Monday, March 15, 2021

சிங்கை குறிப்புகள் - 21 - நில்லாப் பெருஞ்சகடம்

மில்லேனியா டவரில் பணிபுரிந்து கொண்டிருந்த காலத்தில் ஒவ்வொரு நாளும் பதினாறு முதல் பதினெட்டு மணிநேரம் வேலை நேரமிருக்கும்.  அந்த வேலை அழுத்தங்களுக்கிடையே எனது மேலாளர் ஒரு தனிச்சலுகையாய் ஜன்னலோர இருக்கையை எனக்களித்திருந்தார். அங்கு தெரியும் காட்சியின் அழகிலும் குறைந்துவிடாத கவனத்தோடு வேலை செய்வேன் என்று அச்சலுகை தரப்பட்டது. கடலின் நீலமும் வானின் நீலமும் கரைந்து கசியும் நீலவெளியில் கலங்கள் அந்தரத்தில் மிதந்து கொண்டிருப்பதும், கல்லாங் நதி சென்று கடலிணைவதும் அங்கு தெரியும். இன்றைய சிங்கையின் முக்கிய அடையாளங்களாக மாறிவிட்ட பல கட்டிடங்கள் அமைப்புகள் அன்று அங்கு இல்லை. அந்த ஜன்னல் வழியே தெரிந்த நீலவிதானத்தை ஒரு ஓவியத்தாளாகக் கொண்டு முற்றிலும் வேறொரு சித்திரத்தை வரைந்து விட்டது சிங்கை. 



அந்தத் தளத்துக்கு, அந்த சாளரத்துக்கு இப்போது அனுமதியில்லை, ஆதலால் அந்த வழியே காணச் சாத்தியமான இன்றைய காட்சிக்கோணத்தை வேறு இடங்களிலிருந்து பார்த்து ஆறுதலடைய வேண்டியிருக்கிறது. 2006-ல்தான் சிங்கப்பூர் ஃப்ளையர் (Singapore Flyer) எனப்படும் மாபெரும் சுழல்ராட்டினத்தை நிர்மாணிக்கத் தொடங்கினார்கள்.

Singapore Flyer from F1 Track nearby



150மீட்டர் விட்டமும் 165அடி உயரமும் கொண்டது என்றார்கள்,
நானமர்ந்திருந்த 42 தள உயரம் கொண்ட கட்டிடத்தைப் போலவே 42 தள உயரம் கொண்ட சுழல் சக்கரம், இந்த நின்றசீர்நெடுமாறன்(மில்லேனியா கோபுரம்தான்) சுழல்வதைக் கற்பனை செய்ய இயலவில்லை. 

தொடக்கத்தில் அங்கு என்ன பணி நடக்கிறது என வெளியே தெரியவில்லை.மாபெரும் தடுப்புகள் மறைத்திருந்தன. மில்லேனியா வாசலிலேயே இருந்த பேருந்து நிறுத்தத்தில் இருந்து நீளும் மாபெரும் பரமபதப் பாலங்கள்(ஓபிர் சாலையும், ரோசர் சாலையும், பெஞ்சமின் ஷியேர்ஸ் பாலத்தோடு இணைந்து மேலேறி கல்லாங் நதியைக் கடந்து கிழக்கு கடற்கரை சாலை நோக்கி செல்லும்) வழியாக அனுதினமும் நான் பயணம் செய்யும் 36ஆம் எண் பேருந்து மரைன் பரேட் நோக்கி செல்லும். அந்தப் பாலத்தின் உச்சத்தில் கல்லாங் ஆற்றைக் கடக்கும் போது, அருகே உள்ள தளத்தில் இரவும் பகலும் வேலை நடப்பது தெரியும்.

Benjamin Sheares Bridge


சில நாட்கள் கழித்து கழியூன்றித் தாண்டும்(pole vault)  போட்டிகளுக்காக நடப்பட்ட கழிகள் போன்ற ஆனால் அளவில் மிகப்பெரிய ஒரு கட்டுமானம் வெளித் தெரிய ஆரம்பித்தது. இரவும் பகலும் சிங்கையில் நடந்து கொண்டேயிருக்கும் கட்டுமானங்கள் ஒரு வியப்புக்குரிய காட்சி. பொது வழித்தடங்களுக்கு எந்தவித சிரமும் ஏற்படுத்தாது நம் காலடியிலேயே மாபெரும் கட்டுமானங்கள் நடந்தேறிவிடும். அதுபோல இதுவும் ஓயா உழைப்பில் சிதல்புற்று போல கணந்தோறும் வளர்ந்து கொண்டிருந்தது. 

