Thursday, November 9, 2017

பனிக்குள் உறைந்திருக்கும் ஆத்மா - முழு வடிவம் - பகுதி 1

பனிக்குள் உறைந்திருக்கும் ஆத்மா என்ற தலைப்பில் சிங்கப்பூர் சிராங்கூன் டைம்ஸ் மாத இதழில் வெளியான எனது கசோல் பயணக் கட்டுரையின் முழுமையான வடிவம்.

இப்பயணக்கட்டுரை சிராங்கூன் டைம்ஸ் 2017 ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மாத இதழ்களில் வெளிவந்தது. 

மின்திரையில் எழுத்துக்கள் மிளிர்ந்து கொண்டிருக்கின்றன. கண்ணின் எரிச்சலைக் குறைக்க வெளியே பார்வையை ஓட்டினேன். எங்கிருந்தோ வந்து சாங்கியில் தரையிறங்கிக்கொண்டிருக்கிறது விமானம் ஒன்று. வீட்டுக்குத் திரும்பும் நேரமாகி விட்டது. முன்னிரவிலும்  கூட்டம் நிரம்பியிருந்த பேருந்துப் பயணம். வீட்டுள் நுழைந்து அரிசியைக் களைய நீரைத் திறந்து விட்டேன். பகலின் வெப்பம் சேர்ந்து விட்ட அறை தகித்தது. புழுக்கத்தைப் போக்க சன்னலைத் திறக்க முற்படுகையில் கண்ணாடி விளிம்பில் சிறகுகள் ஒடுக்கி அமர்ந்திருக்கிறது ஒரு வண்ணத்துப் பூச்சி. சன்னலை அப்படியே திறக்காமல் விட்டு விட்டு   வெளியே பார்த்து கொண்டிருக்கிறேன். மரின் டெர்ரஸ் அடங்கிக் கொண்டிருக்கிறது. இன்னும் பல வீடுகளில் விளக்குகள் ஒளிர்கின்றன.அடுத்த நாளுக்கான ஆயத்தமாக இருக்கலாம்ஒவ்வொரு நொடியும் அடுத்த நொடிக்காக அடுத்த நாளுக்காக அடுத்த வருடத்துக்காக. ஒளியைக் காணமுடியா விழிகளில் நிழல் மட்டுமே நீள்கிறது.

குருட்டு சிந்தனையில் நீர் வழிந்தோடிக் கொண்டிருக்கிறது. அவசரமாகச் சென்று குழாயை நிறுத்தினேன். இருபத்து நான்கு மணி நேரமும் நீருக்குத் தட்டுப்பாடு இல்லாத தேசம் - பணம் நீரைப் போல  செலவழிக்க முடிந்தால், நீரைப் பணம் போல எண்ணி எண்ணி செலவழிக்க வேண்டியதில்லை. பெருமூச்சு வந்தது.  பிரச்சனை இதுவல்ல; சில நாட்களாகவே செய்யும் வேலையில் மனமில்லாது கவனம் சிதறுகிறது. அலுவல் சுமையோ மனதை வருத்தும் கவலைகளோ ஏதுமில்லை. எப்போதும் போல எந்த மாற்றமும் திகைப்பும் இன்றி அலுவலகம் வீடு என ஒவ்வொரு இன்றும் நேற்றாகிக் கொண்டிருக்கின்றன. உண்மையில் அச்சில் வார்த்தது போன்ற தினங்கள்தான் சலிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன.

கீழே சிறு தள்ளுவண்டியில் அட்டைப் பெட்டிகளை வைத்துத் தள்ளியபடி நடந்து கொண்டிருக்கிறாள் ஒரு வயதான பெண்மணி. எழுபது வயதேனும் இருக்கும். கணினித்  திரை முன்னர் திறை செலுத்தும் இத்தலைமுறைக்கு எழுபது வயதில் நடக்க முடியுமா எனத் தெரியவில்லை. இலக்கின்றி ஓடும் ஓட்டப்பந்தயத்தில் ஆளுக்கொரு திசையில் நிற்க நேரமின்றி ஓடிக் கொண்டிருப்பது போலத் தோன்றியது. வழித்தடத்தை  ரசிக்க மறந்த நெடும்பயணம்.

