Wednesday, February 25, 2026

பற்று விடற்கு

குருஜி சௌந்தரிடம் 2021ல் முதற்கட்ட யோகப் பயிற்சிகள் துவங்கியது. அன்றாடம் யோக சாதனா துவங்கி மூன்றரை வருடங்களுக்கு மேலாகிறது. 

எத்தனையோ விதங்களில் உடலும் மனமும் பிராணனும் மாற்றமடைந்து கொண்டு வருகின்றன. இப்பயணத்தில் என்னுள் நிகழும் அனைத்தையும் விலகி நின்று உணர்வதும் எழுதுவதும் இன்று எனக்கு சாத்தியமல்ல. ஆனால் முன்னர் ஒரு முறை யோக சாதனா தொடங்கிய பின்னர் அச்சத்தை எதிர்கொள்வதில் நிகழ்ந்த மாற்றத்தைப் பற்றி 'அருமணி' என ஒரு பதிவு எழுதியிருந்ததை நேற்று வாசித்தேன். 


இன்றைய நிலையில் அதன் மற்றொரு பரிமாணம், என் கவனத்துக்கு வந்தது. என்னைப் பல இடங்களில் முன்னேற விடாமல் தடுப்பது அச்சம்தான் என்பது புரிதலில் முதல் நிலை. அதனினும் நுண்ணிய ஒரு தடை அல்லது இயல்பு உள்ளே இருக்கிறது, மிக மெல்லியது; ஆனால் வலுவானது சிலந்தி இழையைப் போல. அதைத்தான் சில மாதங்களாக உணர்ந்து வருகிறேன். இப்போது  இது மேலெழுந்து வருகிறது.


முதல் நிகழ்வு:

2006லேயே சிங்கையில் ஒரு முறை சில மாதங்கள் நீச்சல் பயிற்சி எடுத்திருக்கிறேன். பின்னர் 2019-21 வரை பல முறை பயிற்சியாளரை வைத்தும், நண்பர்களுடனும், தனித்தும், சிங்கையில் வீட்டு வளாகத்திலேயே இருந்த நீச்சல் குளத்திலும், ஆழம் அதிகமற்ற தோழி இல்லத்து நீச்சல் குளத்திலும், தேசிய விளையாட்டு வீரர்கள் பயிற்சி பெறும் பாதுகாப்பு நிறைந்த நீச்சல் அரங்குகளிலும் முயன்றிருக்கிறேன். எப்போதும் ஒரு கட்டத்தில் பயிற்சி நின்றுவிடும். நீச்சலுக்கான மூச்சுப் பயிற்சி, கை கால்களுக்கான பயிற்சி, மிதக்கும் பயிற்சி, எழுந்து நிற்கும் பயிற்சி என அனைத்தையும் பெற்று விடுவேன். ஆனால் தனியாக தரையில் காலை உதைத்து உந்தித் தள்ளி நீருள் இறங்கும் போது பதட்டம் கவ்வி விடும். கைகளில் மிதவையை வைத்துக் கொண்டு சில பல அடிகள் நீந்துவதற்கே நீண்ட காலம் ஆனது. நீந்தும்போதே, தேவையெனில் எழுந்து நீரில் மிதக்க வராதோ என்று பதற்றமாக இருக்கும்.

என் அச்சத்தைப் போக்க, பயிற்சியாளர் முதலில் நீரில் வான் பார்த்து மிதக்கக் கற்றுக் கொடுத்தார். மிக அற்புதமான உணர்வு அது. எந்த முயற்சியும் இல்லாமல் உடல் இறகு போல உணரும் முதல் சில கணங்கள். மிதக்கும் மேகங்களைப் பார்த்தபடி உடலும் உணர்வும் இலகுவாகும் போதே,  திடுக்கென, மூழ்கினால், பற்றிக் கொள்ளக் கைகளில் ஏதுமில்லையே என எண்ணம் தோன்றும். அடிபட்டு மல்லாக்கக் கிடக்கும் கரப்பான்பூச்சி கூட அப்போது ஒரு முறை நினைவு வந்திருக்கிறது. சென்ற வரியை வாசிக்க ஆகும் கணத்திலும் குறைவான வினாடிகளில், இந்த எண்ணம் தோன்றியதுமே, நீருள் சற்றே உடல் தடுமாறும், காதில் நீர் புகும், மூச்சுத் திணறி அதிர்ந்து, கைகால் உதறி வெளியே வந்து விடுவேன், பயிற்சியாளர் உதவியுடன்தான்!. எனவே தனியாக இருக்கும் போது மிதப்பதை பயிற்சி செய்யும் துணிவே வராது. இடுப்பளவு நீரே நிரம்பிய குளத்திலும் இதே கதைதான். இதன் பயனாக நான் சந்தித்த விளைவைத்தான் இரு வருடங்கள் முன்னர் அருமணியில் எழுதியிருந்தேன்.  