இதன் மையத் தூண்கள் நடப்பட்டிருந்தன 


சில காலம் கழித்து அதில் ஆரங்கள் அமைக்கப்பட்டு பகுதி பகுதியாக வட்டக்கோண வடிவங்கள் (பீட்ஸா துண்டங்களின் வெளிக்கோடு போல) அதில் பொருத்த ஆரம்பித்தார்கள். 




மாபெரும் வடிவமாதலால் அதன் ஒவ்வொரு சிறு துண்டும் இணைக்கப்பட்டு வளர்ந்து வருவதை கண்களால் அறிய முடியவில்லை. 2007 மத்தியில் ஒரு மாபெரும் மிதிவண்டிச் சக்கரத்தை நிமிர்த்தி வைத்தாற் போல அது எழுந்து நின்றது. 

2007


சில மாதங்கள் கழித்து அதில் கண்ணாடிக் கூண்டுகள் பொருத்தப்பட்டன. கண் முன் நிகழ்ந்து கொண்டே இருப்பதும், மாற்றமேயின்றி அப்படியே இருப்பதும் போன்ற மாயை கொண்டதாக  வாழ்வைப் போல இதன் மாற்றமும் வளர்ச்சியும் கண்ணறிய முடியாததாக இருந்தது.



சில மாதங்கள் கழித்து நான் சிங்கையிலிருந்து கிளம்பி விட்டேன்.சில வருடங்கள் கழித்து மீண்டும் வந்தபோது சிங்கையின் கடல்முகம் முழுக்க மாறிவிட்டது. 

Marina Barrage (கடல்முகத்தில் தடுப்பணை) & Gardens by the Bay(கண்ணாடிச் சிறகுகள்) - View from Singapore Flyer

வளைகுடா தோட்டங்கள்(Bay Gardens), மரீனா பராஜ்(Marina Barrage), சிங்கப்பூர் ராட்டினம்(Singapore Flyer), மரீனா பே சாண்ட்ஸ்(Marina Bay Sands) என மாபெரும் தூரிகை கொண்டு ஏதேதோ வரைந்து விட்டார்கள். முதல் முறையாக 2012-ல் மாதங்கியின் அம்மா சிங்கை வந்தபோது அவர்களுக்கு ஊர் சுற்றிக் காட்டுவதான சாக்கில் ஏற்கனவே அறிமுகமான சிங்கையை மீண்டும் மறுஅறிமுகம் செய்துகொண்டோம். அப்போதுதான் முதல் முறையாக இந்த மாபெரும் சுழல் வளையத்தின் அடிவாரம் செல்ல நேர்ந்தது.     

நில்லாச் சகடத்தைத் நிறுத்தும் கம்பிகள்

மில்லேனியா டவர் அருகே இறங்கி ஃப்ளையர் நோக்கி நடந்து சென்றோம். உயரமான எல்லாவற்றிற்கும் உரிய விதத்தில் அருகெனக் காட்டி நடக்க நடக்க விலகிச் சென்றது, அது அங்கேயேதான் நின்றுகொண்டிருக்கிறது என்ற நம்பிக்கையில் தானே உயரங்களை நோக்கி நடந்து செல்கிறோம். 



சாலைக்கு அப்புறம் 541அடி உயரம் கொண்ட (165 மீட்டர்) அத்திகிரி ஒரு மேடையின் மீது நின்று கொண்டிருந்தது. 

Singapore Flyer
சிங்கப்பூரின் முக்கியமான முகப்பு அடையாளங்களை ஒன்று அல்லது இரண்டு நாட்களில் சுற்றிப் பார்ப்பதற்கான பேருந்துகள் அந்தக் கட்டிடத்துக்கருகே சுற்றுலாப் பயணிகளை உதிர்த்துவிட்டுக் கிளம்பிக் கொண்டிருந்தன, பல தேசத்து முகங்கள் அங்கே தலைதூக்கி அந்த மெல்லென சுழலும் சக்கரத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். 



வெளிர் நீல வானத்தின் மீது மிதந்து செல்லும் வெண்துகில்கள் ஒளியென சிதறிக்கொண்டிருந்தன. அருகில் ஓடும் கல்லாங் நீரின் பிரதிபலிப்பும் சேர்ந்து சில நொடிகளுக்கு மேல் அச்சுழலியை காண விடாது செய்தது. 



