Saturday, September 26, 2020

பாடும் வானம்பாடி

 பாடும் வானம்பாடி!

இசை நம்மை என்ன செய்யக்கூடும், என்னவெல்லாம் செய்திருக்கிறது என உணர்த்திவிட்டுப் போயிருக்கிறார் எஸ்.பி.பி.

எந்தப் பிரபலங்களின், திரை ஆளுமைகளின் மறைவும் இவ்வளவு தூரம் பாதித்ததுமில்லை, இவ்விதம் நேருமென்று நேற்று வரை தோன்றியதுமில்லை. எனக்கு மிகவும் பிடித்த குரல்களில் ஒருவர், நான் ரசிக்கும் இசை ஆளுமைகளில் மிக முக்கியமான ஒருவர். எனில் அவர் அகத்தில் நிறைத்திருக்கும் இடமென்ன என்பதை இந்த இரு தினங்களில் அவ்வப்போது அவரது அந்த மென்மையும் திடமும் சரியான கலவையில் இணைந்த அக்குரல்கேட்டு விழிநிறைகையில் உணரமுடிகிறது. எந்தப் பாடல் வரி கேட்டாலும் அது அவருக்கும் நமக்குமான தனிப்பட்ட உறவை, நேசத்தைக் குறித்ததாகவே ஒலிக்கிறது. 
"பக்கத்தில் நீயுமில்லை, பார்வையில் ஈரமில்லை..", 
"நாயகன் மேலிருந்து நூலினை ஆட்டுகின்றான்
நாமெல்லாம் பொம்மையென்று நாடகம் காட்டுகின்றான்",
"எந்தன் மூச்சும் இந்தப் பாட்டும் அணையா விளக்கே", 
"ஆடாத மேடை இல்லை போடாத வேஷம் இல்லை, சிந்தாத கண்ணீர் இல்லை, சிரிப்புக்கும் பஞ்சம் இல்லை", "துணை நான் அழகே துயரம் விடு", 
"அன்பிலே வாழும் நெஞ்சில் ஆயிரம் பாடலே", 
"நீ இல்லையேல் இன்று நான் இல்லையே...எந்தன் ராகங்கள் தூங்காது..",
" நிலா காலங்களில் சோலைகளில் ஆடும் சுகம் கோடி", 
"விதி மாறலாம் உன் பாடலில் சுதி மாறக் கூடுமா", 
"உதய கானம் போதுமே எந்தன் உயிரில் அமுதம் ஊருமே".. எதைக் கேட்டாலும் மேலெழுந்து வந்து நிறைகிறது அவர் முகம். அந்த சிரிப்பு.

சென்ற வருடம்(2019) சிங்கை வந்திருந்த இசை சிகரங்கள் சித்ரா, பாலு மற்றும் யேசுதாஸ் அவர்களை நேரில் பார்க்க வாய்ப்பு கிடைத்தது. SPBயின் சற்றும் இளமை குன்றாத குரல்; நள்ளிரவு தாண்டி நீண்ட இசை மழையில் சற்றும் தொய்வின்றி இசை பொழிந்தார். மறக்க முடியாத பொன்மாலைப் பொழுது. ஒவ்வொரு இசைமேடையிலும் ஒவ்வொரு சககலைஞரையும் அன்போடு அணுகும் அவரது நேசம், மிகவும் இளவயதுப் பாடகர்களை இலகுவாக்கி, அவர்கள் பதட்டமின்றிப் பாட வகை செய்து பின்னர் மனதாரப் பாராட்டும் உளவிரிவு, இசைக்குழுவைப் பாராட்டவும் ஒரு முறையும் தவறாத அவரது பண்பு.




ஒரு வயதுக் குழந்தையாக எனது முதல் இசை ரசனை இவருடைய "ஆயிரம் தாமரை மொட்டுக்களே" பாடல் என்று பல முறை அம்மா அப்பா சொல்லக் கேட்டிருக்கிறேன். எனக்கு இன்றும் அந்தப் பாடலின் முதலில் வரும் மிருதங்கத்தில் மனம் தாளமிடத் தொடங்கிவிடும். அது ராஜாவின் இசையும் இவரது குரலும் இணைகையில் மட்டுமே எழும் மாயம்.

நல்ல இசை, மனதோடு உறவாடும் இசை என்றும் தன்னிருப்பை பறைசாற்றிக் கொள்ளாது தோன்றாத்துணையாக எப்போதும் உடனிருந்து கொண்டே இருக்கும். நண்பர்களோடு உறவுகளோடு உடனிருக்கையில், மகிழ்ந்திருக்கையில், பிரிந்திருக்கையில், தனிமையில், கண்ணீரில், ஆனந்தத்தில், பயணத்தில், நினைவுகளில், ஒலித்த பாடல்கள். வாழ்வோடு கலந்தவை. சூழ்ந்திருந்த காற்று சுவாசமாவது அறியாதது போல, உணவு நம் உடலாகிவிடுவது போல உள்ளே ஒன்று கலந்து போயிருக்கிறது இந்த இசை, இவரது குரல்.