இரண்டாவது:

மூன்றரை வருட சாதனாவிற்குப் பிறகும் உடல் நெகிழாத சில ஆசனங்களை, சில வாரங்களாக அன்றாடம் அவதானித்துக் கொண்டிருந்தேன். புகைப்படங்கள் எடுத்துப் பார்ப்பேன். குருஜியிடம் அனுப்பி கேட்பேன்.


உதாரணமாக ஹாலாசனம், பர்வதாசனம். உடலை முற்றிலும் உயரே தூக்கி கால்களை பின்புறம் கொண்டு சென்று விரல் நுனியால் தரையில் தொடும் பயிற்சி ஹாலாசனம். சர்வாங்காசனத்தில் நிற்பதற்கே அச்சம் இருந்து, அது முதன் முதலாக கைவரத் தொடங்கிய அன்று 'அருமணி' எழுதினேன். இப்போது அதன் அடுத்த கட்டமான ஹாலாசனம்  திணறுகிறது. கால்கள் பின்புறம் தரையிலிருந்து ஒரு சாண் மேலே வரை செல்லும்.  சற்றே முயற்சி செய்து இடுப்பை தோள்பட்டைக்கு நேராக மேலே கொண்டு வந்தால், கீழே தொட்டுவிடலாம், ஆனால் அப்போது அடிவயிற்றில் ஒரு கலக்கம் வரும், கால்களை மீண்டும் சவாசனத்துக்கு கொண்டு வந்துவிடுவேன். இதுவே இரண்டரை வருடங்களாக நடக்கிறது. பர்வதாசனத்தில் சின்னஞ் சிறு முன்னேற்றங்கள். ஆனால் குதிகால் தரையில் பதியாது,  கால்கள் முழங்காலில் வளைந்துதான் நிற்க முடியும். 

பர்வதாசனம்


பர்வதாசனம் - சரியான நிலை

நன்றி - சாரதா, பொதிகை யோகம் இன்று 

 


இவ்விரண்டு ஆசனங்களிலும் எந்தெந்த விஷயங்கள் முன்னேற வேண்டும் என அவதானித்த போது, உடல் ரீதியாக சில விஷயங்கள் இருக்கின்றன. முக்கியமாக பின் தொடையின் தசைநார்களின் இறுக்கம் ஏற்கனவே தெரிந்த ஒன்று. அதனால் ஹாலாசனத்தில் இடுப்புப்பகுதி தோள்பட்டைக்கு மேல் செல்வதில் தடை. கீழ் முதுகு அந்த அசைவைத் தடுப்பதை உணர முடிந்தது. அதே போல பர்வதாசனத்திலும் பின்தொடை இறுக்கமும் கெண்டைக்கால் இறுக்கமும் கால்களைத் தடுப்பது தெரிந்தது. எனவே பர்வதத்தின் உச்சியாக அமைய வேண்டிய மடிப்பு முழுமையாக இடையில் ஏற்படாது முதுகில் ஏற்படுகிறது.

இவற்றை சரி செய்வதற்கான பல உதவிப் பயிற்சிகளும் ஆசிரியர் பரிந்துரைத்திருக்கிறார், அவற்றையும் செய்தே வருகிறேன்.

இவை உடல்ரீதியான தடைகள் மட்டுமே. நீடித்த பயிற்சியின் விளைவாக உடல் பல இடங்களில் நெகிழ்வுத்தன்மை அடைந்திருக்கிறது. ஆனாலும் மேலே குறிப்பிட்ட ஆசனங்களில் வேறு சில கூறுகள் இருக்கின்றன.