மேடை போல வெளியே தெரிந்த அந்த வளாகத்தில் நகரும் படிகளில் ஏறி மேலே சென்றதும் இரண்டாம் தளத்தில்  சில அங்காடிகள், உணவகங்கள் இருந்தன.   நெளி முக்கோண வடிவம் கொண்ட அக்கட்டிடத்தின் மையத்தில் அம்மாபெரும் மோதிரத்தை ஏந்தி நின்ற கால்களுக்கு இடையே மழைக்காடுகளை நகல் செய்திருக்கிறார்கள். வண்ண கோய்  மீன்கள் நீந்தும் ஜப்பானிய கோய் நீர்க்குளமும் தெரிகிறது. வளத்தின் அடையாளமாக வண்ணமயமான கோய் மீன்களை வளர்க்கிறார்கள். 

கோய் நீர்க்குளம்

கால்களின் கீழே
எல்லா சுற்றுலாத் தலங்களையும் போல முகப்பிலேயே ஒரு இடத்தில் நிறுத்தி குழுவாகப் படங்கள் எடுக்கிறார்கள், அவ்விடம் விட்டு வெளியேறும் போது அச்சுற்றுலாத் தலம் பின்னணியில் இருக்க நாம் அதன் முன்னர் நிற்பது போன்ற புகைப்படங்கள் விற்பனைக்கு இருக்கும்.  முதல் சில முறைகள் இதில் மயங்கி படம் எடுத்துத் தெளிவது மரபு.

மேலும் ஒரு தளம் ஏறிச் சென்றதும் ராட்டினத்தில் தரை தொடும் கண்ணாடிக்கூண்டில் ஏறிக்கொள்ளும் மேடை இருக்கிறது. 

ஏறிக்கொள்ளும் மேடை (இடப்புறம்)


வழக்கமாக இது போன்ற மாபெரும் ராட்டினங்களில் முக்கோண வடிவ பட்டையாக இதன் வெளிப்புற ஆரம் அமைக்கப்படுமாம். இந்த மாபெரும் சுழலியின் வெளிப்புற ஆரம் முழுவதும் ஒரு ஏணி போன்ற பட்டை வடிவத்தில் அமைந்திருக்கிறது. 



அதன் வெளிப்புற விளிம்பில் 28 பேர் வரை பயணிக்கக்கூடிய இடை சிறுக்காத உடுக்கை போன்ற குளிரூட்டப்பட்டகண்ணாடி அறைகள் பொருத்தப் பட்டிருக்கின்றன. 



இச்சக்கரம் மிக மெதுவாகவே சுழலும் வண்ணம் அமைக்கப்பட்டிருக்கிறது. ஆட்கள் ஏறுவதற்கு இறங்குவதற்கும் இவை நிறுத்தப்படுவதில்லை. மிக மெதுவான அந்த சுழற்சியில் முதியவர்களும் கூட மெதுவாக நடந்து சென்றே ஏறிக் கொள்ள முடியும். சக்கர நாற்காலிகளில் வருவோரும் எளிதாக உள்ளே வரும் வண்ணம் அகன்ற வாயில். அந்த கண்ணாடிக் கூண்டுக்குள் நுழைந்ததும் சிங்கையை விட்டு மெல்ல காற்றாடி போல வானில் தொற்றி ஏறும் உணர்வு வருகிறது. 

F1 பந்தயத்துக்கான ஆயத்தங்களை மேற்பார்வையிடும் மேதான்ஷ்

முதல் பத்துப் பதினைந்து நிமிடங்கள் எத்திசையில் எதைப் பார்ப்பது எதைப் புகைப்படம் எடுப்பது என்ற பதற்றத்தில் அனைவரும் நாலா புறமும் நகர்ந்து ஆர்வமாகப் படம் எடுக்கிறார்கள். 