2013ல் மதுரையிலிருந்து சென்னை வருவதற்கு வழக்கம்போல இரு மணிநேரம் முன்னதாகவே விமான நிலையம் வந்து அமர்ந்த போது ஏறக்குறைய காலியாக இருந்த காத்திருப்பு அறையில், நான் அமர்ந்திருந்த வரிசையின் அடுத்த கோடியில் அமர்ந்திருந்தவர் SPB போலத் தெரிந்தார். மிகத் தயக்கத்துடன் சற்று அணுகி அமர்ந்து சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, அவரது உதவியாளருடனான உரையாடலில் இருந்து அவர்கள் கொடைக்கானலில் இருந்து திரும்புவதை அறிந்து கொண்டு, அருகே செல்லவதா, தொந்தரவாக இருந்து விடப் போகிறதே எனத் தயங்கிவிட்டு, சிறிது நேரம் கழித்து அருகே சென்றேன். வெள்ளை உடையில் பாடும் நிலா. அருகே ஒரு மடிக்கணிணி.

என்ன சொல்வது, எதைச் சொன்னாலும் ஆயிரமாயிரம் பேர் சொல்லி அவர் கேட்டிருக்கக்கூடிய சொற்களைத்தானே சொல்ல முடியும். மிக மெதுவாக அணுகி, 'வணக்கம் சார், உங்கள் பாடல்களால் ஆசீர்வதிக்கப்பட்டது எங்கள் முழுவாழ்வும். உங்கள் ஆசி வேண்டும்' என்று வணங்கினேன். மிக மென்மையான அந்தப் புன்னகை. 'அப்படியா, ரொம்ப சந்தோஷம்' என்று கண்களைப் பார்த்து ஒரு சிரிப்பு. கையெழுத்துப் போட்டுத் தருமாறு படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை கொடுத்ததும்,புத்தகத்தைத் திருப்பி பின்பக்கம் அது என்ன புத்தகம் என்று வாசித்துப் பார்த்தார். (அது Aleph எனும் Paulo Coelho எனும் பிரேசில் எழுத்தாளரின் ஆன்மீக அனுபவத்தளம், மற்றும் குருவுடனான ஆன்மீக உறவு சார்ந்த நாவல்). மீண்டும் முகத்தைப் பார்த்து ஒரு புன்னகை. பிறகு 'God be with you always - Balu' என்று கையெழுத்திட்டுத் தந்தார்.அந்த தருணத்துக்கெனவே இளையராஜா காதுகளில் வீணையும் குழலுமாய் வாசித்துக் கொண்டிருந்தார்.

அதன் பிறகு மெல்ல மெல்ல கூட்டம் சேர்ந்து விமானப் பயணம் துவங்கியது. சிறிய கோழிக்குஞ்சு போன்ற விமானம். இரண்டு வரிசை பின்னால் சன்னலோரத்தில் அமர்ந்திருந்தார் எஸ்.பி.பி. வெளியே பஞ்சுப்பொதிகளுக்கிடையே விமானம் பறந்த போது மனம் விம்மிக்கொண்டிருந்தது. பாடும் நிலவோடு வானில் ஒரு பயணம் என்று.
"என் வானமெங்கும் பௌர்ணமி இது என்ன மாயமோ" என்று காதில் ஒலித்த போது மீண்டும் ஒருமுறை அவரைத் திரும்பிப் பார்த்துக் கொண்டேன். அந்த தருணத்தை என்றைக்குமாக பொத்தி வைத்துக் கொண்டேன்.

இதோ இந்த நள்ளிரவில் வான் அலைவரிசையில்
"நாதம் ஒன்று போதும் எந்தன் ஆயுள் கோடி மாதம், தீயில் நின்றபோதும் அந்தத் தீயே வெந்து போகும் நானே நாதம்" என்று கையடித்து சத்தியம் செய்கிறார். 

பாலு, நீங்களே நாதம், காற்றின் தேசம் எங்கும் உங்கள் கானம் சென்று தங்கும், வாகை சூடும்..

1 comment:

  1. நல்லதொரு பதிவு! நாம் பல ஆளுமைகளால் ஈர்க்கப்பட்டிருப்பினும்.....நமக்குள் தெரியாமல் நம்மில் கலந்த , நம்முள் நிறைந்த இசை ஆளுமை இவர். எத்தனை பாடல்கள் கேட்டிருப்பினும் எத்தனை பேர் பாடக் கேட்டிருப்பினும் இவரின் இடம் நிரப்ப யாருமில்லை! இதுவரை நான் எந்தவொரு திரை ஆளுமைகளின்/கலைஞர்களின் பிரிவினாலும் கலங்கியதில்லை.... முதுமையும் நோயும் மனித வாழ்வின் முற்று நோக்கிய பயணமென நாமெல்லாம் அறிந்திருப்பினும் உற்ற உறவின் வெற்றிடம் நம்மை கலங்க வைக்கும்....அது போலத்தான் இருந்தது SPB அவர்களின் மறைவும்...நான் நேரில் பார்க்காத பழகாத ஒருவர் இத்தனை தாக்கத்தை ஏற்படுத்த முடியுமா?! நம் வாழ்வின் பயணத்தில் துணையாக வந்தவர் இன்று தூரமாக போய்விட்டார்...அவரது இறப்பு என்பதை விட மறைவு என்ற சொல்லே மிகப்பொருத்தம்... தன் உடலை மறைத்துக் கொண்டு குரலால் நம்மோடும் நமக்கு பினபும் இசை இவ்வுலகில் இருக்கும்வரை வாழ்வார்.

    ReplyDelete