இரவுணவை முடித்து விட்டு இணையத்தில் ஏதோ மேய்ந்து கொண்டே இத்தனையும் எண்ணிக் கொள்கிறேன். கை தன்னிச்சையாக கூகுளில் பயணங்கள் செல்வது குறித்துத் தேடியது. தேடலின் விடையென உலகமே வந்தது. எங்காவது போக வேண்டும்; புதிய இடங்களைப் பார்க்க, புதிய காற்றை சுவாசிக்க, மனதைப் புதுப்பித்துக் கொள்ள. தனித்து செல்வதில் உள்ள தயக்கங்களை எண்ணியே பல பயணங்கள் புறப்படாமலேயே முடிந்துவிட்டிருக்கின்றன. எண்ணிப் பார்த்தால் எல்லாப் பயணங்களும் தனித்தனியானவையே; எத்தனைபேர் உடனிருப்பினும்.

ஒரு தளத்தைத் தேர்ந்தெடுத்து, பெண்களுக்கான சுற்றுலா மற்றும் மலையேற்றத் திட்டங்களைப் பார்த்தேன். அவற்றில் பெரும்பாலானவை பத்து தினங்களுக்கு மேற்பட்டதாக இருந்தன. அத்தனை தினங்கள் விடுமுறையும் அரிது; முதலில் சிறியதாக ஆரம்பிக்கலாமென்று தோன்றியது.அப்போது கண்ணில் பட்டது 'கசோல்' - 5 நாள் பயணம் பற்றிய அறிவிப்பு. சிறிது கசோல் குறித்து இணையத்தில் படித்தேன். கசோல் இந்தியாவின் இமாச்சல பிரதேச மாநிலத்தில் இமயத்தின் மடியில் ஒரு சிற்றூர். பயண ஒருங்கிணைப்பாளர்கள் (Backpackers Paradise) குறித்து சிறிது வாசித்தேன். தெரிந்த நண்பர்கள் நல்லவிதமாக அக்குழு பற்றி எழுதியிருந்தனர். பயணத்துக்குப் பதிவு செய்து கொண்டேன்.

அந்த நாளும் வந்தது. சரியாக யோசிக்காது முடிவெடுத்து விட்டோமோ என்று மனதின் ஒரு மூலையில் ஒரு சிறு பதற்றம் இருந்தததுசிங்கப்பூரிலிருந்து தில்லி சென்று, அன்றிரவு காஷ்மீர் கேட் என்னும் இடத்தில் இருந்து கசோலுக்குப் புறப்படுவதாகத் திட்டம்.

விமானத்தில் கூட்டமில்லை. பாதையை மாற்றச் சொல்லி புதுதில்லிக்குமேல் வானமெங்கும் Take Diversion’ அறிவிப்புகள் போலும். முக்கால் மணி நேரம் விமானம் நகரை வட்டமடித்தது. நன்கு தில்லியைச் சுற்றிப் பார்த்தேன் எனச் சொல்லலாம் - என்ன, கொஞ்சம் உயரம் அதிகம் அவ்வளவுதான்.

குடியேற்ற வரிசைகளில் வழக்கம்போல நான் நின்ற வரிசை மட்டும் மிக மிகத் தாமதாக நகர்ந்து கொண்டிருந்தது. எனக்குப் பின்னால் வந்தவர்கள் எல்லாம் பொறுமையிழந்து அடுத்த வரிசைகளுக்குச் சென்று முன்னேறினார்கள். நம்பிக்கையோடு காத்திருந்தேன் - நாம் அடுத்த வரிசைக்குச் சென்று நின்றால், அவ்வரிசை வேகம் குறைய இப்போது நிற்கும் வரிசை விறுவிறுவென முன்னேறிவிடும் என்ற நம்பிக்கையில். ஒருமணி நேரம் தாமதாக வெளியேறி வர பிற்பகல் அந்திக் கருக்கல் போல இருண்டிருந்தது.

விமானநிலையத்திலிருந்து தங்கும் விடுதிக்கு  அழைத்துச் செல்லக் கார் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எனவே என் பெயர் தாங்கிய கைகளைத் தேடிக் கொண்டிருந்தேன். முகங்களை உற்றுநோக்கியவர்களின் கைகளில் என் பெயர் இல்லை. கார் வரவில்லையோ என சந்தேகமாக இருந்தது.
சற்றுத் தள்ளி விமானப் பணிபெண்களை சுவாரஸ்யமாகப் பார்த்துக் கொண்டு, அவர்களை நோக்கி சூரியகாந்திபோலத் தலையைத் திரும்பியபடியே நின்ற இளைஞன் கையில் ஒரு அட்டையை வைத்திருந்தான். அப்பெண்கள் காரில் ஏறும் வரை பார்த்துவிட்டு சலிப்பாகத் திரும்பினான். அவனேதான் என்னை அழைத்துச்செல்லும் பையா’(Bhaiya). தெரியாத ஹிந்தியில் பாதுகாப்பான ஒரே சொல்லாக அதுவே தோன்றியது.