அம்மா மற்றும் மாதங்கியுடன் - 2016



மெல்ல மெல்ல மேலேறும் பொழுதில் இதன் கட்டுமானத்தை வியக்காமல் இருக்க இயலவில்லை.கிஷோ குரோகவா (Kisho Kurokawa) என்ற ஜப்பானியரும் டிபி ஆர்கிடெக்ட்ஸ் (DP Architects) என்ற சிங்கப்பூர் நிறுவனமும் இணைந்து இதனை வடிவமைத்திருக்கின்றனர். 2005-ல் துவக்கப்பட்ட இத்திட்டம் இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் எடுத்துக்கொண்டது. இதன் கட்டுமானத்தில் நூறு வருட மானுட பொறியியல் அறிவின் பங்களிப்பு இருக்கிறது. 1893-ல் சிகாகோவில் ஜார்ஜ் வாஷிங்டன் கேல் பெர்ரிஸ் என்பவரால் உருவாக்கப்பட்ட சுழல் ராட்டினத்தின் பெயராலேயே இது போன்ற அனைத்து ராட்டினங்களும் பெர்ரிஸ் வீல்(80மீ) என்றழைக்கப்பட்டன. அதற்கு அடுத்த வருடமே லண்டனில் ஏர்ல்ஸ் கோர்ட்(Earls Court) எனப்படும் இடத்தில் பிரிட்டிஷ் அமைத்த இந்திய சாம்ராஜ்யத்தை அங்கு மக்களுக்கு காட்டுவதற்காக கண்காட்சி அமைக்கப்பட்டு மாபெரும் ராட்டினம் அமைக்கப்பட்டது (94மீ).  2000ஆவது ஆண்டை முன்னிட்டு திறக்கப்பட்ட லண்டனின் கண் எனப்படும் லண்டன்ஸ் ஐ(London Eye) 135மீ உயரத்தில் உலகத்திலேயே மிகப் பெரிய ராட்டின வரிசையில் அடுத்து இணைந்து கொண்டது.  சீனாவின் ஜியாங்க்ஸி மாநிலத்தில் 2006-ல் கட்டப்பட்ட நான்சாங் நட்சத்திரம் (Star of Nanchang) - 160மீ உயரம் கொண்டு நான் பெரிதென்றது. இவற்றின் வடிவமைப்பில் இருந்து கற்றுக்கொண்டதனைத்தும் இந்த பிளையர் வடிவமைப்பில் உதவியிருக்கின்றன. முக்கியமாக சுமத்ராஸ் (Sumatras / Sumatra Squall) என்றழைக்கப்படும் வானிலை தொடர் நிகழ்வுகளும் அதன் விளைவான அதிவேக காற்றும் இதன் பொறியியல் கட்டுமானத்தில் ஒரு மிகுந்த அறைகூவலாகவும் இருந்திருக்கிறது. இந்தோனேசிய சுமத்ரா மலைத்தொடர்களால் தடுக்கப்படும் காற்று பல்வேறு தொடர் சுழற்காற்றுகளையும், இடி மின்னல் பின்னல் தொடரையும்இரவுகளில் ஏற்படுத்துகிறது. அதன் விளைவாக மலாக்கா நீர்ச்சந்தி நோக்கி செல்லும் காற்றின் அதிவேக விசையை கணக்கில் கொண்டு இது வடிவமைக்கப்பட்டிருக்கிறது. 


2008-ல் இச்சகடம் முதல் முறையாக பொது மக்களுக்குத் திறக்கப்பட்டிருக்கிறது. இருபத்தெட்டு கண்ணாடிக் கூண்டுகள் கொண்ட இச்சக்கரம் அதிர்ஷ்டத்தின் சக்கரம் என நம்பப் படுகிறது.  இதிலேயே விண்ணில் தேநீர் விருந்து போன்றவற்றுக்கு முன்பதிவு செய்யும் வசதியும் உண்டு, சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் கூட அதற்கு சற்று அருகில் இங்கே உயரத்தில் வந்து நடத்திக் கொள்கிறார்களாம்.  இதற்கான கட்டணமும் வானுயரமே. 20 பேர் கலந்து கொள்ளக்கூடிய ஒரு கண்ணாடிக் கூண்டு மணமக்களுக்கும் நெருங்கிய உறவினர்/நண்பர்களுக்கும், அதைத் தவிர மேலும் ஒரு கண்ணாடிக்கூண்டுக்கு இரண்டு சுழற்சிக்கு 3000 முதல் 4000 வெள்ளி (சிங்கப்பூர் டாலர்) கட்டணம். வாழ்வென்றும் தாழ்வென்றும் வளமென்றும் குறைவென்றும் சக்கரம் சுழல்கின்றது, அதில்தான் சரித்திரம் நிகழ்கின்றது என்று மணமக்களிடம் சொல்கிறார்கள் போலும்.   

