சாபம்) கனமாக இருக்கின்றது. கல்லால் ஆன வில்லை எப்படி வளைத்து அம்பெய்ய முடியும்? 
அம்போ மண்ணால் அரிக்கப்பட்ட அம்பு  (மண் தின்ற பாணம்).
சிவனே, இவற்றையெல்லாம் கொண்டு எப்படித்தான் முப்புரம் எரித்தீர்களோ!!

இது மேலோட்டமான பொருள்.
 நஞ்சு எனும் விஷம் இருக்கும் வாசுகி எனும் பாம்பை நாணாகக் கொண்டும், நற்சாபம் கற்சாபம் - மேரு மலையே வில்லாகவும், மண் தின்ற பாணம் - கண்ணன் சிறு வயதில் மண் தின்றார். அந்த கண்ணணையே பெருமாளையே அம்பாகவும் கொண்டு முப்புரம் எரித்தார் என்று அர்த்தம் கிடைக்கின்றது. 

அவ்விதம் அழகுறப் புணைந்து அற்புதமாக முடித்தது வேறு யாருமல்ல - நாம் முன்னரே சந்தித்த கவி காளமேகம்!!

சிலகாலம் கழித்து திருவானைக்காவல் கோவிலுக்கு வந்த இரட்டையர் காளமேகத்தைக் காண ஆவலோடு சென்றனர். சிறது நேரம் முன்னரே காளமேகம் காலமானார் என்றறிந்த இருவரும் துடித்தனர்.

"ஆசுகவியால் அகில உலகெங்கும்
வீசுபுகழ்க் காளமேகமே"
என முன்னவர் பாட, இரண்டாமவர் உடனே,
'-பூசுரா
விண்கொண்ட செந்தனவாய் வேகுதே ஐயையோ
மண்தின்ற பாணமென்றவாய்!'
எனப்பாடி அழுதார்.

பள்ளிநாட்களில் இந்த இரட்டைப் புலவர்களைக் குறித்து நான் கேட்ட சந்தேகத்திற்கு மிகுந்த ஆர்வத்தோடு பதில் அளித்து, ஊருக்கு சென்றபின்னர் கடிதம் வாயிலாக மேலும் தகவல்கள் எழுதியனுப்பிய தாத்தா சிதம்பரம் பிள்ளையையும் அவர்களின் தமிழ்க்காதலோடு, தமிழ்ப்புலமையோடு சேர்த்து நினைவுகூரக் கடமைப்பட்டிருக்கிறேன்.

ஊனம் தாண்டும் மனவலிமை; ஆசுகவி(நினைத்தவுடன் பாடுவது spontaneous ) பாடும் பெரும் புலமை; பொருள் இல்லாத ஏழ்மை; அனைத்தையும் கடந்து செல்ல ஊன்று கோலாய் தமிழும் நகைச்சுவை உணர்வும் கொண்டு பாடல் பல எழுதிய இவர்கள் அனைவரையும் நினைவு கூர்வோம்.




No comments:

Post a Comment