அவனும் காத்திருந்து மிகவும் அலுத்திருந்தான் எனத் தெரிந்தது. ஒன்றும் பேசாமலேயே என் பையைத் தூக்கிக்கொண்டு வாகன நிறுத்தத்துக்குச் சென்றான். எனக்கு நினைவில் எழுந்த ஹிந்தி வார்த்தைகளைக் கோர்த்து ஒரு வாக்கியம் தயார் செய்து கொண்டே நடந்தேன். மீண்டும் மீண்டும் மனதுள் சொல்லிப் பார்த்துக் கொண்டு "யஹான் சே ஹோட்டல் கித்னா தூர் ஹை பையா" (இங்கிருந்து விடுதி எவ்வளவு தூரம்) என்று கேட்டேன்.  கூகுளிலேயே விடை தெரிந்து விடும் என்றாலும் ஒரு சிறு முயற்சி - இன்னும் சில வருடங்களில் இந்தியாவில் ஹிந்தியல்லாத மொழிகளில் பேசினால் ஜி.எஸ்.டி அதிகம் என்று அறிவிப்பு வரும் சாத்தியமிருப்பதால்.

முகத்தைப பார்த்தே தெள்ளிய தென்கலை என முடிவெடுத்திருப்பான் போலும்,  திடுக்கிட்டு திரும்பி முகத்தைப் பார்த்துவிட்டு லம்பா லம்பா(நீண்ட) வாக்கியமாகப் பேசத் தொடங்கினான். சப்டைட்டிலோடு பார்த்த எல்லா ஹிந்திப் படங்களையும் நினைவில் கொண்டு வந்து ஒருவாறு டீக் ஹே, பதா நஹி என மானே தேனே போட்டு சமாளித்துக் கொண்டே வெளியே கொட்டும் மழையைப் பார்த்தேன். மழைநீரும் வாகனங்களோடு தில்லி நெரிசலில் சிக்கி  நடுத்தெருவில் நகரவழியின்றி நின்றிருந்தது.

வழியெங்கும் ஏதோ பொதுக்கூட்டத்துக்கான ஆயத்தங்கள்.  "வழியெங்கும் ஏன் இவ்வளவு கூட்டம்" என்பதற்கு மன அகராதியில் ஹிந்தி வார்த்தை தேடி, "கூட்டம்" என்பதற்கு ஒன்றும் கிட்டாமல் "இத்னே சாரே ட்ராஃபிக்  க்யோன் பையா" என அடுத்த கணை தொடுக்க, அராமியா மொழி கேட்டவன் போலத் திகைத்து விட்டு, நான் மீண்டும் அதையே கேட்டதும், என் தமிழ் தோய்ந்த இந்தியை மொழிபெயர்த்துப் புரிந்து கொண்டு "ஆஜ் யோகா திவஸ் ஹை யஹான் " (இன்று யோகாதினம் இங்கு) என்று சொல்லிவிட்டு மீண்டும் லம்பா வாக்கியங்களுக்குத் தாவினான்.

 குடியரசுத் தலைவர் மாளிகையின் கண்டிராத வாயில் இருந்த சாலை வழியாக நீரைக் கிழித்துச் சென்றது கார். புரிந்தும் புரியாமலும் பேசிக்கொண்டே
அரசாங்க அதிகாரிகள் குடியருப்பு நிறைந்த கன்னாட் ப்ளேஸ் பகுதிகளில் கார் வலம் வந்தது. சந்தேகத்துக்கிடமான சந்துகளில் புகுந்து, அந்த சந்துகளைச் சாலைகள் எனச் சொல்ல வைக்கும் ஒரு நெரிபடு சந்தில் புகுந்து  இடைச் செருகல் போல நின்றது விடுதிக்கு முன்பாக. தலைநகரம் மழை அணிவித்து வரவேற்ற காரணத்தால் வாயிலில் நிற்க முடியாமல்   வரவேற்பறைக்குள் ஓடினேன்.

அறையைக் காட்டச் சொல்லி ஒரு சிறுவனல்லாத இளைஞனை உடன் அனுப்பினார் மேலாளர். அறைக்குள் பையை வைத்துவிட்டு முகத்தையே பார்த்துக் கொண்டு நின்றான் அவன். அன்றாடம் படிக்கும் செய்திகளும் அது தில்லி என்னும் உணர்வும் உள்ளுக்குள் உதறிக் கொண்டே இருந்தது ஒரு மூலையில். எனவே ஷுக்ரியா சொல்லி அவனை வெளியேற்றி கதவைத் தாளிட்டேன். என்ன உணவு இருக்கிறதென்று தொலைபேசியில் கேட்டு விதவிதமாக பராட்டா வகைகளின் பெயரைக் கூறியவனிடம், ஒரு சீரக சாதமும் பருப்பும் சொல்லிவிட்டு படுத்துக் கொண்டேன்.

