Monday, May 25, 2026

ஆகுல நீர பிற

அருமணி - அது நிகழ்ந்து ஏறத்தாழ மூன்று வருடம் (ஆகஸ்ட் 2023) ஆகிறது.

இன்று (மே 2026) மீண்டும் ஒரு சிறு நகர்வு, சிரசாசனத்தில் நிற்பது, அதுவும் சுவற்றின் பிடிமானத்தோடுதான் சாத்தியமாகி இருக்கிறது. அதுவும் ஓரிரு வினாடிகளே. ஆனால் இது இப்பிறவியில் நிகழச் சாத்தியமா என மனம் வியந்ததே அதிகம். குருவருளால் இன்று கைகூடியது.

புறவயமான கண்கூடான மாற்றங்களையே நாம் அடையாளக் கற்களாக, மைல்கற்களாக கொள்கிறோம். ஆனால், பயணம் என்பது அன்றாடம் சின்னஞ்சிறு அடிகளாக நடந்து கொண்டே இருப்பதில்தான் நிகழ்கிறது.

ஒவ்வொரு முறையும் மலையேற்றத்தில் நமை உடைக்கும் ஒரு கட்டம் வரும். இவ்வளவு தான், இதற்கு மேல் ஒரு அடியும் சாத்தியமில்லை என மனம் அரற்றும்.  மூச்சை ஏற்க முடியாமல் நுரையீரலும், வலியைத் தாளாமல் கால்களும் இற்றுப் போனது போன்ற ஒரு நிலை. அதிலிருந்து நமை விடுவித்து முன்னகர்த்த மேலிருந்து ஒரு கரம் தேவைப்படும். அது எந்த வடிவிலும் வரலாம். அது நமை தொட்டு மீட்கும் வரை பிரயத்தனத்தைப் பயணத்தைக் கைவிடாதிருப்பது மட்டுமே நாம் செய்யக் கூடியது. 


அதுபோல கடந்த சில காலமாக இந்த யோகப்பயணம்  மலையேற்றமாக மாறி வருகிறது.  சாண் ஏறாவிட்டாலும் முழம் சறுக்கும் தருணங்களே  அதிகம். ஏற்றமா இறக்கமா எனப் புரிபடாத பாதைகளின் வழி பயணம். 

பலருக்கும் எளிதாகவே வாய்த்து விடக்கூடிய இந்த சிரசாசனத்திற்காக இவ்வளவு சொற்களை விரயமாக்கவில்லை. உடல் புறவயமான ஒரு கருவியாக இங்கு அகத்தை வெளிக்காட்டுகிறது. அகத்தே ஒன்றைத் தலைகீழாக்குவதும், கட்டுடைப்பதும் அறிவாலோ, எண்ணங்களாலோ,  வார்த்தைகளாலோ நிகழ்வது அல்ல. ஒவ்வொரு அணுவிலும் நிகழ வேண்டி இருக்கிறது.

ஒவ்வொரு சிறு அக அறிதலும், அதனால் அடையும் மிகச் சிறிய மாற்றமும், அத்தனை அத்தனை அரியதாக இருக்கிறது. பிறவிப் பழக்கங்கள், நாட்பட்ட விருப்பு வெறுப்புகள், பழகிப்போன பயங்கள், அடையாளம் காணவே இயலாமல் உள்ளே ஒளிந்திருக்கும் இயல்புகள், என ஒவ்வொன்றையும் உணர்வதற்கே பல முறை ஒவ்வொரு பூச்சாக உடைத்தெறிய வேண்டி இருக்கிறது. அதனையே யோகம் செய்கிறது. 

இந்த அனுபவங்களால் உணரப்படும் பாடங்களை, மேலோட்டமாக அல்லாது, வெற்றுச் சொற்களாக நின்று விடாமல் நாம் அதுவாக ஆகும்வரை மாற்றத்தை கொண்டு வருவது, ஒரு சில விஷயங்களைத் தலைகீழாக்குவது பகீரதப் பிரயத்தனம். அது நிகழ சிறிதேனும் வாய்ப்பிருக்கிறது என உணர்ந்த நன்றிப் பெருக்காலேதான் இத்தனை சொற்கள். மனத்துக்கண் நிகழாமல் வெறும் சொற்களாக நின்று விடுபவை யாவும் குறள் சொல்வது போல 'ஆகுல நீர பிற' - வெற்று ஆரவாரம்தான்.

குருவருளால் பயணம் தொடரட்டும்.