மூன்றாவது:

ஒரு சில மாதங்களாக இடுப்பில் ஒரு வலி இருந்து கொண்டே இருந்தது. தரையில் கால் மடித்து அரை மணிநேரத்துக்கு அதிகமாக அமரும் போது இடுப்பில் தொடங்கி முன் தொடைப் பகுதி வரை வலி ஒன்று உருவாகும், வெகுநேரம் பிறகு நீடிக்கும். நீண்ட நேரம் நிற்பதோ, நடப்பதோ, வேலைகள் செய்வதோ, வேறு ஆசனங்கள் செய்வதோ,  எப்போதும் வலி இருப்பதில்லை. அமர்ந்த நிலை மட்டும்தான். ஆசனம் என்ற சொல்லின் பொருளே இருக்கைதான், இருத்தல்தான். எனவே அதை சரி செய்வதற்கான யோகப் பயிற்சிகளையும் மேற்கொள்கிறேன். ஃபிஸியோ உதவியும் எடுத்துக் கொள்கிறேன். இந்த வலிக்கான  எத்தனையோ பயிற்சிகள் எடுத்தும், பலன் இல்லை. 


சென்ற வாரம் நெஞ்சுக்கூட்டுப் பகுதியை விரிவடைய வைப்பதற்கான ஒரு பயிற்சி செய்தபோது திடீரென இந்த இடுப்பு வலி சரியானது. மீண்டும் மீண்டும் வலி வரும் போதெல்லாம் இப்பயிற்சி வலியை சரி செய்தது. மார்புப் பகுதியை விரிவடையச் செய்கையில் இடுப்பில் எந்த சிறு அசைவும் பாதிப்பும் உணர முடியவில்லை. ஆனால் வலி சரியானது.


அந்த வலி ஏற்படாமல் இருப்பதற்கும் என்ன செய்ய வேண்டுமென இப்போது புரிந்து விட்டது. தரையில் கால்களை மடித்து அமரும் போது சிறிது நேரத்தில் மிக மெல்லிய கூன் விழுகிறது. மனதால் உணரக்கூடிய ஒரு சிறு சரிவு. அதை அவதானித்து சரி செய்து கொண்டே இருந்தால், அந்த இடுப்பு வலி வருவதில்லை. ஒரு மணி நேரம் அமர்ந்தாலும் வருவதில்லை. எத்தனையோ முறை ஆசிரியர் சொன்ன விஷயம்தான். கூன் போடுகிறேனா என பார்க்கச் சொல்வார். ஆனால் மிகச்சிறிய அந்தக் கூனை நானே உணரவும் வெகு காலம் பிடித்தது.


அவதானிப்பு:


இவை மூன்று விஷயங்களும் உணர்த்துவதை இப்போதைய நிலையில இவ்வாறு விளங்கிக் கொள்கிறேன்.


பொதுவாக சம்மனம் இட்டு தரையில் அமர முடியாத அளவு உடல் விறைப்பாக இறுக்கமாக இருப்பவர்களிடம் குருஜி சௌந்தர் சொல்வது ஒன்று உண்டு. மனதின் இறுக்கம் உடலிலும் தெரிகிறது என்பார். வாழ்வை, அது தரும் எதிர்பாரா மாற்றங்களை ஏற்றுக் கொள்ள முடியாத மன இறுக்கங்கள். இறுகிப்போன உடலில் இறுகிப்போன மனம், தடைப்பட்ட பிராணன். அது நினைவு வந்தது. எனக்கு முதுகு ஓரளவு நெகிழ்வுத்தன்மை அடைந்திருக்கிறது, வேறு ஆசனங்களில் அது தெரிகிறது. ஆனால் சில இடங்களில் உடல் செல்ல சாத்தியமான அளவுக்கு கூட, அதை விட்டுக்கொடுக்க உள்ளே ஒன்று மறுக்கிறது. 


முதலாவதில், நீச்சலில் ஏற்படும் பதற்றம், நீரில் மூழ்கி விடும் அச்சம் அல்ல; கைகளிலும் கால்களிலும் இருக்கும் பற்றுக்கோலை விட்டுவிட்டு நீருக்கு எனை ஒப்புக் கொடுக்க மறுக்கும் ஒன்று. இது மேலோட்டமாகத் தோன்றும் அச்சத்தை விட சற்று நுண்ணிய, மேலும் ஆழமான பாதுகாப்பு உணர்வு. இரண்டாவது, அதே போல, சற்றே கடினமான ஆசனங்களில் உடல் பாதுகாப்பெனத் தான் உணர்ந்த ஒன்றை விட்டுக் கொடுக்க மறுக்கிறது. மூன்றாவது, தனை மறந்து அமரும் போது உடல் மெல்ல சரிந்து ஒரு கோணலுக்கு உட்படுகிறது. நேர் நிலை இன்னும் உடலின் இயல்பாகவில்லை.