நான் பிறந்து வளர்ந்த தேசம்தான், ஆனால் புரியாத மொழி, வேறு வகையான மனிதர்கள், வசதியான அறையெனினும் மிக நெரிசலான புறச்சூழல், உணவுப் பட்டியலில் சோற்றைப் புறந்தள்ளிய ரொட்டி பராட்டா வகைகள். பழகிய எல்லையைத் தாண்டி வந்த நாயைப் போல எதிர்வரும் ஒவ்வொன்றுக்கும் மனம் விழிப்புணர்வோடு குரைத்துக் கொண்டிருந்தது.

அந்த இடம் புதுதில்லியின் மையமான கன்னாட் ப்ளேஸ் அருகே உள்ள நெரிசலான சந்துகள் நிறைந்த பகார்கஞ்’ பகுதி.  உலகு காணும் ஆயத்தங்களைச் சுமந்து கண்களில் கனவுகள் வழிய வெளிநாட்டினர் பலரும் தங்கும் விடுதிகள் அத்தெருக்களில் நிரம்பியிருந்தன. அறையிலிருந்து வெளித்திறந்திருந்த சிறு பலகணி வழியாக தில்லியின் மழை முடிந்தமாலை நேரத்தைப் பார்க்க முடிந்தது. அந்த சிறிய தெருவின் வழியெங்கும் கார்களை நிறுத்தியிருந்தனர். நான் தங்கியிருந்த விடுதியின் வாசலில் சனீஸ்வரனுக்கு ஒரு சிறிய தெருவோர ஆலயம் இருந்ததுஇரண்டாம் வீட்டுக்குரிய சந்திரனும் மூன்றாம் வீட்டுக்குரிய இந்திரனும் நாலாம் வீட்டதிபதி எந்திரனும் சனி இருந்த வீட்டைப் பார்த்து நடுத்தெருவில் வாகனங்களை நிறுத்தியிருந்தமையால் அர்த்தசந்துஅடைபட்ட தோஷம் உருவாகியிருந்தது. இதன் உச்சமாக நான்கைந்து பேர் கன்னி மூலையில் கேரம் போர்டு வைத்து நடுச்சாலையில் மும்முரமாக விளையாடிக் கொண்டிருந்தனர். அத்தனை பரபரப்புக்கிடையிலும் விளையாடும் நண்பர்களைப் பார்த்தபடி எங்கிருந்தோ இந்தியக் கனவுகளோடு சுற்றும் வெளிநாட்டினர். எனையறியாது புன்னகைத்துக் கொண்டிருந்தேன். மனம் சற்று இலகுவானது.



சாப்பிட்ட பிறகு அதே விடுதியில் தங்கியிருந்த பயண ஒருங்கிணைப்பாளர்களள் மோனிகா மற்றும் அர்ஜன்- சந்தித்தேன். பின் இருபதுகளில் இருந்தனர். மற்றுமொரு மலையேற்ற நிபுணர் அன்று மாலை எங்களுடன் சேர்ந்து கொள்வதாகத் திட்டம். இந்தச் சிறிய குழு இதுபோன்ற பயணத் திட்டங்களை ஒருங்கிணைப்பதைத் தங்கள் முழு நேரத் தொழிலாகத் தெரிவு செய்திருக்கின்றனர். வியட்நாமில் ஒன்றரை வருடங்கள் தங்கி பகுதிநேர ஆங்கில ஆசிரியர்களாகவும் உடற்பயிற்சி மையத்திலும் பணியாற்றிக் கொண்டே இதுபோன்ற பயணங்களை மேற்கொண்டிருக்கின்றார்கள். உடற்திறனை மேம்படுத்திக்கொள்வது குறித்தும் மலையேற்றம் தரும் உற்சாக மனநிலை குறித்தும் ததும்பத் ததும்ப பேசிக் கொண்டிருந்தார் மோனிகாஅவரது அண்ணனின் மறைவுக்குப் பிறகு ஏற்பட்ட மனஅழுத்தத்தைப் போக்கியதில் உடற்பயிற்சியும் மலைப் பயணங்களுமே  முக்கிய பங்கு வகித்தன என்று குறிப்பிட்டார். தினமும் இருபது நிமிடம் ஓடுங்கள்; நுரையீரல் விரிந்து உடல் திண்மை அதிகரிக்கும்என்று கூறினார். ஓடுவதற்கு பயந்து உடல்நிலை சரியில்லையெனக் கூறிய பள்ளி நாட்கள் நினைவுக்கு வந்தன. எனது புன்னகை வதனத்தைப் பார்த்துவிட்டு இவள் ஓடமாட்டாள் எனப் புரிந்துவிட்டது போலும். ‘அல்லது யோகா கற்றுக்கொள்ளுங்கள்என்றார். ஆயிரக்கணக்கில் செலவழித்தே இன்று யோகா கற்க வேண்டியிருக்கிறது. யோகா என்ற வார்த்தையில் கவர்ச்சி சற்றுக் குறைவு போலும் – ‘பவர் யோகா’ என்றெல்லாம் கலரடித்து விற்கிறார்கள்தாத்தாவிடமிருந்து  யோகாசனங்கள் பயின்றிருந்தும், அனைத்தையும் கைவிட்டது குறித்து சிறிது வெட்கத்தோடுதான் பதிலளிக்க வேண்டியிருந்தது.