உயரத்தில் இருந்து காணும் போது நான்கு வழிச்சாலை கொண்ட நான்கு பாலங்கள் அருகருகே செல்கிறது. மில்லெனியா மற்றும் செண்டெனியல் கோபுரங்கள் சற்று கீழே தெரிகின்றன. சன்டெக் நகரமும் கண்ணுக்கு எட்டிய வரை கட்டிட நிறைகளும் மேலை மற்றும் வடக்கு திசையை நிறைக்கின்றன. கீழே வளைந்து கிடக்கும் மாபெரும் சாலை அதில் ஊர்ந்து செல்லும் வாகன அசைவுகளால் மேலிருந்து காண்கையில் உயிருள்ள நாகங்கள் என நெளிகிறன்றன.

மரீனா மிதவை & ஹீலிக்ஸ் பாலம் 


மில்லேனியா கோபுரமும் சன்டெக் நகரமும்

தென்மேற்கு திசையில் மரீனா பே எனும் கடல் குடாவில் சிங்கையின் சிங்கம் நீரை உமிழ்ந்து கொண்டிருக்கிறது. உல்லாசப்படகுகள் வளைகுடாவில் ஓசைகளின்றி அசைந்து செல்கின்றன. மாபெரும் கப்பல் ஒன்றை அல்லது திமிங்கிலத்தை தலையில் சுமந்து கொண்டிருப்பது போன்ற மரீனா பே சாண்ட்ஸ் (கடல் குடா மணல்)  பிளையரை நோக்கி எக்கணமும் பாய்ந்து விடும் என்பது போல உடல் வளைத்து ஆயத்தமாக இருக்கிறது.

Downtown & Marina Bay





 சிங்கப்பூர் வணிக முகப்பின் விண்தொடும் கட்டிட நிரைகள் அணிவகுத்து நிற்கின்றன. 


தென்கிழக்கு மூலையில் கல்லாங் நதி கடலைத் தொடுவதன் முன் மரீனா பராஜ் கையால் தடுத்து நிறுத்துகிறது. அப்பால் ஓசைகளின்றி நீலவிதானத்தில் கப்பல்கள் மிதக்கின்றன. சிங்கை நகர், செந்தோசா தீவு மட்டுமல்லாது  மலேசியா மற்றும் இந்தோனேசியவை  சேர்ந்த தீவுகளையும் இதிலிருந்து காண முடியும்.



உச்சம் தொட பதினைந்து நிமிடங்கள் ஆகும். அதற்குள் அநேகமாக படம் எடுத்து அனைவரும் ஓய்ந்து கண்ணாடி அறையின் மைய பெஞ்சுகளில் அமர்ந்து விடுவார்கள். அடுத்த பதினைந்து நிமிடம் அவரோஹணம். இதை ஒட்டியே காலடியில் சிறு நெளிவென F1 அதிவிரைவு கார் பந்தயத்தின் துவக்க வளாகமும் பாதையும் தெரிகிறது. 



வான் நின்று  மண் நோக்கிய பார்வை, மண் தொட்டு இறங்க மீண்டும் ஒரு முறை விண்ணோக்குகிறது.  தலைக்கு மேலே வேறு கூண்டுகள் இப்போது உச்சத்தில் இருக்கின்றன, நமது உச்சத்தில் தாழ்வில் இருந்தவர்களை மேலே ஏற்றி நம்மைத் தரையில் இறக்கி விடுகிறது இக்காலச்சக்கரம்.    

 


இதன் கட்டுமானத்தை கால நகர்வுக் காணொளியாகக் காண 

https://www.youtube.com/watch?v=2IymrnRueSw


முந்தைய பதிவு: சிங்கை குறிப்புகள் - 20 - வினைக்களம்

அடுத்த பதிவு: சிங்கை குறிப்புகள் - 22 - தேயும் கோப்பியும் தேயாத நினைவுகளும்

4 comments:

  1. It was always a pleasant experience. It was very interesting to read actual working behind it.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. Great article. Have been to flyer few times with friends but noticed some facts only after reading this article😊

    ReplyDelete
  4. கண் முன் நிகழ்ந்து கொண்டே இருப்பதும், மாற்றமேயின்றி அப்படியே இருப்பதும் போன்ற மாயை கொண்டதாக வாழ்வைப் போல இதன் மாற்றமும் வளர்ச்சியும் கண்ணறிய முடியாததாக இருந்தது. - எழுத்தாளருக்கான பார்வை! 😍. 20 வருடங்களை இங்கு கழித்த போதும், நான் பார்தத இடத்தையே நீங்கள் விவரிக்கும் போது வேறு கோணத்தில் ரசிக்க முடிகிறது. வாழும் இடத்தையே பயணக்கட்டுரையாக படிப்பது இனிமை! புதுமை!

    ReplyDelete