"சுகம் ஸ்திரம் ஆசனம்" என்கிறார் பதஞ்சலி.  இலகுவாகவும் நிலைத்தும் எதில் நீடித்து இருக்க முடிகிறதோ அந்த நிலையே ஆசனம். தொடர் பயிற்சிகளினால் உடலில் ஸ்திரம் உருவாகி வருகிறது. ஆனால் அது சுகமாக மாறவேண்டும் என்றால் அந்தந்த ஆசனத்தின் நிலைகளுக்கு உடல் இயல்பாக ஒப்புக் கொடுக்க வேண்டும். இப்போது பயிற்சிக்குக் கட்டுப்பட்டு வளையும் உடல், தன்னியல்பாக அந்த நிலைகளில் அமைய வேண்டும்.


Control எனப்படும் கட்டுப்பாட்டின் மூலமாக அடையும் ஸ்திர நிலையில் இருந்து Being என்னும் அதுவாக மாறும் நிலைக்கு  நகர வேண்டும். இன்றைய நிலையில் அன்றாடத்தை ஓர் ஒழுங்கில் வகுத்துக் கொண்டு பின்பற்றுவது வருகிறது. ஆனால் அதை நான் எங்கோ உள்ளூர ஒரு முயற்சியினால் அடைகிறேன். அது என் இயல்பாகவில்லை. எனவே நீரோட்டத்தில் ஒழுகிச் செல்ல முடியவில்லை. நீர் தடையை உடனே உணர்த்திவிடும் தன்மை கொண்டது. எனவே நீச்சலில் அகம் தன்னைக் காட்டியிருக்கிறது. சித்தத்தை, மனதின் செயல்பாட்டை உடல் காட்டிக் கொண்டே இருக்கிறது.


மனதளவிலும் வேறு சிலவற்றுக்கு இந்த அவதானிப்பு அப்படியே பொருந்துகிறது.ஓட்டத்துக்கு ஒப்புக்கொடுக்க மறுப்பது ஒரு பாதுகாப்பின்மையின் விளைவு என்று தோன்றுகிறது. பழகிவிட்டவற்றிலிருந்து விலக மறுக்கும் மனம். பழகியவற்றின் சொகுசிலில் இருந்து விடுபடச் சொல்லி அதற்கான மாற்றங்களை, கர்மயோகத்தை பல முறை குருஜி சொல்லியிருக்கிறார். 


அங்கும் இதே இயல்புதான். சொகுசு என்பதற்கு ஆடம்பரம் என்றோ, வசதி என்றோ பொருள் அல்ல. பழகிப் போன வழக்கங்கள் அனைத்துமே சொகுசுகள்தான். அவை 'பிசுக்குகள்' என்றாலும், நம் தர்க்கம் அதனை வேறு வண்ணம் பூசி, அது வாழ்வுக்கு மிகத் தேவையான ஒன்று என்றே காட்டும். அப்பழக்கம் இல்லாவிட்டால் பாதுகாப்பு இல்லை என்று சொல்லும். எனவே அதை விட்டு விலக புத்தி துணியாது. 


ஆழ்மனதில் புதைந்து உறங்கிக் கொண்டிருக்கும் வாசனாவின் விதைகளுக்கு (விதைகள் - பற்று, அச்சம், கோபம், பொறாமை என எதுவாகவும் இருக்கலாம்) நாட்பட்ட பழக்கங்களே உரம். அந்தப் பழக்கங்களுக்கு ஒவ்வொரு முறை ஆட்படும் போதும், அந்த விதைகள் மீண்டும் செயல்களாகி கர்மங்களாக உயிர்கொள்கின்றன. மீண்டும் மீண்டும் களைகள் சேர்கின்றன. இந்த விதைகளை எரிப்பதே தவம் என நூற்றுக்கணக்கான முறை ஆசிரியர் சொன்ன சொல் காதில் ஒலிக்கிறது. 


திரௌபதியின் கதைதான். இறுகப்பற்றிய தன் கையை விடுவதற்கு பற்றற்றவனை பற்ற வேண்டும். கண்ணா என இருகரம் கூப்ப வேண்டும். என்றேனும் நிகழலாம். அதுவரை சாதனாவில் தொடர்வோம்.குருவருள் துணை வருக!