முதல் முறை மலையேறுவது குறித்த தயக்கங்கள் - எவ்வளவு தொலைவு மலையேற்றம்? குளிருக்கு எனது ஆயத்தங்கள் போதுமானதா? வழியில் கழிப்பறை குடிநீர் வசதிகள் உண்டா? தங்குமிடம் எப்படி? சுடுநீர் வசதிகள் உண்டா என்பது போன்ற நகரவாழ்வு நிரந்தரமாக ஏற்படுத்தி விட்ட அச்சங்கள். எனினும் அனைத்தையும் கேட்பதிலும் தயக்கம். குளிர்தாங்கும் உடைகள் குறித்து மட்டும் விசாரித்து நான் கொண்டு சென்ற ஜாக்கெட் போதுமென அறிந்து கொண்டேன். அருகில் இருந்த கடைவீதிக்கு  உடன் வந்தார் மோனிகா. இன்னதென்று இல்லாமல் தங்கம் முதல் தற்படக் குச்சி(selfie-stick) வரை விற்றுக்கொண்டிருந்தார்கள். கைச்சுமையை அதிகரித்துக்கொள்ளக் கூடாதென்று ஏதும் வாங்கவில்லை.

மாலை ஏழு மணியளவில் காஷ்மீர் கேட் அருகில் உள்ள வெளி மாநிலப் பேருந்து நிலையத்திற்கு சென்று சேர்ந்தோம். ஒவ்வொருவரும் தனியாகவோ தோழியருடனோ வந்து சேர்ந்து அறிமுகம் செய்து கொண்டனர். வந்திருந்த பெண்களில், ஆச்சரியகரமாக ஐவர் பெங்களூரில் இருந்து வந்திருந்தனர். மூன்று பெண்கள் தில்லியிலிருந்தும் நான் சிங்கையிலிருந்தும். வெவ்வேறு துறைகள் வெவ்வேறு மொழிகள் வெவ்வேறு மனநிலைகள் - மிக உற்சாகமான குழு. சராசரி வயது இருப்பத்தைந்து இருபத்தாறு என்பதை மனம் கணக்கிட்டது. முப்பத்தேழில்  குழுவிலேயே வயதான பெண் நான்தான் என்றதும் ஒரு சிறிய திகைப்பு ஏற்படத்தான் செய்தது. புன்னகையும் வந்தது.


தில்லியிருந்து ஒரு டெம்போ ட்ராவலரில் பயணத்தைத் தொடங்கினோம். தோழியரோடு வந்தவர்கள் குழுவாக இருக்கைகளைத் தெரிவு செய்து  அமர்ந்தனர். தனியாக வந்தவர்கள் ஒற்றை இருக்கைகளில் இடம் பிடித்தோம்பாடல்களை இசைக்கச் சொல்லி குரல்கொடுத்தார்கள் தில்லியிலிருந்து வந்திருந்த மூன்று பெண்கள் . பஞ்சாப் ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர்கள். உரக்கப் பேசி உரக்க சிரித்து உரக்கவே உற்சாகமாக இருந்தனர். இந்திக்குத் தயாராகிக் கொண்டிருந்த என்னை அடுத்த கட்ட சோதனைக்கு உள்ளாக்குவது போல அனைத்தும் பஞ்சாபிப் பாடல்கள். நெஞ்சை அதிர வைக்கும் இசை. செவிப்பறை கிழிந்து விடுவது போலிருந்தது. அந்த மொழியே சத்தத்தால் நிறைந்தது போலிருந்தது. என் காதிலிருந்த யேசுதாஸ் காதுக்குள்ளேயே கேட்கவில்லை. நிறுத்திவிட்டு வெளியில் பார்த்தேன். தில்லியின் மஞ்சள் ஒளிச் சாலைகளில் நெரிசலில் சிக்கி மெதுவாக முன்னேறிக் கொண்டிருந்தது வண்டி. உள்ளே ‘பல்லே பல்லே’ என பாங்ரா விதவிதமாக. கண்களை மூடினால் அபியும் நானும் பிரகாஷ்ராஜ் நினைவுக்கு வரவே கண்களைத் திறந்து அனைவரையும் பார்க்கத் தொடங்கினேன்.

அந்த மூன்று பெண்களும் திருமணமானவர்கள். குழந்தைகளையும் கணவரையும் மேய்க்கும் வேலையில்லாத பயண அனுபவத்தைகிடைத்திருக்கும் வாய்ப்பை முழுமையாகக் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். ஆடல் பாடல் கொண்டாட்ட மனநிலை. அவர்களுக்காகவும் அவர்களை அனுப்பி வைத்த குடும்பத்தினருக்காகவும் மனம் சந்தோஷப்பட்டதுபாடல் நின்று விளக்குகள் அணைத்த பிறகு இரவு மெல்ல அனைவரையும் தழுவியது.

13 மணிநேரத்துக்கும் மேலான பயணம்வழியில் ஒரு புகழ்பெற்ற பஞ்சாபி தாபாவில் நிறுத்தி இரவுணவு. பதினொரு மணியளவிலும் கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. ஆலு பராட்டாவுடன் ஒரு சிறு தட்டு நிறைய வெண்ணை கொடுத்திருந்தார்கள். கண்ணறியாது நழுவிப்போகும் காலம் போல வாய்ச்சுவை அறிய முடியாது வழுக்கி இறங்கியது வெண்ணை. தினமும் வீட்டில் தயிர் கடைந்து வெண்ணை எடுப்பது வழக்கம். இந்தப் பாலின் செறிவு வெண்ணையில் தெரிந்தது.

இமாசலத்தின் மலைப்பாதையைத்தொடும்போது அதிகாலை நான்கு மணி. சாலையோரக் கடையில் தேநீர் ஆவி பறந்தது. ஓட்டுனரின் உறக்கம் கலைய தேநீர் குடித்துவிட்டு மலையேற்றம். ஓரிருவர் தவிர அனைவரும் நல்ல உறக்கத்திலேயே வந்தனர்.

 அமைதியான அதிகாலை. ஐந்து மணிக்கெல்லாம் வெளிச்சம் பரவி விட்டது. மெல்லிய குளிர் லேசாகத் திறந்திருந்த சன்னல் வழியாகக் கசிந்து பரவிக் கொண்டிருந்தது. காதில் இளையராஜா உடன் வந்து கொண்டிருந்தார். மலைகளுக்கு நடுவே வளைந்தேறிய பாதையில் சட்லஜ்  குறுக்கிட்டது. பின்னர் சற்று நேரம் சாலையோடு இணைநடை போட்டதுதிருப்பங்களில் வெள்ளியென மின்னி மின்னி மறைந்தன நீரோடைகள்.



காலையில் ஒன்பதரை மணியளவில் ஒரு உணவு விடுதியில் காலைக்கடன்களுக்கு வண்டி நின்றது. நான்கு புறமும் மலைகளின் உற்று நோக்குப் பார்வை. இறங்கி கடைக்குப் பின்னால் சென்றதும், சட்டென்று அரங்கத்தில் பிண்ணனித் திரையை மாற்றுவது போல  பெருகியோடும் பியாஸ். களைப்பும் உறக்கமும் உடனே கலைந்தது. மலைகள் சூழ நீர் பெருகியோடும் அவ்விடத்தில் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதன் சாத்தியங்கள் குறித்து பேச்சு எழுந்தது. இமாசலப் பிரதேசத்தில் பிறந்தவர்களுக்கு மட்டுமே அங்கு நிலம் வாங்கும் உரிமை உண்டு என்பது புதுத்தகவல். மீண்டும் பராட்டா. அதன்பிறகு ஒன்றரை மணிநேரம் பயணம். குலு செல்லும் வழியில் புந்தேரிலிருந்து வழி பிரிகிறது கசோலுக்கு. மலை மகள் பார்வதியின் நிலம் அது. எங்கெங்கும் நிறைந்திருக்கிறாள்.


கசோல் சென்று சேர்வதற்குள் பார்வதி நதி மூடிய இமைகளுக்குள்ளும் புகுந்து விட்டது. மலைகளுக்கு  இடையே தெரிந்து மறைந்தது பனிமலை முகடுகள். இமயம் காணும் தொலைவான் கனவின் வாசலுக்கு வந்துவிட்டது புரிந்தது.

பார்வதி நதிப் படுகையில் அமைந்த கசோல் இந்தியாவுக்குள் சிறிய இஸ்ரேல் என்றே அழைக்கப்படுகிறது. சுற்றுலாப் பயணிகளின் கூட்டத்தில் சற்றுத் திணறுகிறது அந்தச் சிற்றூர். கோவா போல ஒரு ஹிப்பி மனநிலை காற்றில் இருக்கிறது.எங்கெங்கும் இஸ்ரேலிய முகங்கள், இஸ்ரேலிய உணவகங்கள்.  மரங்களுக்கு இடையே சரிவில் ஓடி உடன் வந்தாள் மலையன் மகள்.

 வெண்சுவற்றில் குழந்தை வரைந்த எதிர்பாரா ஓவியக் கிறுக்கல் போல ஓரிடத்தில் ஆற்றின் அக்கரையில், ஒரு சிறு முகடில் தொடுக்கி நின்ற  கட்டிடத்தைக் காட்டி நாம் தங்குமிடம் என்றனர். அங்கு வாகனம் செல்ல வகையில்லையென, சாலையில் இறங்கி, கொண்டு வந்த பெட்டிகளையும் முதுகுச் சுமையையும் சுமந்து கொண்டு, பார்வதியை நோக்கி சரிவில் இறங்கினோம்.

நல்ல வெயில். காற்று மிக வேகமாக ஆற்றுக்கு மேல் இன்னொரு ஆறு போல ஓடியதுஆடையை மீறி உடலைத் தொடும் குளிர்.பேரோசையிட்டு அலைபுரண்டோடும் நதியின் மேல் தொங்கு பாலம், ஒவ்வொரு காலடிக்கும் ஆடியது. நின்றும் நடந்தும் சிரித்தும் வேடிக்கை முகம் காட்டியும் விதவிதமாகப் புகைப்படங்கள்.

புதர்வழி ஒற்றையடித் தடமாக வளைந்தேகிய பாதையில் சந்தேகத்தோடே நடந்தோம். இலைகளும் கிளைகளும் உடலில் உரச சென்று சேர்ந்த இடம் ஒரு வேலியிட்ட சிறுதோட்டம். வேலியைத் தாண்டிக் குதித்துத் ஒரு மாடிப்படியில் இறங்கி நிலம் தொட்டதும் நாங்கள் தங்க வேண்டிய விடுதி. அந்த வீட்டுக்கு வேறொரு நல்ல நடைபாதையும் இருந்தது - எங்கே தொடங்குகிறது அந்தப் பாதையின் முகப்பு எனத் தெரியவில்லை. அது இரண்டு தளங்கள் கொண்ட வீடு. மலைப்பகுதிகளுக்கே உரிய வகையில் இரு தளங்களிலும் சாலையிலிருந்து நுழைய முடிந்தது. பசித்த வயிறும் நீண்ட பயணத்தில் களைத்த உடலும் அமர இடம் தேடியது. அறைகள் ஈரத்தில் பூசணம் பூத்தது போன்ற சுவர்களுடன், ஈரவாடை கொண்ட மெத்தைகளோடு இருந்தது. குழாய்களில் நல்ல காற்று வந்தது. தயார் நிலையில் இல்லாத அறைகள் அரைமணி நேரத்தில் ஆயத்தமாகிவிடும் எனக் காத்திருந்தோம். வேறு சில தொல்லைகளும் அங்கிருப்பதை உணர்ந்த ஒருங்கிணைப்பாளர்கள், மாற்று இடம் செல்ல ஏற்பாடு செய்தனர்.


மீண்டும் மூட்டை முடிச்சோடு ஒரு நடைபயணம் அதே போல  புதரோடும் நதி மேலும். அடுத்த அரை மணிநேரத்தில் புதிய விடுதிக்கு வந்து சேர்ந்தோம். இந்த விடுதி கசோல் கடைவீதிகளுக்கு மிக அருகே வசதியான சிறு வீடு போல இருந்தது. மரத்தரை, நல்ல மரத்தாலான படிகள் கதவுகள், சூடான நீர் குழாய்களில். வெயில்காலத்துக் குளிரே உடலை அவ்வப்போது நடுங்கச் செய்து கொண்டிருந்தது.

இது போன்ற பயணங்களில் முதலில் மனதை ஆயத்தம் செய்து கொள்வது மிக முக்கியம். திட்டத்தில் எதிர்பாராத மாற்றம் ஏற்படின்  
எந்நிலையிலும் பதற்றமோ, எரிச்சலோ அடையாதிருத்தல் அவசியம். ஏதேனும் வசதிக் குறைவிருப்பினும் பயண அனுபவத்தின் பகுதியாகவே அதைப் பார்ப்பது நல்லது. குழுவிலும் குறையை எண்ணிப் பொருமுபவர்கள் இல்லாதிருந்தால் உத்தமம். இல்லையெனில் பயண அனுபவத்தின் முழு நாளின் இனிமைப் பொழுதுகளில் அந்த சில நிமிடங்களின் கசப்பு கலந்து விடும். அவ்வகையில் இது மிக நல்லகுழு.

ஒரு மணி நேரத்தில் ஆசுவாசம் செய்த பின்னர், உணவுண்டுவிட்டு முதல் நாள் நடைத் திட்டத்தின் படி சலால் எனும் சிற்றூரைக் காணக் கிளம்பினோம்.  கிளம்பிய மரத்தின் நினைவில்லாத பறவைகள் கூட்டம். நினைத்த இடத்தில் சிறகோயத் துணிந்த பின் எல்லாத் திசைகளிலும் வானம் விரிகிறது.

இமயம் காணும் கனவுகளை முதுகில் சுமந்தலையும் பல்வேறு நாட்டினர். குறிப்பாக இஸ்ரேல் நாட்டினரால் கடைவீதிகள் நிரம்பியிருந்தன. உணவு விடுதி மேசைகளில் எங்கும் புகைஅப்பகுதியில் பயிராகும் ஒருவகை கஞ்சா மிகப் பிரபலம்கனவுகளில் உறைந்த விழியோடு புகை சூழ எங்கெங்கும் வெளிநாட்டினர் பலர் அமர்ந்திருந்தனர். போதை மருந்து என்றதும் நமக்கு நினைவில் வரும் திரைப்படங்கள் காட்டும் அச்சமூட்டும் சூழல் அங்கில்லை. பயணத்துக்குப் பிறகு வான்நோக்கி கிடக்கும் மாட்டு வண்டிகளின் முகத்தடி போல ஆங்காங்கே, கால்களை மேசைமேல் வைத்து உறைந்துவிட்ட சிரிப்போடும் அமைதியோடும் மலைகளை நோக்கிக் கிடக்கும் ஒரு கூட்டம்.

சந்தடிகளில் இருந்து சற்று வெளியேறியதும், காற்றில் மழைச் சாரலின் குளுமை நிறைந்திருந்தது. ஆறு கண்ணில் படவில்லை. நீரின் பேரோசை மட்டும் கேட்டுக் கொண்டே இருந்தது. பச்சை சுவரொன்றைக் கிழித்து இறங்கிச் சென்ற தொங்கு பாலம் கண்ணில் பட்டது.  முதலடி எடுத்து வைத்ததும் முன்னால் சென்ற பெண் கூச்சலிட்டார். அனைவரும் பதறிப் போய்ப் பார்க்க, பாலத்தில் அவ்விடத்தில் ஒரு பலகை இல்லை. பார்க்காமல் காலை வைத்தால் நதியோடு சங்கமம். அனைவரும் அந்த இடத்தைத் தாண்டும் வரை அங்கேயே நின்று எல்லோருக்கும் சொல்லிக் கொண்டிருந்தார்.

சூழலைக் கண்டு கேட்டு உள்ளே நிறைத்துக் கொள்ளும் வகையறியாது, விதவிதமாக நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டும் ஒளிப்பதிவு செய்து கொண்டும் முன்னேறியது குழு. புகைப்படங்கள் எடுப்பது ஒரு கலை. நினைவுகளை தருணங்களாக்கி, காட்சிகளை தரிசனங்களாக்கி, மனதுக்குப் பிடித்த காலத்தை என்றைக்குமாக உறைய வைத்துவிட ஒரு எளிய மானுட முயற்சி. ஆனால் சில நிமிடமே வாழும் புற்றீசல் விருப்புகளுக்காய் சமூகவலைத் தளங்களுக்கென படம் எடுப்பது மட்டுமே பலரது பயண அனுபவங்களாகி விடுகிறது

- பயணம் தொடர்வோம் -




No comments:

Post a Comment